Loading

அகம் 5

சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்துவிட, அன்றைய விடியல் அழகாய்ப் புலர்ந்திருக்க, கடையைத் திறந்து வைத்துக்கொண்டு வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவந்திகை.

“ஏட்டி அவி, என்ன பராக் பார்த்திட்டு இருக்குதவ” எனப் பால்கனி கேட்க,

“இல்லை பாட்டி அது வந்து”

“என்ன பார்த்து பாட்டின்னு சொல்லுதீயோ, பதினாறு பிள்ளைகளைப் பெத்துருக்கேன், என்னைப் பார்த்தா கிழவி மாதிரி இருக்குதோ..?” எனக் கோபத்தில் சாடினாலும், அவள் விழியில் ஒளிந்திருந்த கலக்கத்தைக் கண்டுகொண்டார் பால்கனி.

“எனக்குக் கலியாணம் பேசுதாவ, நான் என்ன செய்ய மிலுக்”

“உனக்க மாப்பிளை யாருட்டி.?” ஆர்வத்தோடு கேட்டார் பால்கனி,

“அதான் அன்னைக்கி சடங்குல பார்தீயே வளர்ந்து கெட்டவன், அவன் தான்” என அவள் சொல்ல.

“ஏட்டி பாக்குறதுக்கு எங்க குலசாமி மாதிரியே இருந்தானே, அவனாட்டி” கேள்வியாய் அவளைப் பார்க்க, அவளோ உச்சக் கட்ட கோபத்தில் இருந்தாள்.

அதே சமயம் மன்னராசா அங்கு வர,

“என்ன மன்ராசா, அவிக்கி பேசி முடிச்சுடாவளமே, உன் பருப்பு வேகலையோ.?” எனப் பால்கனி நக்கலாய் கேட்க,

“அப்படிலாம் ஒண்ணுமில்லை கிழவி, அவி எனக்குத் தான்” அவன் உறுதியாய் சொல்ல,

“ஏலே கடையிலயிருந்து வெளிய வந்தேன்னு வையி சமட்டிருவேன், ஒடி போயிரு” எனக் கோபத்தில் அவந்திகை கத்தினாள்.

“ஏட்டி அவி கடைய சாத்திட்டு வீட்டுக்கு வாட்டி” ஜெயக்கொடி அழைத்தார்.

“அதெல்லாம் முடியாது யாவரத்த(வியாபாரம்) பார்க்கணும்” பதில் கொடுத்தாள்.

“நீ போயாம்ட்டி, கடையை நான் பார்த்துகிடுதேன்” என மன்னராசா சொல்ல.

“ஏட்டி அவி உள்ளே வாயேன்ட்டி முக்கியமான சமாச்சாரம்” என மீண்டும் ஜெயக்கொடி அழைத்தார்.

“இந்தா வந்து தொலைக்குறேன்” எனச் சொன்னவள் கடையை மூடிவிட்டு, மன்னராசாவையும் அழைத்துச் செல்ல, பால்கனி கடையின் பின்னேயிருந்த, சிறுதொழில் கூடத்திற்குள் நுழைந்திருந்தார்.

அவந்திகை வீட்டிற்குள் நுழைந்த போது அவள் தோளில் வந்து அமரந்துக்கொண்டாள் மீனு,

“அவி.! அவி.!” எனக் கிளி பிள்ளை பேச,

“அய்யோ மீனு, இருந்த பிரச்சனையில உன்ன மறந்துட்டேன் பாரு, வாட்டி உனக்கு நெல் வைக்குதேன்” என வீட்டின் பின்புறம் செல்ல முற்பட,அவளை தடுத்தார் ஜெயக்கொடி.

“என்னமா அவளுக்குப் பசிக்கும், இவ கூட்டாளியும் கூட்டிட்டு வந்திருப்பா, நெல் மட்டும் போட்டுட்டு வந்துகிடுதேன்” என அவந்திகை உரைத்தாள்.

“எல்லாரும் உனக்காகக் காத்திருக்காவ, வந்து ஒரு வார்த்தை மட்டும் சொல்லிட்டு போயாம்ட்டி” என ஜெயக்கொடி சொல்ல,

தோளில் கிளியுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் அவந்திகை, வரவேற்பரையில் இருந்த சோபாவில் முத்து வேல் மற்றும் காயத்ரி, அகத்தினியன் அமர்ந்திருக்க, மற்றவர்கள் நின்றிருந்தனர். இதில் ராஜபூபதி மற்றும் பார்வதியும் அடக்கம், தோளில் கிளியுடன் உள்ளே வந்த அவந்திகையைப் பார்த்து உற்சாகமானாள் சந்தியா, தங்கை சிவசக்தியும் அங்கே தான் நின்றிருந்தாள்.

