
சலனம்-27
இரவு இசை வெளியீட்டு விழா முடிந்து, வீட்டிற்கு வந்த என்னை வீட்டின் நிசப்தமே வரவேற்றது.
அந்த வீட்டின் நிசப்தம் என்னை ஏதோ செய்தது. கதவு திறந்த நிலையில் கிடந்தது. என்ன நடந்தது? என் மனம் பதற்றத்தைச் சுமந்தது. சம்யூ ஒருநாளும் கதவைத் திறந்து வைத்ததில்லை. சுற்றி சுற்றி எத்தனை பாதுகாவலர்கள் இருந்தாலும், சம்யூ அதீத கவனத்துடன் தான் இருப்பாள்.
அப்படியிருக்கையில், திறந்துக் கிடந்த கதவு எனக்குள் பதற்றத்தை விதைத்தது.
“சம்யூ!”
என் உதடுகள் அவசரமாய், அழுத்தமாய் உச்சரிக்க, என் கண்கள் ஒவ்வொரு இடமாக அவளைத் தேடிக் கொண்டிருந்தது.
அவளின் குரல் கேட்காமல் போனதும், எனக்குள் ஏதோ செய்தது. பயம் இதயத்தை இறுகக் கவ்வி பிடித்தது. கண்களுக்குள் ஏதேதோ கற்பனைகள் என்னை அறியாமல் விரிந்தது.
அவசர அவசமாய் தேடி, ஒவ்வொரு இடமாய் ஓடினேன். என் வீடு சுமந்திருந்த அடர்த்தியான அமைதி என்னை ஏதோ செய்தது. அடர்த்தியான அமைதியின் நடுவே, மிதந்து வந்து என் நாசிக்குள் நிரம்பியது, உதிரத்தின் வாடை.
அந்த இனம் புரியா மணம் என் நாசிக்குள் நிரம்பியதுமே, எனக்குள் பயப்பந்துகள் உருள ஆரம்பித்தது. உடலும், உயிரும் ஒட்டுமொத்தமாய் நடுங்கித் தொலைத்தது. கண்கள் முதன்முறையாய் என்னை அறியாமல் கலங்கியது. என் கண்களுக்கு கண்ணீரைப் பழக்கப்படுத்திய முதல் நிகழ்வு இது தான்.
இழுத்துப் பிடிக்க இயலாத பொறுமையுடன், கால்கள் தடுமாற, அவசரமாய் ஓடினேன். கண்களை கண்ணீர் மறைத்து காட்சிகள் மங்கலாய்த் தெரிந்தது. கண்களை அவசரமாய் துடைத்துக்கொண்டு, அந்த பழைய பொருட்கள் போட்டுவைக்கும் அறையைத் திறந்த அந்த நொடி, என் இதயம் நின்று துடித்தது. இரத்தச் சகதியின் நடுவே, வேரற்ற கொடியாய், கீழே விழுந்துக் கிடந்தாள் சம்யுக்தா.
“சம்யூ!”
என் அலறல், அறையின் சுவர்களில் பட்டு, என் செவிகளிலேயே மீண்டும் எதிரொலித்தது.
“சம்யூ! சம்யூ! கண்ணைத் திறந்து பாரு டி!”
“சம்யூ! என்னை விட்டுப் போய்டாதே!”
“சம்யூ! ப்ளீஸ் டி!”
என்னை அறியாமலே என்னென்னவோ சொல்லி அவளை எழுப்ப முயன்றேன். அசைவு துளியும் இல்லை. நடுங்கிய கரத்துடன், அவள் நாசியில் கரம் வைத்துப் பரிசோதித்தேன்.
வெதுவெதுப்பான மூச்சுக்காற்று என் விரல்களில் பட்டதும் தான், கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“இராணிமா! இராணிமா!”
அவசரமாய் பணி செய்யும் பெண்மணியை உதவிக்கு அழைத்தேன். அழைத்த மறுநொடியே, பணிப்பெண் வந்து விடுப்பு கேட்டதும், சம்யூவைப் பற்றி துளியும் யோசிக்காது, விடுமுறை கொடுத்து அனுப்பியதும், என் நினைவிற்கு வந்தது.
