
மாயோன் 20
வர்ஷாவின் பிறந்தநாள் விழா இனிதே முடிவடைந்தது.
‘வீட்டில் உள்ளவர்கள் மட்டும் போதும்’ என்று ஜோதி பிரியப்பட்டதால், வர்ஷாவோ நந்தினி, அதியன் என யாரையும் அவ்விழாவிற்கு அழைக்கவில்லை.
விழா முடிந்ததும் வர்ஷாவை அழைத்து கொண்டு அனைவரும் தங்களது காப்பகத்திற்கு சென்றனர்.
அங்கு உள்ள அனைவருக்கும் உணவு வழங்கி விட்டு அங்கிருந்து கிளம்பும் நேரம், வர்ஷாவோ படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழப் பார்த்தாள். அப்போது அவளை பிடித்து நிறுத்தியது ஒரு பதினைந்து வயது பெண்ணின் கரம்.
” பார்த்து அக்கா ” என்று புன்னகை முகமாக கூறிய அந்த பெண்ணின் கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தாள் வர்ஷா.
” தன்க் யூ ஸ்வீட்டி ” என்று அன்பு பெயர் வைத்த வர்ஷாவை பார்த்து ” நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்கக்கா ” என்று கூறிய பெண்ணின் தலையில் இதமாக முட்டியவள், தனது கைபையிலிருந்த சாக்லேட்டை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தாள்.
அதனை பெற்றுக்கொண்ட அந்த பெண்ணும் அவளை திருப்பி பார்த்தபடியே ” பாய் ” என்று கைகளை ஆட்டி கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அந்த சிறு பெண்ணின் உருவம் தனது கண்ணிலிருந்து மறையும் வரை அந்த திசையில் பார்வையை பதித்தவாறே நின்றிருந்தாள் வர்ஷா.
” என்ன வர்ஷா ரொம்ப நேரமா அங்கேயே பார்த்துட்டு இருக்க ? ” என்று கேட்டபடி விஜய் அவளது தோளில் கைபோட்டு தன்னோடு அணைக்க முயல.. தன்னிச்சையாக அவனது அணைப்பிலிருந்து விலகி நின்றாள்.
அவளது விலகலயும், தயக்கத்தையும் உணர்ந்து ” சாரி ” என்று சொன்ன விஜய் கடினப்பட்டு புன்னகைக்க முயன்றபடி அங்கிருந்து செல்ல பார்க்கவும்,
” சாரி விஜய்.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். என்னால மத்தவங்களை போல இந்த ரிலேஷன்ஷிப்குள்ள உடனே நுழைய முடியல.. நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நெனைக்கிறேன் ”
” ஐ அண்டர்ஸ்டென்ட்.. கல்யாணம் ஆனால் எல்லாம் சரி ஆகிடும் ” என்று மென்மையாக கூறியவன் அங்கிருந்து சென்றான்.
ஏனோ விஜயிடம் அவளால் மருந்துக்கு கூட நெருக்கம் காட்ட முடியவில்லை.
அவன் நெருங்கி வந்தாலே…
அவனை விட்டு விலக சொல்லி மனம் கட்டளையிடுகிறது! அவளும் என்ன தான் செய்ய முடியும்.
அடுத்த நாள்..
” என்ன வர்ஷா நேத்து பர்த் டே எல்லாம் எப்படி இருந்துச்சு ஹேப்பியா? ” என்று நந்தினி கேட்க
” ம்ம்ம் செம்ம ஹேப்பி ”
” ஆனால் எப்படியோ எங்களுக்கு ட்ரீட் வைக்காமல் தப்பிச்சிட்ட ” சரத் சொன்னான்.
” அப்படி எல்லாம் இல்லை.. வாங்க இப்போவே எல்லாரும் வெளியே போவோம் ” என்ற வர்ஷா அவர்களை வெளியே அழைத்து சென்றாள்.
அங்கு வைத்து அதியன் அவளுக்காக வாங்கி வைத்திருந்த டைமெண்ட் செயினை பரிசளித்தான்.
அதனை கண்டு இதழ் பிதுக்கி பெருமிதம் காட்டினாள் நந்தினி.
சரத்தோ அவனது செயலை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
” தன்க்ஸ் அதியன் ” என்ற வர்ஷா அந்த செயினை வாங்கிக்கொண்டாள்.
