சொல்லாமல்…! – 08

Loading

சொல்லாமல்..!

 

மௌனம் – 08

 

தன் முன்னே,தயக்கமாய் அமர்ந்திருந்தவனை புன்னகையுடன் பார்த்தாள்,அஷ்வினி.

 

ஏதோ பேச வருவதும்,பின்னர் இல்லை என மழுப்புவதுமாக அவன் ஒரு வாரத்தை கடத்திட,அவளோ காதல் என்கின்ற கோணத்தில் யோசிக்கவே இல்லை.

 

அதுவும்,தன் மீது அவனுக்கு காதல் என்று அவளுக்கு ஒரு துளி நினைப்பேனும்,அவள் மனதில் இல்லை;இல்லவே இல்லை.

 

“என்ன வினய்..? என்னமோ பேசனும் பேசனும்னு கூப்டு மழுப்பி கிட்டு இருக்க..?” புன்னகையுடன் வினவியவளின்,கள்ளமில்லா கேள்வியில் அவனின் பயம் அதிகரித்தது தான்,மிச்சம்.

 

அவள் மனதில் நட்பைத் தாண்டிய எந்தவொன்றும் இல்லாதிருக்க,இதில் அவன் காதலைக் கூறப் போக,என்னவாகிவிடுமோ என்கின்ற பயம்.

 

“நா லவ்வ்வ்வ்வ்வ்..” குருட்டு தைரியத்தில் அவன் இழுத்திட,அவள் முகத்தில் சந்தோஷப் பூக்காடு.

 

அதில்,அவனுக்குமே கொஞ்சமாய் எதிர்ப்பார்ப்புக்கள் உயிர்பெற,அடுத்து அவள் கேட்ட கேள்வியில் பறந்த பட்டாம்பூச்சிகள் யாவும்,மொத்தமாய் கருகிப் போயின.

 

“யாருடா..? யாருடா அந்தப் பொண்ணு..? நம்ம காலேஜா..? பேர் என்னடா..? பயப்டாத வினய்..நா உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன்..” அவள் பேசிக் கொண்ட போக,இவனுக்கு சப்பென்றானது.

 

அவள் முகத்தில் கண்ட மகிழ்வில் உருவான உற்சாகம்,சிறு துளி மிச்சமின்றி வடிந்து போய் விட,முறைத்துத் தள்ளினான்,அவளை.

 

“ப்ச்ச்..என்ன நா கேள்வி கேட்டதும் சப்புன்னு ஆயிருச்சு மொகம்..? இங்க பாரு..உன் லவ்வ எல்லாம் நா தப்பா எடுத்துக்க மாட்டேன்..பொண்ணு யாருன்னு சொல்லு..பாக்கறோம்..பேசறோம்..தட்டி தூக்கறோம்..”

 

அவள் நில்லாமல் தொடர,கையமர்த்தி தடுத்தவனோ,இரு கரங்களையும் கூப்பி கும்பிட்டே விட்டான்,பேச்சை நிறுத்தமாறு கேட்டுக் கொண்டு.

 

“என்ன வினய்..? ஏன்,உங்கப்பா ஸ்டேட்டஸ் பாப்பாருன்னு பயப்பட்றியா..? அந்தப் பொண்ணு அவ்ளோ வசதிலாம் இல்லயா என்ன..?”

 

“அத நீதான் சொல்லனும்..” என்றான்,பட்டென்று.

 

“வாட்,என்ன சொல்ற..? புரிலயே..?”,அவளுக்கு உடனடியாக கிரகித்து யோசித்திட இயலவில்லை.

 

“ப்ச்..அவ உங்களவு தான்..அதான்,வசதியா இல்லயான்னு நீதான் சொல்லனும்..?”

 

“ஓஹ் அப்டி வர்ரியா..?நாங்க வசதின்னு சொல்லுவாங்க..அம்மா,அப்டிலாம் வளக்கல..ஆனா,உங்க அளவுக்கு இல்ல பா..நீங்க தான்,மல்டி மில்லியனர் ஆளுங்களாச்சே..” அவள் வெள்ளந்தியாய் உரைத்திட,இவனுக்கு இன்னும் பாரமேறும் உணர்வு.

 

“என்ன இது அடிக்கடி மொகம் மாறிட்டே இருக்கு..? லவ் பண்றன்னு சொல்ற..அப்றம் என்ன யோசிக்கிற நீ..?”

 

“ஐயோ,நா இன்னும் அந்த பொண்ணு கிட்டவே லவ்வ சொல்லல..அவளுக்கு என்ன பிடிச்சு இருக்கான்னு எதுவும் புரியல..அவ மனசுல வேற யாராச்சும் இருக்காங்களான்னு கூட எனக்கு தெரியல..போதுமா இதான் ப்ரச்சன..?

 

தன்னிலை சிறிதும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே,என்ற ஆதங்கத்தில் அவள் படபடவென பொறிய,அவளோ அவன் நிலையை பாவமாகப் பார்த்தாள்.அதிலும்,அவன் தன்னை திட்டியதற்கு கோபமும் வந்தது.

 

“போய் சொல்லித் தொலய வேண்டியது தான..மனசுல பூட்டி பூஜயா பண்ண போற..லவ்வ சொல்லாம வந்து,இங்க பொலம்பி கிட்டு இருக்குறதனால என்னவாகப் போகுது..போ போய் தைரியமா அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லு..அப்றம்,வந்து பொலம்பி சாவு..”

