Loading

அத்தியாயம் 1

நேரம் – 11.11…

இடம்  – சுடுகாடு...

சுடுகாடா…!

ஐயோ! பேய் பிசாசு எல்லாம் இருக்கும் நம்மை அடிச்சுடும். அந்தப்பக்கம் போகக் கூடாது… என்று தொன்று தொட்டே சொல்லிவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதுவும் பாவப்பட்ட 90’s kids புள்ளைங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு இந்தமாதிரியான பலவிதமான நம்பிக்கைகள் உண்டு.  இப்படியானக் கதை சொல்லி நம்மை நடுங்க வைக்கும் அவ்விடத்தில் இப்போது சின்னதாய் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த இரவு நேரத்தில் கேட்டுக் கொண்டிருந்த அந்த சப்தம் ஒரேவிதமான தாளத்துடன் தொடர்ச்சியாக எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

என்ன சத்தம் இந்த நேரமென சற்றே திரும்பிப் பார்த்தால்  செந்நீர் எல்லாம் உடலின் உஷ்ணத்தையும் மீறி உறைந்து போய் விடும்.

நிலாவெளிச்சம் ஏதுமின்றி அரவமெல்லாம் அடங்கி அவனியே இருளில் மூழ்கிப் போயிருக்க அந்த இடத்தில் மட்டும் சின்னதாய் விளக்கொன்றும் எரிய அருகிலே கைப்பேசி ஒன்றிருக்க அதனுள்ளிருந்து கசிந்து வந்த பாடல் அந்த நிசப்தத்தினை மெல்லமாய் களைத்துக் கொண்டிருந்தது.

இடுகாட்டில் தினம் பார்க்கும் சாம்பலெல்லாம்

இதயத்தில் ஏறாத மர்மம் என்ன? என்று TL மாகராஜன் ,சத்யன்  குரலில் அந்த பாட்டு காதுக்குள் பாய அதை அசைபோட்டவாறு அவள் வேலை தொடர்ந்துக் கொண்டே தானிருந்தது.

தவறாது தன் வேலையை முடித்தவள் அந்த குழியினுள் இருந்து வெளியே வந்தாள். நெற்றியில் வியர்வை வழிந்து கொண்டிருக்க இடுப்பில் கட்டியிருந்த துண்டினை எடுத்து உதறியவள் முகத்தினை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

நேரம் பன்னிரண்டைத் தாண்டியிருந்த வேளையில் அவள் அனைத்தையும் முடித்து தயார் நிலையில் வைத்திருந்தாள். இது அவளுக்கு பழகிய வேலை. கூடுதலாய் பிடித்த வேலையும் தான்.

அங்கே தன்னை பொருத்திக் கொள்ள முதலில் சிரமப்பட்டவள்தான். அதோடு அங்கே அவள் இருப்பதை பிடிக்காத சில நபர்களால் அவளுக்கு இடைஞ்சலும் இருக்கத்தான் செய்தது. எல்லாவற்றையும் சமாளித்து ஓடிக் கொண்டிருக்கிறாள்.

வெளியே வந்தவளின் செவி சட்டென்று கூர்மை அடைய உடனே அவள் வேகமாய் தன் துண்டினை மீண்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தாள்.

ஆம்புலன்ஸ்ஸின் சத்தம் பொதுவாக ஒருவித படபடப்பைத் தான் நமக்குத் தரும் . ஆனால் அது அவளுக்கு எந்தவித உணர்வினையும் தரவில்லை. அவள் உணர்வெல்லாம் அவளது எட்டு வயதிலேயே மரத்துப் போய்விட்டது. அவள் வேகமாய் அந்த ஆம்புலன்ஸ் அருகே சென்று நிற்க, வண்டியின் கதவு திறந்தது.

அவள் வந்ததும் அவசரமாய் உள்ளேயிருந்து பிணம் இறக்கப்பட்டது. “பார்த்துப் பிடிச்சுக்கோ செல்வி” என்று ஒருவன் சொல்ல “சரிண்ணே” என்று அவள் பிடித்துக் கொண்டாள். நேரம்  நடுநிசியைத் தாண்டியிருக்கும் இவ்வேளையில் இந்த இரவின் மையிருட்டில் ஒரு பிணத்தினை பெண்ணவள் எந்தவித அருவெருப்பும் பயமுமின்றி தூக்குகிறாள் அதுவும் சுடுகாட்டில் இருந்துக் கொண்டே.

