என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -01

Loading

      முகம் 01

 

அன்று அந்த இரவில் வேதநாயகபுரமே ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

விடிந்தால் அந்த ஊரில் பெரியவீட்டு ஜமீன் வாரிசின் மகள், மருமகன் மறுவீட்டு அழைப்பு என்றால் கேட்கவும் வேண்டுமா?

 

அந்தப் பெரிய வீட்டின் உள்ளே, வீட்டின் தலைவரான மாணிக்கவேல் பாண்டியன் அமர்ந்திருக்க, அவரருகே அவர் மகன் சக்திவேல் பாண்டியனும் மருமகன்கள் கருணாகரன் மற்றும் குமரவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

 

நால்வரும் நாளை பூஜை தொடர்பாகப் பேசிக் கொண்டிருக்க, மாடிப் படிகளில் பாதச்சத்தம் கேட்டு நால்வரும் ஒரு சேரப் பார்வையை அங்கே திருப்பினர்.

 

வேட்டி சட்டையில் கம்பீரமாக இறங்கிக் கொண்டிருந்தான் அவ்வீட்டின் வாரிசுகளில் ஒருவன்.

 

நேரே இவர்களிடம் வந்தவன், மாணிக்கவேல் பாண்டியனிடம் “நான் மண்டபத்துக்குப் போறேன் தாத்தா, தீரா அண்ணா வர லேட்டாகுமாம்” என்றவன் அங்கிருந்த சக்திவேலிடம்,

 

“அப்பா, ஜோசியர் நேரம் குறிச்சு கொடுத்தாச்சு துவாவும் மாப்பிளையும் காலைல ஒன்பதுக்கு கோயில் வந்தா சரியா இருக்கும்னு சொன்னார்” என்றான்.

 

சக்திவேலோ “சரி இன்பா, நீயே மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடு, நேரா கோயிலுக்கே அழைச்சிட்டு வரச் சொல்லி நம்ம டிரைவர்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வை” என்றார்.

 

“சரிங்கப்ப்பா” என்றவனும் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

 

____________

 

 

 

அங்கே மண்டபம் அந்த ஊர் மக்களால் நிறைந்திருந்தது. தடபுடலாக நாளைய சமையலுக்குரிய முன் இதர வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

 

அது அந்த ஊர் வழக்கம், மறுவீடு வரும் மணமக்கள் முதலில் கோயிலில் பூஜை வழிபாடு முடிந்த பிறகே மணமகள் வீட்டுக்குச் அழைத்துச் செல்லப்படுவர்.

 

இது பெரிய வீட்டு விசேஷம் என்பதால் இன்னும் கூடுதலாய் பண்டிகைபோல் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

 

ஆட்டம் பாட்டம் என இளசுகள் அரட்டை அடிக்க, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் குத்தாட்டத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தனர் அவ்வூர் காளைகள்.

 

பெண்களோ ஆட்டத்தை ஓரக்கண்ணால் ரசிக்க, காதலர்களுக்கு இடையே ரகசிய விழி பரிமாற்றங்களும் நடக்கவே செய்தது.

 

ஒரு புறம் பெரியவர்கள் அதனைக் கண்டும் காணாமல் வேலையில் கவனமாய் இருக்க, இன்னொருபுறம் பாட்டிகள் ஊரின் கிசுகிசுக்களைப் பேசிக்கொண்டிருந்தனர்.

 

இதற்கிடையில் ஆடிக்கொண்டிருந்த இளைஞ்சர்களில் ஒருவனோ “டேய் இன்பா அண்ணா வர்றாருடா” என்று சத்தம் வைக்க, கூட்டத்தில் ஆடிக்கொண்டிருந்த அத்தனை தலைகளும் வேட்டியை இறக்கிவிட்டு பம்மியபடி அவனுக்கு வணக்கம் வைத்தனர்.

 

அவனோ “என்னடா ஆட்டம் எல்லாம் பட்டையக் கிளப்புது. சாப்பிடீங்களா?” என்று புன்னகையுடன் கேட்க, அந்தப் புன்னகை அவர்களையும் தொற்றிக் கொண்டது.

 

“சாப்பிட்டோம்மம்ம் ண்ணா” என்று எல்லாக் குரலும் ஒரு சேர ஒலிக்க,

 

அவனோ புன்னகையுடன் “சரிடா பார்த்துக்கோங்க” என்று மண்டபத்தின் உள்ளே நுழையப்போக, “அண்ணா” என்று மீண்டும் கோரசாய் அழைத்தனர் அங்கிருந்த இளம் காளையர்கள்.

 

அவனோ திரும்பி என்னவென்று கேட்க, “இன்பாண்ணா” என்று ஒருவன் பின் மண்டையை சொரிய, விடயம் புரிந்தது அவனுக்கு.

 

அன்று அவர்களைத் தடுக்க மனசு வராததால் “டேய் கொஞ்சமா குடிக்கணும், குடிச்சிட்டு ரகளை பண்ணி என்ன தீராண்ணாகிட்ட மாட்டி விட்டீங்க, அப்பறம் தொலைச்சிடுவேன். நாளைக்கு பூஜை இருக்கு ஞாபகம் இருக்கட்டும்” என்றவன் மீசையை முறுக்கியபடி உள்ளே நுழைய, அவர்களின் ஆரவாரச் சத்தம் அவன் காதைக் கிழித்தது.

