Loading

        பகுதி-20

 

 

அனுவிடம் வேதாவிற்கு விபத்தாகி விட்டது என்று சொல்லவும் அவள் யாரிடமும் கூறாமல் வெளியேறி இருந்தாள்.

 

அவளை மருத்துவ மனையில் கடத்துவதற்காக மயக்க மருந்து கொடுக்க, அங்கே திடுமென நுழைந்த முகமூடி அணிந்த  உருவம் ஒன்று அங்கிருந்து அனுவை தூக்கி சென்றது.

இருள் சூழ்ந்த அறையில் படுத்திருந்தாள் அனுகீர்த்திகா.

சட்டென்று கண் விழித்தவள் , சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தட்டி தடவ ,அங்கிருந்த ஸ்விட்சில் கைபட்டு மின்விளக்கு ஒளிர்ந்தது. 

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அதிர்வாக இருந்தது ஏனெனில் அவள் ஜீவன் வீட்டில் அவளது அறையில் இருந்தாள். 

‘இங்கே எப்படி வந்தோம் மயங்கி இருந்தோமே…!!’ என்றெண்ணியவளுக்கு வேதாந்தின் நினைவு வர ,வேகமாக வெளியே ஓடி வந்தாள்.

வேதா அமைதியாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, அனு ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஹேய் என்ன ஆச்சு கீர்த்தி… ? ஏன்…? என்ன…  ??”வார்த்தைகளை மென்று முழுங்கியவனோ அவள் அணைத்து கொண்ட பேரதிர்ச்சியில் இருக்க, அனு பயத்துடனேயே,” உனக்கு ஒண்ணும் இல்லையே சைனா பீஸ்…  நீ அடிபட்டு  …ஹாஸ்பிடல் ல…  உனக்குக் காயம் எல்லாம் இல்ல தானே… என்னைக் கடத்தி இருந்தாங்க அப்புறம் எப்படி நான் இங்க…??”  திக்கி திணறி பேசிட , வேதா சிரித்தபடியே,” கனவு எதுவும் கண்டியா…?  ஏன் இப்படிப் புலம்புற  …?, ஜேபி தான் நீ என் கிட்ட பேசனும் னு சொன்னதாகச் சொன்னான். அதான் வந்தேன் ஆனா நீ நல்ல தூக்கத்தில் இருந்த , டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் னு டிவி பார்த்துட்டு இருந்தேன்” நீண்ட விளக்கம் கொடுத்தான் வேதா.

“இல்ல வேத் எனக்கு ஃபோன் வந்தது ” என்று கடத்திய விஷயத்தைக் கூறி முடித்தாள்.

வேதா சிரித்தபடியே.,” இப்போ நான் நல்லா திடமா தானே உட்கார்ந்து இருக்கேன் அப்புறம் எப்படி நீ கடத்தப்பட்டிருக்க முடியும் . ஏதாவது கனவு கண்டு இருப்ப கீர்த்தி…பாரு நீயும் வீட்டில் இருக்க,  நானும் நல்லா இருக்கேன்…  என் கிட்ட பேசனும் னு நினைச்சுட்டே தூங்கி இருப்ப, அதனால் தான் கனவுல வந்திருக்கேன் சரி ஓகே ரிலாக்ஸ் சாப்பிடுறியா…!!” என்றவன் செண்பா அக்காவிடம் சாப்பாட்டை எடுத்து வரும்படி கூறினான்.

உணவை வேதாவே அவளுக்கு ஊட்டி முடித்திட ,குழப்பத்தினூடே சாப்பிட்டு முடித்தாள்.

அவள் உண்டு முடித்ததும் அமைதியாக அவளருகில் வந்தமர்ந்த வேதா “கீர்த்தி உனக்கு நிஜமாகவே என்னைப் பிடிச்சு இருந்தா இந்த மேரேஜுக்கு ஓகே சொல்லு இல்லாட்டி வேண்டாம் நான்  ஜீவா, தேவா கிட்ட பேசிக்கிறேன் “என்றான்.

