Loading

அத்தியாயம் 5

சென்னை சென்று வந்து இரண்டு வாரங்கள் ஓடி விட்டது. வெற்றி அவன் நிலத்தில் விவசாயத்தை திறம்பட செய்து கொண்டிருந்தான். இயற்கை உரம் வைத்தே அதிக விளைச்சல் கொண்டு வந்து விடுவான். அந்த அளவிற்கு அவன் படிப்பும் அவனுக்கு கைக்கொடுத்தது.

புது மக்காச்சோள மெஷின் வந்து இறங்கியது வெற்றி வீட்டிற்கு. அக்கம் பக்கம் உள்ள சில விவசாயிகள் மெஷினைப் பார்த்து விட்டு அதன் விவரங்களையும் வெற்றியிடம் கேட்டு விட்டு சென்றனர்.

“எய்யா வெற்றி நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வச்சு பூஜை போட்டுட்டு வந்துடலாம்” என்றார் சிவகுரு.

“சரிங்கப்பா” என்றான் வெற்றி. “இந்த தடவை மெஷின்காகலாம் நாம காத்திருக்க தேவையில்லைப்பா. நம்ம கிட்ட சொந்தமா மெஷினே இருக்குறதால சீக்கிரம் மக்காச்சோளம் அரைச்சு விலை இருக்கும் போதே போட்டுடலாம். நாம யூஸ் பண்ணது போக மத்தவங்களுக்கும் அடிச்சோம்னா இதுக்கு மீதி லோன் கட்டுறதுக்கு கரெக்டா இருக்கும்”.

“ஆமா வெற்றி. இது வாங்குனது நல்லதா போச்சு. பக்கத்து ஊருக்காரன் மெஷின் வச்சுருக்குறவன் ரொம்ப பண்றான்பா. அதுக்காகவே உன்னை வாங்க சொன்னது”.

“விடுங்கப்பா இப்போ தான் நாம வாங்கிட்டோம்ல பாத்துக்கலாம். போன தடவையே அவன் பேசிய பேச்சுக்கு அவனை ரெண்டு தட்டு தட்டிருப்பேன். அப்புறம் நம்மளால மத்தவங்க காட்டுக்கும் அரைக்க போக மாட்டான். மத்தவங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு தான் அமைதியா இருந்துட்டேன்”.

“ஆமாயா வெற்றி. நம்மளால மத்தவங்க கஷ்டப்படக் கூடாது”.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது “மாமா…” என்று கத்திக் கொண்டே உள்ளே ஓடி வந்தாள் பூங்குழலி.

“என்ன குழலி?. காலங்காத்தால இங்கன வந்துருக்க. காலேஜ் போலயா?”.

“மாமா‌‌ அப்பாக்கு வேலை இருக்குனு சீக்கிரமே கிளம்பிட்டாங்க என்ன நடந்து போக சொல்லிட்டு. நீங்க என்ன வண்டில விடுங்க” என்றாள்.

“ஏன் வண்டில போகனும்?. அப்டியே நடந்தே போ. கொழுப்பாது குறையும்”.

“அப்படி சொல்லு ராசா. நடந்து போடி இவளே. என் ராசாக்கு நிறைய சோலி கெடக்கு” என்றார் முத்தம்மாள் பாட்டி.

“கிழவி உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்று விட்டு “மாமா இப்போ நீ என்னை விடப்போறியா இல்லையா?” என்று இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

“இந்த முறைப்புக்குலாம் நாங்க பயந்துடுவோமா. போடி முடியாது” என்றான்.

“போய் ஒரு எட்டு விட்டுட்டு வா வெற்றி. காலேஜ் பஸ் கிளம்பிடப்போது”. என்றார் சிவகுரு.

“ஆமா மாமா நீங்க சொல்லுங்க” என்று தன் மாமாவிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

“சரி வா” என்று வண்டி சாவியை எடுத்துக் கொண்டு “வண்டில ஏறு. ஆனா இறங்குற வரைக்கும் வாயைத் தொரந்த ஓடைல தள்ளி விட்டு வந்துடுவேன் பாத்துக்கோ” என்று மிரட்டினான்.

“ம் சரி மாமா பேச மாட்டேன்” என்று வாயில் கைவைத்து மூடிக் கொண்டு வண்டியில் ஏறினாள்.

அது கிராமம் என்பதால் ஊரில் இருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் கல்லூரிப் பேருந்து நிற்கும். சுற்றி உள்ள கிராமத்தில் இருந்து கல்லூரி செல்லும் எல்லாரும் அங்கு வந்து தான் பஸ்ஸில் ஏறுவர்.

