விழி வழியே சரணடைந்தேன் -25

Loading

அத்தியாயம் 25

 

அவன் காலையில் அழைக்க அவளுக்கு அது இரவு நேரம். ஆனாலும் அவனின் அழைப்புக்காக காத்திருந்தவள் அவன் நம்பரை பார்த்ததும் எடுத்தாள். 

 

“சித்து..” அவள் குரலே அவனுக்கு கிறக்கமூட்ட “இப்போ நான் பக்கத்துல இல்லையே கியூட்டி..” என்று அவன் குரல் கரகரத்தது. 

 

“ஹே கெட்ட பையா.. டெய்லி நீ கூட தானே இருந்த..” என்றவள் பின் “எப்போ வருவ சித்து? நீ டெய்லி நைட் ஒரு மாத்திரை சாப்பிட சொன்னியே.. அது சாப்பிட்டதும் வானத்துல பறக்கிற மாதிரி இருக்கு சித்து.. காலையில் ரொம்ப ப்ரெஷா இருக்கேன்” என்று சொல்ல அவன் கொடுக்கும் மாத்திரை சிறிது மயக்கம் வர வைக்கும் என்பதால் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. 

 

“அந்த மாத்திரை பவர் அப்படி தான்டா.. அதுக்காக சாப்பிடாம விடாத.. உன்னோட ஹெல்த்காக தான்” என்றவன் அவளிடம் அடுத்த வாரம் வருவதாக சொல்லி விட்டு முத்தத்துடன் அழைப்பை துண்டித்தான். 

 

அவன் பேசி முடித்ததும் மாத்திரையை போட்டவள் அரை நொடிக்குள் மயக்கத்திற்கு சென்று விட ஒருவன் அவளின் மேனியில் மருந்தை செலுத்தி விட்டு காற்றை விட வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். 

 

சித்தார்த் மதியம் பெங்களூரில் இருந்து கிளம்பியவன் அடுத்து சென்ற இடம் கன்னிபுரம். அந்த ஊர் அவனுக்கு பல நினைவுகளை விட்டு சென்றிருந்தது. நேரே மங்களம் வீட்டிற்கு சென்றவன் அங்கிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். வயலுக்கு வேலைக்கு சென்ற கணவனுக்கு உணவை கொடுத்து விட்டு வந்த மங்களம் தன் வீட்டில் ஒருவன் வந்து தெனாவட்டாக இருப்பதை பார்த்து அவசரமாக வந்தார். 

 

“யாருப்பா நீ? என்ன விஷயம்?” என்று கேட்க தன் கூலரை எடுத்து கண்களில் மாட்டி கொண்டவன் அவரை நோக்கி கூர்பார்வையை செலுத்தியவாறே “இந்த வீட்டை விலைக்கு வாங்கிருக்கேன்.. அதனால் வீடு எப்படி இருக்குன்னு பாத்துட்டு போக வந்தேன்” என்று சொல்ல “யார் வீட்டை எவன் பாக்க வரது?” என்று கத்தினார் மங்களம். 

 

“சும்மா இல்ல உங்க மகனுக்கு ஒரு கோடி கடன் கொடுத்துருக்கேன்” என்று சொல்ல வாயடைத்து போய் நின்றார் அவர். 

 

“என் மவன் உயிரோட இல்லன்னதும் எங்க சொத்தை திருட வந்துட்டியளா? இந்த அநியாயத்தை கேக்க நாதி இல்லயா?” என்று அழ ஆரம்பிக்க “ஷ்…..” என்று ஒற்றை விரலை காட்டி அடக்கினான் சித்தார்த். 

 

“உங்க பையன் வாங்குன கடனுக்கு ஈடா உங்க சொத்து முழுசையும் எழுதி கொடுத்த பத்திரம்” என்று காட்ட அதில் இருந்தது வேலுவின் கையெழுத்து தான். அன்று கனிஷ்காவை ஒப்படைக்கும் போதே எழுதி வாங்கியிருந்தனர். 