அதில் வர்ஷா என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. அதில் இறுதியாக வரும் “A” என்ற எழுத்து மட்டும் பெருசாக தெரியும் படி இருந்தது. அதில் உள்ள “A”என்ற எழுத்து அதியனை குறிப்பாக உணர்த்துவது போல அது டிசைன் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அதை எல்லாம் உணரக்கூடிய நிலையில் வர்ஷா இல்லை. ஆனால் நந்தினிக்கு அது புரிந்துவிட அதியனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
” கழுத்தில் போட்டுக்க வர்ஷா.. அதி நீ தானா கிப்ட் பண்ண சோ நீயே போட்டு விடு ” என்று நந்தினி கூற.. வர்ஷா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அதியனுக்கு தான் கை நடுங்க தொடங்கியது.. நடுக்கத்தை மறைத்து கொண்டு வர்ஷாவின் கையில் இருந்த செயினை வாங்கியவன் அவளது கழுத்தில் அதை அணிவிக்க போகவும்.. வர்ஷா தனது முதுகில் படர்ந்திருந்த முடி கற்றையை முன்னால் தூக்கி போட்டு கொண்டாள். நந்தினியோ அங்கு நடப்பதை போனில் யாருக்கும் தெரியாமல் விடியோ எடுக்க தொடங்கினாள்.
செயின் கொக்கியை தடுமாறி மாட்டியவனது விரல்கள் மெல்ல பட்டும் படாமல் அவளது செம்பவள முதுகினை தொட்டு தீண்டி செல்ல.. அதியனுக்கு முகமெல்லம் வியர்க்க தொடங்கியது. ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன்னை ஒருநிலை படுத்த படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான் அதியன்.
மேலும் அவனை சோதிக்கும் விதமாக ” ஹூக் டைட் பண்ணி விட்டுடுங்க அதியன்.. ” என்று நிலைமை அறியாமல் அவனது உணர்வுகளுக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா.
ஹூக் டைட் பண்ணி விட்டவனது நெற்றியில் வழிந்த வியர்வை துளிகள் அவளது கழுத்து வளைவில் பட்டு தெரிந்தது.
நீர் படர்வதை உணர்ந்தவள் பின்னால் திரும்பி அவனை பார்க்க.. அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் ஆடவன் அவனோ பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான்.
அவளது பார்வை தீண்டி செல்ல.. அவனது சுவாசம் தீயாக வெளிவந்தது.
இரவு நந்தினி தான் எடுத்து வைத்த வீடியோவை அதியனுக்கு அனுப்பினாள். அதை இதழோரம் ஒரு வெட்க புன்னகையோடு பார்த்த அதியன், கனவில் வர்ஷாவுடன் வாழ தொடங்கினான்..
அவனது கனவுகளுக்கு அவளே வண்ணமானாள்.
வர்ஷாவின் வீட்டில் அனைவரும் சூழ்ந்திருந்து விக்ரமனை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
” எனக்கு அந்த பொண்ணு மேல லவ் எல்லாம் இல்லைம்மா பிடிச்சி இருக்கு சும்மா பார்க்கிறேன் ” என்று விக்ரமன் கீர்த்தியை பற்றி கூற அனைவரும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். திடீரென டாப்பிக் மாறியது.
” விக்ரமன், படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து இருக்கு போல என்ன முடிவு எடுக்க போற? ” என்று விஜய் கேட்க…
” இப்போதைக்கு முடியாது விஜய், கொஞ்சம் டாக்டர் தொழிலையும் பார்ப்போம். அதுக்கு அப்ரோம் இது எல்லாம் ”
” ஆனால் உனக்கு ஆக்டிங்ல இன்ட்ரஸ்ட் இருக்கு தானே? ஒருவேளை விருப்பம் இல்லாமல் தான் போட்டோ ஷூட் எல்லாம் பண்ணுறியா? ”
” விருப்பம் இல்லாமல் எல்லாம் இல்லைடா, ஆனால் இப்போதைக்கு வேண்டாம்ன்னு தோணுது. பார்ப்போம் நாளைக்கே மனசு மாறினாலும் மாறலாம் ” என்று கூறி அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் விக்ரமன்.
“வரும் வெள்ளி கிழமை எனக்கு கல்யாணம்.. மறக்காமல் ரெண்டு நாளைக்கு முன்னாடியே நீ கன்னியாகுமரிக்கு வந்திடனும் ” என்று வர்ஷாவின் தோழி அவளுக்கு போன் செய்து அழைக்க,
” வாழ்த்துக்கள்டி.. நான் இப்போ மும்பையில் இருக்கேன். அங்க வரமுடியுமான்னு பார்க்குறேன்”
” எந்த காரணமும் சொல்லாத நீ வரணும் அவ்ளோதான். நீ மட்டும் வரலன்னா கண்டிப்பா நான் உன்கிட்ட பேசவே மாட்டேன் ” என்று கூறி அழைப்பை துண்டித்தாள் வர்ஷாவின் தோழி
தனது தோழியின் கோவம் அறிந்த வர்ஷா அவளது திருமணத்திற்கு சென்றே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.