“திருடன்.! திருடன்.!” எனக் கிளி கத்த,

“மீனு அமைதியா இருட்டி.?” எனக் கிளியின் காதில் கிசுகிசுக்க

“ஓகே.! ஓகே.!” எனக் கிளியும் பதில் கொடுத்ததைப் பார்த்து மேலும் உற்சாகம் ஆன சந்தியா,

“அண்ணி இதெப்படி உங்க கிட்ட மட்டும் தான் பேசுமா” ஆர்வத்துடன் கேட்க,

“சந்தியா ஷட் அப்” என்ற குரல் காயத்ரியிடமிருந்து வர வீட்டில் அமைதி நிலவ, அமைதி கலைக்கும் வண்ணம் பேச ஆரம்பித்தார் முத்துவேல்.

“பழசெல்லாம் விட்டு தள்ளுவோம், அவந்திகை கலியாணத்தைப் பத்தி பேச எல்லாரும் கூடியிருக்கோம்” என அவர் சொல்ல, இதை எதிர்பார்த்து தான் வந்திருந்தாள், திருமணத்தைப் பேச்சை நிறுத்துவதற்கு மன்னராசாவின் உதவி தேவை பட்ட காரணத்தால் தான் அவனையும் சேர்த்து அழைத்து வந்திருந்தாள்.

“அவந்திகைக்கு வயசு இருபத்தி ஆறு, இரண்டு மாசம் கழிஞ்சா,இருபத்தி ஏழு தொடங்கிரும் அதுக்கு பிறவு மன்னராசாக்கு கட்டிக்கொடுக்கலாம்னு மனசுல வச்சிருந்தேன், மெட்ராஸ்ல இருக்கச் சொந்தத்தை மொத்தமும் நான் மறந்தே போயிட்டேன்” என முத்து வேல் இடைநிறுத்தினார்.

“முத்து மாமா, அது வந்து” என மன்னராசா எதோ பேச வர,

“இருடே நான் பேசி முடிச்சுகிடுதேன்” என மன்னராசாவை பார்த்து சொன்னவர் மீண்டும் தொடர்ந்தார்.

“அவி ஒம்பதாப்பூ பெயிலு பாத்துகிடுக, அவளுக்கு மெட்ராஸ்லாம் ஒத்து வராது, அதே சமயம் பிரிஞ்சு போன குடும்பம் ஒத்துச் சேரணும்ன்ற எண்ணம் எனக்கு இருக்குறதால, சக்திய வேணும்னா நம்ம இனியனுக்குக் கட்டிகிடலாம், அவந்திகை மன்னராசாக்கு தான், இரண்டும் பேரும் படிக்காதவிய அவியளுக்குள்ள ஒத்து போயிக்கும், சக்தி இப்போ பண்ணிரெண்டாப்பூ படிக்குதா, அவளோட பரீட்சை முடிஞ்ச பிறவு அகத்தினியனுக்கும், சிவசக்திக்குக் கலியாணத்தை வச்சுகிடலாம், ஆனா சக்தியை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு, இதுதான் என் மனசுல இருக்குறது, இதுல யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் சொல்லலாம்” என முத்து வேல் முடித்தார்.

“மாமோய் சரியான தீர்ப்பா சொன்னிய, எனக்கு இதுல முழுச் சம்மதம்” என முகப் பொழிவுடன் மன்னராசா சொல்லி சந்தோசபட்டான்.

“அண்ணேன், இது சரியான முடிவா எனக்குத் தெரியுது” பார்வதி உற்சாகத்தோடு சொல்ல, ராஜபூபதியும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாய்த் தலையசைத்தார். ஜெயக்கொடி மட்டும் அதில் சம்மதம் இல்லை என்பதை காட்ட முடியாமல் அமைதி காத்தார்.

