Loading

திமிர்-21

 

 

“நாம எங்கே போறோம் வீரா? இப்போ என்னை எங்கே கூட்டிட்டு போற?” இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்தபடியே வீரபத்ரனின் தோளில் தட்டினாள் மேகவர்ணா.

 

 

 

“வேற எங்கே அம்மாப்பட்டிக்குதேன்.! நீ வேற நேத்து உன்னைப் பெத்தவருகிட்டே பேசும்போது கண்ணில் தண்ணீ வச்சிட்ட, மனசு கேட்கலை மயிலம்மா!” சாலையில் கவனம் வைத்தபடியே அவள் புறம் திரும்பிச் சொன்னான் அவன்.

 

 

 

“அதேன் நேத்தே, வீடியோ காலெல்லாம் பண்ணி, கருப்பனை சாப்பிட வச்சுப்புட்டியே? அப்பறம் என்ன? நான் கூட விடியும் முன்னமே கருப்பன் கிட்டே பேசினேன். நானுன்னு நினைச்சு ஃபோனுகிட்டே மூக்கை உரசுறான் சேட்டைக்காரன்.!” சிலாகித்துச் சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

அவள் நேற்று தன் தந்தையிடம் பேசிவிட்டு, தான் பாசமாய் வளர்க்கும் கருப்பன் ஆகாரம் உண்ணாமல் இருப்பதைக் கண்டு, எதையுமே யோசிக்கத் தோன்றாது மடங்கி அழுதபடி அமர்ந்த போது, அவளைச் சமாதானப் படுத்தி, நாச்சியப்பனைக் காணொளி அழைப்பின் மூலம் அழைத்து, கருப்பனை உண்ண வைத்து இவளையுமே சமாதானப் படுத்தியிருந்தான்.

 

 

 

 

“எம்புட்டு பெரிய பிரச்சனையாய் இருந்தாலும், அதுக்கு ஒரு தீர்வு இருக்கும் மயிலம்மா! ரோசனை பண்ணாமல், கண்ணு கலங்கினால், எல்லாம் சரியாகிடுமா?” என அவன் கேட்டது இப்போதும் அவள் செவிக்குள் ஒலித்தது.

 

 

 

“பதினோரு மணிக்கு வளைகாப்புன்னு அத்தை சொன்னாங்க வீரா, இந்நேரத்தில் அம்மாப்பட்டிக்குப் போகணும்ன்னு என்ன அவசியம் வீரா! விழி அக்காவும், அழகரு மாமாவும், நான்தேன் உன்னைக் கூட்டிப் போனேன்னு நினைச்சுக்கப் போறாக!” 

 

 

 

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாய்ங்க! எங்க அம்மாக்கிட்டே உன்னைக் கூட்டிப் போய்ட்டு வாரேன்னு சொல்லிட்டேன். உன்னை நான்தேன், அம்மாப்படியிலிருந்து இங்கண கூட்டியாந்தேன். நீ அழுது இதுவரை நான் பார்த்ததே இல்லை.. சட்டுன்னு உன் கண்ணீரைப் பார்த்ததுமே, நான்தேன் காரணம்ன்னு ரொம்பவும் குத்தவுணர்ச்சி ஆகிப் போச்சு மயிலம்மா. அதேன் ஒருமுறை உன்னை உன் கருப்பன் கிட்டே காட்டிட்டு மறுபடியும் கூட்டியாந்திரலாம்ன்னுதேன் அம்மாப்பட்டிக்கு கிளம்பிட்டேன்.!”

 

 

 

 

“நெசமாவே எனாக்காக தானா? ஒருவேளை நாம வர்ரதுக்கு நேரம் ஆகிடுச்சுன்னா, எல்லாரும் என்ன நினைப்பாங்க! வளைகாப்பு முடிஞ்சதும் பொறுமையாய் போயிருக்கலாம் வீரா! பேசாமல் வண்டியைத் திருப்பு.. உங்க வீட்டுக்கே போயிருவோம்!”

 

 

 

“அடியேய், என் மாமன் பெத்த மயிலம்மா! ஒருத்தன் உனக்காக இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், ரிஸ்க் எடுத்துக் கூட்டிப் போறானேன்னு, கொஞ்சமாச்சும் யோசிக்கிறியா? உன் பாட்டுக்கு வண்டியைத் திருப்புன்னு சொல்ற?” எனக் கேட்டபடியே வாகனத்தை சாலையில் செலுத்திக் கொண்டிருந்த அதே நேரம், எதன் மீதோ மோதுவது போல், வாகனம் க்ரீச்சிட்டு நிற்க, பயத்தில் படபடத்த மனதுடன் கீழே இறங்கி நின்றாள் மேகவர்ணா.