பிணத்தினை தூக்கிக் கொண்டு இருவரும் குழியினை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இருவரும் சேர்ந்து குழியில் பிணத்தினை இறக்கியதும் அந்த பிணத்தின் முகத்தினை சரியாக வைத்தவள் மேலே எழும்பி வந்தாள்.

மண்வெட்டியினை எடுத்துக் கொண்டு மண்ணைத் தள்ளிவிட ஆரம்பிக்க அந்த பிணத்தின் முகத்தில் அந்த செம்மண் விழுந்து கோரமாய் அந்த இரவில் காட்சியளிக்க ஆரம்பித்தது.

அதைப் பார்த்தும் கிஞ்சித்தும் பயமென்பதே கொள்ளாது அவள் வேலையினைத் தொடர்ந்துக் கொண்டே இருந்தாள்… மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கையிலே தூரமாய் நாய் ஊளையிடும் ஓசை வேறு கேட்க

அதிலெல்லாம் அவள் கவனம் செல்லவே இல்லை…

அனைத்தையும் செய்து முடித்துவிட்டு மேடான இடத்தினை அவள் கண்கள் பரமதிருப்தியுடன் பார்த்தது. பின்னர் அருகிலிருந்த கிண்ணத்தினை எடுத்து அந்த மேட்டில் ஊற்ற அப்படியே அந்த பால் சிதறி அந்த மண்ணோடு கலந்து வழிந்தோடத் தொடங்கியது.

இறுதியாய் மஞ்சளை அம்மண்ணில் கொட்டியவள் நிமிர்ந்து பார்க்க அங்கிருந்த மற்றொருவன் தன் வேலை முடிந்தது என்பதைப் போல பார்க்க அந்த ஆணும் “செல்வி அப்போ நான் வர்றேன்” என்றான்.

“சரிங்க அண்ணே”

“நீ சாப்பிட்டயா?”

“இனி மேல்தான் அண்ணே”

“அப்போ வா உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறேன்” என்றிட வேண்டாம் என அவள் மறுத்தாள்.

“ஏன் மா லேட்டாகிடுச்சே”

“இல்லைண்ணே நீங்க கிளம்புங்க. என்னைப் பத்திதான் உங்களுக்கே தெரியுமே. நானே போய்க்குவேன். நீங்க போங்க” என்று அவள் சொல்ல அவனும் மற்றொருவனும் வண்டியினை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

இப்போது அந்த சுடுகாட்டினில் எந்தவித சப்தமும் கேட்காது அடங்கிப் போயிருக்க ஏற்கனவே அடங்கிப் போனதெல்லாம் ஆங்காங்கே மேடு மேடாய் காட்சியளிக்க யாராய் இருந்தாலும் இந்த காட்சியினைப் பார்க்கையில் சின்னதாய் தடுமாற்றமும் பயமும் வந்து குமிழியிடும். ஆனால் அவளுக்கோ அது  அந்த மாதிரியான பயத்தினை என்றுமே தந்ததில்லை.

சதாசிவன் சர்வகாலமும் உறைந்திருக்கும் இடமாய் அடையாளப் படுத்தப்படும் இந்த சுடுகாட்டில் இருப்பதற்கு அவள் ஏன் பயப்பட வேண்டும்???..

இருந்தும் அவள் பயம் கொள்கிறாள். இந்த இடம் தாண்டி வெளியே செல்கையில் சந்திக்கும் மோசமான மனிதர்கள் தான் இப்போதெல்லாம் பயத்தினை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவள் சந்தித்த வலிகள் ஏராளம். அதைப்பற்றி கவலைக் கொள்ளாது, கவலைப்பட்டாலும் காட்டிக் கொள்ளாது உறுதியாய் அவள் உடையாதிருக்கிறாள். அந்த விசயத்தினால் தான் இந்நேரத்திலும் அவள் இங்கே தனியாய்… இல்லை இல்லை அவளுக்கிங்கே ஏகப்பட்டோர் துணையிருக்கிறார்கள்.

