

தன் அண்ணனின் இல்லத்தில் மேல் மாடியில் இருந்த அறையில் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியவனாய் சாய்ந்து அமர்ந்திருந்தான் நித்திலன்.
அவனது எண்ணங்கள் பழைய நினைவுகளில் சுழன்றிருக்க, தன் முன்னே ஏதோ நிழலாடுவது போல் தோன்றிய உணர்வில் விழித்துப் பார்த்தான்.
நிவாசினி அவனைப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.
அவளைக் கண்டதும் இன்பமாய் அதிர்ந்தவனாய் எழுந்து நின்றவன், “ஹனி! வந்துட்டியாடா” எனக் கேட்டுக் கொண்டே அவளின் கையைப் பற்றிக் கொள்ளப் போனான்.
தனது கையை விலக்கியவளாய் தள்ளி நின்றவள், “எனக்கு உங்கக்கிட்ட சில விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சிக்கனும்” உணர்ச்சியற்ற முகத்துடன் வேறெங்கோ நோக்கியவாறு கூறினாள்.
அவளால் தன்னை மன்னிக்கவும் முடியவில்லை அதே நேரம் தன்னைப் பிரிந்திருக்கவும் இயலவில்லை என்பதைப் புரிந்து கொண்ட நித்திலன் மென்னகையுடன், “சரிடா நீ என்ன கேட்கனும்னாலும் கேளு. நீ என்னைத் தேடி வந்ததே சந்தோஷம் தான் எனக்கு. வந்து உட்காரு முதல்ல” எனக் கூறியவாறே அவள் மறுத்த போதும் விடாது அவளின் கைகளைப் பிடித்து கட்டிலில் அமர வைத்தான்.
“இப்ப சொல்லு ஹனி! என்ன தெரிஞ்சிக்கனும்? டாக்டர் கிருஷ்ணன் எதுவும் உன்கிட்ட சொல்லலையா?” எனக் கேட்டான்.
இல்லை எனத் தலையசைத்தவள், “உனக்கு நித்திலன் மேலே நம்பிக்கை இருக்கானு கேட்டாரு. நான் இருக்குனு சொன்னேன். அப்ப அவருக்கிட்டயே என்ன நடந்துச்சுனு கேட்டுத் தெரிஞ்சிக்கிறது உங்களோட பிணைப்பை அதிகமாக்கும்னு சொல்லிட்டாரு” என்றவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவன் சென்று அவள் அருந்த பால் கொண்டு வந்து கொடுத்தான். அவள் வேண்டாமென மறுத்தும் விடாமல் அவளருகில் அமர்ந்து அவளை பருகச் செய்தான்.
அவனின் இந்தக் கனிவான செய்கையில் அவளின் கண்கள் கண்ணீரால் நிறைய, “உங்களுக்கு நம்ம குழந்தை வேண்டாமா நித்திப்பா?” எனக் கோபமும் அழுகையுமாய் கேட்டாள்.
அவன் நெஞ்சு கொதிக்க அடிப்பட்ட பார்வையுடன் அவளைப் பார்த்தான்
“ஆனா எனக்கு வேணும் நித்திப்பா. நம்ம குழந்தையைப் பத்தி எவ்ளோ கனவு கண்டோம். எவ்ளோ ஆசையோட இருந்தோம். அப்புறம் ஏன் எனக்கு மருந்து கொடுத்தீங்க நித்திப்பா?” எனக் கேட்டாள்.
“இந்தக் கேள்வியை நீ ஏன் அன்னிக்கு உன் தாத்தா கூட இருந்தப்ப கேட்கலை ஹனி? என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லாத அளவுக்குத் தான் அப்ப நான் நடந்துக்கிட்டேனா?” கண்களில் வலியைத் தேக்கிக் கேட்டான்.
அவளால் பதிலேதும் கூற முடியவில்லை. கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
“இப்ப என்னைப் பத்தி எதுவும் தெரியாமலேயே உனக்கு என் மேல இருக்க இந்த நம்பிக்கை, அப்ப என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருந்த போது ஏன் இல்லாம போச்சு ஹனி. உன் தாத்தா சொன்னா நீ நம்பிடுவியா? அப்ப என் காதலை நீ புரிஞ்சிக்கவே இல்லையா?” கவலைத் தோய்ந்த குரலில் கேட்டான் நித்திலன்.
“நான் மருந்து கொடுத்ததுக்கு ஏதோ காரணம் இருக்கும்னு இப்ப யோசிக்கிற என் ஹனி அப்ப ஏன் யோசிக்காம போய்ட்டா?” அவன் கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது.
