என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -28

Loading

 

 

 

 

முகம் 28

 

அன்று வராதராஜனை சந்திக்க வந்திருந்தான் தீரன். சரியாகச் சொல்வதென்றால் இன்பனின் திருமண விடயம் தெரிந்து மூன்று நாட்கள் கடந்திருக்கும்.

 

“என்ன சொல்லுறீங்க தீரன், ஆதாரம் கிடைச்சிருக்கா?” என்று அவர் அதிர, அந்தப் புகைப்படத்தைக் காட்டினான் அவன்.

 

“வாவ், சூப்பர் தீரன். இவ்வளவு நாள் ஆதாரம் கிடைக்காம தப்பிச்சவங்க இப்போ இந்த கடத்தல்ல மாட்டிக்கிட்டாங்க” என்க, இடம் வலமாய் தலையசைத்தான் அவன்.

 

அவரோ கேள்வியாக அவனைப் பார்க்க, “அந்த ராம்பிரசாத்த கண்காணிச்சதுல எந்த நடவடிக்கையும் வித்தியாசமானதா இல்ல. அந்த ஆசிரமம் கூட என்னோட ரகசிய கண்காணிப்புல தான் இருக்கு. சோ இந்தக் கடத்தல் ராம்பிரசாத் நேரடியாக பண்ணாம இன்னொருத்தர வெச்சு பண்ணி இருக்கணும்னு ஒரு சந்தேகம் வர்ற சேம் டைம், இது மொத்தமா இன்னொருத்தரோட வேலையா இருக்கலாம்னு ஒரு டவுட் இருக்கு” என்றான்.

 

“எப்படி சொல்லுற தீரா?” என்று வராதராஜன் கேட்க,

 

“இப்போ புதுசா கடத்தப்பட்ட குழந்தைங்க தவிர்த்து, இதுவரைக்கும் நமக்கு தெரிஞ்சி இந்தக் கேஸ்ல காணாம போன குழந்தைங்க மொத்தமாவே முப்பத்தொரு பேர். அவங்களுக்குள்ள இருந்த மோஸ்ட் காமன் திங் மூனே விஷயம் தான்” என்று அவன் சொல்ல, அவரோ ஆமோதிப்பாய் தலையசைத்தார். அவை அவர் அறிந்தது தானே!

 

“அதுக்கும் இன்னொருத்தர் பண்ணி இருக்கலாம் என்கிறதுக்கும் என்ன தொடர்பு தீரா?” என்று அவர் கேட்க,

 

ஒரு கோப்பை அவரிடம் நீட்டி, “இப்போ கடத்தப்பட்ட குழந்தைங்களோட ரிப்போர்ட் பார்க்கும் போது, இந்த இருபது பேர்ல மோஸ்ட்டா டிபெக்ட் இருக்குற குழந்தைங்களா இருந்தாலும், எல்லாருமே அப்படி இல்ல, அன்ட் இவங்க எல்லாருக்குமே காட்டியன்ஸ் இருக்காங்க. சோ பழசோட கம்பெயார் பண்ணும் போது ரெண்டு இடத்துலயும் மிஸ் மேட்ச் ஆகுது” என்றவன்,

 

“ராம்பிரசாத்தோட நடவடிக்கையை வெச்சி பார்க்கும் போது. ஒன்னு இத ராம்பிரசாத் இன்னொருத்தர வெச்சி பண்ணி இருக்கணும். இல்லனா, இந்தத் தடவ டோட்டலா இன்னொருத்தனோட வேலையா இருக்கணும், என்கிறது தான் என்னோட தோட்டா இருந்திச்சு” என்றான்.

 

அவரோ “ம்ம்ம்ம் வாய்ப்பிருக்கு தீரா, பட் முழுசா அதையும் நம்பிட முடியாது, முதல்ல கடத்தலுக்கான காரணம் என்னனு கண்டுபிடிக்கணும். அப்பறம் தானாவே இந்தக் கேஸ் முடிவுக்கு வரும்” என்றவர்,

 

“இந்த ஆதாரம் போதுமே தீரன் எதுக்காக இன்னும் அமைதியா இருக்கணும்” என்று கேட்டார்.

 

“இந்த இடம் தான் சார் என்னோட மொத்த எண்ணங்களையும் மாத்திச்சு, இந்த கடத்தல் ராம்பிரசாத்தால நடத்தப்பட்ட நாடகம்” என்க, அவர் குழம்பித்தான் போனார்.

 

அவனே தொடர்ந்தான் “அன்னைக்கு கடத்தப்பட்ட குழந்தைங்களோட பேரண்ட்ஸ் கூட பேசுன நேரம், அவங்களோட பேச்சுலயும் அழுகைலயும் இருந்த அந்தக் கவலை, அவங்க கண்ணுல நான் பார்க்கல சார், ஏதோ சொல்லிக் கொடுத்தத சொல்லுற ஒரு ஃபீல், அந்த உணர்வுகளை நான் ஒதுக்கி, இன்னும் விசாரிச்சப்போ தான் தெரிஞ்சிது அவங்க அத்தனை பேரும் ஏதோ ஒரு வகைல ராம்பிரசாத்தோட கனெக்ட் உள்ளவங்கன்னு” என்றவன்,

 

“ஒன்னு அவர் ஹாஸ்பிடல்ல ஃபிரீயா டிரீட்மென்ட் எடுத்துகிட்டவங்க, இல்லனா அவர்கிட்ட வேலை செய்யிறவங்க, அப்படியும் இல்லனா அவங்களோட ரிலேடிவ்ஸ், சோ இது எல்லாம் வெச்சு பார்க்கும் போது இது என்னை வர வைக்க நடத்துன அவரோட நாடகம்னு புரிஞ்சிது” என்றான்.