வாயாடி வாப்பட்டிக்காரியால் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசாமல் இருக்க முடியவில்லை. “மாமா சென்னைக்கு போய் தான் எனக்கு எதுவும் வாங்கிட்டு வரல. புது மெஷின் வாங்கிருக்கேல எனக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட் வேனும்”.

“ஆமா நான் புது ஏரோபிளேன் வாங்கிருக்கேன் ட்ரீட் போடி”.

“போ மாமா. ஏரோபிளேன்லாம் நமக்கு எதுக்கு. நீ புது மெஷின் வாங்கிருக்குற. எனக்கு ட்ரீட் வேனும்” என்றாள் பிடிவாதமாக.

“ம் சரி அம்மாவை…” என்று அவன் ஆரம்பிக்கவும் “அத்தை பிரியாணி செய்வாங்கனு சொல்லிடாத. எனக்கு ஹோட்டல் போய் புல் கட்டு கட்டனும்”.

அவன் சிரித்துக் கொண்டு “ஏன் உங்க அத்தை சாப்பாடு சளிச்சுப் போயிருச்சோ?. இரு வீட்ல போய் அம்மாட்ட சொல்றேன்‌. மோப்பம் புடுச்சுட்டு வீட்டுக்கு வந்தா பச்சைத் தண்ணி கூட தரக்கூடாதுனு சொல்றேன்”.

“அய்யோ மாமா மீ பாவம்” என்று அவனிடம் பேசி சிரித்துக் கொண்டே காலேஜ் பஸ் நிற்கும் இடம் வந்து விட்டனர்.

“ரொம்ப வாயாடாம பாத்து பத்திரமா போயிட்டுவா” என்று அவளை இறக்கி விட்டுக் கிளம்பினான்.

“ம் சரி மாமா பை” என்று பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

“ஏய் யாருடி அது?. செமயா இருக்காரு. உங்க அண்ணனா?” என்று தோழிகள் கேட்டதற்கு “என்னாது அண்ணனா?” என்று முறைத்து விட்டு “எங்க மாமா. யாராவது கண்ணு வச்சேங்க கண்ணை நோன்டிடுவேன். போங்கடி” என்று மிரட்டினாள்.

“ஆமா உன் மாமா மேல கண்ணு வைக்குறாங்க. ஏதோ அவரக் கட்டிக்கப் போற மாதிரி இந்த குதி குதிக்குற” என்றாள் தோழிகளில் ஒருத்தி.

“நான் கட்டிக்கிட்டாலும் இல்லனாலும் அவரு எங்க மாமா. நீங்க பாக்கக்கூடாது” என்று மிரட்டினாள்.

‘பாக்கலாம் பாக்கலாம்.. நாளைக்கு அவரக் கட்டிக்க ஒருத்தி வரும் போது மேடம் என்ன செய்றேங்கனு” என்றாள் தோழி ஒருத்தி.

“என் மாமா என்னை எப்பவும் விட்டுக் கொடுக்காது” என்றாள் கர்வமாக. அவர்கள் பேச்சினூடே கல்லூரி வந்து விட பஸ்ஸில் இறங்கி அவரவர் வகுப்பிற்குச் சென்றனர்.

தமிழரசு தன் தோட்டத்தில் வெங்காயத்திற்கு தண்ணீர் பாய்ச்சிட்டு சாப்பிடலாம் என்று தானே ஏனோ தானோவென்று சமைத்துக் கொண்டு வந்திருந்த சாதமும் பருப்புக் குழம்பையும் எடுத்து மரத்தடியில் அமர்ந்தான் சாப்பிடுவதற்கு.
அவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை பார்த்த சிவகுரு அங்கு சென்றார்.

அங்கு சென்று “எய்யா தமிழு” என்றழைத்தார்.

அவன் நிமிர்ந்து பார்த்தவன் “என்ன வேனும்?” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

“ஒத்த ஆளா தனியா சமச்சு சாப்பிட்டுட்டு இருக்க. வீட்டுக்கு ஊடமாட வந்து சாப்பிட வாயா. உங்க பெரியம்மா உன்னைக் கூப்ட சொல்லி சொல்லிட்டே இருக்குறா? என்று பாசமாக அழைத்தார்.

‘நானே சமைச்சு சாப்டுப்பேன். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம இல்லை நானு” என்றான் கடுப்பாக.

