
தனது உடமைகளை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மானசாவின் கண்களில் அத்தனை வலி அப்பட்டமாக தெரிந்தது. எவன் ஒருவனை நம்பி தன்னையே இழந்து நிற்கும் போது வராத வலி அவள் பிள்ளையை அவன் கலைக்க சொன்ன நிமிடம் வந்தது.
பிள்ளை கருவாகி உருவான நாள் முதல் அவளையும் மீறி அவள் உள்ளம் மகிழ்ச்சி அடைந்திருந்தது. தாய்மை என்பது எவ்வளவு பெரிய வரம். அந்த வரத்தையே அழிக்க சொல்லும் அளவிற்கு அவன் மனம் என்ன கல்லா? நேற்று இரவிலிருந்து அழுதுக்கொண்டே இருந்தவள், இன்று தெளிவான முடிவினை எடுத்திருந்தாள்.
“என் குழந்தையை வளர்க்க என்னால முடியும். உனக்காக என் குழந்தைய நான் அழிக்க மாட்டேன் ரகு.” என்று உறுதியாக கூறியது அவளது வார்த்தைகள்.
தன் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவளை, கேள்வியாக பார்த்தான் கேணி.
“அம்மாடி பரதேவதை.” அவன் அழைக்கவும் அவள் அப்படியே நின்றாள்.
“சாரிமா சட்டுனு அந்த பேரு தான் வருது. ஊருக்கு போற முடிவில தான் இருக்கியா?”
“பரவாயில்லை அண்ணா. ஆமா அண்ணா என்னோட வீட்டுக்கு போக போறேன்.”
“உங்க வீட்டில இருக்கவங்க எதுவும் சொல்ல மாட்டாங்களா?”
“இல்லை அண்ணா. எப்படியும் நாலு அடி அடிப்பாங்க ஆனால் வெறுத்துட மாட்டாங்கனு நம்புறேன். ஏன்னா எந்த அப்பா, அம்மாவும் அவங்க குழந்தைங்களை வெறுக்க மாட்டாங்க.” என்று கூறும்போதே அவளது கரம் மணிவயிற்றை தடவியது.
இங்கு வந்ததிலிருந்து ஓரளவு அவளை பற்றி தெரிந்துக் கொண்ட கேணிக்கும், நேற்று விரக்தியுடன் வீட்டிற்கு வந்து, தனதறையில் முடங்கிக் கொண்ட பெண்ணவளை நினைத்த நொடி பயம் தொற்றிக் கொண்டது. எங்கு தவறான முடிவினை இப்பெண் தேர்ந்தெடுத்துவிடுவாளோ என்று. நல்லவேளையாக அவள் அவ்வாறு எதுவும் செய்திடவில்லை.
அவள் வாழ்வில் நடந்த விசயங்கள் முழுமையாக அவன் அறியாமலிருக்கலாம். ஆனால் நேற்று வீட்டிற்கு வந்து சேர்ந்த பெண்ணவளின் உயிரற்ற பார்வையே எடுத்துரைத்தது அவளது பெருவலியை. அதைக் கண்டதும் கேணிக்கு பயம் தொற்றிக் கொண்டது. நல்லவேளையாக அவள் எதுவும் தவறான முடிவினை எடுத்துக் கொள்ளவில்லை. அவளை காணும்போதே கணவனால் கைவிடப்பட்ட தன் அன்னையின் நினைவே அவனுக்கும் வந்தது. தனக்காக வாழ்ந்த ஜீவனைக் காக்கவே திருடனாகிப் போனான் கேணி. தாயும் இறந்துவிட முழு நேர திருடனாகவே மாறிவிட்டான் அவன். இருந்தும் அவன் ஒரு போதும் ஏழைகளின் வயிற்றில் அடித்ததில்லை.
நேற்று நந்தாவிற்கு அழைத்து இவளை பற்றி கூற நினைத்திருந்தாலும் மதுவின் பிறந்தநாள் என்று கூறியிருந்தவனை தொந்தரவு செய்ய அவன் மனம் விரும்பவில்லை. நந்தாவும் இவள் வரும் முன்னரே அங்கிருந்து கிளம்பியிருந்ததால் அவனுக்கும் அவள் நிலை பற்றி தெரியாமல் போய்விட்டது.
“நந்தா வர வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுமா.”
“இல்லை அண்ணா. ட்ரைன் வந்திடும்.”