 

அவன் முகிலின்பன். சக்திவேல்பாண்டியன் மீனாட்சி தம்பதியினரின் இளைய மகன்.

 

அவர்களின் வம்சாவழியில் வேதநாயகப் பாண்டியனின் நினைவிலேயே அந்த ஊருக்கு வேதநாயகபுரம் என்ற பெயரே வந்திருந்தது.

 

அந்தக் காலத்தில் இருந்தே இவர்கள் பரம்பரை செல்வசெழிப்பும் மதிப்பும், இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுப்பதில் வள்ளலாகவும் திகழ்ந்து நன்மதிப்பை பெற்ற குடும்பம்.

 

அடுத்தடுத்து வந்த பல தலைகளும் அவர்களைப் போலவே இருக்க, அவர்களும் அதே மரியாதையுடன் தான் நடத்தப்பட்டனர்.

 

இதோ இப்போது அந்தக் குடும்பத்தின் மூத்த தலை முகிலின்பனின் தாத்தா மாணிக்கவேல் பாண்டியன் தான்.

 

அவருக்கு மூன்று பிள்ளைகள், சக்திவேல் பாண்டியன், வரலட்சுமி மற்றும் வேதவல்லி.

 

தங்கைகளைவிட வயது வித்தியாசம் அதிகம் என்பதால் முதலில் சக்திவேல் திருமணம் செய்திருந்தார்.

 

அதன் பின் சில வருடங்கள் கழித்து வரலட்சுமி வேதவல்லி இருவருக்கும், தன் நண்பர்களான கருணாகரன் மற்றும் குமரவேலுவை திருமணம் செய்து வைத்தார் சக்திவேல் பாண்டியன்.

 

அவர்களது துணை, குழந்தைகள் எனக் கூட்டுக் குடும்பமாகத் தான் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

 

இதோ அவர்களது வீட்டு இளவரசி, இன்பனின் தங்கை துவாரகாவின் திருமணம் தான் நடந்து முடிந்திருந்தது. நாளை அவளது மறுவீட்டு அழைப்புக்காகத் தான் ஊரே அந்த மண்டபத்தில் கூடி இருக்கின்றனர்.

 

காலையில் கோயிலில் பூஜையும், கூடவே அருகில் உள்ள மண்டபத்தில் கறிவிருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அதன் முழுப் பொறுப்பும் அந்த வீட்டின் மூத்த வாரிசு தீரனிடம் தான். இன்பனும் அண்ணனுக்குத் துணையாக எல்லாம் பார்த்துக்கொள்கிறான்.

 

 

______________

 

 

அடுத்த நாளும் தன்னால் விடிந்திருந்தது. காலை ஒன்பது மணிக்குத் தான் மாப்பிளை வீட்டிலிருந்து வர இருக்கிறார்கள் என்பதால், ஒவ்வொன்றாய் பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் வேதவல்லி.

 

“என்ன வல்லி, எல்லாம் சரியா இருக்கா? இப்போவே கோயிலுக்குப் போனாத் தானே வேலை எல்லாம் முடியும். எங்க இந்த மலர், சிவா ரெண்டு பேரையும் காணோம். இன்னுமா புடவை கட்டுறாளுங்க” என்று வரலட்சுமி அங்கே வந்தார்.

 

வேதவல்லியோ “இன்னைக்கு அவங்க ரெண்டு பேரையும் கைல பிடிக்க முடியுமாக்கா? துவாரகா இல்லாம இந்த ரெண்டு நாளா மூஞ்சத் தூக்கிட்டு சுத்துனாளுங்க, இன்னைக்கு அவ வர்றான்னதும் முகம் பூரா சிரிப்புதான். அதுலயும் உன் பொண்ணு சிவா இருக்காளே, உன்ன மாதிரியே விரப்பா சுத்துறா” என்று தங்கள் மக்களைப் பற்றிக் கேலியாய் சொல்லியவர் “இங்கன வேலை முடிஞ்சுதுக்கா, எடுத்து வெச்சா கிளம்பிட வேண்டியது தான்” என்றார்.

 

லட்சுமியோ “இடைல உனக்கு என்னச் சொல்லலைனா தூக்கம் வராதே” என்க, அக்காவைப் பார்த்துப் புன்னகைத்த வேதவல்லி,

 

“பின்ன என் கல்யாணத்தன்னைக்கு அழாம விரைப்பா இருந்துட்டு ரூம்ல போய் ஒப்பாரி வெச்சியாமே, அத தான் கருணா மாமா தினமும் சொல்லுறாங்களே!” என்றார் எப்போதும் போல் கேலியாய்.

