
அத்தியாயம் 11
அடுத்த மூன்று நாள்கள் இரு வீட்டாருக்கும் மௌனமாகக் கழிந்தது.
யாரும் யார் முகத்தையும் பார்க்கவில்லை. இந்தக் கலவரத்திற்குக் காரணமான அகமொழியும், அர்ஜித்துமோ தத்தம் வேலைகளில் தீவிரமாக மூழ்கிப் போயினர்.
ரிஷானும் ரூஹியும் இல்லாததால், அகமொழிக்கு கிளாம்பிங்கில் வேலை அதிகம் இருந்தது. இத்தனைக்கும் புக்கிங் வெகுவாகக் குறைந்து விட்டாலும் கையைக் கடிக்காமல் சென்றது.
பாஸ்கரும் வசந்தியும் அகமொழியிடம் பேசிக் கொள்ளவில்லை. ஆகினும் வசந்தியால் முடியவில்லை. இத்தனைத் தூரம் ஆன பிறகு, அந்தப் பையன் வீட்டில் பேசி இவளைக் கரை சேர்த்து விடுவதே உசிதம் எனப்பட்டது. இடைப்பட்ட நாளில் அகமொழியே வசந்தியிடம் கூறி இருந்தாள். ‘பாவம் அந்தப் பையனோட நிச்சயமும் நின்று விட்டது’ என்று.
அன்று பார்க்கும்போதே தெரிந்தது பணக்காரர்களாகத் தான் இருப்பார்களென. சீதனமாக, இருக்கும் கொஞ்சம் நகையையும் அந்த இடத்தையும் கொடுத்து விடலாம் எனக் கணக்கிட்டு மகளிடமே கூறி அவளது இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி இருந்தார்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா? அவனை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது!” என்று வெடுக்கெனக் கூறியதன் பலனாக,
அவளை வீட்டு வேலை எதையும் செய்ய விடவில்லை. பாத்திரத்தைக் கையோடு கழுவி வைத்துக் கொண்டார் வசந்தி. பாஸ்கர் ஓய்வு நேரத்தில் வீட்டைச் சுத்தம் செய்து கொள்ள, அவளை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்தது போலவே நடந்தனர்.
‘எனக்கென்ன, வயசான காலத்துல ஈகோவைப் பிடிச்சுத் தொங்குங்க!’ என அவளும் அலட்டிக் கொள்ளவில்லை.
வீட்டில் உண்பதும் இல்லை. பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும் சாதாரணப் பயம் அவர்களையும் விழுங்குகிறது எனப் புரிந்தது தான். ஆனாலும், இதில் நானும் என்ன செய்ய இயலும் என்ற எரிச்சல்.
இங்கோ, அனகா தான் “சேட்டா, ஆ பெண்ணு பரஞ்சது சத்யமானோ? நீ அதினொன்னும் சரிப்பட்டு வரில்லாலோ…” எனக் கிண்டலாகக் கேட்டாலும் அவன் அவமானப்பட்டதில் நிஜ வருத்தம் தெரிந்தது.
அவள் தலையைக் கலைத்து விட்டுச் சென்றவனோ பதிலேதும் கூறவில்லை. உள்ளம் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது.
நிச்சயத்திற்கு வந்த சொந்தங்களெல்லாம் இன்னும் கிளம்பாமல் இருக்க, கேசவ நாயர் சாய்வு நாற்காலியில் யோசனையுடன் படுத்திருந்தார்.
“எந்தாந்தே இங்கனே ஆகியது, ஒந்துமே மனசிலாயில்லா.” கல்யாணி வருந்தினார்.
கோபால கிருஷ்ணனோ, “அவனோடு ஒரு வாக்கு சோதிக்காம்…” என்றதில் சுஜாதா முறைத்தார்.
“பெண் பாவம் பொல்லாதது. ஏது பெண்ணெங்கிலும் ஈ காரியத்தில் நுண பரயுமோ?” என்ற ஆற்றாமை சுஜாதாவிற்கு.
“இப்ப எந்தா மோளே செய்யுவா? அதினுவேண்டி அவளை அர்ஜிக்குக் கல்யாணம் செய்து வைக்க முடியுமா?” கல்யாணி பெருமூச்சுடன் கேட்க,
“செய்து வைக்கணம் மா!” என்றார் முணுமுணுப்பாக.