உடனே அர்ஜுன் குடும்பத்திடம் இதை பற்றி கூறினாள்.
அர்ஜுனும், ஜோதியும் ‘ சரி போய்ட்டுவா ‘ என்று கூறிவிட்டனர்.
ஆனால் விக்ரமனுக்கு தான் அவளை தனியாக அனுப்ப மனம் வரவில்லை.
விக்ரமனுக்கும் அவளுடன் செல்ல முடியாத நிலை. அங்கு திருமணம் நடக்கும் அதே வெள்ளிக்கிழமை இங்கு ஒரு முக்கிய அறுவை சிகிச்சை செய்யவேண்டியது இருந்தது.
விஜயுடன் அவளை அனுப்பி வைக்கவும் விக்ரமனுக்கு மனம் வரவில்லை அதற்கு பல காரணம் இருந்தது. பரதனும் போலீஸ் ட்ராயினிங்கில் இருக்கவே என்ன செய்வது என்ற யோசனையில் குழம்பி போனான்.
” விக்ரமா ப்ளீஸ் மறுப்பு சொல்லாத நான் பாதுகாப்பா போய்ட்டு வந்திடுவேன். ஊரில் இருந்து தனியா தானே வந்தேன். ப்ளீஸ் போக விடு ” என்று பிடிவாதமாக நிற்க.. விக்ரமனும் ” சரி ” என்று அனுமதி வழங்கினான்.
அந்த திருமணத்திற்கு கிளம்பும் நாளும் வந்தது. இந்த தகவலை கூறி ஆய்வகத்தில் விடுமுறை பெற்றுக்கொண்டாள் வர்ஷா.
அவளை பார்க்காமல் மூன்று நாள் எப்படி இருப்பது என்று அதியன் மனம் வெதும்பி நின்றான்.
அவனது முகத்தை பார்த்து மனதை அறிந்து கொண்ட நந்தினி ” ஏன் அதியா நீ கூட கன்னியாகுமரிக்கு போகணும், சன்செட் பார்க்கணும் அப்படின்னு சொல்லிட்டு இருந்த தானே? ” என்று கூற..
அவனோ’ நான் இப்போ அப்படி சொன்னேன் ? ‘ என்பது போல அவளை பார்த்து வைத்தான்.
” அப்படியா? ” என்று ஆர்வமாக கேட்ட வர்ஷா ” அப்போ நீங்களும் எங்கூட வாங்க, எனக்கும் அங்கயெல்லாம் சுத்தி பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை வருவீங்களா? ” என்று வர்ஷா கேட்ட போது தான், நந்தினி கேட்டதன் அர்த்தம் புரிந்தது அதியனுக்கு.
” உடனே வரேன்னு சொல்லாத கொஞ்சம் இல்லை வேண்டாம் அப்படி இப்படின்னு சொல்லி ஸீன் போடு ” என்று நந்தினி அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக மெதுவாக முணுமுணுத்தாள்.
ஆனால் அவனுக்கு அவளை கெஞ்ச வைக்க விருப்பம் இல்லாததை போல ” சரி எப்போ கிளம்பலாம் ” என்று கேட்டான்.
அவனது பதிலை கேட்டு நந்தினி அவனை சலிப்பாக பார்க்க.. சரத்தோ ” டேய் மச்சக்காரன்டா நீ ” என்று மெல்ல கூற..
அவனை முறைத்து பார்த்த அதியன் ” அசிங்கமா பேசாதடா நீ நினைக்கிற மாதிரி தப்பா எதுவும் இல்லை ” என்றான்.
பின்னர் பேசிவைத்தது போல அதியன் ஏர்போட்டில் வந்து நிற்க. வர்ஷாவும் சரியான நேரத்திற்கு அங்கு வந்தாள்.
அதியனுடன் செல்வதை பற்றி வர்ஷா அர்ஜுனின் வீட்டில் எதுவும் கூறிக்கொள்ளவில்லை.. அதற்கு காரணம் விஜய்.
இப்போவே ” எங்க போற? யார் கூட போற ?” என்ற கேள்வி அவனிடம் இருந்து அதிகம் வருவதால் தேவையில்லாத குழப்பத்தை தவிர்க்க, இந்த விஷயத்தை கூறாமல் மறைத்து விட்டாள்.
