
திமிர்-16
பயமும் பதற்றமும் அப்பிய முகத்துடன் வாசலுக்கும், வீட்டுக்கும், திரும்பத் திரும்ப நடையாய் நடந்துக் கொண்டிருந்தார் நாச்சியப்பன். காலை வீரபத்ரனுடன் சென்ற தன் ஒற்றை மகள் இன்னும் வீடு திரும்பாததை நினைத்து உள்ளுக்குள் தவித்துப் போனார் அவர்.
அலைபேசியை எடுத்து நூறாவது முறையாய் மகளுக்கு அழைத்துப் பார்த்தார். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாய் தகவல் சொல்லி ஓய்ந்தது அலைபேசி.
“ஆத்தா மயிலு! எங்கதேன் ராசாத்தி போன? ஃபோன எடுத்து இந்தா வந்துட்டு இருக்கேன்னு சொன்னாத்தான் என்ன?” மகளைக் காணவில்லை என்கிற பதைபதைப்பையும் மீறி, சலித்துக் கொண்டன அவரின் உதடுகள்.
“எங்கிட்டு போனாகன்னு தெரியலையே? மழை வேற ஓய்ஞ்ச பாடில்லை. எங்கண மாட்டிக்கிட்டு நிற்கிறாகளோ தெரியலையே? எம் மவளை அனுப்பி வச்சது பத்தாதுன்னு, அரசி பெத்த மயனையும் சேர்த்து அனுப்பி வச்சிருக்கேன். நெஞ்சு வேற படக்கு படக்குன்னு அடிச்சுக்குது. எப்பா! திருப்பரங்குன்றத்து முருகா! என் பிள்ளைகளை காப்பாத்தி வீட்டுக்கு கொண்டாந்து சேர்த்துருப்பா!” அவர் அனுமதி இல்லாமலே, மனம் முருகனின் பாதத்தில் வேண்டுதல் வைத்தது.
மூன்று ஆண்பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த செல்வ மகள். இந்த வீட்டைக் கட்டியாளும் இளவரசி. ஒற்றை விரல் நீட்டலில், வளர்ந்த ஆண் மகன்களை அடக்கி நிற்கவைக்கும், நிமிர்வும் நெஞ்சுறுதியும் உள்ளவள் தான்.. ஆனாலும், பயம் அவர் மனதைக் கவ்விப் பிடித்தது. நேரம் செல்ல, செல்ல உள்ளுக்குள் ஏதோ பிசைவது போன்ற உணர்வில் தவித்துப் போனார் நாச்சியப்பன்.
மீண்டும், அலைபேசியை தன் நடுங்கும் கரங்களால் எடுத்து, மகளுக்கு அழைத்துப் பார்த்தார். எந்தப் பலனும் இல்லை. திடீரென யோசனை வந்தவராய், வீரபத்ரனுக்கு அழைத்துப் பார்த்தார். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாய், மீண்டும் மீண்டும் சொல்லி ஓய்ந்தது.
“ஹலோ! நான்தேன் நாச்சியப்பன் பேசுறேன். நம்ம புள்ளை திண்டுக்கல் டவுனு வரைக்கும்தேன் வந்துச்சு. நம்ம கடைக்கு வந்துச்சுங்களா?!” என யாருக்கோ அழைத்து வினவினார் நாச்சியப்பன்.
“நம்ம கடைக்கு வரலைங்களே நாச்சியப்பன். வேற கடைக்கு எதுவும் போயிருப்பாங்க!”
“பாவா மெடிக்கல்ஸ்ன்னு சொல்லித்தேன் அனுப்பினேன். ஊரெல்லாம் மழையும் தண்ணியுமா கிடக்கு. எங்கணையாச்சும், ஒதுங்கி நிற்பாகளா இருக்கும்! ஒருவேளை நம்ம புள்ளை அங்கண வந்துச்சுன்னா ஒரு ஃபோன் போட்டு சொல்லுறீங்களா?”
“கண்டிப்பா நாச்சியப்பன்! நானே ஃபோன் போட்டு நம்ம வர்ணா பாப்பா கிட்டே கொடுக்கிறேன்.!” என அந்த மருந்துக் கடைக்காரர் சொல்லவும், சரி என சமாளிப்பாய் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தார் நாச்சியப்பன்.
இன்னும் சிலரிடம் அலைபேசியின் உதவியுடன், அழைத்து விசாரித்து, எங்கேயும் மகள் வரவில்லை என்ற தகவல் கேட்டு, உடைந்து போனார் நாச்சியப்பன். மாலை மங்கத் துவங்க, இவருக்குள் பயம் பிடித்துக் கொண்டது. எல்லாவற்றையும் விட, தன் மகன்கள் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது? அதுவும் வீரபத்ரன் அரசியின் மகன் எனத் தெரிந்தால்.. என்ன செய்வது? என்ற பயமும் பதற்றமுமாய் நடையில் வேகத்தைக் கூட்டினார் நாச்சியப்பன்.
