
அன்றில்-3🦢
உனதின்மைப் பொழுதுக்கும்
சேர்த்து
உன் நினைவுகளைக்
கறாராய் நிரப்பிவிடுகிறாய்..
துருவனிடம் பேசிப் பேசியே மூச்சு வாங்கியது ஆகாஷிற்கு.. கடைசியாகத் தான் சொன்னதற்கு அவன் ஒத்து வந்தாலும் அவன் கூறிய குற்றங்களை நினைத்து முணுமுணுவென மனதில் கோவம் அரிக்க.. அதே மனநிலையில் வெளியே ஹாலில் வந்து அமர்ந்தான்.. வேலைகள் அதன் பாட்டிற்கு நடந்து கொண்டிருக்க.. அது இன்னும் அவனை எரிச்சலின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
அப்போது தான் பாதி உறக்கத்தில் எழுந்து வந்த அவ்வீட்டின் கடைக்குட்டி ஜனனி.. அந்த அரை உறக்கத்திலும் அண்ணன் அனல் மேல் இருப்பதை அவதானித்தவள் அடுத்து அமர்ந்திருந்த தன் பெரியப்பா மடி மீது தலை வைத்து மீதி உறக்கத்தைத் தொடர்ந்தாள்.
அவளின் செயலில் புன்னகைத்தவாறே அவள் தலையை வருடியபடி.. தன் அண்ணன் மகனை நிமிர்ந்து பார்த்துவிட்டு.. அவனிடம் என்னவென்று கேட்க வாயைத் திறப்பதற்குள்.. அவரின் அம்மாவின் குரல் “அங்க எழுப்பி விட்டா இங்க வந்து தூங்கறயா.. பொட்டப்புள்ளைக்கு இந்நேரே வரைக்கும் என்ன தூக்கம் வேண்டிக் கெடக்குது” என்று இடையிட.. யார் கிடைப்பார்கள்?? யார் மீது பாயலாம்?? என்று காத்திருந்த ஆகாஷ் தன் அப்பத்தாவிடமே பாய்ந்துவிட்டான்.
“ஏன் பொண்ணுங்க கண் எல்லாம் தூங்காம எப்பயும் முழிச்சே இருக்கனும்னு வரமா வாங்கிட்டு வந்துருக்கு.. இப்ப அவ தூங்காம முழிச்சா மட்டும் அவள நல்லவன்னு சொல்லிருவியா அப்பத்தா நீ.. இல்ல பொண்ணுங்கறதனால உனக்கெல்லாம் தூக்கமே வராதா” என்று காட்டமாகக் கேட்க.. என்றும் இல்லாத திருநாளாய் தன் பக்கம் பேசும் அண்ணனின் மறுபரிணாமத்தில் ஜனனியின் குறைத்தூக்கம் கூட பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிப் போய் விட.. படக்கென்று எழுந்து அமர்ந்தாள்.
திடீரெனப் பேரனின் குரல் உயரக் கண்ட காவேரி அப்பத்தா “நீ என்னடா எங்கயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தான்ன கணக்கா.. காலங்காத்தால எங்கிட்ட சண்டைக்கு வர்ற” என்று அவன் அருகே வந்து அமரவும்..
“ஆமாமா.. எனக்கு உங்க கூட எல்லாம் சண்டை போடறது மட்டும் தான் வேலை பாருங்க.. அதைத்தவிர எனக்குன்னு என்ன இருக்கு இங்க” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான் ஆகாஷ்.
அவரோ அவன் மனநிலை புரியாமல் “ரொம்பத் தான் திருப்பிக்கற.. என்ன சேதி.. உம் பொண்டாட்டி வீட்டுல ஏத்தி விட்டாங்களாக்கும்.. அதான் காலங்காத்தால மூஞ்சிய இழுத்துட்டு உக்காந்துட்டு இருக்கறயாட்ட இருக்குது” என்று கேலியாக வினவவும்.. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் அங்கிருந்து விருட்டென எழுந்து கிளம்பத் தயாரானான் ஆகாஷ்.
