
அத்தியாயம் 4
அந்தக் கேரளத்துக்காரன் சென்ற திசையைத் தீயாக முறைத்த அகமொழி, அருகில் நின்றிருந்த ரிஷானின் கையைப் பிடித்து மலை விளிம்பிற்கு இழுத்துச் செல்ல, “ஐயோ அம்மா…” என அலறினான் அவன்.
“அவன் என்னைக் கொலை பண்ணப் பார்க்கிறான். என்னைக் காப்பாத்தாம, பைத்தியக்காரின்னு பட்டமா குடுக்குற. சாவுடா!” எனக் கழுத்தைப் பிடித்தாள்.
“ஏய்! நான் காப்பாத்த தானடி செஞ்சேன். அதர் ஸ்டேட்ல வந்து நம்மளை பிசினஸ் செய்ய விட்டதே பெருசு. இதுல சேட்டன்களோட மல்லுக்கட்ட எல்லாம் நம்ம பாடி தாங்காது அகா… அதான் நேக்கா பேசி அவனை விட வச்சேன்.’ என்றதில், ரூஹி “அடியேய்! நீ அவனைத் தள்ளி விட்டுடாத. முதல்ல ரெண்டு பேரும் இந்தப் பக்கம் வாங்க. எனக்கு அடிவயிறுலாம் கலங்குது.’ என்றாள் திகிலாக.
கையில் அர்ஜித் அகன் எறிந்த பணம் வேறு தட்டுப்பட, அதனைக் கண்டு கோபம் தலைக்கேறியது அவளுக்கு.
“எவ்ளோ தைரியம் இருந்தா பணத்தைத் தூக்கி எறிவான்? பாஸ்டர்ட்…” என அரிசிப்பற்களை நறநறவெனக் கடித்தாள்.
“ஹையோ! ஒருத்தி கெட்ட வார்த்தை பேசி சாவடிக்கிறா… ஒருத்தி பழி வாங்கிச் சாவடிக்கிறா… இவளுங்ககிட்ட இருந்து எனக்குச் சாபவிமோசனம் குடுப்பா முருகா…” என மனமுருகி வேண்டிக்கொண்ட ரிஷானை இரு பெண்களும் ஒன்றாக மொத்தினர்.
இப்போது ரிஷானே காரை எடுத்திருக்க, மூவரும் மீண்டும் கிளாம்பிங் ஸ்டேக்குச் சென்றனர். காரணமின்றி இதயம் படபடவெனத் துடித்துக் கொண்டே இருந்தது அகமொழிக்கு. திடீரென அத்தனை உயரத்தில் தூக்கிக் காண்பித்து மிரட்டியதால் வந்த பயமென்று புரிந்தாலும், ஆத்திரமே முன்னின்றது.
ஒரு தோள்பட்டையால் நெற்றியில் பூத்த வியர்வையைத் துடைத்துக் கொள்ள முயன்றவள், தன்மீது சந்தன அத்தரின் மணம் வீசியதில் புருவம் சுருக்கினாள்.
‘என்ன, இவ்ளோ ஸ்ட்ராங் பெர்பியூம் ஸ்மெல்லா இருக்கு.’ என யோசித்தபடி மீண்டும் நன்றாக மூச்சை இழுக்க, அந்தச் சந்தனத்தின் வாசம் நாசி தீண்டி நெஞ்சில் தங்கியது.
அதன்பிறகே அந்தப் பெயர் தெரியாதவனின் சட்டையில் பூசி இருந்த வாசனைத் திரவியம் எனப் புரிய, முகத்தைச் சுருக்கினாள். “ரூஹி, நீ பார்த்துக்கோ. நான் வீடு வரை போயிட்டு வரேன்…” என்றபடி எரிச்சலுடன் தனது ஸ்கூட்டியில் வீட்டை நோக்கிச் சென்றாள் உடனடியாக உடையை மாற்றும் பொருட்டு.
முகம் கடுகடுவென இருந்தது அர்ஜித் அகனுக்கு.
சிவந்த நிறம் மேலும் சிவந்திருக்க, முன்னெற்றி முடிகளை அழுந்தக் கோதிக் கொண்டான்.
அந்நேரம் தன்மீது ஏதோ வித்தியாசமான நறுமணம் வர, கையை முகர்ந்து பார்த்தவன் தனது சட்டையையும் உயர்த்தி முகர்ந்தான்.