 

கடுகடுத்தவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து நகர்ந்து சென்றான்,இப்போதும் மனதை வெளிப்படுத்தாமல்.

 

●●●●●●●

 

புன்னகை முகமாய் தலையசைத்து விட்டு,கல்லூரிக்கு கிளம்பிய மகளை மனதில் நிறைந்த நிம்மதியுடன் வழியனுப்பி வைத்தார்,மங்கையரசி.

 

அவள் வெளிக்கிளம்பும் போது,மகனும் வேலைக்கு தயாராகி வந்திட,உணவு பரிமாறிட,தாய்க்கும் மகனுக்கும் இடையே,அவனின் திருமண விடயம் பற்றிய உரையாடல்கள்.

 

மகனவனோ,தாயின் பேச்சிற்கு மசிவதாய் தெரியவில்லை.மங்கையரசியும்,இத்தோடு நில்லாமல் பல்லவியை பாட,அவன் தான் வளைந்து கொடுக்க மறுத்து,நிமிர்ந்தே நின்றிருக்க,கோபம் வந்தது.

 

“என்னமோ பண்ணிக்க போ..காலா காலத்துல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்க ஆசப்பட்டா..அது தப்புன்னு என்ன திட்ற..”

 

“ம்ம்மா..நா என்ன கல்யாணம் வேணாம்னா சொல்றேன்..இப்போ ஒரு ஆறு மாசம் தள்ளிப் போடலாம்னு தான் சொல்றேன்..” சலுகையாய் அவன் கூறும் போதே,அறையில் இருந்து வெளிப்பட்டார்,கருணாகரன்.

 

பெயருக்கேற்ப,கருணையின் வடிவம்.அதிர்ந்து அதட்டிக் கூட,பேசத் தெரியாது அவருக்கு.அத்தனை சாந்தமான மனிதர்.

 

“நீங்களாச்சும்,இவன் கிட்ட சொல்லுங்களேன்..எப்ப பாரு கல்யாண பேச்ச,எடுத்தா அது பிடி கொடுக்காமலே இருக்கான்..வயசு வேற ஏறிட்டே போகுதுல..”

 

கணவரைப் பார்த்து அவர் பொடுபொடுக்க,மனிதரோ புன்சிரிப்புடன் பார்த்து இருந்தாரே ஒழிய,யார் சார்பாகவும் பேசிடவில்லை.தாயிற்கும் மகனுக்கும் இடையே,மாட்டிக் கொண்டு விழிக்க அவர் தாயாராக இல்லை.

 

“ஆள விடுங்கப்பா..” விட்டால் போதுமென,அவர் அடுக்களைக்குள் நுழைந்திட,மகனவனும் இருவரிடமும் சொல்லிக் கொண்டு வெளியேறினான்.

 

அவர்கள் வசிப்பது,ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகத்தில்.முன்பு,கருணாகரனின் சொந்த ஊரில் இருந்தவர்கள்,பிள்ளைகளில் படிப்புக்காக குடிபெயர்ந்து வந்திருந்தனர்,இவ்விடத்துக்கு.

 

வீட்டு வேலைகளை முடித்ததாயிற்று.கருணாகரனும்,தொலைக்காட்சி பெட்டியுடன் அமர்ந்து விட,சலிப்புத் தட்டியது,மனைவிக்கு.

 

பக்கத்து வீட்டுக் செல்வதாய் கூறிக் கொண்டு வெளியே வந்தவரோ,அக்கம் பக்கத்தினருடன் அளவளாவிட்டு திரும்பும் போதே,அவரின் வழியை மறைத்து நின்றது,ஒரு உருவம்.

 

யாரென விழியுயர்த்தியவருக்கு,அங்கு நின்றிருந்த மனிதரைக் கண்டதுமே,தூக்கி வாரிப் போட,பயத்தில் மயக்கம் வரும் போல் இருந்திட,கெட்டியாய் பிடித்துக் கொண்டார்,சுவற்றை.

 

அவரின் பயத்தையும் பதட்டத்தையும்,கண்ட பின்னர் இறுமாப்பது இன்னும் கூடிப் போன உணர்வு,முன்னிருந்த நபருக்குள்.

 

இதழோரம் குரூர புன்னகை நிரம்பி வழிந்திட,அவரைப் பார்த்து கண்ணசைத்தவாறே கடந்து சென்ற மனிதரை,நெஞ்சம் முழுவதும் தேங்கிய பயத்துடன் பார்த்திருந்தார்,மங்கையரசி.

 

●●●●●●●

 

சொல்ல மறந்த கதை..

 

“வந்தவங்கள வான்னு அழக்க கூட இல்லாம உள்ள வந்துருக்க..? என்ன பழக்கம் வர்ஷினி இது..?” விசாலாட்சி கடிந்து கொண்டே,ஆடவனுக்கான காஃபியை கலக்கிட,தம்பியும் அவனும் தன் பங்குக்கு திட்டவே செய்தான்.

 

கலக்கிய காஃபியை வாங்கிக் கொண்டு,அவன் நகர்ந்து செல்ல,ஆடவன் சற்குணத்துடன் ஏதோ,பேசுவதை அவனின் பேச்சுக்குரல் உணர்த்தி நின்றது.

 

அவளின் தந்தையை சந்திக்கத் தான்,அவன் வருகை தந்திருந்ததே.