“வலிச்சிது ஹனி. மனசு ரொம்ப வலிச்சிது. நீ என்னை நம்பாம போய்ட்டியேனு அவ்ளோ வருத்தப்பட்டேன். ஆனா அந்த வருத்தத்தை நிரந்திரமாக்கிட்டு அப்படியே எங்கேயோ போய்ட்டியே ஹனி. உன்னை எவ்ளோ தேடினேன் தெரியுமா? குழந்தையைத் தொலைச்சிட்டு தேடுற அம்மா மாதிரி உன்னைப் பைத்தியம் மாதிரி தேடித் திரிஞ்சேன்” கண்ணீருடன் தழுதழுத்த குரலில் அவன் கூறவும், “நித்திப்பா” என்று தேம்பியவளாய் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் நிவாசினி.
“நான் வேண்டாம்னு சொல்லிட்டு என்னை மொத்தமா விட்டுட்டுப் போய்ட்டியோனு பைத்தியமா சுத்தினேன் ஹனி”
தனது இத்தனை நாள் துயரை அவளின் மார்பில் அழுகையாய் வெளிபடுத்தி இறக்கி வைத்தான் நித்திலன்.
தாய் குழந்தையை அணைப்பதைப் போல் அவனின் முகத்தை மார்பில் தாங்கி அவனது பின் மண்டையை தனது கையால் தாங்கிப் பிடித்து அணைத்திருந்தாள் நிவாசினி.
மறு கையால் அவனின் முதுகை வருடியவளாய், “சாரி நித்திப்பா. சாரி நித்திப்பா” என்று இடைவிடாது தொடர்ந்து உச்சரித்திருந்தாள்.
சில நிமிடங்களில் கண்களைத் துடைத்தவாறே சற்றாய் தன்னைத் தேற்றிக் கொண்டு எழுந்து அமர்ந்தான் நித்திலன்.
அவளின் கையினைப் பற்றித் தனது கைகளுக்குள் பொதிந்து கொண்டவனாய், “என் மேலயும் தப்பு இருக்கு! உன்கிட்ட சொல்லிட்டு இதை நான் செஞ்சிருக்கனும். ஆனா உன்கிட்ட சொன்னா கண்டிப்பா நீ இதுக்கு ஒத்துக்க மாட்டனு தோணுச்சு. எனக்குக் குழந்தையை விட உன்னோட உயிர் தான் முக்கியமா பட்டுச்சு” என்றவன் தொடர்ந்து பேசினான்.
“அன்னிக்கு உனக்கு வயிறு வலிக்கிதுனு சொன்னப்ப டாக்டர்கிட்ட போனோம்ல. அவர் ஏதோ மருந்து மாத்திரைலாம் எழுதி கொடுத்துட்டு என்னை மட்டும் அப்புறமா தனியா வந்து அவரைப் பார்க்க சொன்னாரு. அப்ப தான் சொன்னாரு கரு வளர்ச்சி சரியில்ல. இந்தக் கரு வளர்ந்தாலும் குழந்தை ஏதாவது பாதிப்புடன் தான் பிறக்கும். அதுக்குப் பதிலா இப்பவே கருவை கலைக்கிறது தான் நல்லதுனு சொன்னாரு. அப்ப நீ கர்ப்பமாகி ஆறு வாரம் ஆகியிருந்தனால இதை செய்றது தப்பில்லைனு சொன்னாரு. நிறைய டெக்னிக்கலா சொன்னாரு. இந்தக் கரு வளர்ந்தா குழந்தைக்கும் உனக்கும் ஆபத்துனு சொன்னாரு. அவர் எழுதிக் கொடுத்திருக்க மருந்து மாத்திரையைச் சாப்பிட்டாலே ரெண்டு மூனு நாள்ல கரு கலைஞ்சிடும்னு சொன்னாரு. ரொம்பவே குழம்பிப் போய் உட்கார்ந்துட்டேன். மனசெல்லாம் படபடப்பாகிப் போய்டுச்சு. என் ஆபிஸ்ல கூட வேலை செய்ற அக்காகிட்ட இதை பத்தி விசாரிச்சேன். அவங்க உன்னோட மெடிக்கல் ரிப்போர்ட்லாம் பார்த்துட்டு, இப்படி கருலயே இஷ்யூ வரும் போது மருந்து மாத்திரை மூலமா அபார்ஷன் பண்றது இப்ப நடக்கிறது தான். அதுக்கு பிறகு நல்லபடியா குழந்தை பெத்துகிட்டவங்களை நான் பார்த்திருக்கேன்னு சொன்னாங்க. என்னை நானே அப்புறமா தேத்திக்கிட்டேனாலும் இதை உன்கிட்ட சொல்லி நீ வருத்தப்படுறதைப் பார்க்கிற தைரியம் சுத்தமா எனக்கு இல்லை. நம்ம வீட்டுல பெரியவங்க கிட்ட இதை சொல்லலாமா வேண்டாமானு குழப்பத்துல இருந்தப்ப, உனக்கு திரும்பவும் வயித்து வலி வரவும் நாம ரெகுலரா பார்த்த டாக்டர் ஹாஸ்பிட்டல் கிளோஸ் ஆகி இருந்தனால வேற ஹாஸ்பிட்டல்ல உன்னை அட்மிட் செஞ்சேன். அது தான் நான் செஞ்ச தப்பு. அந்த டாக்டர் உன்னோட கரு வளர்ச்சி பத்திலாம் பார்க்காம நான் காண்பிச்ச உன்னோட மெடிசனை வச்சி யாரோ வேணும்னே மருந்து கொடுத்து உனக்கு அபார்ட் ஆக வச்சிட்ட மாதிரி பேசிட்டாரு. அதுல தான் நீ குழம்பிப் போய்ட்ட! திடீர்னு அபார்ட் ஆனதுல உனக்கு அப்ப ரொம்பவே டிப்ரெஷனும் மன உளைச்சலும் இருந்துச்சு. அப்ப நீ ப்ரக்னன்ட் ஆனது நம்ம ஃபேமிலில யாருக்கும் தெரியாதுனும் போது அபார்ஷன் பத்தி மட்டும் ஏன் சொல்லனும்னு நான் யார்கிட்டயும் சொல்லாம விட்டுட்டேன்” என்றான்.
