Loading

திமிர்-22

 

 

 

வளைகாப்பிற்கு வந்திருந்த, உறவினர்களும், விருந்தினர்களும் கிளம்பும் வரை எதையும் பேச முடியாது, காத்திருக்க வேண்டிய கட்டாயம், நாச்சியப்பன் குடும்பத்திற்கு இருந்தது.

 

 

 

“நம்ம வீட்டுப் பொண்ணைக் காணோம்! இப்படி இவிங்க வீட்டில் வந்து உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்க வேண்டியதாய் இருக்கு. இதெல்லாம் நமக்கு தேவையா? இதுக்கெல்லாம் காரணம் நீங்கதேன். நீங்க கண்டவனையும் நம்பி நம்ம பொண்ணை அனுப்பினதுதேன் எல்லாத்துக்கும் காரணம்!” எனக் கோபமாய் பொரிந்து தள்ளினான் போஸ்பாண்டி.

 

 

 

“என்னத்துக்குடா இப்படி கத்துறே? அரசி மயன் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. எம் மவளுக்கு எதுவும் ஆகாது. அதுக்காக நான் இப்படியே உட்கார்ந்திருக்கணும்ன்னு சொல்ல வரலை.நாமளும் தேடுறதுக்கு ஆளை அனுப்பியிருக்கோம். அவங்க பக்கமும் தேடுறாங்க. அவங்க வந்தவிங்களை வழியனுப்புற வரைக்கும், நாம அமைதியாகத் தானே இருந்தாகனும்? ” என நாச்சியப்பனின் பேச்சில் இருந்த நியாயம் புரிந்தாலும், உடன் பிறந்தவளைக் காணாது அண்ணன்மார் மூவரின் மனதும் பதைபதைத்தது.

 

 

 

 

“தேடுறதுக்கு ஆளை அனுப்பியாச்சுன்னு இங்கணையே, இந்தக் கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துட்டு உட்காரச் சொல்றீகளா? நம்ம வீட்டுப் பிள்ளையை நாமதேன் தேடணும். உங்க அக்கா மயன் மேலே உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இல்லை. நெஞ்சை நிமிர்த்தி, இன்னார் மயன்தேன் நானுன்னு சொல்ல தைரியமில்லாதவனைத்தேன் நீங்க நம்புறீகளாக்கும்? இங்கணையே, வந்தவிங்க வாயைப் பார்த்துட்டு உட்காருங்க! உங்க அக்கா வகை வகையா வளைகாப்பு சாப்பாடு போடுவாங்க, சாப்பிட்டுப்புட்டு வாங்க! நாங்க கிளம்புறோம்!” எனக் கோபமாய் பேசியபடி போஸ்பாண்டி எழுந்து நிற்கவும், துடிவேல் அழகர் அவன் முன்னால் வந்து நிற்கவுமே சரியாக இருந்தது.

 

 

 

“இந்தா இப்போ என்னத்துக்கு என் முன்னாடி வந்து நிற்கிறியான்? இவிங்க வீட்டுக்குள்ளே உட்கார்ந்திருக்கோம்ன்னு இவிங்க சொல்றதைக் கேட்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை.!” என எங்கோ பார்த்தபடி போஸ்பாண்டி,

 

 

 

“இந்தாருங்க மாமா! மாமான்னு கூப்பிடலாம்ன்னு நினைக்கிறேன். என் தம்பி வீரா, உங்க ஊருக்கு வந்தது தெரிஞ்சதிலிருந்தே, வர்ணாவை எங்க வீட்டு மருமகளாத்தேன் பார்க்கிறோம். இன்னைக்குக் கூட, உங்க மாடு ஆகாரம் எதுவும் உண்ணாமல் கிடக்கு, நாங்க போய் பார்த்துட்டு வாரோம்ன்னு கிளம்பினாங்க! அம்மாதேன், உங்களையும் குடும்பத்தோட அழைச்சுட்டு வந்தால், என்ன ஏதுன்னு பேசி முடிச்சுப்புடலாம்ன்னு பார்த்தாங்க! ஆனால் இப்படி ஆகிப் போச்சு. நான் விசாரிச்சுப் பார்த்துட்டேன், வீராவோட ஃபோன் சிக்னல், கடைசியாய், அம்மாப்பட்டிக்கு பக்கத்தில் இருக்கிற காட்டுப் பகுதியைத்தேன் காட்டுது. கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்கிடாதீங்க, உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி இருக்காங்களா?” என துடிவேல் அழகர் கேட்ட கேள்வியில், நாச்சியப்பனோடு சேர்ந்து நால்வரும், அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.

தன் தங்கையை மதுரையிலிருந்து அழைத்துப் போய்விடும், எண்ணத்தில் மட்டுமே இருந்த தமையன்மார்கள் மூவரும், தற்காலிகமாய் பசுபதியை மறந்துப் போயிருந்தனர். போஸ்பாண்டி மற்றும் அவனின் உடன் பிறந்தவர்கள் இருவரின் மனம் முழுதும், அரசி வீட்டினர் மீதானக் கோபத்தில் இருந்ததால், அப்போதைக்கு அவர்கள் பசுபதியை மறந்ததென்னவோ நிஜம். தங்களின் உடன் பிறந்தவளை, மதுரையிலிருந்து அழைத்துக் கொண்டு போய் பாதுகாப்பாய் தங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என யோசித்தார்களே ஒழிய, இப்படியொன்று நடக்குமென துளியும் அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

 

 

 

“நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க என்னடான்னா பேயறைஞ்ச மாதிரி நிற்கிறீங்க? என்ன சங்கதின்னு சொன்னால்தேன் என்ன செய்யலாம்ன்னு பார்க்க முடியும்.!” என கொஞ்சம் சத்தமாய் அழகர் கேட்க,

 

 

 

“பசுபதி!” என எதிரில் நின்ற நால்வரின் உதடுகளும், தன்னிச்சையாய் உச்சரித்தது.