 

பணிவிருந்தாலும்,அவன் பேச்சில் நிமிர்வு இருந்தது.மரியாதையான பயமற்ற அவனின் பேச்சு,சற்குணத்துக்கும் பிடித்துப் போக,அவரும் இயல்பாக அவனுடன் கலந்துரையாடினார்.

 

அடிக்கடி பின்னந்தலையை கோதிக் கொண்டே,அவன் பேசும் மேனரிசத்தை ஆனந்தும் கவனித்திட,அவனுமே ஆடவனின் பேச்சில் கவரப்பட்டு அங்கேயே இருந்து கொண்டான்.

 

“என்ன உன் தம்பியும் உள்ள போய் ஒளிஞ்சிக்காம ஹால்லயே இருக்கான்..அதிசயம் தான்..” தாயார்,அவளிடம் சொல்லி வைத்திட,அவளுக்கு கவனமெல்லாம் அங்கிருக்க வேண்டுமே..?

 

தந்தையிடம் நடந்த கூத்தை சொல்லி விடுவானோ என்கின்ற பயம்.அதுவே,அவளை இயல்பாக இருக்கவிடவில்லை.

 

அப்படி எல்லாம் கூற மாட்டான் என மனம் அடித்துக் சொன்ன போதிலும்,மனதில் சிறு நெருடல் இருக்க,அது அவளின் முகத்தில் வெளிப்பட்டது.

 

“என்னடி..?” விசாலாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்,நடைப் பகுதிக்கு வந்தவளோ,அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திட,மனம் என்னென்னமோ யோசித்து குழம்பித் தொலைந்தது.

 

“இந்த நெருப்புக்கோழி அப்பாட்ட சொல்லிருமோ..ச்சே..ச்சே அப்டிலாம் சொல்லாது..சொல்லாது..: தனக்குள் அவள் புலம்பித் தீர்த்திட,”பைத்தியமா இவ..?” எனும் ரீதியில் பார்த்து விட்டுச் சென்றான்,ஆனந்த்.

 

நடைப்பகுதிக்கும் முன் கூடத்துக்கும் இடையிலான திரைச்சீலைக்கு பின்னால்,இவள் அமர்ந்து இருக்க அது தற் செயல் தான்.

 

ஆனால்,அது ஆடவனுக்கு தற்செயலாகத் தோன்றாது போனது,ஓரே ஒரு சதவிகிதம்.

 

அவள் அசையில் திரைச்சீலையும் முன்னும் பின்னும் அலைந்திட,அதன் அசைவே உணர்த்தியது பிண்ணனியில் யாரோ அமர்ந்திருப்பதை.அதை,ஆடவனும் கவனித்திருக்க,அவனுக்கு நேரெதிரே அமர்ந்திருந்த சற்குணத்தின் விழிகளில் இது சிக்கவில்லை.

 

ஆனந்த் உள்ளே செல்லும் போது,அவளின் இருப்பை அது புலப்படுத்த இவனின் மனதில் யோசனை.அதுவும்,திரை விலகியது இரு நொடிகளென்றாலும்,தன்பாட்டில் உழன்றவளின் விழிகள்,தன்னிலை மறந்து அவனில் படிந்திருக்க,அதையும் கண்டு கொண்டான்,மின்னல் விழிகளின் சொந்தக்காரன்.

 

“இவ எதுக்கு இங்க உக்காரனும்..?” அவன் யோசித்திடும் முன்பே சற்குணம் அவனைக் கலைத்திட,அவ்வெணத்தை புறந்தள்ளினான்.

 

அதுவும்,அவன் விடைபெறப் போவதை,அவனின் பேச்சை வைத்தே கண்டு கொண்டவள்,எதற்குமென்று திரைச்சீலை இடுக்கின் வழியே பார்த்து உறுதி செய்து நிம்மதிப் பெருமூச்சு விட,அவன் விழிகளில் மாட்டிக் கொண்டது,அவள் அவனைப் பார்த்திடும் காட்சியே.

 

எரிச்சல் வந்தது,ஆடவனுக்கு.அதை கொஞ்சமும் வெளியே காண்பிக்காமல் கிளம்பிட,இங்கு விசாலாட்சியோ மகளை முறைத்தார்,விழிகளில் அனல் பொங்க.

 

“அப்பாவுக்கு இவ்ளோ பயம் இருந்துச்சுன்னா கிறுக்குத் தனமான மேல பண்ணக் கூடாது..இது என்னன்னா,அவங்க பேசறத ஒட்டு கேக்கறதும்,அந்த பையன் போனதும் அப்பாடான்னு பெருமூச்சு விட்றதும்..முடில டி உன்னால..” 

 

அங்கலாய்த்தவருக்கு,மகளின் குணவியல்புகளில் கோபமாய் வந்தது.என்னவோ,அவளுக்கு வயதுக்குரிய முதிர்ச்சி இல்லையென்று,அவருக்குள் ஆழமாகவே ஓர் எண்ணம் இருக்க,பெண்ணவளின் நடத்தைகளும் அதற்கு அப்படியே ஒத்தி ஊதிடும்,அநேகமான சந்தர்ப்பங்களில்.

 

அவன் கிளம்பிச் சென்றதும் உள்ளே வந்த ஆனந்தோ,தமக்கையுடன் வம்பு செய்ய,கடைசியில் அது அடிதடியில் போய் நின்றது.