கல்யாணி எழுந்தே விட்டார்.
“களிக்குவானோ? யார் எந்தான்னே அறயில்ல. அவள் பாட்டினு வந்து சம்சாரிச்சிட்டு இரிக்குனு… அவளும், அவள்டெ அலட்டலும். எனிக்கு எந்தோ பிடிச்சில்ல சுஜாதா.”
“வேற எந்தா மா செய்யாம் பரயனது? அத்தரை ஆளுக்கும் அவங்க ஒந்தாய் இருந்தாங்கன்னு அறஞ்சு போயி. இதுகொண்டு ரெண்டு பேர் ஜீவிதவும் பாதிக்கும். பந்துக்களும் உள்ளப்போ கண்ணும் காதும் வச்ச போல முடிச்சி விடாம். நாள் போகப் போக இது பற்றிப் பேசியே மனசைக் கீறுந்து…” என்ற மருமகளின் கண்ணீரில் மனம் உருகினார்.
“ப்ச், நிங்களுக்கு மனசு சம்மதிச்சா சரி தன்னே…” கல்யாணி பெரியதாகத் தலையிடாமல் ஒதுங்கினார்.
இதனைக் கேட்ட அர்ஜித், “எனிக்கு அவளைக் கல்யாணம் செய்யான் பற்றில்லா!” என்று தீர்க்கமாகக் கூற,
அவனை ஏறெடுத்தும் பாராத சுஜாதா, “இவிடே யாரும் அவன்டடுத்து பெர்மிஷன் சோதிச்சில்லா. செய்து தன்னே ஆகணும். இனியும் நம்மை அசிங்கப்படுத்தனும்னு எண்ணம் இருந்தா ஞான் அம்மாந்து அவன் மறந்துடட்டும்.” அவரும் அதே அழுத்தத்தில் உரைக்க, அவரைக் கீழ்க்கண்ணால் முறைத்தவன்,
“நிங்கள்டே நல்லதினு வேண்டியானு பரஞ்சது… ஈ வீடு நந்தாயிரிக்கணம்னு நினைச்சேன்…” என வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்துக் கொண்டான் பாவப்பட்டு.
விஷ்ணு தான் எகிறினான். “எந்தாம்மே பரஞ்சிட்டு இரிக்கனது… ஆ லோ க்ளாஸ் பெண்ணு, ஏதோ பஜாரி மாதிரி வந்து பேசிட்டுப் போயி… அவள் இவிடே மருமகளாய் வரனமோ?” எனச் சத்தம் போட, அர்ஜித்தோ நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க என்ற ரீதியில் அலுவலகத்திற்குப் பறந்து விட்டான்.
போகும் வழியில், சிறு விஷமம் தோன்றவே காரை நேராக ‘கிளாம்பிங் ஸ்டே’க்கு விட்டான்.
அங்கோ, அலுவலக அறையில் அமர்ந்து கஸ்டமர்க்குத் தேவையான உணவை ஆர்டர் செய்து கொண்டிருந்த அகமொழி, அவனைக் கண்டதும் நிமிர்ந்து முறைத்து விட்டு மீண்டும் வேலையில் மூழ்கினாள்.
அவளெதிரில் சாய்வாக அமர்ந்தவன், “என்னே எதிர்பார்த்தியோ?” என்றான் நக்கலாக.
“உன்னை நான் ஏன் எதிர்பார்க்கப் போறேன்?”
“எதிர்பார்த்திரிக்கணமே! ஜேசிபியோட” என்றான் தோள் குலுக்கி.
“இதோ பாரு, ஜேசிபிக்கு பதில் தான் நான் உன் ரூமுக்கு வந்தேன். அந்தக் கணக்கு முடிஞ்சுது. நீ மறுபடியும் என் லவ்வை உடைச்சு ஆட்டத்தைக் கலைச்ச, திரும்ப நான் கலைச்சேன். இனி இந்தக் கணக்கைத் திரும்ப ஆரம்பிக்காத.”
“அதெங்கனே காந்தாரி, கணக்கு இனி தன்னே ஆரம்பிக்கனது!” எனக் கையை உயர்த்திச் சோம்பல் முறித்தான்.
