Loading

நட்சத்திரம் 4

 

இரு வெந்நிற புரவிகள் கம்பீரமாய் நிற்க அது இழுத்து வந்த ரதத்தில் ராஜகுமாரனாய் அவன் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தான் அவனருகே அவளின் ராஜகுமாரியாய் அவள், அவள் பிறை நெற்றியில் சூடியிருந்த குங்குமமும், இருவரின் தோள்களில் ஊஞ்சலாய் ஆடிய மாலையும், அவள் கழுத்தில் பொன்னூஞ்சாலாய் ஆடிய பொன் தாலியும் அவர்கள் திருமணம் அரங்கேறியதை காட்ட, அவர்கள் முன் நடனமாடிய படி சில நடன மங்கைகள் ஆடிய படியே பூக்களை மணமக்கள் மீது தூவ திருமணப் பாடல்களைப் பாட காற்றிலும் சந்தோசம் நிரம்பயிருந்தது.

நிறைவான அந்தத் திருமணத்தை ஊர் மக்களே கொண்டாட மறுபடியும் கனவில் இருந்து விழித்தாள் மகிழினி ஆனால் முன்பை போல் அலறவில்லை அந்தக் கனவுகளுக்கான அர்த்தம் அவளுக்குத் தெரிந்தாக வேண்டும், அவள் புருவத்தின் மத்தியில் இருந்த அந்தக் குழப்ப முடிச்சு அவளின் புதிதான அமைதி அனைத்தும் விஜயலட்சமியின் மனதை பெரிதும் வருத்தியது.

அவளின் தொலைப்பேசி எடுத்து பிரகதீரனுக்கு அழைப்பு விடுத்தாள் உடனே அழைப்பு ஏற்கப்பட,

“தீரன் உங்க பாட்டியைப் பார்க்க இன்னைக்கி நானும் அம்மாவும் வீட்டுக்கு வரலாமா..?” எனக் கேட்டாலும் அவள் மனது இவ்வளவு காலையில் போன் செய்து அவனை தொந்தரவு செய்துவிட்டதாய் எண்ணியது. 

“தாரளாமா வாங்க மஹி, லொக்கேஷன் ஷேர் பண்ணுறேன்” எனச் சொன்னான் தீரன்.

“ஆனால்..” என அவள் வார்த்தைகளை உள் இழுக்க தயங்கியபடி,

“என்ன தயங்காம சொல்லுங்க மஹி “ எனக் கேட்ட தீரனிடம்,

“ட்ரெயினிங் இன்னக்கி ஸ்டார்ட் ஆகுது” என அவள் தயங்கினாள்.

“நெக்ஸ்ட் ஃப்ரைடே தான் ட்ரெயினிங் மஹி, நீங்க கிளம்பி வாங்க” எனத் தீரன் சொல்ல,

“ஓகே தீரன், பத்து மணிக்கு வந்திருவேன்” என அழைப்பை துண்டித்தாள்.

“அம்மா, அம்மா கிளம்பு முக்கியமான இடத்துக்குப் போகணும் சீக்கிரம் கிளம்பு” எனச் சொன்ன மஹியை,

“துடப்பை கட்ட பிஞ்சிரும், நேத்து வந்ததுல இருந்து ஒண்ணும் சொல்லாம இப்ப வந்து வெளிய போகணும் சொல்லுற, போடி நான் வர முடியாது” என முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டார் விஜய லட்சுமி.

“அம்மா ப்ளீஸ், வாமா என் தங்கம்ல” என அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள் மகிழினி.

“ஷாப்பிங் போறதா இருந்தா சொல்லு நானும் வரேன், இல்லைனா வரலை, வீட்ல வேலை நிறையா இருக்கு, துணி வேற தைக்குறதுக்கு நிறையா கிடக்கு” என அவர் சொல்ல,

முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு சிறு குழந்தை போல் அவள் நிற்க,

“மூஞ்ச அப்படி வைக்காத, வரேன் வந்து தொலையுறேன், ஆனா ஒரு கண்டிசன்” என விஜயலட்சுமி சொல்ல,

“என்ன ப்ளவுஸ்க்கு எம்மிங் பண்ணி தரணும் அது தான, செஞ்சு தரேன்” எனச் சொன்னாள் மகிழினி.