“ஆமா இப்ப தான் ஞாபகம் வருது.
நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் மூனாவது மாசம் சொல்லிக்கலாம்னு தானே நாம முடிவு செஞ்சிருந்தோம். அப்புறம் எப்படி தாத்தாக்கு தெரிஞ்சிது?” எனக் கேட்டாள்.
“நம்ம வீட்டுல சமையல் வேலை செஞ்ச லட்சுமிம்மா தான் தாத்தாகிட்ட இங்க நடக்கிறதெல்லாம் போட்டு கொடுத்துட்டு இருந்திருக்காங்க. அப்படித் தான் தாத்தாக்கு நானும் நிவேதாவும் லவ் பண்றோம்ன்ற மாதிரி நியூஸ் போய்ருக்கு” என நித்திலன் கூறவும், ஆச்சரியமடைந்த நிவாசினி,
“அவங்களா! ஆனா அவங்க ஏன் எல்லாத்தையும் தாத்தாகிட்ட சொல்லனும்! இதுல அவங்களுக்கு என்ன லாபம்?” எனக் கேட்டாள்.
“அவங்களுக்குக் காசு கொடுத்து இங்க நடக்கிறதெல்லாம் சொல்ல சொன்னதே தாத்தா தான்” என்றான் நித்திலன்.
“என்னது!” நிவாசினி அதிர்வுடன் கேட்டிருந்தாள்
“ஆமா இதெல்லாம் நீ காணாம போன பிறகு தான் கண்டுபிடிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்” என்றான் நித்திலன்.
“உன் தாத்தா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட மாதிரி நடிச்சிருக்காரு! எப்படியாவது நம்ம இரண்டு பேருக்குள்ள சண்டையை மூட்டி நம்மளை பிரிச்சி உனக்கு உங்க ஜாதில வேற பையனா பார்த்து மேரேஜ் செஞ்சி வைக்கிறது தான் அவரோட ப்ளான். அவரோட ப்ளானுக்கு ஏத்த மாதிரி நிவேதா இஷ்யூ வரவும் அதை வச்சி பிரிக்கப் பார்த்தாரு. அதுவும் சரியா வரலை என்ன செய்யலாம்னு அவர் நினைச்ச டைம்ல தான் நீ மாசமா இருக்கிறதை தாத்தாக்கு சொல்லிருக்காங்க அவங்க. அந்த டைம்ல சரியா இந்த அபார்ஷன் பத்தி கேள்விப்பட்டு நான் உனக்குத் தெரியாம உனக்கு மருந்து கொடுத்து அபார்ஷன் பண்ண வச்சதா சொல்லி உன்னை உணர்வுபூர்வமா அட்டாக் பண்ணி யோசிக்க விடாம கூட்டிட்டுப் போய்ட்டாரு. அங்க போய்ட்டா உன்னை எப்படியும் என் பக்கம் வர வைக்காம மென்மேலும் என் மேல பழியைச் சொல்லி என்னை வெறுக்க வச்சி உனக்கு வேற கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு தான் ப்ளான்”
‘இந்தளவுக்கு பிளான் போட்டிருக்காரா?’ சாதி வெறியராய் அவர் பேசியது போல் தான் கனவில் கண்டது நூறு சதவீதம் உண்மையான காட்சி தான் என்று ஊர்ஜிதமானது நிவாசினிக்கு.
