Loading

அத்தியாயம் 9

ஆதவன் ஆழியுடன் கலந்து வானத்தை சிவக்க வைத்துக் கொண்டிருந்த அந்தி மஞ்சள் மாலை நேரம்..

பயிரிடப்படாமல் தரிசாக கிடந்த நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் வெற்றி. பார்ப்பவர்கள் அவனை ‘இவன் என்ன படித்த முட்டாளா’ என்று சொல்லி விட்டு தான் சென்றனர். தன் மகன் இருக்குமிடம் வந்த சிவகுரு அவன் நிலத்தின் மேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் அவருக்கு பெருமையாக இருந்தாலும் இன்னொருபுறம் ‘இந்த முயற்சி வெற்றியில் முடியுமா?. வீணாக தன் மகனின் அறிவும் உடலுழைப்பும் போகிறதோ?’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவரால்.

” ஏய்யா வெற்றி இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணத்த வச்சுக்கிட்டு எதுக்கு இத்தனை வேலை பார்த்துக்கிட்டு இருக்க?. அதுவும் ஒன்னும் விளையாத இந்த தரிசு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிட்டு இருக்க. இதெல்லாம் இன்னும் விளையும்னு உனக்கு நம்பிக்கை இருக்காயா?” என்றார் வருத்தமாக.

” அப்பா என்னப்பா இது?. நீங்களே இப்படி சொன்னா எப்டிப்பா. என்மேல நம்பிக்கை இல்லையா இல்லை நிலத்து மேல இல்லையா?. இல்லை ரெண்டுத்தும் மேல இல்லையா?. தாத்தா இந்த நிலத்துல எத்தனை வெள்ளாமை எடுத்தாரு. அத்தனை விளைந்தது இன்னைக்கு தரிசாக கிடக்குதுனா அதுக்கு நாமளும் காரணம் தான்பா. என்னோட முயற்சி வீண் போகாதுப்பா. என்மேல நம்பிக்கை வைங்க. என்னோட நாலு வருஷ உழைப்பு. கண்டிப்பா ஜெயிப்பேன்பா” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

‘அவனுக்கு இருக்கும் நம்பிக்கை தனக்கு இல்லாமல் போனதோ. நாமளே ஊக்குவிக்கலனா மத்தவங்க என்ன நினைப்பாங்க’ என்று நினைத்து விட்டு ” நம்பிக்கை இல்லாம இல்ல வெற்றி. கல்யாணத் தேதி நெருங்கிட்டு இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோனு சொன்னேன்” என்றார்.

” கல்யாண வேலையெல்லாம் ஒருபக்கம் பாத்துட்டு தான்பா இருக்கேன். அதுக்காக இதை விட முடியாது. வாரம் ஒருமுறையாவது தண்ணி விட்டு நிலத்தை இறுகாம வச்சுக்கிட்டா தான்பா நல்லது. நிலத்தோட வளமை முன்னை விட இப்போ நல்லா இருக்குனு சொன்னாங்க யூனியன்ல. எனக்கு என்னப்பா ரெஸ்ட். நான் பிரஷ்ஷா தான் இருக்கேன். நீங்க கவலைப்படாதிங்க” என்றான்.

” ம் சரி வெற்றி. உங்க அம்மாவும் அப்பத்தாவும் தான் புள்ளைக்கு ஓய்வே இல்லனு புலம்பிட்டு இருந்தாங்க. அதான் சொன்னேன். சரி சீக்கிரம் தண்ணீர் பாய்ச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பு. மீதியை நாளைக்கு பாய்ச்சிக்கலாம்” என்று அவர் கிளம்பி விட்டார்.

அவர் கிளம்பிய பிறகு தண்ணீர் பாய்ச்சி விட்டு வரப்பில் யோசனையுடன் அமர்ந்து விட்டான். நினைவுகள் அவன் படித்து முடித்து விட்டு விவசாயம் செய்யப் போறேன் என்று அவன் தந்தையிடம் சொன்ன நாட்களுக்குச் சென்றது.