“அப்போ சரி, ஆமா எங்கடிமா போறோம்” எனக் கேட்க,

“தீரன் வீட்டுக்கு” என அவள் சாதாரணமாக சொன்னாள்.

“மாப்பிளை வீட்டுக்கு சொல்லுடி, கட்டிக்கப் போறவன பேர் சொல்லி கூப்பிட கூடாதுடி” என விஜயலட்சுமி அவளை வம்பிழுக்க,

“அப்படி எதாவது தோணுச்சுனா மொதல்ல உன் கிட்ட தான் சொல்லுவேன், மொத நீ கிளம்புமா” எனச் சொல்லி விட்டு அவள் தயாராகச் சென்றாள்.

***–***

சில மணி நேரங்களில் தீரன் வீட்டு வாசலில் நின்றது அவளது ஸ்கூட்டி.

அது வீடல்ல அரண்மனை என்றே சொல்லலாம் “இவ்ளோ பெரிய வீடு இருக்குறவனா சாதாரண ரேடியோ ஆபிஸ்ல வேலை செய்யுறான் நம்ப முடிலையேடி” எனச் சொன்ன படி மகிழினி முகத்தைப் பார்த்தார் விஜயலட்சுமி.

“என்னாலையும் நம்ப முடியலைமா, ரொம்ப சிம்பிளா இருந்தாரு” எனச் சொன்னபடி அந்த அரண்மனைக்குள் இருவரும் நுழைய,

எண்ணற்ற வேலையாட்களும் அங்கிருந்தனர் வாசலிலே காத்திருந்த தீரன் அவளைப் பார்த்ததும் வெளியே வந்தான்.

“வாங்க ஆண்ட்டி , வா மஹி , உள்ள வாங்க” என அவனழைக்க ‘கண்டிப்பா இது இவன் வீடா இருக்காது,வாடகைக்கு ஏதும் இருப்பான்’ என நினைத்தபடி நடந்தாள் மகிழினி.

“சிட்டிக்குள்ள இப்படியொரு அரண்மனை மாதிரி வீடா” என ஆச்சரியமாய்க் கேட்டார் விஜயலட்சுமி.

“இது எங்க கொள்ளு தாத்தவோட வீடு ஆண்ட்டி, இப்ப இந்த வீடு சினிமா ஷூட்டிங்கு தான் அதிகம் யூஸ் ஆகுது இப்ப கூட உள்ள ஷூட்டிங் தான் நடந்திட்டு இருக்கு” என அவன் சொல்ல அதெல்லாம் காதில் வாங்காது,

“உங்க பாட்டி எங்க இருக்காங்க தீரன்?” என அவள் கேட்க,

‘வந்த விசயத்துல தான் குறியா இருக்கா. நம்மள கண்டுக்குறாளா பாரு’ என மனதில் புலம்பிய படி “பாட்டி உள்ள தான் இருக்காங்க அம்மாவ மொதல்ல பார்த்திருங்க “ எனச் சொல்லியபடி முன்னே நடந்தான் தீரன்.

“தீரா வந்து சாப்பிடு” என்ற குரல் சமையல் அறையிலிருந்து கேட்க

“வாங்க கிட்சன்குள்ள வாங்க” என அழைக்க அங்குத் தடபுடலாய் சமையல் வேலை நடந்து கொண்டிருக்க அதை மேற்பார்வை செய்தபடி,

“ரசத்துல உப்பு கம்மியா இருக்கு பாரு, அந்தக் கேசரிக்கு இன்னும் கொஞ்சம் நெய் விடுங்க, ஏம்மா பாயசத்துல நாட்டு சக்கரை போடுங்க அந்த வெள்ளை சக்கரைய கீழ வைங்க” என அதைப் பிடுங்கி வைத்தார் நீலவேணி அது சமையலறை அல்ல சமையல் கூடம் போல் காட்சியளித்தது.