“எனக்கு உங்க அப்பா அம்மா, எங்க அப்பா அம்மா அண்ணா அண்ணினு யார்கிட்டயும் உன்னோட ப்ரக்னன்சில இருக்க காம்ப்ளிகேஷன்ஸ் பத்தி சொல்ல மனசில்லை. இதை வச்சி யாரும் உன்னை ஹர்ட் பண்ணிடக் கூடாதுனு நினைச்சேன். தாத்தா என்னைப் பேசிய பேச்சுக்குலாம் நம்ம ஃபேமிலில யாரையும் கூட வச்சிக்காம நானே உன்னை நல்லா வச்சி பார்த்துக்கனும்னு நினைச்சேன் ஹனி. ஆனா தாத்தா வந்து சொல்லி கூப்பிடவும் நீ நம்பி அவர் கூடப் போனதுல முதல்ல செம்ம கோபமா வந்துச்சு. இரண்டு நாள் கழிச்சு உன்னைப் பார்த்தேயாகனும்னு மனசு துடிக்கச் சென்னைக்குக் கிளம்பினேன். ஆனா அப்ப தான் உன்னோட அம்மா அப்பானு எல்லாரும் எனக்கு ஃபோன் செஞ்சி திட்டினாங்க. தாத்தா என்னை பத்தி உன்னோட அப்பா அம்மாகிட்டலாம் ஏதோ தப்பும் தவறுமா சொல்லிருக்காருனு மட்டும் புரிஞ்சிது. யாருமே என் பக்க நியாயத்தைக் கேட்க தயாரா இல்லைனு செம்ம கோபம். இன்னும் ஒரு வாரம் போகட்டும், நம்மளா அங்க போய் நிக்கக் கூடாதுனு முடிவு செஞ்சிட்டேன். அது தான் நான் செஞ்ச தப்பு! அந்த ஒரு வாரத்துல விபத்து நடந்து எல்லாமே மாறிடுச்சு. உங்களுக்கு ஆக்சிடெண்ட்டானது கூட உங்க தாத்தா எங்க யாருக்கும் சொல்லலை. உன்னோட அப்பா அம்மாக்குக் காரியம் செஞ்ச பிறகு உனக்கு ஆப்ரேஷன்லாம் முடிஞ்ச பிறகு தான் எனக்கு விஷயமே தெரிஞ்சிது. நான் எவ்ளோ பதறி போய் வந்தேன் தெரியுமா? எனக்கு விஷயம் தெரிஞ்சதும் என் அண்ணன்கிட்ட விஜய்கிட்டலாம் சொல்லி தாத்தாக்கு போய் ஹெல்ப் பண்ண சொன்னேன். வயசான மனுஷன் இந்த நிலைல எல்லாரையும் இழந்து என்ன கஷ்டபடுறாரோனு தோணுச்சு. என் ஹனி அவ அப்பா அம்மா பிரிஞ்சு என்ன நிலைல இருக்காளோனு அவ்ளோ வேதனையோட சென்னை வந்தா.. உன் தாத்தா, என் அண்ணன், விஜய் எல்லாரையும் திட்டு அனுப்பி வச்சிருந்தாரு. நான் உன் வாழ்க்கைக்குள்ள வராம போயிருந்தா இப்படிலாம் நடந்திருக்காதுனு சொன்னாரு. என்னோட ராசி தான் உங்க எல்லாத்துக்கும் இப்படி ஆயிடுச்சுனு சொன்னாரு. என்னை அடிச்சி தள்ளாத குறையா பேசினாரு. ஆனா உன்னைப் பார்க்காம மட்டும் போய்ட கூடாதுனு இருந்தேன் ஹனி. நீ மயக்கத்துல இருந்த. ஒரு வாரம் ஹாஸ்பிட்டல்லே கதினு கிடந்தேன். உன் தாத்தா என்னைத் திட்டாத நாளில்லை. நான் எதையும் காதுல வாங்கலை. நீ கண் முழிக்கும் போது நான் உன் முன்னாடி இருக்கனும். அது மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு. அம்மா அப்பா வந்து பார்த்துட்டு அழுதுட்டு போனாங்க. அப்பா அம்மாக்கிட்ட நடந்ததெல்லாம் அண்ணா சொல்லவும், இப்படிப் போய் ஒரு பொண்ணை நீ கட்டிக்கனும்னு தேவையா உனக்குனு அம்மா அப்பா இரண்டு பேரும் என்னை திட்டி, நான் அவங்க கூட வந்தேயாகனும்னு சண்டை போட்டாங்க. அப்பவும் நீ முழிச்ச பிறகு தான் வருவேன்னு இருந்தேன். ஆனா நீ கண்ணு முழிச்சதும் என்னை வேண்டாம்னு சொல்லிட்ட” அவளைக் குற்றம் சுமத்தும் பார்வையுடன் உரைத்தான்.
“அப்பவும் நான் உன்னை விட்டு போகலை ஹனி. அதுக்குப் பிறகு திரும்பவும் மயங்கின நீ கோமாக்குப் போய்ட்டதா டாக்டர் சொன்னாங்க. உன்னை வீட்டுல வச்சி பார்த்துக்கிறதா தாத்தா கூட்டிட்டு போய்ட்டாரு. உன்னைப் பார்த்துக்க ஆள் ஏற்பாடு செஞ்சிருந்தாரு. நான் வாரத்துக்கு ஒரு நாள் வந்து பார்த்துட்டு போனேன். திடீர்னு உனக்கு ஃபிட்ஸ் போல வரவும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ருக்காங்க. அங்க செஞ்ச ட்ரீட்மெண்ட்ல நீ கோமால இருந்து கண் விழிச்சிருக்க. உங்க வீட்டுக்கு போன பிறகு தான் உனக்குப் பழைய விஷயங்கள் சிலது ஞாபகம் இல்லைனு தெரிஞ்சிருக்கு. அதுவும் என்னோட நடந்த கல்யாணம் உனக்கு ஞாபகம் இல்லைனு தெரிஞ்சதும் அவர் திட்டம் போட்டு செயல்பட ஆரம்பிச்சிட்டாரு.