 

 

 

“அடேய், அரசி மயனே..! நீ வாரதைப் பார்த்துட்டு எம்புட்டு நேரமா கையைக் காட்டுறேன். கொஞ்சமும் கண்டுக்காமல், அந்தப் புள்ளைக்கிட்டே என்னத்தைப் பேசிட்டு வர்ர? பின்னாடி பொம்பளப்பிள்ளை உட்கார்ந்துட்டா போதும், கண்ணும் தெரிய மாட்டேங்குது.. காதும் கேட்க மாட்டேங்குது..!” எனச் சொன்னபடியே மேகவர்ணாவைப் பார்த்த காத்தவராயன்,

 

 

“எம்மா தங்கச்சி! என்னத்துக்கு இறங்கி நிற்கிறே? டவுனுக்கு தானே போறீக? நானும் வாரேன். அரைமணி நேரமா நிற்கிறேன். ஒரு வண்டியும் வர மாட்டேங்குது. ஒரு கிறுக்குப் பய லிஃப்ட் கொடுத்தான்னு வந்த பாவத்துக்கு, நடு வழியில் இறக்கி விட்டுட்டு போய்ட்டான். என்னமா என் வாயைப் பார்த்துட்டு நிற்கிறே? படக்குன்னு ஏறி உட்காரு. நேரமாகுதா? இல்லையா?” என மேகவர்ணாவை விரட்ட, 

 

 

 

“இல்லைண்ணே! அது வந்து நாங்க..!” என அவள் சொல்ல வந்ததைக் கேட்காமல், 

 

 

 

“போகும் போது பொறுமையாய் பேசிக்கலாம். விறுவிறுன்னு ஏறி உட்காரு! அண்ணேன் உட்காரணுமா இல்லையா?” என மேகவர்ணாவை அமர வைத்தவன், தானும் அவள் பின்னால் ஏறி அமர்ந்திருந்தான்.

 

 

 

“அடேய்! அரசி மயனே.. பதினோரு மணிக்கு உன் அண்ணே பொண்டாட்டிக்கு, வளைகாப்பு. நீ என்னடான்னா, இந்தப் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு இங்கண சுத்திக்கிட்டு திரியுற?” என காத்தவராயன் கேட்க,

 

 

 

 

“அடேய் காக்காவிரட்டி! நாங்க டவுனுக்குப் போகலை! அம்மாப்பட்டிக்கு போறோம்!” என இருசக்கர வாகனத்தைச் செலுத்தியபடியே வீரபத்ரன் சொன்னது, சரியாக காத்தவராயனின் செவிகளில் விழவில்லை.

 

 

 

 

“ஏன்டா அரசி மயனே..! என்னத்தைச் சொல்லித் தொலையுற? ஒரு மண்ணும் கேட்க மாட்டேங்குது. என்னத்தையோ வாய்க்குள்ளே முனங்குறன்னு மட்டும் புரியுது. ஆனால் என்னன்னு சரியா விளங்கலையே..!” என அவன் புலம்ப,

 

 

 

“அண்ணே! நாங்க டவுனுக்குப் போகலை! அம்மாப்பட்டிக்குதேன் போறோம்.!”

 

 

 

 

“என்னது ஆண்டிபட்டிக்கா? அங்கண என்னத்துக்கு போறீக? கிறுக்கா பிடிச்சிருக்கு உங்களுக்கு?” என வாகன இரைச்சலின் நடுவே, தானாக எதையோ புரிந்துக் கொண்டு, காத்தவராயன் கேட்க,

 

 

 

“ஆண்டிபட்டி இல்லைண்ணே.. நம்ம அம்மாப்பட்டிக்குதேன்..!” என மேகவர்ணா சாதாரணமாய் சொல்ல,

 

 

 

“ஆத்தே! என் காது சரியாத்தேன் கேட்டுச்சா? அம்மாப்பட்டியா? அங்கண எதுக்கு பக்கிங்களா போறீங்க? என்னை உசிரோட கொன்னு புதைக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டீகளா?” எனப் பதறினான் காத்தவராயன்.

 

 

 

 

“ம்க்கும்! உன்னை யாரு சொல்ல, சொல்ல கேட்காமல், வண்டியில் ஏறச் சொன்னது?” என வீரபத்ரன் சத்தமாய்க் கேட்க,

 

 

 

 

“அடேய், அரசி பெத்த மயனே..! நானே இந்தப் புள்ளையோட அண்ணேங்க, அந்த மூணு அணகோண்டா கிட்டே இருந்து தப்பிப் பொழைச்சு வந்திருக்கேன். என்னைத் திரும்ப அங்கணக் கொண்டு போய் விட்டுராதே டா. உசுரோட ஒட்டுமொத்தமாய்க் குழிக்குள்ளே புதைச்சுப்புடுவாய்ங்க டா! எப்பா, ராசா! பேசாமல் என்னை இங்கணையே இறக்கி விட்டுருடா! நான் பாட்டுக்கு என் சோலியைப் பார்த்துட்டு போறேன்.!”