 

மங்களத்திற்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. அவரின் கனவில் கூட கோடி ரூபாயை பார்த்தது இல்லை. யாரோ சொல்லி வந்த கணவனை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. அவரிடமும் அனைத்தையும் சொன்ன சித்தார்த் “இதுக்கு மேல எனக்கு நேரமில்லை.. நான் அமெரிக்காவில் இருந்து வந்ததே இந்த சொத்தை வாங்க தான்.. இன்னும் இரண்டு மணி நேரம் தான் உங்களுக்கு நேரம்.. வீட்டை காலி பண்ணி கொடுத்துட்டு கிளம்புங்க” என்று கூற அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. 

 

கிளம்பும் நேரம் வரவும் மங்களத்தை பார்த்தவன் “என்னை நியாபகம் இருக்கா?” என்று கேட்க கூர்ந்து பார்த்தவருக்கு எதுவோ புரிவது போல் இருந்தது. 

 

“சித்தார்த்..” அவர் உதடுகளை அசைக்க “எஸ்.. சித்தார்த் தான்.. சும்மா இந்த ஊர்பக்கம் வந்தவனை கனிஷ்காவை லவ் பண்றேன்னு சொல்லி அந்த பெண்ணுக்கும் எனக்கும் கெட்ட பெயர் வாங்கி தந்தீங்களே.. அது மட்டுமா? அந்த அப்பாவி பெண்ணை உங்க குடிகார மவனுக்கு கட்டி வச்சு அவளோட வாழ்க்கையையே நாசம் பண்ணிடீங்களே..” என்று சீற அவனின் பேச்சில் அவருக்கு பயம் துளிர்த்தது. அன்று பஞ்சாயத்தில் திமிராக நின்ற சித்தார்த் இன்றும் அவர் கண்முன் வந்து போனான்.

 

சித்தார்த் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே படித்து வளர்ந்தவன். அவனின் தந்தை கிரண் ஒரு தமிழன். தாய் சார்லெட் அமெரிக்க பெண். கிரண் அமெரிக்காவுக்கு மேற்படிப்பு படிக்க போகும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். என்ன தான் அமெரிக்க கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும் கிரணை திருமணம் செய்த பின் அவருக்கேற்ற மனைவியாக வாழ்ந்து சித்தார்த் பிறந்த ஒரு வருடத்தில் மாரடைப்பில் இறந்து போனார் சார்லெட். மனைவியின் நினைவுகள் முழுவதும் அவரை ஆட்கொண்டு அதன் தாக்கம் தாங்க முடியாமல் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் கிரண். பல வருடங்களுக்கு பிறகு ஒரு மூளை சார்ந்த அறுவை சிகிச்சைக்காக இந்தியா வந்தார். அவருடன் சுற்றி பார்க்க வந்தவன் தான் சித்தார்த். 

 

தந்தை தன் வேலையில் தீவிரமாக இருக்க அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பக்கத்து ஊர் கன்னிபுரத்திற்கு வந்தான் சித்தார்த். பொழுது போகாமல் ஊரை சுற்றி கொண்டிருந்தவன் கண்ணுக்கு மோட்டார் அறையில் இருந்து பதற்றத்துடன் ஓடி வந்த கனிஷ்கா பட்டாள். முதல் முறையாக ஒரு பெண்ணை தாவணியில் பார்த்ததும் அவன் மனம் படபடத்தது. ஆனாலும் அவளின் பதற்றம் கண்ணில் பட அவளை நோக்கி நடக்க அவளுக்கு பின்னே துரத்தி கொண்டு வந்தான் ஒருவன். 

 

“ஏய் கனி.. ஓடாதடி.. இன்னைக்கு நீ என்கிட்ட மாட்டாம போயிடுவியா?” என்ற வேலு அவளை துரத்த அவனின் பிடியில் சிக்காமல் ஓடி கொண்டிருந்தவள் கால் தடுக்கி கீழே விழ அவளை நெருங்கியிருந்தான் வேலு. 

 

“என்னடி போக்கு காட்டுற?” என்று அவன் அவளின் தாவணியில் கை வைக்க போக சட்டென அவளை தள்ளி விட்டு வேலுவின் முகத்தில் ஓங்கி குத்தினான் சித்தார்த். வேலு அவளை நிமிர்ந்து பார்க்க தன் தாவணியால் உடலை மூடி கொண்டவள் சித்தார்த்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. 

