Loading

“என்ன தான்டா பிரச்சினை? ஏன் உங்க நிச்சயம் நின்னு போச்சு?” தந்தையை ஐசியூவில் வைத்திருந்த போதிலும், மனது கேளாமல் அடித்து பிடித்து தேனீக்கு வந்திருந்தாள் ரூஹி.

ரிஷானோ பால்கனியில் சோகமே உருவாக அமர்ந்திருக்க, “உன்னை தான்டா கேக்குறேன் பதில் சொல்லு. அவளுக்கு போன் பண்ணுனாலும் பதில் சொல்ல மாட்டுறா. நீயும் வாயைத் திறக்க மாட்டுற. உங்க போட்டோஸ் வரும்னு வெய்ட் பண்ணுனா, எங்கேஜ்மெண்ட் நடக்கலைன்னு நியூஸ் தான் வருது…” எனக் கத்தினாள்.

மாதவி ரூஹியை வந்து முறைத்து விட்டுச் சென்றார். அவளோ அவரைக் கண்டுகொள்ளாது “டேய் உன்னை தான கேக்குறேன் சொல்லித் தொலை” அவன் அருகில் அமர்ந்து தோளில் அடிக்க, அவனது கண்கள் சிவந்திருந்தது.

“நீ கிளம்பு ரூஹி. அப்பா எப்படி இருக்காரு?” நலுங்கிய குரலே வந்தது.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா நாயே…”

“ப்ச் எதுவும் கேட்காத ரூஹி ப்ளீஸ்! என் அப்பா வேற செம்ம கோபத்துல இருக்காரு. உன்னையும் திட்டிட போறாரு. நீ கிளம்புடி” என்றான் சோர்வாக.

அவன் கன்னத்தில் கை ரேகை வேறு பதிந்திருக்க, “அப்பா அடிச்சாராடா?” என வருத்தமாகக் கேட்டாள்.

“நீ போ… நான் நாளைக்கு ஊட்டிக்கு வரேன். தனியா எப்படி மேனேஜ் பண்ற. சர்ஜரி எப்போ சொல்லிருக்காங்க?” என அவளது கேள்விக்கு பதில் பேசாது போனவனை பெருமூச்சுடன் பார்த்தாள்.

“ஆஞ்சியோ நாளைக்கழிச்சு தான். அடுத்து சர்ஜரி எப்போன்னு சொல்லுவாங்க.”

“ம்ம்…”

“நான் கிளம்பட்டாடா? நீ ஓகேவா?”

“ம்ம்!”

அவனை வேதனை மின்ன பார்த்தபடி எழுந்தவளிடம், “அவளை பார்க்க போறியா?” என வினவினான். அவன் விழிகளில் சின்னதாய் ஒரு ஆர்வம்.

“இல்ல… முதல்ல அவளை பார்க்க தான் கிளம்புனேன். ‘அப்பாக்கு சரியானதும் என்ன பிரச்சினைன்னு சொல்றேன். நீ வந்தாலும் வேஸ்ட்’னு சொல்லிட்டா. அதான் உங்கிட்ட கேட்காம கொள்ளாம கிளம்பி வந்தேன்” அதற்கும் “ம்ம்” தவிர அவனிடம் எதுவும் வாங்க இயலவில்லை.

அவளும் கிளம்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்க, அவன் தலையைத் தடவிக்கொடுத்து விட்டு கிளம்பினாள்.

——–

இங்கோ, விஷ்ணு தவிர்த்து குடும்பத்தினர் அனைவரும் அகமொழியின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

அதற்குள் ஸ்நாக்ஸும் காபி கேனும் வாங்கி வைத்து விட்டாள், பாஸ்கர் கிளம்பும் முன்னே.

“ஏற்கனவே கால்ல சுகர்க்கு ரெண்டு விரலை எடுத்தாச்சு. இன்னும் கொஞ்சம் அலைஞ்சு இன்னும் ரெண்டு விரலை எடுக்க வச்சுக்க வேணாம்னு சொல்லுங்க உங்க புருஷனை” எனக் கடித்து குதறாத குறையாக அறைக்குச் சென்றாள்.

வசந்தி தான் இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு திண்டாடினார்.

பெரியதாக அலங்கரிக்க பிடிக்காமல், நல்ல சுடிதார் மட்டும் அணிந்து கொண்டாள்.

