
சொல்லாமல்…!
மௌனம் – 05
சொல்ல மறந்த கதை..
முதல் தின இரவே,எப்படியே கண்டு பிடித்து எடுத்த ஆடவனின் புகைப்படத்தை தமக்கை காண்பித்ததுமே,அவள் விழிகளில் மெல்லிய அதிர்வு.
“அட நம்ம வாட்ச் மெக்கானிக்..” மெல்ல இதழ்கள் உச்சரித்திட,என்னவென்று கேட்ட,சங்கவிக்கு பதிலேதும் சொல்லவில்லை.
இதோ,இப்போதும் வாங்கிய அறையில் கன்னத்தை பொத்திக் கொண்டு,கண்ணில் மறைந்தவனையே வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தாள்.
சத்தியமாய்,அவனிடம் இருந்து இப்படி ஒரு அறையை எதிர்பார்த்திடவில்லை;எதிர்ப்பார்த்திடவேயில்லை.
அதிகபட்சம்,திட்டுக்கள் விழும் என நினைத்திருந்தவளுக்கு,இப்படி கன்னம் தெறிக்கும் விதமான அறை,சிந்தையை ஸ்தம்பிக்கச் செய்தது.
அவன் சென்ற பின்னரும்,அவள் தன்னிலை மீள சில நொடிகள் எடுத்திட,வாயசைத்திட இயலாதளவு வலித்தது.
“அம்மா..” என்று முணகும் போதே,கண்ணீர் கரகரவென வழிந்திட,அழுது கொண்டே வந்தவளை பதபதைப்புடன் பார்த்தாள்,சங்கவி.
“ஏய் என்னாச்சுடி..?” தவிப்பாய் கேட்டவளுக்கு,பதில் சொல்லக் கூட வாயசைத்திட இயலவில்லை,அவளால்.வலிய கரத்தின் வலிமையில்,வலி பின்னி எடுத்தது.
“அறைந்து விட்டான்..” என சைகையில் எப்படியோ கூறி முடித்திட,அதிர்ந்து விட்டாள்,சங்கவி.அவன் கோபக்காரன் என்று தெரிந்த போதிலும்,இத்தகைய எதிர்வினை அவனிடம் இருந்து கிடைக்கப்பெறும்,என்று சுத்தமாய் எண்ணவில்லை.
முதலில் திகைத்தாலும்,பின்னர் பொங்கியெழுந்து நியாயம் கேட்கச் சென்றவளை,அடக்கி வழிக்கு கொண்டு வருகையில் நொந்து போய் விட்டாள்,சிவா.
அவள் சிவவர்ஷினி!
ஒருவாறு சங்கவியை அமைதிப்படுத்திட,அவளோ இனி அவனின் பக்கமே திரும்புவதில்லை என,சங்கல்பம் எடுத்திட,என்னவோ செய்து கொள் என்று விட்டு விட்டாள்,தலை வலித்திட.
“உன்ன போய் அறஞ்சி இருக்கான்..மனசாட்சி இல்லாதவன்..எனக்கு அவன் வேணாம்..சரியான ஆளுன்னா,ஒரு பொண்ணுக்கு கைய நீட்டுவானா..?”
அவள் விடாது பிடித்துக் கொண்டு,தாம் தூம் எனக் குதிக்க,மனதால் அவனுக்கு பரிந்து கொண்டாலும்,வெளியே வாயசைத்திட விடாமல்,அவ்வளவு வலி.
“அவரு சைட்ல என்ன நியாயம் இருக்கோ தெரில..பேசாம விடேன்..” என தட்டச்சு செய்து காட்டி விட்டு,கை கூப்பி கும்பிட,அப்பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
சங்கவிக்கும்,ஏனோ தங்கைக்கு நடந்ததை எண்ணுகையில்,அவன் தனக்கு பொருந்துவானா என்கின்ற எண்ணம் தோன்ற,அவனிடம் பேச வேண்டும் என்கின்ற எண்ணத்தை அப்படியே கை விட்டாள்.
இதில்,பெண்ணவளின் தாயார் வந்து அவளின் நிலைக்கு காரணம் கேட்டிட,அவள் மறுக்க மறுக்க அனைத்தையும் கடைபரப்பி,பெரியம்மாவிடம் சங்கவி மன்னிப்பை யாசித்திட,இங்கு பெண்ணவளின் முதுகில் பொலீரென்று நான்கைந்து அடிகள்.
