Loading

அத்தியாயம் 7

சென்னையில் இருந்து வந்ததில் இருந்து அவனுக்கு மதியின் நினைவாகவே இருந்தது. ‘அல்லிராணி அவசரப்பட்டு பாவம் ரவி மாமாவை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திட்டா’ என்று ஒருபுறம் கோவமாக இருந்தாலும் மறுபுறம் துணிந்து செய்திருக்காலே என்று அவள் தைரியத்தை எண்ணி மனதில் பாராட்டவும் செய்தான்.

அவன் அப்பாவிடம் மட்டும் சில விஷயங்களை மறைத்து அவள் கடத்தப்பட்ட விஷயத்தை மட்டும் சொன்னான். ‘பாவம் ரவி மகளுக்காக பார்ப்பானா இல்லை கடமையை செய்வானா’ என்று தன் தோழன் ரவியிடமும் நலம் விசாரித்துக் கொண்டார்.

ஆதவன் ஆழியை முத்தமிட்டுக் கொண்டே ஆழிக்குள் அஸ்தமனமாகும் மஞ்சள் மாலை நேரம்..

சிவகுரு தென்னந்தோப்பில் எண்ணைக் கம்பெனிக்காக தேங்காய்களை லோடு ஏத்திக் கொண்டிருந்தார். வெற்றி வெங்காயத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

” ஏப்பா இருக்குற தேங்காயெல்லாம் கணக்குப் பார்த்து கரெக்டா ஏத்துங்கபா” என்று வேலை ஆட்களிடம் வேலை சொல்லிக் கொண்டிருந்தார் சிவகுரு.

அப்போது வெங்காயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி முடித்து விட்டு ” என்னப்பா தேங்காய் எல்லாம் கணக்குப் பாத்தாச்சா” என்றபடி வந்தான் வெற்றி.

“ஆமாப்பா.. இந்த தடவை மரத்துல குலை கொஞ்சம் கம்மியா தான் போட்டுருக்கு. மொச்சிக்கொளை அறுத்துட்டு வந்து வைக்கனும். உரம் போடனும்”.

“ம் சரிப்பா பண்ணிடலாம்” என்றான் வெற்றி.

“காலைல தண்ணீர் பாய்ச்சிருக்கலாம்ல வெற்றி. இவ்ளோ நேரம் வேலை பாத்துட்டு இதை வேற இப்பவே பாய்ச்சாட்ட என்ன”.

“காலையில் தண்ணீர் பாய்ச்சுனா வெயிலுக்கு தண்ணீர் சீக்கிரம் பாய மாட்டேங்குதுப்பா. இப்போனா வெயிலும் இவ்லாததால தண்ணீர் சீக்கிரம் பாயுது”.

“ஆமாப்பா வெயில் இல்லனா தண்ணீர் சாய்ந்தர நேரம் சீக்கிரம் பாயும்” என்று தந்தையும் மகனும் தோட்டத்தில் உள்ள வெள்ளாமைகளைப் பற்றியும் அதன் விலைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ரவியிடம் இருந்து அவருக்கு அழைப்பு வரவும் இவன் என்ன இப்போ போன் பண்றான் என்று அழைப்பை ஏற்று ” சொல்லு ரவி. நல்லா இருக்கியா” என்று நலம் விசாரித்தார், சிவகுரு.

” ம் இருக்கேன் சிவம்” என்று குரலே உள்சென்றது. “நடந்த பிரச்சனையில என்னை மூனு மாசம் என்னை சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க” என்றார்.

” என்ன ரவி இப்டி சொல்ற. இதுல உன்னோட தவறுனு என்ன இருக்கு”.

” பிரச்சனை ரொம்ப பெரிசாயிடுச்சு சிவம். மதி இங்க இருந்தா அவ உயிருக்கே ஆபத்து. அதுனால…”  என்று அவர் எவ்வாறு சொல்வது என்று இழுத்தார்.