மகிழினியை பார்த்தவுடன் நீலாவேணிக்குள் ஒரு பூரிப்பு வருங்கால மருமகள் அல்லவா?

“மகிழினி வாமா, என்ன சாப்பிடுற , உனக்கு என்ன பிடிக்கும்” என அதீத அக்கறையுடன் கேட்டார்.

“இல்லை எனக்கு எதுவும் வேண்டாம் ஆண்ட்டி பாட்டியைப் பார்க்கணும்” என அவள் சொல்ல,

“சரிமா போய் ஹால்ல உட்காரு பாட்டி இப்போ வந்திருவாங்க” எனச் சொன்னார் நீலாவேணி.

“தீரா கெஸ்டை ஏன் சமையலறைக்குக் கூட்டிட்டு வர போய் ஹால்ல உட்கார வை, இப்ப வந்திடுறேன்” எனச் சொல்லிய படி மகிழினியையும் விஜயலட்சுமியும் பார்த்துப் புன்னகை சிந்தினார் நீலவேணி.

அரண்மணையைப் பெண் சிங்கமாய்க் கட்டி காத்து வருவது நீலவேணியே,பிரகதீரனின்  தந்தை சிறிய வயதிலே காலமாகிவிட்டார், சொத்துக்கள் ஏராளம் அனைத்தையும் பொறுப்புடன் கட்டி காத்து வருகிறார் நீலவேணி.

வரவேற்பறையில் அமர்ந்தபடி கண்களைச் சழற்றி அங்கிருக்கும் பொருள்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வரேவற்பரையின் மத்தியில் தொங்கி கொண்டிருந்த சர விளக்கு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது..

நீலவேணி வந்துவிட முதலில் விசயத்தைக் கேட்டறிந்தார் “மஹிக்கு எதோ பேட் டிரிம்ஸ்லாம் வருதாம் அம்மா, அதான் நம்ம பாட்டிய பத்தி சொன்னேன்” எனத் தீரன் சொல்ல,

“அய்யோ தீரன் தம்பி கெட்ட கனவெல்லாம் இல்ல, கல்யாண கனவு தான், இவளுக்குத் தான் கெட்ட கனவு எனக்கு அது நல்ல கனவு தான்” என விஜயலட்சுமி சொல்ல,

“அம்மா கொஞ்ச நேரம் சும்மா இரு”அவர் காதுகளில் கேட்கும் படி கிசுகிசுத்தாள் மகிழினி.

“கல்யாண கனவு நல்ல விசயம் தானே, இதுல பயப்பட என்ன இருக்கு” என நீலவேணி கேட்க,

“இவளுக்கு இருபத்தி ரெண்டு வயசு ஆரம்பிச்சதுல இருந்து இந்தக் கனவு வந்திட்டு இருக்கு” என விஜயலட்சுமி சொன்னார்.

“கனவுல வர பையனையே கல்யாணம் செஞ்சுக்கமா மகிழ்” என நீலவேணி எளிதாய்  சொல்லி விட 

“அதுவந்து” என வார்த்தைகளை அவள் உள் இழுத்து திணறி போனாள் மகிழினி.

“கனவுல வந்த பையனை நேர்ல பார்த்துட்டியா.?” என மீண்டும் கேள்வி கேட்க தயங்கியபடி அவள் விழிகளை நோட்டமிட்ட நீலவேணி உடனே பேச்சை மாற்றி,

“பாட்டி பூஜையில இருப்பாங்க, அது வரைக்கும் இந்த ஜூஸைக் குடிங்க, பேசிகிட்டே இருங்க இப்ப வந்திருவேன்” எனக் கிளம்பினார் நீலவேணி.

நெடுநேரக் காத்திருப்பிற்குப் பின் மீராம்மா வந்து நிற்க, அவரைப் பார்க்க அவ்வளவு வயதான பாட்டி போல் தெரியவில்லை கொஞ்சம், இளமையாகவே இருந்தார் மீராம்மா, காவி நிற புடவையில் கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் வந்தவர் மகிழினியை பார்த்து புன்னகைத்தார்.

