அத்தியாயம் 1
பரந்த வானம் முழுதும் செம்மை படர பொன்னிற மேனியை வரமாகப் பெற்ற சூரியன், நீலக்கடலுடன் சங்கமிக்கும் ஒரு அழகான மாலைப்பொழுது….
அவ்வழகிற்கு மனதை பறிகொடுக்கத் தோன்றாமல்,
இளந்தென்றல் மீட்டும் இசையில் மெய்மறந்து அதனை இரசிக்கத் தோன்றாமல்
அந்த நீலக்கடலை ஒரு கல் மேடையில் நின்று வெறித்துப் பார்த்தப்படி நின்றிருந்தாள்…
கூர்மையான அழகான நீலக்கண்கள்,மெல்லிய இசை மீட்டும் இமைகள், நீண்ட புருவங்கள் ,கூரான நாசி,சிறிய சிவந்த உதடுகள்,மாநிறத்தை விட சற்று அதிக நிறம் கொண்ட நீண்ட முகம்,மெல்லிய தேகம், அலையலையாய் படர்ந்த கூந்தல் என பார்ப்பவரை கவரும் அமைதியான அழகை கொண்டவள்…
அதீரா…..
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்கள் பனித்திருந்தன. அதன் காரணம்அவள் மனதை ஆட்கொண்ட துக்கமா என்பதை அவளே அறிவாள்.
அவள் மோனநிலை கலைக்கவே,ஏதோ ஒன்று தன்னைத் தாக்க வருகின்றதென்பதை உணர்ந்து தன் மெல்லிய விரல்களால் ஒரு சொடுக்கிட்டாள்…
தாக்க வந்த பொருள் அந்தரத்திலே நின்றது.
சிறிய புன்முறுவலுடன் பின்னால் திரும்பினாள்.
“கண்டுப்பிடிச்சிட்டியா?இந்த தடவையும் தோத்துட்டேன்”என உதட்டை சுழித்தாள் அதீராவின் உயிர்த்தோழி ரக்ஷிதா.
“என்கிட்டேயே விளையாடுறியா?அந்த பந்தை எடுக்கும் போதே தெரிஞ்சுது நீ தான்னு”அதீரா
அந்தரத்தில் நின்ற பந்நை கையில் ஏந்தி விளையாடியபடியே ரக்ஷிதாவின் அருகில் வந்தாள்.
“சரி அத விடு,ஏன் உன் கண் எல்லாம் சிவந்திருக்கு?”என ரக்ஷிதா உடைத்த மௌனத்தை மீண்டும் தொடர்ந்தாள்
அதீரா.
“இன்னும் அந்த பழைய நாட்களை நினைச்சிட்டு இருக்கியா?”
“என்னால எப்பிடி மறக்க முடியும் ரக்ஷி? எல்லாம் என்னால தானே. நான் மட்டும் என் சக்திய அன்னைக்கு வீரியமா பயன்படுத்தாம இருந்திருந்தா, இன்னைக்கு என் கூட இருந்துருப்பாங்கல்ல. நானும் இப்பிடி தனியா நின்னுருக்க மாட்டேனே.” என உதடுகள் துடிக்க துக்கத்தை விழுங்கினாள்.
கம்பீரமாய் நோக்கும் கண்கள் இன்று ஒளியிழந்து கண்ணீரோடு இருந்ததை பார்த்து கலங்கினாள் ரக்ஷி.
அவளை தோளோடு அணைத்து முதுகை தடவிக்கொடுத்து அவளது துக்கத்தை குறைக்க முயற்சி செய்தாள்.
“நீ ஏன் அப்படி நினைக்கிறாய் தீரா?
அது ஒரு விபத்து. என்ன நடந்தாலும் இறந்தகாலத்தை மாற்ற முடியாது. உனக்கு நான் எப்பவும் துணையாய் இருப்பேனே தீரா.”
“எத்தனை வருஷம் ஆனாலும் அந்த நாளை மறக்கமுடியாம தினம் தினம் கஷ்டப்படுறேன்.
என்னோட அந்த சந்தோஷமான நாட்கள் திரும்ப வருமா ரக்ஷி?” என தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள்.
“வாழ்வில் இன்பத்தையும் துன்பத்தையும் கடந்து தான் போகனும் தீரா. இப்பிடியே நிற்காம வா போலாம்”என கலங்கிய விழிகளுடனே தீராவை அழைத்துச் சென்றாள் ரக்ஷிதா.
—————————————-
வீட்டிற்கு வந்த பின்னும் தீரா அமைதியாய் இருப்பதைப் பார்த்து “இன்னும் என்ன நினைச்சிட்டு இருக்க தீரா? உடல் மட்டும் தான் அழியுமே தவிர ஆத்மா இல்ல. இந்த உலகத்தில அவங்க இல்லாட்டியும் எண்ணங்கள் உன்னைச் சுற்றி தான் இருக்கும்”
மௌனத்தை தன் மொழியாக்கினாள் தீரா.
ரக்ஷி, “நீ இப்படி இருக்கத பாத்து அவங்க ஆத்மா அமைதியில்லாம இருக்கும். இது தான் உனக்கு வேணுமா தீரா?”என
தீரா கண்களை அழுந்தத் துடைத்து விட்டு “நான் இனி இப்படி இருக்க மாட்டேன் ரக்ஷி. ஏதோ இன்னைக்கு மனசு பாரமாக இருந்தது”
“சரி இப்பொ எதையும் யோசிக்காம அமைதியா கண்ண மூடி தூங்கு”என கூறி அவளை கட்டிலில் படுக்க வைத்து தானும் அவள் அருகிலே படுத்துக்கொண்டாள்.