‘இது யாரு புது கேரக்டரு?’ தனக்குள் யோசித்தபடியே, நெற்றி சுருக்கினான் துடிவேல் அழகர்.

 

 

 

“ப்பா! அம்மாப்பட்டிக்கு பக்கத்தில்தேன் ஃபோன் சிக்னல் இருக்குன்னா நாம வேகமாய் பிடிச்சிடலாம். நம்ம ஆளுங்களை காட்டுப் பக்கமா தேடச் சொல்லுங்க! நாமளும் கிளம்புவோம் வாங்க!” பசுபதியின் பெயர் தன் மனதில் தோன்றிய மாத்திரத்திலே, போஸ்பாண்டியின் உடலும் மனமும் ஒருநொடி பதறித்தான் போனது. இங்க நின்று வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதில் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்தவன், தந்தையையும் உடன் பிறந்தவர்களையும் அவசரப்படுத்தினான்.

 

 

 

“இரு போஸூ! அவசரப்படாதே! என் தம்பியையும்தேன் காணோம். எங்கப் பக்கமிருந்தும், ஆட்களைக் கூட்டிட்டு நானும் வாரேன்.!”

 

 

“இன்னும் எம்புட்டு நேரத்திற்கு நாங்க இங்கண உட்கார்ந்திருக்கணும்? எங்க தங்கச்சியை எப்படி கண்டுபிடிக்கணும் அப்படின்னு எங்களுக்குத் தெரியும். உங்க உதவியும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்.!” 

 

 

 

என அவசரமாய் மறுத்தவன், தன் தம்பிகளையும் அழைத்துக் கொண்டு விடுவிடுவென வெளியேறியிருந்தான்.

கோபமாய் வெளியேறும், தன் மகன்களைப் பார்த்தபடியே நிலைகுலைந்து நின்றார் நாச்சியப்பன். தான் தவமிருந்து பெற்ற ஒற்றைப் பெண்ணின் நிலையை நினைத்து, கண்கள் கலங்க ஆரம்பித்தது. தான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு அவரைக் கொல்லாமல் கொன்றது. தன் மகளோடு சேர்த்து வீரபத்ரனும் மாட்டிக் கொண்டானே, என்ற தவிப்புடன், தன் உடன் பிறவா சகோதரியின் மூத்த மகனை ஏறிட்டுப் பார்த்தார் நாச்சியப்பன்.

 

 

 

“என்னைய மன்னிச்சுரு அழகரு! இப்போ நடக்கிற எல்லாத்துக்கும் நான்தேன் காரணம். நான் கொஞ்சம் சுயநலமா யோசிச்சுட்டேன் அழகரு. எம் மவளைப் பத்தி மட்டுமே யோசிச்சுப்புட்டு, வீராவைப் பத்தி யோசிக்க மறந்துட்டேன். இம்புட்டுக்கும் காரணமே என் சுயநலம் மட்டுந்தேன்..! என்னை மன்னிச்சுரு அழகரு!” என நாச்சியப்பன் கையெடுத்துக் கும்பிட, வந்தவர்கள் அனைவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு, அவசரமாய் ஓடிவந்த அரசி, வெடுக்கென நாச்சியப்பனின் கரத்தை தட்டிவிட்டார்.

 

 

 

“என்னதேன் நினைச்சுட்டு இருக்கிற நீ.? வர்ணாவும் என் வீட்டுப் பிள்ளைதேன். என்னமோ மூணாவது மனுஷன் மாதிரி கையெடுத்துக் கும்பிடுற? எம் மயன் வீராவும், அழகரும் இருக்கிறவரை, நீ எதைப் பத்தியும் யோசிக்க வேணாம். என் மயனுங்க பார்த்துப்பானுங்க! வர்ணா நல்லபடியா நம்மக்கிட்டே வந்து சேருவா! இன்னொன்னையும் நல்லா நினைப்பில் வச்சிக்கோ, வர்ணாவுக்கு என்ன நடந்திருந்தாலும், அவ எப்படி வந்தாலும் அவ எம் மருமவதேன். புரியுதா?” அழுத்தமாய் அரசி நாச்சியப்பனைப் பார்த்துக் கேட்க, 

 

 

 

“உனக்கு அந்த பசுபதியைப் பத்தி தெரியாது அரசி. அவனைப் பத்தி தெரிஞ்சால் நீ இப்படியெல்லாம் பேச மாட்டே!” எனத் தொண்டை அடைக்கப் பேசியவரை குழப்பமாய் அரசி பார்க்க, நாச்சியப்பனின் வார்த்தைகளின் வழியே பசுபதியின் கடந்தகாலம் இருவரின் கண்களுக்குள்ளும் விரிந்தது.

 

 

*****

 

 

நான்காவது மகவாய் மூன்று சகோதரர்களின் பின் வந்து பிறந்த மேகவர்ணா தான் பிறந்த வீட்டில் என்னதான் மகாராணியாய் வளர்ந்தாலும், மற்றப் பிள்ளைகளைப் போல், அவளுக்கு, தோழிகளோ, நட்பு வட்டமோ கிடையாது. அது ஏனோ தெரியவில்லை, இயல்பாகவே தனித்து இருக்கப் பழகிக் கொண்டாள். அப்படியே, தோழியோ, நண்பனோ கிடைத்தாலும் கூட, அவளுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே “உங்க அம்மா நீ பொறந்ததுமே செத்துப் போயிருச்சா?” என்ற கேள்வி கட்டாயமாய் அவள் செவிகளை முட்டும். அதற்காகவே தன் வீட்டினர் தவிர, மற்றவரிடம் எட்ட நின்று பேசுவதற்கு பழகிக் கொண்டாள். ஒவ்வொரு முறை, அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் போதும், தான் பிறந்தது மட்டும்தான் தன் அன்னையின் இறப்பிற்கு காரணம் என்ற குற்றவுணர்வு கொல்லாமல் கொல்லும்.