சங்கவிக்கு அடிக்க ஓங்கியதும்,இவளுக்கே வந்து விழ,தமக்கையை முறைத்தவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“எரும மாடு..வாய மூடிட்டு இருக்க வேண்டியது தான..” மனதால் அர்ச்சித்தவளுக்கு,இது என்னடா இரு பக்கமும் சோதனை என்கின்ற மனநிலை தான்.
“அவளுக்கு தான் புத்தியில்லன்னா,உனக்கு எங்கடி போச்சு அறிவு..? வெவரமானவன்னு வாய் கிழியப் பேசுவல..இப்போ மூளய அடகு வச்சியா என்ன..? இப்போ,அந்தப் பையன் நீ தான்னுல நெனச்சி இருக்கும்..அவன் முன்னாடி போக முடியுமா உன்னால..?”
பொறிந்த விசாலாட்சிக்கு,மகளின் செயலில் ஏகத்துக்கும் வருத்தம்.என்ன காரியம் செய்து விட்டு வந்திருக்கிறாள் என்று நினைக்க நினைக்க,மனம் வெதும்பியது.
அதுவும்,இது வேறு வெளியே கசிந்தால்,இழுக்காகிப் போகுமே.திருமணம் என்கின்ற ஒன்று பேசிடும் பொழுது குறுக்கே வராது,என்று அடித்துக் கூறிட முடியாதே.அதுவும்,செய்யாத தவறுக்காக இவள் அவப்பெயர் சுமக்க நேர்ந்திடின்..?
தாயுள்ளம் நெருட,மனதை அப்படியே மகள்மாரிடம் பகிர,சங்கவி தான்,குற்றவுணர்வில் சங்கடப்பட்டு நின்றாள்.
கல்லூரி சேர இருப்பவளை,இன்னும் சின்னப் பெண் என்றே அவள் பாவித்து,அவள் செய்த காரியம் இத்தனை விளைவுகளை சேர்ப்பித்திடும் என்று கிஞ்சிற்றும் எண்ணமில்லை,அவளுக்கு.
“அ..அந்த அண்ணா அப்டிலாம் சொல்.. சொல்லா து..”வலித்தாலும்,பெண்ணவள் பேசி முடித்திட,அவள் முதுகில் மீண்டும் ஒரு அடி.
தாயாக அவர் யோசித்திட,பெண்ணவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.ஏனோ,அவன் வெளியே இதையெல்லாம் சொல்ல மாட்டான் என்றொரு நம்பிக்கை.
கண்கள் கலங்கிட பேசியவரை சமாதானப்படுத்தி விட்டு,நிமிர்ந்தவளிடம் சங்கவி மன்னிப்பை யாசித்திட,மீண்டுமா என்கின்ற ஆயாசம்,உள்ளுக்குள்.
அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று காலில் விழாத குறையாய் கெஞ்சிக் கேட்டிட,விசாலாட்சி ஒத்துக் கொள்ளவும் தான்,உயிரே வந்தது.
அப்பா,என்றால் அவளுக்கு ஏனோ ஒரு பயம்.இயல்பான,பேச்சு வார்த்தைகள் கூட அவ்வளவாய் இல்லை.அதுவோ,என்னவோ அவளுக்கு அப்படி ஒரு பயம்.
தாயவரிடம் சத்தியம் வாங்கிய பின்னரே,அவள் மனம் கொஞ்சம் சமப்பட்டது.
●●●●●●●●●
உணர்வே இல்லாது இருந்த தோழனின் முகத்தை பார்த்தவனோ,”கல்நெஞ்சக்காரன்!” என பொருமிக் கொண்டான்,மெதுவாய் வாயசைத்து.
“நா உங்க கிட்ட அப்போவே என் பதில சொல்லிட்டேன் மிஸ்.வித்யா..” அழுத்தமாய் வந்து விழுந்தன,அவனின் வார்த்தைகள்.
“பட்,ப்ளீஸ் இன்னொரு தடவ எனக்காக யோசிக்க மாட்டீங்களா..?” அவள் கெஞ்ச,”நோ” என்றான் பட்டென்று.
“அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கவே பிடிக்காதா..?”
“சென்ட் பர்சன்ட் சான்ஸே இல்ல..”கோபமில்லை,ஆனால் அத்தனை அழுத்தமாக நிதானமாக கூறினான்,அவளை நேர்ப்பார்வை பார்த்து.
“ஆனாலும்,இவன் இவ்ளோ ஓபன் டைப்பா இருக்க கூடாது சாமி..” முணுமுணுத்தான்,தோழன்.