 

வாய்த்தகராறு முற்றிப் போய் எப்போதாவது கரங்கள் பேசிட,தம்பியின் முதுகில் அவள் ஓங்கி ஒன்று வைத்திட,அவன் மறுபடி அடித்திடும் முன்னர் சற்குணம் வந்து விட்டார்.

 

தந்தைக்கு பயந்து,அவன் அடிக்காமல் முறைத்து விட்டுச் செல்ல,வர்ஷினியும் பழிப்புக் காட்டி விட்டு உறங்கச் சென்று விட்டாள்,தன்னறைக்குள்.

 

அடித்துப் போட்டாற் போல் உறக்கம், பெண்ணவளுக்கு.அந்தி நேரம் தூங்கச் சென்றவள்,விழிக்கும் போது பதினொரு மணி கடந்திருக்க,விசாலாட்சியோ அனைத்தையும் ஒழுங்கு படுத்தி விட்டு உறங்கச் செல்லும் முனைப்பில் இருந்தார்.

 

மகளை அவரும் கவனிக்காது போக,பெண்ணவளுக்கோ உறக்கம் கண்ணை விட்டு அகன்று போகவில்லை.உண்ணவும் அழுப்பாய் போக,மீண்டும் போர்வைக்குள் சுருண்டு கொண்டவளுடன் ஏதோ பேச வந்து,அவள் உறங்கியிருக்க கண்டு தங்கையும் கதவடைத்துச் சென்று விட்டாள்.

 

மீண்டும் கதவு திறக்கப்படும் ஓசை.தன் முகத்தில் குளிர்மையாய் ஏதோ பரவுவது போலிருக்க,”ப்ச்ச்..” என்ற சலிப்புடன் ஆழ்ந்த நித்திரைக்குள் விழுந்தாள்,பெண்ணவள்.

 

மறுநாள்,ஐந்து மணிக்கெல்லாம் விசாலாட்சி எழுந்து கொள்ள,சற்குணமும் அவரோடே எழுந்து வந்தார்,சமயலறைக்கு.

 

“நல்லா செவந்து இருக்குல..” மனைவியில் கரம் காட்டி அவர் கேட்க,”ம்ம்..சாயந்தரம் ஒன்னு..ராத்திரி ஒன்னுன்னு ரெண்டு தடவ வச்சேன்ல..நல்லாவே செவந்து இருக்கு..இன்னும் ஒரு தடவ வச்சா போதும்..”அவர் கூறும் போதே,அனைவருக்குமான காஃபியை கலக்கினார்,சற்குணம்.

 

“ஆனந்த போய் எழுப்பிட்டு வர்ரேன்..” விசாலாட்சி சொல்லும் போதே,”அம்ம்மாஆஆஆஆ” என்று ஓர் கத்தல்.அதுவும்,அந்த அதிகாலையில் நிச்சயம்,நான்கு வீடுகளுக்கு கேட்டிருக்கும்.

 

சற்குணம் தலையில் கை வைத்து விட்டார்.ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிய,விடியும் முன்பே பஞ்சாயத்தா என்று சலித்துப் போனார்,மனிதர்.அதுவும்,மகனின் அலறலில் எரிச்சலும் வந்தது.

 

“என்னடி..?” நிஜத்திற்குமே கோபம் வர,அவளை அதட்ட விழைந்தவரோ,திட்டுத் திட்டாய் கன்னமெங்கும் மருதாணி அப்பி சிவந்திருக்க,தன் முன்னே வந்த மகளை கண்டதும்,அவ்வளவு சிரிப்பு.

 

தடதடவென அவளின் நடையில் கோபம் துளிர்க்க,திட்ட வாயெடுத்து எட்டிப் பார்த்த சற்குணத்துக்கும்,மகளின் கோலத்தில் சிரிப்பு வர,புன்னகைத்து விட்டார் இதழ் பிரித்து.

 

“என்ன திட்டுனீங்க இருக்கு…எங்க அவன்..எரும்ம மாடு..நா எப்டி இப்போ காலேஜ் போறது..?” என்றவளுக்கு அவ்வளவு கோபம்.

 

அவளின் காளியவதாரத்தில் கோபம் கூட பட முடியாமல்,அத்தனை சிரிப்பு அவளின் கோலம் கண்டு.

 

கதவைத் திறந்து கொண்டு வந்த ஆனந்த் விழுந்து விழுந்து சிரிக்க,போர் முரசுடன் அவனை அடிக்கப் பாய்ந்தவளை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்துகையில் போதுமென்றாகி விட்டது,பெற்றவர்களுக்கு.

 

“இந்த மூஞ்ச வச்சிட்டு நா எப்டி காலேஜ் போறது..நா காலேஜ் போகல..” கடுகடுத்தவளை,எலுமிச்சை சாறை முகத்தில் பூசி மருதாணியை அழித்திட முயல,அதுவேறு எறிந்தது.

 

“வேறேதாச்சும் பண்ணித் தர்ரேன்டி..காலேஜ் போகல தான இப்போ போய் தூங்கு..” தாய் அதட்டிட,மீண்டும் தூங்க முடியாமல் அலைபேசியில் மூழ்கிப் போக,வழமையாக தயாராகும் நேரம் கடந்திருக்க,”கப்மல்சரி லெக்சர்..” எனும் குறுஞ்செய்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஆடைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

“காலேஜ் போகலன்ன..” மகளின் அவசரத்தில் விசாலாட்சியின் முகம் சுருங்க,”கம்பல்சரி லெக்சர் மா..இல்லன்னா எக்ஸாம் எழுத விட மாட்டானுங்க..” படபடவென பதிலுரைத்து விட்டு,செருப்பை மாட்டிக் கொண்டு வெளியேறினாள்.

