
அத்தியாயம் 21
இரவு உணவு முடிந்து மாத்திரைகளையும் உட்கொண்ட பிறகு தன் அருகில் படுத்த வசுந்தராவை தன் கை வளைவுக்கு மெதுவாக இழுத்துக் கொண்ட சஞ்சய்.
“உங்க அம்மாக்கு உன்னைப் பிடிக்காதா.?” என நேரடியாகவே கேட்டிருந்தான்.
“கண்டுபிடிச்சிட்டீங்களா.?” என்றவளின் கேள்விக்கு,
“முதலிலேயே டவுட் இருந்தது. இன்னைக்கு தான் கன்ஃபார்ம் பண்ணேன்.” என்றவனுக்கு மெலிதான புன்னகையை கொடுத்தவள்.தன் பதிலுக்காக அவன் காத்திருப்பதை பார்த்துவிட்டு.
“எங்க அம்மாக்கு, நான் அவங்களையும் அவங்களுடைய மற்ற இரண்டு மகள்களையும் போலக் கலரா, அழகா இல்லைன்னு ரொம்ப வருத்தம். அதுவும் இல்லாம நான் அப்படியே அவங்களுக்கு பிடிக்காத அவங்க மாமியார், அதாவது என் அப்பாவுடைய அம்மா, அவங்க ஜாடை. அதனாலயே அவங்களுக்கு என்னைப் பிடிக்காது.”
“இது என்ன அநியாயமா இருக்கு.? பாட்டியோட ஜாடையில இருக்கிறது உன்னோட தப்பா.?”
“இதைத்தான் எப்பவுமே நான் எங்க அப்பா கிட்ட கேட்பேன்.”
“உங்க அப்பா எதுவும் சொல்லமாட்டாரா.?”
“எனக்காக நிறைய சண்டை பிடிச்சு இருக்காரு. அதுக்கும் சேர்த்து இன்னும் எனக்குத் தான் அடி விழும். அதனால கேட்கிறதையே விட்டுட்டார்.”
“ஹ்ம்ம்.! அப்படி ஒன்னும் நீ கலர் கம்மி இல்ல. அழகான பிஸ்கட் கலர் தான். அதுவும் இல்லாம வெள்ளையா இருக்கிறது தான் அழகுன்னு யார் சொன்னது.? அப்புறம், உன்னை அழகில்லன்னு சொன்ன அவங்க பார்வையில தான் கோளாறு இருக்கு. என் கண்ணுக்கு நீ பேரழகியா தான் தெரியற.” என்றவன் பின்,
“அவங்க எல்லாம் ஒரு கூட்டு. நீயும் உங்க அப்பாவும் தனி அணியா.?” என்றவனின் கேள்விக்கு ஆம் என்பதாகத் தலையசைத்தாள் அவள்.
“அவங்க என்ன உன்னை ஒதுக்கறது. நாம ஒதுக்குவோம் அவங்களை எல்லாம் இனி.” என்றான் அவள் கன்னத்தில் முத்தமிட்ட வாரு.
சிறிய மௌனத்திற்கு பிறகு, ஞாபகம் வந்தவனாக,
“அக்கவுண்டுக்கு இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கேன் செக் பண்ணிக்கோ.” எனக் கூற
“எதுக்கு அவ்ளோ பணம்.?”
“இப்ப நீ மட்டும் தனியா இல்லையே. ஜூனியர் வேற இருக்காங்க. உங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கிறத வாங்கிக்கோ.” என்றவனுக்கு பதில் கூறாமல், அவள் சிந்தனையை ஆக்கிரமித்து இருந்தது அன்னை கேட்டிருந்த பணமே.
“என்னாச்சு.?” என்று கேட்டவனிடம் “ஒன்றுமில்லை.” என்று பதில் கூறியவள் நாளை அன்னை கேட்ட பணத்தை தங்கையின் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட வேண்டும் என முடிவெடுத்தவளாகக் கண்ணயர்ந்தாள்.