முதலில் சில நிமிடங்கள் இரு குடும்பமும் சங்கடத்தில் பேசாமல் இருந்தது.

பின் பாஸ்கர் மெல்ல அமையாவிடம் “கலர்ஸ் சேர்த்தீங்களா?” எனக் கேட்க, அன்விதாவும் “அந்த கியூப் வச்சு தான் ரொம்ப நேரம் விளையாடிட்டு இருக்கா அங்கிள்” என முறுவலித்தாள்.

நிலையை சீராக்கும் பொருட்டு, “அகமொழியைப் பார்க்க போகலாமா அம்மே? என கேட்டாள். பிரணீத் மூலமாக இருவருக்கும் நடக்கும் போர் எல்லாம் அவளுக்கு அத்துப்படி.

ஆனால் அதனை எப்படி வீட்டாருக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் அமைதி காத்தாள்.

“தேதியை குறிச்சுடலாமா?” கோபாலகிருஷ்ணன் கேட்க, “சரிங்க” என பாஸ்கரும் தலையசைத்தார்.

சுஜாதா, அன்விதா, அனகா மூவரும் அறைக்குச் செல்ல, அங்கு கடுப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அகமொழி.

அவர்களைக் கண்டதும் முயன்று சிரித்து வைத்தாள். சற்றே சங்கடமாகவும் இருந்தது. சுஜாதாவிற்கும் தான்.

‘எல்லாம் அந்தப் பைத்தியக்காரனால வந்தது’ என அவளும், ‘எல்லாம் அந்த பையனால வந்தது’ என அவரும் ஒரே நேரம் முணுமுணுத்துக் கொண்டனர்.

பின் ‘நம்ம மேல எந்த தப்பும் இல்ல’ என சட்டென தெளிவு பெற்றவள், “பாப்பா வரலையாக்கா?” என அன்விதாவிடம் வினவினாள்.

அதற்குள் அமையாவே உள்ளே ஓடி வந்து விட, “ஹாய்!” எனக் கை கொடுத்தாள் அகமொழி.

“ஹாய்” வெட்கம் கொண்ட படி கூறிய அமையாவைக் கண்டு புன்னகைத்திட, அனகா தான் அவளை ஆராய்ந்தபடி “சத்யமாவே நீங்களும் சேட்டனும் லவ் பண்ணீங்களா?” என்றாள் கூர்மையாக.

“லவ்வா? ஆமா லவ்வு” என எச்சிலை விழுங்கியவளுக்கு, ஐயோ என்றிருந்தது.

“சும்மா இரி அனு” சுஜாதா தான் அதட்டினார்.

“நீங்க?” அனகாவை பார்த்து அகமொழி வினவ,

“என் சேட்டனை லவ் செய்திருக்கீங்க. அவருக்கு ஒரு தங்கச்சி இருக்கான்றதை கூடவா பறஞ்சதில்ல?” என முறைத்தாள்.

சமாளிக்கும்பொருட்டு, “ஓ! அது நீ தானா. நான் ஏதோ தங்கச்சி இருக்கான்னு சொன்னதும், கொஞ்சம் ஓல்ட் பீசா எதிர்பார்த்தேன். இவ்ளோ யங்கா எதிர்பார்க்கல நாத்தனாரே” எனத் தனது ஐஸ் வைக்கும் பணியைத் தொடர, அனகா தான் விழித்தாள்.

மறுகணமே கண்ணைச் சுருக்கியவள், “நீங்கள் என்னை கலாய்க்கிறீங்கன்னு புரியுன்னு. ஆனாலும் உங்க ஐஸ் நன்னாருக்கு ஏடத்தி…” என்ற அனகாவின் முகத்திலும் குழப்பம் மறைந்து சின்ன முறுவல்.

“ஏடத்தின்னா?”

“அண்ணின்னு சொன்னேன்… நீங்க அண்ணி தான?” எகத்தாளமாகக் கேட்டதில்,

“இப்ப நம்புறேன்மா, அகனோட தங்கச்சி நீயே தான். அதே நக்கல். அதே திமிரு” என வாரிட, “சேம் பிளட் தான ஏடத்தி” என்றவளுக்கும் இப்போது புன்னகை மலர்ந்தது.

சுஜாதா தான், “தேதி குறிக்கனும் மோளே. நீ எப்போ தலைக்கு குளிச்ச?” என வினவ, “போச்சுடா… மீண்டும் மீண்டுமா?” எனத் தளர்ந்து போனாள் அகமொழி.