 

“உங்கள எதுகாக தீரன் அவர் வரவழைக்கணும்?” என்க,

 

“அத அவர்கிட்ட தான் சார் கேக்கணும்” என்றிருந்தான். இப்போதும் முழுமையாக எல்லாம் அவன் அவர் மீதிருந்த சந்தேக வட்டத்தை அகற்றவில்லை, சற்று குறைத்திருந்தான் அவ்வளவே!

 

 

_______________________

 

வரதராஜனிடம் பேசிய அடுத்த நாளே தீரன் கற்பகம் மருத்துவமனைக்கு வந்திந்தான்.

 

அவளை சந்திக்க நேரும் என்பதும் அவனறிந்ததே! அதற்காக போகாமலா இருக்க முடியும்???

 

மனதைத் திடப்படுத்தியவன் நேரே உள்ளே சென்று, விசாரணைக்காக வந்ததைப் பற்றி கூற, தாதியொருவர் மயலிடம் அழைத்து அனுமதி கேட்டிருந்தாள்.

 

“சார், டிரெக்டர் சார் இல்ல, அவங்க பொண்ணு தான் இருங்காங்க அவங்களை வேணா சந்திக்கலாம்னு சொன்னாங்க சார். உங்களுக்கு ஓகேவான்னு கேக்க சொன்னாங்க” என்க,

 

‘ஓகேவாவா, கொழுப்பு அவ்வளவும் கொழுப்பு’ என்று எண்ணியவன்,

 

“நோ அப்ஜெக்ஷன்” என்க, தாதி அவனை மயலிடம் அழைத்துச் சென்றார்.

 

உள்ளே நுழைய முன் ஒரு பெரு மூச்சுடன் கதவைத் தட்ட “எஸ் கமின்” என்றொரு குரல்…

 

அவன் கேட்டுக் கேட்டு ரசித்த குரல், அவன் மிஞ்சுகையில் சங்கீதமாய் ஒலிக்கும் குரல்.

 

‘பார்த்தாலே கடந்து விடுவேன்’ என்று வீம்பாய் சொன்னவனுக்கு அவளது ஒற்றை குரலைக் கடக்க சக்தி இல்லாமல் போனதை அவனே உணர்ந்து கொண்ட நொடிகள் அவை!

 

கண்களை மூடித் திறந்தவன், உள்ளே நுழைந்திருந்தான்.

 

“குட் மார்னிங் சார், டேக் யுவர் சீட்” என்று சாதாரணமாய் அவள் சொல்ல, அவனுக்கோ உள்ளே பற்றி எரிந்தது அவளது ‘சார்’ என்ற அழைப்பு…

 

அன்று அவள் பேசப் பேச கேட்கப் பிடிக்காதவனாய் உதறி எரிந்து விட்டு சென்றிருந்தவனுக்கு இன்று அவளது சாதாரண பேச்சு கோபத்தைக் கொடுத்ததாமா???

 

குரலை செருமியபடி அமர்ந்தவன் “உங்க அப்பா அதான், மிஸ்டர் ராம்பிரசாத் குற்றவாளி இல்லனு அவர வெளில கொண்டு வர, அவர் பொண்ணு எந்த லெவல்க்கும் போய் பொய் சாட்சி சொல்லிக் காப்பாத்த இருக்கும்போது குற்றம் செய்ய அவருக்கு என்ன கசக்கவா போகுது?” என்று நக்கலாய் கேட்டவன்,

 

அவளை இளக்காரமாய் பார்த்து சிரித்து “ஏன் அந்தக் குழந்தைங்கள கடத்துனது நீயா இருக்க கூடாதுனு இப்போ சந்தேகம் வருது” என்று சொல்லி மீண்டும் நக்கலாய் அவளைப் பார்க்க, அவளோ ஏகத்துக்கும் அவனை முறைத்து வைத்தாள்..

 

அவள் பார்வையைத் திருப்தியாகப் பார்த்து “வாய்ப்பு இருக்குல்ல?” என்றவன்,

 

“இதுக்கு என்ன பதில்?” என்று அவள் முன்னே புகைப்படங்கள் சிலவற்றை வைத்தான்.

 

அதில் ராம்பிசத்துடன் அவளும் நின்றிருக்க, அங்கே அவர்கள் அருகே கடத்தப்பட்டதாக சொல்லப்படும் குழந்தைகள் இருந்தனர்.

 

அதனைக் கண்டவள் முகம் ஒரு நொடி மாற, “இப்போ இந்த ஒரு போட்டோ போதும் நீங்க ரெண்டு பேரும் ஆயிசுக்கும் ஜெயில் தான்” என்றவன்,

 

“என்ன நடந்ததுனு நீங்க தான் சொல்லணும். அத்தனை குழந்தைகளையும் எதுக்காக ரெண்டு பேரும் கொன்னீங்க” என வேண்டுமென்றே கேட்க,

 

“எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டுத் தான இங்க வந்திருக்கீங்க, இதையும் கண்டு பிடிக்க வேண்டியது தானே! ஆனா ஃபோர் யுவர் கைண்ட் இன்ஃபோர்மேஷன். எனக்கு நல்லது கெட்டது தெரியும். என் புருஷன் என்ன ஒன்னும் அப்படி வளர்க்கல” என்றாள்.