 

“ஒரு பொண்ணு விருப்பம் இல்லாம அவளை தொட நினைக்குற?” என்று மீண்டும் வேலுவை அறைய போக “அய்யோ விடுங்க சார்.. அவர் எனக்கு தெரிஞ்சவர் தான்.. பிரச்சனை ஆகிடும் சார்” என்று சித்தார்த்தின் காலை பிடித்தாள் கனிஷ்கா. 

 

அவளின் முகத்தை குனிந்து பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ வேலுவின் சட்டையில் இருந்து பிடியை விட்டவன் தன் இடத்தை நோக்கி நடந்தான். ஆனால் அவள் நிமிர்ந்து பார்க்காமல் கெஞ்சியது நினைவில் வர தலையை திருப்பி பார்க்க வேலு அவளின் முடியை கொத்தாக பிடித்து இழுத்து செல்வது தெரிந்தது. அவளை நோக்கி திரும்பிய கால்களை “அவளுக்கே பிரச்சனை இல்லை.. உனக்கு என்ன?” என்ற மனசாட்சி கேள்வி கேட்க தன் அறைக்கு திரும்பினான். ஆனால் அதன் பிறகு கனிஷ்கா வேலுவின் கைகளில் இருந்து வாங்கிய அடி அதிகம். 

 

வேலு அந்த ஊரின் மைனர். அவனின் தந்தைக்கு எந்த செல்வாக்கு இல்லையென்றாலும் தாய்க்கு அந்த ஊரே பயப்படும். ஒரு பெண்ணை மகன் கட்டாயப்படுத்தினான் என்றால் தவறை தட்டி கேட்கும் தாய்க்கு மத்தியில் வேலுவின் தாய் அவனை விட்டு கொடுக்காமல் அந்த பெண்ணின் மானத்தை கப்பலேற்றி விடுவார். அதற்கு பயந்தே அவனை எதுவும் செய்யாமல் விட்டு வந்தனர். 

 

வீட்டிற்கு வந்த வேலுவின் முகத்தில் இருந்த காயத்தை பார்த்த மங்களம் “ஏன்யா வேலு இப்படி அடிப்பட்டிருக்கு? யாரு அடிச்சது?” என்று பதற “எனக்கு அந்த கனி பொண்ணை கல்யாணம் பண்ணி வை.. அவளை நான் அணு அணுவாக சாகடிக்கணும்” என்றான். அவனின் பேச்சில் கோபத்தை விட வெறி அதிகம் இருந்தது. 

 

“யாரு முத்தையா பொண்ணா? நாளைக்கே கேட்டுடலாம்.. நீ முதல்ல மருந்தை போடு” 

 

“இல்ல அவன் அவளை தூக்கிட்டு போயிடுவான்.. அவன் கண்ணுல நீ ரசனைய பார்க்கலையே.. அவ சொன்னதும் உருகி விட்டுட்டு போறான்.. இங்க என்னை தவிர அவளை எவனும் தொட கூடாது.. நான் தொடாத பொண்ணு எவனுக்கும் வாழ்க்கை பட கூடாது” என்று சீற “எவன் வந்துடுவான்னு சொல்லுற? இப்பவே முத்தையா வீட்டுக்கு போய் பொண்ணு கேக்குறேன்” என்று கணவனிடம் சொல்லி விட்டு சென்றார் மங்களம். 

 

அவர் திரும்பி வரும் வரை வேலு அங்கும்இங்கும் நடந்து கொண்டே இருந்தான். மங்களம் வந்ததும் “என்ன சொன்னான்?” என்று கேட்க “நான் ஒன்னு நினைச்சா நடக்காம போயிடுமா வேலு? அந்த பொண்ணு உனக்கு தான்.. அடுத்த முகூர்த்திலேயே கல்யாணம் பண்ணிடலாம்” என்று கூற அவனின் கண்களில் வெற்றி தாண்டவமாடியது. 

 

இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. சித்தார்த் மனதை அன்று பார்த்த பெண் எதுவோ செய்திருந்தாள். அவளின் அழகை விட அவளின் கண் அவனை தீண்டியது. கனிஷ்கா அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவனின் முகம் கூட அவளுக்கு நியாபகம் இருக்காது. ஆனால் அவனுக்கோ அவளை பார்க்க வேண்டும் என்று மனம் தேடியது. தந்தையிடம் வெளியே சென்று வருவதாக சொன்னவன் மீண்டும் கன்னிபுரம் சென்றான். ஆனால் அவன் தேடிய பெண் அங்கு கிடைக்கவேயில்லை. அவளை பற்றி இன்னொருவரிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. 

