
“உண்மையில் தன்னை விரும்பினாரா?” அதிர்வுப் பெருக்கில் பேச்சிழந்து போனாள்.
“சொல்லு திலோ. இப்ப நான் என்ன பண்ணட்டும்?” அவள் கேட்ட கேள்வியை மீண்டும் அவளுக்கே திருப்பி இருந்தான்.
முகத்தை மூடி கேவி கேவி அழத் தொடங்கினாள் திலோத்தமா.
அவள் அழும்போதே ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்த அக்னி வேந்தன் வந்திருக்க, பவித்ராத்யாவும் வந்தாள்.
“அக்கா…” என ஆரம்பிக்கும்போதே விக்ரம் கண்ணை காட்டி நிறுத்தி இருக்க, அதில் அமைதியாகி விட்டாள்.
மூச்சு முட்ட அழுது முடித்தவள், முகத்திலிருந்து கையை எடுக்கவே இல்லை.
“வெறும் சூழ்நிலைக்காக கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா எப்படி விக்ரம், மனசு ஒப்பி வாழ முடியும். உங்களை விரும்புனேன் விக்ரம். உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும். காலேஜ்க்கு நீங்க வர்ற அன்னைக்குலாம் எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஆனா அதை வெளில காட்டிக்க தைரியமும் இல்ல. கிடைக்கவே கிடைக்காத காதலாவே நீங்க இருந்தாலும், உங்க கூட இருந்த கொஞ்ச கொஞ்ச நேரங்களை எல்லாம் மெமரிஸ்ஸா சேர்த்துக்கிட்டேன். அதுவே என்னை வாழ்க்கை முழுக்க அழகா பயணிக்க வைக்கும்னு தோணுச்சு…” என விசும்பிட, விக்ரம் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருந்தான்.
உள்ளுக்குள் குளுகுளு மொமெண்ட் வேறு.
எந்த சத்தமும் இல்லாததால் சங்கடத்துனே முகத்திலிருந்த கையை எடுத்து நிமிர்ந்தவள் பேந்த பேந்த விழித்தாள்.
விக்ரம் சிரிப்பை அடக்கியபடி நிற்க, அக்னி இடுப்பில் கையூன்றி முறைத்திருந்தான்.
பவித்ராத்யா தான், “அட லூசு அக்காவே. எல்லாரும் காதலிச்சுட்டு காதலை சொல்ல முடியாம பிரிஞ்சு போக பார்ப்பாங்க. நீ என்னன்னா கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்து இன்னும் இதயம் முரளி ரேஞ்சுக்கு மனசுக்குள்ளேயே காதலை வளர்த்துட்டு இருக்க… அதுசரி அப்போ இது லவ் மேரேஜ் தான் கரெக்ட்டா” எனக் கண் சிமிட்டினாள்.
விக்ரமின் பார்வை வேறு அவளைத் துளைத்ததில் கன்னமிரண்டும் சிவந்து போனது.
அக்னியோ, “லவ் பண்றவ இப்படி தான் ஓடிப்போவியா?” எனப் பல்லைக்கடிக்க சிவந்த முகம் சுருங்கிப் போனது திலோத்தமாவிற்கு.
“லவ் பண்ணுனதுனால தான் போனேன்…” தலை கவிழ்த்து கூறியவளை கூர்மையாக பார்த்த விக்ரம்,
“என் அப்பா உன்னை மிரட்டுனாரா?” என வினவ, அவனை விழி கலங்க ஏறிட்டவள், “வெறுமன மிரட்டி இருந்தா பரவாயில்லையே விக்ரம். ஆனா…” என நிறுத்தி விட்டு, அவனுக்கு விபத்து நேர்ந்த நேரத்தைப் பற்றி கூறினாள்.
———–
குத்துயிரும் குலையுயிருமாக கிடந்த விக்ரம வேந்தனை கண்டு மயக்கம் வரும் அளவிற்கு அழுதிருந்தாள் திலோத்தமா.