 

முகக்க கவசம் முகத்துக்கு திரையிட்டிருக்க,மூச்சிரைக்க ஓடி வந்தவள் பேரூந்தில் ஏறிக் கொள்ள,அன்று தந்தையுடன் வராமல் பேரூந்தில் வந்திருந்தாள்,காயத்ரி.அவளுக்கு பக்கத்தில் காலி இருக்கை கிடக்க,அதில் அமர்ந்து கொள்ள அவள் பார்வை தோழியவளை கேள்வியுடன் தழுவியது.

 

“வை மாஸ்க்..” என்க,சலிப்புடன் அவள் முகக் கவசத்தை கொஞ்சமாய் கீழிறக்கி காட்ட,”அவ்வா!” என வாயில் கை வைத்திருந்தாள்,அவள்.

 

“என்ன ஆனந்தா..?” அவள் கேட்டு முடிக்கும் முன்னமே,”அந்த எருமயே தான்..” வைதவளின் வார்த்தைகளில் அவ்வளவு எரிச்சல்.

 

“என்ன ரெஸ்ட்லஸ்ஸா இருக்க..? ஏதாச்சும் பராப்ளமா..?” வினவினாள்,தோழியின் முகமாற்றத்தை கவனித்தவாறே.

 

“ப்ச்..தெரில நேத்துல இருந்து ஒரே எரிச்சலா இருக்கு..மூட் ஸ்விங்க்ஸ்ஸா இருக்கும்..இதுல,இந்த எரும வேற காலைலயே இப்டி பண்ணி பிபிய ஏத்தி விட்டுருச்சு..” கடுகடுத்தவளுக்கு நேற்றில் இருந்து,இதே உணர்வு தான்.அதுதான்,தாயரிடமும் முகத்தை வெட்டிக் கொண்டு இருந்தது.

 

“அப்போ வர்ஷினி,ரெண்டு மூனு நாளக்கி வாய வச்சிகிட்டு உன்ன சீண்டாம இருக்கனும்..” சிரித்த படி சொல்ல,அதற்கு கூட தலயைசத்திட முடியாமல் தலையை திருப்பிக் கொண்டாள்,வேறுபுறம்.

 

அன்று கல்லூரி முடிவடைய,அவர்களின் வகுப்பைக் கடந்து கல்லூரி வாயிலை அடையும் நேரம் தற்செயலாய் கிடைத்தது,ஆடவனின் தரிசனம்.

 

வண்டியை முறுக்கிக் கொண்டிருந்தவனின், பின்னே அமர்ந்திருந்த பாலா ஏதோ காதில் இரகசியமாய் சொல்வதும்,அதைக் கேட்டு தலையசைத்து எதிர்வினையாற்றிவனின் முதல் மூன்று விரல்கள்,முன் நெற்றியில் புரண்ட கேசத்தை ஒதுக்கி விட்டு,பின்னந்தலையை கோதிக்கொண்டன.

 

“இந்த நெருப்புக் கோழி விதம் விதமா மேனரிசம் காட்டுது..” தனக்குள் நினைத்தவளாய், அவள் இயல்பாய் கடந்து விடுவது போல் காட்டிக் கொண்டாள்.

 

அவனின் பார்வையோ, முகக் கவசம் அணிந்த அவளின் மீது புருவ முடிச்சுக்களுடன் படிந்து மீண்டது,”யாரிந்த பெண்..?” என்று.அதுவும்,அவள் உடல்மொழியில் உண்டான மாற்றமும்,அவனுக்கு புரியவே செய்தது.

 

அவன் பார்வை அவள் புறம் தாவியதில்,அவளுள் சிறு பதட்டம் உருவாக இயல்பாக கடந்து விட முயன்ற போதிலும்,முடியாது போக கூட்டத்தினுள் புகுந்து எப்படியோ ஓடி விட்டாள்.அதைக் கண்டவனின் புருவங்களில் மத்தியில் மெல்லியதோர்,சுருக்கம்.

 

முந்தைய நாள் ஏதேதோ பூசி,மருதாணி சிவப்பை கொஞ்சம் விரட்டியிருந்த போதிலும்,அவளுக்கு திருப்தியில்லை.மறுநாளும்,முகக் கவசம் சகிதம் கல்லூரிக்கு வர,”ஆனாலும்,இந்த ஆனந்து இப்டி பண்ணிருக்க கூடாதுடி ஆத்தா..” தோழியிடம் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம்,வேறு கதை.

 

அவர்கள் விரிவுரை மண்டபத்துக்கு நடந்து கொண்டிருக்க,அந்நேரம் ஆடவன் எதிர்ப்பட,எதிர்பாரா சந்திப்பில் எத்தனை முயன்றும் கேளாமல்,அவள் பதறிட அவள் விழிகளே அவளெனக் காட்டிக் கொடுத்திட,”அப்போ நேத்தும் இவ தானா..அப்டி சுத்திகிட்டு இருந்துருக்கா..?”