அவனது கூர்நாசியில் வெண்மல்லிகை கலந்த வெண்ணிலா பெர்பியூமின் நறுமணம் ஆழ்ந்த சுவாசமாக இறங்கியது.
‘இந்த பெர்பியூம் நான் போடலையே’ என ஒரு கணம் சிந்தித்த ஆடவனின் முகத்தில் கடும் எரிச்சல் பரவ, “ட்ரைவர், காரை வீட்டுக்குத் திருப்பு!” எனப் பணித்ததில், அடுத்த சில நிமிடங்களில் வீட்டை அடைந்தான்.
அந்நேரம் அன்விதா, முற்றத்தில் அமைத்திருந்த சிறு குளம் போன்ற அமைப்பில் பூக்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
சிவப்பு நிறத்தில் பூ போட்ட குர்தியில், வெகு கவனமாகப் பூக்களைக் கையாண்டவளின் விழிகள் வாசலைத் தழுவியது.
எப்போதும் வேலையாகச் சென்றால், இரவு தான் வீடு திரும்புவான் அர்ஜித். இன்று பகலிலேயே வந்ததில் அவளிடம் சிறு வியப்பு.
அண்ணியைக் கண்டு லேசாய் முறுவலித்தவன், மடமடவென மாடி ஏறி அறைக்குச் சென்று உடையை மாற்றி விட்டே நன்றாக மூச்சை இழுத்து விட்டான்.
வீட்டுப் பெரியவர்களும் கோவிலுக்குச் சென்றிருக்க, அவளே அர்ஜித்தின் அறைக்கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்தவன், “பரயு ஏடத்தி” (அண்ணி) எனப் புருவம் சுருக்க, அவனிடம் ஏதோ பேச வந்து பின் தயங்கியவளாக, “லன்ச் எடுத்து வைக்கவா அர்ஜி” எனக் கேட்டாள்.
அவனும் கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு, “ம்ம் செரி!” எனத் தலையசைக்க, அவளும் பெருமூச்சுடன் அடுக்களைக்குச் சென்றாள்.
அவனுக்கு வேண்டிய உணவை எடுத்து வைத்தவள் அருகில் நின்று பரிமாற, “அமையா வர லேட் ஆகுமோ?” என வினவினான்.
“ம்ம், 3.30 க்கு தான் முடியும்.”
“நான் இருந்து கூட்டிட்டு வரவா ஏடத்தி?” அவள் ஏதோ பேச வருவது புரிந்து அவனாகக் கேட்க, “இல்ல அர்ஜி… நானே கூப்பிட்டுப்பேன்!” என்றாள்.
இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான். ஆகினும், அனகாவிடம் இருந்த ஒட்டுதல், விளையாட்டுத்தனமெல்லாம் அன்விதாவிடம் இருந்ததில்லை.
உறவின் பெயரில் ஏற்பட்ட மரியாதையா, அல்லது விஷ்ணு காதலிக்கும்போதே “அவள் சென்சிடிவ்… அவள்கிட்ட விளையாட்டுக்குப் பேசுனா கூட சீரியஸா எடுத்துப்பா…” எனக் கடிந்து வைத்ததுனாலோ என்னவோ அர்ஜித் அவளிடம் அளவாகவே பேசிக் கொள்வான். அதுவும் வீட்டில் யாரும் இல்லாதபோது தான். இருக்கும்போது அவர்களே அவனுக்குத் தேவையானதைச் செய்து விடும்போது அன்விதாவிடம் பேசும் வாய்ப்பே இருந்ததில்லை.
அந்நேரம் அவனுக்கு அலைபேசி அழைப்பு வர, அத்தனை நேரம் இருந்த இறுக்கமெல்லாம் சட்டென மறைந்து போனது.
“பரயடா!”
—–
“வீட்டிலு…”
—–
“டா, நிஜமாவே வீட்ல தான்…” எனும்போதே அழைப்புத் துண்டிக்கப்பட, சில நிமிடங்களிலேயே “என்டே தோஸ்த்து எந்தா செய்யனது?” எனக் கேட்டபடி வீட்டினுள் நுழைந்தான் பிரணீத்.
அவனைக் கண்டு முகம் மலர்ந்த அர்ஜித் அகன், “ம்ம், உன்னை அடிக்கச் செருப்பைத் தேடுது.” என்றபடி வாசலில் போடப்பட்ட செருப்பை நோக்கிப் பாய,
“சேட்டா, ஐ ஆம் யுவர் பெஸ்டு பிரெண்டு…” எனப் பாவமாக உரைத்தவனிடம், “ஈ சேட்டனோட அடி வாங்கிப் பாருடா. ஒரு வாரம் இங்க வந்து தங்கலாம்னு கூப்பிட்டதுக்குப் பெருசா பிகு பண்ணிக்கிட்ட…” என முறைத்தான்.