 

 

 

 

“நான்தேன் சொன்னேனே அண்ணே! நாங்க டவுனுக்குப் போகலைன்னு சொன்னேனே? நீங்கதேன் காதில் வாங்காமல், வண்டியில் எறி உட்கார்ந்தீக!” என மேகவர்ணா தன் பங்குக்கு சொல்ல,

 

 

 

 

“எம்மா தங்கச்சி நீயுமா? ஆமா, இன்னும் கொஞ்ச நேரத்தில் விஷேஷத்தை வச்சிக்கிட்டு, நீங்க எங்கிட்டு அம்மாப்பட்டி பக்கமா வண்டியைத் திருப்பிக்கிட்டு போறீக? ஏன்டா வீரா, உங்க அம்மா எப்படி உன்னை அனுப்பிச்சு?” என மேகவர்ணாவிடம் துவங்கி, வீரபத்ரனிடம் முடித்தான் காத்தவராயன்.

 

 

 

 

 

“அது பதினோரு மணிக்குதானே? மணி இப்போ ஏழு தானே ஆகுது? அதெல்லாம் அம்மாக்கிட்டே சொயிப்புட்டுதேன் கிளம்புறோம்! நம்ம மயிலம்மா வளர்க்கிற அந்தப் பய கருப்பன் இருக்கான்ல்ல, அவன் ஒரு கழனித் தண்ணியைக் கூட மோந்து பார்க்க மாட்டேங்குறானாம். அதேன், ஒரெட்டு போய் பார்த்துட்டு வந்துருவோம்ன்னு..!” என வீரபத்ரன் சொல்ல,

 

 

 

 

“அதானே.. பார்த்தேன்! காரணமில்லாமல் காக்கா முங்கி, முங்கி முத்துக் குளிக்குதேன்னு பார்த்தேன். நீ அந்தக் காளை மாட்டை பிடிக்கிறீயோ, இல்லையோ, நல்லா காக்கா பிடிக்கிற ராசா! எனக்கெல்லாம் இம்புட்டு விவரம் பத்தலைடா அரசி மயனே..! மருதைக்கு வந்து ரெண்டு நாளாகிப் போச்சு! என் பொண்டாட்டிக் கிட்டே நின்னு பேச நேரமில்லை. அவ அடுப்பாங்கரையில் உருட்டிக்கிட்டு கிடக்குறா! நான் டவுனுக்கும், வீட்டுக்கும் அலையா அலையுறேன். என்னமோ போங்கடா! நமக்குன்னு விதிச்சது அம்புட்டுதேன் போல..!” என சலித்தபடியே,

 

 

 

 

“அடேய்! வீரபத்ரா! அப்படியே இப்படி ஓரமா நிப்பாட்டு நான் இறங்கிப்புடுறேன். என்னை இறக்கிவிட்டுப்புட்டு, அம்மாப்பட்டிக்கு போனாலும் சரி, ஆண்டிப்பட்டிக்கு போனாலும் சரி! நான் இனி அந்த ஊருக்கு வர்ரதா இல்லைடா சாமி. மூணு கரடிக் குட்டிகளுக்கு மத்தியில் சிக்கி சின்னாபின்னமானது போதும் ராசா!” எனக் காத்தவராயன் சொல்லவும், வீரபத்ரன் வாகனத்தை நிறுத்தவும் சரியாக இருக்க, அதே நேரம் வீராவின் வாகனத்தின் குறுக்கே வழிமறித்தபடி வந்து நின்றது அந்த வெள்ளை நிற மகிழுந்து.

 

 

 

 

இருசக்கர வாகனத்தை மோதுவது போல் வந்து நின்ற வாகனத்தின் க்ரீச்சிடலில் அதிர்ந்து, வாகனத்தை நிறுத்திவிட்டு வீரா கீழே இறங்கியிருக்க, 

 

 

 

 

“யாருடா அந்த லூசு பக்கி? கண்ணை என்ன பின்னாடி வச்சிருக்கியா? வண்டி வர்ரது தெரியலை? குறுக்கால வந்து நிறுத்தி வச்சிருக்க? வண்டி ஓட்டத் தெரியாத சின்னப் பயலுகளுக்கெல்லாம், லைசன்ஸ் கொடுத்தால் இப்படித்தேன்.!” எனக்கத்தியபடியே அந்த வாகனத்தை நோக்கிச் சென்ற காத்தவராயன், அதிர்ந்து அசையாமல், ஆணியடித்தாற் போல் நின்றான்.

 

 

 

“அடேய்! அரசி மயனே.. எங்கே சிக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ, கரெக்ட்டா அங்கேயே சிக்க வச்சிட்டியே டா? எல்லா பஞ்சாயத்திலேயும், என்னையும் இழுத்து விட்டுப்புடுறீங்க டா!” என்ற காத்தவராயனின் புலம்பல் மட்டும் அந்தச் சூழலில் எதிரொலிக்க, இமை கூட சிமிட்ட மறந்து போய், அமைதியாய் நின்றிருந்தனர், வீரபத்ரனும், மேகவர்ணாவும்.