“அந்த அர்த்தத்துல சொல்லலப்பா நானு. தனியா கஷ்டப்படுறியேனு தான் சொன்னேன். சரி விடுப்பா. நீ விருப்பப்படுற நேரம் எப்போ வேனாலும் வா. அண்ணே மெஷின் வாங்கிருக்கான். போன தடவை மாதிரி இந்த தடவை சோளத்தை பாழாக்காம நம்ம மெஷின்லே அரைச்சுக்கோ. பக்கத்து ஊருக்காரன்ட்ட ஏன் பிரச்சனை பண்ணிட்டு” என்றார்.

போன வருடம் மக்காச்சோளம் அறுவடைக்கு வந்த போது பக்கத்து ஊர்க்காரன் ஒருவனிடம் மட்டும் தான் மெஷின் இருந்தது. அதனால் அறுவடைக்கு வரும் முன்னே அவனிடம் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தான் மக்காச்சோளம் அரைக்க. ஆனால் அவனோ காசை முதலிலே வாங்கிக் கொண்டு சரியான நேரத்திற்கு வராமல் ஜாதி பார்த்து ஊர்க்காரன் என்று ஆள் பார்த்து அரைத்து விட்டு கடைசியில் தான் இவன் காட்டிற்கு வந்தான்‌. ஆனால் அதற்குள் மழை வந்ததால் அவன் மக்காச்சோளம் கருதுகள் சிறிது சேதமடைந்து விட்டது. அதனால் ஆத்திரத்தில் அவனிடம் சண்டையிட்டு சில பிரச்சனைகளால் அவனுக்கு நஷ்டம் தான் வந்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு தான் சிவகுரு வந்து சொல்லி விட்டுச் செல்கிறார்.

அவன் ம் என்றதோடு நிறுத்திக் கொண்டான்.

இதற்கு மேல் பேசினாலும் அவன் பேச மாட்டான். வெடுக்கென்று ஏதாவது காயப்படும் படி பேசிவிடுவான். என்றாவது நம்மை புரிந்து கொள்வான் என்று அவரும் கிளம்பி விட்டார்.

போகும் அவரயே ‘ஊரை விட்டுத் தள்ளி வைத்திருந்த நேரமெல்லாம் இந்த அக்கறை எங்க போனது?’ என்று வெறுமை கலந்த பார்வையோடு பார்த்து விட்டு தான் கொண்டு வந்த உணவை உண்ண ஆரம்பித்தான்.

ஆனால் அவனுக்கு எங்கேத் தெரியப்போகிறது ஊரை விட்டுத் தள்ளி வைத்திருந்த நேரம் கூட இவர் தான் அவன் தந்தைக்கு பொருள் உதவியும் பண உதவியும் செய்தார் என்று. எல்லாவற்றிற்கும் மேலாக ஊருக்குள் வந்த பிறகு அவன் தந்தை பங்குச் சொத்தை பிரித்து வாங்கிக் கொடுத்ததே அவர் தான். வெளியே தெரிந்தால் தன் குடும்பத்திற்கும் அதே தண்டனை தான் என்று யாருக்கும் தெரியாமல் உதவி செய்வார். ஏனென்றால் அந்தக் காலத்தில் அப்படி தான் ஊருக்குள் விதிமுறை வைத்திருந்தார்கள். இப்போதெல்லாம் அது மாறி விட்டது. இருந்தாலும் வேற்று ஜாதியில் திருமணம் முடித்தால் அவர்கள் வீட்டு விழாக்களில் பங்கேற்க மாட்டார்கள். அப்படியே பங்கேற்றாலும் அவர்களுடன் ஐக்கியமாக மாட்டார்கள். இது போல் இப்போதும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஒரு நல்ல நாளில் மெஷினுக்கு குல தெய்வம் கோவில் சென்று பூஜை போட்டு விட்டு வந்தனர்.

பூங்குழலி டீரீட் கேட்டு வெற்றியிடம் தொல்லை செய்து கொண்டிருந்ததால் “சரி நீ காலேஜ்ல இருந்து அப்டியே வந்திடு. நான் இங்க இருந்து வர்றேன்” என்று சொன்னதால் காலேஜ்ல் இருந்து நேராக அங்கு சென்று அவன் சொன்ன ஹோட்டல் பக்கத்தில் இருந்த பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது டவுனிற்கு உரம் வாங்க வந்த தமிழ் அவளைப் பார்த்து விட்டு ‘இந்த வாயாடி இங்க என்ன பண்றா?’ என்று நினைத்து விட்டு அவள் அருகில் சென்று வண்டியை நிறுத்தினான்.

