என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்-19

Loading

 

முகம் 19

 

 

ஏழு வருடங்களின் முன்

 

 

அன்று வேதநாயகபுரத்தில் ஒரே மேடையில் ஐம்பது திருமணங்கள் நடைபெற மாணிக்கவேல் பாண்டியனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வுதான். பரம்பரை பரம்பரையாக இதனை மாறாமல் கடைப்பிடிக்கின்றனர் ஜமீன் வீட்டினர்.

 

சுற்றி உள்ள பதினெட்டு ஊர்களிலும் கஷ்டப்படும் குடும்பங்களில் இருந்து ஐம்பது ஜோடிகள் தேர்வு செய்து திருமணம் செய்து வைப்பது வழக்கம்.

 

இன்று அதற்காக ஊரே கோயிலில் கூடி இருந்தது.

 

ஆனால் அந்த நாள் விடிந்ததில் இருந்தே முகத்தை தூக்கி வைத்தபடி கோயிலின் பின் பக்கத் தூணில் தலைசாய்த்து அமர்ந்திருந்தான் பரஞ்ஜோதி.

 

தேன் மொழி அவனையே குறுகுறுவெனப் பார்க்க,

 

“என்னடி பார்வை இங்க?” என்று எரிந்து விழுந்தவன், “இங்க இருந்து எழுந்து போ?” என்றான் கோபம் மாறாமல்…

 

“இங்க வந்து உக்காந்துட்டு வரமாட்டேன்னு என் புருஷன் அழுதா, நான் என்ன பண்றது அதான் நானே தாலி கட்டிடுவோம்னு உங்களையே பார்த்துட்டு உக்காந்திருக்கேன்” என்றாள் அவள் சிறிதும் அலட்டல் இன்றி…

 

“தேனு…” என்று அவன் சீற, அவளோ அரைகுறை திருமண அலங்காரத்துடன் அவன் அருகில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்தாள்.

 

“அதான் எல்லாரும் என்ன விட்டுட்டு போறாங்கல்ல நீ மட்டும் ஏன் இருக்க? நீயும் போக வேண்டியது தானே! என்று கேட்க,

 

“ஆஹ்ன் வேண்டுதல்” என்று கேட்ட குரலுக்கு இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கே தீரன் நின்றிருந்தான்.

 

தேன்மொழி அவனைக் கண்டதும் எழுந்துகொள்ள, பரஞ்ஜோதி முகத்தை திருப்பிக் கொண்டான்.

 

“நீ போய் ரெடியாகுற வேலையப் பாரு தேனு, இவனுக்கு வேப்பிலை அடிச்சி நான் கூட்டிட்டு வரேன்” என்க, தேன்மொழி ஜோதியை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்.

 

அவள் சென்றதும் ஜோதி அருகில் அமர்ந்த தீரன், நண்பனின் தோளில் கைகளைப் போட்டுக்கொள்ள, அவனோ தட்டி விட்டிருந்தான்.

 

புன்னகையுடன் மீண்டும் போட்டுக் கொண்டவன் “ஏன்டா கல்யாண மாப்பிள்ளை இப்படி மூஞ்ச தூக்கி வெச்சிருந்தா மாப்பிளைக்கு பொண்ணப் பிடிக்கலன்னு, யாராச்சும் கல்யாணத்தையே நிறுத்திடப் போறாங்க பாரு” என்க, பரஞ்ஜோதியிடம் தீவிர முறைப்பு…

 

“சரி சரி, இப்போ நான் எங்க போய்ட போறேன். இங்க பக்கத்துல இருக்க ஊருக்கு தானே!” என்க,

 

“சென்னை உனக்குப் பக்கமா?” என்று அவன் பட்டென முறைப்புடன் கேட்டான்.

 

“உனக்கு நான் போறேங்குறது கவலை இல்லை, சென்னைக்கு போறேங்குறது தான் கவலையே! அங்க போய் உன்ன விட்டுட்டு பொண்ணுங்கள தனியா சைட் அடிப்பேங்கிறது உண்மையா இருந்தாலும், நீ எக்செப்ட் பண்ணிக்கணும்டா ஜோதிகா” என்க, பரஞ்ஜோதி வெறியாகி விட்டான்.

 

“நீயெல்லாம் மனிசனே இல்ல தெரியுமா? ஒருத்தன் கவலைல இருக்கானேன்னு ஒரு இது இல்லாம கலாய்க்கிற நீ” என்றதும் தீரன் சிரித்தே விட்டான்.