“உங்க பின்னாடி தன்மானம் பாக்காம திரியுறதுனால தான,இவ்ளோ எளக்காரமா போச்சு உங்களுக்கு..?” கண்ணீருடன் அவள் கேட்க,”மேபி இருக்கலாம்..” எனத் தோளைக் குலுக்கினான்.
அவனின் பதிலில்,அவளுக்கு கண்ணீர் வழிந்தே விட,அழுகை பொங்கியது.
“அப்போ..? அன்னிக்கி கூப்டு பொறுமயா பதில் சொன்னது..கோபத்துல கத்தி இருந்தா கூட,நா புடிக்கலன்னு போயிருப்பேன்..அப்டி பொறுமயா பேசுனதும் சாஃப்ட் கார்னர்னு நெனச்சேன்..” அவள் பொங்கிய கண்ணீருடன் கூற,அலைபேசியில் இருந்தவன் பார்வை,ஒரு கணம் பக்கமாய் உயர்ந்து அவளைத் தொட்டது.
“உங்க விருப்பத்த நீங்க அமைதியா சொன்னீங்க..என் பதில நானும் பொறுமயா சொன்னேன்..அதுல என்ன சாஃப்ட் கார்னர்..?” அவனின் பதிலில்,”அவ்வா!” என வாயில் கை வைத்து விட்டான்,தோழன்.
“புடிக்கலன்னு சொன்னவரு எதுக்கு திரும்ப என் பக்கம் வராதீங்கன்னு எல்லாம் அட்வைஸ் பண்ணீங்க..அது ஒரு நல்ல எண்ணத்துல தான..”
“வாட்..? நல்ல எண்ணமா..?” என பின்னந்தலையை கோதியவன்,”அதுவும் என் பதில் தான்..” என்க,அவளுக்கு புரியவில்லை.
“உங்கள மட்டுல்ல,நீங்க பின்னால திரியுறதும் பிடிக்காதுன்னு தான் சொன்னேன்..அதுல என்ன நல்லெண்ணம்..? அது எனக்காக நா சொன்னது..நீங்க பின்னால திரியுறது பாத்து யாரும் என்ன ஜட்ஜ் பண்ணக் கூடாதுன்னு சொன்னது..” அசராமல் அவன் பேச,அவளுக்கோ முகத்தில் அடி வாங்கிய உணர்வு.
“அட்லீஸ்ட் கோவமாச்சும் பட்டு இருக்கலாம்ல..” ஆற்றாமை தாளவில்லை,அவளுக்கு.
“மேபி,உங்க ஆக்ஷனால என்ன யாராச்சும் தப்பா நெனச்சு இருந்தா கோவம் வந்து இருக்கும்..இங்க அது நடக்கல..” தெளிவாகத் தான் உரைத்தான்.
“அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கவே பிடிக்காதா..?” என்று கலங்கிய குரலில் கேட்டதில்,பாலாவுக்கே பாவமாகப் போயிற்று.
“நெவர்!” என்றான்,நிதானமாய்.
அவள் தான்,கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.அவனின் நிதானமான மறுப்பே,அவனின் உறுதியைக் கூறியது.
அவனின் நிதானம் அவளை சுட்டுப் பொசுக்க,தன்னாலும் ஏன் அவனைப் போல் இருக்க முடியவில்லை என்கின்ற ஆதங்கம் கிளர்ந்தெழ,அதுவே அவளை பேச வைத்தது.
“ஏன் அப்போ எனக்கு மட்டும் உங்க விருப்பம் சொன்னதுல இவ்ளோ கோவம்..? ஏன் என்னால மட்டும்,விருப்பத்துக்கு மாறான ஒரு முடிவ அக்ஸெப்ட் பண்ண முடில..” கத்துவது போல் அவள் குரல் ஒலித்திட,ஆடவனின் பார்வை சுற்றம் அலசியது.
“ஷ்ஷ்!” அவளை அதட்டியவனோ,”உங்களால நா டிஸ்டர்ப் ஆகல..என்னால நீங்க டிஸ்டர்ப் ஆகறீங்க..ஸோ அதான் உங்களுக்கு கோவம் வருது..தட்ஸ் ஆல்..” என்றவனின் முகத்தில் அப்போதும் அதே அழுத்தம்;வார்த்தைகளில் அதே நிதானம்.
உன்னால் மட்டுமல்ல,யாராலுமே என்னை பாதிக்க முடியாது என்கின்ற அகங்காரமும்,அவன் வார்த்தைகளில் ஒளிந்திருந்தது.
