Loading

தப்பாதான் தெரியும்
நம்ம ரூட்டு
சரியான பயலா கெட் அவுட்டு
கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு
புரியாத வரைக்கும்
அப்பீட்டு…

மாரி பட பாடலை ஹெட் போனில் கேட்டு நடனமாடியபடியே, வீட்டிற்கு மாப் போட்டுக்கொண்டிருந்தாள் அகமொழி.

“அகா…” வராண்டாவில் அமர்ந்து கீரையை உருவியபடி மகளை சத்தம் கொடுத்தார் வசந்தி.

இரண்டு மூன்று அழைப்பிற்கு பிறகும் அவளிடம் பதிலின்றி போக, பாஸ்கர் சிரித்தார்.

“அவள் காதுல ஹெட்போனை மாட்டிட்டு ஏதாவது வேலை பார்த்துட்டு இருப்பா வசந்தி… நீ எவ்ளோ கத்துனாலும் கேட்காது.”

“வீட்ல இருக்குற நேரமாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ல. எதையாச்சு க்ளீன் பண்ணுறேன்னு இறங்கிடுறா. இதுல வேலை பாக்குறப்ப டேன்ஸ் வேற. ஹெட் போனை மாட்டுனா தானா கை வேலை பார்க்க ஆரம்பிக்குதும்மான்னு உருட்டுவா…” என நக்கல் செய்ததில், பாஸ்கர் சத்தமாகவே சிரித்தார்.

“நைட்டு வந்து ‘தூங்க போங்க தூங்க போங்க’ன்னு பாசமா அனுப்பி விடுறாளே அது எதுக்குன்னு நினைக்கிற. அப்ப தான் எந்த டிஸ்டர்பன்ஸ்ஸும் இல்லாம பாட்டு கேட்டுட்டே வேலை பார்க்க முடியும். நீ இருந்தா பேசிட்டே இருப்ப…” பாஸ்கர் வார,

“ஆமா நேத்தும் அப்படி தான் அனுப்பி விட பார்த்தா. நான் நகரலையே. ஒருவழியா கல்யாணத்துக்கு தேதி பார்க்க சொல்லிட்டா. அதுவரை நிம்மதி…” என்றார் பெருமூச்சுடன்.

அங்கு அகமொழியோ, சத்தமாக பாட ஆரம்பித்தாள்.

குனியும் போது
குத்தும் ஊருக்குள்ள
நிமிர்ந்தேதான்
நடக்கணும் வழியே இல்லே
துணை தேடி
வினை தேடும் உலகத்துல
தனியாவே இருந்தாலும்
தப்பே இல்ல…

என்றபடி ஆடிக்கொண்டே மாப் போட, இந்த வரிகளை கேட்ட வசந்தி “வேற பாட்டே கிடைக்கலையா இவளுக்கு… இருங்க பார்த்துட்டு வரேன்” என்று மகளிடம் சென்றார்.

தனியா வந்தேன் தனியா போவேன்
சொந்தம் பந்தம் தேவையில்லை
தேனா பேசி தானா வந்தா
வீணா போகும் ஏண்டா தொல்லை

என உருகி பாடியவளை முதுகில் அடித்தார்.

“ஹையோ…” என்றபடி ஹெட் போனை கழற்றியவள் “என்னமா?” என்றிட,

“எவ்ளோ நேரம் கூப்ட்டுட்டு இருக்கேன். இது என்னடி பாட்டு. சொந்தம் பந்தம் தேவையில்லைனு” என்று முறைத்தார்.

“அட அது சும்மா பாட்டுமா. கெத்தா இருக்குல்ல…” எனக் கண்சிமிட்ட, வசந்தியின் முறைப்பு தொடர்ந்தது.

“சரி சரி எதுக்கு கூப்பிட்டீங்க?”

“உனக்கு ரசத்துக்கு தொட்டுக்க கீரை மட்டும் போதுமா… உருளைக்கிழங்கு ஃப்ரை பண்ணவான்னு கேட்க கூப்பிட்டேன்”

“ஈஈ… வெறும் கீரையை மனுஷன் சாப்பிடுவானா?” என அவர் நாடியைப் பிடித்து கொஞ்சியவள், “ஃப்ரை ப்ளீஸ்” என்றிட, அதில் சிரித்து விட்டவர், “இந்த நாக்கு ஒரு வேளை கூட சப்புன்னு எதையும் சாப்பிடாதுல…” எனக் கன்னம் கிள்ளினாலும், “முட்டையும் அவிச்சு ஃப்ரை பண்றேன்” என்றபடி அடுக்களை நோக்கி சென்றார்.