“ஆல்ரெடி சென்னைல வேலை இருந்துச்சுல சேட்டா பாய்…” என உதட்டைப் பிதுக்கியவன், அர்ஜித் அகனின் காலேஜ்மேட்.
கிட்டத்தட்ட அவனது தொழிலில் அவனும் ஒரு பார்ட்னர். ஒன் ஆஃப் தி எம்.டி.
அர்ஜித், அகனைச் சரி செய்து திரும்பியவனை முறைத்தபடி நின்றாள் அன்விதா.
‘அய்யய்யோ! இவளை மறந்துட்டோமே…’ என நொந்தவன், “ஹாய் கேரளத்து மருமகளே… எந்தா பார்வையில ஒரே காரமாயி…” என மலையாளத்தைக் கொலை செய்ய,
அவனை முதுகில் சுள்ளென அடித்தாள்.
நீ தமிழ்லயே பேசுடா. கேட்க சகிக்கல! என் பொண்ணுக்கு பர்ஸ்ட் பர்த்டே அப்போ வந்தவன்… இப்ப அவள் யூகேஜியே போறா…”
“ஏன், ஸ்கூல்ல டொனேஷன் ஏதாச்சும் குடுக்கணுமா சிட்டு?” என வார, “டேய்ய்ய்!” என முறைத்து வைத்தாள்.
“ஹி ஹி… நோ கோபம். அதான் இப்ப வந்துட்டேனே. பாப்பா எங்க?” எனத் தேடினான்.
“ஸ்கூலுக்குப் போயிருக்கா ப்ரணீ… சாப்பாடு எடுத்து வைக்கட்டா?” என வினவ,
“வேணாம் சிட்டு. சாப்பிட்டுத் தான் வந்தேன்…” என்றான் மறுப்பாக.
“ஏடத்தி, நீங்க எடுத்து வைங்க. அவன் சாப்பிடுவான்.” என்றதில், “டேய், எனக்கு ஹோட்டல்ல பரோட்டாவும் பீப் கறியும் வாங்கித் தாடா!” என்றான் உரிமையாக.
“இதுக்குத் தான் நீ வந்தியா?” அன்விதா கடுப்பாகக் கேட்க, “அஃப்கோர்ஸ்!” எனத் தோளைக் குலுக்கியவனின் தலையில் நறுக்கெனக் கொட்டு வைத்தாள்.
பிரணீத், அர்ஜித் அகனுக்குக் கல்லூரி நண்பன் என்றால், அன்விதாவிற்குப் பள்ளிக்கால நண்பன்.
ஆகினும், ப்ரணீத்தின் நண்பி அவள் எனத் தமையனின் திருமணத்தின் போது தான் அர்ஜித்திற்கும் தெரிந்தது.
அப்படியும், பிரணீத்தினிடம் பேசும் அளவிற்கு அவளும் அர்ஜித்திடமோ, அல்லது வீட்டில் யாரிடமோ அத்தனை நெருக்கம் காட்டியது இல்லை.
அமைதியான பெண். பிரணீதனைக் கண்டால் மட்டும் அதிகமாக இரு வார்த்தை பேசுவாள். மற்றபடி அவளால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வந்ததில்லை என்ற போதிலும், அவளாக எந்த விஷயத்திலும் தலையிட்டதும் இல்லை.
“ஏடத்தி… நானும் இவனும் ஹோட்டல் போயிட்டு, அப்படியே பாப்பாவைக் கூட்டிட்டு வரோம்…” என அர்ஜித் எழுந்திட, அவனிடம் பேச வந்த விஷயம் நண்பனைப் பார்த்ததும் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது.
தலையை மட்டும் ஆட்டியவளிடம், “உனக்கு பரோட்டா வேணுமா சிட்டு?” எனக் கேட்டான் பிரணீத்.
“நான் லன்ச் சாப்பிட்டேன். நீ சாப்பிட்டு வா. ஸ்டே இங்க தான?” என வினவ,
“இல்ல… ரிசார்ட்ல தங்கிக்கிறேன். என் லக்கேஜ் எல்லாம் அங்க தான் இருக்கு.” என்றதும் அவள் முகம் வாடி விட்டது.
