அத்தியாயம் 6
இரண்டு நாட்களுக்கு முன் நடந்ததை நினைத்தபடியே மரத்தடியில் அமர்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான் வெற்றி.
ஏற்கனவே உழவுக்காக உபயோகித்துக் கொண்டிருந்த என்ஜின் வீட்டில் இருந்ததால் அந்த என்ஜினையே மெஷினுக்கும் உபயோகித்துக் கொள்ளலாம் என்று மக்காச்சோள மெஷின் மட்டும் தான் வாங்கினர். ஆனால் அந்த என்ஜின் வாங்கி ரொம்ப நாளானதால் அடிக்கடி பழுதாகி விடுவதால் இப்போது மெஷின் வாங்கிய அதே கம்பெனியில் என்ஜினும் சேர்த்து வாங்கிடலாம் என்று சென்னை சென்றான் வெற்றி.
சென்னையில் இறங்கி அன்று போல் அந்தக் கம்பெனி சென்று ஒரே என்ஜின் மக்காச்சோள மெஷினுக்கும் உழவுக்கும் உபயோகப்படுத்துவது போல் பார்த்து தேர்ந்தெடுத்து விட்டு எப்போது டெலிவரி என்ற விவரங்களையும் கேட்டு விட்டு வெளியே வந்தான்.
வெளியே வந்து நடக்க ஆரம்பிக்கவுமே ஏனென்று தெரியாமல் அவனுக்கு மதிவதனியின் ஞாபகம் வந்தது. ‘அல்லிராணி அன்னைக்கு என்ன பேச்சு பேசுறா. என்ன பார்த்தா காட்டான் மாதிரியா இருக்கு. வாய் கொஞ்சம் கூட குறையல. ஆனாலும் திமிரழகி தான்டி’ என்று நினைத்து சிரித்துக் கொண்டே நடந்தான்.
அப்போது அவனை உரசிக் கொண்டு ஒரு வண்டி சென்றது. அவன் ஒரு நிமிடம் அதிர்ந்து “ஏய்…” என்று திட்ட வாயெடுத்தவன் அங்கே சென்றவளைப் பார்த்து அப்படியே நின்றான். வேறு யாரு. இதுவரை அவன் நினைவில் வந்த திமிரழகி தான் அவனைத் தான்டி சென்று கொண்டிருந்தாள்.
‘அட நம்ம அல்லிராணி’ என்று நினைத்து விட்டு ‘இவ ஏன் இவ்வளவு பதட்டமா திரும்பி திரும்பி பாத்துட்டே போறா’ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே திரும்பிப் பார்த்து சென்றதில் அவள் வண்டியை அங்கே எதிரில் வைத்திருந்த டிவைடரில் இடித்துக் கீழே விழுந்தாள்.
அவள் விழுந்ததைப் பார்த்தவன் ‘மதிஇஇஇ” என்று கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடினான்.
அவள் வண்டியில் இருந்து கீழே விழுந்தவள் அவனைப் பார்த்து விட்டு “காட்டான்” என்று முனுமுனுத்தாள். வெற்றி அவள் அருகில் செல்வதற்குள் ஒரு கார் குறுக்கே வந்தது. அடுத்த ஐந்து வினாடிகளில் மதி அங்கு இல்லை. வெற்றி வந்து பார்க்கும் போது வெறும் வண்டி மட்டும் கிடந்தது. ‘இங்க தான இருந்தா இப்ப வண்டி மட்டும் இருக்கு’ என்று அவன் யோசித்துக் கொண்டு திரும்பும் போது முன்னால் சென்று கொண்டிருந்த காரில் கண்ணாடி வழியே மதி வாய் கட்டிய நிலையில் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு சென்றாள்.
ஏதோ விபரீதம் என்று ஆட்டோவில் ஏறி அந்த காரை பாலோவ் பண்ணுங்க என்று டிரைவரிடம் சொல்லி விட்டு மதியின் அப்பா ரவிச்சந்திரனுக்கு அழைத்து நடந்ததை சொல்லி அவன் எந்த வழியாக செல்கிறான் என்று டிராக் பண்ணி அவரைத் தொடர சொன்னான்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பின் சென்னை லோக்கல் ஏரியாவில் ஏதோ குடோன் போல் உள்ள இடத்திற்குச் சென்றது அந்த கார். ஆட்டோ பின் தொடர்ந்ததை காரில் சென்றவர்கள் கவனிக்கவில்லை. ஆட்டோவை போக சொல்லி விட்டு அவன் மட்டும் மெதுவாக உள்ளே சென்றான். மதியை வைத்து தான் அவள் அப்பாவிடம் உள்ள ஆதாரத்தை மிரட்டிக் கேட்டுக் கொண்டிருந்தனர் குற்றவாளிகள். அவர் தர மறுக்கவும் அவரை பயமுறுத்த அவளைக் கடத்தி விட்டனர்.
