
அத்தியாயம் – 25.
அத்தனை நேரம் மௌனமாக கருணா நித்யாவின் பேச்சு வார்தைகளுக்கிடையில் இடைப்புகாமல் அவர்களே பேசட்டும் என கரங்களை கட்டிக் கொண்டு நின்ற ரிஷி, கருணாவின் வார்த்தைகளால் மனைவி கதறி கொண்டிருப்பதை பார்க்க முடியாமல் அவளை தாங்கி பிடித்தான்.. ‘அழாத’ என்று எந்த ஒரு வார்த்தையையும் வெளியிடவில்லை, தான் கூறினாலும் அவளது அழுகை அவ்வளவு சீக்கிரம் குறையாது என்பது தெரியும், அழவிட்டான், அவளே அழுகையை நிறுத்தும் வரை அழ விட்டான் ஆதரவாக அவளது சிகையை கோதி கொடுத்து,…..
நொடிகள் கடந்தது, நிமிடங்கள் கடந்தது, நித்யா இருக்கும் நிலைமைக்கு அவள் அதிகமாகவும் அழ கூடாது என்பது தாமதமாக புரிய வர,…. வாடிய கொடியாய் தன் மார்பில் தஞ்சம் கொண்டு இன்னமும் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தவளை கரங்களில் அள்ளிக் கொண்டு அறையை நோக்கி நடந்தான், வாசலில் நின்ற பாட்டி தாத்தா இருவரையும் பார்த்து விட்டு தான் சென்றான், அவர்களும் கருணா வந்ததையும் நித்யா கருணா இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளையும் கேட்டு கொண்டு தானே இருந்தார்கள், அவர்களுக்கு முழுதாக என்ன நடக்கிறது என்பது புரியாவிட்டாலும், அவர்களின் பேச்சு வார்த்தைகளை வைத்து என்ன நடந்திருக்கும் என்று கொஞ்சமாய் கணிக்க முடிந்தது, அவர்கள் மனதிற்கு ஏற்பட்ட ஆத்ம திருப்தி என்னவென்றால் நித்யா தன் கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசியது மட்டுமே, நித்யா முதலில் ஒரு நிலைக்கு திரும்பட்டும் பிறகு பேரன் பேத்தியிடம் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாகவே இருந்து விட்டனர்,….
இங்கு அறைக்கு வந்த பிறகும் நித்யா தன் அழுகையை நிறுத்தவில்லை, கணவனின் மார்பில் தலை வைத்து, தன் கண்ணீரால் அவன் சட்டை முழுவதையும் நனைய வைத்திருத்தாள், அவளது முதுகை நீவி விட்டுக் கொண்டிருந்தவன்,… “நித்து,…. போதும், நம்ம பாப்பா பயந்துட போகுது” என்றான், அவளுக்கும் அப்போது தான் தன் குழந்தையின் நியாபகம் வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக விசும்பலுக்கு மாறிய அழுகை, நிமிடங்களில் கேவலுக்கு மாறி மட்டுப்பட்டது,…..
“நித்து,…. உன்னை நான் ரொம்ப கஷ்டபடுத்தறேன் இல்ல” என்றான் மனதில் பாரத்துடன்,…. அவன் சொல் புரியாமல் சிவந்து வீங்கிய கண்களோடு அவனை விட்டு பிரிந்து அவன் முகம் பார்த்தவள்,… “நீங்க எப்போ என்னை கஷ்டப்படுத்தனீங்க மித்து” என்றாள் புரியாதவளாய்,…
“எனக்காக தானே நீ கருணா கூட போகல, என்னால தானே அவன் உன்னை தவறா புரிஞ்சிக்கிட்டான், உண்மையா நீ எந்த தப்பும் பண்ணலனு எனக்கு மட்டும் தான் தெரியும், கல்யாணமான பிறகு கூட நீ அவனை பத்தி தான் கவலை பட்ட, நான் தான் உன்மனசை மாத்திவிட்டுட்டேன், என்னால தான் நீ இப்போ கஷ்டப்படுற” என்றான் வருத்தமான பார்வையில்,….
மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டவள்,…. “நான் உங்க கூட உங்க மனைவியா இணைந்த பிறகும் கருணாவை பத்தின கவலை இருக்க தான் செஞ்சது, நீங்க என் மனசை மாத்தல, நானா தான் உங்க அன்பையும் காதலயும் புரிஞ்சிக்கிட்டு உங்க மனைவியா உங்க கூட வாழ ஆரம்பிச்சேன், ஆமா நான் உங்களுக்காக தான் கருணா கூட போகல, உங்களை பிரிஞ்சு என்னால இருக்க முடியாதுன்னு தான் நான் போகல, உங்களை எப்போ விரும்ப ஆரம்பிச்சனோ அப்போவே என் உயிரோட உயிரா நீங்க கலந்துட்டீங்க, உங்களை விட்டு பிரிஞ்சு போனா கண்டிப்பா நான் உயிரோட இருக்க மாட்டேன், இப்போ என்னோட கவலையெல்லாம் கருணாவை நோகடிச்சிட்டேனோங்கிறது மட்டும் தான், அவன்கூட போகலன்னு நான் வருத்த படல, அவனை கண்கலங்க வச்சு அவன் மனசை சுக்குநூறாகிட்டேனோன்னு தான் அழுகை வருது, அவன் என்னை புரிஞ்சிக்கிட்டா கூட என் மனசு கொஞ்சம் நிம்மதியாகும், ஆனா அவன் நான் துரோகம் பண்ணிட்டதா நினைக்கிறான், நான் துரோகம் பண்ணல, இதை நான் அவனுக்கு எப்படி புரிய வைக்க போறேன்னு தெரியல” என்றாள் இதயம் வலி கொடுக்க,…
“அவன் புரிஞ்சிக்க மாட்டான், அவன் உன்னை அவன் கூட வச்சுக்கணும்னு எதிர்பார்க்கிறான், நீ அவன் பக்கத்துல இருந்து அவனுக்கு அன்பை வாரி வழங்கணும் நினைக்கிறான், நீ அவனோட போனா மட்டும் தான் அவனுக்கு உன் மேல உள்ள கோபம் வெறுப்பு எல்லாம் மறையும்” நிதர்சனத்தை எடுத்து கூறியவன்…. “நித்து,… நான், நான் உன்கிட்ட நிறைய விஷயத்தை மறைச்சுட்டேன்” எதற்கும் தடுமாறாதவன் இதை சொல்லும் போது தயங்கினான் தடுமாறினான்,…
அவளோ “என்ன” அவன் மார்பில் தஞ்சம் கொண்டிருந்தபடியே, வெகு இயல்பாக கேட்டாள்,….
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே கருணாவை பத்தி எனக்கு தெரியும், நீ அவனால கடத்தப்பட்டதுல இருந்து அவனோட போக ஆசை படுறங்கிறது வரைக்கும் அனைத்தும் தெரியும், தெரிஞ்சு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என ஆரம்பித்தவன், அவளுக்கு தெரியாத சிலஉண்மைகளை பற்றி கூற தொடங்கினான்,…
“சின்ன வயசிலிருந்தே நானும் வருணேஷும் நண்பர்கள்னு உனக்கு தெரியும், பள்ளி படிப்பை ஒன்னா முடித்த நாங்க கல்லூரி படிப்பை வேற வேற காலேஜ்ல படிச்சோம், நானும் அவனும் வேற வேற க்ரூப் எடுத்து படிச்சதால எங்க காலேஜ் லைஃப்ல ஒன்னா இருக்க முடியல, ஆனாலும் நாள் தவறாம பேசிக்குவோம், படிப்பு, ட்ரைனிங் எல்லாம் முடிஞ்சு நான் டியூட்டில சேர்ந்தேன், வருணேஷும் அவனுக்கு வேலை கிடைத்த விஷயத்தை சந்தோசமா ஷேர் பண்ணான், நாங்க ரெண்டு பேரும் வேலையில பிஸியாகிட்டதால அவ்ளோவா போன்ல கூட டச்சிங்ல இல்ல, அந்த சமயத்துல தான் வருணேஷ் எனக்கு கால் பணனான், அவன் தங்கச்சியான உன்னை நைட்ல இருந்து காணோம்னு அழுகவே செஞ்சிட்டான், அவனை அமைதியா இருக்க சொன்னேன், என்ன நடந்ததுன்னு பொறுமையா விசாரிச்சேன், ‘பிரண்ட்ஸோட வெளிய போனவ திரும்பி வரல’னு சொன்னான், அவன் ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்லைன்ட் கொடுத்திருக்கேன்னு சொன்னான், அவனுக்கு ஆறுதலா சில வார்த்தை பேசிட்டு நேரா அவனை பார்க்க போயிட்டேன், அத்தை அதான் உன் அம்மா அழுது வீங்கிய முகமா இருந்தாங்க உன்னை காணோம்னு, என் நண்பனை எதற்கும் கலங்கி பார்க்காத நான் அன்னைக்கு பார்த்தேன், என் தங்கச்சியை