“பேசாமல், போலீசுக்கு சொல்லிருவோமா?” வாய்விட்டு முனகியவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காவல்துறையின் உதவியை நாடுவதும், சரியாக இருக்குமா? என்பது அவருக்குப் புரியவில்லை. மனதிற்குள் ஆயிரம் யோசனைகள் ஓடிக் கொண்டிருக்க,
‘தான் அனுப்பியது தான் தவறோ? ஒருநாள் மருந்து மாத்திரை எடுக்கவில்லை என்றால், செத்தாவிடுவோம்?’ தன்னைத் தானே நொந்துக் கொண்டார் நாச்சியப்பன். தனக்குள்ளேயே யோசித்துக் குழம்பியபடியே அவர் நின்றிருக்க, வீட்டின் வாசலில் உறுமலுடன், வாகனம் நிற்கும் சத்தம் கேட்டதும், அவசரமாய் வந்து எட்டிப் பார்த்தவர் அதிர்ந்து நின்றார்.
போஸ்பாண்டி, வாகனத்திலிருந்து இறங்கி, மகிழுந்தின் கதவை அறைந்து சாத்திவிட்டு, வேட்டியைக் கட்டியபடி வீட்டை நோக்கி வர, நாச்சியப்பனுக்குள் ஏற்கனவே இருந்த பயமும் பதற்றமும் இன்னும் கொஞ்சம் எகிறத் துவங்கியிருந்தது.
அதே நேரம், போஸ்பாண்டியை நோக்கி வந்த காளைமாடான கருப்பனோ, போஸ்பாண்டியின் முகத்தின் மீது தன் முகம் வைத்து உரசி, “ம்ம்ம்மா!” எனக் குரல் எழுப்பி என்னவோ சொல்ல முயன்றது.
“என்னடா கருப்பா? வீட்டுக்குள்ளே போக விடுடா! என்னத்துக்கு வழியை மறைச்சுட்டு நிக்கிறே?”
“டேய்! சொல்லிட்டே இருக்குறேன்ல்ல? அப்பறம் என்ன?” என போஸ்பாண்டி ஐரட்டுவதையும் கேட்காமல், தன் வாயால் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தது கருப்பன்.
“டேய்! கருப்பா! என்னை வெறியேத்தாதே! பிறகு தொழுவத்தில் புடிச்சுக் கட்டிப்புடுவேன்.!” எனச் சொன்னதும், கருப்பன், அமைதியாகிவிட,
“எப்பா! மயிலு எங்கே? என்னத்துக்கு கருப்பன் இப்படி கோளாறு பண்ணிக்கிட்டு திரியறான்?” என போஸ்பாண்டி கேட்கவும், பயத்தில் தொண்டைக் குழி ஏறி இறங்க, அமைதியாய் நின்றார் நாச்சியப்பன்.
“என்னப்பா கேட்டுட்டே இருக்கேன்ல்ல? மயிலு எங்கே? அவளைக் காணோம்ன்னுதேன் இவன் இம்புட்டு சண்டித்தனம் பண்ணிக்கிட்டு திரியறான்.!”
“மயிலு இந்தா பக்கத்தில்தேன் போயிருக்கு. இப்போ வந்துரும்யா! நீ உள்ளாற வா!”
“இந்த அடிச்சு ஊத்தற மழையில் மயிலு வெளியே போயிருக்குதாக்கும்? ஃபோனைப் போட்டு வரச் சொல்லுங்க! இருட்ட ஆரம்பிச்சுருச்சு. கரண்ட் எதுவும், புடுங்கிப்புட்டான்னா ரோட்டில் என்ன கிடக்கு, எது கிடக்குன்னு ஒண்ணும் தெரியாது. நான் காரில் வர்ரதுக்கே ரொம்பவும் சிரமமா போச்சு. தம்பிகளையும் ஃபோன் போட்டு வரச் சொல்லியிருக்கேன். நீங்க முதலில் ஃபோன் போடுங்கப்பா!” என சொன்னபடியே போஸ்பாண்டி வீட்டுக்குள் வந்து அமர்ந்த போதும் கூட, ஆணியடித்தாற் போல் அசையாமல் நின்றார் நாச்சியப்பன்.
“என்னப்பா! ஏன் இந்த முழி முழிக்கிறீக? ஃபோன் போடத்தானே சொன்னேன்? உங்க முழியைப் பார்த்தால் ஒண்ணும் சரியா படலையே?!”