“என்ன ரவி?. என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்?” என்றார் சிவம்.

” என்ன‌ மாமா சொல்லுங்க. எந்த உதவினாலும் நாங்க பண்றோம். மதி வேனா எங்க வீட்ல இருக்கட்டுமா கொஞ்ச நாளைக்கு” என்றான் வெற்றி.

சிவகுருவோ அது கிராமம் ஆதலால் ‘வயது வந்த பெண்ணை எப்படி வீட்டில் வைத்திருப்பது என்று நினைத்தார். தன் மகனை ஏதாவது சொன்னால் கூட பரவாயில்லை ஆண்பிள்ளை. ஆனால் பாவம் தங்களால் மதிக்கு அவப்பெயர் வந்தால் என்ன செய்வது?’ என்று யோசித்தார்.

‘வெற்றியும் அங்க தான் இருக்கானா’ என்று நினைத்த ரவி ‘அப்போ நாம பேச வேண்டியதை பேசிடலாம்’ என்று முடிவெடுத்து ” சிவம் எனக்கு ஒரு உதவி பண்ணனும். உதவினு சொல்றதை விட அது வந்து…” என்று எப்படி சொல்வது என்று இழுத்தார்.

” ரவி சொல்லுடா என்ன இழுத்துட்டு இருக்க” என்றார் சிவம்.

” அது வந்து மதியை உன் வீட்டு மருமகளா ஏத்துக்க எனக்கு விருப்பம். உனக்கு சம்மதமா?. இதை நான் என்னோட சந்தர்ப்ப சூழ்நிலைக்காக மட்டும் கேட்கல. வெற்றி எனக்கு மருமகனா வர நான் குடுத்து வச்சுருக்கனும். நீ இப்பவே பதில் சொல்லனும்னு இல்லை. வீட்ல கலந்து பேசிட்டு வெற்றிக்கும் எல்லாத்துக்கும் சம்மதம்னா சொல்லு” என்றார் ரவி முழு மூச்சாக.

” என்னடா திடீர்னு இப்படி. மதிக்குட்டிக்கு சம்மதமா” என்றார் சிவம்.

” அவளை அவங்க பெரியம்மா பையன் கூட வெளிநாடு அனுப்பலாம். ஆனால் எனக்கு அதில விருப்பமில்லை. அதுனால தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். எங்களுக்கு எல்லாருக்கும் சம்மதம் தான் சிவம்”.

” சரிடா நான் வீட்ல கலந்து பேசிட்டு சொல்றேன்” என்று அவர் அணைப்பைத் துண்டித்தார்.

” என்னப்பா இது இப்படி திடீர்னு?. அவர் அவசரப்பட்டு முடிவெடுக்குறாருனு தோனுது. அவர் பொண்ணு சம்மதம் சொல்லி இருப்பாங்களா?” என்றான் அவளைப் பற்றி அறிந்தவனாக.

” அவர் தான் சம்மதம்னு சொன்னாரேப்பா. நீயும் யோசிச்சு முடிவெடுப்பா. நான் அம்மாட்ட பேசுறேன். பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அவளை மாதிரி துருதுருனு இருந்தா உங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார் சிவகுரு சந்தோஷமாக.

‘ ஆமா ரொம்ப நல்ல பொண்ணு நீங்க பாத்தேங்க’ என்று மனதில் நினைத்துக் கொண்டான். ‘அந்த அல்லிராணியாவது என்னைக் கட்டிக்க சம்மதம் சொல்றதாவது’ என்று “சரிப்பா நீங்க அம்மா கிட்ட பேசுங்க” என்றான்.

“சரிப்பா” என்று அவர் சந்தோஷமாக வீட்டிற்குச் சென்றார். அவருக்கு தன் தோழனின் மகளே மருமகளாக வருவதில் சந்தோஷம்.