விக்ரமின் நிலையை விழுங்கிக்கொண்டு, பயந்து அழுதிருந்த அக்னிலாவையும் உடைந்தே போயிருந்த திலோத்தமாவையும் தேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு பவித்ராத்யாவிற்கு. இதற்கிடையில், போலீஸ் விசாரணை வேறு.
விக்ரமின் நிலை அப்போது தான் சீராகத் தொடங்கி இருந்தது. ஆகினும் அவன் கண் விழிக்கவில்லை.
உயிருக்கு சேதமின்றி காப்பாற்றி விட்டாலும், கைகள் இரண்டும் பாரலைஸ் ஆகிவிட்டதென்று மருத்துவர்கள் கூற, “அவர் வந்துடுவாருல… வந்துடுவாருல” என்ற வார்த்தை மட்டுமே திலோத்தமாவின் மந்திரமாக இருந்தது.
அந்நேரம் பவித்ராத்யாவை போலீஸ் விசாரணைக்காக அழைக்க, உறங்கி கொண்டிருந்த அக்னிலாவை திலோத்தமாவின் அருகில் இருந்த சேரில் கிடத்தினாள்.
“அக்கா பாப்பாவ பார்த்துக்கோ. உடனே வந்துடுறேன்” அவளின் குரல் எல்லாம் அவளுக்கு கேட்கவே இல்லை.
“வந்துடுவாரு… வந்துடுவாரு” என்ற புலம்பலையும் நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட பைத்தியமே பிடித்திருந்தது அவளுக்கு.
“அக்கா ப்ளீஸ்கா இப்படி இருக்காத எனக்கு பயமா இருக்கு” பவித்ராத்யா கண்ணில் நீருடன் கூற,
“விக்ரம் வந்துடுவாருல… ம்ம் என்கிட்ட திரும்ப வந்துடுவாருல” அப்போதும் மூச்சிரைக்க கேட்ட தமக்கையை இறுக்கி அணைத்துக் கொண்டவள், “வந்துடுவாருக்கா. அத்தான் கண்டிப்பா வந்துடுவாரு” என்றவளுக்கு நெஞ்சமே நடுங்கியது.
தனியாளாய் எத்தனையை தான் அவளால் சமாளிக்க இயலும். தன்னை தேற்றவே அவளுக்கு அரவணைப்பு தேவைப்பட்டதே!
வாழ்க்கை ஏன் இப்படி தேற்ற கூட ஆளின்றி தனிமையைத் தந்திருக்கிறதென்றே உடைந்து போனாள்.
அவனுக்கு விபத்து நேர்ந்த போது திலோத்தமா அழுதது தான். அதன்பிறகு மருத்துவமனையில் இருந்த இரு வாரங்களும் அவள் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. புத்தி பேதலித்தது போல இருந்தது அவளது நடவடிக்கை எல்லாம்.
‘கடவுளே! என் அக்காவையும் அத்தானையும் என்கிட்ட பழைய மாதிரியே குடுத்துடு’ என மனமார வேண்டுதலை வைத்து விட்டு காவலரை சந்திக்க செல்ல, இங்கோ இன்னும் திலோத்தமா தரையை வெறித்தபடியே தான் அமர்ந்திருந்தாள்.
அந்நேரம் அவள் அருகில் நிழலாடியது.
“என் பையனை படுத்த படுக்கையாக்க தான் இழுத்துட்டு ஓடி வந்தியா?” அக்குரல் தான் அவளை மெல்ல மீட்டது.
லேசாய் நிமிர்ந்து பார்த்தவள் அங்கு சர்வ நிச்சயமாக சிவக்குமாரை எதிர்ப்பார்க்கவில்லை.
இதழ் வளைத்து புன்னகைத்தவர், “உனக்கு ஆயுசு கெட்டியோ? ரெண்டாவது தடவை என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகியிருக்க…” என்றவரின் முகம் இப்போது கோரமாக மாறியிருக்க, திலோத்தமா அதிர்ந்து பார்த்தாள்.