அன்று கணவனும் வேலைக்குச் சென்று இருந்தான். மாமனார் மாமியாரும் தங்களின் கிளினிக்கிற்கு சென்றிருந்தார்கள். இவள் எழுந்து கீழே வரும் போதே அனுபமா அனேக வேலைகளை முடித்து இருந்தார். மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மயக்கமும் வாந்தியும் சற்று மட்டுபட்டிருந்தது.
வேலை செய்யும் வேணி அம்மா வந்து மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்க. ஓய்வாகச் சோபாவில் அமர்ந்திருந்தவள் அலைபேசி பார்த்துக்கொண்டிருந்தாள். அந்நேரம் வசுமதியிடமிருந்து அழைப்பு வந்தது. பொதுவாகத் தமக்கை இவளுக்கு அழைப்பதில்லை திருமணம் முடிந்த இந்த ஒரு மாதத்தில் கூட இதுவரை ஒரு முறை கூட அழைத்து நலம் விசாரித்ததில்லை. இன்று திடீரென அவளிடமிருந்து அழைப்பு வரவும் யோசனையாக அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு அதற்கு வாழ்த்து கூற அழைக்கிறாளோ என நினைத்தவள் அழைப்பு முடியும் தருவாயில் எடுத்து “ஹலோ.” என்று இருந்தாள்.
“ஹலோ வசந்தரா. எப்படி இருக்க.? ஏன் இவ்வளவு நேரம் போன் எடுக்க.?நீ தூங்கிட்டியோன்னு நெனச்சேன்.”
“இல்ல இல்ல போன் சார்ஜ்ல இருந்தது.”
“ஓஹ்.! சரி, சரி கர்ப்பமா இருக்கியாம் வாழ்த்துக்கள். அம்மா சொன்னாங்க.”
“ம்ம். தேங்க்ஸ்.” என்றாள் மெதுவாக.
“ஹ்ம்ம். நீ கர்ப்பமாயிட்ட. ஆனால் நானு. இப்போ இந்த விஷயம் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா எங்க மாமியார் ஆடும். என்னைக் குறை சொல்லி. ஹ்ம்ம். என்ன செய்றது.? எல்லாம் என் விதி.வசதி, வாய்ப்பு இருந்தா டாக்டர் கிட்ட போய்க் காட்டி ட்ரீட்மென்ட் எடுக்கலாம். எங்க அதுக்கும்தான் இங்க வழி இல்லையே. அப்புறம் அம்மா சொன்னாங்க நீ காசு அனுப்புறேன்னு சொன்னியாமே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அனுப்பிட்டியா.?” என்று கேட்ட பிறகே, அவளுக்கு அது ஞாபகம் வந்தது.
“இல்லை இனிமேதான் அனுப்பனும்.”
“சரி, சரி அப்புறம் தப்பா எடுத்துக்காத. பணம் இருந்தா எனக்கும் அனுப்புறியா. டாக்டர் கிட்ட காட்டணும்னு பார்க்கிறேன்.”
“எவ்… எவ்வளவு வேணும்.” எனக் கேட்டாள் சற்று பயத்துடன்.
“ஒரு பத்தோ, இருபதோ உனக்கு எவ்வளவு முடியுமோ அனுப்பு.”
“பத்தாயிரமா.? எனத் தெளிவுபடுத்திக் கொள்ள மறுபடியும் கேட்க.
“ஆமாம். அது சின்ன அமௌன்ட் தானே.” என்றாள் அவளும்.