 

அதில் ‘அடிங்க’ என்று அவன் மனம் எண்ண,

 

அவளோ “அன்ட் மோர் ஓவர் ஐ எம் அ டாக்டர் நொட் எ மேடரர்” என்று நக்கலாய் முடித்தாள்.

 

அவனோ தாடையை நீவியபடியே “அப்படியா கொலைகாரி இல்லையா? உனக்கு தான் அடுத்தவங்க மனச ஈஸியா கொலை பண்ண முடியுமே!” என்றவனின் குரலில் எத்தனை முயன்றும் ஒரு இயலாமை வெளியேறியதைத் தடுக்க முடியவில்லை…

 

அவனுக்கு அவள் வருந்துவாள் என்பது தெரியும், ஆனால் பேசாமல் இருக்க முடியவில்லை,

 

முன்பே அவளை அவனுடன் அழைத்து வராததற்கு மயலின் எண்ணம் ஒரு காரணம் என்றாள் அவனும் ஒரு காரணம் தான்.

 

‘எங்கே தான் அவளை பேசியே காயப்படுத்தி விடுவோமோ?’ என்று அவன் மனமே அவனுக்குப் பயத்தைக் கொடுத்திருந்ததே!

 

அவளுக்கோ அத்தனை நேரம் இருந்தத உணர்வு வடிந்து அன்றைய நாளின் நினைவிலும் அவன் குரலிலும், அதில் இருந்த வலியிலும் மனது பிசைய, வழமை போல் அவளது வலது பக்க விழி பதற்றத்தில் சற்று திசை மாறிப் பார்த்தது.

 

எப்போதும் அவனை கவர்வது போல இன்றும் அவள் ஒன்றை விழியின் திசை மாற்றம் இன்றும் அவனை அவளிடம் ஈர்த்தது..

 

அடுத்தவர்களுக்கு குறையாய் தெரியும் அவள் விழிகளின் பிழை அவனுக்கோ என்றும் ரசனையின் உச்சம்.

 

அருகில் இருந்தும் அவனை ஈர்க்கும் அந்த விழிகளுக்கு முத்தம் கொடுக்க முடியாமல் தவித்த கோபம் அவனை மூர்க்கனாக்க,

 

“நம்ம வாழ்க்கையையே சிதைச்சிட்டியேடி” என்றான் அடக்க முடியாத கோபத்துடன்…

 

அந்த நேரம் ராம்பிரசாத் கோபமாய் உள்ளே நுழைந்திருந்தார்.

 

“உங்களுக்கு இந்தக் கேஸ் சம்மந்தமா ஏதாச்சும் பேசணும்னா நீங்க என்னை தான கான்டெக்ட் பண்ணனும் இப்படி என் பொண்ண விசாரிக்கிறது சரியில்ல” என்றார் வந்ததும் வராததுமாக…

 

“ஓஹோ, அப்படியா? அப்போ என் மேலதிகாரிங்க கிட்ட சொல்லிடுறேன் இங்க எனக்கு ரெண்டு முதாலாளிங்க இருக்காங்க, நான் அவங்ககிட்டயே டூட்டி ரிப்போர்ட் பண்ணிக்கிறேன் நீங்க ஒதுங்கி நில்லுங்கன்னு, எப்படி வசதி” என்று அந்த முதலாளியில் அழுத்தம் வைத்துச் சொல்ல, மயலின் பார்வை அந்த அழுத்தத்தின் காரணத்தை உணர்ந்ததில் சிலிர்த்தது.

 

அவரோ கோபமாக “தீரன் இது ரொம்ப ஓவர், நீங்க அப்ப இருந்து இப்போ வரை சம்மந்தமே இல்லாம என்னை டார்கெட் பண்ணுறீங்க? என் பொண்ணு அதுவும் பத்தொன்பது வயசுப்பொணணு பின்னாடி காதலன்னு நீங்க சுத்தும் போது ஒரு அப்பாவா எனக்கு எப்படி இருக்கும்? அது எல்லா அப்பாக்கும் வர்ற சாதாரண கோபம் தான். அன்னைக்கு பெருசா நாலு வயசுப் பொண்ணுக்கு அப்பான்னு சொல்லிட்டுப் போனீங்க” என்றவர்,

 

“இப்போ ஒரு அப்பாவா யோசிச்சு பாருங்க புரியும். அதுக்காக மட்டும் தான். உங்க மேல நான் கோபப்பட்டது, அதுகாக தப்பு பண்ணிட்டேன் அதனால உங்க மேல கோபப்படுறதா நினைச்சா நான் என்ன பண்றது, நீங்க என்ன தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க” என்றார்.

 

அவரது இத்தனை வருட ஆதங்கம் அது, எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத அவரைப் போய் அத்தனை குழந்தைகளை கடத்தினாய் என்றால் அவரும் என்ன தான் செய்வார்?

 

அவர் ஆதங்கம் இப்போது புரிந்தது அவனுக்கு, இது ஏன் அப்போதே எனக்கு புரியாமல் போனது என்று தன்னை தானே நொந்து கொண்டவனோ,

 

“இருக்கலாம், இந்த அஞ்சு வருஷம் உங்களை கண்காணிசத்துல புதுசா ஒரு டவுட் வந்திருக்கே” என்றவனுக்கு இரண்டு நாட்களுக்கு முன் வரதராஜனுடன் பேசியது அப்போது ஞாபகம் வந்தது.

 

 

அந்த சந்தேகங்களை அவர்களிடம் பகிர்ந்தவன் “இப்போ சொல்லுங்க இந்தக் கடத்தல் நாடகத்துக்கான காரணம் என்ன? என்ன எதுக்காகவோ இங்க வரவழைக்க நினைச்சிருக்கீங்க சோ இதுக்கு பின்னுக்கு ஏதோ காரணம் இருக்கனும்” என்று நேரடியாக விசயத்துக்கே வந்தான்.