 

பஞ்சாயத்து கூடும் இடத்தில் அனைவரும் கூடியிருக்க அங்கு சென்றான் சித்தார்த். ஒரு அரச மரத்தின் அடியில் சில பெரியவர்கள் அமர்ந்திருக்க அந்த ஊர் மக்கள் கூடியிருந்தனர். அதை பார்க்கவே அவனுக்கு ஆர்வமாக இருந்தது. பக்கத்தில் நின்றவரிடம் என்ன விஷயம் என்று கேட்க “கனி பொண்ணு யாரையோ காதலிக்குதாம்.. இந்த ஊர் வழக்க படி காதல் எல்லாம் ஏத்துக்க மாட்டாங்க.. அது ஆணோ பெண்ணோ ஊரை விட்டு குடும்பத்தோட தள்ளி வச்சிடுவாங்க” என்று கூற கனி எனும் பெயரில் எட்டி பார்த்தவனுக்கு அங்கு தன் மனம் கவர்ந்தவள் நிற்கவும் பகீரென்றது. 

 

“அவள் யாரை காதலிக்குறாள்?” மனம் கேள்வி எழுப்ப “வா ராசா.. உன்னை தான் தேடிட்டு இருக்கோம்.. ஊரை சுத்தி பார்க்க வந்தவன் அவளோட மனசை கலச்சிட்டியோ? இப்போ அவளுக்கு தண்டனை தரப்போவும் நீயும் கூட இரு” என்று மங்களம் அவனை கைகாட்டி சொல்ல அவரை பார்த்தே அறியாத சித்தார்த் புரியாமல் நிற்க பக்கத்தில் இருந்த வேலு “இந்த ஊர் பொண்ணுங்களை தன் கைக்குள்ள போட்டுட்டு கடைசியில் ஏமாத்துறது தானே இவங்க வழக்கம்..” என்று எடுத்து கொடுக்க இப்போது சித்தார்த்துக்கு அவனின் சூழ்ச்சி புரிந்தது. 

 

அந்த கூட்டத்தில் இருந்த கனிஷ்காவின் குடும்பத்தை பார்க்க அவர்கள் குனிந்த தலை நிமிரவே இல்லை. 

 

அவர்களை புரியாமல் பார்த்தவன் தொண்டையை செருமி கொண்டு “நான் இந்த ஊரை சுத்தி பார்க்க தான் வந்தேனே தவிர யாரையும் காதலிக்க இல்ல.. உங்க தகுதிக்கு எல்லாம் நான் ஒத்து வர மாட்டேன்.. என்னோட வேலை கனவு எல்லாம் அமெரிக்காவில் இருக்கு.. உங்க பொண்ணை நான் காதலிப்பேனா?” என்று அழுத்தமாக நிமிர்ந்து நின்று கேட்க எவரும் வாய் திறக்கவில்லை. 

 

பெரியவர்கள் அவனின் மேல் தவறான முறையில் குற்றம் சாட்டுவதை அவர்கள் ஏற்று கொண்டு மன்னிப்பு கேட்க “நான் இன்னைக்கு இப்போ வருவேன்னு சொன்னது யாரு?” என்று கேட்டான். 

 

“இன்னைக்கு கண்டிப்பா வருவீங்கன்னு வேலு தான் சொன்னான்.. எங்க ஊர் வழக்கபடி காதல் கல்யாணம் செல்லாது” என்று ஒரு பெரியவர் கூற “அதை முடிவெடுக்க வேண்டியது நீங்க இல்ல.. அந்த பெண்ணை பெற்றவங்க தான்.. உங்க வீணா போன கட்டுப்பாட்டுக்கு அடுத்தவங்க தலையை உருட்டாதீங்க.. இந்த ஊருக்கு ஏன் வந்தேன்னு இருக்கு” என்றவன் வேலுவை முறைத்து கொண்டே செல்ல அதன் பிறகு நிமிர்ந்து பார்த்த கனிஷ்காவுக்கு அவனின் முதுகே தெரிந்தது. 