காயத்ரியும் , அகத்தினியனும், செந்தில்நாதன் இறந்த செய்தியை எப்படிச் சொல்வது என்ற குழப்பத்தில் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“எம்மா அவி, நீ எதுவும் பேசாம சிலையாட்டம் நிக்குதவ, வாய் திறந்து சொல்லாம்மா” என அதட்டல் கலந்த பரிவுடன் கேட்டார் முத்துவேல்.

“அப்பா எனக்குக் கலியாணமே வேண்டாம்ன்னு சொல்லுதேன், கடைசி வர ஔவையார் பாட்டி மாதிரி, இந்த வீட்டையே சுத்தி வந்துகிடுதேன், நீங்க கலியாணம் பண்ணிதான் ஆகணும்னு வற்புறுத்தினா..? என்னோட முடிவு வேற மாதிரி இருக்கும்” என எச்சரிக்கை தொனியில் அவந்திகை சொல்ல, அதை யாரும் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

“சும்மா கெடயான் கழுதை, உன்கிட்ட சம்மதமா கேட்டேன் பாரு, என்ன சொல்லணும்” என நொந்துக்கொண்டார் முத்து வேல்.

“அவி அப்பா, எங்க அண்ணேன் வந்துகிடட்டும் அவரு மனசல என்ன இருக்குதுன்னு பேசிட்டுப் பிறவு முடிவு எடுத்துக்கிடலாம்” என ஜெயக்கொடி சூசகமாய் தன் பிடித்தமின்மையை வெளிபடுத்தினார்.

“செயா.! உன் தமையன் எப்ப வர்றது, விசயத்தை எப்ப பேசுறது” எனக் கோபமாய்ச் சாடினார் முத்துவேல்,

“அவரு வரமாட்டாரு” எனக் காயத்ரி அமைதியாய் சொல்லும் போதே அவரின் மனம் கணத்து போயிருந்தது.

“அதான பார்த்தேன், அவியதான் ரோசக்காரவியள ஆச்சே, இந்த வீட்டு வாசல்ல எப்படிக் கால் வைப்பாவ” ஏளன சிரிப்பை முத்துவேல் உதிர்க்க,

“அப்பா இனி யார் நினைச்சாலும் வரமாட்டாங்க” எனத் தலைக்கவிழ்ந்தபடி அகத்தினியன் சொல்ல, அவன் கண்கள் உதிர்த்த உவர் நீரை தவறாமல் கவனித்தாள் அவந்திகை.

“அழாதே அகன்.!” எனச் சொல்ல அவள் இதழ்கள் துடித்தாலும், எதோ ஒன்று அவளைத் தடுத்தது, எதோ நடந்தேறியிருப்பதை அவந்திகை உணர்ந்துக்கொண்டாள், ஏன் அவனிடம் என் மனம் பேச சொல்கிறது என்ற யோசனையும் அவளுள் எழ, அதற்குத் தடை விதித்துவிட்டு, அங்கே நடப்பதை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் நின்றிருந்தாள் சக்தி, அதேசமயம் அழுகையை அடக்கிய படி சந்தியா சொன்னாள்,

“அப்பா இறந்துட்டாங்க, இரண்டு நாளுக்கு முன்னாடி தான் காரியம் முடிச்சிட்டு வந்தோம், அப்பாவோட கடைசி ஆசையே, அவந்திகை அண்ணிய, இனியன் அண்ணனுக்குக் கல்யாணம் செய்யணும்னு நினைச்சாங்க, அதைச் சொல்லிட்டு தான் இறந்தாங்க” எனச் சொல்லிவிட்டு வெடித்து அழுதாள் சந்தியா, தங்கையை உடனே தாங்கி பிடித்துக்கொண்டான் அகத்தினியன். நடக்கப் போவதை அறிந்தவள் போல் தள்ளி நின்றிருந்த அவந்திகை தாயை நோக்கி ஓடினாள், அவள் எதிர்பார்த்தது போல் நிலை தடுமாறி விழ போன தன் தாய்யை தாங்கி பிடித்தாள்.

“அம்மா எழும்பு மா” எனத் தாயை உலுக்கினாள் அவந்திகை. முத்து வேலோ செய்தியை கேட்டவுடன் கல்லாய் உறைந்து போனார்.