 

 

 

“ஏம்ப்பா! நான் பிறக்கலைன்னா அம்மா உசுரோட இருந்திருப்பாங்க தானே?”

 

 

 

“நான் பிறந்துதேன் அம்மாவைக் கொன்னுட்டேனா?”

 

 

 

“போஸண்ணே! அம்மா எப்படி இருக்கும்? அம்மா வாசனை உனக்குத் தெரியுமா? நான் பொறந்தப்போ அம்மா என்னை கையில் தூக்கிச்சா?” என்ற கேள்விகளை அவள் தொடந்து கேட்டுக் கொண்டே இருக்க,

 

 

 

“இந்தாரு வர்ணா! பொழுதுக்கும் உங்க ஆத்தாளைப் பத்தியே கேட்டுட்டு கிடக்காதே! ஒருநேரம் போல், ஒரு நேரம் அப்பா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன். என்கிட்டே மட்டுமில்லை, உன் அண்ணேங்க கிட்டேயும் இதைப் பத்தி கேட்கவே கூடாது!” எனக் கண்டிப்பாய் சொல்லியிருந்தார் நாச்சியப்பன்.

 

 

 

ஏற்கனவே மனைவியின் இறப்பிற்கு, தான் தான் காரணம் என்ற குற்றவுணர்வில் இருந்தவரின் மனதை, மகளின் ஒவ்வொரு கேள்வியும், ரம்பமாய் அறுக்க, கோபத்தில் கத்திவிட்டார் தான். ஆனால் அது மகளின் மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இத்தனை வருடங்களில் முதன்முறையாய் தந்தையின் கோபம் அவளைப் பாதித்தது. தாயின் மறைவிற்கு தான் மட்டுமே காரணம் என்ற ஆழமான காயத்தையும் அவள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. வெறும் எட்டு வயதேயான சிறு பெண்ணிற்கு, தந்தையின் கோபம் என்ன விதமான புரிதலை ஏற்படுத்தியிருக்கப் போகிறது?. தன் மீது தவறு இருக்கப் போய்தானே கோபப்படுகிறார் என்ற புரிதலுடன் ஓட்டுக்குள் நத்தையாய் சுருங்கிக் கொண்டாள் பெண்.

 

 

 

 

துறுதுறுப்பை தொலைத்துவிட்டு, மௌனமாய் மாறிப் போன பெண்ணைக் கவனிக்க, வீட்டில் யாருக்கும் நேரமிருக்கவில்லை. பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத நிலையில், அண்ணன்கள் மூவரும், தொழிலைப் பழகிக் கொண்டிருக்க, ஒற்றைத் தங்கையுடன் பேசுவதற்குக் கூட அவர்களுக்கு நேரமில்லாமல் போனது. வீட்டில் அத்தனை வேலையாட்கள் இருந்தாலும் கூட, தன்னைச் சூழ்ந்திருக்கும் தனிமையைத் தாங்க முடியாமல் மட்டுமே பள்ளிக்குச் சென்றாள் மேகவர்ணா.

 

 

 

 

இப்படியே அவளின் தனிமைத் தவத்தில் சில வருடங்கள் கடந்திருந்தது. ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மேகவர்ணாவிற்கு வயது பத்து. அன்று அதிகாலையிலேயே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. எதிரில் வருவோர் கூடத் தெரியாத அளவிற்கு மழை. அந்த மழைநாளின் அதிகாலைப் பொழுதில், இடிச் சத்தம் கேட்டு பயந்து விழித்த மேகவர்ணா, வீட்டில் ஒருவரையும் காணாது, கதவைத் திறந்துக் கொண்டு வாசலை நோக்கி வந்தாள். அவள் கதவைத் திறந்த மாத்திரத்தில், கண்களைக் கூசச் செய்யும் ஒளி அவள் முகத்தில் விழுந்தது. கண்களை பயத்தில் இறுக்கி மூடிக் கொண்டாள் அவள். சோவென இரைந்துக் கொண்டிருக்கும் மழைக்கு நடுவே கண்ணைக் கூசச் செய்யும் வெளிச்சம் மின்னலாய் இருக்குமோ? என அஞ்சி நடுங்கியது, மேகவர்ணாவின் பிஞ்சு உள்ளம்.

ஆனால் அவள் சந்தேகத்திற்கு மாறாய், தங்களின் வீட்டு வாசலில் மகிழுந்து உறுமலுடன் நிற்கும் சத்தம் கேட்க, மெதுவாய், சிப்பி இமைகளை விரித்து எதிரே நோக்கினாள். மகிழுந்திலிருந்து இறங்கி, மழையில் நனைந்தபடியே அவள் தந்தை நாச்சியப்பன் நடந்து வருவது தெரிந்தது. சரியாகப் புலப்படாத வெளிச்சத்தில் தன் தந்தையுடன் நடந்து வரும் உருவம், யாரென அவளால் கணிக்க முடியவில்லை. ஆனாலும் உற்றுப் பார்த்து யாரெனெ விபரம் அறிய முயன்றாள் மேகவர்ணா.