“கனவில் தேன்றிய மணாளன், நிஜத்திலும் மாலை சூடுவான் என்ற பயம் ஒருபுறம், இருமணம் சேர்ந்தால் ஈன்றவள் தனித்துவிடப்படுவாள் எனக் கவலை ஒருபுறம், இதற்குத் தீர்வு கிடைத்து விடாதா என மீரம்மாவை தேடி வந்திருக்கிறாய் சரி தானே பெண்ணே” என அவளைப் பார்த்தார் மீராம்மா.

அவர் பேசியது புரிந்தாலும், தீரன் இருப்பதால் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் மகிழினி.

“சரியா புட்டு புட்டு வைக்கிறிங்களே நீங்க குறி சொல்றவங்களா” என விஜயலட்சமி கேட்க,

“முக்காலமும் அறிந்தவள் இந்த மீராம்மா, இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேதை நான், என் கண்ணுக்கு தெரியும் சிலவற்றைக் கூறுகிறேன் கவனமாகக் கேள்” என்றவர் கண்களை மூடி தியான நிலைக்குச் சென்றார் ஐந்து நிமிடங்குளுக்குப் பின் பேச ஆரம்பித்தார்,

“சொப்பனங்கள் கண்டவள் மணாளனை நேரில் கண்ட பதினோராம் நாள் அவன் கைகளிலே மாங்கல்யம் ஏறும், அந்தப் பௌர்ணமி இரவில் நட்சத்திரங்களின் ஆனந்த கூச்சல் இவளின் காதுகளில் ஒலிக்க மணாளன் கைப்பற்றிய நொடி மங்களம் உண்டாகும் இவள் வாழ்வில், பௌர்ணமி இரவுக்குள் இவை அனைத்தும் நடந்தேறவில்லை என்றாள் வந்த இடமே திரும்பி செல்வாள் இந்தப் பெண்” என மீரம்மா சொல்லிவிட்டுக் கண்கள் திறக்க,

“வந்த இடம்னா என்ன அர்த்தம்மா” என விஜயலட்சுமி கேட்க,

“அது ரகசியம், தேவ ரகசியம்” என மீரம்மா சொன்னார்.

“இது உண்மை தானே? , இதை நாங்க எப்படி நம்புறது, தீரன் தான் இவ கனவுல வருகிறான், திருமணம் செய்தால் இந்தக் கனவிலிருந்து விடிவு கிடைக்குமா” என விஜயலட்சுமி கேட்டார்.

“இங்கே வா“ என விஜயலட்சுமியை அழைத்தவர் காதுகளில் எதோ கிசுகிசுக்க அவர் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து போனார் விஜயலட்சுமி.

“நான் சொன்னது சரி தானே விஜயலட்சுமி, மாற்றம் ஏதும் உண்டா” எனக் கேட்டவர் சிரிக்க,

“மகிழு, இந்தத் தம்பியை கல்யாணம் செஞ்சுக்கடி அம்மாகாக” என விஜயலட்சுமி கெஞ்ச ஆரம்பித்தார்.

“அம்மா சும்மா இருங்க, இதெல்லாம் தீரனோட ட்ராமா மாதிரி தோணுது வாங்க, இங்கிருந்து போகலாம்” என மீராம்மாவை அலட்சியம் செய்தாள் மகிழினி.

“மஹி இதெல்லாம் பொய் இல்ல நிஜம் ஒரு நிமிசம்” என அவள் கைகளைப் பற்ற வந்தவனை,

“நோ தீரன் , டோன்ட் டச் மீ” என அவள் சொல்ல அவள் சொல்வதைக் காதில் வாங்காது அவள் கைகளைப் பற்ற இருவரின் விழிகளும் ஒன்றாய் சங்கமிக்க அவள் அவன் கண்களில் பயணம் செய்தவள் நெடிய தூரம் செல்ல தனக்குள் ஏற்படும் மாற்றம் அறியாத பேதையாய் மயங்கி சரிந்தாள் மகிழினி.