அதுவரை அவ்விடத்தில் அமைதியாய் அமர்ந்திருந்த பார்த்திபன் அவனை நிறுத்தி “ம்மா.. சும்மா இருங்க.. நீ சொல்லுப்பா.. என்னாச்சு.. ஏன் மார்னிங்கே இவ்வளவு டென்ஷன்” என்று கனிவுடன் கேட்டார் அண்ணன் மகனிடம்.
அவரது குரலில் இருந்த அக்கறையும், கண்களில் இருந்த கனிவும் அப்பத்தாவிடம் பேசியது போல அவரிடம் பதில் சொல்ல மனம் வரவில்லை தான் என்றாலும் “எனக்கென்ன ஆனா தான் இங்க இருக்கிறவங்களுக்கு என்ன இருக்கப் போகுது சித்தப்பா.. எல்லாருக்கும் அவங்கவங்க வேலை தான பெருசு” என்று அவன் உள்ளத்தின் குமுறல் கொட்டத்தான் செய்தது.
அவனைப் பார்த்திபன் புருவம் சுருக்கி கவனிக்கும் போதே.. “இந்தாங்க” என்று க்ரீன் டீயை நீட்டி அவரது கவனத்தைத் தன்மேல் திருப்பினார் பார்த்திபனின் மனைவி பல்லவி.
அங்கிருந்த மற்றவர்களுக்கு வேலையாள் தேவையானதைக் கொடுத்தாலும்.. தன் கணவருக்குச் சிறு வேலையும் தானே செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை பல்லவிக்கு.. அத்தனை காதலா என்றால்.. அதற்குப் பதில் நிச்சயம் ஆமாம் என்று தான் இருக்கும்.. அப்படி ஒரு கண்மூடித்தனமான நேசம் பார்த்திபன் மேல் பல்லவிக்கு.
இப்போது கூட கணவனை எதிர்த்துப் பேசிய ஆகாஷை முறைத்தவர் “என்னன்னு தான உன் சித்தப்பா கேட்டாரு.. அதுக்கு இப்படித்தான் பதில் சொல்வியா நீ..” என்று சுள்ளெனக் கேட்கவும்.. இனி அடுத்து வரப் போகும் வார்த்தைகளை எதிர்நோக்கி ஊமையாகிப் போனான் ஆகாஷ்.
“பதில் பேசுப்பா.. இவ்வளவு நேரம் எல்லார்கிட்டயும் சத்தம் போடத் தெரிஞ்சது தான.. இப்படி அவர எடுத்தெறிஞ்சு பேசத்தான் அவர் உன்னை வளத்தாரா.. உங்க அப்பா இருந்திருந்தா கூட உன்னை இப்படி எல்லா பாத்துக்குவாரா.. உனக்குன்னு இன்னைக்கு படிப்பு, வேலை, குடும்பம் இதெல்லாம் இவர் இல்லாம உனக்கு வந்துருச்சா.. இல்ல நீ வளர்ந்துட்டேன்னு அவருக்கு காட்டறியா”
“பல்லவி ப்ளீஸ்” என்று பார்த்திபன் இடையிட..
“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.. அவங்க அப்பா இல்லாத குறை தெரியக்கூடாதுன்னு அவனுக்கு நீங்க ஒன்னு ஒன்னும் பாத்து பாத்து செஞ்சீங்க.. ஆனா அவனைப் பாருங்க எப்படிப் பேசறான்னு.. நாளைக்கு இதே வார்த்தைய அவன் பொண்டாட்டி முன்னால பேசினா.. அவகிட்ட உங்க மரியாதை என்னத்துக்கு ஆகறது” என்று கணவரிடமும் பொரிந்து தள்ளினார்.