“வேணாம்மா. ஏதாச்சு ஒன்னு செய்ங்க. எல்லா வேலையும் இழுக்காதீங்க. அந்த கீரையை காலைல தான் வாங்குனீங்களா. நைட்டே வாங்கிருந்தா க்ளீன் பண்ணி குடுத்துருப்பேன்ல…” என அதட்டியபடி வேலையைத் தொடர்ந்தவளின் கால்கள் மீண்டும் நடனத்தைத் தொடங்கி இருக்க, ரிஷான் அழைத்தான்.

“ஏய் எங்கடி இருக்க. பேங்க் மேனேஜரை பார்க்க போகணும்ல…” என்றதுமே மணியைப் பார்த்தவள், “வந்துட்டேன் வந்துட்டேன் ஒரு ஹாஃப் ஹவர்” என்றபடி வேகமாக வேலையை முடித்துக் கிளம்பினாள்.

நேராக அகவானா க்ளாம்ப்சிங் ஸ்டேக்கு சென்றவள், அங்கு ஒருமுறை அனைத்தையும் சரி செய்து விட்டு, விருந்தாளிகளுக்கு டூரிஸ்ட் கைட் பற்றிய விளக்கங்களும் கூறினாள்.

பின், “ரூஹி இவங்களுக்கு ஃபுட் அரேஞ்ச் பண்ணிடு… நீங்க மெனு சொல்லுங்க சார். ஒன் அவர்ல டெலிவரி பண்ணிடுவாங்க” என்ற நேரம், “ஹலோ மேம்” என ஒரு ஆடவன் வந்து நின்றான்.

“எஸ் சொல்லுங்க…”

“ஹாய் மேம். நான் இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்” எனும்போதே ரூஹி “ஹாய் சார் உங்க ரீல்ஸ் எல்லாம் பார்த்திருக்கேன்” என உற்சாகமாக கை கொடுக்க, அவனும் புன்னகைத்தான்.

“இவர் நிக்கி அகா. இன்ஸ்ட்டால செம்ம ஃபேமஸ். வ்லாக்கும் பண்றாரு” எனும்போதே அந்த நிக்கி என்பவன், “இன்னைக்கு இங்க ஸ்டே பண்ணி வ்லாக் எடுக்கலாம்னு இருக்கேன் மேம். அவைலபில் இருக்கா” என்றான்.

அகமொழியும் “இருக்கு சார். வீக்டேன்றதுனால ப்ராப்ளம் இல்ல. ரெண்டு டென்ட்ல ஆள் இருக்காங்க. நீங்க மூணாவது டென்ட் எடுத்துக்கோங்க. அங்க இருந்து பார்த்தா இன்னுமே வியூ நல்லாருக்கும்.” என்றாள் மரியாதையாக.

“டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாதா மேம்” நிக்கி சிரிக்க, “உங்களுக்கு இல்லாததா சார்… கண்டிப்பா குடுத்துடலாம்” என அகமொழியும் மரியாதை நிமித்தம் பேசினாள்.

பின், மூவரும் கிளம்பி வங்கிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தனர். ரிஷான் சில மாதங்களுக்கு முன்பு தான் கார் வாங்கியிருக்க, அதிலேயே தான் மூவரும் பயணிப்பர். அகமொழி கார் ஓட்டிக்கொண்டிருக்க, முன்னால் ரிஷானும் பின்னால் ரூஹியும் அமர்ந்திருந்தனர்.

“காலைல அப்பாட்ட பேசுனேன் அகா…” ரிஷான் ஆரம்பித்தான்.

“அங்கிள் என்ன சொன்னாங்கடா?”

“இந்த மாசமே ஒரு நல்ல நாளா பார்த்து வர்றோம்னு சொன்னாங்க நிச்சயம் பண்ண…” என்றான் அவளை ரசித்தபடி.

அவளுக்கும் கன்னங்கள் சிவக்க, “டன்… எத்தனை பேர் வர்றாங்கன்னு முன்னாடியே சொல்ல சொல்லுடா. இங்க அரேஞ்சு பண்ணிடலாம்… வீட்லயே ஓகே தான. இல்ல நிறைய பேர் வருவாங்களா?” எனக் கேட்டதில்,

“முதல்ல அப்பா, அம்மா, அத்தை மாமா மட்டும் தான் வர்றேன்னு சொன்னாங்க. கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்டுக்கலாம். என் சைடும் ரிலேஷன் கம்மி தான். அப்பறம் ரூஹியோட பேரண்ட்ஸ். வேற யாரும் இல்ல அகா…” என்றான்.