 

 

 

***

 

 

“ஏய் அரசி! நேரம் எம்புட்டு ஆகுது? இன்னும் இந்த காக்காவிரட்டிப் பயலைக் காணோம்? அவனைப் போய் மாலையை வாங்கிட்டு வரச் சொல்லி அனுப்புவியா? எங்கண நின்னுக்கிட்டு, ஊரு கதை, உலக கதையெல்லாம் பேசிக்கிட்டு கிடக்கானோ?” என்ற அங்கயற்கண்ணியின் கேள்விக்கு,

 

 

 

 

“ஃபோன் போட்டு பார்த்துட்டேன் அத்தே! ரிங் போய்ட்டே இருக்கு.. எடுக்கத்தேன் மாட்டேங்குறியான்!” எனச் சொன்னார் அரசி.

 

 

 

“ம்க்கும்! அவன் எடுத்துட்டாலும்!” எனச் சலித்துக் கொண்டவர்,

 

 

 

“என்டி கயலு! உன் புருஷனுக்கு ஃபோனை போட்டு பாரு! நீ ஃபோன் போட்டால் எடுக்கறானான்னு பார்ப்போம்!” எனக் கயலைப் பார்த்துச் சொன்னார் அங்கயற்கண்ணி.

 

 

 

 

“நானும் அஞ்சாறு வட்டம்(முறைகள்) ஃபோன் போட்டுப் பார்த்துட்டேம்மா! எடுக்கவே இல்லை! என்னமோ ஏதோன்னு பயமா கிடக்குமா!” என சங்கடமாய் கயல் சொல்ல,

 

 

 

 

“விடு கயலு! அவன் வரும் போது வரட்டும்! போக்கு வரத்துக்கு வண்டி கிடைக்காமல் மாட்டிக்கிட்டானோ? என்னவோ? நான் வேற யாரையாவது அனுப்ப முடியுமா பார்க்கிறேன்.!” என அரசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

 

 

 

“ஏன் அரசி! உன் மயன் வீரா எங்கிட்டு போனான்? ஆளையே காணோம்!” என்றபடியே வந்து நின்றார் பூங்கொடி.

 

 

 

 

“நான்தேன் அவனை ஒரு சோலியாய் அனுப்பிருக்கேன் அக்கா!” என மழுப்பலாய் பதில் சொன்னார் அரசி.

 

 

 

 

“அப்படி என்ன தலைபோற காரியம்ன்னு அவனை அனுப்பி வச்ச? அவனையும் காணோம், உன் உடம் பொறவா தம்பி மவள்ன்னு ஒரு பிள்ளை வந்துச்சே, அவளையும் காணோம். திருட்டுத்தனமா ரெண்டுபேரையும் எங்கே அனுப்பி வச்சாள்ன்னு கேளுங்கம்மா!” எனக் கோபமாய் அரசியை முறைத்தபடியே வந்து நின்றார் கதிர்வேல்.

 

 

 

“இவரு வேற நேரம் காலம் புரியாமல், ஏடாகூடமா என்னத்தையாவது பேசிக்கிட்டு கிடப்பார்.!” எனத் தனக்குள் புலம்பிய அரசி,

 

 

 

 

“என் தம்பியையும், தம்பி மயனுங்களையும் அழைச்சுட்டு வரச் சொல்லித்தேன் ரெண்டு பேரையும் அனுப்பி வச்சிருக்கேன் போதுமா? இல்லை இன்னும் வேற எதாவது தகவல் சொல்லணுமா?” கோபமாய் கணவரைப் பார்த்துக் கேட்டார் அரசி.

 

 

 

 

“யார்க்கிட்டே கேட்டு அவனை அனுப்பி வச்சே? அப்படியே உன் தொம்பியும், தொம்பி குடும்பமும் வந்து நின்னு ஊரு மெச்ச சீரு செஞ்சுருவானுங்க பாரு.! அவனுங்களே, காட்டுமிராண்டி பயலுக! அவனுங்க வரலைன்னு யாரு அழுதா? விஷேஷம் நடக்கிற நேரத்தில் ஏதாவது ஏடாகூடாமாய் நடக்கட்டும்.. அப்பறம் இருக்கு உனக்கு!” ஆள்காட்டி விரல் நீட்டி மனைவியை மிரட்டினார் கதிர்வேல்.

 

 

 

 

“அவிங்க, அஞ்சு பைசா செஞ்சாலும் எனக்கு அது பெருசுதேன். நான் ஒண்ணும் சீரு செய்ய அவிங்களை வரச் சொல்லலை! நம்ம வீராவுக்கும், வர்ணாவுக்கும் கல்யாணம் பண்ணுறதைப் பத்தி பேசுறதுக்குதேன் வரச் சொல்லியிருக்கேன். உங்களுக்கு அவிங்க வர்ரதும், பேசுறதும் பிடிக்கலைன்னா கண்ணையும் காதையும் மூடிக்கோங்க!” எனக் கோபமாய் சொன்னார் அரசி.