“இதுக்கு நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டா கூப பரவாலடா..” சுருக்கென்ற பதிலில் புலம்பியவாறு அயர்வாய் பார்த்தான்,தோழனை.
அவளுக்குமே,செருப்பால் அடித்த உணர்வு,அவன் பதிலில்.தன்னைப் பாதிக்கவே இல்லை,என்பவனிடம் அதற்கு மேல் என்ன பேசிடவாம்..?
நண்பர்களை இழுத்துக் கொண்டு கிளம்ப,ஆடவனோ சாவகாசமாய் தனக்கொரு காஃபியை சொல்ல,பாலாவோ தனக்கும் சொல்லி விட்டு கன்னத்தில் கை வைத்துப் பார்த்தான்,தோழனை.
“சின்னக் கோவம் வர்ர அளவு கூட நீ என்ன டிஸ்டர்ப் பண்ணல..உன்னால மட்டுல்ல,யாராலயும் என்ன டிஸ்டர்ப் பண்ண முடியாதுன்னு அமைதியா சொன்ன பாரு..அங்க நிக்கறடா நீ..”நெஞ்சில் அடித்துக் கொண்டவனுக்கு,இவனுக்கு காதல் வரும் என்கின்ற நம்பிக்கையே அற்றுப் போயிருந்தது.
●●●●●●●●
மெல்லிய வெளிச்சம் பரவியிருக்க,வானெங்கும் மேகக் கூட்டம்.அந்த மந்தாரமான வானிலையுடன்,வீசிய தென்றலும் இதமாய் தேகம் தழுவ,அதை உள்வாங்கிடும் மனநிலையில் அவள் இருக்கவில்லை.
துப்பட்டாவால் தன் முகத்தை ஒற்றிய படி நின்றிருந்தாள்,சிவவர்ஷினி.பதட்டத்துடன் பேரூந்து நிறுத்தத்திற்கு ஓடி வந்ததால் முகம் முழுவதும், வியர்த்துப் போட்டிருந்தது.
இதோ அதோவென,கல்லூரி சேர்ந்து ஒரு மாதம் கடந்திருக்க,இப்போது தான் அவற்றுக்கெல்லாம் பழகிக் கொண்டிருந்தாள்.
விசாலாட்சி,காது கிழியும் அளவு திட்டித் தீர்த்தாலும்,எட்டு மணி பேரூந்துக்கு ஏழு ஐம்பதுக்கு தான் கிளம்பச் செல்வாள்.பள்ளிக் காலம் தொட்டு இதே பழக்கம் தான்.முயன்ற போதிலும்,விட முடிந்தது இல்லை.
பாவையின் பார்வை,பாதையை அடிக்கடி தொட்டு மீள,சரேலென தன்னைக் கடந்து சென்ற வண்டியைக் கண்டதும்,அவளின் இமைகள் ஒரு கணம் அழுந்த மூடித் தான் திறந்தன.
ஏனோ வேகம் என்றால் அவளுக்கு கொஞ்சம் பயம் தான்,சிறு வயது முதலே.”இவ்ளோ வேகம் ஆகாதுப்பா..” தனக்குள் பேசியவளோ,தூரத்தே பார்த்திட,தெளிவாய்த் தெரியவில்லை.
பையில் இருக்கும் கண்ணாடியை எடுத்து அணிந்து கொள்ளவும்,சோம்பலாக இருக்க,பேசாமல் இருந்து கொண்டாள்,இருக்கையில்.
இதோ அவளைக் கடந்து சென்ற ஆடவனின் இருசக்கர வாகனம்,அடுத்த சொற்ப நிமிடங்களில், கல்லூரி வாயிலை அடைந்திட அவனுக்கென காத்துக் கிடந்த தோழர்களில் இருந்து பெரும் கூச்சலொன்று.
ஹெல்மெட்டை கழற்றியவனோ,கண்ணாடியில் முகம் பார்த்து,கேசத்தை சீர் செய்து விட்டு,தன் ஃபுல் ஸ்லீவ் ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்து விட பாதங்கள் நீண்டது,தோழர்களை நோக்கி.
இறுக மூடியிருந்த இதழ்களின் ஓரம் தோழர்களை கண்டதன், வெளிப்பாடாய் சிறு புன்னகை ஒன்று மின்னி மறைந்தது.