அம்மா வேறு கேட்டிருக்க தற்போது இவளும் கேட்டதில் பயந்து வந்தது அவளுக்கு. கணவன் அனுப்பியதில் மொத்தம் நாற்பத்தைந்தாயிரம் இருந்தது. இவளின் வங்கி கணக்கில் ஏற்கனவே ஐந்தாயிரத்து சொச்சம் இருந்தது. அவர்கள் கேட்டபடி அம்மாவிற்கு இருபதாயிரமும் தமக்கைக்கு பத்தாயிரமும் அனுப்பலாமென முடிவு செய்தவள் காத்திருந்தவளுக்கு சரி என்ற பதிலைக் கூறிவிட்டு அலைபேசியை அணைத்தவள் இருவருக்கும் அவர்கள் கேட்டபடி பணத்தை அனுப்பி வைத்தாள். கணவனுக்கு இதைச் சொல்வதா வேண்டாமா என்ற யோசனையுடன்.
அடுத்து வந்த ஒரு வாரமும் வாந்தி, மயக்கம் என மிகவும் சிரமப்பட்டாள் வசுந்தரா. மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டாலும் மசக்கை அவளைப் பாடாய்படுத்தியது. சஞ்சய்க்கு விடுமுறை எடுக்க முடியாததால் அனுபமாவே அவளைப் பார்த்துக் கொண்டார்.
“ஏம்மா மாத்திரை போட்டுக் கூட வாந்தி மயக்கம் சரியாகல.?”என்று கேட்ட மகனிடம்
“சில பேருக்கு அப்படித்தான். மாத்திரை மருந்து எடுத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது.
உன் புள்ள அப்படி தொல்லை படுத்துது அவளை.” என்று சிரித்தவாறு கூற அவனும் மருத்துவரான அம்மா சொல்வதை ஏற்றுக்கொண்டான்.
இப்படியாக அவளின் கர்ப்ப நாட்கள் சிறப்பாக நகர்ந்தது. மாதாமாதம் சஞ்சய் அவளுக்குப் பணம் அனுப்புவதும், அன்னைக்கும் தமக்கைக்கும் அவர்கள் கூறும் மருத்துவ செலவு, காலேஜ் பீஸ், தங்கைக்கு நகை சீட்டு என அவர்கள் கேட்பதற்கு எல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள். கணவனிடம் இதைப் பற்றிக் கூற வேண்டும் என நினைக்கும் போதெல்லாம் ஏதேனும் நிகழ்வுகள் நடந்த அவளைச் சொல்லவிடாமல் மறக்க வைத்திருந்தது.
அவளின் பிரசவ காலம் மகிழ்வுடனேயே கழிந்தது. அனைத்து செக்கப்பிற்கும் உடன் சென்று விடுவான் சஞ்சய். சில நேரம் இவர்களுடன் பிரபுவும் சேர்ந்து கொள்வார். கணவன் மற்றும் மாமியாரின் கவனிப்பில் நன்றாகவே பிரசவ காலத்தை அனுபவித்தாள்.
தங்களின் வீட்டிற்கு வரவிருக்கும் புதுவரவை ஆவலாக அனைவருமே எதிர்பார்த்து இருந்தார்கள். மாமியார் வீட்டில் நன்றாகவே பொருந்திக் கொண்டாள் வசுந்தராவும். அன்னை வீட்டில் கிடைக்காத சுதந்திரமும், அன்பும், பாசமும் இங்கு அவளுக்குத் தங்கு தடையின்றி நிறையவே கிடைத்தது. அதோடு கணவனின் அளப்பரியாத காதலும். அந்தக் காதலில் கரைந்து விடுபவள் கணவனிடம் கண்டிப்பாக கூறவேண்டும் என நினைக்கும் விஷயத்தை மட்டும் கூறாமல் மறந்து விடுவாள். அதிகமான வாந்தி மயக்கமும் அவளின் மறதிக்கு துணை போனது.
அவ்வப்போது ரகுபதி வந்து மகளைப் பார்த்துச் செல்வார். பிறந்த வீட்டில் அவளின் நிலையை ஏற்கனவே பட்டும் படாமல் சஞ்சய் தன் பெற்றோர்களிடம் சொல்லி இருக்க. அவர்களும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மருமகளை அவர்களே மகளைப் போலப் பார்த்துக் கொண்டார்கள்.பிரசவ கால சிரமங்களைப் பெரும்பாலும் அனுபமாவே நிவர்த்தி செய்துவிடுவார். இப்படியாக ஒன்பதாவது மாதமும் நெருங்கியிருந்தது. ஒரு வாரத்தில் சீமந்தம் செய்வதாக முடிவு செய்து இருந்தார்கள்.