அனுவோ அவன் கேட்டதற்கு பதில் அளிக்காமல், “அப்போ உங்களுக்கு விருப்பமா…?”என்று கேட்டாள்.

“எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை கீர்த்தி.  உன் கிட்ட சும்மா வம்பு பண்ணுவேனே தவிர உன்னை வேண்டாமென்று சொல்ல எனக்கு ஒரு ரீசனும் கிடையாது…  அது மட்டுமில்லாமல் ஜேபி செலக்ட் பண்ண பொண்ணு  ஸோ சரியாகத் தான் இருக்கும் “என்று உறுதியாகக் கூறினான்.

“ம்ம்ம்ஹ்ம் அது போலத் தான் எனக்கும் அக்கா சொல்லிட்டா எனக்கு ஓகே. எனக்கும் உங்களை ரிஜெக்ட் பண்ண எந்தக் காரணமும் இல்லை…  ஸோ ஒத்துக்கிறேன் பட் லவ் எல்லாம் வரும் போது வரும்” என்றாள் .

வேதா மெலிதாய் புன்னகைத்து விட்டு “அதெப்படி உறுதியா சொல்ற அப்படி எல்லாம் காதல் வந்திடுமா என்ன… ??” என்றான்.

“ஹலோ சார் காதலுக்கு அடிப்படையே பிடிக்கிறது தான்…  உன்னைப் பிடிக்காம எல்லாம் இல்ல. இருந்தாலும் நீ ஒரு அகராதி பிடிச்சவன் , உனக்குக் கொழுப்பு அதிகம் அதான் யோசிக்கிறேன் வேற ஒண்ணும் இல்ல “என்றாள் சாதாரணமாக

வேதா மூக்கை விடைத்தபடி,” எதேய் எனக்கு அகராதி , கொழுப்பா அப்போ மேடம் என்ன குறைச்சலா…  என்னை வந்ததும் நீ தான் வம்பிழுத்த… ” அனு துவக்கத்தில் பேசியது எல்லாம் பட்டியலிட்டான்.

“ஆஹா…  சார் ரொம்பப் பேசாதீங்க நீ என்னைக் கிண்டல் பண்ண , பதிலுக்கு நானும் வம்பு பண்ணேன் ஒன்றுக்கு ஒன்று சரியா போச்சு ஸோ பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டுறதை விட்டுட்டு இப்போ நான் சொல்றதை கேளுங்க” என்றாள்  இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு.

அவள் குரல் கடினமாக ஒலிப்பதிலேயே உணர்ந்து கொண்டான் வேதா அவளது பெற்றோர் பற்றிப் பேசப் போகிறாள் என்று.

“இதோ பாருங்க உங்களுக்கும் யாரும் இல்லை . ஐ மீன் பேரண்ட்ஸ் பற்றிச் சொன்னேன் அதைப் போல எனக்கும் அப்பா அம்மா னு யாரும் கிடையாது வருங்காலத்தில் யாராவது அப்படி வந்தா தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெளியே அனுப்பிடுவேன். அப்போதைக்கு அவங்க மேல இரக்கப்பட்டு நீ வந்து என் கிட்ட பேசக் கூடாது பேசினா அந்த நிமிஷமே உன்னை விட்டுப் போயிடுவேன் அப்புறம் கால்ல விழுந்து கதறினாலும் திரும்பி வர மாட்டேன் அதற்குச் சம்மதம் என்றால் இந்தத் திருமணத்தில் எனக்குச் சம்மதம்”  என்றாள் உறுதியாக.

“நிச்சயம் சொல்ல மாட்டேன்…  இப்படி ஒரு பெத்தவங்க உனக்குத் தேவையே இல்லை… உனக்கு எல்லாமுமா இருக்க முயற்சி செய்கிறேன் ஏன்னா எல்லோரும் பர்ஃபெக்ட் கிடையாது அது போலத் தான் நானும் சரியா …!!”என்றான்.

‘புரிந்தது ‘எனத் தலையாட்டிட வேதாவே ஜீவனிடம் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தான்.

ஜீவன் துரித கதியில் திருமணத்தை ஏற்பாடு செய்து இருந்தான்.