எப்படியாச்சும் கண்டு பிடிச்சு கொடுடா னு என்னை கட்டி பிடிச்சு அழுதான், அவன் கம்ப்லைண்ட் கொடுத்திருந்த ஸ்டேஷன்ல போய் விசாரிச்சேன், உன்னை பத்தி எந்த தகவலும் கிடைக்கலனு சொன்னாங்க, அவங்க சரிப்பட்டு வரமாட்டாங்கன்னு என் நண்பனுக்காக நானே இதுல இறங்குனேன், வருணேஷ் கிட்ட உன் ஃபோட்டோ கேட்டேன், கொடுத்தான், அப்போ தான் உன்னை முதல் முறையா பார்த்தேன், பார்த்ததும் பிடிச்சு போச்சுனுலாம் சொல்ல மாட்டேன், ஆனா ஏதோ ஒன்னு மனசை நெருடுச்சு, உன்னை எப்பாடுபட்டாவது கண்டுபிடிச்சு பத்திரமா மீட்கணும்னு தோணுச்சு, விசாரனையில இறங்குனேன், ஒரு சின்ன க்ளூ கூட இல்லாம உன்னை கண்டு பிடிக்கிறது ரொம்ப சேலஞ்ச்சிங்கா இருந்தது, அப்போ தான் நீ எடுத்துட்டு போன வருணேஷோட பைக் ஓரிடத்துல நிற்கிறதா தகவல் வந்தது, அவ்விடத்தை சுற்றியுள்ள சிசிடிவியை ஆராய்ந்து செக் பண்ணேன், அப்போ தான் உன்னை உயிர்ப்போட பார்த்தேன், சின்ன குழந்தை மாதிரி பஞ்சுமிட்டாய் சாப்பிட்டு இருந்த, நீ அதை சாப்பிடுற விதம் எனக்கு பிடிச்சிருந்துச்சு, சிரிப்பு வந்தது, மனசு கொஞ்சமா சலனபட்டது, அந்த சிசிடிவில தெளிவா பதிந்திருந்தது உன்னை யாரோ கருப்பு நிற ஆம்னி வேன்ல இழுத்து போட்டுட்டு போனத, மனசு ஒரு மாதிரி பதறுச்சு, நெருக்கமானவங்களுக்கு பதறுற மாதிரி பதறுச்சு, உன்னை கண்டுபிடிக்கணும்னு உத்வேகத்தோட செயல்பட்டேன், எனக்கு கிடைச்ச ஒரே க்ளூ அந்த வண்டி, வண்டி நம்பரை வச்சு விசாரிச்சேன், அந்த வண்டி எந்த ஏரியாவை தாண்டி போயிருக்குனு வழியில உள்ள சிசிடிவியை முழுக்க ஆராய்ந்தேன், ஆனா எதுவும் கண்டுபிடிக்க முடியல, நான் எதிர்பார்த்த மாதிரி அந்த நம்பர் தப்பானதுன்னும் தெரிய வந்தது, கோபம் வந்தது, உன் போட்டோவை தான் பார்ப்பேன், என்னமோ உன் முகத்தை பார்த்ததும் கோபம் தணிஞ்ச மாதிரி இருக்கும், ஊர்ல இருக்க அனைத்து கிட்ணாப்பர்ஸையும் அடித்து விசாரித்தும் ஒன்னும் பிடிபடல, பணத்துக்காக உன்னை கிட்னாப் பண்ணலன்னு அவனுங்க போன் பண்ணி பணம் கேட்காத போதே புரிஞ்சிகிட்டேன், உன்னை கடத்தியதன் நோக்கம் என்னனு தெரியாம விசாரணையை கைவிடாம முயற்சி பண்ணிட்டு இருந்தேன், அப்போ தான் ஒரு க்ளூ கிடைச்சது, எம்எல்ஏ பொண்ணை யாரோ கடத்த முயற்சி செய்திருக்காங்க, அந்த பொண்ணு கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிருக்காளாம், அதனால எப்படியோ தன்னை கடத்த வந்தவர்களிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கா, அவளை கடத்த முயன்றது யார்னு விசாரணை பண்ணிட்டு, அந்த பொண்ணுக்கும் பாதுகாப்பு கொடுக்க சொல்லி மேலிடத்திலருந்து ஆர்டர் வந்தது, அந்த பொண்ணை விசாரிக்க போனேன், ரொம்ப தைரியமா பேசினா, நான்கு ஐந்து நபர்கள் முகத்துல மாஸ்க் போட்டிருந்ததாகவும், அதுல ஒருத்தன் முகத்தை மட்டும் பார்த்ததாகவும் சொன்னா, உடனே அவன் முகத்தை வரைய ஏற்பாடு பண்ணேன், ஆர்டிஸ்ட்டை அவ வீட்டுக்கே வர வழைச்சேன், அந்த பொண்ணோட உதவியால அவனோட முகம் எனக்கு தெரிய வந்தது, அவன் பேர்ல இரன்டு கேஸ் இருந்ததால அவனோட முழு விபரமும் உடனே எனக்கு தெரிய வந்தது, அவனை அவனுக்கே தெரியாம கண்காணிக்க சொல்லி இரண்டு கான்ஸ்டபிளை போட்டேன், அவங்க மூலமா எனக்கு ஒரு தகவல் தெரிய வந்தது, ஊரை தாண்டி வடக்கு திசையில இருக்க காட்டு பகுதிக்கு அவன் அடிக்கடி