“என்ன? என்ன கணக்கு?” அவள் கடுப்பாகக் கேட்க,
“என் முதுகில் உள்ள மச்சத்தைக் கண்ட போலே, ஞானும் ஒந்து பார்க்கணமே!” என்றான் அமர்த்தலாக.
“ஹான்?” அவள் பேந்தப் பேந்த விழிக்க, “பழிக்குப் பழி!” எனக் கண்ணைச் சுருக்கினான்.
“இதோ பாரு அகன், நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணி உருகிட்டு இருக்கேன்னு சொல்லலாம் வரல. உன் ரிசார்ட்ல நடக்குற மன்மத லீலையை அவுத்து விட்டு, உன்னை அசிங்கப்படுத்தத் தான் வந்தேன். உன் அம்மா அப்பாவுக்காகத் தான், அங்க வந்து மாத்திப் பேசினேன். உன் பிரெண்டு ஆதாரம் கேட்கவும், அன்னைக்கு எதேச்சையா பார்த்ததை வச்சு சொன்னேன். தட்ஸ் இட்!”
டேபிளில் டொம்மெனத் தட்டியவன், “அதே தன்னே நினக்கும்!” எனக் கர்ஜிக்க, அவள் அரண்டு விட்டாள்.
“ஞானும் ஒந்தும் நீயும் ஞானும் லவ்ல கரைஞ்சோம்னு பரயான் வந்தில்லா. நீ என்டெ ரிசார்ட்கு வந்தப்ப சேரியில் வந்து, காலைல போகும்போ வேற ட்ரெஸ்ல போயி அதோட புட்டேஜ் என்டடுத்து இருக்கு. ஆ ரூமில் நான் தன்னே இருந்ததாயி நீ தலைகீழா நின்னால் கூட ஆதாரம் ரெடி செய்யான் பற்றில்லா. நீ எவன்கூட வேணாலும் இருந்ததாயி ஞானும் சொல்லிருக்க முடியும். நின்டெ அச்சன், அம்மக்காக தன்னே, போயும் போயும் நின்னை என்டெ கூட வச்சுப் பேசினேன். அதும் லவ்னு… இத்தரைக்கும் ஞான் ஒந்தும் நினக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சதாயி பரயலையே! மத்தவங்க கற்பனை செய்தா அதினு ஞான் எதுவும் செய்யான் பற்றில்லா…” எனச் சீறியவனைக் கண்டு வெப்ப மூச்சு அவளிடம்.
“ரூமுக்கு வர வச்சு, ஒரே நைட்ல எல்லாம் முடிஞ்சதெந்து பரஞ்சது நீ தன்னே…” என்றவன் எழுந்து அவள் முன்னே டேபிளில் கையூன்றிக் குனிய, சட்டெனப் பின்னால் நகரப் போனவளுக்கு நாற்காலி சாய்த்து விட்டது.
அதில் அவளை மட்டுமாக இடையுடன் பிடித்து இறுக்கிக் கொண்டவன், சற்றும் அசைந்து கொடுக்காது “ஒரே நைட்ல மட்டும் அல்ல, இனி ஒவ்வொரு நைட்டும் என்டெ மச்சத்தை நீ கண்டு தன்னே ஆகணும். நீ முடிஞ்சதுனு பரஞ்சதை முடிச்சுட்டே இரிக்கணும்…” என அனலாய் கொதித்தான்.
அவனை வம்படியாகத் தள்ளி விட முயன்றவளுக்குத் தோல்வியே கிட்ட, “நீ தான் பல சுந்தரிகளைப் பார்த்திருக்கியே, போய் அவளுகளைக் கேளு இதை. முதல்ல தள்ளிப் போடா!” என்று அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.
அவன் நகரவில்லை என்றதும் கை வசம் இருந்த கைப்பையில் துழாவ முயல, அவள் கையைப் பிடித்து வளைத்து அவளையும் பின்னால் சாய்த்தவன் இதழோடு இதழ் நெருங்கி “பெப்பர் ஸ்ப்ரே எடுக்கும் முன்னே, நின்டெ லிப்ஸை ஞான் டேஸ்ட் பண்ணிடுவேன் காந்தாரி!” என மிரட்ட, மற்றொரு கையால் அவன் வாயை மூடித் தள்ளினாள்.