 

 

 

 

“மயிலு! என்னத்துக்கு இந்நேரத்தில் இங்கண நிற்கிற? மழை அடிச்சு ஊத்திக்கிட்டு கெடக்கு. இன்னைக்கு பள்ளிக்கூடமெல்லாம் போக வேணாம். போய் படு ராசாத்தி!” என்ற தந்தையின் குரலில் நிமிர்ந்தவள், தன் எதிரே வந்து நின்ற அந்த உருவத்தைப் பார்த்தாள். மகிழுந்தின் முன் விளக்கு வழி கசிந்து அவள் முகத்தை ஸ்பரிசித்துக் கொண்டிருந்த வெளிச்சத்தை மறைத்தபடி, அவனின் நிழல் இவள் பாதி முகத்தில் பதிய நின்றான் அவன். முகம் மறைத்து நிழலாய் நின்ற அவன் தான் பசுபதி என்பதை மேகவர்ணா அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை.

 

 

 

 

எவனோ ஒரு புதியவன் வந்திருக்கிறான். யாரென்று தெரியவுமில்லை. கேட்டால் சொல்வதற்கு ஆளுமில்லை. அதோடு கூட, தங்கள் வீட்டிலிருந்த விருந்தினர் அறையில் அவன் தங்க வைக்கப் பட்டிருந்ததும், மேகவர்ணாவிற்குப் புதிதாக இருந்தது.

 

 

 

“யாராய் இருக்கும்? ஏன் நம்ம வீட்டில் இருக்கணும்? அப்பாவுக்கு தெரிஞ்சவிங்களா இருக்குமோ?” ஆயிரம் கேள்விகள் அவளின் குட்டி மூளைக்குள். யாரெனத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அவள் விழிகளில்.

 

 

“யா.. யார் நீ? நீ என்னத்துக்கு எங்க வீட்டில் வந்து தங்கியிருக்கிற? இனிமே இங்கணதேன் இருப்பியா?” அறையிலிருந்து வெளியே வந்தவனை, வழிமறித்துக் கேட்டிருந்தாள் மேகவர்ணா.

 

 

 

“சொன்னால் தான் வழி விடுவியா?” லேசாய் அரும்பியிருந்த, மீசையோடு இதழ்களும் சேர்ந்து புன்னகைக்கக் கேட்டான் பசுபதி.

 

 

 

 

 

“ஆமா! , ஏன்னா இது எங்க வீடு! முன்ன பின்னே தெரியாதவங்களை எப்படி வீட்டுக்குள்ளே விட முடியும்?” தலையையும் கைகளையும், ஆட்டி ஆட்டி அபிநயம் பிடித்தாள் அவள்.

 

 

 

 

“ம்ம்ம் என்ன சொல்றது? உனக்கு கிடைச்ச புது ஃப்ரெண்ட்ன்னு வச்சிக்கோயேன்.!”எனப் பதில் சொன்னான் பசுபதி.

 

 

 

“ஃப்ரெண்டா? நீ இம்புட்டு வளர்த்தியா இருக்கே? நான் குட்டியா இருக்கேன். நாம ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்களே?” கவலை தோய்ந்தக் குரலில் பதில் சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

“அதெல்லாம் நம்புவாங்க! நீ வேணும்ன்னா யார்க்கிட்டேயாவது கேட்டுப் பாரேன்!” எனை அவன் சொல்ல, தனக்குப் பின்னால் ஏதோ செய்துக் கொண்டிருந்த தன் தந்தையிடம்,

 

 

 

“ஏம்ப்பா! இது.. இவன் எனக்கு ஃப்ரெண்டா?” எனக் கேட்டாள்.

 

 

 

 

“உனக்கு இவனைத் தெரியலையா மயிலு! உன் மாமன் மயன் பசுபதி! உங்க அம்மாவுக்குக் கூடப் பொறந்த அண்ணே மயன். இவனைத் தெரியலையா? நம்ம ஊர் திருவிழாவுக்கு முன்னே வருவானே? அது சரி, மீசையெல்லாம் முளைச்சு பெரிய ஆளாய் மாறிட்டானே அதேன் அடையாளம் தெரியலையா இருக்கும்!” என நாச்சியப்பன் சொல்ல, திருதிருவென முழித்தபடி நின்றாள் மேகவர்ணா.

 

 

 

அவனையே பார்த்தபடி அசையாமல் சில நொடிகள் நின்றவள்,

 

 

 

“நீ எத்தனாப்பு படிக்கிறே?” எனக் கேட்டாள்.

 

 

 

“பத்தாம் வகுப்பு!”

 

 

 

“ஆத்தி! நீ அம்புட்டு பெரிய பையனா? நான் அஞ்சாம்கிளஸ்தேன் படிக்கிறேன்.!” தயங்கியபடி தள்ளி நின்றாள் மேகவர்ணா.

 

 

 

“ஏய்! நான் எவ்வளவு படிச்சாலும், உனக்கு ஃப்ரெண்ட் தான்.!”

 

 

 

“நிஜமா?” சந்தேகம் தேங்கிய கண்களுடன் கேட்டாள் மேகவர்ணா.

 

 

 

“சத்தியமா!”

 

 

 

“அப்போ என் கூட வெளாட வருவியா?”

 

 

 

“வரேனே!”

 

 

 

“வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுப்பியா?”

 

 

 

“ம்ம்ம்!”

 

 

 

“எனக்கு இந்த இங்லீஷ் மட்டும் வரவே மாட்டேங்குது அதுவும் சொல்லிக் கொடுக்கணும்!”

 

 

 

“வேற என்ன சொல்லிக் கொடுக்கனும் வர்ணாவுக்கு?”