கையில ஏதோ பார்சலோட போறதா சொன்னாங்க, இன்னும் டீப்பா கண்காணிச்சதுல அவன் ஒரு ஹோட்டல்ல மூன்று வேளை நேரத்துக்கும் ரெண்டு பேர் சாப்பிடுற அளவுக்கு சாப்பாடு வாங்கிட்டு போறதா தெரிய வந்தது, அந்த காட்டு பகுதியில தான் ஏதோ ஒரு விஷயம் இருகுன்னு என் டீமை சர்ச் பண்ண விட்டேன், பல மணி நேர தேடலுக்கு பிறகு காட்டுப்பகுதிக்கு நடுவுல ஒரு வீடு இருக்கிறதை என்கிட்ட தெரிய படுத்தினாங்க, அங்க தான் நீ இருப்பன்னு என் உள்ளுணர்வு சொல்லுச்சு, வருணேஷ் கிட்ட விஷயத்தை சொன்னேன், என் டீமோட அங்க கிளம்பினேன், அவனும் என்கூட வரதா சொல்லி பிடிவாதம் பண்ணி வந்தான், நான் எதிர்பார்த்த மாதிரி நீ அங்க தான் இருந்த, மனசுக்குள்ள அப்போ ஏற்பட்ட நிம்மதியையும் சந்தோசத்தையும் இப்போதும் என்னால மறக்க முடியாது, நீ வருணேஷ் கிட்ட வரதை பார்த்ததும் கருணா உன்னை தடுக்க வந்தான், அதனால நான் தான் அவன் சோல்டர்ல ஷுட் பண்ணேன், அடுத்து அவன் உன்னை டார்கெட் பண்ணதும் அவன் உன்னை காயப்படுத்த போறான்ங்கிற கோபத்துல இன்னொரு புல்லட்டை அவனோட இன்னொரு சோல்டர்ல இறக்கினேன், அவன் கீழ விழுந்து தலையில காயம் படும்னுலாம் நான் எதிர்பார்க்கல, அந்த நிமிஷம் உன்னை காப்பாத்தனும் அப்டின்றது மட்டும் தான் என் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது, அதிர்ச்சில மயங்கி விழுந்த உன்னை நான் தான் ஹாஸ்ப்பிட்டல் தூக்கிட்டு போனேன், மயக்கம் தெளிஞ்சு கருணாவை பற்றி கேட்டு அப்படி சத்தம் போட்ட அப்போ நானும் அங்கே தான் இருந்தேன், உன்னோட நடவடிக்கை கொஞ்சம் ஷாக்கிங்கா தான் இருந்தது, அடுத்து வந்த நாளும் நீ கருணாவை பத்தியே கேட்டு அழறதா வருணேஷ் என்கிட்ட புலம்பினான், என் தங்கச்சி வாழ்க்கை அவனால நாசமாகிடுமோன்னு பயமா இருகுனு கண்ணீர் விட்டான், எதை பத்தியும் யோசிக்காம நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன், எனக்கு உன்னை பிடிச்சிருந்துச்சி உண்மை தான் ஆனா அது ரெண்டாவது விஷயம், என் நண்பனோட நிம்மதிக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன், இதுல கொஞ்சம் சுயநலமும் இருக்குங்கிறதை நான் மறுக்க மாட்டேன், வருணேஷ் திரும்ப திரும்ப கேட்டான், நான் என் முடிவை உறுதியா சொன்னதும் அவனும் சரின்னு சொல்லிட்டான், அடுத்த ஒரு வாரத்திலேயே நம்ம கல்யாணம் நடந்தது, எனக்கு பிடிச்சு மனபூர்வமா தான் உன் கழுத்துல தாலி கட்டினேன், ஏற்கனவே உன்னை பிடிச்சிருந்தது, கல்யாண நாளின் போது உன் அழகுல மொத்தமா விழுந்துட்டேன், அன்னைக்கு நைட் நீ கருணாவை பத்தி சொல்ல வந்து சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்பட்ட, எனக்கு கடுப்பா தான் இருந்தது, ஆனா உன்கிட்ட கொஞ்சமா கூட என்னால கோப பட முடியல, உன் பக்கத்துல இருக்க ஒவ்வொரு நொடியும் எனக்குள்ள இருக்க அணுக்கள் உன் அருகாமைக்காக ஏங்குச்சு, ரொம்ப கஷ்டப்பட்டு தான் அன்னைக்கு என் உணர்வுகளை அடக்கிகிட்டேன், அடுத்தநாள் வீட்டை சுத்திகாட்டும் போது உணர்ச்சிபெருக்கில் உன்னை முத்தமிட்டேன், நான் எதிர்பார்க்காத ஒன்னு என் முதத்துக்கு நீ கட்டுப்பட்டு போனது, அதே நைட் நீ கருணாவை பத்தி சொல்லும் போது தெரியாத மாதிரி தான் காட்டிக்கிட்டேன், நீ சொன்னதுல நான் ரொம்ப ஹர்ட் ஆன ஒன்னுன்னா நீ கருணாவை லவ் பண்ணுறதா சொன்ன அந்த வார்த்தை, மனசளவுல