“ம்ம் ஓகேடா. என் சைடும் பெருசா ரிலேட்டிவ்ஸ் இல்ல. இருக்குற ஒன்னு ரெண்டு பேரை கல்யாணத்துக்கு கூப்பிட்டா போதும். அப்பறம், அங்கிள் ஆண்ட்டிகிட்ட பேசுனியா, கல்யாணத்துக்கு அப்பறம் ரெண்டு பேரும் இங்கயே வரட்டும்னு. எப்படியும் நம்ம வேலையும் இங்கன்னு ஆகிடுச்சு. தேனில ஏன் அவங்க தனியா இருக்கணும்?”

“சொல்லிட்டேன்டி. அப்பாவுக்கு இன்னும் மூணு மாசத்துல ரிட்டயர்மெண்ட்டாம். அந்த ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சுட்டு வரேன்னு சொன்னாங்க. நம்ம வீட்டுக்கிட்டயே வீடு பார்த்துடலாம். சோ அங்கிள் ஆன்ட்டியையும் பார்த்துக்கலாம்…” என்று திட்டமிட,

“ம்ம்ம் அப்பா, அம்மா தனியா மேனேஜ் பண்றது கஷ்டம். அங்கிள் ஆண்டியும் இங்க வந்துட்டா, நாலு பேரையும் நான் பாத்துப்பேன்” எனக் கண்சிமிட்டினாள்.

“அப்போ என்னை?” அவள் புறம் சாய்ந்தவனை தள்ளி விட்டவள், “உன்னை நீ தான் பார்த்துக்கணும்” என நாக்கைத் துருக்கினாள்.

“அடிப்பாவி…” என வாயில் கை வைத்ததில் அகமொழி கலகலவென சிரித்தாள்.

“ஹெலோ இங்க நானும் இருக்கேன்” ரூஹி இருவரையும் முறைத்திட, அவளை ஒரு பெண்ணாகவே மதிக்கவில்லை அவன்.

அகமொழியின் புன்னகையை ரசித்தவன், “ஆஃப்டர் மேரேஜ் நானும் உனக்கு வீட்ல ஹெல்ப் பண்றேன்” என்றதில் இன்னும் அதிகமாக சிரித்தாள்.

“நீ? ஹெல்ப்பு? வீட்டுக்கு போனதும் கவுந்தடிச்சு தூங்கிடுவ. இதுல டஸ்ட் அலர்ஜி வேற. இவர் எனக்கு ஹெல்ப் பண்ணுவாராம்.”

“நான் என்ன பண்ண, எனக்கு பாத்திரம் கழுவக் கூட தெரியல… இருந்தாலும் உனக்கு ஹெல்ப் பண்ண ட்ரை பண்றேன்… உன்னை உள்ளங்கைல தாங்கிடுவேன்” என வசனம் பேச, “முதல்ல அவளை நீ ரெண்டு கையால தூக்கு. அப்பறம் உள்ளங்கைல தாங்கலாம்” என்று நக்கல் செய்தாள் ரூஹி.

“கரடி” தோழியை முறைத்த ரிஷானை கண்டு முறுவலித்த அகமொழி, “உனக்கு என்ன வருதோ அதை மட்டும் பண்ணு. இப்ப எல்லாம் பொண்ணுங்க வெளியிலையும் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. சோ, வீட்டுக்குள்ள பார்க்குற வேலையை ஹஸ்பண்ட் ஷேர் பண்ணிக்கணும்னு ஒரு மைண்ட்செட் ஆட்டோமேடிக்கா வந்துடுச்சு. கரெக்ட் தான்.

ஆனா பொண்ணுங்களுக்கு இயற்கையாவே வீட்டை மேனேஜ் பண்ற கலை ஜீன்ல கலந்துருக்கு. பசங்களுக்கு வெளில போய் என்ன வேலை குடுத்தாலும் சூப்பரா செய்வாங்க. இதே வீட்ல துடைப்பத்தை எடுத்து கூட்ட கூட கை நடுங்கும்.

சொல்லப்போனா, பசங்களுக்கு எப்பவுமே வீட்டுக்கு வந்ததும் நம்மளை யாராச்சு கேர் பண்ணிக்கனும்னு ஒரு மைண்ட்செட் அவங்க ஜீன்லேயே கலந்துருக்கு. ஒரு பொண்ணால வீட்டையும் வேலையையும் பாலன்ஸ்ஸா மெயின்டெய்ன் பண்ண முடியும்.