தன் வாயை மூடிய கைக்கு முத்தத்தைத் தண்டனையாகக் கொடுத்ததில், விருட்டெனக் கையெடுக்க முயன்றவளுக்கு அதுவும் முடியாத நிலை. கையை எடுத்து விட்டால், நிச்சயம் இதழ்கள் தீண்டிக் கொள்ளும் அவலம்.
“தள்ளிப் போடா… அப்புறம் உன் வீட்ல வந்து இதையும் சொல்லிடுவேன்!”
“சொல்லிக்கோ! ஞானும் பரயும்… நின்டே வீட்டில் வந்து… சும்மா நிக்கன பையன்டே வாயில் கையை வச்சு முத்தம் கொடுத்துட்டே இரிக்கான் பரயுனு நிங்கள்டெ மகள்னு…” என இதழ் வளைக்க, “டேய்ய்ய்ய்ய்!” எனப் பல்லைக் கடித்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் உள்ளங்கை கூசத் தொடங்க, “விடு அகன், ப்ளீஸ்…” என்று முணுமுணுத்தாள்.
அதன்பிறகே அவளை விடுவித்தவன் அவளை அழுத்தமாக ஏறிட்டு, “என்னை மேரேஜ் பண்ணிக்கோ!” என அடுத்த குண்டைப் போட்டான்.
“எதே?” திடுக்கிட்டுப் போனவள், “காலம் முழுக்க உன்னைச் சகிச்சுக்கறது எல்லாம் முடியாத காரியம்…” என முகம் சுளித்தாள்.
“எனிக்கு மட்டும் எந்தா தலையெழுத்தா? நின்னைச் சகிக்கனது எனக்கும் தன்னே கஷ்டம். நின்டெ திமிருக்கு எல்லாம் எவனுமே நின்டெகூட வாழ முடியாது…”
“தெரிஞ்சா சரி.”
“பட், என் மச்சத்தைக் கண்டவளை மன்னிச்சு விட எனிக்கு மனசு இல்லா…” என்றவன் கண்ணாடிச் சாளரம் வழி தெரிந்த அந்த மலையின் அழகை ஆழ்ந்து கவனித்து, “ஈ வியூவ விடவும் எனிக்கு மனசில்லா… சோ இனி நீயும் எனிக்கு தன்னே, ஈ வியூவும் எனிக்கு தன்னே!” என்றான் ஆணவமாக.
“நான் இன்னொருத்தனை லவ் பண்றேன். என் மனசுல யாருக்கும் இடம் கிடையாது.” அவள் தீயாகக் கூற,
“நின்டெ மனசு ஆருக்கு வேணம்!” அர்த்தப் புன்னகை அவனிடம்.
“மரியாதையா இங்க இருந்து போயிடு.” அவள் விரல் நீட்டி எச்சரிக்கும்போதே,
“பர்ஸ்ட் எனிக்கு செம்மயா கோபம் வந்து ஈ மூணு உப்புப் பெறாத டென்டையும் தூக்கிடலாம்னு தன்னே விசாரிச்சது. பின்னே ஈ இடம் இருந்தால் அல்லே நீ ஆடுள்ளு… சோ, ஈ இடத்தை எந்து செய்யலாம்னு யோசிச்சப்ப தான் ஈ ஐடியா வந்தது…
இப்ப போய் நின்டே அச்சன்டடுத்து பாவம் பார்த்து நின்னை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாலும் செஞ்சு வைய்க்கும். ஈ இடத்தை என்டெ பேரில் எழுதிக் கேட்டா கூட தரும் அல்லே…” என்றான் கேலி நகையுடன்.
அதில் திகைத்து நின்றாள் அகமொழி.
தனக்குச் சீதனமாகக் கொடுக்க வேண்டுமென்பதே அவர் விருப்பம். அதையும் மீறி மீண்டும் இவன் சென்று குட்டையைக் குழப்பினால், எழுதியே கொடுத்து விடுவார்.
“ஷாக் ஆயோ? ஃபைன்! அங்கனே எதும் செய்யக் கூடாதுனு நினைச்சா, நீயே நின் வீட்ல என்னைக் கல்யாணம் செய்யான் ஓகே சொல்லிடு. ஞான் வந்து பேசியால், சேதாரம் ரொம்பவே அதிகமாய் இரிக்கும்!” என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
கிளாம்பிங்கை இடித்தாலும் மீண்டும் கட்டிக் கொள்வாள். ஆனால் இடமே இல்லையென்றால்?