“வேத் உன் பெரியப்பா வீட்டிற்கு… !”என்று  ஜீவன் கேட்கும் போதே , வேதா தேவை இல்லை என்று கூறி விட்டான்.

“டேய் என்ன இருந்தாலும் அவர் உன்னைப் படிக்கவாவது விட்டாரே அதற்காகச் சொல்லலாம் டா “என்று ஜீவன் சொல்ல,வேதா அரை மனதுடன் சம்மதித்தான்.

“வேதா இதுல உனக்கு விருப்பம் இல்லை என்று தெரியும் ஆனாலும் உன்னை ஏமாத்தினவங்க முன்னாடி நீ கெத்தா உன் மேரேஜை நடத்தி காட்டனும். நீங்க தூக்கிப் போட்டா பிழைக்காம போயிடுவேனான்னு ஒரு வார்த்தையாவது அவங்களைக் கேட்டே ஆகணும் … அதனால தான் திருமணத்தையும் நான் விருதுநகரிலேயே வச்சிருக்கேன் “என்றான் ஜீவன்.

“அண்ணா அவர் சொல்றது சரி தான் உங்க கல்யாணம் அங்கு தான் நடக்கணும் ” என்று தேவான்ஷியும் சொல்லிட ஜீவன் சிரித்தபடியே ,”முதல்ல அவனை அண்ணானு சொல்றதை விடு தேவ். அவன் உனக்கு தங்கச்சியோட ஹஸ்பண்ட்  “என்றான்.

“அதெல்லாம் முடியாது அவர் எனக்கு அண்ணா தான்… “என்றாள் தேவா.

“சரி எப்படியோ கூப்பிடு நீங்க எல்லோரும் நாளைக்கே விருதுநகர் கிளம்புறீங்க நான் நாளை மறுநாள் காலையில் வருகிறேன் என்று சொல்ல தேவான்ஷி ஜீவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“ஒன்றுமில்லை தேவ் அனுவிற்குப் பாஸ்போர்ட் அப்ளை பண்ணி இருந்தேன் விசா எல்லாம் நாளை தான் வருகிறது ஸோ அதெல்லாம் ரெடி பண்ணிட்டு வரேன் நீ வேதா அனு மூணு பேரும் ஸ்டேட்ஸ் கிளம்புறீங்க “என்றான் அழுத்தந்திருத்தமாக.

வேதாவோ குழப்பமாகப் பார்த்தவன் ,” பட் எதுக்கு டா இவ்வளவு அவசரமா அனுப்புற ? ,  நீ என்ன நினைக்கிறாய் ஜேபி ” என்றான் .

ஜீவனோ அமர்த்தலாக,” ப்ப்ச் எந்த அவசரமும் இல்லை டா இதெல்லாம் முன்னாடியே ப்ளான் பண்ணினது தான் .பொண்ணு மட்டும் பார்க்காமல் தேடிட்டு இருந்தேன். அனுவைப் பார்த்ததும் உனக்குப் பொருத்தம் னு தோணுச்சு ஸோ சீக்கிரம் எல்லாம் நடந்தா நல்லா இருக்கும் னு பண்றேன் “என்றான்.

அதற்குள் கதிர் மணிமேகலை இருவரும் வந்து விட்டிருந்தனர்.

“வாங்க மாமா, வாங்க அத்தை” என்று வரவேற்ற ஜீவன்  அவர்கள் கையில் டிக்கெட்டை கொடுத்தான்.

“என்னடா இது…  ??”மணிமேகலை குழப்பமாக ஜீவனை நோக்கினார்.

“அத்தை ஹனிமூன் பேக்கேஜ் நீங்க ரெண்டு பேரும், வேதா அனு மேரேஜ் முடிச்சிட்டு கிளம்புறீங்க “என்று சொல்ல கதிர்வேலனோ,” ஜீவா நாங்க இப்ப தான் கேரளா போயிட்டு வந்தோம் மறுபடியும் என்ன ஹனிமூன்…? “என்று கேள்வியாக நிறுத்தினார்.