 

 

 

“வேற அம்புட்டுதேன். நான் கூப்பிடும் போதெல்லாம் விளையாட வரணும்!”

இப்படி ஏற்பட்ட அறிமுகம் தான், மேகவர்ணா மற்றும் பசுபதியின் நட்பிற்குக் காரணமானது.

 

 

 

 

“நீ ஏன் இங்கேயே இருக்க? உன்னைய உங்க அப்பா அம்மாவெல்லாம் தேட மாட்டாங்களா?” எனக் கேட்டாள் மேகவர்ணா.

 

 

 

 

“இந்தால் தானே தேட..” என அவன் சொன்ன பதிலில் மேகவர்ணாவின் மனம், அவனுக்காய் பரிதாபப்பட்டது.

 

 

 

 

‘ச்சே! என்னைய மாதிரியே அவனுக்கும் அம்மா இல்லை. எனக்காச்சும் அப்பா இருக்கார். இவன் ரொம்பப் பாவம்!’ மனதிற்குள் வருந்தினாள்.

 

 

“எனக்குமே அம்மா இல்லை தெரியுமா? பரவாயில்லை விடு பசுபதி, நாம ரெண்டுபேரும்தேன் ஃப்ரெண்ட்ஸ் தானே? நான் உனக்காக இருக்கேன். நீ எனக்காக இருக்க!” என விவரம் புரியா வயதில் மேகவர்ணா உதித்த வார்த்தைகள், பதின்ம வயதில் இருந்த பசுபதியின் மனதில் வேறுவிதமாய் பதிந்திருந்தது.

இப்படியே தெளிந்த நீரோடை போல் சென்றுக் கொண்டிருந்த மேகவர்ணாவின் வாழ்க்கை, அவள் பருவமடைந்த பின் வேறு விதமாய் மாறியது. பசுபதியின் பார்வையில் நட்பைத் தவிர வேறு எதுவோ இருக்கிறதென்பதை பெண்மனம் கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் துவங்கியது. தன் மனம் தன்னிடம் எதையோ எச்சரிப்பதை உணர்ந்து பசுபதியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் துவங்கினாள் மேகவர்ணா.

 

 

 

 

“ஏன் என்னைப் பார்த்து ஒதுங்கி ஒதுங்கி போற வர்ணா? நான் பின்னால் வந்தாலே ஒருமாதிரி மூஞ்சியை வச்சிக்கிறே? என்னதான் நினைச்சுட்டு இருக்கிறே?”

 

 

 

“நீ என் பின்னாடி வராதே பசுபதீ. ஸ்கூலில் எல்லாரும் கிண்டல் பண்ணுறாங்க! எனக்கு அதெல்லாம் பிடிக்கலை.!”

 

 

 

 

“உங்க அப்பா தான் உன்னைப் பத்திரமா கூட்டிட்டுப் போகச் சொல்லியிருக்கார். நான் உன் மாமன் மயன் தானே? பின்னால் வந்தால் என்ன தப்புங்கிறேன்.?” எனக் கேட்டான் அவன்.

 

 

 

“பிடிக்கலைன்னா விட்டுடு பசுபதி. எனக்கு ஒருமாதிரி சங்கடமா இருக்கு.!”

 

 

 

“ஓ! அப்போ அந்த நாதன் உன் கூடவே தினமும் வர்ரானே, அது உனக்கு சங்கடமா இல்லையா?” 

 

 

 

“அவன் என் ஃப்ரெண்ட். நாங்க பாடத்தைப் பத்தின சந்தேகங்களை மாத்தி மாத்தி பேசி தீர்த்துப்போம். ஆனால் நீ காலேஜ் படிக்கிற, என் பாதுகாப்புக்குன்னு என் பின்னாலேயே வந்தால் அது ஒருமாதிரி இருக்கு. எனக்கு அது பிடிக்கலை. நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ்தேன். ஆனால், அதை நீ நிரூபிச்சுட்டே இருக்கனும்ன்னு எந்த அவசியமும் இல்லை.!” தனக்குத் தெரிந்தவரை புரியவைக்க முயன்றாள் மேகவர்ணா.

 

 

 

ஆனால் எதிரில் நின்றிருந்த பசுபதியோ, ஒற்றை வார்த்தைக் கூடப் பேசவில்லை. கடைசியாய் அவளை அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் என்னவென்று மேகவர்ணாவிற்குப் புரியவில்லை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மேகவர்ணாவிற்கு, அவன் ஊருக்குச் சென்றுவிட்டான் என்ற தகவல் மட்டும் தான் கிடைத்தது.

 

 

 

 

“எங்கே சென்றிருப்பான்? அம்மா, அப்பா இல்லைன்னு சொன்னான், எப்படி ஊருக்குப் போயிருப்பான்?” எந்த கேள்விக்கும் மேகவர்ணாவிற்கு விடை கிடைக்கவே இல்லை.

 

 

 

“முக்கியமா நாங்க அவளுக்கு எதுவும் தெரிய வேணாம்ன்னு நினைச்சோம்!” எனச் சொல்லியபடியே மூச்சு வாங்க நிறுத்தினார் நாச்சியப்பன். கடந்தக் கால கசப்புகளை நினைக்கையில், அவர் மனதின் அடியாழம் வரை கசந்தது.

 

 

 

“அந்தப் பயலை எம் மவளுக்கு பாதுகாப்பா இருக்கச் சொன்னது நான்தேன். கடைசியில், அவனே என் புள்ளை வாழ்க்கைக்கு கொள்ளியாய் வந்து நிற்பான்னு நாங்க நினைக்கலை.!” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 

 

 

 

 

“ம்மா! நானும் நெடுமாறனும், வீராவையும் வர்ணாவையும் தேடிப் போறோம். நீங்க மாமாவைப் பார்த்துக்கோங்க!” எனச் சொன்ன அழகர், நெடுமாறனைக் கூட்டிக் கொண்டு வெளியேறியிருந்தான்.