இதே பையனால… ம்ம்ஹும் கண்டிப்பா முடியாது. சிலர் தலைக்கனத்துல ஹெல்ப் பண்ண மாட்டாங்க அது வேற. பட் சில பசங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணும். ஆனா, அவங்களுக்கு எப்ப ஹெல்ப் பண்ணனும் எதுக்கு ஹெல்ப் பண்ணணும்ன்ற தெளிவே இருக்காது. கல்யாணத்துக்கு அப்பறம் வர்ற பெரிய மிஸாண்டர்ஸ்டாங்டிங் என்ன தெரியுமா? அதிகபட்ச எதிர்பார்ப்பு.

தனக்கு வர போற ஹஸ்பண்ட் நம்மளை வீட்டு வேலை கூட செய்ய விடாம உள்ளங்கைல வச்சு தாங்கனும்னு பொண்ணோட எதிர்பார்ப்பு.

பையனுக்கு, நமக்கு வர போற பொண்ணு தன்னைக் குழந்தை மாதிரி பார்த்துக்கணும்னு எதிர்பார்ப்பு.

இது ரெண்டும் க்ளாஷ் ஆகும்போது அங்க ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கும் சொல்லு?” என்றதும் ரூஹி இடமறித்தாள்.

“இப்ப பொண்ணுங்களும் பசங்களுக்கு ஈகுவலா ஃபைனான்ஷியல் ஸ்டெபிலிட்டியோட இருக்காங்க. சோ, வீட்லயும் ஈகுவல் ரைட்ஸ் எதிர்பார்க்குறதுல என்ன தப்பு இருக்கு?”

“எஸ் இந்த ஈக்குவல் ரைட்ஸ் தான் இங்க பிரச்சினையே. பையனுக்கு ஈகுவலா பொண்ணுங்க மாறிட்டாங்க. இந்த உதாரணமே தப்புனு தான் நான் சொல்லுவேன் ரூஹி. அதுக்கு முன்னாடி மட்டும் எந்த விதத்துல பொண்ணுங்க ஈகுவலா இல்லாம போனாங்க?” எனக் கேட்டதில் இருவருமே விழித்தனர்.

“இங்க ஃபைனான்ஷியல் ஸ்டேட்டஸ் மட்டுமே ஒரு பொண்ணை ஈக்குவலா காட்டுதுன்னா தட்ஸ் இஸ் வெரி ராங். அந்த காலத்துல ஆம்பளைங்க வெளில வேலை பார்த்து பணம் கொண்டு வருவாங்க. பொண்ணுங்க, வீட்டுல அதை எப்படி சேவ் பண்ணனும் எப்படி ஸ்பென்ட் பண்ணனும்னு யோசிக்கிறதோட குடும்பத்தை விரிவுபடுத்த பல வலிகளையும் அனுபவிப்பாங்க. குழந்தை பெத்துக்குற ஒன்னு போதுமே ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்க ஈகுவல்ன்னு நிரூபிக்க.”

“அதுல கூட பசங்களுக்கு வேலை ஈஸியா முடிஞ்சுடும். நாம தான கஷ்டப்பட்டு பெத்துக்கணும்.” ரூஹி உதடு சுளிக்க கண்ணாடி வழியே அவளை முறைத்தவனுக்கு ஐயோ என்றிருந்தது.

“ஹா… பட் பசங்களோட பொறுப்பு பெருசு ரூஹி. இந்த பிசினஸ் ஸ்டார்ட் பண்ணும்போது ரிஷு அப்பா என்ன சொன்னாரு… உன்னோட பியூச்சர் இதுல அடங்கி இருக்கு. லாஸ் ஆச்சுன்னா உனக்கு எக்ஸ்பீரியன்ஸும் லாஸ் ஆகும்னு ஒரு ப்ரெஷர் குடுத்தாரு.

என் அப்பா, ஒருவேளை லாஸ் ஆச்சுன்னா கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு சொன்னாரு. எனக்கு ஒரு பேக் அப் ஆப்ஷன் வச்சுருந்தாரு என் அப்பா. ஆனா ரிஷுவை பொறுத்தவரை இதுல அவன் வின் பண்ணியே ஆகணும். கேரியர்னு ஒன்னை கிரியேட் பண்ணியே ஆகணும். நமக்கு இது உரிமை. பசங்களுக்கு இது கடமைடி. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதுக்கான ப்ரஷரும் பசங்களுக்கு ஜாஸ்தி. இதை அக்ஸ்பெக்ட் பண்ணிக்க தான் வேணும்.