“ச்சே!” என் முட்டாள்தனத்தை நினைத்து என்னை நானே நெற்றியில் அறைந்துக்கொண்டேன்.
நொடியும் தாமதிக்காது, அவளை என் கரங்களில் அள்ளிக் கொண்டேன். என் விரலில் ஒட்டிய பிசுபிசுப்பான உதிரம், அவள் என்னை விட்டுப் போய்விடுவாளோ? என்ற பயத்தை எனக்குள் விதைத்தது. முன்புறக் கதவை சிரமப்பட்டு திறந்துவிட்டு,
“செக்யூரிட்டி! செக்யூரிட்டி!”
அவசரமாய் கத்தியபடியே கதவைத் திறந்து படிகளில் இறங்கி ஓடினேன். அவளைக் கீழே விட்டுவிடக் கூடாதென்கிற சுதாரிப்பும் என்னிடம் இருந்தது.
“சார் என்ன ஆச்சு சார்?”
“எமெர்ஜென்ஸி! ட்ரைவரை காரை எடுக்கச் சொல்லு!”
என அவசரமாய்ச் சொல்லிவிட்டு, பதற்றத்தோடு சம்யூவை உள்ளே கிடத்திவிட்டு, பின்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டேன். வாடிக் களைத்துப் போயிருந்த, வதனத்திலேயே என் கண்கள் நிலைத்தது. என்னுடைய அஜாக்கிரதையால் இவளை இப்படியொரு நிலையில் நிறுத்திவிட்டேனே? குற்றமுள்ள.நெஞ்சு குறுகுறுத்தது.
“விக்ரம்! நான் சமுத்ராவை வரச் சொல்லவா?” சில மாதங்கள் முன்பு அவள் கேட்டது என் செவிக்குள் ஒலித்தது.
“நாம என்ன முடிவு பண்ணினோம் சம்யூ? ரெண்டு வீட்டுப் பக்கமும், யாரையும் கூப்பிட வேண்டாமென்று தானே முடிவு பண்ணினோம்? இப்போ நீ யாரையோ வரச் சொல்றேன்னு சொன்னால் என்ன அர்த்தம்?”
“அவள் யாரோ இல்லை. ஷீ இஸ் மை சிஸ்டர்!”
“அது யாராக வேணும்ன்னா இருக்கட்டுமே! யாரும் இங்கே வரக் கூடாது. இப்போ நாம அவங்க உதவியை நாடினால், நாம தோற்றுப் போய்ட்டோம்ன்னு ஆகிடாதா சம்யூ?”
“அப்போ உங்க அம்மாவையாவது வரச் சொல்லேன் டா! ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு மாதிரி இருக்கு டா! என்ன செய்யுதுன்னு புரியவே மாட்டேங்குது! என்னோட டௌட்ஸ் எல்லாம் நான் யார்கிட்டே கேட்கிறது?” என அவள் கேட்டதும்,
“சென்னையிலேயே பெரிய கைனகாலஜிஸ்ட் கிட்டே, கவுன்ஸ்லிங் புக் செய்யறேன். உன்னோட எல்லா சந்தேகங்களையும், அவங்க ஸார்ட் அவுட் பண்ணுவாங்க! உனக்கு எத்தனை செஷன்ஸ் வேணுமோ, போய்க்கலாம்!” என நான் சொன்னதும், முகம் வாடியபடியே, அவள் மனமே இல்லாமல் தலையசைத்ததும் எனக்கு நினைவிற்கு வந்தது.
“ஆனால், அவள் ஒவ்வொரு செக்-அப் நேரத்திலும், கவுன்சிலிங்கிலும் உன்னை மீட் பண்ணியிருக்கிறாள்ன்னு எனக்குத் தெரியாது.” என என் எதிரில் நின்றிருந்த சமுத்ராவைப் பார்த்துச் சொன்னேன். சமுத்ராவின் முகமோ இறுகியிருந்தது. சமுத்ராவோ, பதிலேதும் சொல்லாது, என்னையே பார்த்தாள். அவளின் நீலநிறக் கண்களில் வழிந்தக் கோபத்தைப் பார்த்ததும், நிறுத்திய இடத்திலிருந்தே மீண்டும் சொல்லத் துவங்கினேன் நான்.