அவன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த நிலம் மொத்தம் பத்து ஏக்கர். ஒரு காலத்தில் சோளம், சேனை, மிளகாய், வெங்காயம், காய்கறிகள் என்று பல பயிர்கள் செழித்து விளைந்த நிலம். இன்று தரிசாக எதுவும் விளைவிக்க முடியாத நிலமாக உள்ளது. காரணம் தாத்தா பாட்டி காலத்தில் மழை இல்லாமல் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் கிடந்த நேரம் அது. தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அப்படியே போட்டு விட்டனர். அதற்கு பின் அங்கு கருவேல மரங்கள் ஆக்கிரமித்து மணல் மாபியாக்கள் மண் அள்ளி நிலத்தின் மேலிருந்த வளமான மண்ணெல்லாம் போனதால் நிலம் பாழாகிவிட்டது. வறட்சி வந்து பல வருடங்களுக்கு பின் மிகப்பெரிய மழை பெய்து நல்ல வளமான மண்ணெல்லாம் அரித்துக் கொண்டு போய் கற்கள் மணல் எல்லாம் வந்து நிரப்பி விட்டது அந்த நிலத்தில். அதற்கு பின் நிலத்தின் தரம் குறைந்து எதுவும் விளைவிக்க முடியாத நிலமாக மாறிவிட்டது. சிறு வயதில் வெற்றியின் அப்பத்தா அந்த இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த இடம் அப்படி விளையும் இப்படி விளையும் என்று சொல்லி சொல்லியே அவன் மனதில் அது ஆழப் பதிந்து விட்டது. அதன் பிறகு தான் அதில் ஆராய்ச்சி செய்து மீண்டும் நிலத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் நல்ல மதிப்பெண் எடுத்தும் அக்ரி எடுத்து படித்தான் வெற்றி.

வெற்றி படித்து முடித்து விவசாயத்தைக் கையில் எடுத்ததிலிருந்து அந்த நிலத்தை சீர்படுத்தும் முயற்சியில் இறங்கினான். அந்த நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண்ணை எல்லாம் எடுத்து விட்டு கம்மாயிலிருந்து கரம்பை மண் எடுத்து நிலத்தில் பரப்பினான். இயற்கை உரங்கள், ஆடு மாடுகளின் கழிவுகள் மற்றும் தாவரக் கழிவுகளில் இருந்து அவனே தயார் செய்ய ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக நிலத்தின் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறான். இப்போது அதன் பாதி தரம் உயர்ந்து விட்டது. எந்தப் பயிரும் போடா விட்டாலும் அதற்கு அந்த நிலத்தில் உள்ள மொட்டைக் கிணற்றில் இருந்து ஆயில் மோட்டார் மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி விடுவான். இல்லையேல் வளமான மண் மற்றும் இயற்கை உரம் போட்டாலும் நிலம் இறுகிவிடும் என்பதால். ஊர் மக்கள் சில பேர் ‘தரிசு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி படுச்சும் முட்டாளா இருக்கானே. இவன் படுச்ச படிப்புக்கு கவர்ன்மென்ட் வேலைக்கே போலாம். ஏப்பா சிவம் நீயாவது உன் புள்ளைக்கு புத்தி சொல்லக் கூடாதா’ என்று ஏளனமாகப் பேசியதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் இதுவரை வந்து விட்டான்.

எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து விட்டு அவன் கண்கள் நிலத்தை அளந்தது. அவன் கண்களுக்கு அந்த நிலத்தில் பச்சைப் பசலென பயிர்கள் செழித்து வளர்ந்து நிற்பது போல் தெரிந்தது. பின் தலையை உலுக்கி ‘இது நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும். அப்போ தான் நான் படிச்ச படிப்புக்கே மரியாதை’ என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் வீட்டிற்கு.

சென்னையில் இருந்து வந்து கல்யாண வேலைகளை விறுவிறுப்பாக தொடங்கி இருந்தனர். இரண்டு வாரங்கள் தான் உள்ளது என்றாலும் கிராமத்தில் அங்காளி பங்காளிகள் என ஆளும் பேரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலையை இழுத்துப் போட்டு செய்வதால் இரண்டு வாரம் என்றாலும் கல்யாண வேலைகள் பாதியளவு முடிந்திருந்தது.

இரு வீட்டிலும் முதல் கல்யாணம் மற்றும் ஒரே பிள்ளைகள் என்பதால் ஊரே மெச்ச ஊர் பக்கத்தில் உள்ள டவுனில் பெரிய திருமண மண்டபம் பிடித்து திருமண வைபவம் நடத்த முடிவு செய்திருந்தார்கள். ரவியின் குடும்பத்தார் ஒரு வாரம் கழித்து ஊருக்கு வருகிறோம். அதுவரை நீங்களே மற்ற விஷயங்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியதால் சிவகுரு மற்றும் வெற்றியே பார்த்துக் கொண்டனர்.