அதனைக் கவனித்த அர்ஜித் அகன், “ஏன்டா, இங்க இருக்கலாம்ல. ஏடத்திக்கும் பேச்சுத் துணை இருக்கும். இல்லைன்னா அவங்க வாயில இருந்து முத்து விழ வைக்கிறதே பெரிய விஷயமாயிருக்கும்.” என்று மறைமுகமாக வாரியதில், அன்விதா லேசாகப் புன்னகைத்தாள்.
அந்நேரம் அவளுக்கு விஷ்ணுவிடம் இருந்து அழைப்பு வர பரணீத் தான், “இவ இவள் ஆளோட போன்ல சம்சாரிக்கும் சேட்டா… இங்க நான் வந்து கபிள்ஸ் ஸ்பேஸைக் கெடுக்கவா… நம்ம ரிசார்ட்ல போய் நைட்டு சரக்கடிச்சு மட்டையாகிடலாம்…” என அவனை இழுத்துச் சென்றான்.
உணவகத்தில் உணவு அருந்திவிட்டு, அமையாவை அழைக்கப் பள்ளிக்கும் சென்றனர்.
“ஹை சித்தப்பா!” என அர்ஜித்தைக் கட்டிக்கொண்ட அமையா, “குட்டிச்சிட்டு!” என்று கையை நீட்டிய பிரணீத்திடமும் விழி விரித்துத் தாவிக் கொண்டாள்.
“சித்தப்பா, டாய்ஸ்!” அவனிடமும் உரிமையாய் கேட்டவளிடம், “உனக்கு சித்தப்பா ஒரு டாய்ஸ் கடையே கொண்டு வந்திருக்கேன் குட்டிச்சிட்டு…” என அவளைத் தூக்கிக்கொண்டு காரை நோக்கிச் செல்ல அர்ஜித் தலையாட்டிச் சிரித்துக் கொண்டான்.
அர்ஜித்தின் மூலம் வீடியோ அழைப்பில் பலமுறை பிரணீத்திடம் பேசி இருக்கிறாள். அவனையும் ப்ரணீ சித்தப்பா என்றே பழக்கப்பட்டிருந்தாள்.
சில முறைகள் அன்விதாவும் அவனிடம் பேசி விடுவாள். அதனாலேயே நேரில் அதிகம் பார்க்கவில்லை என்றாலும் பிரணீத்தினிடம் அமையாவிற்கு நெருக்கம் அதிகம்.
இங்கோ, வீடு திரும்பிய பெரியவர்களுக்கு நீரைக் கொணர்ந்தாள் அன்விதா.
“என்னமா, அமையாவைக் கூப்பிடப் போகலை?” கல்யாணி கேட்க, “அர்ஜி வந்தாரு முத்தச்சி. ப்ரணீயும் வந்திருக்கான். ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போயிருக்காங்க.” என்றதும் சுஜாதா, “சாப்பிட்டானா அன்வி?” என வினவினார்.
“ம்ம் எடுத்து வச்சேன் அம்மே.”
“செரி, அர்ஜியோட ஜாதகத்தைக் காட்டத் தான் ஜோசியரைப் பார்க்கப் போயிருந்தோம் அன்வி…” அவள் கேட்கவில்லை என்றாலும் மருமகளிடம் ஒப்பித்தார்.
“ஓ… கல்யாணத்துக்கா அம்மே?
“ஆமாமா. அவனுக்கும் வயசாகுதுல்ல.”
“அப்படியே ப்ரணீக்கும் பாருங்க அம்மே…” என்ற அன்விதாவிடம், கேசவன் நாயர் “அந்தப் பையனும் நம்ம முன்னாடி வராம போக்குக் காட்டுறானே. இந்தத் தடவை அவனையும் அமுக்கிடலாம்.” என்றதில், எப்போதும் போல சிறு முறுவல் அவளிடம்.
கல்யாணி, “ம்மா அன்வி, ப்ரணீ வீட்ல பேசி அவன் ஜாதகத்தை அனுப்பச் சொல்லு… அவனுக்கும் முடிச்சிடலாம்.” என்றதும், “சொல்றேன் முத்தச்சி…” என அடுக்களைக்கு நகர்ந்தாள்.
வெறும் பேச்சுக்கு என்றாலும், அன்விதா கேட்டதற்கிணங்க ப்ரணீத்திற்கும் பார்த்து விட வேண்டும் என்று குறித்துக் கொண்டனர் பெரியவர்கள்.