தண்ணீர் கொண்டு வந்து ஜெயக்கொடியின் முகத்தில் தெளித்தாள் சிவசக்தி, அவந்திகை தாயின் நிலைக்கொண்டு அழுதுக்கொண்டிருக்க, ஆதரவாய் நின்றான் மன்னராசா.,

சோபாவில் இருந்து எழுந்த காயத்ரி கண்களில் இருந்த நீர் துளிகளைத் துடைத்தவாறு எழுந்து சென்ற போது., அவர் அருகே வந்த பார்வதி.,

“ஏட்டி இவ்வளவையும் மனசுல வச்சிட்டு தான் சிரிச்சு பேசினியோ, எங்களை வேத்தாளா நினைச்சுட்டல்ல?” எனக் கோபமாய்ப் பேசினாளும் பார்வதியின் கண்களிலும் கண்ணீரின் சாயல்.

“அக்கா” என்ற கேவலுடன் பார்வதியின் தோள் சாய்ந்து அழுதார் காயத்ரி.

*****************************************************

வீராவு மற்றும் சித்திரைகனி தம்பதியின் மூத்த புதல்வன் தான் முத்துவேல், இளையமகள் பார்வதி, இருவருக்கும் இடையே மூன்று வயது வித்தியாசம், முத்துவேலுக்கு ஆறு வயது இருக்கும் போதே, சித்திரைக்கனி நோய்வாய்பட்டு இறந்துவிட்டார், அதன் பின் ஒற்றை ஆளாய் பிள்ளைகளை வளர்க்கமுடியாது, அதுவும் பார்வதியின் வயது மூன்றாக இருக்க, பிள்ளைகளின் நலனை கருத்தில்கொண்டு, இன்னொரு பெண்ணை மனம் செய்தார் வீராவு, அவரின் பெயர் வேம்பு, முத்து வேலுக்கு விவரம் தெரிந்த வயது என்பதால் அவரை வேம்பு சித்தி என்று தான் அழைப்பார், அவ்வாறே பார்வதியும் அழைப்பாள், பிள்ளைகளைப் பார்த்துகொள்ளும் பொறுப்பை நன்றாகக் கவனித்துக்கொண்டார் வேம்பு.

இரு பிள்ளைகள் மீதும் பாசத்தைப் பொழிந்து வளர்த்த வேம்பை பார்த்து வியந்து போனார் வீராவு, சித்திரைகனி இருந்திருந்தாள் கூட இவ்வாறு பார்த்திருப்பாரா.? என்ற சந்தேகம் வரும் அளவிற்குப் பாசத்தை மழையாய்ப் பொழிந்தார் வேம்பு, காலம் தன் போக்கில் செல்ல, வேம்பு வயிற்றில் முத்தாய் வந்து உதித்தாள் காயத்ரி, துவக்கத்தில் தங்கச்சி பாப்பா வரப்போகிறது என்ற துள்ளலுடன் இருந்த முத்துவேலும், பார்வதியும், காயத்ரி பிறந்த பிறகு அறவே இல்லாமல் போனது, முழு நேரமும் காயத்ரியிடம் செலவு செய்ய ஆரம்பித்தார் வேம்பு,இது பிள்ளைகளுக்கு நடுவே வேற்றுமையை ஏற்படுத்தத் துவங்கியது.

காயத்ரி பிறக்கும் போது முத்து வேலின் வயது எட்டு, பார்வதியின் வயது ஐந்து. முத்துவேல் சொல்வதைத் தவறாமல் கேட்டுக்கொள்ளும் தங்கையாய் இருந்தார் பார்வதி, காயத்ரி வளர வளர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாகி, காயத்ரியை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தனர், காயத்ரி இருவரிடமும் வேறுபாடு காட்டியதில்லை, காலபோக்கில் வீராவு மற்றும் வேம்பு இருவரும் இறைவனடி சேர்ந்து விட, தனித்து விடபட்டாள் காயத்ரி, அது அவளின் பதின் வயது பருவம் என்பதால் அன்பை அவள் மனம் தேடியது, மூவரும் அனைத்து வேலைகளையும் சேர்ந்து செய்தாலும், அவள் சித்தியின் மகள் என்ற எண்ணம் இருவரின் மனதிலும் ஆழமாய்ப் பதிந்திருக்க, ஊர்ரார் மூலம் காயத்ரியின் செவிக்கு விசயம் தெரிய வந்தது.