ரவியின் குடும்பத்தார் மூன்று நாட்களுக்கு முன் தான் சொந்த ஊர்க்கு வந்து சேர்ந்தனர். அங்கயே அவருக்கு சொந்த வீடு இருப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்னே வீட்டை சுத்தம் பண்ணி வைக்க சொன்னதால் வீடு சுத்தமாக இருந்தது. அவர்களுடனே வைஷாலியும் வந்து விட்டாள்.

வரும் போதே “ஊரைப் பாத்தியாடி வைஷூ. இங்க என்ன பொழுது போகும் எனக்கு. வேலைக்கும் போக முடியாமானு தெரியலை‌. இந்த அப்பா ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாருனு தெரியலை சே” என்று வைஷூவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் மதி.

” அப்போ உனக்கு ஊரு தான் பிரச்சனை. மாப்பிள்ளை பிரச்சனை இல்லை கரெக்ட்” என்றாள்.

” ம் ரெண்டும் தான். நீ ஏன்டி நான் என்னை பேச ஆரம்பிச்சாலும் அந்தக் காட்டான் பேச்சுக்கே வந்து நிக்குற” என்றாள் சற்று எரிச்சலாக. அது எரிச்சலா இல்லை பொறாமையா என்பதை அவள் மனம் மட்டுமே அறியும்.

” அது மாம்ஸ் அழகு அப்டிடி. மாம்ஸ் இதே ஊர் தான. வாயேன் அப்டியே ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்”.

” ஆமா எங்க ஆத்தா லதாம்மா அப்டியே போயிட்டுவா ராசாத்தினு அனுப்பி விட்டுடும். வீட்டை விட்டே வெளில போகக் கூடாதுனு சொல்லிட்டு தான் போனாங்க சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க போகும் போது. இதுல மாப்பிள்ளை வீட்டுக்கே அனுப்புறாங்களாக்கும் என்னை. அப்புறம் இதென்னடி கூத்து தாலியே கட்டாம பொண்ணு மாப்பிள்ளை வீடு வரைக்கும் வந்துருச்சுனு ஊரே பேச ஆரம்பிச்சுடும்” என்று கிராமத்தில் கிழவிகள் சொல்வது போல் முகவாயில் கைவைத்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

” அட அட அடடா.. இப்படி உன்னை பார்க்க இப்பவே வெற்றி மாம்ஸ்க்கேத்த திருமதியா மாறிட்ட போலயே. இரு இப்பவே போட்டோ எடுத்து அருண்க்கு அனுப்புறேன். அந்த எருமை வேற கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட் தான் வர்றேன்னு சொல்லிருக்கிறான்” என்று அருணுக்கு அழைபேசியில் அழைத்துக் கொண்டே வெளியில் சென்றாள் வைஷூ.

மதி அறையின் ஜன்னல் வழியே தூரத்தில் தெரிந்த வயல்களின் பசுமையைப் பார்த்துக் கொண்டே மாலைத் தென்றல் காற்றை ரசித்துக் கொண்டிருந்தாள்.

” அக்கா… மதி அக்கா எங்க இருக்கேங்க?” என்றபடி உள்ளே வந்தாள் பூங்குழலி.

அவள் அழைப்பில் அறையை விட்டு வெளியே வந்த மதி அவளைப் பார்த்து ‘யாரு இது?’ என்று யோசனையில் கண்களை சுருக்கினாள்.

அவள் விழிப்பதைப் பார்த்து “நான் பூங்குழலி. வெற்றி மாமாவோட மாமாப் பொண்ணு”.

அதன் பிறகே “ஓஓ. ஹாய் நான் மதிவதனி” என்றாள்.

” நீங்க ஊர்ல இருந்து வந்துருக்கேங்கனு சொன்னாங்க. அத்தை சென்னைக்கு போயிட்டு வந்ததுல இருந்து உங்க புராணம் தான். அதான் எங்க மாமாவுக்கேத்த பொண்ணானு பாத்துட்டு போலானு வந்தேன்” என்றாள் சிரிப்புடன்.

அவள் வெள்ளந்திப் பேச்சில் சிரிப்பு வந்தாலும் ‘எங்க மாமாவாம். அவ்வளவு உரிமையோ?’ என்று சிறு பொறாமையும் எட்டிப் பார்த்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ” என்ன குழலி மேடம் பாத்துட்டேங்களா?. உங்க மாமா அந்த மகாராஜாவுக்கு ஏத்த ராணியா இருக்கோமா இல்லை தேறமாட்டோமா” என்று நக்கலாக கேட்டாள்.