‘இவரு இவ்வளவு சந்தோஷமா போறாரே. இதெல்லாம் சரிபட்டு வருமா?’ என்று யோசித்து விட்டு ‘சரி அவரிடம் தெளிவாக பேசுவதே நல்லது’ என்று ரவிக்கு அழைத்தான்.

தன் மனதில் நினைத்ததை பேசி விட்ட திருப்தியில் இனி கடவுளின் விருப்பம் போல் நடக்கட்டும் என்று சோபாவில் அமர்ந்திருந்தார்.
வெற்றியின் அழைப்பைக் கண்டவுடன் அழைப்பை ஏற்று “ஹலோ வெற்றி” என்றார்.

” ஹலோ மாமா. உங்களை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்கனு சொன்னேங்க. என்னாச்சு மாமா?” என்றான்.

“அது கூட பரவாயில்லை வெற்றி. இப்போ உடனே இந்தக் கேஸை ரீ இன்வெஸ்டிகேட் பண்ணாலும் வேஸ்ட். குற்றவாளிகள் அலார்ட் ஆகிடுப்பாங்க. இதை கொஞ்ச நாள் ஆறப்போட்டு தான் பாக்கனும். அதுனால சஸ்பெண்ட் பண்ணது பரவாயில்லை. ஆனால் மதிக்கு தான் பிரச்சனை வெற்றி” என்றார் வருத்தமாக.

” என்ன மாமா சொல்றேங்க?. எவிடன்ஸ் தான் அவங்க கைக்கு கிடைச்சுருச்சே. அப்புறம் என்ன?”.

” அங்க தான் பிரச்சனையே வெற்றி. எவிடன்ஸ் எல்லாம் அவங்ககிட்ட குடுத்துட்டேன். ஆனால் நான் அவங்க கிட்ட குடுத்த ஹார்டு டிஸ்க்ல எதுவுமே இல்ல. ஆனால் நான் அவங்க கிட்ட குடுக்குறதுக்கு முன்னாடி நான் என்னோட ஹையர் ஆபிஸர்கிட்ட அதைக் காண்பிச்சேன். இன்பேக்ட் அவங்க மூலமா தான் நியூஸே அவங்களுக்கு போனதே. அப்புறம் எப்படி அந்த டிஸ்க் எம்ப்டி ஆனதுனு தெரியலை”.

” ஆனால் இதுக்கும் மதிக்கும் என்ன மாமா சம்மந்தம்?”.

“அது வந்துபா அவங்க நியூஸ்ல தான் இந்தக் கேஸை பத்தி மதி என்கிட்ட இன்டர்வியூவ் பண்ணி நியூஸ் போட்டா. எவிடன்ஸ் அவங்க கைக்கு போனதுக்கப்புறம் என்ன நடந்ததுனா, அதுல எவிடன்ஸ் காணாம போயிடுச்சு. மேலதிகாரிகளும் அதுல எவிடன்ஸ் இருந்ததை பார்த்ததால ஏதாவது டிஸ்க்ல பிராபளமானு செக் பண்ணி பார்த்துட்டு நான் எதுவும் பண்ணலைனு அமைதியா தான் இருந்தாங்க. ஆனால் மதியோட நியூஸ் சேனல்ல கமிஷ்னர் பெண்ணைக் கடத்தி வைத்து எவிடன்ஸை பறித்த குற்றவாளிகள்னு நியூஸ் போட்டு அவங்க கோவத்தை தூண்டி விட்டாங்க. அதுனால் நான் தான் எவிடன்ஸை மறைச்சு வச்சுருக்கிறதா சொல்லி மதியை வச்சு திரும்பவும் மிரட்டுறாங்க. இதுல என்னனா இப்போ அந்த எவிடன்ஸ் யார் கையில் இருக்குனேத் தெரியல. இந்தக் கேஸை அன்அபிஷியலா ரிசர்ச் பண்ண எனக்கு இந்த சஸ்பென்ட் ஓகே தான். ஆனால் மதி?.. அதுனால் தான் மதியை வெளிநாடு அனுப்புறதை விட உன்கூட இருந்தா அவ வாழ்க்கையும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். உன்னை மனப்பூர்வமாக புடிச்சு தான் இதை கேட்கிறேன் வெற்றி. உனக்கு மதியைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”.