எனில் அவள் ஆவிகள் உடன் எல்லாம் எல்லாம் பேசுவாளா? … ஆன்மாவும் அவளுக்கு பரீட்சயமா? என்று நாம் கேள்வி கேட்டால் அவளிடமிருந்து எந்தவித பதிலும் வராது…

இன்னும் அந்த மணல்மேட்டினையே அவளது கண்கள் கூர்பார்வை பார்த்துக் கொண்டிருக்க அவளது அசையாத தோற்றம் ஏதோ வெறிகொண்டு பழிவாங்க காத்திருக்கும் ஆவியினை போல இருந்தது.

ஆந்தையின் அலறலும் கோட்டானின் சப்தமும் அங்கே கலந்துக் கட்டி ஒலிக்க , பெரும் சப்தமாய் அவளிடமிருந்து  மூச்சு வெளிப்பட்டது.

சுற்றிலும் தென்படும் காட்சியின் பிண்ணனியில் இவளைப் பார்த்தால் நிச்சயம் பயந்து தலை தெறிக்க ஓடியிருப்பார்கள்.

நிமிடங்கள் கரைய கரைய அவள் மூச்சின் சுருதி குறைந்து ஒலிக்க சட்டென்று ‘செல்வி’ என்ற கதறல் குரல் கேட்டது.

அதில் அவள் தன் காதுகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

திகுதிகுவென பற்றியெறியும் நெருப்போடு நெருப்பாய் ஓர் உருவம் அவள் கண்ணுக்குள் அவள் அனுமதியினையும் கேளாது தோன்றிவிட கண்ணைக் கசக்கிக் கொண்டாள் சிறுபிள்ளையாய்… கதறி அழ வேண்டுமென உள்ளுக்குள் தோன்றினாலும் அழுவது அவளுக்குப் பிடிக்காதென்பதால் அவள் அமைதியாகி அங்கிருந்து நகர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தாள்.

இருந்தும் அவள் மனம் அவளுக்குள் கதறிக் கொண்டுதான் இருந்தது. அதைவிடுத்து அவள் அந்த இடத்தினை சுற்றிலும் தன் பார்வையை சுழற்றினாள்.

ஆங்காங்கே இருந்த மின்விளக்குகள் பரிதாபமாக வெளிச்சத்தினை தந்துக் கொண்டிருக்க அந்த வெளிச்சத்தினால் அந்த சுடலை தனது அடுத்த பரிணாமத்தினைக் காட்டிக் கொண்டிருந்தது.

அதையேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் வயிறு என்னையுங் கொஞ்சம் கவனியென சத்தமிட அவள் தனக்கு சற்று தள்ளியிருத்த மரத்தின் ஓரத்தில் வைக்கப் பட்டிருந்த பையினை எடுத்து வந்தாள்.

மெதுவாக அவள் அதை திறந்து கொண்டு வந்திருந்த உணவை எடுத்து வைத்தாள். இரவு சமைக்க அடுப்பில் பாத்திரம் வைத்தபோதே சுடுகாட்டுக்கு வரச் சொல்லித் தகவல் வந்ததால் அவள் அப்படியே அடுப்பினை அணைத்துவிட்டு வந்துவிட்டாள். இருந்தும் இந்த வேலை முடிந்த பிறகு பயங்கரமாக பசிக்குமென்ற காரணத்துக்காக அவள் அப்படியே வரும் வழியில் கடையில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள்.

ப்ரைடு ரைஸின் மணம் உள்ளே இறங்கிட ஆவலாய் அவள் வாய்க்குள் தள்ளினாள். இதெல்லாம் அவளுக்கு பழக்கம்தான்.

சாப்பிட்டு முடித்தவள் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

சற்றுமுன்னர் அடக்கம் செய்த இடத்தினை பார்த்தாள். ஒன்றுமே அவளுக்குத் தோன்றவில்லை.

ஆடியதெல்லாம் அடங்கியிருக்கும் இடத்தினை அசையாமல் அவளும் பார்த்து வைத்தாள்.