“ஃபோன் போட்டுப் பார்த்தேன் போஸூ! என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியலை. ஃபோன் போக மாட்டேங்குது. மழை பெய்யறதால் டவர் கிடைக்கலையான்னு தெரியலை!” எனச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு வழியாகிப் போனார் நாச்சியப்பன். மகளுக்கு ஏதாவது நேர்ந்திருக்குமோ? என்ற பயம் மனதை அறுக்கத்தான் செய்தது.
“என்ன ஃபோன் போகலையா.? அதை இம்புட்டு சாதாரணமா சொல்லுறீக? மயிலு எப்படி போச்சு? டி.வி.எஸ்-ஐ எடுத்துட்டு போச்சா? அதைத்தேன் செம்மை பண்ணணும், ரிப்பேரா கிடக்குன்னு சொன்னேனா இல்லையா.? என்னத்துக்கு அவளைத் தனியா அனுப்புனீக? சொல்லியிருந்தால், நான் வந்துருப்பேன்ல்ல? அந்த ஓட்டை வண்டி எங்கண பழுதாகி நிக்கிதோ தெரியலை!” என போஸ்பாண்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“இல்லை போஸூ! அது வந்து..!” என அவர் எதையோ சொல்ல வர,
“ஆமா! வாசலில் நின்னுட்டு இருந்த ஸ்கார்ப்பியோவைக் காணோம். யார் எடுத்துட்டுப் போனது? மயிலு கார் ஓட்டாதுன்னு எனக்குத் தெரியும். மயிலை, யாரோட அனுப்புனீக?” எனச் சரியாய் யூகித்துக் கேட்டான் போஸ்பாண்டி.
“அது.. அது.. வந்து..!” மகன் என்ன சொல்வானோ? என்ற தயக்கம் அவர் குரலில் தெரிந்தது.
“என்னப்பா மென்னு முழுங்குறீக? யாரோட அனுப்பி வச்சீக? உங்க உடம் பொறவாத அக்கா மயன் எதுவும் வந்தானா.? கேள்விப்பட்டேன், அவனுக்கும் நம்ம தங்கச்சிக்கும், கல்யாணம் முடிக்க சம்மதம்ன்னு சொல்லீருக்கீகளாம்? இவனுக்கு எதுவுமே தெரியாது, இரகசியமா கல்யாணத்தை முடிச்சுப்புடுவோம்ன்னு நினைக்காதீக! அப்படி எதுவும் மனசில் எண்ணமிருந்தால், இப்போவே துப்புரவா அழிச்சுருங்க! ஏதாவது ஏடாகூடமான சேதி எதுவும் என் காதுக்கு வந்துச்சு, முதலில் வெட்டப் போறது உங்க அக்கா மயனைத்தேன்.!” என போஸ்பாண்டி திண்ணமாய் சொல்ல, திடுக்கிட்டு அதிர்ந்து மகனை நிமிர்ந்துப் பார்த்தார் நாச்சியப்பன்.
“என்ன பார்க்குறீக? நான் சொன்னால், சொன்னதைச் செய்வேன்னு உங்களுக்குத் தெரியும். சொல்லுங்க, நம்ம வீட்டுப் புள்ளையை யாரோட அனுப்பி வச்சு தொலைச்சிருக்கீக?” போஸ்பாண்டியின் குரல் உயர்ந்து, அந்தக் கூடம் முழுதும், அதிர்ந்து எதிரொலித்தது.
“என்னத்துக்கு இம்புட்டு சத்தமா கத்திட்டு கிடக்குறீக? எட்டு ஊருக்கு சத்தம் கேட்கும் போல? என்னத்து அண்ணே இப்படி கத்துறே?” என்றபடியே முத்துப்பாண்டி உள்ளே நுழைய, அவன் பின்னாலேயே வந்து நின்றான் இராஜபாண்டி.
“என்னைக் கேட்கிறதை, இந்தா நிற்கிறாரே இவரைக் கேளு! நம்ம மயிலை எங்கேயோ, யார் கூடவோ அனுப்பி வச்சிருக்கிறாரு! என்ன ஏதுன்னு கேட்டால், ஒத்தை வார்த்தை வாயிலிருந்து வர மாட்டேங்குது.!” எரிச்சலும் கோபமாய், போஸ்பாண்டி கேட்க,
“என்னப்பா, வர்ணாவை எங்கே அனுப்பி வச்சீக? யாரோட அனுப்பி வச்சீக? வயசுப் புள்ளையைக் கண்டவனையும் நம்பி அனுப்பக் கூடாதுங்கிற பொறுப்பு கொஞ்சமாச்சும் இருக்கா?”