அவனுக்கு திடீரென்று கேட்டால் என்ன சொல்வதென்று தெரியாமல் சிறிது யோசித்தான்.

அவன் யோசிப்பதை உணர்ந்து ” நீ அன்னைக்கு அந்த மாதிரி நடந்ததால யோசிக்கிறியா வெற்றி” என்றார் ஒரு பெண்ணின் தகப்பனாக.

” சே சே என்ன மாமா நீங்க. அதுலாம் ஒரு  விஷயமே இல்லை. அது வந்து மாமா… இதுல மதிக்கு சம்மதமா?” என்றான்.

” ம் அவளுக்கும் சம்மதம் தான் வெற்றி. நீங்க உங்க முடிவை வீட்ல பேசிட்டு சொல்லுங்க”.

“சரிங்க மாமா அப்பா பேசிட்டு சொல்வாங்க” என்று அழைப்பை வைத்து விட்டான். ஆனாலும் அவனுக்கு அல்லிராணி எப்படி சம்மதித்திருப்பாள் என்று சந்தேகமே.

வீட்டிற்குச் சென்ற சிவகுரு முதல் வேளையாக தன் மனைவி கனிமொழியிடம் இது பற்றி பேசினார். தன் மொபைலில் இருந்த மதியின் போட்டோவை தன் தாயிடமும் மனைவியிடமும் காண்பித்தார்.

” புள்ளை தங்க சிலையாட்டமால இருக்கு. நம்ம வெற்றிக்கு ஏத்த மகராசி தான் சிவம். பேசி முடி” என்றார் முத்தம்மாள் பாட்டி.

” ஆமாங்க பொண்ணு அழகா இருக்கா. ரவி அண்ணே வளர்ப்பும் தப்பா இருக்காது. புள்ளையும் துருதுருனு இருக்கா. எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார் கனிமொழி.

வெற்றி அப்போது தான் உள்ளே வந்தான். தன் தாயின் ரொம்ப பிடிச்சிருக்கு என்ற வார்த்தையும் அவர் குரலில் இருந்த சந்தோஷத்தையும் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

“வெற்றி இங்க வாப்பா” என்றார் கனிமொழி.

“ம்மா சொல்லுங்கமா ” என்று அமர்ந்தான் அவர் அருகில்.

“பொண்ணு மகாலட்சுமியாட்டம் இருக்காயா. உனக்கு புடுச்சுருக்கா?”.

‘ம்க்கும் அவ மகாலட்சுமியா இல்லை ராட்சசியானு இங்க வந்தப்புறம் தான் தெரியும்’ என்று நினைத்து விட்டு ” உங்களுக்கு என்ன விருப்பமோ அது போல பண்ணுங்க மா” என்று விட்டு அவனறைக்குள் சென்று விட்டான்.

தாய் தந்தை பேச்சை மீறாதவன் தான். இருந்தாலும் தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதில் ஆசையில்லாமலா இருந்திருப்பான். ‘அந்த இடத்துல எந்த பொண்ணு இருந்தாலும் உங்க இஷ்டம்னு சொல்லிட்டு வந்திருப்பியா?’ என்று அவன் மனசாட்சி கேட்ட கேள்விக்கு பதில் இல்லை அவனிடம். ‘நடப்பது போல் நடக்கட்டும் ஆனால் மதியிடம் பேச வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.

வெற்றிக் குடும்பத்தார் அனைவருக்கும் சம்மதம் என்பதால் ரவியிடமும் சொல்லி விட்டனர். ஆனால் எல்லாமே சம்பிரதாயப்படி நடக்கட்டும் என்று நாளை மறுநாள் மதியை பெண் கேட்டு வருகிறோம் என்று சொல்லி விட்டார்.