நீ கோமால இருந்து வந்துட்டனு நீ தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்ல இருந்தவங்க சொல்லி தான் எனக்குத் தெரியும். அவங்க தான் நீங்க எங்கேயோ வேற ஊருக்கு போய்ட்டீங்கனு சொன்னாங்க. ஆனா எங்கனு தெரியலைனு சொன்னாங்க. எனக்கும் உங்க குடும்பத்துக்கும் பிரச்சனை இருக்கிறது அந்த அப்பார்ட்மெண்ட் முழுக்கவே தெரிஞ்சிருக்கு. உனக்கு அம்னீசியானுலாம் எனக்குத் தெரியாது ஹனி. நீயும் தாத்தா கூடச் சேர்ந்து என்னை அவாய்ட் பண்ண தான் இப்படி ஏதோ ஊர்ல போய் இருக்கனு தோணுச்சு. அதனால எனக்கும் உன் மேல கோபம்.
உங்களைத் தேடாத இடம் இல்லை. எனக்குத் தெரிஞ்ச ஃப்ரண்ட்ஸ் போலீஸ் மூலமாலாம் உங்களைத் தேடினேன். ஒரு மாசமாகியும் நீங்க அந்த அப்பார்ட்மெண்ட்க்கு வராம போகவும் நீங்க தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் வீட்டு லாக்கை உடைச்சு உள்ளே எதுவும் கிடைக்குமானு பார்த்தேன். அங்க இருந்த மெடிக்கல் ரிப்போர்ட் வச்சி தான் உனக்கு அம்னீசியானு தெரிஞ்சிக்கிட்டேன்.
தாத்தா இறந்த பிறகு தான் உன்னைக் கண்டுபிடிக்க முடிஞ்சிது. நீ எங்கயாவது ஐடில வேலை பார்க்க வாய்ப்பிருக்குனு ஐடில வேலை செய்ற என் நண்பர்கள்கிட்டலாம் சொல்லிருந்தேன். அப்படித் தான் பவானியோட லீட் மூலமா நீ அங்க வேலை பார்க்கிறது தெரிஞ்சிது. நீ தங்கியிருக்கப் பிஜி தெரிஞ்சதும், உன்னைப் பார்க்க வந்தேன். ரிசப்ஷன்ல உன் பேரைச் சொல்லி உன்னைக் கூப்பிட சொல்லிட்டு கார்டன் ஏரியால வெயிட் செஞ்சிட்டு இருந்தேன். ஆனா அங்க என்னைப் பார்த்து நேரா வந்த நீ…. என்னைக் கடந்து போய்ப் பின்னாடி இருந்த அபிநந்தன்கிட்ட போய் பேசின. அப்ப தான் உன் அம்னீசியானால என்னை நீ மறந்துட்டனு புரிஞ்சிது”
அன்றைய அந்நிகழ்வின் தாக்கத்தில் மனம் வலித்து கண்களில் நீர் துளிர்க்க சற்று அமைதியானான் நித்திலன்.
“என்னை நானே வெறுத்த நாள் அது ஹனி. கணவனாய் நான் தோத்து போய்ட்டதை உணர்ந்த நேரம் அது.
அப்படியே அங்கிருந்த பென்ச்ல உட்கார்ந்துட்டேன்!” அவன் குரலில் நடுக்கம் தெரிந்தது.
“என் காதலை நீ மறக்குற அளவுக்குத் தானா உன்கிட்ட நான் நடந்திருக்கேன்னு என் மேலயே எனக்கு வெறுப்பு. அழுகையை அடக்கி தொண்டைக்குள்ள வலியை விழுங்கி அங்கிருந்து நகரவும் மனமில்லாம மழைல சில மணி நேரமா நனைஞ்சிட்டே உட்கார்ந்தேன். விஜய்யும் அண்ணனும் என்னைத் தேடி வந்து பார்த்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அன்னிக்கு நான் அழுத அழுகைக்கு அளவில்ல ஹனிமா” எனக் கூறி அவள் மடியில் முகம் புதைத்து கண்ணீர் மழை பொழிந்தான்.
அவனின் கண்ணீர் அவளின் மனத்தில் கனத்தைக் கூட்டி அவளையும் கண்ணீரைப் பொழிய வைத்திருந்தது.
மென்மையாய் அவன் தலை வருடியவள், அவனை முகத்தினை நிமிர்த்தித் தனது நெஞ்சுக்குள் அடைக்கலமாக்கிக் கொண்டாள்.