 

 

 

 

“டேய் கதிரு! அரசி! ஊருசனமெல்லாம் நம்ம வீட்டில்தேன் கூடிக் கிடக்கு. இந்நேரத்தில் இந்த வாக்குவாதமெல்லாம் அவசியமா? முதலில் மாலையை வாங்கிட்டு வர்ரதுக்கு யாரையாவது அனுப்பி வைங்க! முதலில் இந்த விஷேஷத்தை சரியா நடத்துவோம். வீரா வந்தப் பிறகு மத்ததெல்லாம் பேசிக்குவோம். இப்போ எல்லாரும் போய், அவங்க அவங்க சோலியைப் பாருங்க!” என அனைவரையும் கண்டித்து அனுப்பினார் அங்கயற்கண்ணி.

 

 

 

 

“அழகரு! அழகரு! இங்கண கொஞ்சம் வாய்யா!” என மூத்த மகனை அழைத்தபடியே மாடிப் படிகளில் எறினார் அரசி.

 

 

 

 

“என்னத்துக்கும்மா இம்புட்டு அவசரமா வர்ரீங்க? எதாவது பிரச்சனையா?” என்றபடியே அறையிலிருந்து வெளியே வந்தான் துடிவேல் அழகர்.

 

 

 

 

“ஆமா! விழி எப்படி இருக்கா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?” மருமகளின் நலனை முன்நிறுத்தி கேட்டார் அரசி.

 

 

 

 

“கால் வலிக்குதுன்னு சொன்னாள். வேற ஒண்ணும் இல்லைம்மா!” என அவன் சொன்னதும், லேசாய் தயங்கியபடியே,

 

 

 

 

“அது ஒண்ணுமில்லைய்யா! வீராவை என் தம்பியையும், அவன் மயனுங்களையும் கூட்டியார அனுப்பிட்டேன். இந்த காக்காவிரட்டி பய, மாலையை வாங்கப் போனவன் இன்னும் வரலை. பூக்கடைக்காரனுக்கு ஃபோன் போட்டு பார்த்துட்டேன். அவன் கடைக்கே வரலைன்னு சொல்லிப்புட்டான். இப்போ என்ன செய்யறதுன்னே தெரியலைய்யா! இம்புட்டு சனம் கூடியிருக்க நேரம், ஒரு மாலை இல்லைன்னா நல்லாவா இருக்கும்?!” என மகனிடம் கேட்டார் அரசி.

 

 

 

“இம்புட்டு தானாம்மா? நான் யாரையாவது அனுப்ப முடியுதா பார்க்கிறேன். முன்னவே சொல்லியிருந்தால், நானே போய் வாங்கிட்டு வந்திருப்பேனே?” என அழகர் சொல்ல,

 

 

 

 

“இல்லை அழகரு! நீ போக வேணாம்ய்யா! உங்க அப்பத்தா வைவாக! யாரையாவது அனுப்ப முடியுமா பாரு, இல்லைன்னா வேற ஏற்பாடு செய்வோம்!” எனச் சொன்னவர், தன் மூத்த மகனிடம் பொறுப்பை ஒப்படைத்த திருப்தியுடன் கீழே இறங்கி சென்றார்.

அழகரிடம் சொல்லிவிட்டு கீழறிங்கி சென்ற பத்து நிமிடங்களில், மனோரஞ்சித மலரோடு, ரோஜா இதழ்களும், மல்லிகையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த மாலை தயாராகி வீடு வந்து சேர்ந்திருந்தது.

 

 

 

 

 

“அழகரு! நாம சொன்னது இந்த மாலை இல்லைய்யா! மாற்றி கொடுத்துட்டு போய்ட்டானோ?” எனக் கேள்வியாய் அரசி மகனைப் பார்க்க,

 

 

 

“சரியாத்தேன் கொண்டு வந்துருக்கான். உங்க மருமவ இந்த மாலைதேன் வேணும்ன்னு ஆசைப்பட்டு கேட்டாள். அதுக்குத்தேன் ஸ்பெஷலா ஆர்டர் போட்டு வாங்கினேன்.!” முகத்தில் முகாமிட்ட கண்ணுக்குத் தெரியாத நாணத்துடன் அழகர் பதிலளிக்க, மகனின் நேசத்தில் மனம் நெகிழ,

 

 

 

“யாரு கண்ணும் படாமல், இப்படியே சந்தோஷமா இருக்கணும்!” என மகனுக்கு நெட்டிமுறித்தவர்,

 

 

 

“நேரமாகிடுச்சு, நான் போய் விழியை ரெடி பண்ணி கூட்டிட்டு வர்ரேன்.!” எனச் சொல்லிவிட்டு மாடியை நோக்கி ஓடினார் அரசி.

 

 

 

 

“மதும்மா! விழி தயாராகிட்டாளா? நல்ல நேரம் போறதுக்குள்ளே, மனையில் இருத்தி, வளையல் அடுக்கணும். இன்னும் என்ன செய்றீங்க?”