 

 

 

******

 

 

 

அந்த இருட்டான அறையில், ஏதோவொரு புள்ளியிலிருந்து வந்த வெளிச்சத்தைத் தவிர வேறெதுவுமே வீரபத்ரனின் கண்களுக்குப் புலப்படவே இல்லை. அந்த இருளுக்கு கண்கள் பழக சிறிது நேரம் பிடித்தது. இருளுக்கு விழிகள் பழகிய சில விநாடிகளுக்குப் பின்னர் தான், அவன் நாற்காலியில் இறுகக் கட்டிப் போடப்பட்டிருப்பது புரிந்தது. மெதுவாய் தலையைத் திருப்பி, சூழ்நிலையை ஆராய்ந்தான். தன் அருகே மேகவர்ணாவும், அவளுக்குப் பக்கத்தில் காத்தவராயனும் கட்டிப் போடப் பட்டிருப்பது புரிந்தது.

 

 

 

 நெற்றியைச் சுருக்கி, என்ன நடந்ததென அவதானிக்க முயன்றான். கடைசியாய் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் முன் அந்த வெள்ளை நிற வேன் வந்து நின்றதும், உள்ளிருந்து பசுபதி இறங்கி வந்ததும், இவர்கள் சுதாரிக்கும் முன்னே, அவன் இவர்களைத் தாக்கியதும் நினைவிற்கு வந்தது. ஆஜானுபாகுவாய் முன் வந்து நின்று, ஒற்றைத் தாக்குதலில் தங்களை மயக்கமடையச் செய்திருக்கிறான் என்பதிலேயே எதிராளியின் பலம் வீரபத்ரனுக்குப் புரிந்தது.

 

 

 

 

முதலில் இங்கிருந்து தப்ப வேண்டும், என்ற முயற்சியுடன், தன்னை இறுக்கிப் பிணைத்திருக்கும், தளைகளிலிருந்து விடுபட முயன்றான். இறுக்கமாய் கட்டப்பட்டிருக்கும் கைக்கட்டு அவிழ மறுத்த அதே நேரம், 

 

 

 

“அடேய்! அரசி மயனே..! தலையை வலிக்குது டா! தண்ணீ குடுங்கடா! யாருடா என் கையைப் பிடிச்சிருக்கிறது? இருட்டுக்குள்ளே ஒண்ணும் தெரிய மாட்டேங்குதே?” எனப் புலம்பியபடியே காத்தவராயனும் விழித்திருந்தான்.

 

 

 

 

“வீரா..! வீரா..! நாம போகணும்! இங்கிருந்து போகணும்! நாம அவன்கிட்டே மாட்டிக்கக் கூடாது. ஏதாவது பண்ணு வீரா! நாம தப்பிக்கணும்!” எனப் பதற்றத்துடன் கண்விழித்தாள் மேகவர்ணா.

 

 

 

“எம்மா தங்கச்சி, அந்த மொழு மொழு மொட்டையன் எங்க மூக்கிலேயே ஓங்கி குத்துவிட்டான், நாங்க மயங்கினோம். நீ எப்படி மயங்கினே? நீ என்ன அவனோட கூட்டா? நாடகம் போடுறியா?” என காத்தவராயன் கேட்க,

 

 

 

 

“அவனைப் பார்த்ததும் பயந்து மயங்கி விழுந்துட்டேண்ணே..!”

 

 

 

 

“ரொம்ப நல்லதும்மா! உன்னை மாதிரி நாலு சிங்கப்பெண்தேன் ஊருக்கு வேணும்.!” என காத்தவராயன் சொன்னதைக் காதில் வாங்காது,

 

 

“வீரா! நாம இங்கிருந்து போகணும் வீரா! அவன் வர்ரதுக்குள்ளே போகனும். எதாவது பண்ணணும்!” எனப் பதற்றமாய் அவள் மீண்டும் வீரபத்ரனின் முகத்தைப் பார்க்க, அவனோ கற்சிலை போல் எதுவுமே சொல்லாது இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்.

 

 

 

“எதாவது பேசு வீரா!”

 

 

 

“நான் ஏன் பேசணும்? உன் மாமன் மயன்னு நீ சொல்ற பசுபதி யாருன்னே எனக்கு தெரியாது! இந்த நிமிஷம் வரை நான் ஏன் இங்கே இருக்கேன்னு தெரியாது. அப்படி இருக்கும் போது, நான் ஏன் நீ சொல்றதை கேட்கணும்? என்னைப் பிடிச்சுருக்குன்னு சொல்வ, ஆனால் உன் வாழ்க்கையில் என்ன நடந்துச்சுன்னு சொல்ல மாட்டே அப்படித் தானே? உனக்கு வேணும்ன்னா நீ மட்டும் தப்பிச்சுக்கோ! நான் அந்த மொட்டைக் கிட்டேயே டீலிங் பேசிக்கிறோம்.!” இறுக்கம் மாறாது பேசினான் வீரபத்ரன்.

 

 

 

“என்னது மொட்டைக்கிட்டே டீலிங் பேசுவியா? எம்மா தங்கச்சி, என்னத்துக்கு தான் அந்த மொட்டை உன்னை விரட்டுறான்.? இப்போவாவது சொல்லும்மா! நான் வீட்டுக்குப் போகணும். என் கயலு என்னைத் தேடுவா! மத்தவிங்க எல்லாம் மாலைக்காகதேன் என்னைத் தேடுவாய்ங்க! கல்நெஞ்சக்காரங்க!” 