மருத்துவமனை சென்று சேரும்வரை என் நிலையிலேயே நான் இல்லை. என் மனம் படபடப்பை உணர, என் கண்கள் சம்யூவின் மீது மட்டுமே நிலைத்திருந்தது.
அவள் என் தேவை, அவள் என் அவசியம், அவள் என் அத்தியாவசியம் என நான் உணர்ந்தது அவள் மருத்துவமனையில் விழிமூடிப் படுத்துக்கிடந்த தருணங்கள் தான். இவளுக்கு ஏதாவதொன்று நேர்ந்துவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன்? ஈருயிராய் இருப்பவளை இப்படியொருநிலையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டேனே? என என் மனம் என்னைக் கேள்விகேட்டது. அவளில்லா விடியலை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
“என்ன சார், இப்படியொரு க்ரிட்டிக்கலான நிலையில் கொண்டு வந்திருக்கீங்க? வாட்டர் பிரேக், ப்ளட் லாஸ்ன்னு எல்லா காம்ளிகேஷன்ஸும் இருக்கு. வீ ட்ரை அவர் லெவல் பெஸ்ட்!” சொல்லிவிட்டு அந்தப் பெண் மருத்துவர் உள்ளே சென்றுவிட்டார். தொய்ந்து அமர்ந்துவிட்டேன் நான். என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை.
முதன்முறையாய், அவளைக் காப்பாற்றும்படி இறைவனிடம் கோரிக்கை வைத்தேன்.
கைக்கொள்ள முடியாத அளவிற்கு, என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால், அந்தப் பணம் வெறும் காகிதம். வெற்றுக் காகிதம். நான் கைக்கொண்டிருக்கும், புகழோ, பெருமையோ, நான் சம்பாதித்து வைத்திருக்கும் பணமோ எதுவுமே, என் மனைவியைக் காப்பாற்ற உதவப் போவதில்லை என்பது எனக்குப் புரிந்தது.
எல்லாம் இருந்தும், என் மனம் இறுதியாய் கடவுளிடம் தான் மண்டியிட்டது.
இறைவன் என்ற ஒரு சக்தி இந்தப் பிரபஞ்சத்தில் உண்டா? எனக்குத் தெரியாது.. பெரிதாய் நம்பிக்கையும் இல்லை. சிறுவயதில் என் அன்னை குலசாமியின் திறுநீறு எனச் சொல்லி பூசி விட்டாலே, அன்னை என் கண்ணை விட்டு மறைந்ததும், அழித்துவிடுவதைத்தான் வழக்கமாய் வைத்திருந்தேன்.
அப்படியொரு மனநிலையில் இருந்தவன், என் மனதிற்குள்ளேயே கடவுளிடம் வேண்டுதல் வைத்தேன். இங்கே என் கண்ணுக்குத் தெரியாத சக்தி இருக்கிறதா தெரியவில்லை. அது என் மனைவியைக் காப்பாற்றுமா என்பதும் தெரியவில்லை.
ஆனால் சாமானியனின் கடைசி நம்பிக்கையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் மட்டுமே முக்தியடைகிறது. ஆனால் ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது, கடவுள் என்ற ஒன்று மனிதன் படைத்து வைத்திருக்கும், எந்த உருவத்திற்குள்ளும் அடங்காத ஒன்று.
இந்த உலகில் கடைசியாய் மிச்சமிருக்கும் கடைசி மனிதனிடத்தில் கடைசியாய் மிச்சமிருக்கும் ஒருதுளி நம்பிக்கை தான் கடவுள்.