“மஹி..!” என்ற கேவலுடன் தாங்கி பிடித்தான் தீரன்.

நடந்தவை விஜயலட்சுமி கண்முன்னே நடக்கத் தீரனுக்கு மஹி மீதுள்ள காதலின் ஆழம் நன்றாகவே புரிந்தது அதே சமயம் மகிழினியை நினைத்து கவலையும் கொண்டார் விஜயலட்சுமி, மயங்கி விழுந்தவளை அவனறைக்குக் கொண்டு சென்று கிடத்தியவன்,

“சாரி ஆண்ட்டி எனக்கு வேற வழி தெரியல, இப்படியே நடந்துகிட்டு இருக்குறது அவளே ரொம்ப வீக் ஆக்கிரும், மஹி என்னோட வொய்ஃப், அவளை நீங்க தான் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்கணும்” எனத் தீரன் சொன்னான்.

“அவளை நான் சம்மதிக்க வைக்குறேன் இது என்னோட பொறுப்பு” என விஜயலட்சுமி பதில் மொழிந்தார்.

“நமக்கு நேரம் ரொம்பக் குறைவா இருக்கு” என அவன் பயந்தபடி சொன்னான்.

“ஆமா விஜயலட்சுமி நேரம் ரொம்பவே குறைவு” என்றார் மீராம்மா.

அவர்கள் என்ன தான் சொன்னாலும் யாரென்று தெரியாத ஒருவனுக்கு மகளைக் கட்டிக் கொடுக்கத் தயக்கம் ஏற்பட்டாலும் ,அவர் கண்ட காட்சி உண்மை அல்லவா மீரம்மாவும் , பிரகதீரன் சொல்வதைக் கேட்பதை தவிர அவருக்கு வேறு வழியில்லை, மகள் விருப்பத்திற்கு மாறாக என்றும் முடிவு எடுக்காதவர் மகிழினியின் நலனுக்காகத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்.

அந்தச் சமயம் நீலவேணி வர “கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம் சம்மந்தி” என விசயம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள

“எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க நான் மகிழைச் சம்மதிக்க வைக்குறேன், அதுக்கு அப்பறம் இதைப் பத்தி பேசிக்கலாம்” என விஜயலட்சுமி தவிப்பாய் சொன்னார்.

“எங்களுக்கும் மகிழினி முக்கியம் சம்மந்தி, அவசர படுத்துறேன் நினைக்காதிங்க நாங்க உங்க பொண்ணுக்காக, இல்ல, இல்ல எங்க வீட்டு மருமகளுக்காக எனக்கும் மக தான், அவ சந்தோசம் எங்களுக்கும் முக்கியம்” எனச் சொன்ன நீலவேணியிடம்,

“ஏன் இத்தனை நாள் அவளைத் தேடி யாரும் வரலை” எனக் கேட்ட விஜயலட்சுமியை பார்த்த தீரன்,

“தேடிட்டு இருந்தேன் இப்போ தான் கண்டுபுடிச்சேன்” என அவன் சொல்ல

“எல்லாம் விதி தான், யாரும் அதை மாற்ற முடியாது, சுபமாக நடக்கும்” என்றபடி பூஜை அறைக்குள் நுழைந்தார் மீராம்மா.

*****

இரண்டு நாட்களும் கழிந்தது மகிழினி இப்போது சாதாரணமாக இல்லை அந்த நாள் நெருங்க நெருங்க அவளுக்குச் சோர்வு அதிகமாகி கொண்டே இருந்தது.

விஜயலட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை மனம் மழுக்கக் குழப்பம் பெண்ணை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலை,

திருமணத்தைப் பற்றிப் பேசினாலே கோபப் படுகிறாள் என்னவென்று சம்மதிக்க வைக்க என விழி பிதுங்கி போனார் விஜயலட்சுமி.

தன் சோர்வையும் மீறி கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினாள் மகிழினி

“மகிழ் நில்லுடி எங்க போற” எனச் சற்று கோபமாகவே விழுந்தது விஜயலட்சுமியிடம் இருந்து வாரத்தைகள்,

“வேலை தேடி போறேன், ஏன்மா போகக்கூடாதா” எனத் திருப்பிக் கேள்வி கேட்டாள் மகிழினி.