 

 

 

 

“ம்க்கும்! நீங்க தான் உங்க மருமகளை மெச்சிக்கணும். நானும் எவ்வளவு நேரமா சொல்லிட்டே இருக்கேன். புடவையைக் கட்டாமல் வேடிக்கைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கிறாள்.!” என மது சொல்ல,

 

 

 

 

“விழிம்மா! என்ன ஆச்சுடா?” பரிவாய் மருமகளின் தலை வருடி வினவினார் அரசி.

 

 

 

“சின்னத்தை! இந்தச் சேலையத்தேன் கட்டணுமா? மூச்சு முட்டற மாதிரி இருக்கு! ரொம்ப கஷ்டமா இருக்கு!” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கருவிழி சொல்ல,

 

 

 

 

“கொஞ்ச நேரம்தேன்.. மிஞ்சிப் போனால், ஒரு அரைமணி நேரந்தேன். வளையல் அடுக்கினதும், துணியை மாத்திக்கலாம். அப்பறம் பொறுமையாய் சாயங்காலத்துக்கு மேலே, உங்க வீட்டுக்குப் போவோம். உங்க அம்மா என்ன எட்டு மைல் தூரத்திலா இருக்கா? இதே வீட்டுக்குள்ளே தானே இருக்கா!” எனப் பேச்சுக் கொடுத்தபடியே, அவளுக்குப் புடவையை அணிவித்து, அவள் கூந்தலில் மலரையும் சூட்டியிருந்தார் அரசி.

 

 

 

 

“சின்னத்தை! நானெல்லாம் அழகரை விட்டுட்டு அம்மா கூடப் போய் இருக்க மாட்டேன். நான் இங்கணையே இருந்துக்கிறேன்.!”

 

 

 

 

“இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்தேன் விழிம்மா! உனக்கு எங்கிட்டு இருக்க பிடிக்குதோ, அங்கணையே இரு போதுமா? ஆனால் உங்க அம்மா மீனாட்சிக்கும், பொண்ணை தன்னோட வச்சு பொங்கிப் போடணும்ன்னு ஆசை இருக்கும் தானே? அதனால், எதுவா இருந்தாலும், பொறுமையாய் பேசி முடி பண்ணிப்போம். இப்போ கீழே போகலாம் வா! மது! நீயும் வாம்மா!” என்றபடியே, கருவிழியைக் கீழே அழைத்துப் போய் மனையில் இருத்தினார் அரசி. திருமணத்தன்று அணிந்திருந்த அதே அரக்கு நிறப் பட்டு. புடவையின் கரையில், திருமாலிருஞ்சோலை அழகரையும், அவர் துணைவியாரான சுந்தரவல்லி தாயாரின் எழிலுருவம் நெய்யப்பட்ட அதே திருமணப் பட்டுப்புடவையில், மெல்லிய ஆபரணங்களோடு அழகியாய் ஜொலித்தாள் கருவிழி.

 

 

 

 

தன் நிறைமாத வயிற்றைக் கையில் தாங்கி, பிறைநிலவாய், கண்ணெதிரே அமர்ந்திருந்த மனையாளைப் பார்த்துக் காதலுடன் கண்சிமிட்டினான் துடிவேல் அழகர்.

 

 

 

“ஏன்டி கரு கரு, என்னத்துக்குடி இம்புட்டு அழகா இருக்கே? என்னை உசிரோட கொல்லவே பொறப்பெடுத்து வந்துருக்கா கிறுக்கச்சி!” என அழகரின் மனம் புலம்புவது கூட, அவளது செவிகளில் கேட்டது. 

 

 

 

இந்த ஐந்து வருட வாழ்க்கையில், அவன் பார்வைகளைக் கூட மொழிபெயர்க்கக் கற்றிருந்தாள் கருவிழி. இப்போதும் கூட, அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்து, தாய்மையின் பூரிப்பில் பளபளத்த கன்னங்கள் மினுங்க புன்னகைத்தாள் கருவிழி. அவள் புன்னகையில் மனம் கிறங்க, தன் தலையைக் கோதி, தன்னை சமாளித்து நிமிர்ந்தான் அழகர். வார்த்தைகள் இல்லாமல், இருமனங்களும் பேசிக் கொள்ளும், இந்த மௌன மொழி கூட, இருவருக்குள்ளும் இன்னும் கொஞ்சம் நெருக்கம் சேர்த்தது.

அதே நேரம், வேலையின் பரபரப்பில் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்த அரசியை அழைத்து,

 

 

 

 

“வீரா எங்கே அத்தை? விடிஞ்சதிலிருந்து நான் அவனைப் பார்க்கவே இல்லையே?” எனக் கேட்டாள் கருவிழி.