“என்னப்பா? எங்களுக்குத் தெரியாமல், அக்கா குடும்பத்தோட சேரணும்ன்னு திட்டம் போடுறீகளோ? கண்டதையும் கற்பனை பண்ணிக்கிட்டு கனா கண்டுட்டு திரியாதீக! எங்க தங்கச்சிக்கு எப்படியாப்பட்ட மாப்பிள்ளை பார்க்கணும்ன்னு எங்களுக்குத் தெரியும்!” என முத்துப்பாண்டியும், இராஜபாண்டியும் ஆளுக்கொன்றாய் பேசவும்,
“சும்மா கிடங்கடா! அவ உங்களுக்கு தங்கச்சின்னா, எனக்கு மவ. அதுவும் நானும் உங்க அம்மாவும் தவமிருந்து பெத்த மவ. என் மவளுக்கு எது எப்படி செய்யணும்? எந்த நேரத்தில் செய்யணும்ன்னு எனக்குத் தெரியும். சும்மா ஆளாளுக்கு ஒண்ணு பேசுறீக.? நேத்து பெய்த மழையில் இன்றைக்கு மொளைச்ச காளானுங்க! இஷ்டத்துக்குப் பேசுவீகளோ? நானே புள்ளையைக் காணோம்ன்னு பதறிப் போய் அமைதியாய் நிற்கிறேன். ஒத்தை வார்த்தை திருப்பி பேசலைன்னா, நீங்க என்ன வேணும்ன்னாலும் பேசலாம்ன்னு அர்த்தமில்லை புரிஞ்சுதா?”என குரலுயர்த்திப் பேசியவர்,
“மாத்திரை மருந்து தீர்ந்து போச்சுன்னு, இன்னைக்கே வாங்கிட்டு வந்து தீருவேன்னு பிடிச்சபிடியா உங்க தங்கச்சிதேன் நின்றாள். அதேன், அந்த ஃபோட்டோ எடுத்தானே அந்தப் பய கூட போய்ட்டு வான்னு அனுப்பி வச்சேன். என்னமோ கொலைக் குத்தம் பண்ணின மாதிரி ஆளாளுக்கு, கட்டம் கட்டி கேள்வி கேட்குறீக?” எனச் சொல்லிவிட்டு தன்னைச் சுற்றி நின்ற மகன்களை நிமிர்ந்து பார்த்தார் நாச்சியப்பன்.
தன்னைச் சுற்றி நின்ற தன் மகன்கள் மூவரின் முகத்திலும், ஒருவித நிம்மதி பரவுவதை நாச்சியப்பனால் உணர முடிந்தது.
‘நமக்குத் தெரியாமல், இந்தப் பக்கி பயலுங்க எதோ திட்டம் வச்சிருக்கானுங்க!’ என தன் மனதிற்குள் குறித்துக் கொண்டார்.
“அந்தப் பயலோட அனுப்பிருக்கேன்னு சொல்லியிருக்க வேண்டியது தானே? எதுவும் சொல்லாமல், குத்துக்கல்லாட்டம் நின்னா நாங்க என்ன நினைக்கிறது?” என்ற போஸ்பாண்டியின் கேள்விக்கு,
“ஏன்டா, என்னமோ வயசுப் புள்ளைக்கு சடங்கு சுத்தற மாதிரி, சுத்தி சுத்தி நின்னு கேள்வி கேட்குறீக? என்னத்தை பதில் சொல்றது? பதில் சொல்ல விட்டால் தானே?” எனக் கேட்டார் நாச்சியப்பன்.
“அதெல்லாம் இருக்கட்டும், தங்கச்சிக்கு ஃபோன் போட்டீங்களா?” எனப் பேச்சை திசை திருப்பினான் இராஜபாண்டி.
“போட்டாச்சு! போட்டாச்சு!”
“தங்கச்சி என்ன சொன்னாள்?” இந்த முறை கேள்வி முத்துப் பாண்டியிடமிருந்து வந்தது.
“ஏன்டா! நூறு வட்டம் ஃபோன் போட்டு பார்த்துட்டேன். தொடர்பு எல்லைக்கு எந்தப்பக்கமோ போய்ட்டாள்ன்னுதேன் திரும்பத் திரும்ப வருது, என்னை என்னடா பண்ண சொல்லுறீங்க?” கோபமாய், நாச்சியப்பன் குரலுயர்த்திய அதே நேரம், வெளியில் மகிழுந்து வந்து நிற்கும் சத்தம் கேட்டது. மகிழுந்தின் சத்தத்தில் நிம்மதியாய் மூச்சுவிட்ட நாச்சியப்பன், வாசலை நோக்கி நடந்தார்.
*******
“எம்மா தங்கச்சி! உன்னையெல்லாம் பெத்தாங்களா? இல்லை ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா? ஒரு எருமைமாடு குறுக்கே போனதுக்கா இந்தக் கத்து கத்துனே? மனுஷன் உசுரு போய் உசுரு வந்துச்சு. இந்தாரு மண்டை கொய்யாக்கா மாதிரி வீங்கி கெடக்கு பாரு!”