 

லட்சுமியோ “எல்லாம் இந்தக் கூறு கெட்ட மனிசன் சொல்லணும்” என்று கணவனுக்கு அர்ச்சனை செய்தவர், அங்கிருக்கும் தட்டுக்களைப் பார்த்தபடி “இன்னுமா இந்த ஜோதிப்பய வரல” என்று கேட்டுக் கொண்டிருக்கையிலேயே,

 

“இதோ வந்துட்டேன் லட்சுமிம்மா” என்று அந்த நேரம் உள்ளே நுழைந்தான் பரஞ்ஜோதி.

 

“ஏலேய் ஜோதி, இங்கன இருக்குற வீட்டுல இருந்து வர உனக்கு இவ்வளவு நேரமாடா, இது உன் தோஸ்துக்குத் தெரியுமா?” என்று சத்தமாய் வேதவல்லி கேட்டு வைக்க,

 

அவர் அருகில் நெருங்கியவன் மெல்லிய குரலில் “ஆத்தா வேதவல்லி என் ஜோலிய முடிச்சிடாதீங்க, அவன் வந்தா என் சங்க அறுத்துடுவான். நேத்து ராவே இங்கனவே கெடக்காம போய் நேரத்துக்குத் தூங்குடா ஜோதிகான்னு சொல்லிட்டு தான் போனான். நான் கேக்கல இந்தா எழும்பவே நேரமாகிடிச்சு” என்றான்.

 

“அவன் சொல்லுற லட்சணத்துல உனக்கு அதே அடைமொழிய திருப்பிச் சொல்லனுமாக்கும், ஜோதிகாவாம் ஜோதிகா, போடா இத எல்லாம் கொண்டு போய் அங்க கார்ல வை” என்றபடி அங்கே வந்தார் சக்திவேல் பாண்டியனின் மனைவி மீனாட்சி.

 

“எத மறந்தாலும் அடைமொழிய மறக்கமாட்டான் இந்தப் பரஞ்ஜோதி” என்று வீர வசனம் பேசியவனின் தலையில் தட்டிய மீனாட்சியோ, “பேச்சைக் குறைச்சிட்டு வேலையப் பாரு. தேனு வந்திருக்கு தானே? வெள்ளன சாப்பாட்டுக்கும் வரல. அவ வரலானா நீ சாப்பிட்டு அவளுக்கும் எடுத்துட்டுப் போ” என்று பரஞ்ஜோதியிடம் ஆரம்பித்தவர்,

 

வரலட்சுமியிடம் “பூஜைக்கு எல்லாம் எடுத்தாச்சா லட்சுமி” என்று கேட்க,

 

“அங்க ரூம்ல தேவையான எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன் அண்ணி, நீங்க ஒருதடவை பார்த்துட்டீங்கன்னா கார்ல வைக்கச் சொல்லிடலாம்” என்று சொல்ல, மீனாட்சியும் அவருடனே அங்கிருந்து சென்றுவிட்டார்.

 

அவர்கள் சென்றதும் அங்கிருந்த பையைத் தூக்கப் போன பரஞ்ஜோதியை அழைத்த வேதவல்லியோ,

 

“எல்லாத்தையும் கார்ல வெச்சிட்டு அவனைப் போய்ப் பாரு, தனியா என்ன பண்றானோ? அவ வேற இன்னும் வரல. ரெண்டு பேரையும் சீக்கிரம் வரச்சொல்லு. சண்டை போடாம வந்தா சரிதான்” என்றார் மெல்லிய குரலில்.

 

அதில் நமட்டுச் சிரிப்பு சிரித்தவனோ “ஆடு பகை குட்டி உறவா? இவ்வளவு பாசத்தை வெச்சிட்டு அவன்கிட்ட பேசுறதுக்கு என்ன உங்களுக்கு” என்றவன் அவர் பார்த்த பார்வையில்,

 

“அதுசரி இங்க முறைக்கிறதுக்குன்னே அளவெடுத்துச் செஞ்சது நான் தானே” என்று அவருக்குக் கேட்காமல் முணுமுணுத்தபடியே அங்கிருந்தவற்றை ஒவ்வொன்றாய் காரில் அடுக்கத் தொடங்கினான்.

 

 

இதே நேரம் வேதவல்லி சொல்லியது போல அந்தப் பெரிய வீட்டின் பின்னே இருக்கும் தோட்ட வீட்டில், ஒரு போர் நடந்தது என்னவோ உண்மை தான்.

 

“அடியேய் இணர், என்னடி பண்ணி வெச்சிருக்க” என்று அவன் கன்னத்தில் இருந்த காயத்தை வருடியபடி தீரன் கேட்க,

 

அவன் முன்னே நின்றிருந்தவளோ “நான் இல்லை ஜெய்” என்று ஒற்றை கண்ணை மூடினாள்.

 

அவனோ “கேடி நீ இல்லாம யாராம்?” என்று கேட்டான் பொய் கோபத்துடன்…

 

அவன் தீரன், ஜெயதீரன். அந்த வீட்டின் முதல் வாரிசு அவன். சக்திவேல் பாண்டியன் மீனாட்சி தம்பதியினரின் மூத்த மகன்.