“என்… என்ன சொல்றீங்க?”
“உன்னை ஆக்சிடென்ட் பண்ண சொன்னா, என் ஆளு சொதப்பி விக்ரமை தூக்கிட்டான். இடியட்” என்றதில் உறைந்து போனாள்.
“ஆனா அதுவும் நல்லது தான். அவன் சுயநினைவோட இருக்கும் போது உன்னை அனுப்ப மாட்டான். சோ, இப்ப நீயே போய்டு”
“போக மாட்டேன். என் விக்ரமை விட்டு எங்கயும் நான் போக மாட்டேன்” காலை குறுக்கி அமர்ந்தவள் மறுத்திட,
“நீ போய் தான் ஆகணும்.” என்றார்.
“போகலைன்னா என்ன செய்வீங்க? மறுபடியும் என்னை கொல்ல முயற்சி பண்ணுவீங்களா? பண்ணிக்கோங்க. நான் போக மாட்டேன். என் புருஷன விட்டு என்னை போக சொல்ல நீங்க யாரு?”
“நான் அவனோட அப்பா” சிவக்குமாருக்கு கோபம் பீறிட்டது.
“அது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. இப்ப அவரே என் குழந்தைக்கு அப்பா ஆகிட்டாரு. அவருக்குன்னு தனி குடும்பம் இருக்கு…” என்றாள் நிமிர்வாக.
“அந்தக் குடும்பத்தை நான் ஒன்னும் இல்லாம ஆக்குவேன். உன்னையும் உன் பொண்ணையும் இருந்த இடம் தெரியாம அழிச்சுடுவேன்…” சிவக்குமார் சீறிட, அவள் திடுக்கிட்டாலும் அக்னிலாவின் கையை இறுக்க பற்றிக்கொண்டு,
“என்ன வேணா செஞ்சுக்கோங்க. நான் என் விக்ரமை விட்டு போக மாட்டேன்…” என்று அழுத்தமாக கூறியதில், சிவக்குமாருக்கு வெறி பிடித்தது.
“சரி, அப்போ அவனையே போக வச்சுடுறேன்” என்றவர் விறுவிறுவென ஐசியூவினுள் நுழைந்து தாதியருக்கு கண்ணை காட்ட அவர் வெளியில் சென்று விட்டார்.
திலோத்தமா அடித்து விழுந்து உள்ளே சென்றதில், சிவக்குமார் எவ்வித அலட்டலுமின்றி விக்ரமின் ஆக்சிஜன் மாஸ்க்கை கழற்றி விட, மூச்சுக்கு ஏங்கியது விக்ரமின் உயிர்.
“ஐயோ விக்ரம்” என ஆக்சிஜன் மாஸ்க்கை எடுக்க முயல சிவக்குமார் அவளை தள்ளி விட்டார்.
” ]ஐயோ வேணாம் வேணாம்… நான் போயிடுறேன் ப்ளீஸ் ப்ளீஸ் அவரை ஒன்னும் பண்ணிடாதீங்க ப்ளீஸ் ஐயோ ப்ளீஸ்… நான் போறேன் நான் செத்து கூட போறேன். ப்ளீஸ்ஸ்ஸ்” என்று அவர் காலில் விழுந்தே கெஞ்சியதில்,
நக்கல் நகையுடன் ஆக்சிஜன் மாஸ்க்கை திரும்ப மாட்டினார்.
தரையில் விழுந்தே அழுது கரைந்தவளிடம், “இப்பவே போ” என்று உறுமினார்.
விழுக்கென நிமிர்ந்தவளோ விக்ரமை பார்த்தாள்.