 

ஒரு நிமிடம் அவர் ஆடித்தான் போய் விட்டார். அத்தனையும் தெரிந்து வைத்திருக்கிறானே! என்று…

 

அங்கே இருக்கையில் அமர்ந்தவர் பேசத் தொடங்கினார்.

 

“அத்தனை குழந்தைங்க கடத்தப் பட்டிருக்காங்கன்னு எனக்குத் தெரிய வந்தப்போ என்னால நிம்மதியா தூங்க முடியல, அதுல என் ஹாஸ்பிடல் ஒரு காரணும்னு நினைக்க நினைக்க என்மேல அவ்வளவு கோபம். அந்த மருந்து தப்பா போன விஷயத்தை சிவபிரகாசம் பண்ணதுன்னு கண்டுபிடிச்சது கோதை தான். அதுக்கப்பறம் தான் அந்த குழந்தைங்க கடந்துனது அவன் தான்னு அவனே ஒத்துகிட்டான். போலீஸ் கிட்ட சொல்லி அவனுக்கு தண்டனையும் கிடைச்ச அப்பறம் தான். என்னால கொஞ்சம் மூச்சு விடவே முடிஞ்சுது” என்றவர்,

 

ஆனா இப்போ ஒரு ரெண்டு வருஷமா இங்க நடக்குற எதுவுமே சரியா இல்ல, கிட்டத்தட்ட எட்டு குழந்தைங்களுக்கும் மேல இறந்திருக்காங்க என்ன ஏதுன்னு தெரியலன்னாலும் அவங்க இறந்தது நிச்சயம் யாரோடயாவது வேலையா இருக்கும்னு புரிஞ்சிது” என்றவர்,

 

“அவங்க எல்லாருமே டிஃபெக்ட் உள்ள குழந்தைங்கன்னும் போது என்னோட யோசனை எல்லாம் அந்தக் காணாம போன மத்த குழந்தைங்களப்பத்தித் தான். அதனால உள்ள இருக்குற சிவபிரகாசத்தை பார்க்கப் போயிருந்தேன்” என்றவரிடம் சிறு அமைதி.

 

பின்னர் மீண்டும் அவரே தொடந்தார். “அங்க போனதும் தான் எனக்கு அவன் வாண்டாட்டா மாட்டி விடப்பட்டிருக்கிறதே தெரிய வந்திச்சு” என்க, தீரன் அமைதியாக் கேட்டுக்கொண்டான்.

 

அவனுக்கு இவர் சொல்லுவதெல்லாம், இங்கே வந்தபின் ஒவ்வொன்றாய் தெரிய வந்திருந்தது.

 

அந்த சிவபிரகாசத்தை அவனும் சென்று நேரில் சந்தித்து விசாரித்திருந்தான்.

 

தெரிந்த விடயம் தான் என்றாலும் அவரே சொல்லட்டும் என்று அமர்ந்திருந்தான்.

 

“அவன் தான் அந்த மருந்து தப்பா போனதுக்குக் காரணம், ஆனா இது அவனை யாரோ பிளாக்மெயில் பண்ணி சொல்ல வெச்சிருக்காங்க. அது யாருன்னு கேட்டா அவன் சொல்லவே இல்லை, நான் உயிரோட இல்லனாலும் என் குடும்பம் உயிரோட இருக்கணும்னு அவ்வளவு பயத்தோட சொன்னான். எவ்வளவு கேட்டும் பதில் இல்ல. சுயநலமா இருக்குற ஒருத்தன் கிட்ட நாட்டுக்கு நல்லது செய்னு கெஞ்சவா முடியும்” என்றவர்,

 

“தனியா இத என்னால ஹெண்டில் பண்ண முடியும்னு தோணல. நீங்க அத்தனை முயற்சி செஞ்சும் முடியாம போன ஒன்னு, மறுபடியும் உங்களால தான் முடியும்னு தோணிச்சு. அதான் மயலுக்கு கூப்பிட்டேன். அவகிட்ட சொல்லி உங்கள வரவழைக்க போட்ட திட்டம் தான் இந்த குழந்தைங்க. எல்லாரும் எங்களுக்கு தெரிஞ்சவங்க குழந்தை தான்” என்று முடிக்க,

 

அவன் பெருமூச்சுடன் “இவ்வளவு பண்ணுன நீங்க எங்கிட்ட இத எல்லாம் நேரடியாக பேசி இருக்கலாமே!” என்று கேட்டவனுக்கே அதற்கான பதில் தெரியுமே!

 

நிச்சயம் அவன் நம்பி இருக்கவே போவதில்லை, இப்போது அவனுக்கு கிடைத்த ஆதரங்களின் அடிப்படையும் அவர்களின் பதட்டம் இல்லாத பேச்சிலும் தான் அவன் அவரை நம்பியது கூட, அப்படி இருக்கையில் முன்னரே சொல்லி இருந்தார் என்றால் நம்புவது சுலபம் இல்லை என்பது தான் உண்மை.

 

“ட்ரை பண்ணாம இல்ல, என் பொண்ணு வாழ்க்கைய நேராக்கவும், ஏதோ ஒரு வகைல என் மூலமா பாதிக்கப்பட்ட அந்த குழந்தைங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்கும், உங்கள பார்க்க எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் ஆனா சித்தார்த்தும் சரி உங்க ஃபிரண்ட்டும் சரி என்னை உங்க பக்கத்துல நெருங்கக் கூட விடல” என்றிருந்தான்.