 

மாணிக்கவேல் பாண்டியனின் செல்லப் பேரன். அவருக்கு அடுத்து அந்த வீட்டில் மரியாதைக்குறியவன் என்றால் அது அவன் தான்.

 

அவனது தந்தை சக்திவேல் கூட அவனை அத்தனை மரியாதையாகத் தான் நடத்துவார்.

 

‘மகன் எது செய்தாலும் சரியாக இருக்கும்’ என்ற நம்பிக்கை சக்திவேல் பாண்டியனுக்கு எப்போதும் இருக்கும்.

 

ஆனால் கடந்த ஐந்து வருடமாகச் சிறு பிணக்கு தந்தை மகன் இடையே!

 

முன்பு போல் பேசிக் கொள்வதில்லை, ஆனால் பாசத்திலும் உரிமையிலும் எந்தக் குறையும் இல்லை.

 

 

காயத்தை ஆராய்ந்தபடியே “இப்படியே எப்படிடி நான் வெளில போவேன்?” என்று கேட்டவன், தெரிந்தே அவள் கன்னத்தை வலிக்காமல் கடித்து வைத்தான்.

 

அவளோ ஒரு முத்தம் கொடுத்து அவனை ஏமாற்ற, அந்த முத்தம் எதற்கானது என்று தெரிந்தும் விரும்பியே ஏமாந்து போனான் அந்தக் காவலன்.

 

 

இருவருக்கும் முட்டிக்கொள்ளாத நாள் இல்லை எனலாம். ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் இருந்ததில்லை. அதனாலேயே அந்த வீட்டிலுள்ளவர்கள் இவர்களது சண்டையை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.

 

‘சண்டையைப் பிரிக்கப் போகிறேன்’ என்று உள்ளே நுழையும் அவர்களுக்கே பல்ப் கொடுக்கும் வகையில் மீண்டும் சேர்ந்து கொள்ளும் இவர்களை, ‘சேர்க்கின்றேன்’ என்று தினமும் மாட்டிக்கொண்டு முழிப்பது தான் பரஞ்ஜோதியின் தலையாய கடமை.

 

தீரன், இணர்வி இருவரும் பெரிய வீட்டில் இல்லை அவ்வளவே, மற்றப்படி பேச்சு வார்த்தை எல்லாம் வழமை போல் தான். மூணு வேளை உணவும் அங்கே இருந்து தான். அது மீனாட்சியின் கட்டளை என்பதால் தீரனால் மறுக்க முடியாமல் போனது. அதில் சக்திவேலுக்கு அத்தனை நிம்மதி.

 

மகனை வெளிய போகச் சொன்னவருக்கு மகனை இந்தளவிளாவது மனைவி பிடித்து வைத்திருப்பதில் மகிழ்ச்சியே!

 

ஆனால் அவர் அவரது முடிவிலிருந்து இறங்குதாய் இல்லை, அதற்காகத் தானே அவர் இன்றும் இணர்வியை ஏற்றுகொள்ளாமல் இருப்பதும். இருப்பது என்பதை விட அப்படி நடிப்பது என்று சொன்னால் தான் பொருந்தும்.

 

 

 

அவள் முத்தத்தில் மயங்கி நின்றவன், “நைஸ்ஸா எஸ்கேப் ஆகப் பார்க்குறியா கேடி, ஏன்டி கடிச்ச? என்றான் இன்னொரு முத்தம் வாங்க ஆசை கொண்டு…

 

அவளோ “நான் இல்ல, அந்த ஜோதிகா தான்” என்றவள் அவன் பிடிப்பதற்குள் குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

 

போகும் அவளையே பார்த்தபடி “என் வயசுக்குப் போயும் போயும் அந்த ஜோதிகா வாயால கடி வாங்கணுமா நானு. வெளிய வாடி உனக்கு இருக்கு” என்றவன், தன் தலையைத் துவட்டத் தொடங்க, கதவு தட்டும் ஓசை. வந்தது யாரென்று அறிந்தவன் போய்க் கதவைத் திறக்க,

 

“வந்துட்டேன், உங்க ஜோதிகா பறந்து வந்துட்டேன்” என்று பரஞ்ஜோதி நண்பனைப் புன்னகையுடன் பார்த்தான்.

 

ஆனால் எதிரே நின்றிருந்த தீரன் பதிலுக்கு அவனை முறைக்க,

 

‘எதுக்கு இந்த அனல் பார்வைனு தெரியலையே!’ என்று எண்ணியவாறு “என்னடா தோஸ்து இவ்வளவு பாசமா பாக்குற?” என்று கேட்டு உள்ளே நுழைந்தவன்,

 

தீரன் முகத்தில் இருந்த காயத்தைப் பார்த்து நமட்டு சிரிப்புடன், “சம்பவம் பெரிசு போலயே தீரா?” என்றான்.

 

அப்படி ஒருவன் உள்ளே வந்ததை கூட, கணக்கில் எடுக்காமல் தீரன் அவன் வேலையில் கவனமாய் இருக்க, குறுக்கும் மறுக்கும் நடந்த பரஞ்ஜோதி கடுப்பாகி விட்டான்.