தனக்குள் கேட்டுக் கொண்டான்.

 

இயல்பாய் இரு என்று தனக்குத் கூறிக் கூறியே,அவள் இயல்பின்றி தவிக்க,பதறித் தவிக்கும் அவள் இயல்பே,அவனை ஒவ்வொரு முறை காணும் போதும்,அவளை ஆட் கொள்ள அதுதான் அவள் இயல்பென்றே ஏற்க முடியாமல் இருந்தது,ஆடவனுக்கு.

 

அதில் மீளவும் துளிர்த்த சந்தேகத்தில்,ஆடவன் யோசித்திருக்க அன்றே அவளே வந்து சிக்கும்படியானது,அவன் முன்.

 

வழமையாக அந்த மரத்தடி,இறுதியாண்டு மாணவர்களால் நிரம்பி இருக்கும்.சாசனமின்றி,அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடம் அது.ஆடவன் அதிகமாய் இருக்குமிடமும் அது தான்.

 

மஞ்சள் நிறப் பூக்கள்,ஆங்காங்கே எப்டிப் பார்த்திட,கிளை பரப்பி ஓங்கி வளர்ந்து நின்றிருந்தது,அந்த சரக்கொன்றை மரம்.

 

முழுதாய் நிறைந்திடாமல்,ஆங்காங்கே எட்டிப் பார்த்த மஞ்சள் நிறப் பூக்கள் கண்ணைப் பறித்திட,வட்டமாய் மரத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த சீமென்ட் கட்டில்,அவை சிதறி வீழ்ந்தும் கிடந்தன.

 

சில கிளைகள் தாழ்ந்து நீண்டிருக்க,அவற்றில் இருந்த பூக்கள் பறிப்பதற்கு ஏதுவாய் விரிந்திருக்க,அவற்றை விழிகளுக்குள் ஏற்றியவாறு அவ்விடம் வந்தாள்,பெண்ணவள்.

 

கல்லூரி வந்த முதல் நாள் துவக்கம், இவ்விடம் வரவேண்டும் என்பது அவளாசை.”சீனியர்ஸ் இருக்குற டைம் போக வேணான்னு சொல்லி இருக்காங்க..” காயத்ரி தான்,ஒவ்வொரு முறையும் அதட்டி அவளின் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்திடுவாள்.

 

“ஃபைனல் இயர் கு இன்னிக்கி ஈவ்னிங் எதுவும் இல்லயாம்..” உடன் பயிலும் ஒருத்தி கூறியது முதலே,ஆர்ப்பரிக்கத் துவங்கியிருந்தாள்,காயத்ரி.

 

“இன்னிக்கி தான் டி சான்ஸ்..நீ ஆசப்பட்ட மாதிரி அந்த மரத்தடிக்கு போலாம்..” தோழி கேட்டதற்கு அரை மனதாய் சம்மதித்து தான் கிளம்பி வந்ததே.

 

ஏற்கனவே,மனநிலை ஏற்றத்தாழ்வுகள்.இன்று பேராசியர் வேறு திட்டியிருக்க,சின்னதாய் ஒரு அழுத்தம்.பெரிதாய் பேசவில்லை,யாருடனும்.

 

“நீயும் உன் மூட் ஸ்விங்க்ஸும்..” அவளின் அமைதியில் நொடித்துக் கொண்டே வர,அவர்கள் நினைத்தது போல் யாருமற்று இருந்தது,அம்மரத்தடி.

 

“யாருமில்லல..மாஸ்க கழட்டேன்..” என்க,சுற்றும் முற்றும் பார்த்தவாறு அதை கீழிறக்கி தாடையில் வைத்தவளோ,தன் கைக்கு எட்டும் உயரத்தில் இருந்து பூங்கொத்தொன்றை பறித்து எடுத்திட,இருவரின் கண்களிலும் சிக்கவில்லை,மரத்தின் பின்னே நிறுத்தி வைக்கப்படிருந்த ஆடவனின் இருசக்கர வாகனம்.

 

உட்கார்ந்தவளோ,பூக்களை அங்குமிங்கும் சுழற்றியவாறு பார்த்திருக்க,அழைப்பொன்று வர அதில் பொருந்தியவாறு தள்ளி நகர்ந்து சென்றாள்,காயத்ரி.

 

தோழியின் உருவம் தூரத்தில் தெரிய,அதை புன்னகையுடன் பார்த்தவளின் செவிப்பறையை நிறைத்த பாதவோசையில் நிமிர்ந்தவளோ,சட்டென முகக் கவசத்தை தூக்கி முகத்தை மறைத்திட,கடுகடுவென்று ஆனது,ஆடவன் முகம்.

 

மனதே சரியில்லை.இவனை சந்தித்தால் இன்னும் குழம்பிடும் என புரிய,அவனைக் கண்டும் காணாதது போல் மரத்தின் பின்னே நடந்து சென்றாள்,சில அடிகள்.

 

அப்போதே வண்டியொன்றை கண்டவள்,அதை எடுக்கத் தான் வந்திருப்பான் என நினைத்திட,இன்னும் சில அடிகள் அவள் பாதங்கள் நீண்டன.

 

சில நொடிகளில்,வண்டி கிளம்பும் சத்தம்.நிம்மதியான உணர்வு,அவன் தொல்லையின்றி இன்னும் சற்று நேரம்,இவ்விடத்தில் இருக்கலாமே என்று.