அவள் கண்ணிமைக்க மறந்து நிற்பதை அரைநொடிக்கும் மேலாய் கண்டு களித்தவன், “ஒன் அவர் டைம் தராம், யோசிச்சு சொல்லு! ஞான் கேட்ட பதில் மாத்திரம் தன்னே வரணம்!” என மிரட்டி விட்டுச் செல்ல, சோர்வாய் தளர்ந்து அமரப் போனவளுக்கு நாற்காலி கீழே விழுந்ததே அப்போது தான் உறைத்தது.
‘ச்சே! இவனை மாதிரி ஒரு கேவலமானவனை நான் பார்த்ததே இல்ல’ முகம் எரிச்சலில் சுருங்கியது.
அதே எரிச்சலுடன் வீட்டிற்குச் செல்ல அங்கு வசந்தி வாசலிலேயே நின்றார். அன்று நகைக்கடையிலேயே தங்களது வீட்டு முகவரியை சுஜாதாவிடம் சொல்லி, “முடிஞ்சா நிச்சயத்துக்கு வாங்க!” என்றிருந்தார்.
இப்போதோ, “சுஜாதாம்மா வந்தாங்க!” என அவர் கூற,
சட்டென நின்றவள் “அவங்க ஏன் வந்தாங்க?” எனக் குழம்பினாள்.
“உனக்கும் அந்தப் பையனுக்கும் பேசி முடிக்கலாம்னு நினைக்கிறாங்க. நாங்க சரின்னு தேதி பார்க்கச் சொல்லிட்டோம்… இன்னைக்குச் சாயந்தரம் குடும்பத்தோட வந்து எது பக்கத்துல இருக்கோ அந்தத் தேதியைக் குறிச்சுடலாம்னு சொன்னாங்க. எங்க பேச்சை நீ மீற மாட்டன்னு நம்புறேன்…” என்றதில் அவளுக்கு முகம் கடுகடுத்தது.
‘அவன் அம்மாவையும் தூண்டி விட்டுத் தான் வந்திருக்கானா?’
இந்நேரம் அவன் வராது இருந்திருந்தால் நேரடியாகவே சுஜாதாவிடம் மறுத்திருப்பாள்.
இவன் தான், மறுக்காத வண்ணம் புயலை ஏற்படுத்திச் சென்று விட்டானே! அல்லது மறுக்கக் கூடாதென்று தான் இந்த ஆட்டமோ? விதியின் சுவாரஸ்யக் கண்ணாமூச்சி விளையாட்டை உணராதவள்,
மீண்டும் வெளியில் செல்லப்போக, “எங்க போற? அவங்க வந்துடப் போறாங்க…” என்றார் வசந்தி.
“ஒரு மணி நேரத்துல வந்திடுவேன். எத்தனைப் பேர் வர்றாங்கன்னு கேளுங்க. ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்க வேணாமா? வர்ற எல்லாருக்கும் நீங்க காபி டீ போட்டுட்டு இருந்தா, என் கல்யாணத்துக்குப் படுத்த படுக்கையா தான் இருக்கணும்.” என்று கோபத்தைக் கக்கி விட்டுச் சென்றாள்.
நேராக அவளது ஸ்கூட்டி ஹில்மிஸ்ட் ரிஸார்ட்டிற்குத் தான் சென்றது.
“சேட்டா பாய்… மாறி மாறி அடிச்சுக்குறீங்களே, எப்ப முடிச்சு வைப்பீங்க?” எனத் தீவிரமாக பிரணீத் கேட்கும்போதே கதவைப் புயல் வேகத்தில் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அகமொழி.
அவளைக் கண்டதும் திமிராய் தலை தூக்கியவன் எப்போதும் போல ஆராயும் பார்வையில் அவளைச் சோதிக்க,
பிரணீத்தோ, “வாமா… மின்னல்! அப்போ அப்போ வந்து ஒரு காட்டுக் காட்டிட்டுப் போறியே, இப்ப என்ன பிரச்சினை?” என்றான் நக்கலாக.