“தனியாவே போயிடுவியா, நான் வேணா வரட்டுமா?” அவனது கேள்விக்கு வெறுமையான புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
“என் பாப்பா எனக்கு துணையா இருக்கா அண்ணா. எனக்கு என் பாப்பா மட்டும் போதும்.”
“பொண்ணுனே முடிவு பண்ணிட்டியாடா.”
“ஆமா அண்ணா. எனக்கு தோணுது. ஆனால் அவளை என்ன மாதிரி வளர்க்க மாட்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கா கெட்டவங்களை புரட்டி போடுற அளவுக்கு தைரியமா வளர்ப்பேன்.” என்றவளை பெருமை பொங்க பார்த்தான் கேணி.
“எல்லாம் நல்லதே நடக்கும். என் மருமக புள்ளை பொறந்ததும் சொல்லி அனுப்புமா.”
“கண்டிப்பா அண்ணா.” என்றவள் அங்கிருந்து கிளம்பி விட, அவளை வழியனுப்பி விட்டு வீட்டிற்கு வந்தவனோ அப்போது தான் கவனித்தான் அவளது அலைப்பேசியை.
“மறந்துட்டு போயிடுச்சே?” என்றவன் அவசரமாக எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, அலைப்பேசி சிணுங்கியது. அதில் தெரிந்த ரகுவரனது புகைப்படத்தைக் கண்ட கேணியின் கண்களோ குழப்பத்துடன் விரிந்தது.
“இவன் அவனாச்சே?” என்றவன் அதிர்ந்தபடி நின்றான்.
****
தன் முன் நின்றிருந்தவளை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து காண்கிறாள் மதுவர்ணிகா. அவளையும் மீறி கண்கள் கலங்கி விட்டது. ஆம் அவ்விடம் நிற்பது அவளது தோழி சைத்ரா தான். இத்தனை நாட்களாக அவள் மீது கோபத்திலிருந்தவள் இன்று நேரிலேயே வந்ததும் மதுவின் மனதில் அத்தனை மகிழ்ச்சி தோன்றியது.
“சைத்து” என்றவள் அடுத்த நொடியே அவளை தாவி அணைத்திருந்தாள். கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. தோழியை இறுக அணைத்தவளது முதுகை ஆறுதலாக வருடிவிட்டாள் சைத்ரா.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து தன் தோழியை நேரில் காண்கிறாள். அவள் இறுதியாண்டு படிக்கும் பொழுது தான் மதுவர்ணிகா நந்தாவை கரம் பிடித்தாள். இருந்தும் மது அவளிடம் ஒப்பந்தத் திருமணத்தை பற்றி கைப்பேசியில் தெரிவித்திருக்க , அவளும் எத்தனையோ அறிவுரைகளை கூறிவிட்டாள். அவள் பேச்சை கேட்காமல் திருமணம் புரிந்த தோழியின் மீதுள்ள கோபத்தில் பேசுவதையே விடுத்திருந்தவள், இன்று நேரில் வந்து இன்ப அதிர்ச்சி தரவும், மதுவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
“என்கூட பேச இப்போ தான் மனசு வந்துச்சா?”
“அதுக்கான காரணம் உனக்கு தெரியாது பாரு?”
“அத விடு. மிஸ் யூ சைத்து.” என்று விசும்பலைத் தொடங்க,
“எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க. கன்ட்ரோல் யுவர் செல்ஃப் மேடம்” என்றவள் கூறவும் தன் கண்களை துடைத்தபடி அவளிடமிருந்து பிரிந்து நின்றுக் கொண்டாள் மதுவர்ணிகா.
“என்ன நட்பு என்ன நட்பு. உங்க நட்பு பார்த்து உடம்பே புல்லரிச்சு போச்சு.” என்று உமாபதி கிண்டலாக கூறவும் மது அவனை முறைக்கவும் சரியாக இருந்தது.
“சைத்ரா கூட வந்தாச்சு. மாப்பிள்ளை எங்க வருணிமா?”
“அப்பா, அது அவங்க முக்கியமான விசயமா வெளிய போயிருக்காங்க. வருவாங்க.” என்றவள் சமாளித்துக் கூறினாலும் அவள் பார்வை மட்டும் வாயிற்கதவின் மீதே பதிந்திருந்தது.
பின் அனைவரின் வாழ்த்தையும் பரிசுகளையும் பெற்றுக் கொண்டவள் தன் தோழியை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். அவளை பார்த்த படபடப்புடனே வீட்டை பற்றி மாறிமாறி நலம் விசாரித்துக் கொள்ள, மெத்தையில் அமர்ந்திருந்த சைத்ராவின் அருகில் அமர்ந்தவள் அவளது தோளில் வாகாக சாய்ந்துக் கொண்டாள்.