 

அவனுக்கோ இதில் ‘யாரை நோவது?’ என்ற எண்ணம் தான்.

 

“அன்னைக்கு அவங்கள மிரட்டுன நம்பர் உங்களோடதா இருந்ததும், அதோட டவர் உங்க வீட்டுல கிடைச்சதும் தான் என்னை இன்னும் அதிகமா நீங்கதான் பண்ணி இருப்பீங்கன்னு நம்ப வெச்சிது. அந்த நம்பிக்கையால நான் இழந்தது ரொம்பவே அதிகம்” என்றவன் பார்வை அவளிடம் தான் நிலைத்தது.

 

அவர்கள் பிரியக் காரணமாய் இருந்த அந்த அஸ்திவாரமே ஆடிப்போயிருக்க, குற்றவுணர்வு அந்த இடைவெளியைத் தன்னை இட்டு நிரப்பிக் கொண்டது.

 

ஆனால் சந்தேகத்தின் வினையால் இந்தனை வருட வாழ்க்கையை இழந்தது போல, மீதி வாழ்க்கையை இந்த குற்றவுணர்ச்சிக்கு இறையாக்கவும் அவன் விரும்பவில்லை.

 

கண்களை மூடித்திறந்தவனுக்கு அவர்கள் வாழ்க்கையை மீண்டும் நேராக்கிடும் முனைப்புத் தான்.

 

அவன் உணர்வுகள் அவளுக்குப் புரிந்தது, இதனாலயே அவள் அப்படி செய்ததும்.

 

இதோ உண்மை ஓரளவுக்குப் புரிய சண்டை போட்டுவிட்டோம் என்று கலங்கித் தவிப்பவனது விழிகள், அவள் அப்படி ஒன்றை செய்திருக்காவிடில் என்றோ ஒருநாள் நிரபராதியைத் தண்டித்து விட்டோமே என இதனையும் விட கலங்குமே!

 

ஆனால் அவனுடன் போய் பேச முடியவில்லை, அதற்கு பிரிந்திருந்த நாட்களின் சுமை ஒரு காரணம் என்றால், அவன் மனநிலையும் ஒரு காரணம்.

 

அவனுக்கு இதை எல்லாம் உணர ஒரு அவகாசம் வேண்டுமே!

 

“நான் பண்ண தப்ப ஒரு சாரி என்கிற வார்த்தையில சரி செய்ய முடியாதுன்னு தெரியும்” என்றவன் “ஆனா என்கிட்ட இப்போ இந்த ஒரு வார்த்தையை தவிர வேற எதுவுமே இல்லை” என்க,

 

அவன் கரத்தைப் பற்றிக்கொண்ட ராம்பிரசாத்தோ “இதுல உங்க தப்பு எதுவுமே இல்லை, இப்படி ஒரு குற்றம் நடக்குறத்தை கண்டு பிடிச்சதே நீங்க தான். இல்லனா இது உலகத்தோட பார்வைல மறைஞ்சே போயிருக்கும். நீங்க பண்ணப்போற பெரிய உதவி அவனை இந்த உலகத்துக்கு முன்ன நிப்பாட்டுறது தான்” என்றார்.

 

‘இவரைப் போயா சந்தேகபட்டோம்’ என்று அவன் மனமே அவனை திட்டியது.

 

அங்கிருந்து எழுந்து அவளைப் பார்த்தவன் “சீக்கிரமே எல்லாம் சரியாகட்டும் இந்தக் கேஸோட சேர்த்து எல்லாத்தையும் மூட்ட கட்டி வெச்சிட்டு மறுபடியும் முதல்ல இருந்து புதுசா வாழ்க்கைய ஆரம்பிப்போம்” என்றதும் அவள் தலை சம்மதமாய் ஆடியது.

 

புரிந்துணர்வு எட்ட நிற்கும் போதுதான் கோபத்துக்கு அங்கே வேலை…

 

இனி அவர்கள் வாழ்வு மாறும் என்ற நம்பிக்கை ராம்பிராசத்துக்கு வந்திருந்தது.

 

மீண்டும் அவனே “அபியை அரவிந்த் கிட்ட கொடுத்து விடு மயல்” என்க, அவள் விழிகள் விரிந்து கொண்டது.

 

அதனை கண்டு பழைய தீரன் சொற்பமாய் எட்டிப்பார்க்க, “என்ன என்னனு நினைச்ச நீ? உன்னையும் பிள்ளையும் அப்படியே விட்டுடுவேன்னா, நீ எனக்கு வேணான்னு முதல்ல முடிவு பண்ணது உண்மை தான். ஆனா உன்ன வந்து பார்க்கத் தவறுனது இல்ல, அப்படி மனசு மாறி உன்ன தேடிவந்தப்போ தான் ஒரு வயசுக் குழந்தையா அபியைக் கண்டேன்” என்றவன், அன்று ஜோதியிடம் பகிர்ந்தவற்றைச் சொல்லி முடிக்க, அவள் கண்களில் கண்ணீர்.

 

உண்மை தெரியும் முன்னரே தன்னை தனக்காக ஏற்றுக்கொள்ள நினைத்தான் என்பதே அவன் காதலுக்கு சான்று தானே!

 

அவள் அவனையே பார்த்திருக்க, அவனோ “இப்படிப்பட்ட அப்பாக்கு, நீ அந்த அளவுக்குப் போராடுனது தான் நியாயம். அவரை நிரூபிக்க நினைச்சதும் நியாயம் தான்” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

 

 

அன்று அவர்களிடம் பேசிவிட்டு வெளியே வந்தவனுக்குத்தான் இன்பன் அழைத்திருந்தான்.