பூங்குழலியின் தந்தையிடமும் தாய்மாமா என்ற முறையில் சொல்லி விட்டார் சிவகுரு. எப்படியும் பூங்குழலி சின்ன பொண்ணு அவளை வெற்றிக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அதுவும் இருவருக்குமே அந்த எண்ணமும் இல்லை என்பதால் பூங்குழலியின் தந்தை மாணிக்கவேலும் தாய் லட்சுமியும் சம்மதம் தெரிவித்தனர். கிராமங்களில் எல்லாம் ஒரு திருமண சம்மந்தத்திற்கு தாய்மாமன் சம்மதம் கட்டாயம் வேண்டும். அதனால் தான் அவர் சம்மதத்தையும் வாங்கிக் கொண்டார்.

இவனுக்கு சம்மதம் அங்கே அவளோ ” யாரைக்கேட்டு நீங்க சம்மதம் சொன்னேங்க.என்னால அந்த பட்டிக் காட்டானைக் கல்யாணம் பண்ணிட்டு அந்தப் பட்டிக்காட்டுல இருக்க முடியாது. அந்தக் காட்டானை எப்பிடி உங்களுக்கு பிடிச்சது” என்று தாம் தூம் என்று தன் தந்தையிடம் குதித்துக் கொண்டிருந்தாள்.

” ஸ்டாப் இட் மதி. அவன் காட்டானா?. ஹி இஸ் எம்எஸ்சி யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர். படிச்சிட்டு விவசாயம் பண்ணா தப்பா. நீ பண்ண வேலையால நான் பட்ட அவமானம் போதும். இதற்கப்புறமும் எங்க பேச்சை நீ கேட்கலனா உன் இஷ்டம். ஆனால் இனிமே உன் முகத்துல கூட நான் முழிக்க மாட்டேன். அதுக்கு மேல உன் விருப்பம்” என்று சென்று விட்டார்

“ஏம்மா நீயாவது அப்பாகிட்ட சொல்லுமா” என்றாள்.

” இதுல நான் சொல்ல என்ன இருக்கு. நல்ல குடும்பம். நல்ல பையன். பாக்கவும் ஆளு வாட்ட சாட்டமா சூப்பரா இருக்குறான். இதுக்கு மேல என்ன வேனும் உனக்கு. ஏதோ கிராமத்துல நீயே போய் வயல்ல இறங்கி வேலை செய்யப் போறது மாதிரி பேசுற. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு”  என்றார்.

” அப்போ நீயே கட்டிக்கோ” என்று அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

” நான் கட்டிக்கனுமாவுல‌‌. வாயை மொதக் குறைடி. இப்டிலாம் போற இடத்துல பேசுனா உங்க ஆத்தா என்ன புள்ளை வளத்துருக்கானு என்னைய தான் திட்டுவாங்க” என்றார் லதா.

இதைத் தான் இரண்டு நாட்களில் என்னென்ன நடந்து விட்டது என்று நினைத்து யோசித்துக் கொண்டிருந்தான்.

தன் காட்டில் வேலை முடித்து விட்டு அந்த வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த குமார் வெற்றி அங்கு இருப்பதை பார்த்து விட்டு அவன் அருகில் வந்து ” என்னணே கல்யாண கனவுல மிதந்து கிட்டு இருக்க போல” என்றான்.

அவன் பேச்சில் நிகழ்வுக்கு வந்து “நான் கல்யாணக் கனவுல இருக்கேன் நீ பார்த்த? ” என்று எழுந்தான்.

“இல்லணே நாளைக்குலாம் அப்படியே அண்ணியை சைட் அடிச்சுக்கிட்டு புதுமாப்பிள்ளையா ரெடியாயிடுவ”.