ரொம்ப உடைஞ்சு போனேன், ஆனா மனசை தளர விடல, ஒரு நாளாவது உன்கூட வாழனும்னு ஆசை, என்பக்க உள்ள நியாயத்தை சொன்னேன், நீயும் யோசிச்ச, அன்னைக்கே நாம கணவன் மனைவியா இணைஞ்சோம், எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது இன்னொருத்தனை காதலிக்கிறேனு சொல்லிட்டு எப்படி என்னோட ஒவ்வொரு தொடுதலையும் ஆழ்ந்து அனுபவிக்கிறானு, அவனை இவ நிச்சயம் காதலிக்கலைன்னு அந்த முதல் கூடலின் போதே தெரிஞ்சிட்டேன், அடுத்த நான் உன் வாய் வழியாகவும் சொன்ன, கருணாவை காதலிக்கல, எங்களுக்குள்ள இருக்கிறது காதலுக்கும் மேலனு, அவனை நீ லவ் பண்ணல அந்த ஒரு விஷயம் எனக்கு ஆத்மதிருப்தியை தந்தது,…
“எனக்கு பிடிச்ச மாதிரி உன்னோட சம்மதத்தோட நம்ம வாழ்க்கை அழகா நகர்ந்தாலும், ஒரு நேரம் அந்த கருணா வந்தா நீ போயிடுவியோனு மனசு பரிதவிச்சு போக தான் செய்யும், அந்த மாதிரி நினைப்பு வரும் போதெல்லாம் உங்கூட ரொம்ப டீப்பா ரிலேஷன் வச்சுப்பேன், அப்படி வச்சுகிறதால என் மனசு லேசாகும் சந்தோசபடும், இதற்கிடையில நான் விசாரிக்க சொன்ன கருணாவை பத்தின அனைத்து தகவலும் என்கிட்ட வந்து சேர்ந்தது, அவன் சின்ன வயசுல பட்ட கஷ்டத்தை தெரிஞ்சிக்கிட்ட போது வருத்தமா இருந்தது, நீ கூட அதை கேட்டு தான் அவனுக்கு அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்திருப்பனு புரிஞ்சது, கருணா நல்லபடியா குணமாகி வரணும்னு பர்சனலா நானே நிறைய தடவை டாக்டர்கிட்ட பேசிருக்கேன், அவனோட ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அவர் எனக்கு அப்டேட் பண்ணிக்கிட்டு இருப்பாரு, கருணா உன்னை வந்து கூப்பிட்டா தாராளமா நீ போலாம்னு உன்னோட சந்தோஷத்துக்காக நான் உனக்கு வாக்குறுதி கொடுத்தது எனக்கு உறுத்திக்கிட்டே இருந்தாலும் சத்தியமா அவன் எழுந்து வர கூடாது, குணமாக கூடாதுனுலாம் நான் நினைக்கவே இல்ல” என்று அவன் முடிக்க, அவளோ அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாக தான் இருந்தாள் அவனது மார்பில் சாய்ந்து கொண்டு,…
“நித்து…. உனக்கு என் மேல கோபம் வருதா, கோபம் வந்தா தாராளமா நீ கோபபடலாம்” அவன் கூற,… “உங்க மேல எதுக்கு நான் கோபபடனும்” என்றவள்,…”இதை பத்தி உங்களுக்கு தெரியும்னு நான் ஏற்கனவே கணிச்சது தான், நீங்க அண்ணாவோட பிரண்ட்னு எப்போ தெரிய வந்ததோ அப்போதே உங்களுக்கு கருணாவை பத்தி தெரியாம இருக்காதுன்னு நான் எதிர்பார்த்தேன், என்கிட்ட சொல்ல வேண்டியதை சொல்லிட்டீங்க, அதுல கோபப்படுறதுக்கு பெருசா ஒன்னும் இல்ல மித்து, எனக்கு நீங்க தான், உங்களுக்கு நான் தான்னு கடவுள் நாம பிறக்கும் போதே முடிச்சு போட்டு வச்சுட்டாரு, அதை யாராலும் மாத்த முடியாது” என்றவள்,…. “நானும் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல மித்து, நாம முதல் முறை கணவன் மனைவியா இணைந்த போதே என் மனசுக்குள்ள வந்துடீங்க, அத நான் காதல்னு உணர சில நாட்கள் தேவை பட்டது, நான் உணர்ந்த போதும் உங்க கிட்ட சொல்லல, காரணம் கருணா வந்த பிறகு அவன் கிட்ட பொறுமையா பேசி புரிய வச்சுட்டு, அப்புறம் உங்க கிட்ட சொல்லலாம்னு நினைச்சு தான் சொல்லாமலே இருந்துட்டேன், இதனால நீங்க ரொம்ப நொந்து போயிட்டீங்க இல்ல மித்து, என்னை மன்னிப்பீங்களா” என்றாள் தலையை மட்டும் தூக்கி அவன் முகத்தை ஏக்கமாக பார்த்தவாறு…..