 

“எதுடா ஜோதிகா எனக்கு இல்லைங்கிற, தெளிவா சொல்லு பார்ப்போம்?” என்க,

 

“விளையாடாத தீரா, எனக்கும் மட்டும் ஏன் இவ்வளவு அவசரமா கல்யாணம், நீயும் சித்துவும் இருக்கீங்கல்ல” என்று கேட்டான் அவன்.

 

அதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை கைவிட்டு தீவிர முகபாவனையுடன் அவனைப் பார்த்த தீரனோ,

 

“அப்படியே ஒன்னு வெச்சேன்னா பார்த்துக்கோ. காதலிச்ச பொண்ணு கூட கல்யாணம் நடக்கப் போகுது, நல்ல வேலை அதுவும் ஊர்லயே கிடைச்சிருக்கு இதல்லாம் விட்டுட்ட எங்கூட அங்க வந்து என்னடா பண்ணப்போற நீ? சித்து அவன் இன்னும் ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்ணல, அதோட நம்ம துவா படிப்பும் முடியணும்ல. சின்ன புள்ள மாதிரி மிஸ் கிட்ட அடுத்தவனை மாட்டி விடாம, சொல்லுறதை புரிஞ்சிக்கோ” என்றான்.

 

ஜோதியிடமோ மௌனம். அவன் சொல்வது புரிகிறது என்றாலும் உள்ளே ஏதோ ஒன்று அவனை வாட்டிக் கொண்டு தான் இருந்தது.

 

நண்பனின் மனநிலை நன்கு புரிய “ஜோதி, தேனுவ கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? நீ பேசுற வார்த்தைய எல்லாம் அவ கேட்டான்னா எவ்வளவு வருத்தப்படுவா? கல்யாணப் பொண்ணுக்கு தன்னோட கல்யாணத்துல எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்? நீ இப்படி ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்னா அவளுக்கு சங்கடமா இருக்காதா? நமக்குன்னு யாரும் இல்லைங்கிற எண்ணம் அவளுக்குத் தோணும்ல” என்க,

 

“அதெல்லாம் தேனு புரிஞ்சிக்கும்” என்றான் அவனும் வீம்பாய்.

 

“எங்கிட்ட அடி வாங்க போரடா நீ, சும்மா தேவை இல்லாதத பிடிச்சித் தொங்குற, எப்படியும் நான் போய் ஆகணும்னு தெரியும்ல, சின்ன புள்ளை மாதிரி அடம்பிடிக்காம மரியாதையா ரெடியாகி வர்ற வழியப் பாரு, ஒரு குழந்தைக்கு அப்பா ஆகுற வயசாச்சு இன்னும் புத்தி வரல” என்றவன் எழுந்து செல்ல,

 

“உனக்கும் அதே வயசு தான்டா தோஸ்து ஆகுது” என்று கத்திய ஜோதியின் குரல் காதில் நன்றாக விழுந்ததில் அவன் இதழ்கள் மெல்ல வளைந்து கொண்டது.

 

‘தோஸ்து’ என்ற அந்த ஒற்றை அழைப்பு, நண்பன் தேறிவிடுவான் என்பதை அவனுக்கு உணர்த்த போதுமானதாய் இருந்தது..

 

அன்று தான் பரஞ்ஜோதிக்கும் திருமணம். அந்த ஐம்பது மணமகன்களில் அவனும் ஒருவன்.

 

காவல்துறை வாகன ஓட்டுநர் பதவி போன வாரம் அதுவும் அவனது ஊரிலேயே கிடைத்திருந்தது.

 

தீரனின் தலையீட்டில், இதோ பரஞ்ஜோதியின் காதல் காற்புள்ளியுடன் அடுத்த அத்தியாயத்தைத் தொடரக் காத்திருந்தது.

 

அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவே மாட்டேன் என்றவனை அதட்டி உருட்டி சம்மதிக்க வைத்தது என்னவோ தீரன் தான்.

 

தீரனும் அசிஸ்டென்ட் கமிஷ்னர் பதவிக்கு தேர்வாகி நியமனக் கடிதத்துக்காகக் காத்திருந்த தருணமது…

 

நிச்சயம் வெளியூரில் தான் வேலை இருக்கும் என இருவரும் அறிவர். ஆனால் இவ்வளவு விரைவில் ஜோதி இதனை எதிர் பார்க்கவில்லை.

 

அதுவும் அவன் திருமணம் முடித்து அடுத்த நாள் என்னும் போது ஒரு சுணக்கம் அவனிடம்…

 

நண்பனுடன் செல்ல முடியாத தவிப்புப் பெறுக, அது அவசரமாய் திருமணத்தை ஏற்பாடு செய்த நண்பன் மீதே கோபமாய் திரும்பி இருந்தது.