 

“அப்பவே எம்பொஞ்சாதி சொன்னா, நான் எங்க கேட்டேன்” என்று சத்தமாய் புலம்ப,

 

“அப்படி என்னடா சொல்லிச்சு தேனு?” என்று தீரன் கேட்கவும், அவன் பேசி விட்டான் என்ற உற்சாகத்தில், ஆடு தானாய் போய் தலையைக் கொடுத்தது.

 

“வேற என்ன, இந்த வீணாப் போன ஊர்காங்க கூட எல்லாம் சேராதீங்க மாமா, உங்க அழகுக்கும் அழிவுக்கும் நீங்க இங்கன இருக்க வேண்டிய ஆளே இல்ல, அதுலயும் தீரன் ஐயா கூடப் பேச்சே வெச்சிக்காதீங்கன்னு சொன்னிச்சே. நான் தான் நண்பனாச்சேன்னு உன் கூட சுத்துறேன். ஆனா நீ மதிக்கிறியால என்னைய?” என்று நீளமாய் நயத்துடன் பேசி முடிக்க,

 

“நீங்க இப்படித்தான் ஊர்ல என்னப்பத்தி சொல்லிட்டு திரியிறீகளாக்கும். நேத்து சரஸக்கா கூட நான் பேசியும் அது பேசாம போச்சு, இதான் சங்கதியா? நீங்க வீட்டுக்கு வாங்க வெச்சிக்கிறேன்” என்று கோபமாய் மனைவி தேன்மொழியின் குரல் கேட்க,

 

பதறிய பரஞ்ஜோதியோ, எங்கே இருந்து குரல் வருகிறது என்று உணர்வதற்குள் அவளோ பேசி முடித்திருந்தாள்.

 

தீரனோ அவன் கையில் இருந்த அலைபேசியைக் காட்ட, பரஞ்ஜோதி தலையில் துண்டைப் போட்டபடி அமர்ந்துவிட்டான்.

 

“என்னடா ஜோதிகா முகமே பிரகாசமா இருக்கு? இப்போதான்டா பார்க்கவே லட்சணமா இருக்க, அழகன்டா நீ” என்று தீரன் நெட்டி முறிக்க,

 

அவன் கரத்தைத் தட்டி விட்டவனோ, “ஏலேய் தோஸ்து என்ன வேல பார்த்து விட்டிருக்கடா நீயி, அவ இன்னைக்கு என்ன என்ன பண்ண போறாளோ?” என்று தீரன் பேசியதைக் கூடக் காதில் வாங்காமல் புலம்பியபடியே வெளியேறிவிட்டான்.

 

போகும் நண்பனையே பார்த்தவன், புன்னகையுடன் குளியலறையை நோக்கிச் சத்தம் கொடுத்தான்.

 

“இணர் நீ வெளிய வர்றியா இல்ல, நான் உள்ள வரட்டுமா?” என்ற கேள்வியில் உள்ளே கேட்டுக்கொண்டிருந்த தண்ணீர் சத்தம் தன்னால் நின்றது.

 

இனி அவள் வெளியே வருவாள் என்று புரிய, தயாராகியவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

 

 

 

இப்படியே அடுத்த பத்து நிமிடத்தில் அவனும் இணர்வியும் செல்லச் சண்டைகளுடன் தயாராகி பெரிய வீட்டுக்கு வர, அடுத்து சில நாழிகையில் அவர்களது வாகனம் மண்டபத்தை நோக்கிச் சென்றது.

 

மாணிக்கவேல், சக்திவேல் மற்றும் முகிலின்பன் மூவரும் இவர்களுக்கு முன்பே மண்டபம் சென்றிருக்க, அங்கே இவர்கள் செல்லும் நேரம் இன்பன் பூஜைக்குத் தேவையான எல்லாவற்றையும் தாயாராக வைத்திருந்தான்.

 

“இன்பா ஐயர் வந்தாச்சா?” என்று தீரன் கேட்க,

 

இன்பனோ “ஆமா இப்போ தான் ண்ணா, எல்லாம் தயாராத்தான் இருக்கு, மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்ததும் பூஜை ஆரம்பிச்சிடலாம்” என்க, அவனுடன் தீரனும் இணைந்து கொண்டான்.

 

மாப்பிளை வீட்டினர் வருவதற்குள் இதர வேலைகளும் முடிந்து, சரியாகச் சிறிது நேரத்தில் மாப்பிளை வீட்டினரும் வந்துவிட, பூஜை ஆரம்பமாகியது.

 

சக்திவேலின் கடைக்குட்டி துவாரகாவைப் பக்கத்து ஊரில் உள்ள மாணிக்கவேலின் நண்பரின் பேரனுக்குத்தான் கொடுத்திருந்தனர். நன்கு பழக்கமான குடும்பம். சிறுவயது முதல் மூன்று தலைமுறை நட்பும் கூட,

 

துவாரகாவின் கணவன் சித்தார்த் ஒரு மருத்துவன். கூடவே அவனது கண்ணியமான குணமும், அவன் மீதிருந்த மரியாதையும் தான், அவர்கள் வீட்டு இளவரசியை அவனுக்குக் கொடுக்கக் காரணமாய் இருந்தது.