“ம்ம்ம்… உங்க ப்ரெண்டுக்கும் எனக்கும் தீர்க்கப்பட வேண்டிய கணக்கு எல்லாம் நிலுவைல இருக்கு. அதைச் சிலுவையில அறையத் தான் வந்திருக்கேன்.” பேச்சு அவனிடம் இருந்தாலும் பார்வை திமிராகப் படர்ந்தது அர்ஜித்தின் மீது.
“அடடா! இப்ப எதைச் சிலுவைல அறையப்போற?”
“உங்க பிரெண்டைத் தான். வாண்டடா தலையைக் குடுத்துக் கல்யாணம் எனும் நரகத்தில் சிக்கப் போறது அவரு தான.”
“அதான் அவன் கல்யாணம் நின்னுடுச்சே” பிரணீத் தலையைச் சொறிந்தான்.
“அதான் இப்ப திரும்ப நடக்கப் போகுதே!”
“ஹையோ, என்னமா குழப்புற?” என்றவனுக்கு ‘ஒண்ணுமே புரியலைங்க’ மொமெண்ட் தான்.
அவளது கூற்றில் அர்ஜித் அகனின் பார்வை தான் ஆராய்ச்சியில் இருந்து ஆக்கிரமிப்பில் தாவியது.
தன் மீது நழுவிய ஆடவனின் விழிகளில் கடுப்புற்றவள், “ப்ரோ… ‘யோவ் போயா வெளில’னு சொல்லற வரை வெய்ட் பண்ணாதீங்க.” என்றதும் பரிதாபமாக எழுந்த பிரணீத்,
“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாடா உனக்கு?” என்று நண்பனைப் பார்த்துக் கேட்க, “யோவ்!” என்று எகிறிக் கொண்டு வந்தவளிடம் இருந்து தப்பித்து ஓடி விட்டான்.
அவளோ அர்ஜித் அகனை ஒரு நொடிக்கும் அதிகமாக உறுத்து நோக்கி விட்டு, அவனது மேஜை மீது அமர்ந்து காலை எடுத்து அவன் மடி மீது வைத்தாள்.
ஆணவத்தின் உச்சம் அவளது முகத்தில் பிரதிபலித்தது.
அப்போது தான் அவனுக்காக வரவைக்கப்பட்ட சாண்ட்விச், சுடச் சுட மணம் கொடுக்க, அதில் இருந்த ஃபோர்க்கை நிதானமாக எடுத்தவள்,
“லுக் மிஸ்டர் மலையாளி… யார் எக்கேடு கெட்டுப் போனாலும் ஐ டோன்ட் கேர். எனக்கு என் பிசினஸ் தான் முக்கியம். என்னைக் கல்யாணம் பண்ணுனா, அந்த இடம் உன் பேருக்கு வரும் தான். ஆனா, உன்னைக் கல்யாணம் பண்ணனும்னா சில டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கு.” என்றாள் அழுத்தமாக.
“எந்தா? ஊருக்கு தான் புருஷன், பொண்டாட்டி. மற்றபடி நினக்கும் எனிக்கும் டச்சிங்ஸ் இருக்கக் கூடாதுன்னு உருட்டப் போறியா?”
“அப்படி உருட்டுனா மட்டும் நீ விட்டிடுவியா. உன் கேரக்டருக்கு அது செட் தான் ஆகுமா? பை தி வே, என் மனசு உனக்குத் தேவைப்படாத மாதிரி உன் மனசும் எனக்குத் தேவை இல்ல. ரெண்டு பேரும் சகிச்சுக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், நீ தொட்டதும் நான் ஒன்னும் கரைஞ்சுட மாட்டேன்.” எனக் கண்ணைச் சுருக்கிக் கர்வமாகக் கூறியவளை, தாடையில் இரட்டை விரல் பதித்துச் சுவாரஸ்யமாக ஏறிட்டான் அவன்.
“பட், அந்த இடம் என் அப்பா இருக்குறவரை அவர் பேர்ல தான் இருக்கணும். அங்க நான் பிசினஸ் செய்யத் தான் செய்வேன். உங்க மார்க்கெட்டிங்னால என் பிசினஸ் அடிபட்டது மாதிரி, நீங்களே எனக்கு ஃப்ரீ மார்க்கெட்டிங் செஞ்சு குடுக்கணும். இது ரூல் நம்பர் ஒன்!”