அவளின் இடையைப் பற்றியவனாய் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவன், அன்றைய நாளின் துயரை இன்றைய இவளின் அன்பான அணைப்பில் தொலைத்துக் கொண்டிருந்தான்.
கண்களைத் துடைத்துக் கொண்டு அவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவள், “சாரிப்பா! உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல” அவன் வலியை தனதாய் ஏற்று அவளுரைக்க,
“ம்ப்ச் இல்ல! அம்னீசியா வந்ததுக்கு நீ என்ன பண்ணுவ?” என்றவன் கூறவும்,
“இல்லப்பா உங்க மேல நான் வச்சிருந்த அளவுக்கடந்த காதல்னால தான் நான் கோமாக்குப் போய் பழைசு எல்லாம் மறந்து போய் அம்னீசியா வந்து முழிச்சேன்” என்றாள் நிவாசினி.
இவன் புரியாத பார்வையில் அவளைப் பார்க்க, “நான் உங்கக்கிட்ட டிவோர்ஸ் கேட்டுட்டு மயங்கி போய்ட்டேன். அப்புறம் நீங்க திரும்ப உள்ளே வந்து தாத்தாகிட்ட கோபமா பேசினது, தாத்தா உங்களை அடிச்சி விரட்டினதுலாம் என்னால மயக்கத்துலயும் அங்க கேட்ட சத்தத்துல உணர முடிஞ்சிது. உங்களை அடிச்சு துரத்தின தாத்தா அப்புறம் கோபமா என்கிட்ட பேசினாங்க. எனக்கு மயக்கத்துலயும் கேட்டுச்சு. நான் முழிச்சு வந்து உங்ககூட திரும்பவும் சேர்ந்தா உங்களை விஷம் வச்சி கொன்னுடுவேன்னு கோபமா தாத்தா சொன்னாங்க. அதுக்குப் பிறகு தான் நான் கோமாக்குப் போனேன். உங்க கூட சேராம போறதுக்குப் பதிலா உங்களை மறந்து கூட நான் வாழ்ந்துடுவேன்னு தான் கோமாக்குப் போய் அம்னீஷியா வந்து முழிச்சேன் போல” என்றாள் நிவாசினி.
“அப்படி அப்னீஷியா வந்த போதும் கூட என்னைத் தான் திரும்பவும் காதலிச்சடா நீ. எனக்கு யாருமில்லனு என்கிட்ட தான்டா வந்து நின்ன நீ! அப்பலாம் உன் அழுகையை நினைச்சு கஷ்டமா இருக்க அதே சமயத்துல என்னை யாருனு தெரியாத போதும் என்னைத் தானே உன் மனசு தேடுதுனு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு” என்றவனாய்
அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் நித்திலன்.
“ஆனா இப்ப நீங்க கொடுத்த மருந்து என்ன? டாக்டர் கிருஷ்ணன் அது அபார்ஷனுக்குக் கொடுத்த மருந்துனு சொன்னாரே?” அவனின் அணைப்பிலேயே இருந்தவளாய் கேட்டாள்.
“அது நாங்க பிளான் செஞ்ச நாடகம்” என்றான்.
“நாடகமா?” அவள் கேள்வியுடன் அவனைப் பார்க்க,
“ஆமா உனக்கு ட்ரீட்மெண்ட் செய்யும் போது என்னை மீட் பண்ண வரச் சொன்னாருல. ஆனா நீ அதைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலைனாலும் உன்னை நான் ஃபாலோ செஞ்சிட்டு இருந்தனால நானே அவரைப் போய் பார்த்து நடந்ததைச் சொன்னேன். உனக்கு பழசுலாம் ஞாபகம் வந்தா என்னை விட்டு நீ போய்டுவியோனு எனக்கு பயம் இருந்துச்சு ஹனி. ஏன்னா உன்னைப் பொறுத்த வரைக்கும் நான் தானே நம்ம குழந்தையை அழிச்ச பாவி. உன்னோட தாத்தா உனக்கு நல்லவரு தானே. அந்த நினைப்போட தானே நீ கோமாக்குப் போன! அதனால உனக்கு திரும்ப பழைய நினைவுகள் வந்தா எங்கே நீ என்னை வெறுத்திடுவியோனு ரொம்பவே பயந்தேன். உனக்கு பழசெல்லாம் ஞாபகம் வரவே கூடாதுனு நினைச்சேன் அதே நேரம் அது தப்புனு என் மனசாட்சி குத்திச்சு. இப்படி இருதலைக் கொள்ளியா இருக்க முடியாமா டாக்டர்கிட்ட அழுது புலம்பினேன். அப்ப அவர் தான் உனக்கு அபார்ஷன் ஆன மாதிரியே இப்பவும் சீன் கிரியேட் செஞ்சா உனக்கு பழசுலாம் ஞாபகம் வர வாய்ப்பிருக்குனு சொன்னாரு. வாழ்வோ சாவோ செஞ்சி பார்த்துவிடலாம்னு முடிவு செஞ்சி தான் அன்னிக்கு மருந்து கொண்டு வந்து கொடுத்தேன். அது நார்மல் ஹெல்த் டானிக் தான்” என்றான்.