“சிவா..வா..வா..”அவனின் உயிர்த்தோழன் பாலா அழைக்க பின்னந்தலையை அழுந்தக் கோதியவாறு,அந்தப் பெரிய மரத்தை சுற்றிப் போடப்பட்டிருக்கும் அந்தக் கட்டுத்திண்டில் வந்தமர்ந்து கொண்டான்,தோழர்களுடன்.
அவன் எதுவும் கேட்கவில்லை.கேட்காத போதும்,அவனிடம் எதையும் கூறாமல் விட்டதுமில்லை,தோழர்கள்.
“ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ் இன்டேக் நடந்துச்சுல..செகன்ட் இயர் ரொம்பத் தான் ரேக் பண்றாங்களாம்” ஒருவன் கூறிட,”யாராவது போய் கம்ப்ளைன் பண்ணுணாங்களாமா..?”கேட்டது,பாலா.
“இல்ல மச்சான்..அப்டி எதுவும் இல்ல..”
“அப்போ விடு மச்சீ…லிமிட்டோட இருக்குற ரேகிங் தான் அவங்க பேட்ச்குள்ள பிட்டா இருக்க ஹெல்ப் பண்ணும்..”பாலா கூறும் போதே,ஆடவனின் பார்வை திசை மாறியது.
அவள் தான்.பெண்ணவளே தான்,வந்து கொண்டிருந்தது.அவளைக் கண்டதுமே,விழிகளினோரம் சின்னதாய் இடுங்கிட,புருவங்களிடையே மெல்லிய சுருக்கம்,சில வினாடிகளுக்கு.
பார்வையை திருப்பிக் கொண்டவனுக்கு,அவளின் நடத்தையில் சிறு சந்தேகம்.
அவளும்,அவன் படிக்கும் கல்லூரியில் தான் சேரப் போகிறாள் என்று அவனுக்கு முன்பே,தெரியும்.அவளுக்கு கல்லூரி ஆரம்பிப்பதற்கு முதல் நாள்,அவளின் தந்தை சற்குணம் அவனைக் காண வீடு தேடி வந்திருந்தார்.
தன்னை அறிமுகப் படுத்தியவரோ,அவளும் அதே கல்லூரி எனக் கூறி விட்டு,”கொஞ்சம் பயந்த பொண்ணு தம்பி..அவ்ளவா யோசிச்சு எல்லாம் பாக்காம ஏதாச்சும் பண்ணிடுவா..வீட்ல தான் வாய்னாலும்,வெளில அவ்ளோ பயம்..தைரியமானவ மாதிரி காட்டிக்கிட்டாலும்,கொஞ்சமும் தைரியம் கெடயாது..கொஞ்சம் கவனிச்சிக்கோங்க தம்பி..”,அவளின் மொத்த ஜாதகத்தையும் எடுத்துரைத்திட,இவனால் நம்ப முடியவில்லை.
“அவ்ளோ தைரியமா ப்ரபோஸ் எல்லாம் பண்ண வந்தா..? பயந்தவளா இவ..?” என்று தான் நினைக்கத் தோன்றியது,ஆடவனுக்கு.
அவள் தந்தை கூறியதை கேட்டவனோ,அவருக்கு வாக்குத் தந்த பின்னரே,அவர் நிம்மதியுடன் கிளம்பியது.
அதன் பிறகு,அவளைக் காண்கையில் அவன் கவனித்திட,அவளோ அவனைக் கண்டாலே அரண்டு போய்,மிரண்டு விழிப்பாள்.அவன் இருக்கும் பக்கத்திற்கு தலை காட்டுவதே இல்லை.
இதில் சில தடவைகள்,அவனின் அர்ச்சனைகளுக்கும் ஆளாகியதுண்டு.அப்போதும்,அவனின் மனம் முரண்டியது தான்.
அவளை பற்றிய ஊகத்துக்கும் அவளின் நடத்தைகளுக்கும் இடையே,வித்தியாசம் சுவரென எழுந்திருக்க,தன்னை ஈர்த்திட இவள் நடிக்கிறாளோ என்றெல்லாம்,அவனுக்குள் எண்ணங்கள்.
பார்வை இயல்பு போல்,அவள் புறம் சுழன்றது.கொஞ்சம் பயமும்,நிறையவே வெற்றுப் பாவமும் நிறைந்திருந்த, விழிகளை சுழற்றி சுற்றும் முற்றுப் பார்த்து வந்து கொண்டிருந்தவளின்,நடையில் அத்தனை வேகம்.
அவள் பயத்தைக் கண்டதும் ஏனோ எரிச்சல்.கூடவே,நம்பாத பாவம்.