மூன்று மணி நேர விமான பயணம் முடிந்து வந்தவர்கள், வாடகை கார் மூலம் தஞ்சாவூர் நோக்கி பயணம் ஆனார்கள் அதியனும், வர்ஷாவும்.
இங்கிருந்து செல்லும் முன் தன்னுடைய காதலை அவளிடம் கூறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு வந்தான் அதியன்.
கன்னியாகுமரிக்கு வந்த அதியனும், வர்ஷாவும், திருமணம் நடக்கும் இடத்தின் அருகில் ஒரு ஹோட்டலில் தங்க முடிவு செய்தனர்.
இருவருக்கும் தனித்தனி அறையை பதிவு செய்ய அதியன் நினைத்திருக்க, விதியோ ஒரேயொரு அறை மட்டுமே காலியாக இருக்கிறது! என்ற நிலையில் கொண்டு வந்து விட்டது.
பயண களைப்பில் இருந்த வர்ஷாவிற்கு வேறு ஹோட்டல் தேட மனதளவில் கூட தெம்பில்லை” போதும் அதியன் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ” என்றாள்.
” இல்லை வர்ஷா வேற ஹோட்டல் பார்க்கலாம் ”
” அதியன் ப்ளீஸ் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. என் கூட ஒரே ரூம்ல இருக்குறதுல உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா ? ”
” அப்படி எல்லாம் இல்லை வர்ஷா ”
” அப்ரோம் என்ன ? எங்கூட தனியா இருந்தால் நான் ஒன்னும் உங்களை கடிச்சி திண்ணுடமாட்டேன். பயப்படாமா வாங்க ” என்றவள் அறையின் சாவியை கையில் எடுத்து கொண்டு அந்த அறையை நோக்கி சென்றாள்.
‘ உன்னை நினைச்சு பயம் இல்லமா எனக்கு என்னை நினைச்சு தான் பயம் இதை உன்கிட்ட எப்படி சொல்லி புரிய வைக்குறது ‘ என்று தன் மனதோடு புலம்பியவன் அவளை பின் தொடர்ந்தான்.
அறைக்குள் வந்தவள் அப்படியே பொத்தென மெத்தியின் மீது கவிழ்ந்து படுத்து கொண்டாள்.
அவளது செயல் கண்டு அதியனது முகத்தில் புன்னகை அரும்பியது.
மெத்தையில் படுத்தவாறே தனது தலையை மட்டும் அவனை நோக்கி திருப்பியவள் “நான் தூங்க போறேன் ப்ளீஸ் என்னை எழுப்பாதீங்க ரொம்ப டயர்டா இருக்கு ” என்றவள் தூங்க தொடங்கினாள்.
குளித்துவிட்டு வந்தவன் ஆடையை மாற்றி விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, அவள் தூங்குவதை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
தூங்கி எழுந்தவள், இரவு உணவை உண்டு விட்டு மீண்டும் தூக்கத்தை தொடரும் முன் ” இங்கயே படுத்துக்கோங்க ” என்று கூறி மெத்தையில் அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டாள்..
” இல்லை வேண்டாம் ”
” ரொம்ப பண்ணாதீங்க மிஸ்டர் அதியன். அமைதியா வந்து தூங்குங்க இல்லை எனக்கு பயங்கரமா கோவம் வரும் ” என்று அவள் அதட்டி கூறவும் இதழோரம் சிறு புன்னகை துளிர்க்க.. அமைதியாக கட்டிலின் ஓரத்தில் வந்து படுத்துக்கொண்டான்.
தனக்குள் இப்படி ஒரு மாற்றமா? அதுவும் ஒரு பெண்ணிற்காக என்று தன்னுடைய மன மாற்றத்தை எண்ணி வியந்தவனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறக்கம் வந்தது.
கன்னியாகுமரியில் சூரியன் உதயமாவதை அவளுக்கு காண்பிக்க எண்ணி, அடுத்த நாள் காலையில் விரைவாக எழுந்து கொண்டான் அதியன்.
அவளோ சிறிதும் அசையாமல் படுத்துக்கொண்டிருக்க , எப்படி அவளை எழுப்புவது என்று தயங்கியவன் ” வர்ஷா.. வர்ஷா ” என்று மெல்ல அழைக்க .. நல்ல தூக்கம் அவளுக்கு
மெதுவாக அவளது தோளில் தட்டியவன் ” வர்ஷா ” என்று உரக்க அழைக்கவே, உடனே எழுந்துகொண்டாள்.