இதே ப்ரெஷர தான் அவங்க காலம் முழுக்க அனுபவிக்கனும். அவங்களோட பணத்தை வைஃப் செலவு பண்ண உரிமை இருக்கு. ஏன்னா குடுத்தே ஆகணும்னு அவங்க கடமை. இதே பொண்ணுங்க சம்பாரிக்கிறதை ஹஸ்பண்ட்கோ வீட்டு செலவுக்கோ எடுப்போமா. பிகாஸ் மை மணி. மை விஷ். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்திப்பேனாம், உனக்கு வீட்ல சேவகம் வேற செய்யணுமா? இந்த ஒரு வார்த்தை போதும், ரெண்டு பேருக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப்பை உடைக்க.

எல்லாரையும் சொல்லல. சிலர் இதுல எக்செப்ஷன். பட், ஜெனெரலா ஒரு மேரேஜ் டிவோர்ஸ்கு போகுறதுக்கு காரணமே ஃபேக் பெமினிசமும். ஈகோவும் தான்.

ஃபேமிலின்ற ஒரு அமைப்பே ஒரு பொண்ணால தான் நிறைவாகுது ரூஹி. எந்த பேச்சுலரையும் வீட்டு விஷேஷத்துக்கோ, ஒரு பூஜைக்கோ கூப்புடுறது இல்ல. இதே அவன் ஒரு குடும்பஸ்தனாகிட்டா அவனை எல்லா விசேஷத்துக்கும் கூப்பிடுவாங்க. ஏன்னா அவனுக்கு கிடைக்கிற மதிப்பு அந்தப் பொண்ணால.

அதே பொண்ணு அவனோட வீட்ல, ஒரு பார்ட்டா மாறி அதை தன்னோட சொந்த வீடா நினைக்க ஆரம்பிச்சு, வீட்டையும் கவனிச்சு தன்னோட சொந்தக்கால்லயும் நின்னா, நிக்க முடிஞ்சா அவளுக்கு கிடைக்கிற மதிப்பே தனி. அவளுக்கு கிடைக்கிற மதிப்பு அந்தப் பையனால.

இங்க பிஃப்டி பிஃப்டி எல்லாம் வேலைக்கு ஆகாது ரூஹி. சில நேரங்கள்ல, 70 / 30 தான் ஒர்கவுட் ஆகும். இங்க ஒவ்வொருத்தருக்கும் தனி தனி இண்டிவிஜுவாலிட்டி இருக்கும்போது, ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்குள்ள மட்டும் எல்லா விஷயத்துலயுமே ஈக்குவலிட்டி இருக்கணும்னு நினைக்கிறது நாட் ஃபேர்” என்றவளை இருவரும் நொந்து பார்த்திருந்தனர்.

“இப்ப நீ என்னை வீட்டு வேலை பாருன்னு சொல்றியா பார்க்காதன்னு சொல்றியா” பரிதாபமாகக் கேட்டான் அவன்.

அதில் வாய்விட்டு சிரித்த அகமொழி, “உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னா, பண்ண பிடித்தம் இருந்தா பண்ணு. பட் அத ஒரு ப்ரெஷர் குடுத்து, சும்மா இம்ப்ரெஸ் பண்றதுக்காக ஒரு நாலு நாளைக்கு ஹெல்ப் பண்ணிட்டு அப்பறம் அதுவே கன்டினியூ ஆகும்போது, ‘ச்சே வீட்டுக்கு வந்தா நிம்மதியே இல்ல. எப்ப தான் ரெஸ்ட் எடுக்குறது’ன்னு ஒரு கட்டத்துல இரிட்டேட் ஆகாத.

அப்படி உனக்கு வீட்டு வேலைல ஷேர் பண்ணுனா இரிட்டேட் ஆகும்னா பண்ணாத. என்ன வேணுமோ உரிமையா கேளு. அதுக்காக நான் வேலை முடிச்சு வீட்டுக்கு வந்ததும் நொய் நொய்னு வச்சா மூஞ்சியை பேத்துருவேன். இன்கேஸ் நான் உங்கிட்ட ஏதாச்சு வேலை சொல்லி செய்யலைன்னாலும் செஞ்சுடுவேன். மத்தபடி எல்லா விஷயத்துக்கும் ப்ரெஷர் எடுத்துக்காத. முக்கியமா என்னை அப்படியே பூ போல பார்த்துப்பேன்னு உருட்டாத” என்றவளைக் கண்டு பேந்த பேந்த விழித்தான்.