“நான் என்ன பண்ண? நான் கத்தலைன்னா எருமை மேலே இடிச்சுருப்பீக தானே?”
“ம்க்கும்! உங்க நியாய தர்மத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. எருமையைப் பார்த்தாலும் கத்து. இடி இடிச்சாலும் கத்து! உங்க ஆத்தா வயிற்றுக்குள்ளே இருக்கையிலே விசில் எதுவும் முழுங்கிட்டியான்னு தெரியலை. வீல்.. வீல்ன்னு அந்த காலத்து ஹீரோயின் மாதிரி கத்துறே! என் காது செவிடாய்ப் போகாமல் கேட்குதேன்னு எனக்கே ஆச்சரியமாகத்தேன் இருக்கு.! என் பொண்டாட்டியைப் பார்க்கன்னு கூட்டிட்டுப் போய் இப்படி மண்டையை வீங்க வச்சு கூட்டிட்டு வந்துட்டீங்களே பக்கீங்களா!” எனப் புலம்பியபடியே, காத்தவராயன் வாகனத்திலிருந்து கீழே இறங்க,
“போங்கண்ணே! சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்காதீக!” எனச் சொன்னாள் மேகவர்ணா.
“ம்க்கும்! என் வேதனை உனக்கு கிண்டலா? அடேய் வீரபத்ரா! பேய் என்னமும் அடிச்சுருச்சா? இம்புட்டு அமைதியாய் வர்ர? சினிமாவில் வர்ர பீம் பாய்ஸ் மாதிரி, நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு முன்னால் வந்து மூணு பேரு ரவுண்ட்டு கட்டுவானுங்களே? என்ன செய்யப் போற?”
“அவிங்க ரவுண்ட் கட்டினால், நாம சதுரம் கட்டுவோம்!” என சாதாரணமாய், வீரபத்ரன் சொல்ல,
“எப்பா! விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன்டா! ஏற்கனவே மண்டை உடைஞ்சுருச்சு. நீ வேற என்னத்தையாவது சொல்லி, உன் பங்குக்கு நீயும் உடைக்காதே டா!” எனப் புலம்பினான் காத்தவராயன்.
“அது வந்து காக்காவிரட்டி! விபத்துக்கு காரணம் நாம இல்லை! இதோ இந்த மயிலம்மாதேன். அதோட சேதாரம் உனக்கும், எனக்கும்தேன். அவங்க பொண்ணை பத்திரமாகத்தானே வீடு வந்து சேர்த்திருக்கிறோம்! அப்படி என்ன சொல்றாய்ங்க அந்த அருவா மீசைக்காரய்ங்கன்னு பார்த்துருவோம்!” என வீரபத்ரன் சொல்ல,
“இந்தாரு டென்ருப்பீஸூ! காரை மரத்தில் மோதி சேதாரப்படுத்தினது நீதேன். அதனால், சேதாரத்துக்கு நஷ்ட ஈடு கொடுத்துதேன் தீரணும்.!” என அழுத்தமாய் சொன்னாள் மேகவர்ணா.
“எம்மா சீமாட்டி! வீல்.. வீல்ன்னு கண்டக்டர் விசில் அடிக்கிற மாதிரி கத்தினது நீ.. வண்டி மரத்தில் முட்ட காரணமும் நீ! காக்கா விரட்டி மண்டையை வீங்க வச்சதும் நீதேன். என் மண்டையில் கட்டுப் போட வச்சதும் நீதேன். அதனால், எங்க சேதாரத்துக்கு நீதேன் நஷ்டஈடு கொடுக்கணும். ஒருவேளை என் உசிரு போயிருந்தால், யார்கிட்டே போய் நஷ்டஈடு கேட்ப?” என வீரபத்ரன் சொன்ன அதே நேரம்,
“லூசா டா நீ? பைத்தியம் மாதிரி பேசுறே? இன்னொரு முறை இப்படி பேசினே வாயை உடைச்சிருவேன்!” எனச் சொன்னவள் வீரபத்ரனை ஓங்கி அறைந்திருந்தாள்.
“அடியேய்! ராக்காச்சி! பொசுக்குன்னு அடிச்சுப்புட்ட? என்னதான்டி உன் மனசில் நினைச்சுட்டு இருக்கிறே?”
“ம்ம்! நீ இப்படி பேசினால், நான் அடிக்கத்தான் செய்வேன். உசிரு என்ன உனக்கு அம்புட்டு விளையாட்டா போச்சா.? பேச்சுக்குக் கூட இனிமே இப்படி சொல்லாதே!” எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென வீட்டுக்குள் செல்லும் மேகவர்ணா வீரபத்ரனின் கண்களுக்கு புதிதாகவும், புதிராகவும் தெரிந்தாள்.