” என்ன ஆச்சு ? ” என்று தூக்கக்கலக்கத்தில் எழுந்து அமர்ந்தவளது ஆடை விலகி இருக்க.. பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்ட அதியன் ” நான் வெளியே இருக்கேன் நீ குளிச்சிட்டு வெளியேவா ” என்றபடி வெளியே செல்ல அவளும் குளித்து முடித்துவிட்டு அவனை அழைத்தாள்.
முதல் முறையாக அந்த ஏகாந்த நிலையில் சூரியன் மெல்ல உதயமாவதை பார்த்தவளுக்கு மனம் முழுவது சந்தோசம் நிரம்பி இருந்தது.
அந்த விளக்க முடியாத சந்தோஷத்தில் பெண்ணவளின் கரம் அதியனது கரத்தினை அழுத்தமாக பற்றி கொண்டது. நொடியில் திகைத்து அவளது முகம் பார்த்தான் அதியன். ஆனால் அவளது பார்வையோ கடலின் மீது படிந்திருக்க.. மென்மையா புன்னகைத்தபடி அவளது கண்களை ஊடுருவி பார்த்தவன், அந்த சூரிய உதயத்தின் அழகை அவள் கண்களின் வழியே ரசித்துக்கொண்டிருந்தான்.
இயல்பாக திரும்பியவளது பார்வை அவன் மீது படிய.. நொடியில் பார்வையை மாற்றி கொண்டான் அதியன்.
அதியனும், வர்ஷாவும் அடுத்த இரண்டு நாட்களும் அங்குள்ள எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தனர்.
அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும், மீண்டும் பிறவி எடுத்தவன் போன்று உணர்ந்து அனுபவித்தான் அதியன்.
தன்னவள் தன்னுடன் இருந்தால் மட்டும் போதும் வேறெதுவும் தேவை இல்லை என்ற நிலைக்கு வந்தான்.
அதியனிடம் வர்ஷாவுக்கு வேற்றுமை உணர்வு தோன்றவில்லை.. விஜயுடன் திருமண பேச்சு வந்த பிறகும் அவனிடம் பேச கூட தயங்கியவள் இப்போது அதியனுடன் ஊர் விட்டு ஊர் தனியாக வந்திருக்கிறாள்.
அது ஏன் என்று அவளுக்கும் தெரியாது? தெரிந்து கொள்ளவும் அவள் முயற்சிக்கவில்லை. அவனுடன் இருப்பது அவளுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுத்தது. அதற்கும் மேலான ஒரு நம்பிக்கையையும் அவளுக்கு கொடுத்திருந்தான் அதியன் என்றால் மிகையாகாது.
சாலையில் போகும் இருசக்கர வாகனத்தை ஏக்கமாக பார்த்தபடி நடந்து வந்த வர்ஷாவிடம் ” என்ன பார்க்குற ? ” என்று கேட்டான் அதியன்.
“எனக்கு டூ வீலர் ஓட்டனும் அதியன். ஆசையா இருக்கு ”
” உனக்கு ஓட்ட தெரியுமா ? ”
” தெரியாது ” அசடு வழிந்தாள்
” சரி அப்போ பழகிடலாம் வா ” என்று வர்ஷாவை அழைத்து சென்றவன், ஒரு டூவீலரை வாடகைக்கு எடுத்தான்.
” ஓட்டு ” என்று அதியன் வண்டியை காட்டி கூறவும்..
” அய்யோ வேண்டாம். எனக்கு பயமாக இருக்கு. நீங்க ஓட்டுங்க நான் பின்னாடி உட்கார்ந்து வரேன் ”
” ம்ஹும் வாய்ப்பேயில்லை நான் சொல்லி தரேன் உட்காரு. டூ வீலர் ஓட்டணும்னு ஆசைப்பட்ட தானே ? ”
” ஆசைப்பட்டேன் தான்.. ஆனால் பயமா இருக்கு அதியா. ப்ளீஸ் வேண்டாமே ”
” அப்படி என்ன பயம் உனக்கு ? அதான் நான் இருக்கேன்ல்ல.. வா ” என்றவன் வண்டியை பிடித்து கொள்ள , பயத்துடன் முன்னால் வந்தவள் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்துகொண்டாள்.
அவனோ சற்று இடைவெளி விட்டு பின்னால் அமர போகவும் வண்டியை பிடிக்க முடியாமல் தடுமாறியவள் “அதியா… அதியா.. அதியா… ” என்று அலற ஆரம்பித்தாள்.
ஒரு கையில் வண்டியை விழாமல் பிடித்து கொண்டவன், இன்னொரு கையால் அவளை தாங்கி பிடித்தவாறே பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான்.