கூடவே, ‘இப்ப கூட ஒன்னும் கெட்டுப்போகல. ரிஷு பேமிலியே ஓவர் பார்மாலிட்டி பார்க்கும்போது, இவங்கள்லாம் இங்க ட்ரெடிஷன்லயே ஊறிப்போனவங்க. இதைக் காரணம் காட்டி கல்யாணம் கேன்சல் ஆகிட்டா?’ என நம்பியார் தோரணையில் திட்டம் தீட்டியவள், மாதவியிடம் சொன்ன மாதவிலக்கு பற்றி விளக்கினாள்.

ஆனால் அவர்களுக்கு சொன்னது போன்று, ஆறுதல் விளக்கங்கள் எல்லாம் சொல்லவில்லை. அதோடு இன்னும் பிட்டை அதிகமாய் போடும் பொருட்டு, “பத்து நாள் கூட தீட்டாகும் ஆண்ட்டி” எனக் கூறிட, அவரோ யோசித்தார்.

‘ஹை ஜாலி!’ அவள் சந்தோஷப்படும்போதே, “அப்போ முன்னாடியே தேதி நோக்காம் மோளே. ரொம்ப லேட் பண்ணிட வேண்டா…” என்றிட சப்பென ஆனது.

“ஆனா அதுக்கு அப்பறம் வந்துட்டா, கோவிலுக்குலாம் போகணும்னு இருக்கும்ல ஆண்ட்டி” அவளும் முட்டுக்கொடுத்து பார்த்தாள்.

“அது இருக்கட்டும்மா. அப்போ ரெஸ்ட் எடுக்காம். மேரேஜ் அன்றைக்கு வன்னுட்டா, நினக்கு ரொம்ப கஷ்டமாயிடும். அன்றைக்கு நிறைய ஃபார்மாலிட்டி இருக்கும், நாள் முழுக்க நின்னுட்டே இருக்கணம். அதுகொண்டு பீரியட் ஆகுறதுக்கு முன்னாடி கல்யாணத்தை முடிக்கலாம்…” என்று தீவிரமாகக் கூறி விட்டு சென்றவரை பே’ வென பார்த்தாள்.

அந்தப் பைத்தியக்காரனுக்கு இப்படி ஒரு தெளிவான அம்மாவா…! அதிசயித்துப் போனாள். கூடவே முகத்தை சுளித்து விட்டுச் சென்ற ரேவதியின் முகம் கண்முன்னே வர, மனம் சற்று நிம்மதியடைந்தது.

அதன்பிறகு அனகாவிடம் படிப்பு கல்லூரி என ஆரம்பித்து மெல்ல மெல்ல அவளை நன்றாகவே பேச வைத்து விட்டாள்.

அன்விதா எப்போதும் போல அவர்கள் பேசுவதை முறுவலுடன் கேட்டுக்கொண்டாள்.

பெரிய குடும்பம். மூன்று தலைமுறைகள் ஒன்றாக வசிக்கின்றனர் என அறிந்ததும், அவளுக்கு கொஞ்சம் தயக்கம். ஒற்றைப்பெண்ணாக இருந்து பழக்கப்பட்டவளாகிற்றே!

அவளை இன்னும் பதற்றப்படுத்தும் பொருட்டு அடுத்த மூன்று நாள்களிலேயே திருமணம் என்று விட, ‘உன் மச்சத்தை நான் பார்க்க வேணாமா?’ எனக் கேட்ட ஆடவனின் கேலிக்குரலே காதில் எதிரொலித்து நெஞ்சை நடுங்க வைத்தது.

அதிலிருந்தே அவளுக்கு அவ்வப்பொழுது வயிறைப் பிரட்டிக்கொண்டு இருக்கும்.

என்னதான் மனதைத் திடப்படுத்தி அவனிடம் திமிராய் பேசி விட்டு வந்தாலும், பிடிக்காத ஒருவனுடன் அதிலும் ஏற்கனவே பெண் பழக்கம் கொண்டவனுடன், எப்படி ஒன்றாக படுக்கையைப் பகிர இயலும்? அவன் தொட்டாலே தீச்சுட்டது மாதிரி இருக்குமே! எனத் தனக்குள் வெகுவாய் உழன்றாள்.