கை பாரலைஸ் ஆனதால் தன்னை விட்டுச் சென்றதாக எண்ணி விடுவானே. அப்படி ஒரு துளி எண்ணினால் கூட, அவள் உயிர் இந்த பூமியில் நிச்சயம் இருக்காது…
“சார் ப்ளீஸ் சார். நான் போறேன் கண்டிப்பா போறேன். ஆனா அவருக்கு சரி ஆனதும் போறேன்…”
“என்னடி பிளே பண்றியா: என மீண்டும் ஆக்சிஜன் மாஸ்க்கில் கை வைக்க போக, அவர் காலை பற்றியவள், “இல்ல இல்ல சத்தியமா நான் பிளே பண்ணல. இப்ப கண்ணு முழிச்சதும் அவர் கண்டிப்பா என்னை தேடுவாரு. நான் இதுனால விட்டுப் போனேன்னு அவர் முதல்ல நம்பவே மாட்டாரு. எப்படியும் என்னைத் தேடி பிடிச்சுடுவாரு. அவருக்கு சரி ஆனதும் நேரம் பார்த்து நானே போயிடுறேன்… நான் பேச்சு மாற மாட்டேன் கண்டிப்பா போயிடுறேன்…” என்று தேம்பினாள்.
ஒரு கணம் நிதானித்த சிவக்குமாருக்கும் அது சரியென்றே பட்டது. இப்போது அவள் சென்றால், தன் மீது சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது… என்று சிந்தித்தார் போலும், “சரி, இப்போ இருந்து நான் சொல்றதை தான் நீ கேட்கணும். புரியுதா?” என்று பல்லைக்கடிக்க, சரியென தலையசைத்தாள்.
“நீ நேரடியா போக வேணாம். அவன் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆனதும், அவனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ண பணம் கேட்டு அக்னிட்ட ஹெல்ப் கேளு.”
“அகிகிட்டயா?” எந்த முகத்தை வைத்து மீண்டும் அவனை சந்திப்பாள்!
“அவன் மூலமா வந்தா தான் அவனுக்கு யார் மேலயும் சந்தேகம் வராது. கண்டிப்பா அவன் உன் மேல செம்ம கோபத்துல இருப்பான். அவனே உன்னைப் புழுவை மாதிரி தூக்கி எறிஞ்சுடுவான்” என்றதில், சோர்ந்து விட்டாள்.
அக்னி அவளைத் தவறாக எண்ணுவதை மட்டும் அவளால் எப்படி தாங்க இயலும்?
ஏற்கனவே நண்பன் என்ற ஒருவனை இழந்து விட்டாள். தற்போதோ பணத்திற்காக வந்ததாக தெரிந்தால் தன்னை முற்றிலும் வெறுத்து விடுவானே! ஆகினும் அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை.
அனைத்திற்கும் சரியென தலையசைத்தவள், சற்று பிசகினாலும் விக்ரமின் உயிருக்கு ஆபத்து என்று புரிய, வாழ்வே முடிந்து போன ஒரு நிலைக்கு தள்ளப்பட்டாள்.
விக்ரமை சில நொடிகள் வெறித்து விட்டு, மீண்டும் உறங்கிக் கொண்டிருந்த அக்னிலாவின் அருகில் அமர்ந்தவள், வெடித்து அழுதாள்.
வேலையை முடித்துக்கொண்டு வந்த பவித்ராத்யா திடீரென திலோத்தமா அழுவதை கண்டு அவசரமாக அவளிடம் செல்ல, அவளோ அழுகையை முடித்தபாடில்லை.
“அத்தானுக்கு பாரலைஸ் ஆகிடுச்சுன்னு அழுகுறியாக்கா? அதான் பொழைச்சுட்டாருல. அதுவே போதும்கா. அத்தானை நாம பார்த்துக்கலாம்.” என சமாதானம் செய்ய, அவளோ அழுது அழுது சோர்ந்து போனாள்.
இப்போதும் அதே தேம்பல் அவளிடம்.