ரூஹியோ “டேய் உனக்கு கண்டிப்பா இவள் தான் வேணுமா. ஃபெமினிசம் பேசுறவ கூட கூட வாழ்ந்துடலாம். இவள் கூட கஷ்டம்டா…” எனக் கிண்டல் செய்ததில், ரிஷானும் தீவிரமாய் சிந்திப்பது போல பாவனை செய்ய, அவன் தலையில் தட்டிய அகமொழி “என்னடா யோசிக்கிற?” என்று பொங்கினாள்.

“ரூஹி சொல்லி இதுவரை நான் எதுவுமே கேட்டது இல்ல. ஒரு தடவை அவள் ஃப்ரெண்ட்ஷிப்பை மதிக்கலாம்னு பார்க்குறேன்” என்றவனை அகமொழி படபடவென அடிக்க, ரூஹி வயிறு குலுங்கச் சிரித்தாள்.

———

ஹில்மிஸ்ட் ரிசார்ட்… பணக்காரர்களின் சொர்க்கம். பணத்தைத் தண்ணீராய் செலவழித்து உள்ளுக்குள்ளேயே அத்தனை வசதிகளையும் கொண்டு செழித்திருந்தது.

எம். டி அறையில் மடிக்கணினியில் வேலையாக இருந்த அர்ஜித் அகனின் முன் நிழலாடியது.

மேனேஜர் ஜெகன், கையில் கோப்புடன் நின்றிருந்தார்.

“பறயூ ஜெகன்” நிமிர்ந்து பாராமலே கேட்டவனிடம், “இது அடுத்த ப்ராஜக்ட்டோட ஃபைல் சாரே” என்றதும் “வச்சுட்டுப் போங்க…” என்றான்.

“நிங்ஙள் இடத்தை நோக்கணம்னு பறஞ்சல்லோ சாரே?”

“ஹ்ம்ம்…” எனக் கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “ஆப்டர்நூன்கு சேஷம் போகாம்” என்று விட்டு மீண்டும் மடிக்கணினியினுள் புதைந்தான்.

மேனேஜர் சென்றதும் காபி ட்ரேயுடன் உள்ளே நுழைந்தாள் நயனா.

ரிசார்ட் யூனிபார்மான, ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தவள் “சார் காபி” என அவன் அருகில் செல்லப்போக, “டேபிள்ல வச்சோ” என்றான்.

“ஞான் கப்ல ஒழிக்கட்டோ (ஊத்தட்டுமா) சார்?”அவள் இனிமை பொங்க கேட்க, அவளை அமைதியாய் நிமிர்ந்து பார்த்து நெருப்பை உமிழ்ந்தவன் “பறஞ்சது காதுல வீணல்லோ?”என லேசாக குரலை உயர்த்தியதில், அவளுக்கு கைகள் நடுங்கிவிட்டது. அவசரமாக அங்கிருந்து வெளியில் ஓடியவள் வரவேற்பறைக்குச் சென்று தான் நின்றாள்.

“ச்சே… அவன் பிடி தரூல்லடி ரேஷ்மா” என எரிச்சலுற,

“விடுடி, நைட்டுக்கு எப்படியும் நம்ம சேவை தேவை தான?” எனக் கண் சிமிட்டிய ரேஷ்மாவை முறைத்தவள், “அவனை கல்யாணம் சேய்து செட்டில் ஆகணம். அதுக்கு வழி பறயடி” என எரிந்து விழுக, “நீ ஸ்வப்னம் கண்டுண்டு நில்லு” என்று திட்டி விட்டுச் சென்றாள் ரேஷ்மா.

மதியம் தாண்டிய வேளையில் தனது காரில் புதிதாகக் கட்டப்போகும் ரிசார்ட்டின் இடத்தை நோக்கிச் சென்றான்.

ஓட்டுநர் கார் ஓட்ட, அவன் பின்னால் அமர்ந்து, இயற்கையுடன் ஒன்றி இருந்தான். அந்நேரம் அர்ஜித்தின் வாட்சப்பில் வந்து விழுந்தது சுஜாதாவின் குறுஞ்செய்தி.

சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, “இதில ஒரு பொண்ணை செலக்ட் சேய்யூ கண்ணா… அம்மே பாவமல்லோ…” என சோக ஸ்மைலியுடன் கூறியிருக்க, அதுவரை அழுத்தம் நிறைந்த ஆடவனின் இதழ்கள் புன்னகையைத் தத்தெடுத்தது.

“என்னை ஒற்றையான் ராஜாவா வாழ விடக்கூடாதுன்னு தீர்மானிச்சோ?” அவன் பதில் அனுப்பியதில் அவருக்கும் புன்னகை எழுந்தது.