 

அவன் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவன், உடனடியாக விரைந்து சென்று அவனை மருத்துவமனையிலும் அனுமதித்து இருந்தான்.

 

 

 

_____________________

 

இன்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரம் கடந்திருந்த நிலை அது.

 

அவன் உடலில் தடை செய்யப்பட்ட போதை மருந்து அதுவும் அதிக டோசேஜ் செலுத்தப்பட்டதால் அவன் உடல் சற்று பழையபடி இயங்க அவகாசம் எடுத்துக் கொள்கிறது.

 

அன்று தீரனுக்கு அழைத்து பேசியவனை அப்போதே மருத்துவமனையில் அனுமதித்திருக்க, முழுதாய் ஒரு நாள் மயக்கத்தில் தான் இருந்தான். அதன்பின் முழிப்பதும் கயலைக் கேட்டுக் கத்துவதும் மீண்டும் மயங்குவதுமே அவன் வேலையாய் இருக்கிறது.

 

அவனிடம் அவள் நிலையை எப்படி சொல்ல முடியும்???

 

அன்று இறந்த பெண்ணின் உடல் கயலுடையது என்பதை உறுதிப்படுத்தியதே! இன்பனின் நிலை தெரிந்த பின்னர் தான்.

 

அந்த உடல் கயலாக இருக்கலாமோ என்று தட தடக்கும் இதயத்துடன் தான் அவர்கள் சோதித்ததும், ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பதில் உண்மையானதில் அனைவரிடமும் நம்பாத பார்வை தான்.

 

கோதை தான் மகள் என்பதையே உறுதி செய்திருந்தார். அன்று அவர் அழுத அழுகையை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

 

அழுது கரைந்து முடித்தவர் மயலிடம் “நான் சொன்னேனே நீ அவ பக்கத்துல இருக்காதேன்னு சொன்னேனே கேட்டியா? என் பொண்ணு அவ, அவள உன்னால எனக்கு திருப்பிக் கொடுக்க முடியுமா?” என்று அவர் அழ, மயல் ஒடுங்கிப் போய் நின்றிருந்தாள்.

 

கயல் இந்த உலகில் இல்லை என்பதை அவளால் நம்பவே முடியவில்லை…

 

அவள் அப்படியே நிற்க, மனம் பொறுக்காமல் அவள் அருகில் வந்து நின்றிருந்தான் தீரன்.

 

அவனால் அவள் கலங்கி நிற்கும் போது வெறுமனே பார்வையாளராக இருக்க முடியவில்லை…

 

அவன் அருகில் வந்ததும் தேக்கி வைத்திருந்த அவளது மொத்த அழுகையும் அவன் சட்டையை நனைத்தது.

 

ஒருவரை ஒருவர் வாழ்வில் வேண்டாம் என்று எண்ணி இருந்தவர்களுக்கு அடுத்தவர் அண்மை எத்தகையது என்று புரிந்த தருணம் அது.

 

அவனை இன்பனின் நிலையிலும் அவளைக் கயலின் நிலையிலும் வைத்துப் பார்க்க நினைக்கையிலேயே உள்ளம் நடுங்கிய நடுக்கம் அவன் ஒருவனே அறிவான்.

 

அன்று அவள் அருகில் நின்றவன் தான் அதன்பின் அவளிடம் பேசவும் இல்ல, அவள் அருகில் வரவும் இல்லை. அவளும் அப்படியே! நீண்ட நெடிய வருடப் பிரிவின் நீட்சி, அதைக் கடக்க நிச்சயம் காத்திருப்பு அவசியம்

 

 

அவன் அன்றைய நிகழ்வுகளில் மூழ்கி இருக்க, இன்பனைப் பார்த்து விட்டு வெளியே வந்த சித்தார்த்தோ பெருமூச்சுடன்,

 

“இப்போ பயப்பட ஒன்னும் இல்ல மச்சான். ஹி இஸ் ஆல்ரைட், இப்போ அவனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். அதுக்கப்பறம் அவன்கிட்ட கயலப் பத்தி சொல்லுறத யோசி” என்க,

 

“ம்ம்ம்” என்றவன் ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கோபமாய் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

 

 

 

 

 

நேரே அவன் சென்றது, அந்த மூவரும் இருக்கும் குடோனுக்குத் தான்.

 

அங்கே ராம்பிரசாத் முரளிதரன் விஷால் மூவரும் இருந்தனர்.

 

முரளிதரனும் விஷாலும் தரையோடு தரையாக கட்டி வைக்கப்பட்டிருக்க, ராம்பிரசாத் அங்கே இருக்கையில் அவர்களுக்கு கவலாய் அமர்ந்திருந்தார்.

 

தீரனோ முரளிதரனிடம் “உண்மைய சொன்னா, உயிரோடயாவது தப்பிக்க வாய்ப்பிருக்கு” என்றவன், அடித்த அடியில் தொங்கிப் போயிருந்த விஷாலின் முகத்தை காலால் உயர்த்தினான்.

 

அவனோ வலியில் அலற, “வலிக்குதா? இப்படித்தான அந்தப் பொண்ணுக்கும் வலிச்சிருக்கும்?” என்று அவனையும் அடித்தவன்.

 

“ஒருத்தரை கொன்னுட்டு அது இன்னொருத்தர்ன்னு நீங்க நம்ப வைக்க ட்ரை பண்ணுறத அப்படியே நம்ப, நாங்க என்ன நீங்க ப்ரோக்ராம் பண்ணி வெச்ச ரோபோன்னு நினைச்சீங்களாடா??” என்றவன் விஷாலை எட்டி உதைந்திருந்தான்.