 

இன்னொரு காரணம் அவன் காதல். ஆனால் அது பெரியவர்கள் அறியாதது. காதல் விவகாரம் சிக்காமல் சிறியவர்கள் ஆட்டத்தில் திருமணம்வரை வந்துவிட்டான். தெரிந்தாலும் அவர்கள் மறுக்கப் போவதில்லை தான்.

 

 

இதோ பூஜை முடிந்து, பெண்கள் அவர்களுக்குள் பாசப் பயிரை வளர்க்க, நேரமோ தன்னால் கடந்தது.

 

மலர்விழி, சிவரஞ்சினி இருவரும் துவாரகாவை விட்டு நகரவில்லை அவள் அருகிலேயே நின்று கொண்டனர்.

 

கூடவே வளர்ந்தவர்கள் இனி ஒன்றாக இருக்கப்போவதில்லை என்றதும் பெண்கள் மூவரும் பெரிதாய் பாதிக்கப்பட்டுத் தான் போயிருந்தனர்.

 

அவர்களின் மூத்த தலைமுறையினர் ஒன்றாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தாலும் இப்போது உள்ள தலைமுறையின் வசதியையும் பார்க்க வேண்டும் அல்லவா?

 

சித்தார்த் வேலை செய்யும் மருத்துவமனை சென்னையில் இருப்பதால், மணமக்கள் இன்னும் ஒரு மாதத்தில் சென்னை செல்லவிருக்கின்றனர்.

 

அதற்கு முன் சொந்தங்களின் விருந்து, பூஜை, தேன்னிலவு இப்படி எல்லாம் முடித்துக் கிளம்பத் திட்டமிட்டிருந்தனர்.

 

அவர்களுக்கு அங்கே சென்னையில் தங்கப் புதிதாய் வீடு, கார் என்று எல்லாம் தீரன் ஏற்பாடு செய்துவிட்டான்.

 

சித்தார்த் எத்தனை மறுத்தும் தீரன் கேட்பதாய் இல்லை. தங்கள் வீட்டு பெண்ணின் உரிமை அது என்று முடித்து விட்டான்.

 

அவளுக்குச் சேர வேண்டியதைத் தடுக்க முடியாமல் சித்தார்த் தான் இறுதியில் இறங்கி வரவேண்டியதாய் போகிற்று.

 

 

இதோ பெண்கள் மூவரும் கண்களில் கண்ணீருடன் நிற்க,

 

அவர்களைப் பார்த்த சித்தார்த்தோ “என் பொண்டாட்டிய என் முன்னாடியே அழ வைக்கிறீங்களே இது நியாயமா லேடீஸ்” என்று மலர், ரஞ்சினியிடம் கேட்க,

 

மலர்விழியோ “அண்ணா எங்க துவாவ நீங்க தான் அழ வைக்கக் கூடாது. நாங்க அழ வைக்கலாம் தப்பில்லை, பிரீயா ஒரு ரொமான்ஸ் சீன் உங்களுக்கு உருவாக்கித் தரோம்னு சந்தோஷப்படுவீங்களா, அத விட்டுட்டுப் புலம்புறீங்க” என்று நக்கலாய் சொன்னவள் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

 

அவனோ “தங்கச்சி கருணையோ கருணை” என்று சிரிக்க,

 

சிவரஞ்சினியோ “அண்ணா, என்ன அந்தத் தங்கச்சி பக்கம் மட்டும் காத்து அடிக்கிது? எங்க துவாவக் கட்டிக்க ஹெல்ப் பண்ண இந்தத் தங்கச்சிய மறந்துடீங்க பார்த்தீங்களா? உங்களுக்காகத் தூதுப்புறாவா, அன்னப்பறவையா எல்லாம் இருந்தேனே! இப்படி மறக்கலாமா?” என்றாள் அவனிடம் வம்பு வளர்க்க எண்ணி…

 

அவனோ அங்கே தன் முன்னே மீசையை நீவியபடி நின்ற சக்திவேலைப் பார்த்து ‘மீசை டென்ஷன் ஆகுதுடா சித்து தப்பிச்சிடு’ என்று எண்ணியவன்,

 

அவளுக்குப் பெரிய கும்புடாகப் போட்டு “தாய்க்குலங்களே, ரெண்டு பேருக்கும் நீங்க ஆசைப்பட்ட டிரஸ் வாங்கியாச்சு. உங்க துவாகிட்ட தான் இருக்கு என்னை ஆள விட்டுடுங்க” என்றான்.

 

அவர்களோ போனால் போகிறது என்பது போல “ஓகே பொழச்சுப் போங்க” என்க, அங்கிருந்தவர்களிடயே புன்னகை பெரிதாய் விரிந்தது.

 

அங்கே திருமணம் என்றாலே இப்படி கலாட்டாக்கள் நடப்பது வழக்கம் தானே! அதனாலேயே பெரியவர்கள் இதனைக் கண்டும் காணாமல் இருந்து கொள்வர்.