மண்டபம் பார்த்து அதற்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். உணவு செலவைச் சஞ்சய் முழுவதுமாக ஏற்றிருந்தான். மற்ற செலவுகளைத் தந்தை பார்த்துக் கொண்டார். மனைவிக்கும் அவனே வெளிர் ரோஜா நிறத்தில் காஞ்சிபுரம் பட்டு எடுத்து வந்து கொடுத்து அவளைச் சர்ப்ரைஸ் செய்திருந்தான். அதன் நிறமும் டிசைனும் அவ்வளவு பிடித்திருந்தது வசுந்தராவிற்கு.
இப்படியாக அனைத்தும் சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது.
அன்று காலையில் எழுந்து வேலைக்குக் கிளம்பி கொண்டிருந்தான் சஞ்சய். தாயும் தந்தையும் ஒரு மெடிக்கல் கேம்பிற்கு விரைவாகவே சென்று இருந்தார்கள். ஒன்பது மாத சிசுவை தாங்கிக் கொண்டு கணவனுக்கு வேண்டியதை செய்துகொண்டிருந்தாள் வசுந்தரா. காலை உணவிற்கு அமர்ந்தவன் மும்முரமாக அலைபேசியில் ஏதோ செய்துகொண்டிருந்தான். இடை இடையில் “ப்ச்.” என்ற சலிப்பு வேறு.
ஒன்றும் புரியாமல் காலை உணவை டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்தவள் கணவனின் சுருங்கிய முகத்தைப் பார்த்தபடி
“என்ன ஆச்சு.?” எனக் கேட்க.
“உன் போன் எங்க.?”என்றான் பதிலுக்கு.
“அதோ, அங்க தான் இருக்கு.” என அவள் கண் ஜாடை காட்ட, அவன் இடது கையின் அருகிலேயே இருந்தது அவளின் அலைபேசி.
“இன்னைக்கு கேட்டரிங் ஆளுங்களுக்கு பணம் அனுப்பனும். என்னன்னு தெரியல என்னோட அக்கவுண்ட்ல இருந்து பணமே போக மாட்டேங்குது. அம்மா, அப்பா இருந்தாலாவது அவங்க அக்கவுண்ட்ல இருந்து அனுப்ப சொல்லலாம். அதுதான், நான் உனக்கு அனுப்புன பணம் உன்னுடைய அக்கவுண்ட்ல அப்படியே தானே இருக்கு. எனக்குத் தெரிஞ்சு நீ இதுவரைக்கும் எதுவுமே அதிலிருந்து செலவு பண்ணலன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு அதிலிருந்து அவங்களுக்கு பணம் அனுப்பிடலாம். அதுக்கப்புறம் நான் உன்னோட அக்கவுண்டுக்கு பணத்தை மறுபடியும் டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்.” என்று கூறியபடியே அவள் அக்கவுண்டில் உள்ளே சென்று பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதுவரை என்னவோ எனக் கேட்டுக் கொண்டிருந்தவள் பணம் என்று கூறிய உடனே, வயிற்றிலிருந்து பயப்பந்து அவள் வாய் வழியாக வெளியே வந்துவிடும் போல் இருந்தது. இதயத்துடிப்பும் வேக வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. பயத்தில் கை, கால்கள் சில்லிட தொடங்கின. அவனிடம் கூற வேண்டும் என நினைத்திருந்த ஒவ்வொரு முறையும் வேறு, வேறு வேலைகளாலும் உடல் உபாதைகளாலும் மறந்து விட்டிருந்ததை தற்போது நினைத்துத் தன்னையே நொந்து கொண்டாள்.