அவளுக்கு, முந்தைய நாள் நலுங்கிற்கு தேவையான உடையில் இருந்து நகை வரை அனைத்தும் வந்து சேர்ந்தது. அன்விதாவும் அனகாவும் தான் கொண்டு வந்திருந்தனர்.

அதனைக் கண்டு திகைத்தவள், “என்னகா இவளோ இருக்கு. இதுல எது வேணும்னு செலக்ட் பண்ணனுமா?” என வினவ,

“இதெல்லாம் உனக்கு தான் அகா. இது நலுங்குக்கு. இது மேரேஜ் அன்னைக்கு போட வேண்டிய நகை. தனியா எடுத்து வச்சுக்கோ. அந்த டைம்ல ஒன்னொன்னும் தேடிட்டு இருக்க வேணாம். அப்பறம், எங்க வழக்கப்படி முந்தின நாள் மஞ்சள், எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைப்போம். அதுனால மண்டபத்துக்கு வந்துடுங்க. சுஜாதாம்மாவும் கால் பண்றேன்னு சொன்னாங்க. வீட்ல ஆல்ரெடி நிறைய கெஸ்ட். அவங்களையும் விட்டுட்டு அலைய முடியல அதான் தப்பா எடுத்துக்காதீங்க” வீட்டின் மூத்த மருமகளாக பேசினாள்.

“அதுனால ஒன்னும் இல்லமா” வசந்தி கூறிட, அகமொழியோ இன்னும் தெளியவில்லை.

“இவ்ளோ நகை எல்லாம் போட்டா நான் வெய்ட் தாங்காம விழுந்துடுவேன்கா” எனப் பாவமாகக் கூற,

வசந்தி தான், “அவங்க முறைப்படி கல்யாணத்து அன்னைக்கு இந்த நகை தான் போடணும்னு செண்டிமெண்ட்டா வச்சிருப்பாங்க அகா. வேணாம்னு சொல்லாத…” என்றவரும், இதெல்லாம் பரம்பரை நகை என்றெண்ணினார் போலும்.

அனகா தான், “ஹான்… இது பழைய நகையெல்லாம் அல்ல. எல்லாமே ஏடத்திக்காக ஸ்பெஷலா சுட சுட செய்து வந்தது” என்றதில் இப்போது தாயும் மகளுமே திருதிருவென விழித்தனர்.

சொன்னது போன்றே முந்தைய நாளே அகமொழியின் குடும்பத்தினர் மண்டபத்திற்கு சென்று விட்டனர்.

நிச்சயத்திற்கே அத்தனை பெரிய மண்டபம் பிடித்தவர்கள். திருமணத்திற்கு எளிதாகவா செய்வார்கள்.

அத்தனை பெரிய மண்டபத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைவரும் உறவினர்களாம்!

அகமொழிக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலை தான்.

“உடனே எல்லாரையும் ஞாபகம் வச்சுக்க முடியாது தான் அகா. ஞாபகம் இருக்குற மாறி காட்டிக்க வேற வழி இல்ல” என்று அன்விதா கிசுகிசுப்பாகக் கூற, மெல்லத் தணிந்தவளுக்கு என்னவோ எதிலும் நாட்டம் இல்லை.

உயிரான நண்பர்கள் உடன் இல்லை. பெற்றோர்கள் அதிகமாக பேசுவதும் இல்லை.

அவளுக்கு அனகாவும் அன்விதாவும் அலங்காரம் செய்து நலுங்கிற்கு அழைக்கும் வரைக்கும் அவள் சோர்வாகவே தான் இருந்தாள்.

“ஏடத்தி நாளைக்கு தாலி கெட்டுற வரை நீங்களும் அர்ஜியும் பார்த்துக்க கூடாதுனு பரஞ்சதுனால தான சோகமா இருக்கீங்க…” என அனகா கிளுக்கென சிரிக்க,

‘ஹாங் அப்படியே பார்த்தாலும் பு***ங்கி தள்ளிடுவோம்’ அசிங்க அசிங்கமாக வாயில் வந்தது.

“ஆமாங்க நாத்தனாரே” வெகு அடக்கமாகக் சொல்லிக்கொண்டாள்.

அவளுக்கு மஞ்சள் பூசி, பெரியவர்கள் ஒவ்வொருவராய் ஆசி செய்ய, கல்யாணியும் கடமைக்காக முறைகளை செய்து கொண்டார்.