அந்த ஒற்றைத் துளி நம்பிக்கையை இறுகப் பிடித்துக்கொண்டு தான், என் சம்யூவிற்காகக் காத்திருந்தேன். அவள் மீண்டு வந்து என்னை விக்ரம் என அழைப்பாளா.? எனத் தெரியாது. ஆனாலும் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை மட்டுமே என்னிடம் மிச்சமிருந்தது.
சம்யூ அவசரசிகிச்சை பிரிவிற்குள் கொண்டு செல்லப்பட்டிருக்க, கையாலாகதவனாய், கையைப் பிசைந்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அப்போது தான் சித்தார்த் அழைத்தான். என்னதான் என் மனதைப் பகிர, எனக்கு ஆறுதலாக ஒரு துணை தேவைப்பட்டாலும், இப்போதைக்கு அழைப்பை ஏற்று, இங்குள்ள சூழ்நிலையை அவனிடம் விளக்கும் பொறுமை என்னிடம் இல்லை.
அழைப்பை ஏற்காமலேயே அலைபேசியை அணைத்துப் போட்டேன்.
ஆனால் அடுத்த பதினைந்தாவது நிமிடம், சித்தார்த் என் முன்னால் வந்து நின்றான். நான் நிரம்பவெல்லாம் அதிர்ச்சியாகவில்லை. அவன் வருவான் என்பது நான் எதிர்பார்த்தது தான்.
எனக்கென இருக்கும், ஒரேயொரு நண்பன் அவன் மட்டுமே. எனக்கு மற்ற ஆண்களைப் போல, மிகப்பெரிய நட்பு வட்டமெல்லாம் கிடையாது. என்னைப் புரிந்துக்கொண்ட, என் மனதிற்கு நெருக்கமான ஒரே நண்பன் சித்தார்த் மட்டும் தான்.
“நீ ஏன்டா இங்கே வந்த?” என நான் சித்தார்த்தைப் பார்த்துக் கேட்ட நொடி,
“பைத்தியமா டா நீ? என்கிட்டே சொல்றதுக்கு என்ன? சம்யூ எப்படி இருக்கா? என்னதான் டா நடந்துச்சு? நான் தான் அப்போவே சொன்னேனே, சம்யூ தனியா இருக்கா! அம்மாவை வரச் சொல்லுடான்னு சொன்னேனே?”
எனக் கேட்டான். நடந்தவைகளை சுருக்கமாய் அவனிடம் சொல்லிவிட்டு,
“ம்ப்ச்! அவங்களை மீறி கல்யாணம் பண்ணிட்டு, அவங்களை எப்படி கூப்பிடுறது?” எனக் கேட்டேன்.
“சம்யூ கூட லிவ்-இன்னில் இருக்கும் போது, அவளைக் கல்யாணம் பண்ணிக்கும் போதெல்லாம், இப்படி நடக்கும்ன்னு உனக்குத் தெரியாதா என்ன? தெரியாதுன்னு பொய் சொல்லிடாதே! நீ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. உன்னை மட்டும் யோசிக்காதே டா விக்ரம்! ரெண்டு உயிருடா! ஏதாவது ஒண்ணுன்னா என்னடா பண்ணுவ?!” பதற்றமாய் கேட்டான் சித்தார்த்.
“உன் பங்குக்கு நீயும் என்னை பயமுறுத்தாதே டா! வெளியே உட்கார்ந்திருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் பதற்றமா இருக்கு. உனக்கே தெரியும், நாம ப்ளான் பண்ணினதை விட ஈவன்ட் முடிய ரொம்பவே லேட் ஆகிடுச்சு தானே? படத்தோட டைரக்டரா நான் பாதியில் வர முடியுமா? என்ன? எல்லாம் தெரிஞ்சும் என்னையே குத்தம் சொன்னால் என்னடா அர்த்தம்?” கோபமாய் சித்தார்த்திடம் கேட்டேன்.