அக்கவுண்ட்டை பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சி. தன் அருகில் நின்றிருந்தவளை ஏறிட்டு அதிர்ச்சி விலகாமல் பார்த்தான். அவனின் அருகே நின்று கொண்டிருந்தவள் தனக்கு முன்னால் இருந்த நாற்காலியை அழுந்தப் பற்றிக் கொண்டிருக்க. அவள் விரல்கள் நடுங்கிக் கொண்டிருப்பது அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது. முகத்திலும் வேர்வை துளிகள் அரும்பி விட்டிருந்தன.அவளின் அதீத பயத்தினால் வயிற்றினுள் இருந்த குழந்தையும் வேகமாகச் சுற்றி சுழன்றது. அவள் வயிற்றின் அசைவின் மூலம் அது, அவன் கண்களுக்குத் தப்பாமல் தெரிந்தது.
பெருமூச்செறிந்தவன் தன்னை ஒரு நிலை படுத்திக் கொண்டு தன் அருகே நின்றிருந்தவர்களின் கையைப் பற்றி அருகில் இருந்த நாற்காலியில் அமரச் செய்தவன் அவளுக்குத் தண்ணீரை குடிக்க கொடுத்தான். நடுங்கும் விரல்களோடு வாங்கி குடித்தவள் பயத்துடன் அவனைப் பார்க்க. இப்பொழுது விழுந்து விடுவேன் எனக் கண்ணீரும் அவள் கண்களில் நடுங்கிக் கொண்டிருந்தது.
“என்ன ஆச்சு.? எங்க போச்சு அவ்வளவு பணமும்.?” என்று சற்று தன்மையாகவே கேட்டான். அவனையே பயப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எப்படி கூறுவது என்பது தெரியாமல் மௌனமாகத் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“இதுவரைக்கும் நான் உனக்கு ரெண்டு லட்சத்து இருவதாயிரம் ரூபாய் அனுப்பி இருக்கேன். அதிகபட்சம் அம்பதாயிரம் ரூபாய் நீ செலவு பண்ணி இருந்தாலும் ஒன்றரை லட்சம் ரூபாய் அக்கவுண்ட்ல இருக்கணும். ஆனா இதுல வெறும் நாற்பதாயிரம் ரூபாய் தான் இருக்கு. மிச்ச பணம் எல்லாம் எங்கே.? என்ன பண்ணின.?” என்று கோபத்தை அடக்கிய அமைதியான குரலில் கேட்க. அந்தக் குரலே அவளுக்கு மேலும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த ஒன்பது மாத கால வாழ்க்கையில் தன்னிடம் அவள் ஒன்றை மறைத்திருப்பது அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. அவள் இலகுவாகப் பழகும் விதத்தில் தான் அவளிடம் நடந்து கொள்ளவில்லையோ என்ற யோசனையுடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் அமைதியும் இவ்வளவு பெரிய விஷயத்தைத் தன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு வராமல் இருந்ததை நினைத்துக் கடும் கோபம் ஏற்பட,
“உன்ன தான் கேட்கிறேன். சொல்லு.” என்றான் கோபத்துடன் குரல் உயர்த்தி.
இந்த ஒன்பது மாத கால வாழ்க்கையில் காதலையும் பாசத்தையும் மட்டுமே காட்டிய கணவன் முதல் முறையாக அவனின் கோப முகத்தைக் காட்ட, அதில் அதிர்ந்து பயந்தவளுக்கு இப்படி நடப்பதற்கு தானே காரணம் என்பதும் புரிய ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த கண்ணீர் கண்களைத் தாண்டி வழிந்து சென்றது.
பயத்துடன் அவனைப் பார்த்தவள் திக்கி திணறியபடி
“நான் உங்ககிட்ட சொல்லணும்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா சொல்ல வரும் போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்து சொல்ல முடியாம போயிடுச்சு. அதுக்கப்புறம் எனக்கு அது மறந்தும் போயிடுச்சு. உங்ககிட்ட மறைக்கணும்னு நான் என்னைக்குமே நினைச்சதில்ல” என்றாள் மெதுவான குரலில்.