 

 

 

அடுத்து பந்தி ஆரம்பிக்க, மாப்பிளை வீட்டுக்காரர்களுக்குக் கவனிப்பைச் சொல்லவும் வேண்டுமா??

 

இன்பனும் சரி தீரனும் சரி மாறி மாறிப் புதுமணத் தம்பதியினரைக் கவனிக்க, துவாரகாவுக்குக் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.

 

அவளுக்கும் இந்த இரண்டு நாட்கள் குடும்பத்தைப் பிரிந்து கவலை இருந்தது தானே!

 

அவள் காதருகில் குனிந்த சித்தார்த்தோ “துவா என்ன அடுத்த ரவுண்டா? நீ அழுதா உன் ரெண்டு அண்ணாவும், நான் உன்ன கொடுமப் படுத்துறேன்னு அருவாளோட வந்துடப் போறாங்க பாரு. அவங்க வேற ஆறடில இருக்காங்க உன் புருஷனக் காப்பத்துமா?” என்றான் அவளை இலகுவாக்கும் பொருட்டு,

 

அவன் பேச்சில் மெல்ல புன்னகைத்தவளோ “பெரியண்ணா உங்க ஃபிரண்ட்டு தானே, அப்பறம் எதுக்கு பயம்?” என்று கேட்க,

 

‘எதுக்கு பயமா? ஃபிரண்ட்டா இருக்கிறதுதானே பயமே! ஏற்கனவே என் மேல கொலை காண்டுல இருக்கான்’ என்று மனதில் எண்ணிக்கொண்டவனோ,

 

“யாருக்கு பயம்? சும்மா தமாசு. வேணும்னா இப்போ வரச் சொல்லேன் உன் நொண்ணன. யாருகிட்ட” என்றான் கெத்தை விடாமல்…

 

அந்த நேரம் சரியாய் அவன் முன்னே நின்ற தீரன் குரலைச் செரும, பதறிய சித்தார்த்தோ தீரனைப் பார்த்து “சாம்பார் வேணும்” என்று உளறி வைக்க, துவாரகாவோ கணவன் செயலில் சிரித்துவிட்டாள்.

 

முன்னே நின்றிருந்த தீரனுக்கு அவன் பேசியது கேட்டதில் மெல்லிய புன்னகை. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

 

தங்கையின் தலையில் கைவைத்து ஆறுதலாய்த் தடவியவனோ “என்ன துவா மாப்பிள்ளை ரொம்ப ஆசைப்படுறாரு போல, கேட்டதக் கொடுத்துடுவோமா?” என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டான்.

 

அவளோ புன்னகையுடன் ‘ஆம்’ என்பதாய் தலையசைக்க, அங்கே நின்றிருந்த இளம் வட்டாரங்களிடையே கூச்சல் பெறுகியது. இன்பனோ பேச வார்த்தை வராமல் தங்கையையே பார்த்திருந்தான்.

 

துவாரகா, பெரியவன் தீரனை விட இன்பனுடன் தான் அத்தனை ஒட்டுதலுடன் இருப்பாள். தீரனிடம் எப்போதும் அவளுக்கு ஒரு மரியாதையுடன் கூடிய பாசம் இருக்கும். ஆனால் இன்பனிடம் ஒரு தோழனைப் போல் தான் பழகுவாள். அவனும் அப்படியே!

 

இன்று தங்கையைத் தம்பதி சகிதமாய் பார்த்ததில் கண்கள் கலங்கிவிட்டது அவனுக்கு…

 

சற்று தொலைவில் நின்றிருக்கும் அவனைப் பார்த்த துவாரகா அவனை அருகில் அழைக்க, புன்னகையுடன் அவளை நெருங்கினான்.

 

“என்னடா அண்ணா சோக கீதமா? நான் போனா ஆழமாட்டேன்னு சொன்ன?” என்று கேலியாய் கேட்டவளுக்கும் கண் கலங்கவே செய்தது.

 

“ஆச தான் உனக்கு, நீ போறன்னு ஆனந்தக் கண்ணீர் குரங்கே” என்று அவள் தலையில் கொட்ட, தலையைத் தடவியவளோ,

 

“பாருங்க பெரியண்ணா” என்று தீரனிடம் செல்லம் கொஞ்சினாள்.

 

அவன் அடித்தது எங்கே வலித்தது அவளுக்கு???

 

அது புரிந்த தீரனும் இன்பனின் முதுகில் ஒரு அடி வைக்க, அது போதாதென்று அவனுக்குக் கொடிபிடித்து மலர்விழியும் சிவரஞ்சினியும் மேலும் இரண்டு அடி வைக்க, துவாரகாவின் முகத்தில் புன்னகை விரிந்தது.

 

“தீராண்ணா பாருங்க இவள, நான் அடி வாங்கவும் சிரிக்கிறா?” என்று இன்பன் சொல்ல, தீரனுக்கு அவன் சிறுபராய நினைவுகள் தான். எப்போதும் அவர்கள் சண்டையைத் தீர்த்து வைப்பது அவன் ஆகிற்றே!