“ஈ ராஜாவுக்கு ஒரு ராணி வேணமெல்லோ?” என ஒரு இதய வடிவத்தை இணைத்து அனுப்ப, அதில் அழகாய் இதழ் விரித்தவன், “ஷெரி நீங்களே செலக்ட் சேய்யூ” என்றதுமே அவனுக்கு அழைத்து விட்டார். அதே நேரம் காரும் கீறிச்சிட்டு நிறுத்தப்பட்டிருக்க, முன்னால் எட்டிப்பார்த்தபடியே அழைப்பை ஏற்றான்.

“அர்ஜி… ஸத்யமாயிட்டு ஞானே செலக்ட் சேய்யட்டோ?”

“ஆமாமா… என்னை செலக்ட் சேய்யான் பறஞ்சா, ஞான் கண்ணு சரியில்லா, காது சரியில்லானு ரிஜெக்ட் சேய்துகொண்டு தான் இருப்பேன்…”

இங்கோ, சாலை வளைவில் தவறாக காரைத் திருப்பிய ஓட்டுனரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிக்கொண்டிருந்தாள் அகமொழி.

மலைப்பாதையின் ஆபத்தான வளைவு அது.

மேலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த காரைச் சுதாரிப்போடு ஓட்டிக் கொண்டிருந்தாள் அகமொழி. தன் பாதையில் மிகச் சரியாகவே வந்துகொண்டிருந்தவளின் விழிகளில், வளைவை ஒட்டி மேலே ஏறி வந்த அந்தக் கருப்பு நிற ஆடம்பரக் கார் தென்பட்டது.

அதே விநாடி, அந்த ஆடம்பரக் காரின் டிரைவர் செய்த ஒரு சிறிய தவறு அங்கே பெரிய பதற்றத்தை உருவாக்கியது. ஏதோ ஒரு குறுஞ்செய்தி வந்ததில் லேசாய் கவனம் பிசிறிட, ஓட்டுநர் அவனது சாலையில் இருந்து சற்றே தள்ளி அடுத்த லேனில் வளைத்து திருப்ப, அதனைக் கண்டு கொண்ட அகமொழி,
நொடிப்பொழுதில் சாதுரியமாகச் யோசித்தவள், தன் காரை அவர்களின் பாதைக்குக் குறுக்காகத் திருப்பினாள்.

ஆனால் விதியின் சதியோ என்னவோ… எதிரிலேயே ஒரு லாரியும் வந்திருக்க, அந்த டிரைவர் பயந்து மீண்டும் தனது காரை வளைத்து தனது லேனிற்கு திருப்ப முயல,

“டமார்!” என்ற உராய்வுச் சத்தத்துடன் இரு கார்களும் உரசி நின்றுபோயின.

“இடியட் இப்படி தான் ஏறி வருவியா. ஸ்லோப்ல சட்டுனு பிரேக் போட முடியுமா ஸ்டுப்பிட்…” அகமொழி கடிய, ஓட்டுனரோ அர்ஜித் மீதிருந்த பயத்தில், “நீ தான்மா தப்பா வந்நது. உன் பாதைல போக வேண்டியது தான? முதல்ல உனக்கு லைசன்ஸ் உண்டோ? பெண்ணுங்ஙளே அரைகுறையா கார் ஓட்ட கத்துக்கிட்டு, அடுத்தவங்களை தப்பு பறயுந்நது…” என்றிட அகமொழிக்கு வந்ததே கோபம்.

இங்கு சுஜாதா நச்சரித்தார். “பக்ஷே உனக்கு எங்கனெ வேணும்னு பறயூ… அதுக்கு ஏத்த மாதிரி நோக்காம்…”

“ம்ம்ம்ம்… எனக்கு ஈ வளவளன்னு அதிகம் சம்சரிக்கருது. (பேசக்கூடாது)”

“அப்போ ஊமையாயிட்டு வேணோ?” சுஜாதா அதிர, “ம்மா…” எனப் பல்லைக்கடித்தான்.

“ஐ மீன், ஈ ஃபேக் ஃபெமினிசம் சம்சாரிச்சுட்டு… ஆணினும் பெண்ணும் சமம், ஞான் துணி துவைச்சா நீ காயப்போடணும்னு சம்சாரத்தில் மாத்ரம் ஃபெமினிசம் பறயுன்ன பெண்ணு வேண்டா. ஸ்ட்ராங் பெர்சனாலிட்டியா உண்டாகணும் (இருக்கணும்). எதுக்கெடுத்தாலும் வம்பு உண்டாக்கருது (வளர்க்க கூடாது). இண்டிபெண்டண்ட்டா இருக்கலாம், தப்பில்லா… பட் ஃபேமிலின்னு வந்நால், ஃபேமிலி கேர்ள்ளா மாறணம். சம்சாரத்தில் ஒரு டீசன்ஸி உண்டாகணம்.” எனும்போதே இன்னும் கார் எடுக்கப்படாததில் ஜன்னலை திறந்த நேரம்,