” நாளைக்கு பொண்ணு தான் பார்க்கப் போறோம். நாளைக்கேவா புது மாப்பிள்ளை ஆயிடுறேன். அப்புறம் அதென்ன அண்ணி. அவ உன்னை விட ரெண்டு வயசு இளையவ தான்”.

“அண்ணன் மனைவியாகப் போறவங்க அண்ணி தான். அப்புறம் ன்ணே அன்னைக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சன்னியாசம் போயிடுவேனு சொன்னியே. எப்படிணே கல்யாணம் பண்ணிட்டு அண்ணியோட சேர்ந்து சன்னியாசம் போறியாணே” என்றான் நக்கலாக.

“அடிங்க” என்று அவன் வேட்டியை மடித்துக் கொண்டு பக்கத்தில் வரவும் “அண்ணிக்கேத்த ஜோடிணே நீங்க” என்று ஓடியே விட்டான்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    9 Comments

    1. அழகான கிராமத்து பின்னணி. எனக்கு வெற்றியை விட தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு மனுஷனுக்கு தனிமை பெரிய தண்டனை. அதுவும் ஒரு ஊரே ஒதுக்கி வைத்து அதிலிருந்து வெளியே வந்து வாழுறது சவாலான விஷயம். அவனோட ஆதங்கம் அத்தனையும் சரி. தமிழுக்கு குழலி சரியான ஜோடி. ஜோடிய மாத்த மாட்டீங்களே 🤣🤣🤣🤣. உண்மைதான் விவசாயத்தோட நிலைமை இன்னைக்கு இதுதான். ஒருத்தரை மட்டும் கை காமிச்சு குற்றம் சொல்ல முடியாது. சின்னதுல இருந்து பெருசு வரைக்கும் எல்லாமே விவசாயத்துக்கு எதிரா தான் இருக்கு. இந்த மாதிரி இருந்தா வரணும்னு ஆசைப்படுறவங்க கூட வரமுடியாது. மனுஷங்க பாதி சதி பண்ணா இயற்கை மீதி சதிய பண்ணுது.
      குழலி என்ன……வாய். உன்னை தமிழ் ரசிச்சதுல தப்பே இல்ல. அதான கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இல்லனாலும் மாமா மாமா தான். தாய்மாமன் உறவு ரொம்ப புனிதமானது.

      மதி வந்ததுக்கு அப்புறம் வெற்றி குழலி ரெண்டு பேருக்குள்ள இதே பேச்சு இருக்குமான்னு தெரியல. நிஜத்துல வாய்ப்புள்ள கதையில் பார்ப்போம். கிராமத்துல இருந்தாலே அவன் காட்டான் தானா…. யாரு ட்ரெண்ட் பண்ணது இதை. மதி உன்னோட திமிருக்கு சரியான ஆள் தான் வெற்றி. நம்ம ஹீரோவுக்கு ஓவர் லவ் போல மனசுல. வெளியே காட்டாம நல்ல புள்ளை மாதிரி பெத்தவங்க முன்னாடி தலையாட்டிடாரு. கல்யாணத்துக்கு அப்புறம் இவங்க கலாட்டா தான் அதிகம் இருக்கும் போல.

      தன்னோடு பலமா பெண்களோட கற்ப பயன்படுத்த நினைக்கும் ஆண்கள் பேர்ல இருக்க சில அசிங்கத்தை என்னதான் பண்றது. ஒரு உண்மையை வெளிய சொன்னா அதுக்கு பிரதிபலன் அவளோட மானம் தானா. வெற்றி சொன்னமாதிரி பெண்களோட உயிர் கற்பு’னு சொல்லி வளர்த்த இந்த சமூகத்தை சொல்லணும். ஏதோ ஒன்னு அவனுங்க பண்ணதால இப்போ வெற்றிக்கு தான் நல்லது.