 

பார்ப்பவர்களுக்கு ‘இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்று தோன்றலாம். ஆனால் அவர்களது உறவு அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக் கூடியது.

 

பரஞ்ஜோதிக்கு தீரன் தான் தாய் தந்தை எல்லாம்.

 

விவரம் தெரியாத வயதில் தாய் தந்தையை இழந்தவன் அவன்.

 

ஜமீன் வீட்டில் கணக்குப் பிள்ளையாக வேலை செய்த மாரிமுத்துவின் மகன் தான் இந்தப் பரஞ்ஜோதி.

 

அவன் பிறந்த அன்று தாயை இழந்தவன், எட்டு வயதில் தந்தையையும் இழந்திருந்தான்.

 

தீரனின் குடும்பத்தினரும் அவனைப் பிரித்து எல்லாம் பார்த்ததில்லை என்பதால், தீரன் படிக்கும் அதே பள்ளியில் தான் அவனும் படிக்க வைக்கப்பட்டான்.

 

ஒருநாள் பாடசாலை சென்று வந்தவன், தந்தையை இறந்த உடலாய் தான் பார்க்க நேர்ந்தது.

 

அன்று நண்பனின் கரங்களை பற்றிக்கொண்ட தீரன் இன்றுவரை அவன் தந்தையாய் தாயாய் வழி நடத்துகிறான்.

 

‘மகன் எது செய்தாலும் சரியாக இருக்கும்’ என்று நம்பும் சக்திவேலுக்கு கூட இந்த திருமண ஏற்பாடு சற்று உறுத்தல் தான்.

 

ஆனால் மகன் சொன்ன வார்த்தைக்கு மறுப்பின்றி சம்மதித்து இதோ பரஞ்ஜோதியின் திருமணம் இன்று நடைபெற இருக்கின்றது.

 

முதலில் வேண்டாம் என்று மறுத்த ஜோதியை சக்திவேலின் ஒரு வார்த்தை கட்டுப்படுத்தி இருந்தது.

 

அதற்காகத் தானே தீரன் தந்தையை நாடியதும்..

 

சக்திவேல் போல் மீனாட்சி அமைதியாகவெல்லாம் இருக்கவில்லை, அவனிடமே கேட்டு விட்டார்.

 

“ஏன் தீரா ஜோதி கல்யாணத்தை அவசரமா பண்ணனும் பொறுமையா பெரிசா செய்யலாமே!” என்று ஆதங்கமாய் கேட்டிருந்தார்.

 

அவரைப் பார்த்துப் புன்னகைத்தவன், “இது அவனுக்காகம்மா” என்று மகன் சொன்னதின் அர்த்தம், அடுத்த நாள் மகனின் நியமனக் கடிதத்தில் புரிந்தது மீனாட்சிக்கு…

 

எங்கே கிடைத்த வேலை வேண்டாம் என்று தன் பின்னே வந்துவிடுவானோ என மகன் அவனுக்குத் திருமண வேலியை போட்டிருக்கிறான். என்பதை உணர்ந்தவருக்கு இந்த திருமணத்தில் அதன்பின் எந்த சங்கடமும் இருக்கவில்லை…

 

_________________

 

 

யோசனையில் இருந்து விடுபட்ட பரஞ்ஜோதியோ பெருமூச்சுடன் எழுந்து தயாராகி வெளியே வர, ஊர் கோயில் திருமணக் கலையில் மிளிர்ந்தது.

 

இவனைக் கண்டதும் அவனைவரும் புன்னகைக்க, தீரனோ கண் சிமிட்டினான்.

 

அதில் அவன் சற்று ஆசுவாசம் பெற, அப்போதுதான் தேன்மொழியின் கலங்கிய முகம் அவன் பார்வையில் விழுந்தது.

 

அவனைப் போல அவளும் அங்கே வேலை செய்பவள் தான். இருவருக்கும் காதல் வந்து ஒட்டிக்கொள்ள, தீரன் அதனை நனவாக்கியும் கொடுத்திருந்தான்.

 

இதோ திருமணம் என்ற நிலையில் அவர்கள் காதல் முன்னேறி இருக்க, சந்தோசமாய் இருக்க வேண்டியவளின் முகத்திலோ கலக்கம்.

 

தன்னையே நொந்து கொண்டவன், புன்னகை முகமாக அவர்களை அடைய, அடுத்து எல்லாம் சடுதியில் தயாரானது.