“என்னடா அடியை வாங்கிப்புட்டு, என்னமோ அவார்ட் கொடுத்த மாதிரி நிற்கிறே? தமிழ் சினிமா மட்டுமில்லை உலக சினிமாவையே மிஞ்சுடுவீங்க டா!”
“இதுக்குப் பேருதேன் லவ் காக்காவிரட்டி!”
“ம்க்கும்! இதுக்குப் பேரு லவ்வுன்னு எழுதி ஒட்டிக்கிடுங்க டா! பளார்ன்னு அந்தப் புள்ளை கன்னத்தில் அடிச்சுப்புட்டு போவுது, இதுக்குப் பேரு லவ்வுன்னு பிணாத்திக்கிட்டு திரியுற? உருப்பட்டுருவீங்கடா! நீங்களும் உருப்படுவீங்க! உங்க காதலும் உருப்பட்டுரும்!” எனக் காத்தவராயன் சொல்லிக் கொண்டே, தாங்கள் தங்கியிருக்கும் அறையை நோக்கி நகரப்
போன நேரம்,
“அப்படியே பதுங்கி, அந்தப்பக்கமா போனால் என்ன அர்த்தம்? இங்கே வாங்க!” என்ற போஸ்பாண்டியின் குரலில்,
“அடேய் அரசி மயனே.. இந்த பெரிய மீசைக்காரன் கூப்பிடும் தோரணையே சரியில்லையே டா! பயந்து வருது டா! அப்படியே ஓடிருவோமா?” என வீரபத்ரனிடம் கேட்டான் காத்தவராயன்.
“நான் இருக்கேன்ல்ல காத்தவராயா! பிறகு என்ன பயம்.? வா பார்த்துக்குவோம்!”
“ம்க்கும்! நீயும் கூட இருக்கேங்கிறதுதேன் என் பயமே..! எல்லாத்துக்கும் என்னை நோக்கித் தானே கையை நீட்டுவே? ஒருவேளை உண்மை தெரிஞ்சு புடிச்சு கட்டி வச்சுட்டாய்ங்கன்னா என்னடா பண்ணுறது?”
“நீ சரியான பயந்தாகொள்ளி காக்காவிரட்டி! நான் யாரு சொக்கேசனோட பேரன், எங்கம்மா அரசியோட மயன். நான் எப்படி பயப்படுவேன்.?”
“உங்கப்பன் கதிர்வேலுவுக்கும் நீ மயன்தான்டா. மனசில் இருக்கட்டும். எப்பா வீர சூர புலி, அன்றைக்கு அந்தக் கருப்பன் விரட்டினப்போ, எனக்கு முன்னே ஒருத்தன் தலை தெறிக்க ஓடுனியான். அவனை நீ பார்த்தே? பேரு கூட வீரபத்ரனாம்.!” என நக்கலாய் காத்தவராயன் சொல்ல,
“வாயை மூடிக்கிட்டு வா காக்காவிரட்டி! அவிங்கக் கூப்பிட்டும், நாம போகலைன்னாதேன் ரொம்பவும் சந்தேகப்படுவாய்ங்க! வா போவோம்!”எனச் சொன்னபடியே காத்தவராயனை இழுத்துப் போனான் வீரபத்ரன்.
“ஏன் மயிலு, ஒருத்தனுக்கு மூணு பேரு அண்ணனுங்கன்னு இருக்கோம்! எங்கக் கிட்டே சொன்னால், நாங்க அந்த மாத்திரையை வாங்கித் தர மாட்டோமா? அப்படி என்ன உனக்குப் பிடிவாதம்? நாங்க உசுரோடத்தானே இருக்கோம்?” என்ற போஸ்பாண்டியின் கேள்வியில் பதறி,
“அண்ணே!” என அலறியிருந்தாள் மேகவர்ணா.
“பிறகு என்னம்மா? ஒத்தை வார்த்தை சொல்றதுக்கு என்ன?”
“அண்ணே! நான் என்ன தவழுற பச்சைப் புள்ளையா? எனக்கு போகவும்,வரவும் வழி தெரியுமே? அதேன் துணைக்கு இவிங்க இருந்தாய்ங்களே?” என அப்போது தான் உள்ளே வந்து நின்ற காத்தவராயனையும், வீரபத்ரனையும் பார்த்துக் கை நீட்டினாள் மேகவர்ணா.
“இவிங்க என்ன நமக்கு ஒட்டா? உறவா? எங்க அளவுக்கு அக்கறையும், பாசமும் வைக்க இங்கே யாரும் இல்லை மயிலு!” என போஸ்பாண்டி சொல்ல,
“அடேய்! அரசி மயனே! உன் மச்சாங்காரன் ஒட்டா.? உறவான்னு கேட்கிறான், பேசாமல் உண்மையைச் சொல்லிருவோமா?” என வீரபத்ரனின் செவிக்குள் முணுமுணுத்தான் காத்தவராயன்.