” பயப்படாதா நான் இருக்கேன். எப்போவும் பயப்பட கூடாது ” என்றவன் அவளது கரத்தின் மீது கரம் பதிக்க.. முதல் முறை அவள் உடலில் ஒரு மெல்லிய தடுமாற்றம் உருவானது. அந்த உணர்வை புரியாது ரசித்தாள்.
அவள் வண்டியை செலுத்தினாளா ?இல்லை அவன் செலுத்தினானா? என்று தெரியாத வண்ணம் அவர்களது வண்டி புறப்பட்டது.
வண்டியை ஓட்டி கொண்டிருந்தது என்னவோ அதியன் தான். ஆனாலும், முன்னால் அமர்ந்திருந்த வர்ஷாவின் நினைப்பு என்னவோ தான் தான் ஓட்டி செல்கிறோம் என்ற பெருமிதத்தில் ” நல்லா ஓட்டுறேன் இல்லை அதியா ? ” என்று புன்னகை பூத்தவளது அலைபாயும் கூந்தல் அவன் முகத்தில் படர… மெல்ல அதனை ஒரு கரம் கொண்டு ஒதுக்கியவன்… அவளை ரசனையுடன் பார்த்தான்.
அவளது சிறு சிறு ஆசைகளையும் நிறைவேற்றி அதில் அவள் அடையும் சந்தோசத்தை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தான். மனதிற்கு நிறைவான மகிழ்ச்சி.
வண்டியை ஓட்டி வந்து ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். கீழே இறங்கிய வர்ஷா அதீத மகிழ்ச்சியில் நொடியும் தாமதிக்காமல் அவனை இறுக அணைத்து கொண்டாள்.
அவளது அணைப்பில் அவன் தான் தடுமாறி போனான். அவளது கன்னம் அவனது மார்பில் அழுத்தமாக பதிய அதியனது இதய துடிப்பு வேகமானது. மூச்சி விட சிரமமாக இருப்பதை போன்று உணர்ந்தவனுக்கு உடல் கொதிக்க தொடங்கியது.
பெண்கள் பின்னால் சுத்தி திரிந்தவன், முதல் முறை ஒரு பெண்ணை எப்படி அணைப்பது என்று தெரியாமல் தடுமாறினான். டூவீலரை பிடித்து கொண்டு தன் உணர்வுகளை கட்டுப் படுத்தினான்.
வெகு நேரம் தன்னை மறந்து அவனை அணைத்து கொண்டிருந்தவளுக்கு
மெல்ல ஒரு சலனம் எட்டி பார்த்தது.
அதனை உணர்ந்து அவனை பிரிந்து நின்றவள்.
அவனது கண்களை பார்க்க தயங்கினாள்.
இதுவரை அவள் அறியாத நாணம் அவளை ஆட்கொண்டது.
மேனி சிலிர்த்தது.
நிலை தடுமாறி நின்றவளை அவனது கரம் தாங்கி பிடிக்க… அவனது உரிமையான தொடுகை பிடித்தது.. புது வித உணர்வை கொடுத்தது. தன்னை மறந்து அவன் இதயத்தில் தஞ்சம் கொள்ள ஆசை பிறந்தது. மனதில் நிறைவான ஒரு உணர்வு தோன்றியது.
ஒருவேளை இது தான் காதலோ? என்ற ஒருவகை அச்சமும் ஆட்கொண்டது.
…ஒரு சிறுவலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே உனது
இருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன்
மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை
அதுதானே இனி நிலாவின் கரை கரை.. என்ற பாடல் அலைபேசியில் ஒலித்தது. அழைத்தது விக்ரமனின் தாய் ஜோதி.
திரையில் ஜோதியின் எண்ணை பார்த்த வர்ஷாவுக்கு நிதர்சனம் நெற்றி பொட்டில் அடிக்க. கண்களை மூடி திறந்து தன் உணர்வுகளுக்கு கடிவாளமிட்டவள் ” ஒரு நிமிஷம் ” என்று கூறியவாறு அலைபேசியை எடுத்து கொண்டு தனியே சென்றாள்.
” சொல்லுங்க ஜோதிம்மா ”
” அடுத்த வாரம் புதன் கிழமை உனக்கும் விஜய்க்கும் நிச்சயம் ஏற்பாடு பண்ணி இருக்கோம்டா உனக்கு சந்தோஷம் தானே ? ” என்று அவர் ஆர்வத்தில் கேட்க.
” உங்களுக்கு ஓகேன்னா எனக்கு அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லைம்மா. நீங்க ஏற்பாடு பண்ணுங்க ” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவளுக்கு எதிரில் புன்னகை முகமாக நின்றான் அதியன்.