“மாமா நான் ஏற்கனவே ப்ளான் பண்ணினது தான் .நீங்க கேரளா அழைச்சுட்டு போனதால தான் எதுவும் சொல்லலை , இது என்னோட கிப்ட் ஸோ மறுக்கக் கூடாது”  என்று அன்பு கட்டளை விதிக்க, கதிர் தயங்கவும், அவரை  மணிமேகலை சம்மதிக்க வைத்தார்.

“சரி ஓகே நாளைக்கே விருதுநகர் கிளம்புறீங்க! மாமா உங்க வீட்டிலும் எல்லோரையும் அழைச்சுட்டு நீங்க தான் பத்திரமாகக் கூட்டிட்டு போகணும் .நான் வந்திடுறேன் நாளை மறுநாள் காலையில் நான் அங்கே இருப்பேன்” என்று உத்தரவாதம் அளித்தான்.

எல்லோரையும் ஒரு வழியாகச் சமாளித்து அவர்களை விருதுநகர் அனுப்பி வைத்தான் .

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மிதமிஞ்சிய ஒப்பனையும் ஆடை அணிகலன்களும் தூக்கலாக அணிந்தபடி அமர்ந்திருந்தார் வனஜா.  முகமோ செந்தணலாக இருந்தது.

“என்ன வனி காலையிலேயே பயங்கர எரிச்சலில் இருப்ப போலிருக்கு…”  பரந்தாமன் நக்கலாக வினவினார்.

“ஏன் சொல்ல மாட்டீங்க…?  பெருசா மகாராணி மாதிரி வாழ வைக்கிறேன் னு சொல்லி கூட்டி வந்தீங்க, இங்க அப்படியா நடக்குது…  நேத்து அந்தச் செல்லு கடைக்காரன் லேட்டஸ்டா ஆப்பிள் ஃபோனை அனுப்பி வைடா னு சொன்னதுக்கு  எதுவா இருந்தாலும் நேர்ல வாங்க மேடம்.  வீட்டுக்கு எல்லாம் வர முடியாது னு சொல்றான் எனக்கு அவமானமாகப் போயிடுச்சு உங்க கிட்ட சொன்னா நீங்க என்னைக் கடைக்குப் போகச் சொல்றீங்க சரினு போனா அங்கே கண்றாவி அவளைப் பார்க்க வேண்டியதா போயிடுச்சு சரி என் புருஷன் தங்கச்சி ஆச்சேனு பேசப் போனா அவ என்னை அவமானப் படுத்திட்டா  தெரியுமா …?”என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டு பேசினார் வனஜா.

பரந்தாமனோ  சற்று அமைதியாக ,” நீ ஏன் அவளைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்ட,  உனக்கு இது தேவை தானா…??” என்றார்.

“ஆமா நீங்க எத்தனை நாளைக்கு என்னைக் கூட வச்சிருப்பீங்க. அதான் ஏதாவது பண்ணி அப்படியே உள்ள போகலாம் “என்று பார்த்தேன் என்றாள் வனஜா.

“நீ என்னை அவ்வளவு கேவலமா நினைச்சுட்டியா..! உன்னைக் கைவிட மாட்டேன் வனஜா” ஆதுரமாகப் பேசினார் பரந்தாமன்.

வனஜா மனதிலோ,’ம்க்கும் உன்னைப் பற்றி எனக்குத் தெரியாது பணம் வந்ததும் எல்லாத்தையும் உன் குடும்பத்தின் பேரில் எழுதி இருக்க . என்னைக் கிறுக்கினு நினைச்சுட்ட இல்ல… இனி உன் துணை எனக்குத் தேவையே இல்லை நான் எனக்குத் தேவையானதை ஏற்பாடு பண்ணிட்டேன்’ என்றெண்ணியபடி அமர்ந்திருந்தாள்.

 

“என்ன வனி அமைதியாகிட்ட…?” 

“ஹான் ஒண்ணுமில்லை நீங்க கிளம்புங்க நான் சாமியைப் பார்க்கப் போறேன்  .அவர் எனக்கு ஒரு பரிகாரம் சொன்னார் அதை நிறைவேற்ற போறேன்” என்றாள்.