“இந்தாரு காக்காவிரட்டி! எதாவது உண்மை தெரிஞ்சுதுன்னு வையி! முதல் பலி நீதேன்!” என சிரித்தபடியே சொன்னான் வீரபத்ரன்.
“தம்பி! ரொம்ப நன்றிங்க தம்பி! மயிலு சொன்னுச்சு, விபத்து நடந்து கார் மரத்தில் மோதிருச்சுன்னு.. உங்க உசிரையும் பொருட்படுத்தாமல், எங்க தங்கச்சியைக் காப்பாத்தினதுக்கு நன்றிங்க!” என போஸ்பாண்டியும், மற்ற இருவரும் கையெடுத்துக் கும்பிட, ஒட்டுமொத்தமாய் அதிர்ந்தே போனான் வீரபத்ரன்.
“அடேய் வீரா! என்னடா இவிங்க பொசுக்குன்னு நன்றியெல்லாம் சொல்லுறானுங்க? டெரர் பீஸுன்னு நினைச்சேனே? மூணும் மொத்தமா டம்மி பீசு போலடா!” எனக் காத்தவராயன் சொல்ல,
“அட நீ வேற காக்காவிரட்டி! நான் மட்டும் அரசி மயன்னு தெரிஞ்சுச்சு அரிவாளை எடுத்துட்டு ரவுண்டு கட்டிருவாய்ங்க! அப்படியே நேக்கா எஸ்கேப் ஆகிருவோம்!” எனச் சொன்னபடியே அவர்கள் நகர,
“தம்பி! உங்களுக்கு வேற தலையில் அடிபட்டிருக்கு. எம்புட்டு செலவாச்சுன்னு சொல்லுங்க! கொடுத்துடுறோம்!”
“நான் இதைப் பணத்திற்காக செய்யலை சார். நாச்சியப்பன் சார், ஒரு உதவியாய் இவங்களை அழைச்சுட்டுப் போகச் சொன்னாங்க, நான் கூட்டிட்டு போனேன் அம்புட்டுதேன். எதிர் பாராத நேரம் மாடு குறுக்கே வரவும், வண்டி மரத்தில் மோதிருச்சு. அப்படிப் பார்த்தால், உங்க கார் முன் பக்கம் ஹெட்லைட் எல்லாம் போச்சு. அந்த சேதாரத்திற்கு நானும் பொறுப்பேத்துக்கனும் தானே? ஏன்னா காரை ஓட்டிட்டு போனது நான் தானே? எல்லாத்துக்கும் பணத்தை விலை வைக்க முடியாது சார்.” என வீரபத்ரன் கேட்க, சிலாகித்துப் போய் வீரபத்ரனின் கரத்தைப் பிடித்துக் கொண்டான் போஸ்பாண்டி.
“இம்புட்டு நல்ல மனுஷனா இருக்கீக? நிச்சயம் உங்களைப் பெத்தவங்கதேன், அருமை பெருமையாய் நல்லது கெட்டதெல்லாம் சொல்லி வளர்த்திருக்கணும். திரும்ப திரும்ப சொல்றேன்னு சங்கடப்பட்டுக்காதீக, எங்க வீட்டுப் புள்ளையைப் பத்திரமா கொண்டாந்து சேர்த்ததுக்கு நன்றி தம்பி!”
“ம்க்கும்! அவனைப் பெத்தவிங்க யாருன்னு தெரிஞ்சால், குடும்பம் மொத்தமும் கூட்டா சேர்ந்து கொலை பண்ணிப்புடுவானுங்க! விவரம் புரியாமல், அருமை, பெருமைன்னு பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கானுங்க!” என காத்தவராயன் தன் வாய்க்குள் முனக,
“காக்காவிரட்டி! ஐயாவுக்கு வாங்கிட்டு வந்த மாத்திரைகள் காருக்குள்ளே இருக்கு. எடுத்துட்டு வந்து கொடுத்துடு! அப்போ நாங்க கிளம்புறோம்ங்க!” என சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தான் வீரபத்ரன்.
“மயிலு! நீ போய் அந்த மாத்திரையை வாங்கிட்டு வந்துரு ராசாத்தி! என்னத்துக்கு அவிங்களை சிரமப்படுத்திக்கிட்டு!” என நாச்சியப்பன் சொல்ல வீரபத்ரனின் பின்னாலேயே நடந்தாள் மேகவர்ணா.