பவித்ராத்யா திலோத்தமாவை உலுக்கி, “ஏன்கா இதெல்லாம் என்கிட்ட சொல்லல. சொல்லிருக்கலாம்ல. மனசுக்குள்ளயே வச்சுட்டு புழுங்கிட்டு இருந்தியா?” என்றதில்,
“என்னால எந்த முடிவும் எடுக்க முடியல பேபி. இவரு உயிரோட கண்ணு முன்னாடி விளையாடுனதை பார்த்ததுமே அவர் எந்த எல்லைக்கும் போவாருன்னு தெரிஞ்சுடுச்சு. அதுக்கு மேல என்னால போராட முடியல. என்னால யாரையும் இழக்க முடியாது பவிமா” என்றவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
பெரியவர்களும் அப்போது தான் அங்கு வந்து, நடந்ததை அறிந்து அதிர்ந்து விட்டனர்.
அக்னியோ, “என்கிட்ட பேச இவளை அனுப்புனல்ல, அப்போவாவது சின்னதா ஒரு ஹிண்ட் குடுத்துருக்கலாம்ல?” என ஆதங்கமாக கேட்க,
:பெத்த பையனை கொலை பண்ண பார்த்தாரு அகி. உனக்கு உண்மை தெரிஞ்சு உன்னையும் ஏதாச்சு செஞ்சுட்டா நான் என்ன பண்ணுவேன். எங்க வாழ்க்கை தான் ரிஸ்க்லயே இருக்கு. என்னால உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு மட்டும் தான் எனக்கு மண்டைக்குள்ள ஓடுச்சு” என்றவளின் பேரன்பில் அவனுக்கு கண் கலங்க, அவள் தலையைப் பிடித்து ஆட்டினான்.
“லூசு…” அதற்கு மேல் அவளிடம் கோபம் காட்ட துளி கூட மனமில்லை.
“இனி எந்த பிரச்சினையும் இல்ல. இப்படி முட்டாள்தனம் பண்ணாத சரியா. என் அண்ணாவை அழ விட்ட, கொன்னுடுவேன்.” என்று போலியாக மிரட்ட, “சாரிடா… எல்லாத்துக்கும்” என்றவளின் கமறிய குரலில் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
அந்த மன்னிப்பில், அவனது காதல் மனதையும் காயப்படுத்திய குற்ற உணர்வு!
ஆகினும் பவித்ராத்யா அவனை விரும்பியதை இன்னும் கூட அவள் அறியவில்லை.
விக்ரம் அவளை மட்டுமே பார்த்திருந்தான். இமைகள் அங்கும் இங்கும் நகரவில்லை. திலோத்தமாவின் மீது மட்டுமே அவனது கருவிழிகள் மொத்தமும் படர்ந்திருந்தது.
“என்ன காரியம் செஞ்சுருக்கான் பாரு அந்த ஆளு” நிவேதாவிற்கு கோபம் கனன்றது.
பவித்ராத்யா தான், “நீ என்ன தான் தெரியாம வச்சுருந்தாலும், இந்த ஆக்சிடென்ட் உனக்காக நடந்தது தான்னு, அத்தானுக்கு சர்ஜரி செய்றதுக்கு முன்னாடியே இவரு கண்டுபிடிச்சுட்டாரு. அனேகமா அப்பவே யாருன்னும் தெரிஞ்சுருக்கும்…” என்று அக்னியைப் பார்க்க, “ம்ம் சந்தேகம் இருந்துச்சு. நான் சில சட்ட ரீதியான பிரச்சினையை முடிக்க வேண்டியது இருந்ததுனால தான் அமைதியா இருந்தேன்.” என்றான்.
“அப்டியா?” திலோத்தமாவிற்கு வியப்பாக இருந்தது.
“என்ன சட்ட ரீதியான பிரச்சினை?” பவித்ராத்யா தயக்கமாக கேட்க, அவன் லெதர் தொழிற்சாலையின் பங்குகளை விக்ரமிற்கு வாங்கி தந்ததை பற்றி கூற அவள் விழி விரித்தாள்.