“ம்ம்ம்ஹ்ம் சரி சரி நான் கிளம்புறேன் கட்சி ஆபிஸில் கொஞ்சம் வேலை இருக்கு “என்று கிளம்பினார் பரந்தாமன்.

வனஜா முத்தரசனை காண சென்றாள்.

வனஜாவை நல்லசிவம் உள்ளே அழைத்துச் சென்றான். 

“வா வனஜா…!!” என வரவேற்றபடி நல்லசிவத்தை முத்தரசன் பார்க்க ,அவனோ புரிந்தது என்பது போல வெளியேறினான்.

“சாமி நான் சொன்னது எப்போ ரெடி ஆகும்…?” என்றாள் நேரடியாக.

“வனஜா எல்லாம் தயார் நாளை மறுதினம் ஹோமம் எல்லா மக்களும் கூடுகிறார்கள் நீயும் வந்து விடு உன் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்… ” முத்தரசன் சொல்லவும் வனஜாவின் முகம் மலர்ந்தது.

“ம்ம்ம்ஹ்ம் நிறைவேற்றி தான் ஆகணும் இல்லை அந்தப் பரந்தாமன் கிட்ட இருக்கப் பணத்தில் பங்கு கிடைக்காது தெரியுமில்ல ” என்றாள் திமிராக.

முத்தரசன் “வனஜா நீ அந்த அளவுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தான் உன் குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறதா சொல்லிட்டேனே…!! பிறகென்ன கவலையை விடு ஆமா , எனக்கு ஒரு சந்தேகம் …? உன்னை அந்தப் பரந்தாமன் நல்லா தான் வச்சிருக்கான் அப்புறம் ஏன் உன் மகனோட சேர நினைக்கிற நீ… “குழப்பமாக கேட்டார்.

“ப்ப்ச் அதுவா… அந்தப் பரந்தாமன் ஒரு குள்ளநரி. என்னை வச்சு இத்தனை நாளும் பணம் சம்பாதிச்சான் , கட்சியின் தலைவர் பதவி வாங்கினான், ஆனா என்னைக் கடைசிக் காலத்தில் வச்சு பார்க்க மாட்டான் அதனால் தான் இந்த முடிவு…   பரந்தாமன் என்னைத் தள்ளி வைத்ததற்கான அபராதம் தான் அந்த இருநூறு கோடி உனக்குத் தரும் நூறு கோடிக்கு நீ வேலை செய் போதும்…” என்றாள் கறாராக

“ம்ம்ம்ஹ்ம் இப்போ எல்லாம் நூறு கோடி  சர்வ சாதாரணமாகப் போயிடுச்சு பாரு…  உழைச்சு இருந்தா பணத்தோட அருமை தெரியும்…” என்றார் முத்தரசன்.

வனஜாவோ திமிர் குறையாமல் “அதை நீ சொல்லாத ஊரை ஏமாத்தி உலையில போடுற, உனக்கு ஏன் வயிறு எரியுது சொல்றதை செய் ய்யா” என்று விட்டு கிளம்பினாள் .

“ம்ம்ம் இவ எல்லாம் அதிகாரம் பண்ற நிலைமையில் நானிருக்கேன் பணம் மட்டும் மொத்தமாகக் கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு இவளுக்கு இவ புள்ளைய வச்சே ஒரு வழி பண்ணிடுறேன்” என்று முணுமுணுத்தபடியே வனஜாவை சந்தித்த நிகழ்வை எண்ணிப் பார்த்தார்.

…. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Janu Croos

      புள்ளைங்கள வளக்க வேண்டிய வயசுல அதுங்கள விட்டுட்டு போய்…உன் வாழ்க்கை உன் சுகம் தான் முக்கியம்னு இருந்துட்டு…இப்போ யாருமே இல்லனதும் அதுங்க கூட ஒட்டப்பாக்குறியே நீ எல்லாம் என்ன ஜென்மன். நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஜீவன் உன்ன அம்மானு கூட கூப்ட மாட்டான்.
      அவன் இப்போ போடுற பிளானே உன்ன கவுக்குறதுக்கு தான் போல.