“நான் உன்னைக் குறையே சொல்லலை விக்ரம்! நாம எத்தனை ஈவன்ட் இதுவரை போயிருக்கோம்? எதாவது ஒண்ணு சரியான நேரத்திற்கு முடிஞ்சிருக்கா? எப்படியும் லேட் ஆகும்ன்னு உனக்கு தெரியும் தானே? சம்யூக்கு எப்போ வேணும்ன்னாலும் டெலிவரி ஆகலாம்ன்னு கூட உனக்குத் தெரியும் தானே? அப்படி இருக்கும் போது, ஏன் தனியாய் விட்டுட்டு வந்த? எதாவது ஒரு மாற்று எற்பாடு பண்ணியிருக்கணும் தானே? அந்தப் பொண்ணை இப்படி சித்திரவதை பண்ணுறதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா டா? பாவம் டா அந்தப் பொண்ணு. கொஞ்சமாவது சம்யூவைப் புரிஞ்சுக்கோடா!”
என சித்தார்த் சொன்னது எனக்குப் புரிந்தது. ஆனால் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி என்னால் என்ன செய்ய முடியும்.? பதில் சொல்ல திராணியற்று, அமைதியாய் அமர்ந்திருந்தேன். அதே நேரம், செவிலிப்பெண் என்னிடம் வந்து, சம்யூவிற்கு அறுவைசிகிச்சை செய்வதற்காக கையெழுத்து கேட்ட, கண்கள் கலங்க, நீட்டிய தாளில் என் கிறுக்கலான கையெழுத்தைப் பதித்துவிட்டு ஒட்டுமொத்தமாய் உடைந்து போனேன்.
*******
கிட்டத்தட்ட நான் சம்யூவை மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட, மூன்று மணி நேரங்கள் கடந்திருந்தது. இன்னுமும் எனக்கு எதுவுமே தெரியவில்லை. சம்யூ எப்படி இருக்கிறாள்? குழந்தை பிறந்துவிட்டதா? இல்லையா? எதுவுமே தெரியாமல், எதுவுமே புரியாமல், அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் கதவையே வெறித்தபடி அமர்ந்திருந்தேன்.
“விக்ரம்! ஒண்ணும் ஆகாது டா! கொஞ்சம் ரிலாக்ஸா இருடா!” என்னை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றான் சித்தார்த். என் விழிகள் அடிக்கடி, அறையின் வாயிலைத் தொட்டு மீள, உடலோ ஒருவித பதற்றத்திற்கு உள்ளாகியிருந்து.
இனி என்னால் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலையில், எழுந்து நின்றுவிட்டேன்.
“டேய்! உட்காரு டா!” சித்தார்த்தின் அதட்டல் என்னிடம் வேலை செய்யவே இல்லை.
“எவ்வளவு நேரம் டா இப்படியே உட்கார்ந்துட்டு இருக்கிறது? என்னால் முடியலை டா! அவளுக்கு என் ஆச்சோ? ஏது ஆச்சோன்னு மனசு பதறுது!” என நான் அவசரப்பட்ட போதும்,
“முதலில் சம்யூ மேல் நம்பிக்கை வை டா! நான் ஒண்ணு கேட்கிறேன் டா. அவள் வந்துடுவாள்ன்னு நம்பு. தப்பா நினைச்சுகாதே விக்ரம்! கேட்காமல் இருந்தேன்னா என்னால் உன்கிட்டே இயல்பாகவே பேசவே முடியாது. நீ நிஜமாவே சம்யூவிற்காக இவ்வளவு பதற்றப்படுறியா? இல்லை உன்னோட குழந்தைக்காகவா? நீ இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்து காத்திருக்கும் ரகம் இல்லை. உனக்கு பொறுமையும் இருக்காதுன்னு எனக்குத் தெரியும். அப்படியிருக்கும் போது, இந்த பாசமும் கண்ணீரும், சம்யூவிற்காகவா? இல்லை உன் குழந்தைக்காக மட்டுமா?” என அவன் கேட்டதும், ஒருநொடி உடைந்து போனேன் நான்.