” அக்கா நான் சும்மா தான் கேட்டேன். தப்பா எடுத்துக்காதிங்க. நீங்க மாமாவுக்கு ஏத்த ஜோடி தான். ரொம்ப அழகா இருக்கேங்க. உங்களுக்கு என்ன உதவி வேனாலும் என்கிட்ட கேளுங்க. மாமா ரொம்ப நல்லவங்க. உங்களை நல்லா வச்சுப்பாங்க” என்று மாமா அப்படி இப்படி என்று வெற்றியின் புகழை அடிக்கிக் கொண்டே போனாள்.

” போதும் போதும் உங்க வெற்றி மாமா புராணம். கல்யாணம் பண்ணி காலம் பூரா அவரு கூட தான இருக்கப் போறேன். நானே அப்போ தெரிஞ்சுக்கிறேன். உன்னை பத்தி சொல்லு. என்ன பண்ற?. எங்க படிக்குற?” என்று அவளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

பூங்குழலியின் பேச்சும் அவள் பாவனைகளும் மதிக்கு மிகவும் பிடித்து விட்டது. போன் பேசி விட்டு வந்த வைஷாலியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். பின் மூன்று பெண்களும் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு பூங்குழலி அவள் வீட்டிற்குச் சென்றாள்.

வெற்றி ரவியின் குடும்பத்தார் வருகை அறிந்து அவர்களின் சௌகரியம் கேட்டு அறிந்து கொண்டான்.

வெற்றிமாறன் வெட்ஸ் மதிவதனி

என்ற பானர் திருமண மண்டபத்தின் முன் ஜொலித்துக் கொண்டிருந்தது. மண்டபத்தின் இருபக்கமும் வாழை மரங்களும் பளீச்சென்று மின்னிய சீரியல் பல்புகளும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த சொந்த பந்தங்களும் என ஜேஜேவென இருந்தது திருமண மண்டபம்.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு நிச்சயதார்த்த விழா நடந்து கொண்டிருந்தது. கல்யாண மேடையில் ஒரு பக்கம் பெண் வீட்டினரின் சொந்த பந்தங்களும் மறுபக்கம் மாப்பிள்ளை வீட்டினரின் சொந்தங்களும் அமர்ந்து நிச்சயதார்த்த சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருந்தது. வெற்றி மாப்பிள்ளை வீட்டின் பக்கமும் மதி பெண் வீட்டின் பக்கமும் அமர வைக்கப்பட்டு நிச்சயப் பத்திரிக்கை வாசித்து இரு வீட்டினரும் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

அதன்பின் நிச்சயப்புடவையை கொடுத்து மதியை மாற்றி வரச்சொல்லி அனுப்பினர். நிச்சயப் புடவையில் அம்சமாகக் கிளப்பி வெற்றி அருகில் அமர வைத்தனர். இருவர்குள்ளும் ஏதோ சிலிர்ப்பு, ஜில்லென்ற உணர்வு, பதட்டம் என்று ஒட்டு மொத்த உணர்வும் வந்து போனது. அதுவரை கூட்டத்தில் பெரியவர்கள் முன்னிலையில் பார்க்காமல் இருந்தவன் இப்போது திரும்பி அவள் முகத்தை நன்றாகப் பார்த்தான். புதிதாக நண்பர்களின் கேலி கூச்சல்களால் சிறு வெட்கம் முகத்தில் ஒட்டி இருந்தது. ஏற்கனவே பளிச்சென்ற இருக்கும் முகம் இப்போது இன்னும் சிவந்து போய் இருந்தது.

ஏதோ உள்ளுணர்வு தோன்ற நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வை தன்னிடம் இருப்பதை உணர்ந்து ‘காட்டான் எப்படி பார்க்குறான்’ என்று இனிய அவஸ்தையாய் நெளிந்தாள். எப்போதும் திட்டும் வாய் கூட அமைதியாக இருந்தது. இருவரின் விழிகளும் ஒரு நிமிடம் மௌனமொழி பேசி “மோதிரம் மாத்திக்கோங்க” என்ற குரலில் மோதிரத்தை வாங்கி இருவரும் மாற்றிக் கொண்டனர்.