“அவங்களுக்கு வேணும். பிசினஸ்ல பங்கு வரக்கூடாதுன்னு தான இப்படி துரத்தி விட்டாங்க. இப்ப விக்ரம் அத்தான் அங்க எம்டியா இருந்தா தான், உறைக்கும்.”
“எதுக்கு அகி இதெல்லாம்” திலோத்தமா தான் தயங்கினாள். ஏனெனில் அந்த பங்குகளின் காரணமாக, திலோத்தமா அங்கு முக்கிய பொறுப்பை வகிக்க நேரிடலாம்.
“இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும். இந்தப் பணமும் பதவியும் தான அடுத்தவங்களை ஆட்டுவிக்குது. அதான் அதை பறிச்சேன். நீயும் இதெல்லாம் அக்செப்ட் பண்ணி தான் ஆகணும்” என்று மிரட்டலாகக் கூறி விட, “விக்ரம் ஒத்துக்கிட்டாரா?” என்று அவனைப் பார்க்க அவனோ அவள் மீதிருந்த பார்வையை இன்னும் திருப்பவில்லை.
அதில் அவளும் அவன் விழிகளில் சிக்குண்டு போக, அதனைப் புரிந்த மற்றவர்கள் சத்தமின்றி வெளியில் நகர்ந்து விட்டனர்.
“ஏன் திலோ… ஏன்? என்மேல உனக்கு… என்னால நீ ஆரம்பத்துல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டுட்ட திலோ. இந்த கஷ்டமே உனக்கு வரக்கூடாதுன்னு தான் என் காதலையே மறைச்சேன். ஆனா…” எனும்போதே அவனை வாயை மூடினாள்.
“இந்தக் கஷ்டம் எல்லாம் வேற வழியா கூட வரணும்னு தலைல எழுதி இருக்கலாம். ஆனா இந்த ஒவ்வொரு கஷ்டத்துலயும் நீங்க கூட இருந்தது மட்டும் தான், எனக்கு பெரிய பலமே. இந்தக் காதலும் அன்பும் இவ்ளோ கஷ்டப்பட்டா தான் கிடைக்கணும்னா, இன்னும் எவ்ளோ கஷ்டம் வேணாலும் அனுபவிக்க நான் தயாரா தான் இருக்கேன் விக்ரம்.
ஆனா உங்களை விட்டுப் போகணும்னு முடிவு எடுத்ததுல, உயிரே போய்டுச்சு. சாதாரணமா அந்த முடிவை நான் எடுக்கலை விக்ரம்” என்றதில், அவள் வாயை மூடியவன்,
“எனக்கு நீ விளக்கமே சொல்லலைன்னாலும் உன்னைப் புரியும் திலோ. நீ செய்ற எந்த செயலுக்கும் முழுமுதற் காரணமா நானா மட்டும் தான் இருப்பேன். இந்த காதல் இத்தனை நாளும் உனக்கும் எனக்கும் வரமா சாபமான்னு தெரியல. ஆனா இனி கண்டிப்பா வரமா மட்டும் தான் இருக்கும்” என்றவன் அவளது இரு கன்னத்தையும் பற்றினான்.
“ரொம்ப வருஷமா மனசுக்குள்ள சொல்ல துடிக்கிற வார்த்தை தான். வார்த்தைக்கு வேலை தேவைப்படலைன்னாலும் இப்ப சொல்லணும்னு தோணுது. ஐ லவ் யூ திலோ!” என்று நிறுத்தி நிதானமாகக் கூற, பெண்ணின் விழிகள் வியப்பில் நிமிர்ந்தது.
கன்னங்களில் சிவப்பு படர, வெட்கமும் ஆட்கொண்டது.
அது அவனுக்கு புதுமையாய்!
“இவ்ளோ வெட்கப்படுவன்னு தெரிஞ்சுருந்தா டெய்லி சொல்லிருப்பேனே. ஐ லவ் யூ திலோ” என்று மீண்டும் உரைக்க, அவளுக்கோ இன்ப அவஸ்தை.