“இங்க என்ன பண்ற?” என்றான்.

‘இவனா!’ என்று அதிர்ந்து விட்டு “வெற்றி மாமாக்காக வெயிட்டிங்’ என்றாள்.

“மாமாவா?? அவன் எதுக்கு இங்க இந்த நேரத்துல தனியா நிக்க சொல்லிருக்கான்?”.

“அது எதுக்கு உங்களுக்கு?” என்று விட்டு அவன் முறைக்கவும் “மாமா எனக்கு ட்ரீட் குடுக்க வர சொன்னாங்க” என்றாள் மெதுவாக.

“ஓஓ என்று விட்டு ஏன் ஊர்ல உள்ள ஹோட்டல்லாம் சாப்பிட மாட்டேங்களோ. இந்த நேரத்துல தனியா இங்க நிக்கனுமா?” என்றான் பொம்பளைப்புள்ளை தனியாக நிற்கிறாளே என்ற அக்கறையில்.

“அது என் இஷ்டம். உங்களுக்கு தேவையில்லை. உங்கள ஒன்னும் நான் காவலுக்கு நிக்க சொல்லல” என்று திரும்பிக் கொண்டாள்.

“பட்டா தான் தெரியும். என்னவோ பண்ணு” என்று அவன் வண்டியை எடுத்துக் கிளம்பி விட்டான். ஆனால் கிளம்பினானே தவிர அங்கிருந்து செல்லவில்லை அந்த பேருந்து நிலையத்தின் வளைவில் வண்டியில் காத்திருந்தான் வெற்றி வரும் வரை. ஏனோ அவனுக்கு அவளை அப்படியே விட்டு செல்ல மனசில்லை.

அவளும் ‘போயிட்டான் உம்மனா மூஞ்சி சிடுமூஞ்சி’ என்று மனதில் திட்டிக் கொண்டே வெற்றிக்காக காத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து தான் அவளுக்குத் தெரிந்தது அவன் செல்லாமல் அங்கேயே நிற்பது. ‘ஒருவேளை நமக்காக தான் நிற்கிறானோ?. சே சே இவனாவது நமக்காகவாது நிற்குறதாவது’ என்று விட்டு விட்டாள். ஆனால் அடிக்கடி கண்கள் அவனைச் சுற்றி வந்தது. சிறிது நேரம் கழித்து வெற்றி வரவும் தமிழ் அங்கிருந்து கிளம்பி விட்டான். வெற்றி அவளுக்கு பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்து சாப்பிட்ட பின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

சென்று கொண்டிருப்பவன் என்னை வென்று கொண்டிருக்கிறான்.. நின்று கொண்டிருப்பவனை நான் தின்று கொண்டிருக்கிறேன் என்று காலம் யாருக்காகவும் நிற்காமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

உச்சி வானில் பகலவன் ஆட்சி செய்யும் நண்பகல் நேரம், எந்த வேலையிலும் நாட்டமில்லாமல் சிவனே என்று மரத்தடி நிழலில் அமர்ந்து இன்றைக்கு இரவு சென்னை பயணம் மேற்கொள்வதைப் பற்றி தந்தை காலையில் பேசியதை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கூட கால தாமதமாகாமல் தன் வேலையை சரியாக செய்யும் கிழக்கிலே உதயமாகும் சூரியனைப் போல தன் வேலைகளை நேரம் தவறாமல் செய்து கொண்டிருந்தவன் இன்று சோர்ந்து போய் அமர்ந்திருக்கிறான்.

‘இது சரி வருமா?. இந்த ஒரு விஷயத்துக்காக இந்த மாதிரி முடிவு சரி தானா?. உண்மையிலே அல்லிராணி இதுக்கு சம்மதிச்சுருப்பாளா?’ என்று இரண்டு நாட்களுக்கு முன் நடந்ததையும் காலையில் தன் தந்தை தன்னிடம் கேட்ட விஷயத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான்.

ஆம் நாளை மதியை பெண் கேட்க சென்னை செல்கின்றனர் மதியின் தந்தையின் விருப்பத்தின் பேரில். அதில் அவளுக்கு விருப்பமா? இல்லையா? என்பதை பின் வரும் தொடர்களில் காண்போம்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. சிறப்பு 👌👌👌👌விறுவிறுப்பாக நகர்கிறது 👏👏👏

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    3. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.