“எம்மா தங்கச்சி! ஆனாலும் நீ விவரம்தேன். எங்களுக்கு அடிபட்டுருச்சுன்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாய்ங்க! அந்த நேரத்தில் உங்க அப்பனுக்குத் தேவையான மாத்திரையெல்லாம் நேக்கா வாங்கிட்டியே.. நீ நினைச்சு வந்த காரியம் நடந்துருச்சு. ஆனால், நான்தேன் என் பொண்டாட்டியை பார்க்க முடியலை. அடேய்! வீரபத்ரா, கல்யாணத்துக்குப் பின்னாடியும் என்னைக் கட்ட பிரம்மச்சாரியா சுத்த விடுறீங்கடா.!” எனப் புலம்பியபடியே காத்தவராயன் உள்ளே சென்றுவிட, மாத்திரை மருந்துகள் அடங்கிய நெகிழிப் பையைக் கையில் எடுத்துக் கொண்டு, நகர முயன்றவளைக் கைப்பிடித்து இழுத்து நிறுத்தினான் வீரபத்ரன்.
“வீரா! கையை விடு! அண்ணேங்க பார்த்தால் அம்புட்டுதேன்!” பயத்துடன் வாசலைத் திரும்பிப் பார்த்தபடியே கரத்தினை அவன் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றாள் மேகவர்ணா.
“அவன் யாரு டி?” என்ற வீரபத்ரனின் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்து, பின் முயன்று முகத்தைச் சாதாரணமாய் வைத்துக் கொண்டவள்,
“யாரைக் கேட்கிறே? எனக்கு யாரையும் தெரியாது!” எனச் சொன்னாள்.
“நாம போகும் போது, வண்டிக்குக் குறுக்கே ஒருத்தன் வந்தானே, அவன் யாருன்னு கேட்டேன்!” எனக் கேட்டவன், பிடித்திருந்த அவள் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.
“நான் யாரையும் பார்க்கலையே? என் கண்ணுக்கு எவனும் தெரியலை.!” எனச் சாதாரணமாகச் சொன்னவளைக் கோபத்தோடு பார்த்தான் வீரபத்ரன்.
“உனக்கு ஒண்ணும் தெரியாது. நம்ம வண்டிக்குக் குறுக்கே வந்த மொட்டை மண்டையன் யாருன்னு உனக்குத் தெரியாது. காக்காவிரட்டி பின்னால் உட்கார்ந்திருந்ததால், வண்டிக்குக் குறுக்கே என்ன வந்துச்சுன்னு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வண்டி ஓட்டின எனக்கு தெரியாதா டி? உனக்கு அவனைத் தெரியும். ஏதோ ஒரு காரணத்திற்காக, நீ என் கிட்டே அவன் யாருன்னு சொல்லாமல் மறைக்கிறே! அன்றைக்கு இதே வீட்டுக்குள்ளே உன்னைத் தேடி வந்தவனும் இவன்தேன். இன்னைக்கு மட்டும், வண்டி விபத்தான இடத்தில் சனங்க கூடாமல் இருந்திருந்தால், அவன் நிச்சயம் நம்ம பக்கத்தில் வந்திருப்பான்.!”
என வீரபத்ரன் சொன்னதும், மேகவர்ணாவின் முகம் பயத்தில் வெளிரத் துவங்கியது.
அவள் கண்களுக்குள் இன்று நடந்த ஒட்டுமொத்தக் காட்சிகளும் வந்து போனது. வாகனம் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, மரம் விழுந்ததும், பசுபதி குறுக்கே வந்ததும், பசுபதியின் உதடுகளில் இருந்த கொடூரமானச் சிரிப்பும் அவள் மனக்கண்ணில் தோன்றி இன்னும் கொஞ்சம் அவளைப் பயமுறுத்திய அதே நேரம், இன்னொரு காட்சியும் அவள் மனக்கண்ணில் தோன்றியது.
மேகவர்ணாவின் கண் முன்னே, அந்த பசுபதி யாரையோ கொலை செய்யும் காட்சி. முகத்தை மூடிக் கொண்டு, ஏதோவொரு மூலையில் மேகவர்ணா நின்றிருக்க, அவள் முகத்தை மூடியிருந்த அவள் கரங்களில், சூடான உதிரம் பட்டுத் தெறித்தது. என்றோ நடந்தது, இன்று நடந்ததைப் போல் அவள் கண்களுக்குள் வந்துப் போக, சத்தமாய் கத்த வழியின்றி, தன் இதழ்களை இறுக மூடியவள், உடல் நடுங்க, வீரபத்ரனை அதிவேகமாய் அணைத்திருந்தாள். அவள் செயல்களின் காரணம் புரியாமல், குழப்பமாய் வீரபத்ரன் நின்றிருந்த அதே நேரம், அவனை இறுக அணைத்திருந்தவளின் உடல் நடுக்கத்தை வீரபத்ரன் உணர ஆரம்பிக்க, தன் மனதிற்கினியவளின் வெதுவெதுப்பான கண்ணீர், அவன் தோள் சட்டையை நனைத்து தோளைச் சுட்டது.
தித்திக்கும் 🔥