“யாரை முடிக்கப் போறீங்க?” எனக் கேட்டபடி உள்ளே நுழைந்தான் ப்ரணீத்.
அவனது கையில் அமையா வாகாக அமர்ந்திருக்க, “வாப்பா… இப்ப தான் வழி தெரிஞ்சுதா உனக்கு…” என முறைத்தாலும் ஆசி வாங்கக் காலில் விழுந்தவனை ஆசீர்வதிக்கவும் தவறவில்லை நால்வரும்.
பின் அமையாவிற்காக வாங்கிய விளையாட்டுப் பொருள்களை எல்லாம் கடை பரப்பினான்.
“டேய் லூசு… அவள் என்ன குழந்தையா? கிளுக்கு எல்லாம் வாங்கிட்டு வந்துருக்க…” அன்விதா திட்டினாள்.
“ஹி ஹி அவள் குழந்தையா இருக்கறப்ப வாங்குனது எடுத்துட்டு வர மறந்துட்டேன். நீ வேணும்னா செகண்ட் ஒன்னு இண்ட்ரடியூஸ் பண்ணு. அந்த பேபிக்கு யூஸ் பண்ணிக்கலாம்.” என்று கிண்டல் செய்தான்.
சிவக்க வேண்டியவள் தான். ஆனால் ஏனோ சிவப்பேறாது சிறு முறுவல் மட்டும் கொடுத்து விட்டு அடுக்களைக்குச் சென்றாள்.
“அவளே டெலிவரி அப்போ ரொம்பக் கஷ்டப்பட்டுட்டா… அவளைக் கேக்குறதுக்கு நீ கல்யாணம் பண்ணிட்டுக் குழந்தை பெத்துத் தரலாம்ல.” என்றார் சுஜாதா.
“ஆஹா, வயசு ஏற ஏற இந்தக் கல்யாணப் பேச்சு வேற என்னை ரவுண்டு கட்டுதே. மம்மி ஐ ஆம் ஜஸ்ட் 26. இப்பவேவா?”
“வேற எப்போ கல்யாணம் கட்டப் போற?” எனக் கேட்ட கோபால கிருஷ்ணனிடம் அசடு வழிந்தவன், “அர்ஜி கார்ல இருக்கான். அவசர வேலையாம். ஞான் விடைபெறுந்து…” என்று குனிந்து மரியாதையுடன் ஓடி விட்டான்.
அவனது சேட்டையில் பெரியவர்களின் முகத்திலும் சிரிப்புப் பரவியது. வாசலைத் தாண்டும்போதே அத்தனை நேரம் இருந்த குறும்பு முற்றிலும் மறைந்தது ப்ரணீத்திற்கு.
இதயம் முழுதும் சுமக்கும் வலி என்ன சிறியதா?
“ஹெலோ டார்லிங்!” குதூகலத்துடன் அனகாவின் குரல் கேட்க, ‘இவள்கிட்ட மாட்டக் கூடாதுன்னு நினைச்சோமே’ என நொந்த பிரணீத், “ஹாய் குட்டிச்சாத்தான்…” என இளித்து வைத்தான்.
அவன் தோள்பட்டையில் இடித்தவள், “என்ன அதிசயம், வீட்டுப்பக்கம் வரவே மாட்டேன்னு சொல்லிட்டுப் போன மாதிரி இருந்துச்சே.” எனக் கண்ணடித்தாள்.
அதில் முகம் இறுகியவன், “வாய மூடு! யார் காதுலயும் விழுந்துடப் போகுது.” எனக் கடிந்து விட்டு விறுவிறுவெனச் சென்றதில், “போடா டொமேட்டோ, என்கிட்ட சிக்காமலா போய்டுவ…” என நமுட்டு நகை புரிந்தாள்.
இரு நாள்கள் கடந்திருக்க, அடுத்த ஒரு மாதம் ப்ரீ – புக்கிங் ஆகியிருந்த விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அகமொழி.
அனைத்து வார விடுமுறை நாள்களிலும் மூன்று டென்டுமே புக் ஆகி இருந்ததில் அவளிடம் சிறு வெற்றி மிதப்பு.
ஆனால் சில நிமிடங்களில், ஒவ்வொன்றாய் கேன்சல் ஆகத் தொடங்க, அவளது நெற்றி மத்தியில் முடிச்சு விழுந்தது.