‘அப்படி ஒன்னு நடக்கறதுக்கு கூட அவள யாரும் இங்க கூட்டிட்டு வரலையேன்னு தான் சித்தி என்னோட வருத்தம்.. பெத்த புள்ள மாதிரி பாத்துக்கறோம்னு சொல்றீங்க.. ஆனா நீங்க பெத்த பையனா இருந்தா இப்படித்தான் பண்ணிருப்பிங்களா’ என மனதில் நினைத்துக் கொண்டான் ஆகாஷ்.. வெளியே சொல்லவில்லை.. சொன்னால் அதற்கும் குத்தூசிப் பதில் தான் கிடைக்கும்.
ஆகாஷ் அமைதியாக நின்றாலும் அவன் முகவாட்டமே அவன் எண்ண ஓட்டத்தைச் சொல்ல “பல்லவி போதும்” என அழுத்தமாய்ச் சொல்லி மனைவியின் வாயை மூடிய பார்த்திபன் “நீ நினைக்கறது புரியுதுப்பா.. இன்னைக்கு துருவன்கிட்ட போய் நானே நேர்ல பாத்து பேசிட்டு வரேன்.. போதுமா” என்று சொல்ல.. மகனிடம் இருந்து சின்னத் தலையசைப்பு தான் வந்தது.
அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அவர் அறைக்குள் நுழைந்து விட.. கணவனைப் பின் தொடர்ந்தார் பல்லவி.. ஆகாஷூம் அவ்விடம் விட்டு நகர.. எஞ்சியிருந்தது பாட்டியும் பேத்தியும் மட்டுமே.
“உங்கண்ணனுக்கு இன்னைக்கு என்னடி சாமி வந்துருச்சு” என்று காவேரி ஜனனியிடம் கேட்க..
அவரை மேல் கீழாய் ஒரு பார்வை பார்த்த ஜனனி “என்ன ஒரு ஆக்டிங் அப்பத்தா.. இத்தனை ப்ராப்ளம்க்கும் சென்டர் பாயிண்ட்டே நீ தான்.. ஆகாஷ் அண்ணன் பேபிய நீ, சித்தி, அம்மா யாருமே பாக்க போகலைன்னு துருவன் மாமா கோவத்துல ப்ரியா அண்ணிய இங்க அனுப்பல.. அது எல்லாம் தெரிஞ்சும் எவ்வளவு லெதார்ஜிக்கா என்னாச்சுன்னு கேக்கற” என்று இதழைச் சுழிக்க..
“ம்க்கும்.. கல்யாணம் ஆகி மூணு வருசமா வேலை வேலைன்னு திரிஞ்சுட்டு.. இருந்திருந்து பொட்டப்புள்ளைய பெத்துருக்கா.. அதைய போயி வேற பாக்கனுமா.. இங்க வந்தா பாத்தா போதும்.. அப்படித்தா அவன் அவங்கக்காவ வீட்டுல வச்சு தாராளமா பாத்துக்கட்டும்.. பொண்ணு குடுத்த வீடுன்னு மரியாதை இருக்குதா பாரு அவனுக்கு” என்று காவேரி அப்பத்தாவும் கழுத்தை வெட்ட.. அன்றைய நடைப்பயிற்சியை முடித்துவிட்டு உள்ளே வந்தார் சொக்கலிங்கம்.. காவேரியின் கணவர்.
“எப்பவுமே காலையில பாட்டியும் பேத்தியும் எலியும் பூனையுமா இருப்பிங்க.. இன்னைக்கு என்ன ஒட்டுக்கா உக்காந்து பேசிட்டு இருக்கீங்க” என்றவாறே பேத்தியின் அருகே அவர் அமரவும்..