கன்னத்தில் நிறைந்த மஞ்சளும் நெற்றியில் திகழ்ந்த சந்தனமும் மஞ்சள் நிற புடவையும் அவளைப் பேரழகியாகக் காட்டியதில் சந்தேகமேதும் இல்லை.

அடுத்ததாக அர்ஜித்திற்கு மஞ்சள் பூசிட அவனைத் தேடி அறைக்கு சென்றாள் அனகா.

நாயகனோ வெகு சட்டமாக அகமொழியின் அறைக்கட்டிலில் அமர்ந்திருந்தான்.

அறைக்குள் நுழைந்து அவனைக் கண்டு திகைத்தவள், “நீ இங்க என்ன பண்ற?” என்றிட,

“என் ப்ராப்பர்டியை நோக்க வந்தேன்” என்றான் அவளை மேலிருந்து கீழ்வரை நோக்கியபடி.

“என்ன உன் ப்ராப்பர்டியை யாரும் லீசுக்கு வாங்கிருவாங்களோன்னு பயமோ?” அத்தனை நேரம் இருந்த சோர்வெல்லாம் உடைத்தெறிய, சிலிர்த்துக் கொண்டு வாதம் செய்யத் தொடங்கினாள்.

“அப்படி எல்லாம் ஈ அர்ஜித் லீசுக்கு எடுத்தப் பொருளை யாரும் தொட முடியாது காந்தாரி. பை தி வே, நின்னொடு ஒரு காரியம் பறையனும். நம்ம லவ் மேரேஜ்னு தான் எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க. சோ, நீயும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு டஜன் லவ்வை ஈ முகத்துல வழிய விடணம்…” என்றவன் அவளை நெருங்கி நின்று மஞ்சள் பூசிய கன்னத்தில் விரலால் வருடினான்.

அவனை தள்ளி விட்டவள், “மூஞ்சில ஒரு வண்டி மஞ்சள் தான் வழியுது. லவ்வு வழியணுமாமே. என்னால எல்லாம் நடிக்க முடியாது. நீ வேணும்னா நடிச்சுக்கோ. உனக்கு தான் நடிப்பு கை வந்த கலையாச்சே” என உதட்டை சிலுப்பினாள்.

“அப்போ ஞான் நடிச்சுக்கலாம் தானே?” உல்லாசச் சிரிப்புடன் கேட்டான் அகன்.

அவள் அதில் தெளிவு பெரும் முன்னே, அவளைச் சுவரோடு அணை கட்டியதில் தடுமாறினாள் அகமொழி.

“என்னடா பண்ற? தள்ளிப்போ!”

“நாளை தொட்டு நீ தள்ளிப்போன்னு என்னை அவாய்ட் செய்ய முடியாதே காந்தாரி. அப்போ எந்தா செய்யூ? (என்ன செய்வ)” எனக் குதர்க்கமாகக் கேட்டதில், அவள் அமைதியாகி விட்டாள்.

“சோ… இப்ப ஒரு சிறிய ரிகர்சல்!” விழியுயர்த்தியவனின் கன்னம் அவளது கன்னத்தோடு ஒரு முறை இழைந்திட, மஞ்சள்கள் இடம் மாறிப்போனது.

“ஆ… சொறசொறன்னு குத்துதுடா உன் தாடி” எனக் கத்தும்போதே அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

அவளோ கண்ணை இறுக்கி மூடி தலையை சுவரோடு அழுத்தி எரிச்சலாக நிற்க, அவன் நெற்றியும் அவள் நெற்றியும் முட்டிக்கொள்ளும் வரை குனிந்தவன் பின் மெல்ல விலகினான்.

இதன் பலனாக சந்தனத்தில் கீற்று அவன் நெற்றியில் படர்ந்தது.

“நாளைக்கு ஞான் கிஸ் செய்ய செய்யான் வரும்பொ இப்படி ரியாக்ட் செய்ய கூடாதுடி. என்னை சகிச்சுப்பேன்னு பறஞ்சல்லோ!” என எச்சரித்தபடி தனது கன்னத்தையும் நெற்றியையும் துடைத்து விட, அவனது அதிகாரத்தில் அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

அவனை உறுத்து விழித்தவள், ‘மிரட்டுறியா?’ எனப் பல்லைக்கடித்து அவன் சட்டையைப் பற்றி அணைத்துக் கொண்டாள்.