அவனது புன்னகை முகத்தை பார்த்தவளுக்கு எதையோ இழந்து விட்ட உணர்வில் மனம் கனத்து போனது.
அதற்கு பிறகு வர்ஷாவிடம் பெரும் மௌனம் மட்டுமே நிலவியது.
அவளது மௌனம் அதியனை வெகுவாக பாதித்தது.
வெள்ளிக்கிழமை அவளது தோழியின் திருமணம் முடிந்த பிறகு அதியனும், வர்ஷாவும் கோவிலுக்கு வந்தனர்.
” சாமி கும்பிட்டு வரலாம் வாங்க அதியன் ” என்று வர்ஷா அவனை அழைக்க..
” இல்லை நீ மட்டும் போயிட்டு வா” என்று மறுத்துவிட்டான் அதியன்.
” ஏன் ? ”
” கடவுள் இதுவரை எனக்கு எதுவும் கொடுத்தது இல்லை.. அப்படியே கொடுத்தாலும் உடனே என்கிட்ட இருந்து எடுத்துப்பாரு அதனால் அவரு மேல எனக்கு நம்பிக்கை இல்லை ” என்றவனது கரத்தை பிடித்து கோவிலுக்கு உள்ளே அழைத்து வந்தாள்.
” கடவுள் நமக்கு பிடித்ததை எல்லாம் கொடுப்பாரா? அப்படின்னு கேட்டால் நிச்சயம் என் பதில் இல்லைங்குறது தான். ஆனால் நமக்கு எப்போ எது தேவையோ அதை கண்டிப்பா கொடுப்பாரு. பிடித்ததை விட நமக்கு எது தேவைங்குறது தான் முக்கியம்.. ஏன்னா மனிதனது பிடித்தம் நேரத்திற்கு தகுந்த போல மாறும். நமக்கு எப்போ என்ன தேவைன்னு கடவுளுக்கு நல்லா தெரியும். நம்பிக்கையோடு கடவுளை வேண்டுங்க, அவர் உங்களுக்கு எது தேவையோ அதை கண்டிப்பா கொடுப்பாரு ” என்றவளது வார்த்தைக்கு மதிப்பளித்து கண்களை மூடி இறைவனை வணங்கினான்.
எப்படியாவது இங்கிருந்து புறப்படும் முன் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்.
ஜென்மம் முழுவதும்..
உன் துணை வேண்டியே..
இமை மூடி பிரார்த்திக்கிறேன்..
வரமாய் நீ வந்தால்!
என் வாழ்க்கை சுபமாகும்.
இருவரும் கோவில் படியில் அமர்ந்திருக்க..
” நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் வர்ஷா ” என்று கூறி அவன் தயங்கிய போதே அவளுக்கு சிறிது சந்தேகம் வர தொடங்கியது.
‘ ப்ளீஸ் அப்படி மட்டும் எதுவும் சொல்லிடாதீங்க அதியன்.. ‘ என்று நினைத்து அவனை விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
” நேரவே சொல்லிடுறேன் வர்ஷா. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். கடைசிவரை உங்கூடவே இருக்கணும்னு நினைக்கிறேன் ” என்று அவன் கூறி முடிக்கவும் வர்ஷாவின் கண்கள் கலங்கி போனது. அவனிடமிருந்து பார்வையை திருப்பி தன் கண்ணீரை மறைத்துக்கொண்டவள். தன்னிலை உணர்ந்து வேண்டுமென்றே அவனை வேதனை படுத்தும் நோக்கத்தில் சத்தமாக சிரித்தாள்.
அவளை புரியாமல் பார்த்தவனது மனம் அடிபட்டு போனது.
” ஆமா, எந்த எண்ணத்தில என்கிட்ட இப்படி எல்லாம் பேசுறீங்க? ஒருவேளை உங்க கூட வெளியே வந்ததனாலா? இல்லை உங்க மேல கருணை காட்டியதாலா? இல்லை அன்னைக்கு உங்களை கட்டிபிடிச்சத்தாலா? லுக் மிஸ்டர் அதியன் அது எல்லாம் எதார்த்தமான ஒரு விஷயம். உங்களுக்கு அது ஒன்னும் புதுசு இல்லையே, உங்களை பத்தி எனக்கு சில விஷயம் தெரியும். பொண்ணுங்க கூட உங்களுக்கு அப்படி இப்படின்னு பழக்கம் இருந்ததா கேள்விபட்டேன். என்கிட்ட இப்படி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு ? ஒருவேளை என்னையும் அவங்களை மாதிரி பொண்ணுன்னு நெனச்சு, ஒரு நயிட்டுக்கு எப்படி ரேட் பேசுறதுன்னு கேட்க தயங்கி, கல்யாணம் அது இதுன்னு டிராமா பண்ணுறீங்களா? அப்படி கல்யாணம் பண்ணி வாழ்க்கை முழுக்க உங்க கூட இருக்கணும்னா எனக்கு எவ்ளோ பணம் கொடுப்பீங்க.. இப்போவே ரேட் பேசிட்டால் பின்னாடி பிரச்சனை வராது இல்லையா? ” என்று அவள் கேட்ட அடுத்தநொடி அதியனது கரமோ அவளை அடிக்க மேல் எழுந்தது.