 

விஷாலோ அதிர்ந்து தான் போனான். அன்று போலீஸால் கண்டு பிடிக்க முடியாது என்று கேட்டுச் சிரித்தது இன்று சரியான நேரத்துக்கு அவனுக்கு ஞாபகம் வந்திருந்தது.

 

அவன் மடத்தனத்தை அவனால் நொந்து கொள்ளக்கூட அவகாசம் இல்லாமல் போனது தான் விதி.

 

அந்தப் பெண்ணின் உடல் இறந்து பத்து மணி நேரங்களில் கிடைத்திருந்ததினால் அவள் கற்பழிக்கப்பட்ட அறிகுறிகள் இருந்ததனைக் கொண்டு பொரன்ஷிக் அதிகாரிகளினால் விந்தனு பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.

 

அதன் அறிக்கை காவல் துறையினரிடம் இருந்தாலும் குற்றவாளி யாரென்று தெரியாமல் டி.என்.ஏ டெஸ்ட் அதுவரையில் எடுக்கப்பபட்டிருக்கவில்லை.

 

அடுத்து இன்பனின் விபரம் தெரிந்ததும் அது கயல் என்று சந்தேகம் எழுந்திருக்க,

 

தீரனுக்கோ அன்று இறந்த அந்தப் பெண் கற்பழிக்கப் பட்டிருப்பதாக பரிசோதித்த அதிகாரிகள் சொன்னது ஞாபகம் வந்ததில் சற்று குழப்ப ரேகை அவனுள்.

 

அது கயல் தான் என கோதையினால் அடையாளம் காட்டப்பட்டிருக்க அந்த நேரம் அவர் மீது சந்தேகம் இல்லை என்பதால் அது கயலாக இருக்காது என்ற வழியில் அவன் யோசிக்கவில்லை.

 

தாயே பரிசோதித்து மகள் என்னும் போது அதனை மறுக்கவா முடியும்?

 

நம்பினான், அது கயல் தான் என நம்பினான். கற்பழிக்கபட்ட காயம் அவள் உடலில் இருக்கிறது என்றும் தெரியும். அது தன் தம்பியின் வேலையாக இருக்காது என்றும் தெரியும். கட்டிய மனைவியை கற்பலிக்கும் அளவுக்குக் கொடூரன் இல்லை என்றும் தெரியும்.

 

ஆனால் எல்லாம் தெரிந்தும் ஏனோ ஒரு உந்துதல். எதுக்கும் இருக்கட்டும் என அந்த சாம்பிளுடன் இன்பனின் டி.என்.ஏ ஐ பரிசோதத்துப் பார்க்க, அதுவோ பொருந்தவில்லை…

 

அந்த முடிவில் அவனே உணராமல் உள்ளே ஒரு அமைதி. தெரிந்த பதில் தான் ஆனாலும், எதை அவன் மனது உணர்த்துகிறது என்று தான் அவனுக்குப் புரியவில்லை…

 

அவன் அப்படியே யோசித்து மண்டையைக்குழப்பிக் கொண்டிருந்த நேரம் தான், இன்பனை அந்த வழக்கில் மாட்டி விடவேண்டும் என விஷால் செய்து வைத்த செயலாலேயே இப்போது தீரனிடம் வசமாய் மாட்டி கொண்டிருக்கிறான்.

 

___________________

 

 

“டாட், ரிப்போர்ட் மாத்தி வெச்சிடலாம், அவனை ஏதாச்சும் பண்ணியே ஆகணும்” என்க,

 

“பைத்தியம் மாதிரி உளறாத விஷால், ஏற்கனவே பாட்னருக்கு தெரியாம நான் பார்த்துக்கிறேன் ரிப்போர்ட் மாத்திடுவேன்னு நீ சொன்ன ஒரே காரணத்துக்காகத் தான் நான் அமைதியா இருந்தேன். ஆனா பாட்னரே வந்து திட்டுற அளவுக்கு பண்ணி வெச்சிருக்க நீ?” என்று கத்த,

 

“ப்பா, அது பை மிஸ்டேக் ஆகிடிச்சு, இதுல பக்காவா ரிப்போர்ட் மாத்திடுவேன்” என்று இன்பனுக்கு விந்தனு பரிசோதனை செய்து, அந்த பக்காவை பக்காவாக செய்ததில் மாட்டிக்கொண்டான்.

 

தீரன் ஏற்கனவே அதை பரிசோதித்தது அவனுக்கு தெரியாதே!

 

தான் கட்டிக்கொள்ள இருந்த பெண்ணை அவன் கற்பழித்து கொன்று விட்டான் என ஆதரத்துடன் கைது செய்யச் சொல்லி, விக்ரமிடம் சென்றிருக்க, அவன் அனைத்தையும் தீரனிடம் சொல்லி விட்டான்.

 

அவர்கள் இருவருக்கும் பகை என்றே அவன் அவனிடன் சென்றது. கொஞ்சம் அதிகமாகவும் பேசி இருந்தான்.

 

‘குழந்தை கடத்தல் வழக்கில் இருவருக்கும் முட்டிக்கொண்டது’ என்றும்

 

கூடவே ‘இந்தக் கொலை வழக்கை அவன் தான் முதலில் கையாண்டு கொண்டிருந்தான், இப்போது அது தீரனிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கோபம் இருக்கும்’ என்றும் விசாரித்து, அவர்கள் ஊடல் பற்றி கிடைத்த பல தகவலின் அடிப்படையிலேயே அவனிடம் சென்றிருந்தான்.