 

மரத்தடிக்கு வந்தவளோ,முன்னும் பின்னும் விழிகளை சுழற்றி தேடி அவனில்லை இல்லை திருப்திப் பட்டுக் கொள்ள,அப்படியே அமர்ந்து மரத்தில் சாய்ந்து கொள்ள,உள்ளுணர்வு எச்சரிக்க திரும்பியவளுக்கு,மூச்சடைத்த உணர்வு.

 

பக்கமாய் ஓங்கி நின்றிருந்த பெருமரத் தண்டில் சாய்ந்திருந்தான்,ஆடவன்.

 

பாதங்கள் ஒன்றன் மேல் ஒன்று கோர்த்துப் பின்னியிருக்க,மார்புக்கு குறுக்கே கரங்களை படரவிட்டு,இலேசாக பின்னே சரிந்து நின்றிருந்தவனோ மரத்தின் சாய்ந்திருந்தான்.

 

வீசிச்சென்ற காற்றில் அசைந்தாடிய அடங்கா சிகைக்கற்றைகள், நில்லாமல் நெற்றியை முத்தமிட்டது மட்டுமின்றி,அவ்வப்போது புருவங்களை தழுவிப் போயின.அம்பென துளைக்கும் விழிகளுக்கு நிகராய்,புருவங்களும் உயர்ந்து வில்லென வளைந்திருக்க,மின்னல் விழிகளின் பார்வை மின்னலாய்,அவளை வெட்டிச் சென்றது.

 

திகைத்து கலைந்தவளுக்கு, இருந்த அழுத்ததில் அவனைக் கண்டதும் தலைவலி வரும் போல் இருக்க,என்ன செய்வதென்று புரியாமல் விழிகள் நாலாப்புறமும் சுழன்றோய்ந்தன.

 

“க்கும்” தொண்டையைச் செருமும் போதே புரிந்து விட்டது,ஏதோ வில்லங்கமென.ஏன் தான் வந்தோம் என்றாகி விட்டது,அவள் மனநிலை.

 

தன்னை நிம்மதியாக இருக்க விட மாட்டானா என்று பொடுபொடுவென்று வர,அயர்வாக இருந்தது.

 

சற்குணத்துக்கென,மீண்டும் அவளை எச்சரித்திடும் உணர்வு,அவனில்.உண்மை பொய்யை ஆராயாமல்,மறுபடி ஒருமுறை அதட்டவே,அவன் தரித்தது.

 

வேறு யார்,அவளிடத்தில் இருந்தாலும்,அவன் நடவடிக்கை வேறாகி இருக்கும்.மனிதரின் மகள் என்பதால்,அமைதியாக கையாள நினைத்தான்.

 

அவளுடன் தீர்க்கமாய் பேச வந்தவனின் பேச்சு,ஒரு கணம் தயங்கி நின்றது,திரை தப்பி தெரிந்த விழிகளின் பாஷையில்.அதுவும்,அயர்வும் அலட்டலுமாய் அவ்விழிகள்,அவன் விழிகளுடன் நேர் கோட்டில் உறவாடியதில்.

 

ஒரு கணம் மொத்தமாய்,அவனுக்குள் மின்னல் வெட்டிப் போக,அவ்விழிகளுக்குள் அவன் உலகம் உறைந்து போனது,நொடிக்கும் குறைவான அவகாசத்தில்.

 

பயம் மின்னினாலும்,அவனை நேர்ப்பார்வை பார்த்திட்ட விழிகளின்,அசைவில் மீண்டும் சின்னதாய் ஒரு சலனம்,அவன் நெஞ்சோரம்.வெட்டும் பார்வை,அவன் உயிரை சிறிதாய் உராய்ந்தே பார்த்தது.

 

“லவ் பண்ணனும்னா என்னோட கண்ண பாத்து தைரியமா பேசனும்..” தோழனிடம் தீர்ககமாய் கூறியது வேறு நினைவை நிறைத்திட,மனதை தட்டி அடக்கினான்.

 

என்னவோ,அவ்விழிகள் அவனை கட்டி நிறுத்துவது போல் தோன்ற,தனக்குள் நிகழ்ந்திடும் மெல்லிய மாற்றங்களை சிறு துளியும் ஏற்க முடியாமல்,சினம் ஏறியது.புதிதாய் என்னவிதென்கின்ற குடைச்சல் வேறு மனதில்.

 

முகக் கவசம் அவள் முகத்தை நிறைத்திருக்க,அதில் அவள் விழிகள் மட்டுமே வெளித் தெரிய,அவனால் தான் அவ்விழிகளை மட்டும் சந்திக்க இயலாமல் போனது.

 

அன்றும்,அவள் பார்வை அவனியல்பை அசைத்திட,இன்றும் அதையே செய்வதில்,அதை செய்ய விடக் கூடாதென்கின்ற பிடிவாதம்.

 

அதன் இயலாமையில் மெல்லிய எரிச்சல் வர,கண்ணோரம் சின்னதாக சுருங்கிட, அதை அவன் அப்படியே காண்பித்திட,அதுவெல்லாம் அவன் அகராதியில் புதிது.