தன் பிறப்பின் ரகசியம் அனைத்தையும் தெரிந்தவள் தனிமையை நாடிச் சென்றாள், மற்ற இருவரும் படிப்பை பாதியிலையே விட்டு விட, காயத்ரி பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து முடித்தார், மேற்கொண்டு படிக்க ஆசை ஆனால் அவரை ஊக்குவிக்க ஆள் இல்லாத காரணத்தினால், அங்கிருந்த பள்ளிகூடத்தில் ஆசிரியராகப் பணிபுரிய தொடங்கினார், தபால் வழியில் இளங்கலை முடித்தார், முத்துவேல் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை, தன் தங்கை பார்வதியை மணம் முடித்துக் கொடுத்துவிட்டு தானும் திருமணம் செய்ய நினைத்தார், பார்வதியை , ராஜபூபதிக்கு மணம் முடித்து வைத்தவர், தனக்குப் பெண் தேடி அலைந்த போது தான், ஜெயக்கொடி பற்றித் தகவல் வர, பெண் பார்த்தவுடன் முத்துவேலுக்குப் பிடித்துப் போனது, திருமணமும் இனிதாய் முடிய, தங்கை ஜெயக்கொடியை பார்க்கும் சாக்கில், காயத்ரியை பார்க்க வந்தார் ஜெயக்கொடியின் அண்ணன் செந்தில்நாதன், செந்தில் நாதனின் கரிசனமான பேச்சும், அன்பை பொழியும் விதமும் காயத்ரியை கவர்ந்திழுத்தது, ஆனால் அண்ணன் இதற்குச் சம்மதிக்க மாட்டார் , என்றெண்ணி விலகினார், ஆனால் ஜெயக்கொடிக்கு தன் அண்ணனுக்கேற்ற பெண் காயத்ரி தான், அண்ணனை போல் படித்திருக்கிறார் என்று தோன்ற, அண்ணனிடம் தன் முழுச் சம்மதத்தையும் தெரிவித்தார் ஜெயக்கொடி.

“ஏட்டி காயத்ரி” முதல்முறை தன் அண்ணன் பெயர் சொல்லி அழைக்கப் பாசத்தோடு அண்ணனை நோக்கி ஓடினாள் காயத்ரி.

“அண்ணேன்”

“நீ செந்தில் வரும் போது சிரிச்சு சிரிச்சுப் பேசுறதும், அவரையே பாக்குறதும் சரியில்லை பார்த்துக்க, மனசுல எதாவது வச்சிகிட்டு இருந்தீனா, இப்பயே அழிச்சிரு” எனக் கடுமையாய் பேசிவிட்டு முகம் காட்டாது தன் வேலையைப் பார்க்க சென்று விட்டார். இதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ஜெயக்கொடி, காயத்ரியை நோக்கி வந்தார்.

“மைனி” பாசத்தோடு அழைத்தார் ஜெயக்கொடி, அவரை ஏறிட்டு பார்த்தார் காயத்ரி,

“என்ன பாக்குதீய மைனி, எங்க அண்ணனை கட்டிகிட்ட, நீங்க எனக்கு மைனி தான” என ஜெயக்கொடி சொல்ல,

“அது வந்து”

“என்ன ஜெயானே கூப்பிடுக, தப்பில்லை உங்களை விட எனக்குச் சின்ன வயசு தான்” என ஜெயக்கொடி பேச,

“எங்க அண்ணேன் இதுக்குச் சம்மதிக்க மாட்டங்க” எனக் காயத்ரி சொல்லிக்கொண்டிருந்த போதே, செந்தில் நாதனும் வந்துவிட, அவரின் முகத்தைக் கூடப் பார்க்க தைரியமில்லாமல் வீட்டினுள் சென்று மறைந்துக்கொண்டார் காயத்ரி.

நடந்தேறியவற்றை ஒன்றை விடாமல் அண்ணனிடம் சொன்னார் ஜெயக்கொடி, அதோடு சேர்த்து அவர்களின் திருமணத்திற்குத் தன் சம்மதத்தையும் தெரிவிக்க, உச்சி குளிர்ந்து போனார் செந்தில்நாதன்.