 

பரஞ்ஜோதியின் விருப்பப்படி தீரனின் கரங்களாலேயே தாலி எடுத்துக்கொடுக்கப்பட, திருமணமும் இனிதே நிறைவு பெற்றிருந்தது.

 

அடுத்த நாள் வீட்டில் அனைவரிடமும் விடை பெற்ற தீரன் சென்னையை நோக்கியும் அவன் காதலை நோக்கியும் பயணத்தை ஆரம்பித்தான்.

 

 

_______________

 

 

இதோ அதோவெனா ஜெயதீரன் சென்னைக்கு வந்து இரண்டு வாரம் கடந்திருந்தது.

 

அன்று காலையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனின் தொலைபேசி மீண்டும் மீண்டும் அடிக்க, விழிகள் திறந்து அது தாங்கி வந்த பெயரைப் பார்த்தவன், வேண்டும் என்றே அதனை ஏற்காமல் மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தான்.

 

மீண்டும் மீண்டும் அழைத்து

ஓய்ந்த எதிர்பக்கம் இருந்தவனுக்கு, இவன் எடுக்க மாட்டேன் என்பது புரிந்ததோ என்னவோ அடுத்து அழைப்பு எதுவும் வரவில்லை…

 

அரைமணி நேரம் நன்கு உறங்கி எழுந்த தீரன், தயாராகி வேலைக்குக் கிளம்பினான்.

 

அவனுடைய ஓட்டுனராக இருக்கும் பழனி, காவல் துறை வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க, இவனோ சாலையில் இருந்த கவனத்தை தொலைபேசிக்கு மாற்றி, அடுத்து அவன் பார்க்க வேண்டிய வழக்கின் கோப்பிணைப் பார்த்துக் கொண்டே வர, சட்டென ஜீப் “ஸ்கிரீச்…” என்ற சத்தத்துடன் நின்றது.

 

அதில் சற்று அவன் உடல் முன்னே சென்று மீண்டும் சமநிலைக்கு வந்திருந்தது.

 

கோபம் வந்தவனோ “என்னாச்சு பழனி?” என்று கேட்க,

 

பழனி “சார், ஒரு ஆக்சிடெண்ட்?” என்று இறங்க, தீரனும் இறங்கினான்.

 

அவனது ஜீப்பின் பக்கவாட்டில் ஒரு காரின் முன்னே குழந்தை ஒன்று விழுந்திருக்க, அந்த குழந்தை அருகே ஒரு ஆடவன் நின்று கார் காரனைக் கத்திக் கொண்டிருந்தான்.

 

கூட்டம் சட்டெனக் கூட, சிலர் காணொளி பதிவிடுகிறேன் என்றும், சிலர் ‘அவன் மீது தான் தவறு’ ‘இவன் மீது தான் தவறு’ என்றும் பட்டிமன்றதுக்கு தயாராகிக் கொண்டியிருந்தனர்.

 

கூட்டத்தை விலக்கி தீரன் உள்ளே நுழைய, பேசிக் கொண்டிருந்தவன் ஒரு நொடி விழி விரித்துப் பார்த்து அடித்த நொடி ஆதரவு கிடைத்தது போல,

 

“சார், பாருங்க சார் குழந்தைய அடிச்சிட்டு அடிக்கலன்னு திமிரா பதில் சொல்லுறத” என்று அவனிடம் சொல்ல,

 

தீரன் பார்வையோ கண்டனத்துடன் அவர்கள் இருவரையும் மொய்த்து, கூட்டத்திடமும் பதிந்தது.

 

அழும் குழந்தையின் உயரத்துக்கு. குனிந்தவன் குழந்தையை கையில் ஏந்தி, காயம் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதித்து, சமாதானப் படுத்தியவன்,

 

குழந்தையின் பக்கம் சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்த ஆடவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

 

அத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்த கூட்டத்திடம் ஒரு ஆழ்ந்த மௌனம்.

 

கோபமாய் அவர்களிடம் திரும்பியவன் “எங்க பிரச்சனைனாலும் கூட்டம் கூட்டுறதையும் வேடிக்கை பார்க்குறதையும் நீங்க எல்லாம் விடவே மாட்டீங்கல்ல. குழந்தை அழுது, அதத் தூக்க இங்க யாரும் இல்ல. ஆனா வீடியோ எடுக்கவும், புறணி பேசவும் ஆட்களுக்குப் பஞ்சமில்ல. இந்த வீடியோ போட்டு வர்ற காசு எப்படி உங்களுக்கெல்லாம் இறங்குதோ?” என்று தீர்க்கமாய் கேட்டவனின் கோபப் பார்வையில், கூட்டம் சிறிது கலைய, இன்னும் சிலர் வேடிக்கை பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தனர்.