” ஏய் அல்லிராணி இனி உன் பிடி என் கையில்” என்றான் வெற்றி அவள் காதருகில் குனிந்து.

“அதையும் பார்க்கலாம் என் பிடி உன் கையிலயா இல்லை உன்பிடி என் கையிலயானு” என்றாள் மெதுவாக.

நிச்சய விழா இனிதே முடிந்து மறுநாள் திருமணம் என்ற நிலையில் வெற்றியும் மதியும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் நினைத்துக் கொண்டு தூக்கம் வராமல் கையில் உள்ள நிச்சய மோதிரத்தைப் பார்த்துக் கொண்டே கட்டிலில் புரண்டு கொண்டிருந்தனர்.

காணப்படாத கனவுகளுடன் எட்டப்படாத உச்சங்களுடன் தகர்க்கப்படாத நம்பிக்கையுடன் எதிர்பாராத சுவாரஷ்யங்களுடன் புத்துயிர் பெற்று விடிகிறது அந்தக் காலை..

எப்போதும் வேஷ்டி சட்டையில் இருப்பவன் என்றாலும் இன்று பட்டு வேஷ்டி சட்டையில் ஆண்மகனுக்குரிய கம்பீரத்திலும் மணமகனுக்குரிய அழகிலும் பார்ப்பவர்களைக் கவரும் கார்மேகக் கண்ணனாய் அமர்ந்திருந்தான்.1 ‘இவளை கல்யாணம் பண்றதுக்கு இந்த அக்னி குண்டத்துலே விழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டே ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.

கிளிப்பச்சைப் பட்டில் சிவப்பு பார்டர் வைத்து சேலை முந்தானையிலும் பார்டரிலும் பதித்த கற்கள் மின்ன மலர்சோலையில் ஆடும் மயிலாக அவள் நடந்து வரும் அழகை கண் வைக்காதவர்கள் அந்த மண்டபத்தில் யாருமில்லை. ஏற்கனவே அழகி இப்பொழுது அழகுக்கலை நிபுணர்களின் கைவண்ணத்தால்  வானிலிருந்து வந்த தேவதை என்று என்னுமளவிற்கு இருந்தாள். ஆனால் அவளோ மகிழ்ச்சியில் ஆடும் மயிலாக அல்லாமல் அக்னி குண்டத்தின் முன் அமர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பவனைப் பார்த்து கோவக்கார கிளியாக வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.

அவள் வந்து அமரவும் அவளைப் பார்த்து திரும்பினான். அவள் அழகில் சொக்கி ஒரே ஒரு நிமிடம் மயங்கினான் என்று தான் சொல்ல வேண்டும். அவளும் அவனின் ஆண்மை ததும்பும் கட்டழகில் சொக்கிப் போனதென்னவோ உண்மை. ஆனால் அவளோ அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “என்னை ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு உன்னை நினைக்க வைக்கிறேன்டா காட்டான்” என்று முறைக்கவும் இவனும் “அல்லிராணி உன் திமிரை அடக்குறேனா இல்லையானு பாரு” என்று முறைத்து விட்டு “இந்த ஐயரு வேற சீக்கிரம் மந்திரத்தை சொல்லித் தொலைய மாட்டேங்காரு” என்று எரிச்சலுடன் மந்திரத்தை சொன்னான்.

ஐயர் மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க மூன்று முடிச்சிட்டு மதிவனியைத் தன் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் வெற்றி.

தண்ணீரிலே முகம்
பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே
நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார்தான்
சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம்
தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு
நான் வாழ ஆகாதம்மா..

என்ற பாடல் சூழ்நிலைக்கேற்ப ஒலிப்பெருக்கியில் ஒலித்தது.

சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டம் “மிஸஸ் வெற்றி” என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். நண்பர்கள் இரட்டை அர்த்தப் பேச்சுக்களால் மணமகனையும் மணமகளையும் வெட்கப்பட வைத்துக் கொண்டிருந்தனர்.

இனி கிராமத்தில் இந்த நகரத்து அல்லிராணியுடன் கிராமத்துக் காளையவன் எப்படி மல்லு கட்டப்போகிறான் என்பதை இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்..

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Super ud sis nice epdiyo mrg mudichitinga rendu perukum allirajiyama ila kattan rajiyama pakkalam

    2. kanmani raj

      அடங்காத அல்லிராணி அசந்த நேரத்துல புடிச்சுட்டான் வெற்றி அவ கைய…

    3. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.