“நான் அப்போ ஃபீல் பண்ணது உண்மை தான், ஆனா இப்போ நான் அனுபவிசிக்கிட்டு இருக்க சந்தோஷத்துக்கு அளவே இல்லை, ஒரே நாளில் இரட்டிப்பு சந்தோஷம், மனசு அப்படியே சிறக்கில்லாம பறக்குது நித்து” என்றான் பூரிப்புடன்,….
நாட்கள் மெல்ல கடந்த நிலையில் நித்யாவிற்க்கு மசக்கை வாட்டி வதக்கியது, ரிஷி பாதி நேரம் அவளுடனே தான் இருந்தான், பக்கத்தில் ஒரு துணை இல்லாமல் அவளால் எந்த ஒரு சிறு வேலையும் பார்க்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு போனாள், செவ்வந்தி பாட்டி ஒரு பக்கம் அவளது வாந்தி குறைவதற்காக சில பல புளிப்பான ஐட்டங்களை தன் கையாலேயே சமைத்து கொடுத்தார், ரிஷி கருணாவை பற்றி பாட்டி தாத்தாவிடம் மறைக்காமல் கூறிவிட்டான், அவர்களும் நித்யாவின் நிலையை புரிந்து கொண்டனர், பேத்தியை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டனர், செந்தூரம் வாரத்திற்கு ஒரு முறை மகளை பார்க்க வந்துவிடுவார் அவளுக்கு பிடித்த உணவை சமைத்து எடுத்துக் கொண்டு,… வருணேஷ் திவ்யா இருவரும் கூட நேரம் கிடைக்கும் போது வந்து போவதுண்டு…..
கணவன் மற்றும் உறவுகளின் கவனிப்பில் நித்யாவின் ஆறு மாத கர்ப்ப காலமும் நிறைவடைந்தது, மசக்கை முற்றிலுமாய் குறைந்திருந்தது, குழந்தையின் அசைவையும் உணர தொடங்கியிருந்தாள், முதல் முறை மனைவியின் வயிற்றில் கரம் வைத்து தன் மகவின் அசைவை உணர்ந்த அவளது கணவனும் நெகிழ்ந்து போனான், சந்தோஷத்தில் விழிகள் கலங்கி விட்டது, அன்றிலிருந்து தன் குழந்தையுடன் பேசுவதை வழக்கமாக்கி கொண்டான், அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் குழந்தை எதிர்வினை காட்டுவதை உணர்ந்து கணவன் மனைவி இருவரும் அதிசயித்து தான் போயினர், ‘என் பிள்ளை இப்போவே உன்னை விட என்னோட அட்டாச்டு ஆகிடுச்சு’ என சில முறை மனைவியை செல்லமாக கோபிக்கவும் வைப்பான்,….
அன்று நித்யாவின் செக்கப்பிற்காக அவளை மருத்துவமனை அழைத்து சென்றான் ரிஷி, என்ன வேலையாக இருந்தாலும் அதை அனைத்தையும் ஓரம் கட்டி வைத்து விட்டு ஒவ்வொரு செக்கப்பிற்கும் அவன் தான் அழைத்து வருவான், அது போல் தான் அன்றும் வந்திருந்தனர், ஸ்கேனில் தன் மகவை பார்த்து அவ்விடத்திடகிலேயே ஆயிரம் பறக்கும் முத்தகங்களை வழங்கினான், மருத்துவர் தான் கொஞ்சம் சிரித்து விட்டு, அவனது சந்தோசத்தை கண்டு, இன்னும் இன்னும் அவனது குழந்தையின் கை கால்கள், முகம் என அனைத்தையும் ஸூம் செய்து காட்டி அவனை மேலும் சிலிர்க்க வைத்தார், நித்யா ரிஷியின் முகத்தில் தெரிந்த அபரிமிதமான சந்தோசத்தை இமை அகலாமல் பார்த்தாள்,….