கழுத்தை வெட்டிய காவேரி “ம்க்கும்.. தினமும் இவளை தூக்கத்துல இருந்து எழுப்பறதுக்குள்ள தொண்டைத் தண்ணியே வத்திப் போகுது.. இதுல இவகூட உக்காந்து பேசிட்டாலும்.. இன்னைக்கு என்னமோ உங்க மூத்த பேரனுக்கு சாமி வந்துருச்சாட்டா இருக்குது.. மொதல்ல அதை என்னன்னு கேளுங்க” என்றவாறு தன் கணவர் குடுக்க சத்துமாவு பானம் எடுத்து வரச் சென்றார்.
ஒரு பெருமூச்சுடன் சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்த தாத்தா “பண்ணுன பாவம் எல்லாம் பத்தாதுன்னு இன்னும் எத்தனைய இழுத்துக்குவாங்கன்னே தெரியல.. பச்சப்புள்ள கிட்ட கூட துவேஷமா.. அதுசரி இதெல்லா இவங்களுக்கு என்ன புதுசா” என்ற அவரது புலம்பல்.. அவர் முன்னே நங்கென்ற வைக்கப்பட்ட பௌலின் சப்தத்தோடு அடங்கிப் போக நிமிர்ந்து பார்த்தார்.
கணவனை முறைத்தவாறே பேத்தியைக் கண்ணால் காட்டிய காவேரி அப்பத்தா “தொலைஞ்சதுன்னு உட்டுத் தொலையாம.. அதைப் பிடிச்சு தொங்கிட்டு இருக்கறவங்களையும் போட்டு வாதிச்சுட்டு இருக்காதீங்க” என்றவர்.. தங்கள் அறைக் கதவைத் திறந்து வந்த பல்லவியைப் பார்த்துவிட்டு உடனேயே முகத்தை மாற்றிக் கொண்டார்.
அவர்களது பேச்சு வார்த்தை புரியாமல் அமர்ந்திருந்த ஜனனி “என்ன பேசறீங்க” என்று இடையில் வரப் பார்க்கவும்.. அவள் தலையில் கொட்டிய அப்பத்தா “எந்திரிச்சு போக மாட்டியா நீ.. காலங்காத்தால வாயை பாத்துட்டு உக்காந்துட்டு” என்று விரட்டவும்..
தலையைத் தேய்த்தவள் “நா உனக்கு ஒரே பேத்தி தான.. கொஞ்சம் கூட உனக்கு அந்தப் பாசமே இல்ல” என்று சிணுங்கியபடியே கல்லூரிக்குக் கிளம்பச் சென்றாள் அந்த இருபத்தியொரு வயதுப் பாவை.
காவேரி பில்டர்ஸ்.. தலைநகரத்தின் முதன்மையான கட்டுமான நிறுவனங்களுள் பெயர் சொல்லக்கூடிய ஒன்று.. சமீபமாக அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடிய அதன் நிறுவனர் பார்த்திபன்.
சொக்கலிங்கம் காவேரி தம்பதியருக்கு நடுவில் பிறந்த மகன் பார்த்திபன்.. இவருக்கு அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர்.. அண்ணன் பதினைந்து வருடங்கள் முன்பு தவறி விட்டிருக்க.. அவரது மனைவி லலிதா, மகன் ஆகாஷ்.. ஆகாஷின் மனைவி ப்ரியா. (தற்போது பேறு காலத்திற்காக அம்மா வீட்டில் இருக்கிறாள்)
தம்பி சரவணன்.. அவரது மனைவி சங்கீதா.. சங்கீதா, பார்த்திபன் மனைவி பல்லவியின் உடன்பிறந்த அக்கா.. அக்காவும் தங்கையும் தம்பியையும் அண்ணனையும் திருமணம் செய்துள்ளனர்.
காலை உணவுக்காக மொத்தக் குடும்பமும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க.. வழக்கம் போல லலிதா தான் சமைத்த ஒவ்வொன்றையும் எடுத்து வந்து டேபிளில் அடுக்கிவிட்டு நகர.. பல்லவி பறிமாற, சங்கீதா மகளுக்கு உணவு ஊட்டினார்.