ஆனால் அவன் அறியாத ஒன்று விக்ரமனுக்கு என்றும் தீரனுடன் கோபம் இல்லை என்பது…

 

அந்தக் கடத்தல் வழக்கை அவன் எடுத்துக்கொள்வதாக வரதராஜனிடம் கேட்டது கூட, தீரனுக்கு அனுபவம் போதாது என்பதாலேயே!

 

இது எதுவும் தெரியாமல் ஆடு தானாய் போய் மாட்டிக்கொண்டது தான் அவனுக்கே வினையாய் போனது

 

அன்றே சந்தேகத்தில் அவனது டி.என்.ஏ ஐ பரிசோதித்து பார்த்ததில், கற்பழித்தது அவன் தான் என உறுதியாக அவனும் மாட்டி முரளிதரனையும் மாட்ட வைத்திருந்தான்.

 

 

______________________

 

இதோ நேற்று அடி சரமாரியாக விழுந்ததில், அது கயல் இல்லை என்றும் அவன் பின்னே காதல் என்று சுற்றிய பெண் என்றும் அனைத்தையும் உளறி இருந்தான்.

 

இன்னும் கயல் இருக்கும் இடத்தை சொல்லவில்லை. இது தீரன் மயல் மற்றும் ராம்பிரசாத் மூவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. விடயம் முழுதாய் தெரிந்ததும் சொல்லிக்கொள்ளலாம் என்று காத்திருந்தனர்.

 

அவனை அடித்த கரத்தை உதறிக் கொண்டவன், “நீயா சொல்லிட்டன்னா உயிரோட போவ இல்லனா, என்னை பண்ணுவேன்னு எனக்கே தெரியாது? கயலை என்ன பண்ண எங்க வெச்சிருக்க” என்று கேட்க,

 

“என் கெஸ்ட் ஹவுஸ்ல” என்றவன்

 

“எங்க அப்போவோட பாட்னர் தான், கயலக் கொல்லச் சொன்னாங்க, எனக்கு அவ வேணும்னு தோணவும், அவளை அடைச்சு வெச்சுட்டு, சந்தேகம் வரக்கூடாதுனு இன்னொருத்திய கொன்னேன்” என்றான்.

 

“பாட்னரா யாரு?” என்று கண் சொருக அமர்ந்திருந்தவனின் கன்னத்தை தட்டி கேட்டான்.

 

“நீ இவ்வளவு நாளா தேடுற அந்த ஆள்” என்றவன் மயங்கி இருந்தான். முரளியும் வயதின் மூப்பில் சில பல அடிகளிலேயே மயங்கி இருக்க,

 

“டேய்… டேய்… ஷிட்” என்றவன்,

 

இந்த வழக்கும் இத்தனை நாள் அவன் தேடும் வழக்கும் இப்படி ஒன்றாகிப் போகும் என்பதனை சுத்தமாய் அவன் எதிர் பார்க்கவில்லை,

 

இது அவன் கயல் மீது கொண்ட ஆசை வெறியில் செய்தாகாக நினைத்திருக்க, இவனோ கொடுக்கப்பட்ட போதையிலும் அடியிலும் உளறி இருந்தான்.

 

ராம்பிராசாத்தோ “இப்போ என்ன பண்றது தீரன் என் பொண்ணு, அவளை எப்படி கண்டுபிடிக்கப் போறோம். எப்படி இருக்களோ” என்று வேதனையுடன் கேட்க,

 

“நிச்சயம், நம்ம கயலுக்கு ஒன்னும் ஆகாது மாமா. இவ்வளவு வரைக்கும் வந்தாச்சு இன்னும் கொஞ்சம் தானே!” என்று சமாதானம் செய்ய, அவரோ அவனைப் பார்த்து மெல்ல வலியுடன் புன்னகைத்து, “சரிங்க மாப்பிளை” என்றதும் தான்.

 

அவன் ‘மாமா’ என்று ராம்பிராசத்தை விழித்தது மண்டையில் உறைத்தது.

 

 

என்று அவர் மீது தவறில்லை என்று அவரைப் புரிந்து கொண்டவனோ, அன்றிலிருந்து அவருடன் நல்ல முறையில் உறவினைக் கொண்டு செல்ல ஆயத்தமாகி இருந்தான்.

 

உண்மை தெரிந்த அன்றே அபி, இணர் இருவருக்கும் அவர்களால் புரிந்து கொள்ள முடியுமான அளவுக்கு விஷயம் சொல்லப்பட, குடும்பத்தில் புதிதாய் கிடைத்த உறவை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டிருந்தனர்.

 

குழந்தைகள் தானே காலப் போக்கில் நிச்சயம் இவை ஞாபகங்களின் சிறு தேக்கங்களாக மறைந்து கரைந்து போக வாய்ப்புக்கள் அதிகம்.

 

ஆனால் அவர்களை பெற்றவர்களால் நிச்சயம் மறக்க முடியாத ஒன்று தான். ஆனால் விதியின் சறுக்கல் என்று உணர்ந்து கொள்ளகூடிய பக்குவம் இருந்தது. கூடவே ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கும் அந்த காதலும் அவர்களது வாழ்வை சீராக்கும் முனைப்பும் நிச்சயம் அவர்களது எதிர்கால வாழ்வை மனநிம்மதியுடன் கடக்க உதவும் என்பதில் ஐயமில்லை…

 

 

 

ஈர்க்கும்…

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்