 

 

 

என தன்போக்கில் காத்தவராயன் புலம்ப, சில நிமிட யோசனைக்குப் பின், தன்னோடு சேர்த்து வீரபத்ரனையும், காத்தவராயனையும் காப்பாற்ற உண்மையைச் சொல்லியே தீர வேண்டியது கட்டாயம் என உணர்ந்துக் கொண்டவள், பசுபதியை சந்தித்ததிலிருந்து, அவன் திடீரென காணாமல் போனது வரை சொல்லிவிட்டு நிறுத்தினாள்.

 

 

 

 

“பசுபதி போன பிறகு என் வாழ்க்கையில் எனக்காகவே வந்தவன்தேன் என்னோட கருப்பன். ரொம்ப ஆசைப்பட்டு அவனை நெய்க்காரப்பட்டி சந்தையில்தேன் வாங்கினேன். நான் வாங்கும் போது, ரொம்பக் குட்டியா அழகா இருந்தான். இப்போ வரைக்கும் என் ஃப்ரெண்ட், என் முதல் புள்ளை எல்லாமே அவன்தேன். என் அழகு கருப்பன்.!” கண்களில் நெகிழ்ச்சியுடன் சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

 

“அடியேய்! எம் மாமன் பெத்த மயிலம்மா! அப்படி அந்த மொட்டைத் தலையன் என்னதேன் செஞ்சு தொலைச்சான்.? நீ சொல்ற கதைக்கு, நான் எழுதுற ஸ்க்கிரிப்ட்டு எவ்வளவோ பரவாயில்லை. சீக்கிரம் உன் கதையைச் சொல்லி முடிம்மா!” என வீரா மேகவர்ணாவிடம் கேட்க,

 

 

 

“ம்க்கும்! அவனே நம்மளைக் கட்டி வச்சிட்டுப் போயிருக்கான். நீங்க என்னமோ பிரதமர் கிட்டே பேச்சுவார்த்தை நடத்தற மாதிரி, நடத்துங்க டா! ஏம்மா தங்கச்சி, அந்த மொட்டையன் உன் மாமன் மயன். அதனால் உன்னைக் கடத்தினான். உன்னை லவ்வுறியான்னு இந்தா இந்த வீரங்கெட்ட வீராவையுமே கடத்தினான். நான் என்ன பாவம் டா செஞ்சேன்? வளைகாப்புக்கு மாலை வாங்கப் போனவனுக்கு, மாலை போட்டு சாமி கும்பிட்டிருவீங்க போல டா!” எனப் புலம்பிக் கொண்டிருந்தான் காத்தவராயன்.

 

 

 

“காவல்துறை உங்கள் நண்பன்னு சொல்லுங்களே, அதே மாதிரி காத்தவராயன் எங்கள் நண்பன்னு பசுபதிக்கு தெரிஞ்சுருக்கு போல காக்காவிரட்டி!”

 

 

 

 

“ம்க்கும்! இப்படி பேசியே, உங்க காரியத்தை சாதிச்சுக்கிறீங்க டா! அது என்னமோ தெரியலை, உங்க குடும்பத்திற்கு என்ன நடந்தாலும், நான்தேன் குறுக்கால வந்து சிக்குறேன்.!” என சலித்துக் கொண்ட காத்தவராயன்,

 

 

 

 

“ஏம்மா தங்கச்சி, நீ என்ன பராக்கு பார்த்துட்டு இருக்கிறே? அந்த மொட்டைத் தலையன் ஊருக்குப் போய்ட்டான்னு உங்க வீட்டில் சொல்லிட்டாய்ங்க, நீ அப்பறம் அவனைப் பார்க்கவே இல்லையா? கதையைச் சொல்லி முடி, பொழுது போகணுமா இல்லையா? சாகும் முன்னே உன் கதையை முழுசா கேட்டுட்டு சாகுறேன். அப்பறம் க்ளைமேக்ஸ் தெரியாமல் ஆவியா அலைய வேண்டி வரும்!”என்றவன்,

 

 

 

“இந்த நாற்காலியோட கட்டிப் போட்டு வச்சு அசையவும் முடியல, ஆடவும் முடியலை. அடேய் அரசி மயனே, கை ஃப்ரீயா இருந்தால், கொஞ்சம் மூக்கை சொறிஞ்சு விடேன். மூக்கு அரிக்குது!” என வீராவிடம் சொல்லி, அவன் முறைப்பையும் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

 

 

 

 

“நல்லவேளை இந்த மொட்டை நம்ம வாயைக் கட்டலை. வாயை மட்டும் கட்டியிருந்தால் என் பொழப்பு என்ன ஆகிறது? எம்மா தங்கச்சி நீ உன் கதையைக் கன்ட்னியூ பண்ணு!”

 

 

 

 

“இந்தாருண்ணே! நான் ஒண்ணும் உன் ஃப்ரெண்டு மாதிரி சினிமா கதை எழுதலை. நான் சொல்றதெல்லாம் நெசம்!”

 

 

 

 

“சரிம்மா! நீ சொல்வதெல்லாம் நிஜம்தேன். முதலில் சொல்லு!” எனக் காத்தவராயன் கேட்க, சொல்லத் துவங்கினாள் மேகவர்ணா.