“ஆனா நீ கண் முழிச்சு பவானி பேச்சு கேட்டு என்னை வேண்டாம்னு சொல்லுவனு எதிர்பார்க்கவே இல்லை. மனசு வெறுத்துப் போச்சு. அதான் நான் டிவோர்ஸ் தரேன்னு சொல்லிட்டு வந்தேன். அதோட என் வாழ்க்கையே முடிஞ்சி போச்சுனு தான் நினைச்சேன். உனக்கு திரும்பவும் பழைய நினைவுலாம் வந்தது நாங்க எதிர்பார்க்காதது” என்றவன் கூறிக் கொண்டிருந்த சமயம்,
“நித்திலன் நிவாசினி சாப்பிட வாங்க” என்று கீழே இருந்து குரல் கொடுத்தார் நித்திலனின் அண்ணி நித்யா.
நேரம் இரவு எட்டு மணியை நெருங்கியிருக்க, அவளின் கரத்தினைப் பற்றிக் கொண்டு கீழே சென்றான் நித்திலன்.
மொத்த குடும்பமும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
நிவாசினிக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதில் அத்தனை மகிழ்ச்சி அனைவருக்கும். நிவாசினி இல்லாத நாட்களில் நித்திலனின் வேதனையைத் தான் அனைவரும் கண்டிருந்தனரே!
“வாம்மா! பழைசுலாம் இப்ப ஞாபகம் வந்துடுச்சா உனக்கு” அவளின் கை பற்றித் தன்னருகே அமர்த்தி வைத்துக் கேட்டார் நித்திலனின் அன்னை.
“ஹ்ம்ம் ஞாபகம் வந்துடுச்சு அத்தை. சாரி அத்தை. எல்லாரையும் ரொம்பக் கஷ்டபடுத்திட்டேன் போல” என்று மன்னிப்பு வேண்டினாள்.
“இல்லம்மா! நாங்க தான் மன்னிப்பு கேட்கனும்” எனக் கூறி சற்று இடைவெளி விட்டவர் தொடர்ந்து பேசினார்.
“என் பிள்ளைங்க அவங்கவங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி வாழ்க்கை அமைச்சிக்கிற சுதந்திரத்தை கொடுத்து தான் நானும் என் கணவரும் வளர்த்தோம்மா. அவங்க காலேஜ் முடிக்கிற வரைக்கும் காதல்னு சுத்த கூடாதுனு சொல்லிட்டோம். காலேஜ் முடிச்சதும் வேலைல சேர்ந்த பிறகு அவங்க வாழ்க்கை அவங்க கையில் தான்னு சொல்லிட்டோம். அவங்க வாழ்க்கையோட டெசிஷன்ல நாங்க தலையிட மாட்டோம், அதுல எவ்ளோ பிரச்சனை வந்தாலும் அவங்க தான் சமாளிக்கனும்னு சொல்லிட்டோம். நித்திலன் நல்ல வேலைல இருந்து சம்பாதிச்சிட்டு இருந்தப்ப நிரஞ்சன் வேலை இல்லாம இருந்தான். அவன் ரொம்பவே டிப்ரஸ்டா இருக்கும் போது, அவனைக் கல்யாணம் செஞ்சிக்க விருப்பப்படுறேனு சொல்லி கேட்டாமா நித்யா. அவன் வாழ்க்கைல அவ வந்த பிறகு ஏறுமுகம் தான். நித்திலனும் உன்னைக் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி கேட்டப்ப எங்களுக்கு எல்லாம் முழுச் சம்மதம் தான். ஆனா உங்க குடும்பத்துல எதிர்ப்பு இருக்கும்னு நினைக்கலை. உங்க தாத்தாவே இப்படிலாம் செய்வார்னு நினைக்கலை” எனக் கூறிப் பெருமூச்செறிந்தவராய் தொடர்ந்து பேசினார்.
“அன்னிக்கு ஹாஸ்ப்பிட்டல்ல உங்க தாத்தா பேசின பேச்சுல செம்ம கோபமா வந்துச்சு. இனி உங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டு வந்துடலாம்ன்ற அளவுக்குக் கோபமா வந்துச்சு. ஆனா ஏற்கனவே மகனையும் மருமகளையும் இழந்துட்டு பேத்தியை மயக்கத்துல வச்சிருக்கிற அவரோட நிலைல கவலைல பேசுறாருனு மனசைத் தேத்திக்கிட்டேன். ஆனாலும் என் பிள்ளை ஏன் அவர் பேச்சை கேட்டுட்டு அங்கேயே இருக்கனும்னு தோணுச்சு. அதான் எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டேன். நித்திலன் தவிர எங்க சைட்ல யாரும் ஹாஸ்பிட்டல் பக்கமே போகக் கூடாதுனு சொல்லிட்டேன். ஆனாலும் உன்னை உங்க தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போன பிறகு, நிரஞ்சனும் அவன் மனைவி நித்யாவும் உன்னை பார்க்க உங்க வீட்டுக்கு போனப்பவும் உங்க தாத்தா திட்டி அனுப்பிட்டாராம். நித்திலன் அவர் கிட்ட போய் உன்னை அவன் கூட வச்சி பார்த்துக்கிறதா சொல்லி கேட்டிருக்கான். அதுக்கும் அவர் ஒத்துக்கலை. ஆனா ஆளு அப்பவே நொடிஞ்சிட்டார். சொந்த மகனின் இழப்பு அவரை ரொம்பவே நிலைகுலைய வச்சிருச்சு. ஆனா அந்த நேரத்திலும் ஜாதியை பிடிச்சிக்கிட்டு இருந்தது தான் எனக்கு ரொம்பக் கோவமா இருந்துச்சு” இதற்கு எவ்வகையில் எதிர்வினை ஆற்றுவது எனப் புரியாது விழித்தாள் நிவாசினி.