 

“ப்ச்..எதுக்கு மாஸ்க்..?என்ன இம்ப்ரஸ் பண்ணவா..?” முதலிரு விரல்களால் நெற்றியை நீவியவாறு,பட்டென்று கேட்டு விட்டான்,தன்னுள் ஜனித்திடும் சிறு மாற்றத்தின் கனம் தாளாமல்.ஒரு நொடியின் சிறு மாற்றம்,அவனை அறுப்பது போன்ற உணர்வு,அவனுக்குள்.

 

அவனின் இயல்பல்ல அது.அவளின் இயல்பில் அவன் சிதறிப் போக,இடறியவன் கேட்டே விட,அவள் விழிகளில் கோபம் படர்ந்தது.

 

அதுவும்,ஒரு நொடி ஆழ்ந்து மூச்சிழுத்து அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்திட்டது எல்லாம்,தனக்குள் எந்த வித மாற்றமும் இல்லை என தனக்கே கூறிக் கொள்ளத் தானோ..?

 

அவனுக்கே,அவன் கேள்வி அபத்தம் என்று புரிந்திட,அவளின் பார்வையில் தன்னை மீட்டுக் கொண்டவனை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு,அவள் அகன்று விட,அவளின் முதுகை ஒரு கணம் உரசி மீண்டது,ஆட்டுவிக்கும் ஆடவனின் நேத்திரங்கள்.

 

அவள் சென்றதும்,அவன் மரத்தடியில் அமர்ந்து விட,யோசனைகள் தன்னையே அலசின.

 

அவனுமே,பல காதல் கடிதங்களை கண்டவன் தான்.பள்ளி நாட்களிலும் சரி,கல்லூரியிலும் சரி,எக்கச்சக்கமான காதல் தெரிவிப்புக்கள் வந்ததுண்டு.

 

ஆடவனின் பார்வையின் அழுத்தமும்,முகத்தில் அடித்தாற் போல் வரும் பதிலும் அவர்களை மீளவும் அவன் புறம் திரும்பவே விட்டதில்லை.

 

அதோ,அவர்களைப் போல இவளுக்கும் எச்சரிக்க வந்தான்.அன்று அவளின் எதிர்வினையில்,அவளைப் பற்றிய எண்ணம் குழம்ப,அதட்டிய போதிலும் அது அவனுக்குமே ஒப்பவில்லை என்பது,அவன் மனதுக்கு தெரியும்.

 

அதுவும்,அவள் மீது தவறில்லை என்று ஆராய்ந்திடவும்,அவன் மனம் விரும்பவில்லை.அவளிடத்தில் வேறு பெண் இருந்தால்,நிச்சயம் ஆராய்ந்து பார்த்து தவறு அவள் புறம் இல்லையென்றால்,மனிப்பு கேட்டிருப்பான்.

 

ஏனோ,பெண்ணவள் விடயத்தில் அதை செய்திட முடியவில்லை.அவள் மீது தவறில்லை என்று தெரிந்தால்,நல்லெண்ணம் வந்து விடுமோ என்கின்ற பயம்,நூலிழையாய் பற்றிக் கொள்ளவே,அதை செய்யாமல் விடுத்தது.

 

தன் மேல் ஆர்வமாய் படியும் பார்வைகள்,அவனுக்கு எப்போதும் அலட்சியம்.அது ஏனோ பிடிப்பதுமில்லை.

 

“நீ யாரயும் கண்டுக்காம இருக்குற மாதிரி,உன்னயும் கண்டுக்காம இருக்குற பொண்ணு வந்தா,நீ கண்டிப்பா சலனப்படுவ..” பாலா அடிக்கடி கூறுவதும்,இவன் எள்ளலாய் இதழ் விரிப்பதும் வாடிக்கை.

 

“நானா..? பார்ப்பதா..?” பார்வை நக்கல் பேசும்,தோழனிடம்.

 

எப்போதுமே,தன்னை காதலிக்கும் பெண்களை அவன் மதித்தது இல்லை.காதல் மீது,மதிப்பு இல்லாததே அவன் காரணம்.அவளையும்,அப்பட்டியலிலேயே,வைத்துக் கொள்ள அவன் விழைந்ததன்,காரணம் என்னவோ..?

 

“ஒருவேளை இவள் தன்னை காதலிக்காவிடின்..?” அவ்வெண்ணமே அவனை ஏதோ செய்ய,அப்படி இருப்பின் நிச்சயம் அவள் தன்னை ஈர்த்திருப்பாள் என்று துளியாய் எண்ணம் சிறகு விரிக்க,அவனுக்கும் மனதுக்கும் இடையே போர்முழக்கம் ஒலித்தது.

 

இப்போதும்,அவள் தன்னை காதலிக்கும் பெண் தான் என்று தனக்கே அவன் கூறிக் கொண்டு பதிய வைத்திட முனைய,அதுவெல்லாம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.இம்முறை,அவள் அமைதி காத்திடவில்லை.

 

சினத்தில் சிதறிய அவனின் வார்த்தைகள்,அவளை வெடிக்க வைத்திட,சொற்கள் எனும் கற்கள் அவனில் மோதி நெஞ்சில் குவிந்து உரசிக் கொள்ள,அங்கு பற்றிக் கொண்டதென்னவோ,சிறு தீப்பொறி.

 

ஆயுள் தீரும் வரை,அவனுள் எரிந்து,அவனுடன் சேர்த்து அவளையும் எரித்துக் கொண்டேயிருக்கப் போகும்,காதல் தீயிற்கான சின்னதோர் தீ்ப்பொறி.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2026.07.08

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்