“மது, நீ நல்லாதானே இருக்க?”
“ம்ம்ம்… நல்லா தானே இருக்கேன் சைத்து.”
“ம்ம்ம்… வாய் வார்த்தைக்கு சொல்ற. கண்ணு மட்டும் எதையோ தேடுது.” என்றவளின் கேள்விக்கு அவளிடம் மௌனமே நீடித்தது.
“ரைட்டு நீ சொல்ல மாட்ட. எங்க மேடம் உங்க கணவர்? பிறந்தநாள் அதுவுமா ஆளையே காணோம். ஒருவேளை அக்ரிமெண்ட் வைஃப்னால எதுக்கு விஷ் பண்ணனும்னு ஓடிட்டாரோ? இருக்கும் இருக்கும், இந்த காலத்துல தாலி கட்டுன பொண்டாட்டி பொறந்தநாளே எவனுக்கும் தெரியறதில்லை.” என்றவளே கேள்வியும் கேட்டு பதிலும் கொடுக்க, மதுவின் முகம் நொடியில் மாறியது.
நேற்று அத்தனை மெனக்கெட்டு அவன் அவளுக்காக வாழ்த்தியிருக்க, அவளோ வார்த்தைகளால் அவனை வதைத்திருந்தாள் அல்லவா? சைத்ராவின் கூற்றில் குற்ற உணர்வு துளிர்த்தது பெண்ணவளுக்கு.
“இல்லை… அப்படி எதுவும் இல்லை. நந்துக்கு வேலை அதுனால தான் வெளியே போயிருக்காரு.”
“பார்ரா என்ன மது அக்ரிமெண்ட் கணவருக்கு சப்போர்ட் எல்லாம் பலமா இருக்கு. என்ன உங்களுக்குள்ள எல்லாம் ஓகே ஆகிடுச்சா? ஒருவேளை இந்த மஞ்சக்கயிறு மேஜிக் நடந்திடுச்சோ?” என்றவளது கைகளில் பட்டென்று அடி வைத்தவள்,
“கனவில கூட அப்படி நடக்காது மேடம். நம்ம வெளியே போலாமா?” அவள் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு மது கூற, அவளும், “போலாமே” என்று உற்சாகத்துடன் தலையசைக்கவும் இருவரும் காரை எடுத்துக் கொண்டு மால் வரை சென்றனர்.
வெகு நாட்களுக்கு பின் இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியே வந்திருக்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள் சைத்ரா. மதுவும் மகிழ்ந்தாலும் கூட நந்தாவை பற்றிய எண்ணம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
‘கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை. போன் கூட பண்ணலை.’ என்றவளின் மனம் ஒரு புறம் அவனைத் திட்டிக்கொண்டே இருந்தது.
இருவரும் உடைகளை வாங்கிக் கொண்டு வெளியே வர, மதுவின் மீது ஒருவன் வேண்டுமென்று இடித்துவிட்டு செல்ல, கோபம் கொண்ட பெண்ணவளோ அவனை அறைந்திருந்தாள். சைத்ராவும் கூட அவளது கோபத்தை கண்டு ஆச்சரியம் கொண்டாள்.
“பிராடு வேணும்னே உரசிட்டு போற? வெட்கமா இல்லை.” என்றவள் கத்தவும் அவனும் அவளை அடிப்பதற்கு கைகளை ஓங்கியிருந்தான்.
“என்னடி திமிரா. என்னயவே அடிக்குற?” என்றவன் கைகளை ஓங்க, சைத்ராவோ தனது வியப்பை மூட்டைக் கட்டிவிட்டு அவனது கைகளை பிடித்து தடுத்திருந்தாள்.
“ஏய், பொறுக்கி நாயே. தப்பு பண்ணிட்டு கையா ஓங்குற?” என்று சைத்ராவும் மிரட்ட,
“சைத்து, இது சரிபட்டு வராது நான் நந்தாக்கு கால் பண்றேன். அவரு வந்தா இவன் கையை உடைச்சி அனுப்புவாரு.” என்றவள் போனை எடுக்க, அதற்குள் சுற்றியும் ஆட்கள் வேறு சேர்ந்துக் கொள்ள பயந்தவன், ஒரே ஓட்டமாக ஓடத் தொடங்கியிருந்தான்.