“அண்ட் ரூல் நம்பர் டூ!” என்று ஃபோர்க்கை அவன் தொடையில் வைத்து அழுத்தினாள்.
அவனோ அசையாது அதே திமிருடன் அமர்ந்திருக்க, “இதுக்கு முன்னாடி நீ எப்படி வேணாலும் இருந்திருக்கலாம். ஆனா, இனி… ஒழுக்கமா இருக்கணும். என் கண்ணுக்கும் காதுக்கும் ஏதாவது சம்பவம் வந்துச்சு…” என ஃபோர்க்கை இன்னும் கொஞ்சம் மேலே ஏற்றியவள், “சொருகிடுவேன்!” என்று விழிகளை ஏகத்துக்கும் உருட்டி மிரட்டினாள்.
கோபம் கொள்ள வேண்டிய ஆடவனின் அழுத்த இதழ்கள் ஏனோ ரசனையில் விரியத் தொடங்கியது.
“இது ரெண்டையும் நீ ஃபாலோ பண்ணுனா, நானும் எந்தப் பிரச்சினையும் பண்ணாம சமத்தா கல்யாணம் பண்ணிட்டு உன்னைச் சகிச்சுப்பேன்!” எனத் தோளைக் குலுக்கினாள்.
ஏதோ சொல்ல வந்தவன், பின் அவளை இன்னும் கொஞ்சம் ரசனை கூட்டி விழுங்கி விட்டு, “டீல்! என்னாலே நின்டெ பிஸினஸில் எந்தப் பிரச்சினையும் வரில்லா. அண்ட் மோர் ஓவர், எனிக்கு வேண்டியது வேண்டிய இடத்துல கிட்டியால், ஞான் எந்தினு தேவையில்லாதே தேவை இல்லாத இடத்துக்குப் போகான் போனது… ம்ம்?” எனப் புருவம் உயர்த்தி நக்கல் செய்ய அவள் முறைத்து வைத்தாள்.
“பண்றது பிளே பாய் தனம், இதுல பத்துப் பக்கத்துக்கு டயலாக் வேற…” என முணுமுணுத்தவள்,
“உன்னை நம்பலாம்ல! இல்ல, ரிசார்ட்கு வர வச்சு அசிங்கப்படுத்தின மாதிரி இதுலயும் அசிங்கப்படுத்த ஏதாவது வச்சிருக்கியா?” என சந்தேகமாகக் கேட்டாள்.
“விஸ்வாசம் இல்லெங்கில், ஒரு கிஸ் கொடுத்து நோக்கு. ஞான் நினக்கே நினக்கு மாத்திரம் உண்மையா இருக்கேனான்னு அறயாம்.” வெகு அசட்டையுடன் அவன் கேட்டதில், ஒரு கணம் திகைத்தவள் பின் உறுத்து விழித்தாள்.
“உனக்கு என்னப்பா, நீ பவுமானமா உக்காந்துட்டு எல்லாம் பேசுவ… உன் வீட்ல இருந்து எல்லாரும் வர்றதா சொன்னாங்க. நான் தான போய் எல்லாம் பண்ணனும்… இவருக்கு அப்படியே கிளுகிளுப்புக் கேட்குது!” என நொடித்தவள்,
அவன் வைத்திருந்த சாண்ட்விச்சை எடுத்து உண்டபடி, “அப்புறம் கல்யாணச் செலவு எல்லாம் நீயே பார்த்துக்கோ… என்கிட்ட பத்துப் பைசா இல்ல…” எனக் கையை விரித்து விட்டுக் கிளம்பி விட,
“காந்தாரி!” எனக் கடுகடுப்பாய் முணுமுணுத்த இதழ்களுக்கு எதிராய் ரசித்துச் சதி செய்தது அவன் நயனங்கள்.
இனி, கூடிப்போகும் ரசனைகளுக்கு நடுவில் ரகசியமாய் இதயங்களும் கூடுமோ?
அகன் வசமாவாள்
மேகா
Hi drs… Malayalam la padikka nallaarukkaa … Azhaga translate panni kuduthu agana inum sight adika vaikira பெருமை writer Latha baiju akka vaye serum😍 romba malyalam aa Iruku ubderstand aagalana solunga slang kammi panren. Natural feel kaaga tha apdiye potruken… 🥰