உணவு உண்ணும் போதும் ஆகாஷ் முகம் தெளியாமல் இருக்கவும் “ஆகாஷ்.. தட்டைப் பாத்து சாப்பிடுப்பா.. நாந்தான் இன்னைக்கு துருவனைப் பாத்து பேசறேன்னு சொல்லிட்டனே” என்று பார்த்திபன் சொல்லவும்.. “சரிங்க சித்தப்பா” என்று மெலிதாகப் புன்னகைத்தான் ஆகாஷ்.
“இப்பத்தா மூஞ்சியில ஒரு தெளிவே வருது” என்று காவேரி அப்பத்தா நொடித்தார்.
பின்னர் பார்த்திபன் சரவணனிடம் ஏதோ தொழில் விஷயமாகப் பேசவும் “அந்த சைட் ஹர்ஷா தாண்ணா பாக்கறேன்னு சொல்லிருக்கான்.. அவனுக்கு தான் டீடெயில்ஸ் தெரியும்.. அவன் எங்க அண்ணி” என்று கேட்டார் சரவணன்.. மனைவியின் தங்கையாகவே இருந்தாலும் கூட அண்ணனை மணந்து இருப்பதால் மரியாதையோடு தான் பேசுவார் பல்லவியிடம்.
“தெரியலைங்களே.. காலையில இருந்து அவனைப் பாக்கவே இல்ல.. நீங்க தான் ஏதோ வேலையா அனுப்பிருக்கீங்கன்னு நினைச்சேன்.. அப்ப எங்க போயிருப்பான்” என்று பல்லவி அவர்களிடமே திருப்பி வினவ.. அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அதே நேரம்.. நேத்ராவின் முன்பு பல்லை இளித்துக் கொண்டு அங்கே நின்றிருந்தான் ஹர்ஷா.
பேருந்தில் இருந்து இறங்கியதும் ‘என்னைப் பார்’ என்று நின்றிருந்த ஹர்ஷாவைக் கண்டு கொள்ளாமல் அவள் பாட்டிற்குத் தான் உடைமைகளை எடுத்துக் கொண்டு சாலையின் ஓரமாகச் சென்று.. கைப்பையில் போட்ட மொபைலை எடுத்து மீண்டும் நோண்டத் துவங்கிய நேத்ராவைக் கண்டு காண்டானான் ஹர்ஷா.
இன்று முழுக்க பகடு (தாடை) வலிக்க இளித்தவாறே நின்றிருத்தாலும் அவள் கண்டு கொள்ளப் போவதில்லை எனப் புரியவும் “உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா’ன்னு கேக்கற அளவு பல்லைக் காட்டிட்டு நிக்கறேன்ல.. கண்ணுத் தெரியலயா”என்று அவளிடமே நேராகச் சென்று வினவினான் அவன்.
அவனை ஏற இறங்கப் பார்த்த நேத்ரா “நா இங்க வந்த இந்த செவன் மினிட்ஸ்ல உன்ன பாத்தும் பேசாம நிக்கறேன்.. அப்பவும் சொரணையே இல்லாம நீயா வந்து என்னன்னு கேக்கற.. அப்ப உங்கிட்ட உன் டூஸ்பேஸ்ட்ல உப்பு இருக்குதான்னு கேக்க கூடாது.. சோத்துல உப்பு போட்டு திங்கறயான்னு தான் கேக்கனும்” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
அப்போதும் அவள் கூறிய வெ மா சூ சொ எதுவும் இல்லாமல் அதைப் புறம் தள்ளிய ஹர்ஷா “ரொம்ப லீன் ஆன மாதிரி இருக்க.. ஒழுங்கா சாப்டறதே இல்லையா” என்று கரிசனமாகக் கேட்டான்.
அதுவரை சாதாரணமாக இருந்தவளின் முகம் அவனது கரிசனக் குரலில்.. நொடியில் சினத்தைத் தத்தெடுத்தது.
துணையாவான்..