அந்த கல்லறைகளே அவளது கருவறை என்றாகிப் போனது.

மெதுவாக தான் சாய்ந்திருந்த அந்த கல்லறையிலேயே படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள்.

செல்வி அவள் சற்றே வினோதமானவள். வயதின் வனப்பில் இருப்பவள் அங்கிருப்பதும் வினோதம் நான்.

கண்களை மூடிவிட அவளது விழிகளுக்குள் அந்த நெருப்பு உருவம் வந்து போக பட்டென்று கண்களைத் திறந்துக் கொண்டாள். உடலெல்லாம் நடுங்கியது.

அதற்கு மேல் அங்கிருக்க அவளுக்கு விருப்பம் இல்லை. எழுந்தாள். வெளியே இருந்த கேட்டினை சாற்றிவிட்டு அவள் மெல்ல நடக்கத் தொடங்கினாள்.

தற்போது நேரம் நடுநிசியைத் தாண்டியிருந்ததது.

வீட்டிற்குள் விறுவிறுவென்று நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டுவிட்டாள்.

குளித்துவிட்டு வந்தவள் அறையின் ஓரத்தில் இருந்த அந்த அலமாரியைத் திறந்து தனது விருப்பத் தெய்வமான சிவனைப் பார்த்தாள்.

அங்கிருப்பது அவன் மட்டுமே..

சிவனையே வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்திருக்க அவனது விழிகள் அவளது விழியினை ஆறுதலாக வருடியது.

மனதுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்வுகள் அடங்கியிருந்தது.

அவளுக்கான ஆறுதல் அவன் மட்டுமே. சகலத்திலும் உணர்வது அவனை மட்டுமே.

அவனுக்கு முன்னே இருந்த திருநீறை அள்ளி நெற்றியில் பூசியவள் கதவினை மூடிவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

அதீத உடல் உழைப்பு அவளை சோர்வுறச் செய்து உறக்கத்திற்கு அழைத்துச் சென்றிருக்க திடீரென கேட்ட நாயின் ஊளைச் சத்தத்தில் அவளது ஐம்புலனும் விழித்துக் கொண்டது.

விடாது கேட்ட ஊளைச்சத்தம் அவள் உறக்கத்திற்குத் தடையாக இருந்தது. அந்த ஊளைச் சத்தத்தினைத் தொடர்ந்து குடுகுடுப்பையின் சத்தமும் அவளை அடைந்தது.

ஓஹ் இதனால தான் நாய் ஊளை விடுதா..? மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

“ஆபத்து வரப் போகுது..” கர்ண கொடூரமாய் அந்தக் குரல் காதில் விழ மூடிய விழிகள் மீண்டும் திறந்து கொண்டது.

எதையும் கேளாதே என்று எண்ணியவள் காதினை தலையணையால் அழுத்திக் கொண்டு அமைதியாகிவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாய் அவள் தலையணையை எடுக்கையில் அங்கே நிசப்தமே எஞ்சியிருந்தது.

இப்போது அவள் உறக்கத்திற்குச் சென்றிருக்க அவளது வீட்டின் வாயிலில் நின்றிருந்த அந்தக் குடுகுடுப்பைக் காரனது முகம் வெளிறியிருந்தது.

அவன் அந்த வீட்டையே இமைக்காமல் பார்த்தபடியே நின்றிருக்க உள்ளே அவளோ அதை அறியாது நிம்மதியாக உறங்கியிருந்தாள்.

“ஆபத்து வரப் போகுது. நீ என்ன செஞ்சு உன் உசுரைக் காப்பாத்திக்க போறன்னு நினைச்சுப் பார்க்க முடியல. ஆனால் உனக்குத் துணையா ஒருத்தன் வருவான். அவனை மட்டும் எப்பவும் கூடவே வச்சுக்கோ! அவ்வளவுதான் சொல்ல முடியும். நீ கும்பிடுற ஈசன் உன்னைக் காப்பாத்தட்டும்” என்று முணங்கியவாறு அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

கல்லறையிலிருந்து உருவாகிடுமோ கருவறை..?

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்