 

அதன் பிறகு அவள் அவனை சந்திக்கவேயில்லை. சித்தார்த் அவளை பற்றி எல்லா விஷயத்தையும் தன் தந்தையிடம் சொன்னவன் அவளுக்காக காத்திருந்தான். காதல் வர ஒரு நொடி போதும். பார்த்து பழகி தான் காதல் வர வேண்டும் என்றில்லை. ஆனால் விதி அவனுக்கு எதிராக அவளை வேலுவுடன் சேர்த்து வைத்திருந்தது.

 

அவளின் திருமணம் என்று பஞ்சாயத்தில் ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலும் அவளை விட்டு கொடுத்திருக்க மாட்டான். அவளை பார்க்க சிறுபெண் போல இருக்கவே இன்னும் வருடங்கள் ஆகலாம் என்று காத்திருக்க வேலு தந்திரமாக அவளை திருமணம் செய்து கொண்டான். 

 

இன்று சித்தார்த் மங்களத்தை பார்க்க “உனக்கு தான் அவளை பிடிக்காதே.. அப்புறம் என்ன அக்கறை?” என்றவரை முடிந்த மட்டும் கண்களால் எரித்தான். 

 

“முதன் முதலில் பார்த்தப்பவே என் மனசு முழுக்க நிறைஞ்சது அவ முகம் தான்.. அன்னைக்கு பஞ்சாயத்துல அவ பெயர் கெட்டு போக கூடாதுன்னு தான் உண்மைய சொல்லல.. ஆனா அதையே சாதகமா வச்சு உங்க பையனுக்கு கட்டி கொடுத்து அவளை உயிரோட கொன்னுட்டீங்களே.. இனி நடுத்தெருவில் நிற்கும் போதாவது புத்தி வருதா பார்க்கலாம்” என்றவன் திரும்பி பார்க்காமல் சென்று விட மங்களத்தின் கணவன் அவரை ஓங்கி அறைந்தார். 

 

“கடைசில நடுத்தெருவுல நிக்க வச்சுட்டியேடி..” என்று சீறியவர் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க அதன்பிறகு எவரும் அவர்களுக்கு நன்மை செய்ய முன்வரவில்லை. செய்த பாவத்திற்கு அனுபவித்தனர். 

 

****************

 

சித்தார்த் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் மனதில் அருண் கூட சென்ற அந்த பெண்ணை பற்றி அறிந்தே ஆக வேண்டிய தீவிரம் தெரிந்தது. 

 

“சார்..” கேசவ் தன் கையில் சில கோப்புகளுடன் வர அதை வாங்கி படித்தவன் ஆச்சர்யப்பட்டான். 

 

“கனிமொழி அவங்க பேர்.. ஹஸ்பண்ட் நேம் கனிகீதன்.. சென்னையில் செட்டில்ட்.. இங்க ஏதோ வேலையா வந்தப்போ அருணை பார்த்திருக்காங்க.. அருணுக்கு கனிஷ்கா மேம் மேல லவ் அதிகமாக இருந்ததால் அவங்கள பத்தி என்ன சொன்னாலும் ரொம்ப எமோஷனலா பிஹேவ் பண்றார்னு கீதன் தன் மனைவியை நடிக்க சம்மதம் சொல்லிருக்கார்” என்று கூற “கீதன் மேரேஜ் லவ் இல்லயா?” என்று கேட்டான் சித்தார்த். 

 

“ரொம்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கார் சார்.. இப்போ பிரிஞ்சு இருக்காங்க அருணுக்காக” என்று கூற சித்தார்த்துக்கு கீதனின் மேல் பெருமதிப்பு ஏற்பட்டது. 

 

“காதலியை இன்னொருத்தர் கூட பாக்கும் போதே கொலைவெறி வரும்.. பட் அவர் மனைவியையே நடிக்க சொல்லிருக்கார்னா ஹி இஸ் கிரேட்” என்று சிலாகித்தான். கண்டிப்பாக அவனால் முடியாத காரியம். அருண் மேல் இருந்த கோபம் கூட இப்போது கொஞ்சம் தெளிவானது. 

 

தன் அறையை விட்டு வெளியே வரவும் அலைபேசி ஒலிக்க “கியூட்டி..” என்று புன்சிரிப்புடன் எடுத்தவன் அந்த பக்கம் “சித்து…” என்ற அலறலில் கைப்பேசியை தவற விட்டான். 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்