அதன் பிறகு முத்துவேலிடம் எவ்வளவு பேசியும் பயனில்லை, திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்காததால், வேறு வழியின்றித் திருமணம் செய்துவிட்டு மாலையும் கழுத்துமாய் வந்து நின்றனர் இருவரும், அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் வெறுத்து ஒதுக்கினார் முத்துவேல் பிடிக்காத தங்கை என்ற ஒரே காரணத்திற்காக, வருடங்கள் உருண்டோடியது, ஒரே ஊரில் இருந்து பேசாமல் இருந்தார்கள் இருவீட்டாரும்,

காயத்ரிக்கு ஆண் குழந்தை பிறந்தது, அதைப் பார்க்க மருத்துவமனைக்குத் திருட்டுத் தனமாக வந்த ஜெயக்கொடி, அகத்தினியன் என்ற பெயரை சூட்டினார்,

“உனக்குப் பொண்ணு பொறந்தா அவந்திகைன்னு பேரு வச்சு அகத்தினியனுக்குத் தான் கெட்டி கொடுக்கணும் தங்கச்சி” எனப் பாசமாய்க் கேட்டுக்கொண்டார் செந்தில்நாதன், அதுதான் ஜெயக்கொடி கடைசியாகத் தன் அண்ணனை பார்த்த நாள், தெரியாமல் பார்க்க வந்து மாட்டிக்கொண்ட ஜெயக்கொடியை மருத்துவமனையில் வைத்தே முத்துவேல் அடித்துவிட,

அதே ஊரில் இருந்தால் தங்கை இப்படித் தான் அடிவாங்குவாள் என எண்ணி ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து சேர்ந்தனர், காயத்ரியும், செந்தில்நாதனும் அப்போது அகத்தினியன் கைக்குழந்தை. தங்கை மீதான பாசத்திலே தங்கையைப் பார்க்காமல் இருந்து விட்டார் செந்தில்நாதன், இறுதி மூச்சு நிற்கும் வரை பார்க்காமல் செல்வார் என்று ஜெயக்கொடி எதிர் பார்த்திருக்கவில்லை, என்றாவது ஒரு நாள் அண்ணன் வருவார், அவந்திகையை அகத்தினியனுக்குப் பெண் கேட்டு வருவார் என்ற நம்பிக்கையிலயே இருந்தார், இப்படித் தலையில் இடியை போட்டு சென்று விடுவார் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.

**************************

“என்ன மன்னிச்சிருங்க, நல்ல காரியம் நடக்கும் போது அவர் இறந்த செய்திய சொல்லி உங்க சந்தோசத்தைக் கெடுக்க நினைக்கல” எனக் காயத்ரி சொன்னார்.

“எல்லாம் இந்த மனுசனால, இப்ப நிம்மதியா உமக்கு, என் அண்ணேன் முகத்தைக் கடைசியா ஒரு தடவ பாக்குற பாக்கியத்தைக் கொடுக்காம போயிட்டானே அந்த ஆண்டவன்” என முத்து வேலை பார்த்து முறைத்தார் ஜெயக்கொடி, குற்ற உணர்வில் கூனி குறுகி நின்றவரை பார்த்த பார்வதி,

“அண்ணேன் எதோ ஒரு வகையில, அவிய குடும்பத்துக்குக் கெட்டது பண்ணிட்டோம், அதைச் சரிகட்ட அவிந்திகைய இனியனுக்குக் கொடுக்குறது தான் சரியா இருக்கும்னு எனக்குத் தோணுது” எனக் காயத்ரிகாக முதல் முறை பரிந்து பேசினார் பார்வதி.

“நீரு என்ன செஞ்சாலும் என் அண்ணன திருப்பிக் கொடுக்க முடியுமா.?” எனக் கேவி அழுதார் ஜெயக்கொடி.

நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் விழித்தார் முத்துவேல்,

“நாளை மறுநாளு வெள்ளிக்கிழமை, குலசாமிகிட்ட உத்தரவு வாங்கிட்டு, அதுபடி செய்வோம்” எனச் சொல்லிவிட்டு மடமடவன வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் முத்துவேல்.

தான் தவறு செய்துவிட்டோம் என முத்துவேல் உணர்ந்தாலும், அதை ஒத்துக்கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லை, தன்னால் இப்படி நேர்ந்துவிட்டது என்ற குற்ற உணர்வு எழுந்தாலும். நான் செய்தது தவறு என ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மையான குணம் முத்துவேலிடம் சுத்தமாக இல்லை, அதனால் தான் உறவுகளின் முகத்தை காண மறுத்து உடனே வெளியே சென்றார்.

இத்தனையும் நடந்திருக்க மன்னராசா தான் எந்த வழியில் செல்வதென புரியாமல் குழம்பி போனான்.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
11
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்