மிரட்சியுடன் அவனை பார்த்தவளது விழியோரம் ஒரு துளி கண்ணீர் வழியே.. அவளது பயம் கண்டு தனது கோவத்தை கட்டு படுத்தி கொண்டவன் தனது கரத்தை கீழிறக்கி கொண்டான்.
” இங்க பாரு என்னை என்ன வேணும்னாலும் பேசு.. அதுக்காக உன்னை நீயே தரம் தாழ்த்தி பேசாத, வலிக்குதுடி. நான் தப்பு பண்ணவன் தான். அதை ஒரு நாளும் நான் நியாயப்படுத்த மாட்டான். உன்னை அந்த மாதிரி பொண்ணுங்களோட ச்சே நினைக்கவே வலிக்குதுடி. அப்படி நெனச்சு தான் உன்கூட நான் பழகினேன்னு நெனைகிறியா? இது வரை உன் கண்ணை தாண்டி எதையும் நான் பார்த்து பேசினது இல்லடி. உன்னை பத்தி எனக்கு எதுவும் தெரியாது , தெரிஞ்சுக்கவும் நான் விரும்பல, எனக்கு உன்னை பிடிக்கும் அது மட்டும் போதும். என் காதலுக்கு நீ என் கூட இருந்தால் மட்டும் போதும் வேற எதுவும் தேவை இல்லை..
உனக்கு என்னை பிடிக்கல அவ்ளோ தானே. நான் உனக்கு தகுதி இல்லாதவன்னு சொல்லுற அப்படி தானே, உண்மை தான்.உனக்கு கொஞ்சம் கூட நான் தகுதி இல்லாதவன் தான். இதெல்லாம் மூளைக்கு உரைச்சாலும் மனசுக்கு புரியலடி.. தகுதி இல்லாத நான் உன்கிட்ட என் காதலை சொன்னது தப்பு தான். அப்புறம் ஒன்னு கேட்டியே கட்டிபிடிச்சதால காதல் வந்ததா? இல்லை கருணை காட்டினதால காதல் வந்ததான்னு ? கட்டிபிடிச்சதால காதல் வந்திருக்கணும் அப்படின்னா எனக்கு இது வரை எத்தனையோ பொண்ணுங்க மேல காதல் வந்து இருக்கணும். வேணும்னா நீ காட்டின அந்த கருணையாலயோ, அக்கறையாலயோ பாசத்தாலயோ உன்னை கல்யாணம் பண்ணிக்கலாங்குற ஆசை வந்திருக்கலாம். ஆனால் காதல் எப்போ வந்தது, எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியல.. உன் அளவுக்கு பாசத்தையும், அக்கறையும் என் மேல காட்டினது ஒருத்தர் மட்டும் தான் அவரும் இப்போ என்கூட இல்லை.. என்னை விட்டு போயிட்டாரு. அதுக்கு அப்புறம் இதனை வருஷம் கழிச்சு அந்த பாசமும்,அக்கறையும் உன்கிட்ட இருந்து மட்டும் தான் எனக்கு கிடைச்சது. அது எனக்கு ரொம்ப பிடிச்சது, அது தான் உன்னை கல்யாணம் பண்ணி உங்கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டேன் போதுமா? ” சிறுது நேரம் இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே நிலவியது.
அப்போது விக்ரமணிடமிருந்து வர்ஷாவுக்கு அழைப்பு வரவே கலங்கிய கண்களை துடைத்து கொண்டு பின்னால் திரும்பி நின்று அழைப்பை ஏற்றவள் ” சொல்லு விக்ரமா ” என்று தழுதழுத்த குரலில் பேசவும்.. ஒரு நொடி அதியனது கண்கள் விரிந்து கொண்டது.
‘ விக்ரமனா? என் விக்ரமனா? ‘ என்று திகைத்து அவளை பார்த்தான் அதியன்.