உள்ளே ஒரு அறையில் மதி மயங்கிய நிலையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தாள்.
அவளைக் கடத்தி வந்த ரவுடிகளில் ஒருவன் “டேய் இவ அப்பன் எவிடன்ஸ் குடுக்க மாட்டேன். செய்றத செய்னு சொன்னான்ல. அப்போ சேம்பிள் தான அனுப்புன. இப்போ இவளை புல்லா போட்டோ எடுத்து அனுப்புடா. பொண்ணு மானத்தை விட அவனுக்கு கடமை தான் முக்கியமானு பார்ப்போம்” என்றான்.
காவல் துறை அதிகாரிகளில் சிலர் நல்லவர் இருந்தாலும் இது போல் பெண்ணின் மானத்தை வைத்து அவர்களின் கடமையை செய்ய விடாமல் செய்பவர்கள் ஏராளம். அந்த மாதிரி சூழ்நிலையில் தான் ரவிச்சந்திரனும் மாட்டிக் கொண்டார். அதற்கு மதியும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். இதற்கு தான் அந்த கேஸ் முடியும் வரை வெளியில் செல்லக் கூடாது என்று தடை விதித்திருந்தார். ஆனால் மதியோ அவள் தாயின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு வெளியில் வந்து விட்டாள். அப்படி என்ன தலை போற காரியமோ காரிகைக்கு.
மற்றொருவன் அவள் அருகில் வந்து அவள் அணிந்திருந்த தூப்பட்டாவை உருவி எறிந்தான். பின் அவள் சுடிதாரில் கை வைக்கும் நேரம் எங்கிருந்தோ பறந்து வந்தக் கட்டை அவன் கையைப் பதம் பார்க்கவும் ஆஆஆ என்ற அலறலோடு கையை எடுத்தான்.
என்ன நடந்தது என்று மற்றவர்கள் திடுக்கிட்டு திரும்பி “யாருடா இவன்?. இவன் எப்படி இங்க வந்தான்?” என்று அவர்களின் தலைவன் போல் இருந்தவன் சத்தமிட்டு “அவனை அடிச்சுப் போடுங்கடா” என்றான்.
வெற்றி வேஷ்டியை மடித்துக் கட்டி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு கைகளில் நரம்புகள் முறுக்கேற அங்கிருந்த கட்டைகளில் ஒன்றைக் கையில் எடுத்து அவள் மேல் கை வைக்க சென்றதிலே கடுங்கோவத்தில் இருந்தவன் மொத்தக் கோவத்தையும் அவர்கள் மேல் காட்டினான். அவன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே ரவிச்சந்திரனும் அவர் டிபார்ட்மெண்ட் ஆட்களுடன் வந்தவர் அவர்களையெல்லாம் பிடித்து விலங்கிட்டு அவர்களைக் கொண்டு போக சொல்லி விட்டார்.
“வெற்றி மதி எங்க?” என்று பதட்டமாக கேட்கவும் “அங்க இருக்குறா மாமா” என்று கைகாட்டி விட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஓடினான்.
“மதி மதி…” என்று அழைத்தும் தட்டி எழுப்பியும் எழும்பாததால் “மயக்க மருந்து கொடுத்ததால கண்ணு முழிக்கலயோ என்னவோ மாமா. வாங்க ஹாஸ்பிட்டல் போலாம்” என்று அவளை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டல் விரைந்தனர்.
குளோரோபார்ம் கொடுத்ததால் சிறிது நேரம் மயக்கத்தில் இருந்து பின் மயக்கம் தெளிந்து விட்டாள். அதன் பிறகு உடனே டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும் “சொல்லாம கொள்ளாம எங்கடி போய் தொலஞ்ச?” என்று அழுக ஆரம்பித்து விட்டார் லதா.
“லதா அவளை உள்ளே கூப்டு போய் ரெஸ்ட் எடுக்க வை” என்றார் ரவி.
அவளும் ‘நம்மள எப்டி கண்டுபிடிச்சாங்க?. இந்தக் காட்டான் தான் நம்மளைத் தேடி வந்தானா?. என்ன நடந்ததுனு ஞாபகமே இல்லையே” என்ற யோசனையோடு லதாவுடன் சென்றாள்.