“வா ஹாசினி சாப்பிடலாம்” என அழைத்துச் சென்றாள் நித்யா.
வெகு நாள்களுக்குப் பிறகு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கூடிச் சிரித்துப் பேசி வெகு மகிழ்வாய் உண்டனர்.
நித்திலனின் கண்களில கண்ட சந்தோஷத்தின் பூரிப்பில் நெகிழ்வாய் அமர்ந்திருந்தார் அவனின் தந்தை.
அவர் உண்டு எழுந்து கை கழுவச் செல்கையில், உண்டு கொண்டிருந்த மகனின் தலையை மென்மையாய் ஆட்டி விட்டு சென்றார். அவரைப் பார்த்து மென்மையாய் சிரித்தான் நித்திலன்.
“ஏன்மா நீ அவன்கிட்ட டாட்டூ பத்திலாம் கேட்டு ஒரு வழியாக்கிட்ட போல! என்னை டாட்டூ குத்திக்கச் சொல்லி இம்சை பண்ணிட்டான். இவனால நான் வலிக்க வலிக்க நெஞ்சுல நிநினு டாட்டூ குத்தாக்கிட்டேன்” நிவாசினியிடம் புகார் வாசித்தார் அவனின் அண்ணன் நிரஞ்சன்.
“ஆமா நிவாசினி நான் சொல்லிக் கூட பச்சைக் குத்திக்க மாட்டேன்னு அடமா இருந்தவரு அவர் தம்பிக்காக பச்சைக் குத்திக்கிட்டு ஜூரத்தோட வந்து நின்னாரு. அப்ப எனக்கு வந்துச்சு பாரு கோபம். ரெண்டு நாளைக்கு அவருக்கு நான் சோறே போடலையே” என்று நிரஞ்சனின் மனைவி நித்யா உரைத்ததைக் கேட்டு அனைவரும் கொல்லெனச் சிரித்தனர்.
தனது மாமனார் மாமியாரும் கூட இதனை இயல்பாய் எடுத்துக் கொண்டு சிரித்ததை வியப்புடன் பார்த்திருந்தாள் நிவாசினி.
“இத்தனை நாள் கழிச்சி இன்னிக்கு தான் என் கொழுந்தனார் முகத்துல முழுச் சந்தோஷத்தைப் பார்க்கிறேன் நிவாசினி. நீ இல்லாத நேரத்துல அவனை அவன் கவனிச்சிக்கவே இல்லை. அதான் இப்படிச் சொட்டை விழுற அளவுக்குத் தலையை வச்சிக்கிட்டு இருக்கான்” நித்திலனின் தலையைத் தட்டியவாறு உரைத்து விட்டு சென்றார் நித்யா.
நிவாசினியின் பார்வை காதலாய் அவனை ஸ்பரிசத்தது.
“இனி நான் பார்த்துக்கிறேன் அக்கா” என நிவாசினி கூறவும்,
“இது போதும்மா எனக்கு. நித்திலனை நினைச்சு ரொம்பவே மனசு கஷ்டமா இருந்துச்சு. இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்றார் நித்திலனின் அன்னை.
அங்குச் சுற்றிருந்த அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்வும் நிறைவும்.
‘அன்பான குடும்பம்! அதே நேரம் அவரவர் விருப்பம்னு சுதந்திரமும் கொடுக்கிற குடும்பம்’ என மனத்தினுள் எண்ணிக் கொண்டாள் நிவாசினி.
அன்றிரவு அவளின் அணைப்பிற்குள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் நித்திலன்.
‘ம்ப்ச் இன்னும் நிறையப் பேசலாம்னு பார்த்தா அதுக்குள்ள தூங்கிட்டாங்களே! என்னைக் காதலிச்ச ஒரே காரணத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க’ மனத்திற்குள் எண்ணியவாறு அவன் முகம் நோக்கியவள் எக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்து அவனை இறுக்கி அணைத்தவளாய் நிம்மதியான மனத்துடன் உறங்கிப் போனாள்.