அவளின் சில வெகுளித் தனங்களை கண்டும்,எரிச்சலுடன் உண்மை தானா என்கின்ற எண்ணம் எழத்தான் செய்திருக்கிறது,
ஆடவனின் மனதில்.
அதுவும்,அவளின் இந்த பயம் அவனுக்கு அறவே பிடிப்பதில்லை.அது உண்மையாய் இருக்கும் பட்சத்திலும்.
ஆணாயினும் பெண்ணாயினும், தைரியமாக வெகுளித்தனமின்றி, கம்பீரமாக இருந்திட வேண்டும் என்பது அவன் கொள்கை.
விதிகள் தான் அனைவருக்கும் பொது.கொள்கைகள் அவரவருக்கு ஏற்ப மாறிக் கொள்ளும்.சிலருக்கேற்ப மாற்றியும் கொள்ளப்படுமே.
அவளின் பார்வை வீச்சில் இவன் விழவேயில்லை.அவனைக் கடந்து செல்லும் போது ஏதோ யோசனையில், சென்றவளின் பார்வை தவறியேனும் அவன் புறம் திரும்பி இருந்தால்,அவன் தன்னைப் பார்ப்பதை எண்ணி காய்ச்சல் கண்டிருப்பாள்,பாவிமகள்.
கடந்து சென்றவளை, இரண்டாம் வருடம் கற்கும் மாணவியர் கூட்டம் அழைத்திட திக்கென்றது உள்ளுக்குள்.
ஏதோ ஒரு நல்ல எண்ணம் போல், அவளை சீண்டி விட்டு அவர்கள் அனுப்பி விட விட்டால் போதுமென விடுவிடுவென,அவன் பார்வை தொடர்ந்தது.
தங்களின் வகுப்பில் நுழைந்த பின்னரே அவளிடமிருந்து,ஒரு ஆசுவாசப் பெருமூச்சொன்று.என்னவோ,அவனிடம் இருந்து பேச்சுக்களை வாங்கியதில்,அவன் கண்களில் சிக்காமல் தப்பித்திட முனைவாள்,பெண்ணவள்.
“ஹப்பாடா..” பெருமூச்செறிந்தவாறு,அமர்ந்து கொள்ள தோழியின் பார்வை,பெண்ணவள் மீது ஆராய்ச்சியாய் படிந்தது.
“வர்ஷினி..”
“என்னடி…?”
“நீ அவர பாக்கல..?”
“யாரடீஈஈஈஈ…?”
“அந்த அண்ணாவ..”
“யார சொல்ற காயத்ரி.?”
“அன்னிக்கி ரோட்ல வச்சி செம்மயா திட்டினாரே..க்ராஸ் பண்ணும் போது..”
“ஓ!”என்றவளுக்கு,அவன் முகம் மனக்கண்ணில் வரும் போதே,அடி வயிற்றில் பயப்பந்து உருண்டது.
தன்னை எச்சரிக்கும் போது,விழிகளில் தெரிந்த ஆக்ரோஷமும் அதட்டலும்..ஏனோ,அதுவே அவள் வெலவெலத்துப் போக போதுமானதாய்.
அதுவும்,வாங்கிய அறையில் இப்போதும் கன்னம் வலிப்பது போல் இருக்க,ஒற்றைக் கரம் கன்னத்தை பற்றிக் கொண்டது.
“என்னா அடி..”நினைத்த படியே கன்னத்தை தடவிப் பார்த்தாள்.
காயத்ரி ஏதோ பேச்சுக் கொடுக்க,இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் வகுப்பறையினுள் நுழைந்திருந்தனர்,ஆடவனும் தோழனும்.
வர்ஷினிக்கு,பக்கென்றாக தலை தாழ்த்தி நல்ல பிள்ளை போல் இருந்து கொண்டாள்.மறந்தும் விழிகளை நிமிர்த்தவேயில்லை.
அவளில் செயல் கவனத்தில் பதிந்தாலும்,எவ்வித எதிர்வினையும் இல்லை,அவனிடமிருந்து.
தன் அத்தை மகனை பார்த்து நலம் விசாரித்து விட்டு ஆடவன்,கிளம்பி விட்ட பின்னரே மூச்சு வந்தது,பெண்ணவளுக்கு.
“ஏன்டீஈஈஈ..இவ்ளோ பயப்பட்ற..?”
“அதெல்லாம் பெரிய கொசுவத்தி சுருள் இருக்கு..”அவள் கூறும் முன்னமே,பேராசிரியர் நுழைந்து விட பாடத்தில் கவனமாயினர்,
இருவரும்.
இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்ல,அங்கும் ஆடவன்,தோழர்கள் சகிதம்.
கதவருகேயே, அமர்ந்திருந்தவனைக் கண்டதும் நெஞ்சில் நீர் வற்றிப் போக,வந்த வழியே திரும்பி விட்டவளை கண்டனத்துடன் பார்த்தான்,ஆடவன்.
“இப்போ எதுக்கு ஓவரா சீன் போட்றா..?” கடுகடுத்தவனுக்கு,ஏனோ அவளின் நடத்தையில் அவ்வளவு கோபம் வந்தது.
●●●●●●●
அண்ணனுடன் வராமல் தனியாகவே,அஷ்வினி தனியாகவே கல்லூரிக்கு வந்திட,அங்கு அவளுக்கென காத்திருந்தான்,வினய்.
வினய்,நேரத்துக்கு முன்பாகவே கிளம்பி வரச் சொல்லியிருக்க,ஆதித்யாவுடன் வரும் பட்சத்தில் காலம் தாமதிக்கும் என்று தான்,அவள் தனியாகவே கிளம்பி வந்தது.
வினய்,அவளுடன் பயிலும் மாணவன்.இருவருக்கும் இடையே,நல்ல பழக்கம் உண்டு.நட்பைத் தாண்டியதோர் புரிதல்,இருப்பதாய் அவளுக்குள் ஒரு எண்ணம்.
“என்ன வினய்..? எதுக்கு சீக்கிரமா வர சொன்ன..?” பின்னலை சரிபார்த்தவாறு கள்ளமில்லா புன்னகையுடன் அவள் வினவிட,அவன் விழிகளோ அவளின் புன்னகையில் மொத்தமாய் அவளிடம் உறைந்து போயின.
அவளின் புன்னகையும் விழிமொழியும்,அவனை சாய்த்தே விட,அவள் கையசைத்ததும் தான்,அவன் சுயம் மீண்டதே.
“என்ன வினய்,வர சொல்லிட்டு பேசாம இருக்க..? என்ன விஷயம்..?”,அவள் யோசனையுடன் கேட்டிட,அவள் விழிகளில் தெரிந்த நம்பிக்கையில் இவனுக்குள் சிறு பயம்.
நட்பைத் தாண்டிய உணர்வு அவளிடம் இல்லை.ஆனால்,காதலை விட முதன்மையாய், அவனிடமும் எதுவும் இல்லையே.
“நா ஒரு விஷயம் சொல்லனும் அஷ்வி..” அத்தனை தயக்கம் அவனின் வார்த்தைகளில்.எங்கே,தான் காதல் உரைத்து இருக்கும் நட்பிழையும் அறுபட்டிடக் கூடுமோ என்கின்ற எண்ணம் எழ,அதுவே தொண்டையை அடைக்கச் செய்தது.
பேசத் தான் முயன்றான்.ஆனாலும்,ஏதோ தடையெழ,பிறகு பேசுக் கொள்ளலாம் என்று அகன்றவனை புருவம் சுருக்கிப் பார்த்தவளுக்கு,நிஜமாகவே எதுவும் பிடிபடவில்லை.
●●●●●●●
இரவு கவிழ்ந்திருந்தது.
அடை மழை வெளியே பெய்து கொண்டிருக்க அந்த மழைச் சத்தத்தில் தன்னை மறந்து லயித்து இருந்தாள்,தேவதர்ஷினி.
கொட்டும் மழைச் சத்தத்திலும் மௌனமாய்,அவள் மனதில் அவன் நினைவுகளின் தூறல்.
அன்று அவன் மழைக்கு ஒதுங்கி தன்னருகே நின்றதும், வெட்டிச் சென்ற மின்னல் வெளிச்சத்தில் பயந்து தான் அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டதும், நினைவில் வந்து அவளின் இதழ்களை விரியச் செய்தன.
கோர்த்த கரத்தை தூக்கிப் பார்த்திட,அவள் விழிகளிலும் புன்னகை.வலிமையான கரங்கள் தான்,என இப்போது சொல்லிக் கொண்டாள்,அன்றைய நினைவில்.
பக்கவாட்டில் கண்ட,அவன் முகம். மின்னல் வெளிச்சத்தில்,அரவமின்றி அவளை அள்ளிக் கொண்ட,அவனின் தோற்றம் ஆயுளுக்கும் மறக்கப் போவதில்லை.