“டேய், எங்க ஓடுற. இப்போ என் புருசன் வருவாரு வந்து நாலு அடியை வாங்கிட்டு போ.” என்று கத்திக்கொண்டே இவளும் செல்ல,
“ஆளை விடு தாயே.” என்றவனோ ஒரே ஓட்டமாக ஓடி மறைந்திருந்தான்.
“ஓடிட்டான் ராஸ்கல்.” என்று இவள் கோபத்தில் பற்களை கடிக்க, பெண்ணவளின் தோள்பட்டையில் கைவைத்தாள் சைத்ரா.
“நம்ம போகலாம் மச்சி.” என்றவள் மதுவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்திருந்தாலும் வரும் வழி முழுவதும் திட்டிக்கொண்டே வந்த மதுவை ஆச்சர்யம் பொங்க ஏறிட்டது பெண்ணவளின் கண்கள்.
நொடிக்கு ஒரு முறை நந்தாவின் பெயரையே அவள் பேசிக் கொண்டு வர, அமைதியாக வண்டியினை ஓட்டினாள் சைத்ரா. வீட்டிற்கு வந்ததும் வராததுமாக மதுவின் கண்கள் நந்தாவைத் தேட அதையும் கவனித்தாள்.
அறைக்குள் நுழைந்ததும் தண்ணீரை எடுத்து மடமடவென அருந்திக் கொண்டிருந்த மதுவை பார்த்த சைத்ராவோ,
“நீ நந்தாவை லவ் பண்றியா மது?” என்று கேட்ட நொடி பொறையெறியது பெண்ணவளுக்கு.
உடனே பதறிய சைத்ரா, “பார்த்துடி ரிலாக்ஸ்” என்று தலையை தட்டிக்கொடுக்க, பொறையெறியதில் கண்கள் சிவக்க அவளை பார்த்தாள் மதுவர்ணிகா.
“சைத்து, என்ன விளையாட்டு, என்னை பத்தி உனக்கு தெரியாதா?”
“தெரிஞ்சதுனால தான் கேட்டேன். நீ மாறிட்ட மது. மனசுல இல்லாமல் தான் என் புருசன்னு உரிமையா சொன்னியா?”
“அது ஏதோ பாதுகாப்புக்காக சொன்னேன்.”
“ஒரு பொண்ணு அவங்க அப்பா, அப்புறம் சகோதரனுக்கு அடுத்து பாதுகாப்பு எங்க உணருவானா அவன் புருசன் கிட்ட தான். அப்போ அவரை அப்படி நினைச்சதுனால தான அப்படி சொன்ன?”
“பைத்தியம் மாதிரி பேசாத சைத்து. அப்படி எதுவுமே இல்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தா நான் எதுக்கு அவனை ஹர்ட் பண்ண போறேன்?”
“எனக்கு தெரிஞ்ச மதுக்கு யாரையும் காயப்படுத்த தெரியாதே? பாதுகாப்புக்கு உமா பேரை கூட நீ சொல்லியிருக்கலாமே?”
“உனக்கு எப்படி புரிய வைப்பேன்? இப்போ எல்லாம் மாறிடுச்சு. நான் நந்தாவை ரொம்பவே வார்த்தைகளால வதைச்சிருக்கேன். ஒரு நாள் கூட அவன் கிட்ட நான் சந்தோசமா பேசுனது இல்லை. நேத்து நடந்த விசயத்தை சொன்னா உனக்கு எல்லாமே புரியும்.” என்றவள் நேற்று நடந்தவற்றை ஓரளவு கூறியிருக்க சில நிமிடங்கள் அவ்விடத்தில் அமைதியே நிலவியது.
“இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.” என்றவளை பார்த்தவளது உதடுகளோ நமட்டு புன்னகையை உதிர்த்தது.
“நான் சீரியஸா பேசுறேன் சைத்து. நீ சிரிக்குற?”
“எனக்கு சிரிக்கவா? அழவானு தெரியலைடி. ஆனால் ஒன்னு கேட்கிறேன் பதில் சொல்லு?”
“உனக்கு நந்தாவை பிடிக்காது அப்படி தானே?”
“ஆமா. அதுல உனக்கு சந்தேகமே வேண்டாம்.”
“அப்போ நந்தாக்கு என்ன ஆனாலும் கவலைப்பட மாட்ட?”
“அவனுக்கு என்ன ஆனால் எனக்கென்ன?”