ஒரு கணம் அர்ஜித் திகைத்து நிற்க, தனது மஞ்சள்களை எல்லாம் அவனது சந்தன நிற சட்டையில் ஒட்டி விட்டதில், நெற்றி நிரம்பிய சந்தனமும் அவன் தாடையில் பரவிச் சென்றது.

அவளது முயற்சி புரியாது, உணர்வுகள் கிளர்ந்தெழ இறுக அணைக்க விழையும் போதே, வெடுக்கென விலகினாள்.

அந்நேரம் “சேட்டா பாய்…எங்கடா இருக்க?” என்ற ப்ரணீத்தின் குரல் கேட்க, அனகா “ஒருவேளை ஏடத்தி ரூம்ல இருப்பானோ” எனச் சந்தேகமாக வந்தாள்.

“வெளில போங்க அகன்… வெட்கமா இருக்கு எனக்கு” முகத்தை மூடி அநியாயத்திற்கு வெட்கப்பட்டாள் சற்று சத்தமாகவே.

போலியாக இருப்பினும், பெண்ணின் நாணத்தில் சிவந்த மேனியில் கட்டுண்டு போனவன் இன்னும் அசையாது நிற்க, “ப்ச் போங்கன்னு சொல்றேன்ல… என் ரூம் பக்கம் வரக்கூடாது. நாட்டி!” என்று அவனை இழுத்து வாசலில் நிற்க வைத்து கதவை அடைத்தாள். அதீத ஓசையுடனே!

அனகாவும் ப்ரணீத்தும் தான் பேந்த பேந்த விழித்தனர்.

“டா… நின்னோடு ஏடத்தியை நோக்க கூடாதுன்னு சொன்னாங்க தான?”

“டேய் என்னடா இது? நாளைக்கு தான்டா உங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட்டு!” என ப்ரணீத்தும் அவனது கோலம் கண்டு கேட்க, சட்டென நிலை உணர்ந்த அர்ஜித், “எங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் நைட் ஆல்ரெடி கழிஞ்சதல்லோ” எனத் தோளைக் குலுக்கி விட்டுச் சென்றான்.

சபையில் சென்று நலுங்குக்கு அமர்ந்தவனை மொத்த மண்டபமும் ஒரு தினுசாகப் பார்த்தது.

தனதருகில் நின்று கொண்டிருந்த பிரணீத்தின் சட்டையைப் பற்றி இழுத்தவன், “எந்தாடா? எல்லாரும் ப்ரீஸ் மோடில் நிக்கான்னு…” எனக் கேட்க,

“பின்ன நிக்காம… இதோ பாரு” என போன் கேமராவை ஆன் செய்து அவனைக் காட்டிட அர்ஜித்தும் உறைநிலைக்குச் சென்றான்.

சட்டையில் ஒட்டி இருந்த மஞ்சளும் தாடையில் கீறிய சந்தனமும் பல கதைகளை எடுத்துக் கூற முயன்றது.

அவசரமாக அதனைத் துடைத்தவன், “எடி… காந்தாரி! நின்னே…” எனக் கொப்பளித்த கோபத்துடன் யாரையும் நிமிர்ந்து பாராது அமர்ந்திருக்க, அவன்மீது கொலை வெறியுடனே குடும்பத்தினர் நலுங்கு வைத்தனர்.

பெண்ணைப் பார்க்கக்கூடாது என்ற உத்தரவை மீறியதில் பெரியவர்களுக்கு சிறு அதிருப்தி.

இங்கோ அகமொழி ‘செத்தான் சேட்டா…’ எனக் குதூகலித்தபடி மாடியில் இருந்து மெல்ல எட்டிப்பார்க்க, அவனது அசட்டு முகத்தைக் கண்டு சிரிப்பு பீறிட்டது.

சரியாக அவனும் மெல்ல விழியுயர்த்தி மேலே பார்த்து நெருப்பாய் காய, ஆள்காட்டி விரலை குறுக்கி “பௌ பௌ!” என அழகு காட்டியவளுக்கு அத்தனை நேரம் இருந்த குழப்பமும் சோர்வும் எங்கு சென்றதென்றே தெரியவில்லை. அதனை ஆராயவும் உறைக்கவில்லை. நேசம் உறைத்து, நெஞ்சம் உணரும் நொடிகள் எப்போது நேருமோ?

அகன் வசமாவாள்
மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
45
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வாவ் அகா. அகன் வைச்சு செய்வான் மறந்து விட்டாள்