அவர்கள் உள்ளே சென்றவுடன் பொத் என்று சோபாவில் அமர்ந்து விட்டார். முகமெல்லாம் பயத்திலும் அதிர்ச்சியிலும் முத்து முத்தாக வியர்த்திருந்தது. அவரது இத்தனை வருட சர்வீஸில் இது போல் நிறைய பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார் தான். ஆனால் மிரட்டல் வரும் முன்னே அவர்களுக்கு எதிரான எல்லா ஆதாரத்தையும் திரட்டி சிறையில் அடைத்து வெளியில் வர முடியாதவாறு செய்து விடுவார். இல்லையேல் ஆதாரம் திரட்டும் வரை அதைப்பற்றி வெளியில் கடுகளவும் கூட கசியாது. அந்த அளவிற்கு வைத்திருப்பார். இதுவே முதல் முறை. தன் குடும்பத்தில் ஒருவரைக் கடத்தி வைத்து தான் எடுத்த கேஸில் தோற்று நிற்பது. அதுவும் தன் மகளால் அனைத்தும் பாழாகி விட்டது என்று கவலை கொள்வதா அல்லது தன் மகள் பத்திரமாக வந்து விட்டாள் என்று நினைப்பதா என்று காவல் அதிகாரியாகவும் ஒரு சராசரி தந்தையாகவும் இரு வேறு மனநிலையில் இருந்தார்.
என்ன விஷயம் என்று தலையும் புரியாமல் காலும் புரியாமல் என்ன செய்வதென்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வெற்றி “மாமா” என்றான் மெதுவாக.
அவன் அழைத்த பிறகே அவன் இருப்பை உணர்ந்து “சாரி வெற்றி. ஐயம் சாரி. கொஞ்சம் எமோஷ்னல் ஆகிட்டேன். ரொம்ப தேங்க்ஸ் வெற்றி. நீ எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்க இன்னைக்கு” என்றார் உணர்ச்சி மிகுதியில்.
“இருக்கட்டும் மாமா” என்று விட்டு கேட்கலாமா வேண்டாமா என்ற பல யோசனைகளுக்கு பின் “என்ன பிரச்சனை மாமா!. யார் அவங்க?. எதுக்கு மதியைக் கடத்தி வச்சுருந்தாங்க?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.
அவர் இதற்கு முன் நடந்ததை சொல்லி விட்டு “இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு பயந்து தான் இவளை வீட்டை விட்டு வெளில போக வேண்டானு சொன்னது வெற்றி. இப்போ எல்லாம் கைமீறிப் போயிடுச்சு. ஆதாரம் எல்லாம் அவங்க கிட்ட சிக்கிடுச்சு. அதுவும் இவளை பகடையா வச்சு எல்லாத்தையும் வாங்கிட்டாங்க. சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு குற்றவாளியை தப்பிக்க விட்டத நினைச்சா அசிங்கமா இருக்கு. ஆனாலும் என்ன பண்ண டிபார்டமென்ட்ல இருக்குறவங்களே அவங்களுக்கு சப்போர்ட் பண்ணும் போது நாம என்ன பண்ண முடியும்?” என்று வருத்தத்துடன் கூறினார். ‘இவ்வளவு நாள் அந்த கேஸ்க்காக தான் மட்டுமல்லாமல் தன் டீமும் உழைத்தது எல்லாம் வீணாக விட்டதே ஒரு பெரிய குற்றவாளி தப்பித்து விட்டானே’ என்ற கவலை அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“விடுங்க மாமா. நீங்க ஏன் சொந்த பொண்ணுனு நினைக்கிறேங்க. அந்த இடத்துல யாரு இருந்தாலும் தனக்கு எதிர்க்க இருக்குறவங்களை காப்பாத்துறது தான் போலீஸ்காரங்களோட முதல் கடமை மாமா. அப்புறம் தான் குற்றவாளியைப் புடிக்கனும். ஒரு உயிர் போனாலும் பரவாயில்லனு நினைக்க முடியாது இல்லையா. உங்களுக்கும் அது தான ரூல்ஸ். தப்பு செஞ்சவன் ரொம்ப நாள் தப்பிக்க முடியாது மாமா. சீக்கிரம் பிடிபடுவான். வருத்தப்படாதிங்க” என்று ஆறுதல் சொல்வதை விட வேறு வழி தெரியவில்லை அவனுக்கும்.
“ஆமா வெற்றி. ஆனா இதுக்காக நாங்க ரொம்ப நாளா வொர்க் பண்ணிட்டு இருக்கோம். இப்போ அவங்க அலர்ட் ஆகிடுப்பாங்க. திரும்பவும் முதல்ல இருந்து எங்க ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணனும். எல்லாம் மதியால தான். எல்லாத்துலயும் அவசரம். பொண்ணுங்க மானத்தை வச்சு விளையாடுறது இப்போலாம் ட்ரெண்ட் ஆகிடுச்சு இவனுங்களுக்கு. சே அவங்களை…” என்று பல்லைக் கடித்தார்.
இவ்வளவு நாள் ஒரு உறவாக அவரிடம் பேசியது. இப்போது தான் ஒரு போலீஸ் அதிகாரியாக அவரைப் பார்க்கிறான். முகத்தில் கோவமும் எரிச்சலும் அப்பிக்கிடந்தது.