 

 

“வந்துருவான் விழிம்மா! வளைகாப்பு நல்லபடியா முடியட்டும், அப்பறம் பொறுமையாய் எல்லாத்தையும் சொல்றேன். உன்கிட்டே சொல்லாமல், யார்கிட்டே சொல்லப் போறேன்.!” என மருமகளைச் சமாதானப்படுத்தி நகர்ந்தார் அரசி. 

அடுத்த சிலமணித் துளிகளில், கூடியிருந்த அத்தனை பேரிலும் மூத்தவரான அங்கயற்கண்ணி தன் பேத்திக்கு, வளையல் அணிவித்து விழாவைத் துவக்கி வைக்க, வரிசையாய் ஒருவர் மாற்றி ஒருவர் வண்ண வண்ண கண்ணாடி வளையல்களை கருவிழியின் கரங்களில் அணிவித்து, சந்தணம் குங்குமமிட்டு, மலர் தூவி வாழ்த்தினர்.

 

 

 

இரு கரங்களிலும், கண்ணாடி வளையல் குலுங்க, கன்னங்களில் சந்தணமும், நெற்றீ வகிட்டில் குங்குமமும் துலங்க, மனோரஞ்சித மலரின் சுகந்தம் மனதை மயக்க, மலரோடு மலராய் ஜொலித்தவளின் நெற்றியில் நேசத்தோடு முத்தம் வைத்து, அவளுக்காக செய்து வைத்திருந்த தங்கக் காப்பை அவள் பொன் கரங்களில் அணிவித்தான் துடிவேல் அழகர்.

 

 

 

 

“இது எனக்கா? இல்லை உன் பொண்ணுக்கா மாமா?” குறும்பாய் தன் கணவனைப் பார்த்து வினவினாள் கருவிழி.

 

 

“உனக்குத்தான்டி கரு கரு..!”

 

 

 

“எதுவா இருந்தாலும், எனக்குத்தேன் முதலில். நாளைப் பின்னே பொண்ணு வந்ததும், என்னை மறந்துட்டு பொண்ணு பின்னாடி போன.. அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்.!” விரல் நீட்டி செல்லமாய், தன்னவனை மிரட்டினாள் அழகரின் கருவிழி.

 

 

 

 

“இம்புட்டு நாளும், பையன்தேன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சவ, திடீர்ன்னு பொண்ணுன்னு சொல்றியே? என்ன சங்கதி கரு கரு?” அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் ரகசியமாய் வினவினான் துடிவேல் அழகர்.

 

 

 

“அதெல்லாம் தெரியலை அழகரு! பொண்ணுதேன் பொறக்கும்ன்னு தோணுது.!” என அவள் சொல்ல,

 

 

 

 

“எந்தப் புள்ளையாய் இருந்தாலும், எனக்கு சந்தோசம்தேன். நீ எதையாவது நினைச்சு மனசைப் போட்டு உழப்பிக்காதே டி கிறுக்கச்சி!” மனைவி மீதான அக்கறையில் அவன் மொழிந்த அதே நொடி,

 

 

 

 

“ஏம்ப்பா அழகரு! அறைக்குள்ளே பேசுற ரகசியம் பத்தாதுன்னு இங்கணையும் ரகசியம் பேசுறீகளாக்கும். போதும்ய்யா! உன் பொண்டாட்டி இங்கணதேன் இருக்கா!” எனக் கிண்டலாய், அழகரைப் பார்த்து கூட்டத்தில் ஒருவர் சொல்ல, அழகரோ, கருவிழியைப் பார்த்துச் சிரிக்க, அந்த சூழல் முழுவதையும், கலகலப்பும், மகிழ்ச்சியும் ஆட்கொண்டிருக்க, அந்தப் பெரிய வீட்டின் வாசலில் அதீத சத்தத்துடன், ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து ஒரே நேரத்தில் க்ரீச்சிட்டு நின்றன அந்த மூன்று மகிழுந்துகள்.

வீடு முழுதும் கூடியிருந்தக் கூட்டத்தையும் தாண்டி, வாகனத்தின் சத்தம் எதிரொலிக்க, வேகமாய் வெளியே எட்டிப் பார்த்தார் மீனாட்சி.

 

 

 

 

“அரசி! உன் தம்பி வீட்டிலிருந்து வந்துருக்காய்ங்க போல..!” என மீனாட்சி சொல்ல, அகமும் முகமும் மலர, அவசரமாய் வெளியே வந்த அரசியின் முகத்தில், குழப்ப ரேகைகள் கிளைபரப்ப, அதிர்ந்து, பின் எதையோ யோசித்து,

 

 

 

“என்ன தம்பி நீ மட்டும் வர்ர? நம்ம பிள்ளைகள் வர்ணாவும், வீராவும் எங்கே? பின்னால் வாராகளோ?” எனக் கேட்டார்.

 

 

 

“பார்ரா! எங்களை முந்திக்கிட்டு கேள்வி கேட்டுப்புட்டா நீங்க நல்லவிங்கன்னு நாங்க நம்பிருவோமாக்கும்? ஒழுங்கு மரியாதையாய் பதிலைச் சொல்லுங்க? எங்க தங்கச்சியை எங்கிட்டு ஒளிச்சு வச்சிருக்கீங்க?” என்றபடியே, நாச்சியப்பனின் பின்னாலேயே இறங்கி வந்தான் போஸ்பாண்டி.