அன்றைய செக்கப் முடித்து விட்டு இருவரும் வெளியே வர, தொலைவில் நின்ற கருணாவை நித்யாவின் கண்கள் கண்டு கொண்டது, என் வாழ்க்கை முடியும் வரை உன்னை பார்க்கவே கூடாது என்று அன்று கோபம் கொண்டு போனவனை இன்று தான் பார்க்கிறாள், கருணா கோபம் கொண்டாலும் பரவாயில்லை மீண்டும் அவனை சந்தித்து தன் நிலையை புரிய வைக்க வேண்டும் என அவள் திட்டமிட்டிருந்த நேரம், மசக்கையினால் துவண்டு போய் கிடந்ததால் கருணாவை சந்திக்க முடியாமல் போனது, மூன்று மாத முடிவில் அவள் ஓரளவு நலமான பிறகு கணவனிடம் கருணாவை பார்க்க போவதை பற்றி கூற, அவளது நிலை கருதி அவன் வேண்டாம் என மறுத்து விட்டான்,… கருணாவின் கோபம் நியாயமானது என்றாலும், அவன் கோபத்தால் தன் மனைவியின் மனம் புண்பட்டுவிட கூடாது என்ற எண்ணத்திலேயே அவன் மறுத்து கூறினான்,…. இப்போது அவள் இருக்கும் நிலைக்கு அவளுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளோடு சேர்த்து அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் தானே பாதிக்கும் எனும் நிதர்சனத்தை புரிய வைத்தான், நித்யாவிற்க்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அவன் சொல்லை தட்டாமல் ஏற்றுக் கொண்டாள்,….
கருணாவை கண்டதும், கணவனை தான் பார்த்தாள் தயக்கத்தோடு, அவள் மனதை படித்தவன், போன்று… “போய் பேசு” என அனுப்பி வைத்து விட்டு, காரை எடுத்து வர செல்ல, அவளும் கருணாவை நோக்கி நடந்தாள், உள்ளுக்குள் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும், அவனுக்கு கொஞ்சமாவது தன் நிலையை புரிய வைக்க வேண்டும் எந்த தீர்மானத்தோடு தான் வந்தாள்,…..
நான்கைந்து நபர்கள், அவனுடன் இருக்க, ஜீப் ஒன்றில் சாய்ந்தவாறு போனில் யாருடனோ கோபமாக கத்தி கத்தி பேசிக் கொண்டிருந்தான், அவன் திரும்பி நின்றதால் நித்யாவை கவனிக்கவில்லை, ஆனால் அவன் அருகில் நின்றவர்கள் கவனித்தார்கள், அவளை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தனர், அதில் ஒருவன்…. “இவ தான் அந்த போலீஸ்க்காரன் பொண்டாட்டி” என்றான் முகத்தில் கோபம் படர, அதை கேட்டதும் மற்ற மூவரின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாட அவளை முறைத்தனர்,…
அவர்களின் பார்வை நித்யாவிற்குள் குளிர் எடுத்தாலும், அவள் அவர்களை கண்டு கொள்ளாமல், கருணாவின் பக்கம் பார்வையை திருப்பியவள்,… திக்கி திணறி போராடி ஒருவழியாக அழைத்து விட்டாள் “கருணா” என்று அவனது பெயரை சொல்லி,…
தன்னை யாரோ அழைக்கும் குரலில் திரும்பியவன், எதிரில் நித்யாவை கண்டதும் அவனது முகம் இறுகியது, “போனை வை” என அழைப்பில் இருந்தவனிடம் கர்ஜிக்கும் குரலில் கூறி அணைத்தவன்,…”ஏறுங்கடா” அதே குரலில் கூறிவிட்டு ஜீப்பில் ஏற போன சமயம்,…. “கருணா… கருணா தயவு செஞ்சு நான் சொல்றதை கேளேன்” என்றாள் கெஞ்சல் குரலில்,..