“அதான் மதியைக் காப்பாத்தியாச்சே மாமா. இப்போ உங்க கிட்ட ஆதாரம் இருக்குமே” என்றான் வெற்றி.
“இல்லப்பா அது வந்து…” என்று விட்டு அவர் மொபைலுக்கு வந்த போட்டோவைக் காண்பிக்கவும் அவனுக்கே அதிர்ச்சி இது எப்படி நடந்தது என்று.
அந்த போட்டோவில், மதியைக் கடத்தி காரில் சென்று கொண்டிருக்கும் போதே ரவுடிகளில் ஒருவன் அரைகுறை ஆடையுடன் மதியை நெருங்கி அமர்ந்து அவளை முத்தமிடுவது போல் இருக்கும் காட்சி. ஆனால் காரில் ஏற்றியவுடனே அவளுக்கு குளோரோபார்ம் குடுத்ததால் அவளோ சுயநினைவில் கூட இல்லை. ஒரு ஆண் அறைகுறை ஆடையுடன் இருந்தாலும் இல்லை பெண் இருந்தாலும் இந்த சமூகம் தூற்றவதோ பெண்ணைத்தான். அவள் எந்த நிலைமையில் இருந்தாள் என்பதையெல்லாம் ஆராயாமல் காகிதத்தில் இருக்கும் வெறும் கலர் புகைப்படத்தை மட்டும் வைத்தே இஷ்டப்படி பேசும் மக்கள் இருப்பதால் அவர் எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களுக்கு பெற்றவர்கள் பயப்படுவதில் ஆச்சர்யம் இல்லை தான்.
“இந்த போட்டோ அவங்க கார்ல போயிட்டு இருக்கும் போதே எனக்கு வந்துருச்சு. நான் ஸ்பாட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே எல்லா எவிடன்ஸ்ம் அவங்க கிட்ட போயிடுச்சு. ஏற்கனவே கலெக்ட் பண்ண பாதி டீடெயில்ஸ் எங்களோட ஹையர் ஆபிஸர்ஸ் கிட்ட போயிடுச்சு. எப்படியும் அது குற்றவாளிங்க கைக்கு போயிருக்கும். இந்த மாதிரி சில பேரு மக்களுக்கு வேலை செய்யாம சில பொறம்போக்குங்களுக்கு தான் வேலை பாக்குறாங்க என்ன பண்றது. இந்த ரெண்டு வாரம் அந்த டீடெயில்ஸ்லாம் ரீகலெக்ட் பண்ணி புல் எவிடென்ஸ் கலெக்ட் பண்ணிட்டோம். இன்னும் ரெண்டு நாள்ல மெயின் அக்யூஸ்ட்ட அரெஸ்ட் பண்றது. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு” என்றார் வருத்தத்துடன்.
“இந்த உயிரைப் போத்திருக்குற உடல் தான் ஒரு பொண்ணுக்கு கற்புனு இந்த சமூகம் சொல்லி சொல்லியே எல்லார் மனசிலயும் பதிய வச்சுடுச்சு மாமா. அதுக்கு பயந்துகிட்டே நிறைய பொண்ணுங்க அவங்க தைரியத்தை புதைச்சுட்டு வீட்டை விட்டு வெளில வர்றதுக்கு கூட பயப்படுறாங்க. இதப்பத்திலாம் மதிகிட்ட சொல்ல வேண்டாம் மாமா. பீல் பண்ண போறா. எவ்வளவு தைரியமான பொண்ணா இருந்தாலும் இந்த மாதிரி விஷயத்துல தைரியம் போயிடும்”.
“ம் ஆமா வெற்றி. அந்த சமூகத்துல தான் நாம இன்னமும் இருக்கோம். அதுனால தான் வெற்றி இவளை இந்த விஷயத்துல தலையிட வேண்டானு வேலைக்குக் கூட போக வேண்டானு வீட்லயே இருக்க சொன்னது. எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணிட்டு இப்போ என்னாச்சு பாத்தேல”.
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.
“சாரி வெற்றி. உன்னைக் கவனிக்க கூட முடியலை. லதா வெற்றிக்கு டீ எடுத்துட்டு வாமா” என்றார்.
லதாவும் “சாரிப்பா அவளைக் கானும்னு பதட்டத்துல உன்னைக் கவனிக்கல” என்று விட்டு டீயை அவனுக்குக் குடுத்தார்.
“பரவாயில்லை அத்தை” என்று விட்டு டீக் குடித்து விட்டு அன்று இரவே அங்கிருந்து கிளம்பி விட்டான். அவன் செல்லும் வரை மதி வெளியில் வரவில்லை. அவள் யோசனையுடனே பெட்டில் படுத்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்..
அருமை 👌👌👌விறுவிறுப்பான action காச்சி பார்பது போல் இருந்ததது…
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
Nalla vela vetri vanthn ilena enna aairukum… super ud sis
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.