 

அவனுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தான். அந்த வீடு வாரிசுகள் மூவரும் நெகிழ்ந்து தான் போயிடுந்தனர். மலர்விழி சிவரஞ்சினி இருவருக்கும் அந்த நாட்களின் நினைவுகள் பெரிதாக இல்லை என்றாலும் அவர்களாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

 

அந்தக் கட்சியைப் பார்த்த பெரியவர்கள் மனதிலும் அத்தனை மகிழ்ச்சி. பிள்ளைகளின் மகிழ்வு தானே அவர்களின் மனநிறைவு.

 

 

இதோ விருந்து முடிந்து மணமக்கள் ஜமீன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட, பட்டாசு கொளுத்தி ஊரே அமர்க்களப்பட்டது.

 

வீட்டுக்குச் சென்றதும் தான் தாமதம் வீட்டுக்குப் பெண்கள் இருவரும் சித்தார்த்திடமிருந்து அவனது மனைவியைக் கடன் வாங்கிக்கொள்ள, அவனோ புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தான்.

 

 

 

அந்த நேரம் சரியாக அவன் தொலைபேசி சிணுங்க, அது யாரென்று அறிந்ததில் புன்னகை அவன் முகத்தில்.

 

அழைப்பை உயிர்பித்து காதில் வைத்தவனோ “சொல்லுங்க மிக்கி மவுஸ், இப்போதான் மாமா நெனப்பே வந்திச்சா?” என்று கேட்க, அந்தப்பக்கம் கூறப்பட்ட பதிலில் சிரித்தவன்,

 

“பார்டா கோபமா? பட்டுக்கோ பட்டுக்கோ, நான் வேற உனக்கு ஐஸ்கிரீம் ரெஃபர் பண்ணலாம்னு இருந்தேன். நீ வேற கோபமா இருக்க என்ன பண்றது? சரி விடு கேன்சல் பண்ணிக்கலாம்” என்றான்.

 

நிச்சயம் அந்தப்பக்கம் முகம் எப்படி இருக்கும் என்று இவனுக்குப் பார்க்காமலேயே புரிந்தது.

 

பதில் எதுவும் வராமல் மௌனம் அப்படியே தொடர, “அபி…” என்று அழைத்தான்.

 

“சித்து நான் கேட்டது தருவல்ல” என்று கொஞ்சும் குரல் வந்தது.

 

“அபி, மாமா சொன்னா கேக்கணும்” என்று சற்று தீர்க்கமான குரலில் சொல்ல, அதற்கும் அந்தப் பக்கம் மௌனமே பதிலாய் வந்தது.

 

“அபி” என்று மீண்டும் இவன் அழைக்க,

 

“உன் அபி கோபமா போயாச்சு” என்று இப்போது ஒரு பெண் குரல் கேட்டது.

 

“வாய்ப்பில்லையே, என் அபி என்ன உன்கூடப் பேச விட்டுட்டு போயிட்டானா அதிசயம் தான் போ” என்று சிரித்தான்.

 

“அதான் எனக்கும் புரியல. என்ன ரகசியம் ரெண்டு பேருக்கும். எனக்குத் தெரியாம ஏதாச்சும் பண்ணுறீங்களா?” என்றாள் சந்தேகக் குறலுடன்…

 

“அதான் ரகசியம்னு தெரியுதுல, அது எதுக்கு உனக்கு? அது எங்களுக்குள்ள, நாங்க பேசிப்போம்” என்றவன்,

 

“எப்போ வரீங்க ரெண்டு பேரும். என் கல்யாணத்துக்குக் கூட வரத் தோணலல லேங்குவேஜ் உனக்கு?” என்றான்.

 

அவளோ “எப்படியும் என் காதுக்கு வராமலா இருக்கும், அப்போ பார்த்துக்கிறேன் ரெண்டு பேரையும்” என்றவள்,

 

“நெக்ஸ்ட் மந்த் வறோம்டா சித்து. அதுவும் அபியோட பிடிவாதத்துக்காகவும் உனக்காகவும் தான். நெக்ஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் உங்கூட தான். அபிய சமாளிக்கிற பெரிய பொறுப்பை உனக்கே உனக்குன்னு எழுதித் தரேன் என்ஜாய். பார்க்குறேன் உனக்கு உன் லேங்குவேஜா இல்லை உன் அபியான்னு. ஒரு போருக்குத் தயாரா இருந்துக்கோ சித்து” என்றாள் கேலிப் புன்னகையுடன்…

 

“என் பொண்டாடிக்கு கொஞ்சூண்டு என்னை மிச்சம் வெச்சிட்டு, நீங்க ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கோங்க பக்கீஸ்” என்றவனும் புன்னகையுடன் மேலும் சிலவற்றைப் பேசி அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

அவன் மனதிலோ தீர்க்கமான ஒரு முடிவு இருந்தது. செய்து கொடுத்த சத்தியம் அவனைத் தேக்கி இருந்தாலும், இந்த முறை அதற்கும் ஒரு தீர்வைக் கண்டு வைத்திருந்தான்.

 

அவன் நினைப்பது போல் நடக்கக் காலம் வழிவிடுமா????

 

 

ஈர்க்கும்…

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்