 

அதில் அவர்கள் மேல் கோபம் கரை புரண்டாலும், அடக்கிக் கொண்டான். அவர்களை எல்லாம் திருத்த முடியாது என்பது தெரிந்தது தானே!

 

அடுத்து கார் காரனிடம் சாவியை வாங்கி பழனியிடம் கொடுத்தவன் “காரையும் ஜீப்பையும் ரோட்ல இருந்து கிளீயர் பண்ணுங்க பழனி, ட்ராபிக் டிஸ்டர்ப் ஆக வேண்டாம்” என்று, அங்கே அருகில் இருந்த பெட்டிக் கடை ஒன்றின் முன்னே குழந்தையுடன் நடந்தான்.

 

போகும் போது அவன் பார்த்த பார்வையில் இரு ஆடவர்களும் அவன் பின்னே செல்ல, குழந்தையின் காயத்தை துடைத்து விட்டவன், அவளுக்கு சாக்லேட் ஒன்றை வாங்கி சமாதானப்படுத்த குழந்தை விசும்பலுடன் சமத்தாய் இருந்து கொண்டது.

 

இருவரிடமும் திரும்பியவன் என்னவென்று கேட்க, கார் காரனோ “சார் நான் சரியாதான் சார் வந்துட்டு இருந்தேன் திடீர்னு குழந்தை ரோட்ல பாயவும் வண்டிய நிறுத்துறதுக்குள்ள அடி பட்டுடிச்சு. நான் ஸ்லோவா வந்ததால காயம் பெரிசா இருக்காது, உடனே ஹாஸ்பிடல் போகலாம்னு சொல்லியும் இவர் கேக்கல, பணம் கொடுங்க நானே போய்க்கிறேன்னு சொல்லுறாரு. சரினு பணம் கொடுத்தாலும் விட மாட்டேங்கிறாரு” என்றார் நீண்ட விளக்கமாய்…

 

இவர்கள் பேசுவது கேட்காவிட்டாலும் சற்று தள்ளி ஒரு கூட்டம் வேலை எல்லாம் விட்டு இவர்களை நோட்டம் விடுவதை தொடர்ந்தபடியே இருந்தது.

 

அடுத்தவனோ “அதெப்படி சார், என் பொண்ண மேல வண்டிய விட்டிருக்கான் அப்படியே விட சொல்லுறீங்களா?” என்று கேட்க, மீண்டும் ஒரு அறை அவன் கன்னத்தில்…

 

கன்னத்தைப் பற்றியபடியே “ஏன் சார்?” என்றான் அழுகை வரப் பெற்றவனாக…

 

“ஏன்னா கேக்குற தெளிவாவே சொல்லலாமே முதல்ல நீ சொல்லு குழந்தை யாரோடது?” என்றான் மீண்டும்.

 

அவனோ சட்டென பதற்றம் அடைந்தவனாக “என்னோடது தான் சார்…” என்றான்.

 

அதில் மீண்டும் தீரன் கையை ஓங்க, பயந்து போனவன் “இங்க பக்கத்து ஆசிரமத்துல உள்ள குழந்தை சார்” என்றான் சட்டென…

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில அங்கே வந்த பெண் ஒருத்தியோ, கூட்டத்தைக் கண்டு என்னவென்று விசாரிக்க, ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுத்தனர்.

 

இறுதியில் அவள் தெரிந்து கொண்டது, ‘காரில் வந்தவன் குழந்தை மீது காரை விட்டிருக்க, போலீஸ் விசாரணை நடக்கிறது’ என்பது மட்டும் தான்.

 

தீரனோ “பணத்தை அவர்கிட்ட கொடு” என்க,

 

அவனோ “சார், குழந்தைய ஹாஸ்பிடலுக்கு…” என்றவன் பணத்தை எடுக்க மறுக்க,

 

கோபத்தைக் கட்டுப்படுத்தி அவன் சட்டை பையில் இருந்து அந்தப் பணத்தை எடுத்த தீரன், கார் காரனின் சட்டை பையில் வைக்க,

 

அதுவோ அந்தப் பெண்ணுக்கு பணத்தை எடுப்பது போலத் தோன்றியதில், எதுவும் யோசிக்காமல் அவர்களை நோக்கிக் கோபமாய் முன்னேறினாள்.

 

 

 

 

ஈர்க்கும்…

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்