“ரிஷு!” விருந்தாளிகளுக்கு ஏதோ விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தவனை அழைத்தாள்.
“எக்ஸ்கியூஸ் மீ” என்றபடி அவளிடம் சென்றவன், “என்னடி?” என வினவ, “இதோ பாருடா, புக்கிங் எல்லாம் கேன்சல் ஆகுது…” எனக் காட்டினாள். சிறு பதற்றம் அவளிடம்.
“புக் ஆகுறது கேன்சல் ஆகுறது சகஜம் தான அகா?”
“ப்ச்! ஒன்னு ரெண்டு ஆனா பரவாயில்ல. இதோ பாரு, எல்லாமே கேன்சல் ஆகுது. எல்லாரும் ரீஃபண்ட் கேக்குறாங்க.” எனக் குழம்பினாள்.
“என்ன சொல்ற?” என அவனும் குழம்பிட அந்நேரம் தலைதெறிக்க அவர்களிடம் ஓடி வந்தாள் ரூஹி.
“அகா இங்க பாருடி இந்த வீடியோவை… அந்த இன்ஸ்டா செலிப்ரிட்டி நமக்குப் பெரிய ஆப்பு வச்சுட்டான்.” என அலைபேசியை நீட்ட, அதில் இரு நாள்களுக்கு முன்பு வந்த நிக்கி என்ற இன்ஸ்டா இன்ப்ளூயன்சரின் முகம் பிரதிபலித்தது.
“ஹாய் வியூவர்ஸ்… இன்னைக்கு நான் உங்ககிட்ட ஷேர் பண்ணப் போறது. என் லைஃப்லேயே ஒர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் குடுத்த ஒரு ஸ்பாட் பத்தி தான். அகவானா கிளாம்பிங் ஸ்டே. பேர் மட்டும் இல்ல, அங்க வியூவும் ரொம்ப அழகு! ஆனா இது ரெண்டு மட்டும் வச்சு இங்க ரிலாக்ஸ் பண்ணலாம்னு கிளம்புனீங்கன்னா, நீங்க ரொம்பவே தப்புப் பண்றீங்கன்னு தான் நான் சொல்லுவேன்.
டாய்லெட்ல இருந்து பெட் வரை எல்லாமே ரொம்ப டிஸ்கஸ்டிங் பீல். பெட்ஷீட், பில்லோ கவர் எல்லாம் துவைச்சு எவ்ளோ நாள் ஆகுதுன்னு தெரியல. அதைப் பத்திக் கேட்டா ரொம்ப ரூடா பதில் சொல்றாங்க மேனேஜ்மென்ட்ல. எனக்கு இன்னொரு சந்தேகமும் வந்துச்சு. அங்க இருந்த கண்ணாடில வீடியோ கேமரா செட் பண்ணிருப்பாங்கன்னு ஒரு டவுட். அதை க்ளியர் பண்ணிக்க அந்த கிளாம்பிங் ஸ்டே ஓனர் அகமொழிகிட்ட கேட்டா, அவங்க அதுக்கான சரியான ரெஸ்பான்ஸ் பண்ணல. நீங்க ப்ரைவேட்டா கபிளா ஸ்பென்ட் பண்ணனும்னு நினைச்சா, புத்திசாலித்தனமா இந்த இடத்தை அவாய்ட் பண்ணிடுங்க. மூணு நாள் பிளான் பண்ணித் தான் வந்தேன். ஆனா என்னால ஒரு நாளே இருக்க முடியல. அதனால அடுத்ததா நான் போனது, ஹில்மிஸ்ட் ரிசார்ட் தான்.
உண்மையைச் சொல்லனும்னா, காஸ்ட்லி தான்! ஆனா லைப்டைம் எக்ஸ்பீரியன்சை நீங்க தாராளமா கேதர் பண்ணலாம். என்ஜாய் பண்ணனும்னு வந்துட்டு, சீப்பான ஏதோ ஒரு டென்ட்ல தங்காம, சேஃப்டியையும் முக்கியமா நினைச்சு ட்ரிப்பை என்ஜாய் பண்ணுங்க வியூவர்ஸ்…” என அவன் வாய்க்கு வந்ததைப் பேசி ரிவியூ கொடுத்திருக்க, அது படுவைரலாக இன்ஸ்டாவைச் சுற்றி வந்ததில் அகமொழி சிலையாகி விட்டாள்.
அகன் வசமாவாள்
மேகா!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
15
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


யூடியூப் 😡😡