“மறந்துட்ட. ம்ம். சரிதான். சொல்லு ஒன்னே முக்கால் லட்சத்துக்கு அப்படி என்ன செலவு பண்ண.?”
“நான் எதுவும் செலவு பண்ணல.”
“நீ செலவு பண்ணலன்னா.அப்ப யாரு செலவு பண்ணது.?”
“அம்மாவும், அக்காவும் கேட்டாங்கன்னு கொடுத்துட்டேன்.” “என்னது.” என்றவன். வேகமாக எழுந்து நின்றான் அதிர்வில்.
“அம்மாவும் அக்காவும் கேட்டாங்கன்னு குடுத்துட்டியா.?”
“ஆம்.” என்று தலையசைத்தாள்.
“எதுக்கு கேட்டாங்க.?”
“அம்மா வந்து, வசந்தியோட காலேஜ் பீஸ் கட்றதுக்கும் அவ கல்யாணத்துக்கு நகை சீட்டு கட்டுறதுக்கும் கேட்டாங்க.”
“சரி உங்க அக்கா எதுக்கு கேட்டாங்க.?” எனக் கேட்டான் கோபத்தை அடக்கி,
“அது வந்து கல்யாணம் ஆன உடனே நான் கர்ப்பம் ஆயிட்டேன் இல்ல. ஆனா அவளுக்கு அந்த வரம் இன்னும் கிடைக்கல. அதனால ட்ரீட்மெண்ட் செய்வதற்கு கேட்டா.”
“அவங்க குழந்தை பெத்துக்கறதுக்கு நம்ம வீட்டு பணத்த கேப்பாங்களா.? நீயும் அவங்க கேட்டவுடனே கொடுத்து இருக்க. அதுவும் உன்ன கண்டாலே ஆகாதவங்களுக்கு.அவங்க இப்படி கேக்குறாங்கன்னு எங்கிட்ட சொல்லனும்னு உனக்குத் தோணலையா.?” எனக் கோபமும் ஆதங்கமும் கலந்து கேட்க.
அமைதியாகத் தலைகுனிந்தவளுக்கு கண்ணீர் அவள் விரல்களில் பட்டுத் தெறித்தது.
“இங்க பாரு. என்னைப் பாரு.” என்றவன் அவள் நாடி பிடித்துத் தூக்கி தன்னை பார்க்க வைத்தான். அவளின் அதீத பயம் அவள் உடல் நிலைக்கு நல்லதில்லையெனத் தெரிந்து. அதுவும் வீட்டில் யாரும் இல்லாத இந்நேரத்தில் அது ஆபத்தாகவும் முடியும் என்று நினைத்தவனாக.
அலைபாயும் விழிகளோடு பரிதவிப்புடன் அவனை ஏறிட்டு பார்த்தவளின் பயப்பார்வை அவனை என்னவோ செய்தது.குனிந்து அவள் கண்களில் முத்தமிட்டவன், அவளைப் வயிற்றரோடு அணைத்துக் கொள்ள. அவன் வயிற்றுக்குள்ளேயே போய்விடுவது போல அழுந்த முகத்தைப் புதைத்தவளுக்கு அழுகை பீறிட்டுக் கிளம்பியது. பெரிதான விம்மலுடன், “சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா எப்படியோ சொல்ல முடியாம மறந்துட்டேன். உங்ககிட்ட மறைக்கணும்னு நினைக்கல.” என்றாள் மறுபடியும் தெவிங்கிக் கொண்டே. அவள் தலையை மெதுவாகத் தடவியவனை இறுக அணைத்து,
“சாரி, சாரி.” என முணங்கிக் கொண்டே இருந்தாள் உடல் நடுங்க.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1