அவன் கரம் பற்றியவாறே அவள் சுயமிழந்து பார்த்திருந்ததும்,அவன் ஒற்றைப் பார்வை அதட்டலுடன் கைகளை உருவிக் கொண்டு நகர்ந்ததும் நினைவிலாட,கொஞ்சமாய் விழியில் நீரும் சேர்ந்தது.ஆனாலும்,அசை போட்டாள்,யாவற்றையும்.
நிஜங்கள் ஒரு வித இனிமை,என்றால் நினைவுகள் மூழ்கடிக்கச் செய்யும் போதை.நினைத்து சுகித்து சுகித்தே அடியாக்கிடும்,பெரும் போதை.
அலைபேசியையாவது, துழாவலாம் என்றெண்ணி மேசையின் புறம் நகர்ந்தவளுக்கு, கைப்பையில் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் கீ செய்னை காணாது போக பரபரவென மேசையைக் கலைத்து தேடின,விரல்கள்.
அவள் விழிகளில் கலவரம்.இதயம் படபடக்க உடல்மொழியில் அத்தனை பதட்டம்.
கீ செய்ன் அறுந்து விழுந்திருப்பதை எடுத்தியம்பியது, பாதியாய் பையுடன் தொங்கிக் கொண்டிருந்த,அதன் மேற்பகுதி.
சட்டென மின்னல் வெட்டியது,உள்ளுக்குள்.இன்று கடைத்தெருவுக்கு சென்று வரும் போது வழியில் ஏதோ விழும், சிறு சத்தம் கேட்டதும் தான்,கண்டு கொள்ளாமல் கடந்து வந்ததும்.
சரியாக தேவேந்திரனின், வீட்டின் பக்கமாய் இருக்கும் அந்த வெற்று நிலப்பரப்பில் தான் விழுந்திருக்கும் என்பதை கணித்துக் கொண்டது,அவள் மனது.
கையில் குடையையும் டார்ச் ஒன்றையும் எடுத்தவளாய்,சத்தம் காட்டாமல் கதவை அடைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியிறங்க, காற்றின் திசையில் அசைந்தாடிய சாரல் துப்பட்டாவை தாண்டி அணிந்திருந்த ஸ்வெட்டரை நனைத்தது.
அத்தனை வலுவாய் மழையும் பெய்திட,அதுவெல்லாம் அவள் பொருட்டில் எங்கனம் பதிந்திடுமாம்..?
முகத்தில் தெறித்த நீர்த்துளிகளை அடிக்கடி ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தவளோ,விழிகளில் துளிர்த்த நீரை இமை சிமிட்டி அடக்கிக் கொண்டாள்.
வெளியே ஆள் நடமாட்டம் இல்லாதிருக்க, தேவேந்திரனின் வீட்டு வெளி விளக்கின் வெளிச்சம் கூட அந்தப் பரப்பை பெரிதாக எட்டி இருக்கவில்லை.
வேகவேகமாய் நடந்து வந்து அவ்விடத்தில் டார்ச் வெளிச்சம் கொண்டு தேடத்தான் செய்தன,அவள் விழிகள்.
காலையில் தேடிக் கொள்ளலாம்,என புத்தி எடுத்துரைத்தாலும் அவனிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மனம் ஏற்றுக் கொள்ளுமா என்ன..?
இந்தக் காதலும் அதன் வெவ்வேறு பரிமாணங்களும் புத்திக்கு அப்பாற்பட்டவை தான்,அநேகமான சமயங்களில்.
“இந்த கீ செய்ன் உன்ன விட்டு வெலகி போனா அர்ஜுனும் உன்ன விட்டு வெலகி போய்ருவான்..அதனால பத்ரம் தங்கச்சீஈஈ”
அன்று விளையாட்டுக்கென, அவனின் தோழன் கூறியது அன்றில் இருந்து இன்று வரை அவளை ஆட்டுவித்திட,இப்போதும் சரியாக பிரசன்னமாகி அவளை நிலைகுழையச் செய்தது.
எத்தனை தெளிவாக சிந்திக்கும் மனமும் யாரோ ஒருவரின் விடயத்தில் சறுக்கிட,அவளைப் பொறுத்த வரை அந்த யாரோ ஒருவன்,தாலி கட்டியவன்.
அந்நிலையில் தான் அவள்.
ஆட்டுவிக்கிறது,
அவன் மீதான நேசம்,
அவளைக் கைப்பாவை போல்.
தொடரும்.
🖋️அதி..!
2026.07.04