“பெரிய பு****டுங்கி மாதிரி பேசாத. பொண்ணுங்க கார் ஓட்டுனா உனக்கு ஏன் வலிக்குது. உன்னை விட நல்லா ஓட்டுறோம்னு குத்துதாக்கும். காரையும் ஸ்க்ராட்ச் பண்ணிட்டு, இஷ்ட ம****யிருக்கு பேசுற…” என்றவளின் கூற்றில், அர்ஜித் முகத்தை சுளித்தான்.

அவளின் பொறுமை பறந்திருக்க ரிஷானும் ரூஹியும் ஆளுக்கொரு புறம் அவளை அமைதிப்படுத்த மன்றாடினர்.

விருட்டென காரில் இருந்து இறங்கிய அர்ஜித் அகன், அவளது கார் தவறான பாதையில் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, “ஹே மைண்ட் யுவர் ஒர்ட்ஸ்…” என்று கர்ஜித்தான்.

திடீரென ஒருவன் தன்னை விட உயரமாக வந்து நின்றதில், அகமொழி “என் வொர்ட்ஸ எனக்கு மைண்ட் பண்ணிக்கத் தெரியும் மிஸ்டர்…” எனக் காரசாரமாகக் கூற, “வாட் ஹேப்பண்ட்” என்று ஓட்டுனரை திரும்பி முறைத்தான் அர்ஜித் அகன்.

“ஈ பெண்ணு ராங் சைட்ல இறங்ஙிட்டு நம்மளை பறயுன்னு சார்” என மாற்றி பேசிட,

“டேய்… வாயை உடைச்சுடுவேன். உன்னால கார்ல செம்ம அடி. செய்றதையும் செஞ்சுட்டு பழி போடுறியா? யூ பிட்ச்!” என அடுத்த கெட்ட வார்த்தையை உதிர்க்க,

“ஏய்… ஆரூடே வாயை ஆரா உடைக்குறது? ஓவரா சம்சாரிச்சா மலையில இருந்து தள்ளி விட்டுடும்…” என்றான் உறுமலாக.

“தள்ளி விடுவியா? விடுடா பார்க்கலாம்…” என்றதில் அர்ஜித் அகனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அவளைக் குண்டு கட்டாகத் தூக்கியவன், சாலை ஓரத்தில் நின்று பள்ளத்தை நோக்கி அவளைத் தூக்கி எறியப் போக, இதனை முற்றிலும் எதிர்பாராத அகமொழிக்கு பயப்பந்து தொண்டையில் வந்து சிக்கி நின்றது.

“டேய் என்னடா பண்ற? பைத்தியக்காரா!”

அவள் தமிழ் எனப் புரிந்ததும், “சும்மா பறயும்னு நினைச்சியோ? ஸத்யமாயிட்டு போட்டுட்டு போயிரும்… எலும்பு கூட பாக்கி உண்டாகில்லா…” எனப் பற்களை கடித்ததில், அதிர்ந்திருந்த ரிஷானும் வேகமாக ஓடிச்சென்று ,

“சார் சார் தயவு செஞ்சு அவளை விடுங்க. அவளுக்கு கொஞ்சம் மூளை வளர்ச்சி கம்மி. சாரி சார் நாங்க தான் தப்பா வந்துட்டோம்…” என்று கெஞ்சாத குறையாக பேசினான்.

“மெண்டல் டிஸார்டர் பேஷண்ட்டை எல்லாம் இனி கார் ஓட்ட விட்டால்… கார் அப்பளம் போலே நொறுங்கிப்போகும்…” என மிரட்டியபிறகே அவளை இறக்கியவன், பர்சில் இருந்து பணத்தை தூக்கி அவள் மீது எறிந்து விட்டு திரும்பிப் பாராமல் காரில் ஏறி பறந்து விட்டான்.

எதிர்பார்ப்புகளின் பிம்பம் ஒன்றுதான்… ஆனால் மோதிக்கொண்ட வடிவங்கள் தான் வேறு!

வார்த்தைகளில் அனல் மூட்டிய இரு வேறு உலகங்கள், பந்தம் எனும் மாயத்தில் வீழ்ந்து எப்படி இணையப் போகிறது?

அகன் வசமாவாள்!
தொடரும்!

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
16
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. மொழி நிரம்ப சரியாக சொன்னாள்