 

 

 

 

“நான் அதுக்கப்பறம், பசுபதியைப் ரொம்ப நாளாய் பார்க்கவே இல்லை. நான் காலேஜ் படிப்பை முடிச்ச அந்த நாள் தான் பசுபதியை மறுபடியும் பார்த்தேன். அன்னைக்கு எங்க காலேஜ் ஃபேர்வெல் டே! கடைசி நாள் அப்படிங்கிறதால் வீட்டுக்கு கிளம்பவே ரொம்ப நேரமாகிடுச்சு. நான் வீட்டுக்குப் போறதுக்காக பஸ் ஸ்டாண்டில் நின்னிருந்தப்போ, ஒருத்தன் என் முன்னாடி தயங்கித் தயங்கி நின்னான். நானும் இதே காலேஜ் தான் வேற டிப்பார்ட்மெண்ட்ன்னு சொன்னான்.!”

 

 

 

 

“இதைச் சொல்றதுக்கு என்னத்துக்கு அந்தப் பய இம்புட்டு தூரம் வந்தான்? சரி, அப்பறம்..!” என இடையிட்டான் காத்தவராயன்.

 

 

 

 

“இந்தாரு வீரா, உன் ஃப்ரெண்ட்டுகிட்டே சொல்லி வையி.. இப்படி ஊடால பேசிட்டே இருந்தால் நான் எப்படி சொல்றது?” என மேகவர்ணா சொல்லிக் கொண்டிருந்த போதே, மங்கலான வெளிச்சம் படர, தூசியடைந்த அந்த அறையின் கதவு திறக்கப்பட, நடுக்கத்துடன் தனக்கு முன் தெரிந்த ஷூ கால்களைப் பார்த்தாள் மேகவர்ணா.

 

 

 

 

அச்சத்தில் விழிகள் விரிந்து தொண்டைக் குழி ஏறி இறங்கியது. பயத்தில் வியர்வை அரும்புகள் அவளின் மலர் வதனத்தில் அரும்பத் துவங்கியிருந்தது.

 

 

“நான் மீதியைச் சொல்லட்டுமா வர்ணா! அச்சோ உனக்கு வியர்க்குதே வர்ணா. என்னைப் பார்த்துப் பயப்படுறியா? ஐ அம் யுவர் ஃப்ரெண்ட் வர்ணா!” என அவன் ஹஸ்கி குரலில் சொன்ன விதமே, அவளின் முதுகுத் தண்டைச் சில்லிட வைத்தது. அதீத பயத்தின் விளிம்பில், உயர் நடுங்க, கைகள் கட்டப்பட்டு அந்த மர நாற்காலியில் அமர்ந்திருந்தவளின் கரம்,தன் பக்கத்தில் அமர்ந்திருந்த வீரபத்ரனின் கரத்தினை தன்னை அறியாமல் இறுகப் பற்றியது. பசுபதி நெருங்கி வர, வர, நொடிக்கு நொடி அவள் பற்றியிருந்த கரத்தின் இறுக்கம் கூடியது.

 

 

 

 

“ஆத்தாடி! ஆத்தா! இந்த மொட்டை வேற முறைச்சுக்கிட்டே முன்னே வர்ரான். இதில் நீ வேற ஏம்மா என் கையை பிடிச்சு நசுக்குற? உன் ஆளு அந்தப் பக்கம் இருக்கான்மா!” என அலறிய காத்தவராயன்,

 

 

 

“மொட்டை சார்! மொட்டை சார்! ப்ளீஸ் என்னை மட்டும் அவிழ்த்து விட்டுடுங்களேன்.!” என பசுபதியைப் பார்த்துக் கேட்டவன், பசுபதியின் ஒற்றை முறைப்பில் ஆடிப் போய் அமைதியாகியிருந்தான்.

 

 

 

 

“அடேய் அரசி மயனே! இவன் என்னடா இம்புட்டு டெரரா இருக்கான்.? நீ தானே இந்தக் கதைக்கு ஹீரோ, எதாவது செய்டா. புடிச்சு வச்ச கொழுக்கட்டை மாதிரி அசையாமல் இருக்க!”

 

 

 

 

“எனக்கே பயமா இருக்குடா காக்காவிரட்டி!” எனச் சொன்ன வீரபத்ரன்,

 

 

 

“மயிலம்மா! இவன் அந்தப் பையனை என்ன பண்ணினான்?” எனக் கேட்டான்.

 

 

 

“கொ.. கொ.. கொன்னுட்டான். என் கண்ணு முன்னாலேயே.. என் கையெல்லாம் இரத்தம்.. என் முகமெல்லாம் இரத்தம்..!” திக்கித் திணறி மேகவர்ணா பயத்துடன் சொன்ன அதே நேரம்,

 

 

 

“ஆமா! நான் தான் கொன்னேன். சதக்.. சதக்ன்னு குத்திக் கொன்னேன்.! என் வர்ணா பக்கத்தில் யார் வந்தாலும் கொல்லுவேன். ஏன்னா அவள் எனக்கு மட்டும் தான் ஃப்ரெண்ட்..! ” என அந்த ஒட்டுமொத்த கானகமும் கிடுகிடுக்க கத்தினான் பசுபதி.

 

 

 

 

“அடேய்! அரசி மயனே.. டார்கெட் உன் மாமன் பெத்த மயிலம்மா இல்லை டா! இந்த மொட்யோட முழு நேர டார்கெட்டே நீதேன். ஐயய்யோ! இவிங்க ஃப்ளாஷ்பேக் தெரியாமால் பேக்-அப் ஆக வந்து சிக்கிட்டியே டா காத்தவராயா!” காத்தவராயனின் புலம்பல் வீராவின் செவிகளுக்குள் நுழைந்து நழுவ, எதிரில் அசுரனைப் போல் நின்றிருந்த பசுபதியின் உருவத்தில் வீராவின் பார்வை நிலைத்திருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்