      சில வசனங்கள் எல்லாமே ரொம்ப அருமை. கிராமத்து பக்கம் போன உணர்வு. தமிழ் , வெற்றி இரண்டு கதாபாத்திரமும் அருமை. குணத்துல எப்படி இருந்தாலும் விவசாயத்துல காட்ற அக்கறை நல்லா இருக்கு. குறியீடுகள் மட்டும் பயன்படுத்துங்கள். இவ்வளவு அழகாக கதை எழுதிட்டு அதுக்கு திருஷ்டி பொட்டு வைக்காத மாதிரி இருக்கு. முடிஞ்ச வரைக்கும் பயன்படுத்துங்கள்.

      வாழ்த்துக்கள்.

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

      1. Author

        தங்கள் வாசிப்பிற்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிங்க சிஸ். அடுத்த பதிவில் இருந்து மேற்குறியீடுகள் பயன்படுத்துகிறேன். கருத்துகளைப் பகிர்ந்து என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.

    3. 1. நீங்க என்ன தான் வெற்றி தான் ஹீரோ ன்னு சொன்னாலும் என் தமிழ் டார்லு தான் ஹீரோ.

      2. வார்த்தைகள் வசனங்கள்ன்னு எல்லாமே சூப்பர். எஸ்பெஸலி மண்ண பார்க்கும் போது பொண்ண பார்த்தா இப்படிதான்… சூப்பர் சிஸ்…

      3.அவன பார்க்க வந்துருக்காலேன்னு ஈகோ பார்க்காம தமிழ் குழலிய கேர் பண்ணுன விதம் சூப்பர்.

      குறைகள்னு பார்த்தா

      1. வெற்றி கேரக்டர்ர இன்னும் ஆழமா சொல்லிருக்கலாமோன்னு தோணுது.

      2. சின்ன சின்ன ஸ்பெல்லிங் எரர்ஸ்

      3. புள்ளி, மேற்கோள், கமா எதுவுமே யூஸ் பண்ணல நீங்க. யூஸ் பண்ணுனா அழகா இருக்கும்.

      1. Author

        தங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க சகி. தமிழும் ஒரு ஹீரோவா வச்சுக்கலாம் 🙂. அடுத்த பதிவில் இருந்து தவறுகளை திருத்திக் கொள்கிறேன் சகி. தவறுகளைச் சுட்டிக்காட்டி என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.

    4. ‘அடியே திமிரழகி அடங்காத சதிரழகி’ கிராமத்து ஸ்டைல்ல, செம ஸ்டோரி.
      இதோட பாசிட்டிவ்ஸ்,
      1. தமிழ், இவனோட கேரக்டர் சூப்பரா இருக்கு. எதையும் பொறுமையா, நிதானமா ஹேண்டில் பண்றான்.
      2. குழலி, மதி ரெண்டு பேருமே செம அடாவடியா, ஜாலியா இருக்கது சூப்பரா இருக்கு.
      3. கிராமத்து ஸ்லாங் செமையா இருக்கு.
      நெகட்டிவ்ஸ்னா,
      1. அங்கங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கு.
      2. நிறுத்தற்குறியெல்லாம் கொஞ்சம் போட்டீங்கன்னா, நல்லாருக்கும்பா.
      3.வெற்றிய விட தமிழுக்கு நெறைய ஸ்கோப் இருக்குன்னுத் தோணுது. பேசாம, தமிழ ஹீரோவாக்கிருங்க.😜😜😜
      மொத்தத்துல இந்த ஸ்டோரி, ரொம்ப யதார்த்தமா கிராமத்தையும், அதே நேரத்துல சிட்டியையும் ரொம்ப நேச்சுரலா காட்டுற மாதிரி செமையா இருக்கு.

      1. Author

        தங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க சகி. அடுத்த பதிவில் இருந்து தவறுகளை திருத்திக் கொள்கிறேன். தங்கள் வாசிப்பின் மூலம் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.

    5. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    6. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.