 

 

 

 

“தம்பி! நாச்சியப்பா! நெசமாவே புள்ளைங்க இங்கண இல்லை! அம்மாப்பட்டிகுதேன் வந்தாய்ங்க! நான்தேன் உங்களை எல்லாரையும் கூட்டியாரச் சொல்லி அனுப்பினேன்.!” பதற்றமாய் பதில் சொன்னார் அரசி.

 

 

 

 

“உலக நடிப்புடா சாமி! எங்க வீட்டுப் பொண்ணை, விஷேஷம் மண்ணாங்கட்டின்னு நீங்களே வீட்டுக்கு வந்து அழைப்பீங்க! உங்களை நம்பி இந்தப் பெரிய மனுஷனும் அனுப்பி வைப்பாரு. இங்கண வந்து பார்த்தால், அம்மாப்பட்டிக்கு அனுப்பி வைச்சுட்டோம்ன்னு கதை சொல்றீங்க? என்னதேன் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது? இப்போ எங்க தங்கச்சி இங்கண வந்தாகணும்.! இல்லைன்னு வைங்க, நடக்குறதே வேற..!” என முத்துப்பாண்டி தன் பங்குக்கு சத்தமாய் அலற, வீட்டுக்குள்ளிருந்த மொத்தக் கூட்டமும் ஒட்டுமொத்தமாய் வாசலுக்கு வந்திருந்தது.

 

 

 

 

“இதைத்தேன் நான் முன்னவே சொன்னேன்! என் பேச்சை யாரு கேட்டது? விஷேஷ நேரத்தில் வீராவை எங்கே அனுப்பினேன்னு கேட்டேனா இல்லையா? இந்தக் காட்டுமிராண்டி கூட்டம், இப்படித்தேன் வந்து அலறுவாய்ங்கன்னு எனக்குத் தெரியும்!” என நேரம் பார்த்து வாய்ப்பை பயன்படுத்தி பேசினார் கதிர்வேல்.

 

 

 

 

“டேய்! அவிங்களே வீட்டுப் பொண்ணைக் காணோம்ன்னு வந்து நிற்கிறாய்ங்க! நீ வேற உன் பங்குக்கு ஊதிப் பெருசாக்காதே கதிரு! பொறுமையாய் என்ன ஏதுன்னு விசாரிப்போம். நம்ம வீட்டுப் பயலும் இதில் சம்மந்தப்பட்டிருக்கான். ஊரு உறவெல்லாம் கூடி நிற்கையில், நம்ம பிள்ளையை நாமளே விட்டுக் கொடுக்கலாமா? அதுவும் இவிங்க முன்னாடி..? வீட்டுக்குள்ளே கூப்பிட்டு வச்சு நிதானமாய் பேசுவோம். நாளைப் பின்னே அந்தப் பொண்ணுக்கு எதாவது ஒண்ணுன்னா நம்ம வீரா பேருதேன் கெட்டுப் போகும் சொல்லிப்புட்டேன்.!” என அங்கயற்கண்ணியின் மூத்த மகனாய் முதன் முறையாய் யோசித்துப் பேசினார் சரவணன்.

தனக்கு முன் பிறந்தவனின் பேச்சில் உள்ள நியாயம் புரிந்ததாலோ என்னவோ, 

 

 

 

 

“உன் தம்பியையும் அவன் மயனுங்களையும் உள்ளே வந்துப் பேசச் சொல்லு அரசி!” எனச் சொன்னார் கதிர்வேல்.

 

 

 

“நாங்க ஒண்ணும் இங்கண இலைபோட்டு விருந்து சாப்பிட்டுப் போக வரலை!” முந்திக் கொண்டு பதில் சொல்லியிருந்தான் இராஜபாண்டி.

 

 

 

 

“உங்கப் பொண்ணோட சேர்த்து எங்கப் பையனையும்தேன் காணோம். நமக்குள்ளே இருக்கிற பஞ்சாயாத்தெல்லாம் பிறகு பா ர்த்துப்போம். முதலில் பிள்ளைகளைக் கண்டுப் பிடிக்கணும். இப்படியே வாசலில் நின்னு போற போக்கில் பேசுறதெல்லாம் வேலைக்கு ஆகாது. உள்ளார வாங்க!” என அங்கயற்கண்ணி நாச்சியப்பனிடம் சொல்ல, அந்த வீட்டின் மூத்த பெண்மணியின் பேச்சைத் தட்ட முடியாது, நாச்சியப்பன் வீட்டிற்குள் நுழைய, நாச்சியப்பனைத் தொடர்ந்து அவர் பெற்ற மகன்கள் மூவரும், அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

 

 

தித்திக்கும் 🔥

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்