“அதான் வானவில் எப்எம்ல செலக்ட் ஆகிட்டியே அப்பறம் என்னடி புதுசா இன்டர்வியூ” எனக் கேட்ட விஜயலட்சுமியிடம்

“நான் அங்க போகப் போறது இல்லை, அந்த ஏமாத்துகாரன் முகத்துல முழிக்கவும் விருப்பம் இல்லை” என அவள் சொல்ல,

“யார்டி ஏமாத்துக்காரன், அவன் தான்??” என எதோ சொல்ல வந்ததை.  தன் வாய்பொத்தி சொல்லாமல் அமைதியாகி போனார் விஜயலட்சுமி.

“சொல்லுமா சொல்லு அவனும் அந்தக் குடும்பமும் தானே உனக்கு முக்கியம், அந்தச் சூனியக்கார குடும்பம் உன்னை எதோ பண்ணிருச்சுமா, இப்ப வந்தவங்க உனக்குப் பெரிசா போய்ட்டாங்கல, உன் பொண்ணு மனசு, முக்கியம் இல்லைல, அப்படி என்ன தான் மா நடந்துச்சு நீ இந்த அளவுக்கு மாறிட்ட”என்றவளின் கண்கள் கண்ணீரை சுமந்து நிற்க,

“இல்லைடி கண்ணு இப்படியே விட்டால் பிரச்சனை பெருசாகிரும்டி, உனக்கு இன்னும் எட்டு நாள் குள்ள அந்தப் பையன் கூட தான்டி கல்யாணம் செஞ்சு வைக்கணும்” சொன்னா புரிஞ்சுக்கடி தங்கம்” எனக் கண்ணீரை துடைக்க வந்த விஜயலட்சுமியின் கைகளைத் தட்டி விட்டவள்,

“அப்படி அந்தக் கல்யாணம் நடக்கலைனா, நான் என்ன செத்தா போயிருவேன் அப்படி அவங்க என்ன தான் மா சொன்னாங்க” என அவள் விரக்தியான கேட்டாள்.

“அய்யோ ஏன்டி என்னை வதைக்குற, இதை நான் உன்கிட்ட எப்படி டீ சொல்லுவேன்” எனக் கதறி அழுத விஜயலட்சுமியின் அருகே வந்தவள்,

“என்கிட்ட நீ சொல்ல மாட்டல்லம்மா?” தயக்கமாய் அவள் கேட்க, 

“தீரன் தான்டி உன் கழுத்துல தாலிய கட்டணும் அது தான் விதி, அப்படி நடக்கலைனா, உனக்கு ஆபத்து வருமாம்டி” என விஜயலட்சுமி சொல்ல,

“அதெப்படி மா நீ நம்புற” என கவலையாய் அவள் கேட்க,

“உங்க அப்பா எப்படி இறந்தாங்கன்றத அந்த அம்மா சொன்னாங்கடி அப்போ அவங்க சொல்றது உன்மையா தான் டி இருக்கும்” என கதறி அழுதவரை தேற்றாமல் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டவள் “உன் பொண்ண கடைசியா பார்த்துக்க, இனிமேல் பார்க்கவே மாட்ட” என அவள் சொல்லிவிட்டு சிட்டாய் பறந்தாள்.

உடனே தீரனுக்குத் தொடர்பு கொண்டவர் விசயத்தைச் சொல்லி “என் மகளைக் காப்பாத்து பா” எனக் கதறி அழ,

“நான் பாத்துக்குறேன்” எனத் தொலைப்பேசியைத் துண்டித்தான் தீரன்.

******

கடற்கரை ஓரத்தில் விழி நீர் கடல் நீரோடு சங்கமிக்க நின்றிருந்தவளை பார்த்து சில இளசுகள்,

“ஏய் இவ தானே  இந்தப் பொண்ணு, எவ்வளவு தைரியம் பாரு இவளுக்கு எதோ கிசுகிசுத்தபடி நிற்க ஒன்றும் புரியாமால் நின்றிருந்தாள் மகிழினி.