“இல்லை நீ சொல்றது வெச்சு பார்க்கும் போது அவரு நேத்தே இங்க இருந்து போயிட்டாரு. இன்னும் ஆளையும் காணோம். ஒருவேளை கவனக்குறைவா அவரு நடந்து போகும் போது எதாவது ஆக்ஸிடென்ட் ஆகியிருந்தா…” என்றவள் கூறும்முன்னரே,
“சைத்து ஸ்டாப்பிட். என்ன பேச்சு இது?” என்றவள் கத்தியிருந்தாள்.
“அவனுக்கு என்ன ஆனாலும் உனக்கு பிரச்சனை இல்லையே அப்புறம் என்ன கத்துற? அப்படி எதாவது நடந்தாலும் உனக்கென்ன?”
“மனசாட்சி இருக்குறதுனால கத்துறேன் சைத்து.”
“அடேங்கப்பா நேத்து வார்த்தைகள்ல அவரை காயப்படுத்தும் போது மேடம் மனசாட்சி புல்லட் ஓட்டிட்டு பறந்து போயிடுச்சா?” என்றவள் கேட்ட நொடி சவுக்கால் அடித்தது போன்றிருக்க பெண்ணவளுக்கோ பதில் அளிக்க இயலாது போனது.
“என்ன மேடம் பேசுங்க?”
“சைத்து நீ பேசுறது ரொம்ப அதிகமா இருக்கு. என் மேல தான் தப்பு. என் பெர்ஸ்னலை உங்கிட்ட சொல்லியிருக்க கூடாது.” என்றவள் வார்த்தைகளை விட சைத்ராவின் முகம் நொடியில் கருத்துப் போனது.
“மது…கடைசியில நான் யாரோனு சொல்லாமல் சொல்லிட்டியா?” என்றவள் வலியுடன் கேட்க, அப்போது தான் தன் மடத்தனத்தை உணர்ந்தாள் மது.
“சைத்து, அப்படி இல்லைடி. நான் எதுவோ சொல்ல போய் எதுவோ வந்திருச்சு. பேச தெரியாம பேசிட்டேன்.”
“இருக்கட்டும் மது. ஒருத்தரை ஆயுதத்தால தாக்குறது விட, வார்த்தைங்குற ஆயுதம் ரொம்ப பவர்ஃபுல். அடிச்சா கூட காயம் ஆறிடும். ஆனால் பேசுற வார்த்தை என்னைக்குமே ஆறாது. பேசும் போது பார்த்து பேசு. ஆனால் என் மனசுக்கு ஒன்னு தோணுது. அதை இப்போ சொல்லக்கூட எனக்கு ரைட்ஸ் இருக்கானு தெரியலை.”
“இப்படி எல்லாம் பேசாத சைத்து. நீ சொல்லுடி நான் தான் தப்பு.”
“நீ உன்னையவே ஏமாத்திட்டு இருக்க மது. ஏதோ ஒரு விசயத்தை மனசுல போட்டு குழப்பி, உனக்கு அமைஞ்ச இந்த அழகான வாழ்க்கையை கெடுத்துக்காத. சரி நான் தூங்க போறேன்.” என்றவள் வாடிய முகத்துடன் அங்கிருந்துச் செல்ல,
“சாரி” என்று மானசீகமாக மன்னிப்பைக் கேட்டுக் கொண்டாள் மதுவர்ணிகா.
சைத்ரா கூறிவிட்டு சென்ற வார்த்தைகளே அவளது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க, அவள் மனமோ வீட்டைவிட்டு சென்ற நந்தாவையே தேடியது.
“நீ எங்க இருக்க நந்தா? உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்றவள் மெத்தையில் படுத்தும் உறக்கம் வர மறுக்க, பால்கனிக்கு சென்றவள், தன் வீட்டு வாயிலில் நின்றிருந்த நந்தாவைக் கண்டு நிம்மதிக் கொள்ள, உடனே விரைந்து கதவுகளை திறந்துக் கொண்டு அவனைத் தேடி வந்தவளோ, அவனை கண்டு அவனருகில் சென்றாள்.
“நந்தா எங்கடா போனா?” அவள் கேட்க அவனோ வலி நிறைந்த பார்வை பார்த்தவன், அவளது கழுத்தை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்திருந்தான்.
“ஏன்டி, இப்படி நடிக்குற? உனக்கு தான் என்ன பிடிக்கலையே? அப்புறம் ஏன் இப்படி பண்ற? போறேன். நான் மொத்தமா போக போறேன்” என்றவனின் சிவந்த பார்வை அவளை அச்சுறுத்த, அடுத்த நொடியே அவள் மீதே சரிந்து விழுந்தவனைக் கண்டு அதிர்ந்து போனாள் பெண்.