அவனோ அவளது சொல்லை காது கொடுத்து கேட்கவில்லை, ஜீப்பை உயிர்ப்பித்தான், அவளோ கொஞ்சமும் யோசிக்காமல் ஜீப்பின் முன்பு வந்து நின்றவள்,…. “இன்னைக்கு நான் உன்கிட்ட பேசியே ஆகணும், தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு” அவள் கண்ணீர் வழிந்த குரலில் கெஞ்ச,…. “ஏய் இப்போ நகரல, ஏத்திகிட்டு போயிட்டே இருப்பேன்” என்றான்
“நீ என்ன பண்ணாலும் நான் நகர மாட்டேன், நான் உன்கிட்ட பேசணும், என் நிலைமையை நீ புரிஞ்சிக்கணும்” அவள் கெஞ்ச,… “நீ யார் என்கிட்ட பேச, உன் நிலமையை நான் ஏன் புரிஞ்சிக்கணும், என்னை ஆக்ரோஷமாக்காம ஒழுங்கா நகர்ந்துடு” என்று மிரட்ட அவள் அசையாமல் நிற்கவும், கோபம் கொண்டவனோ… “கேட்க மாட்டல்ல, இரு உன்னை” என அவன் ஆக்சிலேட்டரை மிதிக்க, தன் மீது வண்டி ஏற போகிறதோ என பயந்து போனவள்,….”அம்மா” என வயிற்றை பிடித்துக் கொண்டு அலறிவிட, அவளது அலறலில் பயந்து போனவன் வண்டியை அணைத்து விட்டு வேகமாக கீழிறங்கி வந்தான்,… “என்னாச்சு” என்றான் முகத்தில் கலவரம் தெரிய,…
அவளை இடிக்க வேண்டும் என்றெல்லாம் அவன் இப்படி செய்யவில்லை, கொஞ்சம் பயமுறுத்தி பார்த்தால் நகர்ந்து விடுவாள் என்ற எண்ணத்தில் தான் மெதுவாக ஆக்சிலேட்டரை அழுத்தினான், அவளோ வலி எடுத்தது போல் கத்தவும், தன்னால் அவளுக்கு காயம் எதுவும் பட்டுவிட்டதோ என அவன் பயந்த முகத்துடன் வினவ,… “எனக்கு ஒன்னுமில்ல, கொஞ்சம் பயந்துட்டேன்” என்றவளின் மேடிட்ட வயிற்றை அப்போது தான் கவனித்தான்,…. அவனுக்கு அவளது இந்நிலையை கண்டு கோபம் வரவில்லை, ஆனால் இந்த நிலைமையில் இருப்பவளையா பயமுறுத்த நினைத்தோம் என நெஞ்சு பதற தான் செய்தது, இன்னும் கொஞ்சம் அழுத்தமாக ஆக்சிலேட்டரை மிதித்திருந்தால் அவளது வயிற்றில் கண்டிப்பாக அடிப்பட்டிருக்கும் நினைக்கவே உள்ளம் நடுங்கியது,….
“பைத்தியமா உனக்கு, என்ன நிலமையில இருந்துகிட்டு என்ன வேலை பார்த்துட்டு இருக்க” அவளது செயலில் கோபமும் வர கத்தினான் அவளிடம்,…
“நீ என்னை இடிக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, அதனால தான் அப்படி வந்து நின்னேன்” அவளது சொல்லில் மனம் கொஞ்சம் கரைய தான் செய்தது, மறுநிமிடமே அவளால் தான் பட்ட கஷ்டம் வலி எல்லாம் நினைவுக்கு வர முகம் இறுக்கமானது,…
“என்னை கோபபடுத்தாம போயிடு, உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு” அவன் முகத்தை திருப்பிகொண்டு சொல்ல,… அவனின் இவ்வார்தை அவளுக்கு அழுகையை வரவழைத்து விட்டது,… “உன்னை நான் கஷ்டப்படுத்தனும்னு நினைக்கல கருணா, என்னோட நிலமையை கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன், நான்” அவள் விளக்கம் தர முயல,… “போதும் நிறுத்து, நீ எந்த விளக்கமும் தர வேணாம், உன்னை என் கண்ணுல பட கூடாதுன்னுதானே சொல்லிருந்தேன், கோபத்துல உன்னை நான் ஏதாவது செய்றதுகுள்ள ஒழுங்கா ஓடி போயிடு” என்றான்…..
“நீ என்னை கொன்னா கூட பரவால்ல, நான் உன்கிட்ட பேசணும்” அவள் விடாபிடியாய் நிற்க,… அவளை அனல் பார்வை கொண்டு முறைத்தவன், ஜீப்பில் ஏறினான், வண்டியை ரிவர்ஸில் எடுத்து விட்டு புறப்பட போக,… இதை எதிர்பார்க்காதவள்,… “கருணா” என்றவாறு தன் வயிற்றை தூக்கி பிடித்துக் கொண்டு வேக நடையுடன் அவனை பின்தொடர்ந்தவள், சாலையை தாண்டி சென்றுவிட்டவள், தன் பின்னால் வந்த வண்டியையும் கவனிக்க மறந்தாள், ஆனால் கருணா கவனித்து விட்டான், ஓடி வந்ததில் மூச்சு வாங்க நின்றவள், வண்டி வந்ததையும் கவனிக்கவில்லை, கருணா ஓடி வருவதையும் கவனிக்கவில்லை, நிமிடத்தில் அவளை நெருங்கியிருந்தவன் சாலையின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்தவளை கைப்பற்றி சாலையோரத்திற்கு அழைத்து வந்தான் மெல்லமாக….