அதில் ஒருப்பெண் முகப்புத்தகம் லைவில் போய் “மக்களே இப்ப நீங்க சோஷியல் மீடியால வைரலான அந்தப் பொண்ணை தான் பார்த்திட்டு இருக்கிங்க, நம்ம வாழ்கையில இப்படி ஒரு சம்பவம் நடந்தா நம்மலாம் வெளிய தலைய காட்டவே பயப்படுவோம், ஆனா மேடம் ரொம்பத்  தைரியசாலி போலச் சம்பவம் நடந்த இடத்துக்கே மறுபடியும், வந்திருக்காங்க, இன்னைக்கு எதாவது சம்பவம் உண்டா மேடம், ஒரு கோடி பேர் பார்த்திட்டு இருக்காங்க, இப்ப நீங்க சம்பவம் பண்ணிங்கன்னா இன்னும் வைரல் ஆகிருவிங்க” என அந்தப் பெண் சொல்ல,

புரியாமல் விழித்தவள் கரையோரம் நடந்து செல்ல ஆரம்பித்தாள், இந்த அளவுக்கு வாழ்க்கை வெறுக்கக் காரணம் தான் ஏமாற்ற பட்டு விடுவோம் என்ற பயம், தாயே அவளுக்கு எதிராய் மாறிய கோபம், இத்தனை நாள் இல்லாமல் உலகே தனக்கு எதிராய் செயல்படுவதாய்த் தோன்ற, தற்கொலை தான் முடிவு என யோசிக்கத் தொடங்கியிருந்தாள் அவளுக்குத் திருமணம் செய்ய விருப்பமில்லை அதுவே அவளைத் தற்கொலைக்கு அதிகம் தூண்டியது. அவள் பின்னே பின் தொடர்ந்த படி சில இளசுகள் ஃபோனும் கையுமாகச் செல்ல திடிரெனக் கடலுக்குள் செல்ல ஆரம்பித்தாள் மகிழினி.

“என்ன மேடம் நடுக் கடல்ல சம்பவமா, சூப்பர் லைக்ஸ் பிச்சுக்கப் போகுது” எனப் பேசியபடி பின்தொடர்ந்தனர் குறிப்பிட்ட தூரம் சென்றதும் பின் தொடர்வதை நிறுத்த அவள் கடலுக்குள் முன்னேறிக்கொண்டே இருக்க,

அப்பொழுது பிரகதீரன் அங்கு வர “ஹீரோ வந்தாச்சு” என அந்த இளசுகள் ஆரவாரம் செய்தனர். அவர்களிடம் பேசும் நேரம் அவனுக்கில்லை மஹியை காப்பாற்ற வேண்டும்.

“மஹி ..!” எனக் கத்தியவன் உள்நீச்சலடித்து அவள் முன் நிற்க அவள் கைப்பற்றினான் மஹியின் தீரன்.

அவன் கைப்பற்றிய நொடியில் அவன் கண்களுக்குள் பயணம் செய்தவள், அவனின் இறுக்கமான அணைப்பில் இருக்க,அவளின் கூர்விழி பார்வையும், நீல நிறமாய் மாறிய அவளின் நயணங்களும், ஆழி பேரலைகள் அலைகள் சீற்றம் கொள்ள, உவர் நீரின் நடுவே அழகாய் காதல் சங்கம்மம் அரங்கேற தீரனின் இதழோடு தன் இதழ் பொருத்தியிருந்தாள் மகிழினி, அதே நீண்ட நெடிய பயணம் அவன் கைகளிலே குழந்தையாய் மயங்கி சரிந்தாள் தீரனின் மஹி..!

“கை தீண்டும் தருணம் 

தன்னிலை இழக்கும் 

காரிகை இவளை தாங்கி 

நிற்கும் மன்னவன் 

மனமெங்கும் அவன் மஹியே..!

நித்தம் வருவாயா…! என் நட்சத்திரமே..!”

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்