தீராவின் பெற்றோரின் இழப்புக்கு பின்னர் அவளுக்கு உற்ற துணையாய் இருப்பது ரக்ஷிதாவும் அவளின் குடும்பமும் தான். ரக்ஷிதாவின் அன்னை செல்லம்மாள் தீராவை தன் மகளாகவே அரவணைத்து வருகின்றார்.
இருள் படர்ந்த வானத்தில் இனி ஒளியின் ஆட்சி தொடர வேண்டும் என ஒளிக்கதிர்களைப் பரப்பினான் கதிரவன். இவ் வெய்யோனின் விளையாட்டால் தன் சிப்பி இமைகளைத் திறந்தாள் தீரா.
உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கட்டிலை விட்டு எழுந்து கைகளை நெட்டி முறித்தாள்.தன் அறையை சுற்றி நோட்டமிட்டு ஒரு சொடுக்கிட்டாள்.
கட்டிலின் அருகே இருந்த வானொலியில் தானாகவே பாடல் ஒலித்தது.
தீரா தன் வலது கையை கீழிருந்து மேலே அசைக்க கட்டிலில் இருந்த தலையணையும் போர்வையும் அந்தரத்தில் தொங்கியது.
தன் வலதுகை ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி மேலிருந்து கீழ் அசைக்க அந்தரத்தில் இருந்த போர்வை கீழிறங்கியது.
ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் வந்த வயலின் இசைக்கேற்ப தன் இருகைகளிலும் ஆள்காட்டி விரலை நீட்டி அசைக்க போர்வையும் அவ் அசைவுக்கேற்ப கட்டிலைத் தட்டி தூசியை அகற்றியது.
அதன் பின் தன் வலது கையை நெல் தூவுவதைப் போல அசைக்க போர்வை அழகாக கட்டிலில் விரிக்கப்பட்டு தலையணையும் சரியாக வைக்கப்பட்டது.
தீரா பாடலை முணுமுணுத்துக் கொண்டே தன் வலது ஆள்காட்டி விரலை மட்டும் பூமியை நோக்கி நீட்டி சுழற்ற அறையின் ஓரத்தில் இருந்த துடைப்பம் தன்னாலே உயிர்ப்பெற்று அறையை முழுமையாக சுத்தம் செய்தது.
துடைப்பம் தன் வேலையை முடிக்கவும் ரக்ஷிதா ஒரு தேநீர் கோப்பையுடன் அறையின் கதவை திறக்கவும் சரியாக இருந்தது.”வேலை முடிஞ்சுதா?” என ரக்ஷி
“இப்பொ முடிஞ்சிடும் பாரு” என கூறி தீரா தன் கைகளைத் தட்டினாள். ஒரு நொடியில் அறை பளீரென்று மாறியது.
“ம்ஹூம்” பெருமூச்சு விட்டாள் ரக்ஷி.
“ஏன் இப்ப இப்பிடி பெருமூச்சு விடுற?”
“உனக்கென்ன கையை இப்படியும் அப்படியும் அசைச்சா வேலை முடிஞ்சிடும் . எனக்கு அப்படியா? வீட்டை கூட்டி சுத்தம் செய்யனும் ,துணி எல்லாம் துவைக்கனும்,சமைக்கனும்இப்படி எத்தனை வேலைகளை அசராம செய்யனும் ?”
“ஹா..ஹா..”
“உன்னை நினைச்சா பாவமா தான் இருக்கு. ஆனா என்ன செய்றது நீ உன் வேலையை செய்யாட்டி உன் அம்மாவோட அன்பான, பாசமான அடிகளுக்கு ஆளாகனுமே என கேலியாக கூறினாள்.(எல்லா வீட்லயும் இதே கதை தான்)”
என்ன சொல்றது எல்லாம் என் தலைவிதி”என சலித்துக் கொண்டாள்.”சரி விடு. இப்பொ போய் குளிச்சிட்டு வந்து இந்த டீ ய குடி, நான் என் செல்லம்ஸ் கிட்ட சொல்லி சாப்பாடு எடுத்துட்டு வரேன் “
“நீ ஏன் அவங்கள கஷ்டப்படுத்துற? நான் சமைக்கிறேன்”என தீரா கூறிய ஒரு நொடி தான் தாமதம் ரக்ஷி கோபமாக மூச்சிரைத்து தீராவின் முன் வந்து “நீ சமைக்கிறத சாப்பாடுனு மட்டும் சொல்லாத. எனக்கு வர கோவத்துக்கு உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”
தீரா ஏதோ பேச வாய் எடுக்க “உனக்கு நல்ல (‘நல்ல’ என்ற வார்த்தையை அழுத்தி) சாப்பாடு வேணுமா ? வேணாமா ?”
அவள் கேட்டவுடனேயே தீரா வேகமாக தலையை ஆட்டினாள்.”அப்போ ஒழுங்கு மரியாதையாக குளிச்சிட்டு வந்து இந்த டீ ய குடி”என அதட்டி விட்டுச் சென்றாள்.
தீராவும் சிரித்துக் கொண்டே குளித்து விட்டு வந்து தேநீரை எடுத்துக் கொண்டு ஜன்னல் ஓரமாக நின்று கருமேகங்கள் தூவும் மழைச்சாரலை இரசித்தப்படி இருந்தாள்…
அமைதியாக சென்ற தன் வாழ்வில் வரப்போகும் திருப்புமுனையைப் பற்றி அறியாமல்…..
தொடர்வாள்…
-பிரஷாதிகிருஷ்ணமூர்த்தி-
Super starting sis nice