“ஐயோ போதுமே! இப்ப தான் கல்யாணம் ஆச்சுன்னு நினைப்பா உங்களுக்கு” என்று விலக முற்பட, “எனக்கு தினம் தினம் நீ புதுசா தான் தெரியுற. பகல்லயும் நைட்லையும்” இறுதி வார்த்தையை மட்டும் கிசுகிசுப்பாக கூற, “ஐயோ விக்ரம்… ப்ளீஸ்: என்று அவன் நெஞ்சில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
அவளை நிமிர்த்தியவன், “நீ திரும்ப சொல்லணுமாக்கும்!” என்று சீண்டிட,
“நான் நிறைய தடவை சொல்லிருக்கேன்…” என்று அவன் பட்டனை திருகினாள்.
“அப்ப ஏதோ எனக்கு உடம்பு சரி இல்லாததுனால பாவப்பட்டு சொல்றன்னு நினைச்சேன்” என்று அசடு வழிந்ததில் அவள் லேசாக முறைக்க, “இப்ப சொல்லுடி ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” என்றான் அவளைப் போன்றே.
“திடீர்னு எப்படி சொல்ல… போங்க”
“இதுக்காக நான் டைம் ஸ்கெடியூலா பண்ண முடியும். மனுஷனை தவிக்க விடாத. எனக்கு கேட்கணும் சொல்லு திலோ” என்று கெஞ்சி கொஞ்சினான்.
நாக்கை துருக்கியவள், “நீங்க மட்டும் நான் சொன்னப்ப பதில் சொன்னீங்களா?” என வாரிட, “அதுக்கு பழி வாங்குறியா? பாவம் திலோ உன் புருஷன்…” எனப் பாவம் போல கூறியதில், “இந்தப் பாவப்பட்ட புருஷன் என்ன பண்ணுவாருன்னு தான் எனக்குத் தெரியுமே” என்று கன்னத்தை தள்ளி விட்டாள்.
“என்ன பண்ணுவேனாம்?” பதில் தெரிந்து கொண்டே கேட்டதில், மேனி சிலிர்த்தது.
“நீங்க சரியில்ல விக்ரம். ஒழுங்கா தள்ளிப்போங்க… இது ஹாஸ்பிடல்.”
“நானா ஆரம்பிச்சேன். நான் ஏதோ பண்ணுவேன்னு நீ தான் ஆரம்பிச்ச.”
“ஹையோ என்னங்க நீங்க…” என சிணுங்கியதில், “ஒழுங்கா நான் கேட்ட மூணு வார்த்தையை சொல்லிருந்தா இது ரொமான்ஸா முடிஞ்சுடுக்கும். நீ தான் இதை எராட்டிக்கா மாத்திட்டு இருக்க. அண்ட் ஆல்சோ நானும் ரொம்ப ஏங்கி போயிருக்கேன்” என்று அவள் கழுத்தினுள் புதைந்து கொள்ள, பல மாதங்கள் கழித்து கிடைத்த கணவனின் அண்மை அவளுக்கும் ஏக்கம் கொடுத்தது.
“நானும்!” உண்மையை ஒப்புக்கொண்டவளின் நெற்றி முட்டியவன், “நிலா பாப்பாவுக்கு ஒரு பாப்பா ரெடி பண்ணிடலாம்…” எனக் கண் சிமிட்ட, வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள்.
“நிலாவுக்கு கையில இருந்த ஊசியை எடுத்துடலாம்னு சொன்னாங்க. நான் போய் பார்த்துட்டு வரேன்…” என்று அவள் கன்னம் தட்டி நகரப்போக, அவன் கையைப் பிடித்தாள்.
விக்ரம் என்னவென பார்த்ததில், “ஐ லவ் யூ விக்ரம்” தலைசாய்த்து அவன் கேட்ட வார்த்தைதனை கூற, விக்ரமின் இதழ்களில் நளின புன்னகை.
போதை தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
51
+1
3
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


💖💖💖💖💖