கண்களுக்குள், சம்யூ இரத்த வெள்ளத்தில் கிடந்தக் காட்சி விரிந்தது. அப்படியொன்றைக் கண்ட பிறகு, பிள்ளைக்காக மனைவிக்காக என தனித்தனியாக நான் யோசிக்கவில்லை. இருவருமே எனக்கு வேண்டும். ஆனால் ஏதாவது தவறாக நேர்ந்துவிடும் பட்சத்தில், என் சம்யூவிற்குதான் முக்கியத்துவம்.
அவளை அப்படியொரு நிலையில் பார்த்த அந்தநொடியே, என் உலகம் சுழலுவதை நிறுத்தியிருந்தது. அவளில்லாத பொழுதுகளில் என்னால் வாழ முடியுமா? எனத் தோன்றத் துவங்கியிருந்தது எனக்கு.
“ரெண்டுபேரும் எனக்கு வேணும் டா! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை டா! ஆனால், ஒருவேளை தவறாக ஏதாவதொன்று நடக்கும் பட்சத்தில், முன்னுரிமை என் சம்யூவிற்குத்தான்.
அவளை அப்படியொரு நிலையில் பார்த்த பிறகு, அவள் இல்லாமல் வாழ முடியும்ன்னு தோணலை டா!” திக்கித் திணறி சித்தார்த்திடம் சொல்லி முடிப்பதற்குள் ஒருவழியாகிப் போயிருந்தேன். தொண்டை அடைத்துக் கண்கள் கலங்க, நான் சொல்வதைப் பார்த்து, என் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான் சித்தார்த்.
அதே நேரம்,
“உங்களுக்குப் பொண்ணு பொறந்துருக்கு!”
என எனப் பஞ்சுத் துண்டில் பொதிந்த குழந்தையை என் கரத்தினில் தந்துவிட்டு மருத்துவர் நகர, குழந்தையின் மீது கூடப் பார்வையைத் திருப்பாது,
“மேடம்! சம்யூ எப்படி இருக்கா?!”
எனக் கேட்டேன். அவள் எப்படி இருக்கிறாள்? என எனக்குத் தெரிய வேண்டும். அவளால் வந்தது தானே குழந்தை, அவளின் நலன் தானே முதலில் முக்கியம். குழந்தையைப் பார்க்காததற்கு எனக்கு நானே காரணம் சொல்லிக் கொண்டேன்.
“ஷீ இஸ் ஃபைன். இன்னும் கொஞ்ச நேரத்தில், நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க! நீங்க போய் பார்க்கலாம். அனஸ்தீஸ்யா கொடுத்ததால், மயக்கத்தில் இருக்காங்க! அதிகமா ப்ளட் லாஸ் ஆகி டயர்டா இருக்கிறதால், அமைதியாய் பார்த்த்துட்டு வந்துடுங்க! பேச்சுக் கொடுக்க முயற்சிக்காதீங்க! உண்மையைச் சொல்லப் போனால், நிஜமாவே இது ஒரு மிராக்கிள் தான். உங்களுடைய நம்பிக்கை தான் அவங்களை மீட்டு கொண்டு வந்திருக்கு!”
என மருத்துவர் சொன்ன பின்பே, கண்களில் கண்ணீர் நிறைய, குழந்தையை ஏறெடுத்துப் பார்த்தேன். கண்ணீர் மறைத்து, குழந்தையின் உருவம் தெரிய மறுத்தது. இமைகளை சிமிட்டி, கண்ணீரை உள்ளிழுத்து, முதன்முதலாய் என் குழந்தையைப் பார்த்தேன்.
சிவந்த மாதுளைப் பூவின் நிறத்தில், குட்டி குட்டி கை கால்களோடு, தலை நிறைய சுருள் முடியோடு இருந்தாள் குழந்தை.
நல்ல சிவந்த நிறம். தொட்டால் கூடச் சிவந்துவிடும் அளவிற்கு பஞ்சு போன்ற ஸ்பரிசம். முதன்முறையாய் இத்தனைச் சிறியக் குழந்தையைக் கையில் ஏந்துகிறேன். சினிமாவில் காட்டுவதைப் போல, குண்டு கண்களும், கொழு கொழு கன்னமுமாக எல்லாம் குழந்தை இல்லை. குட்டியான கண்களோடு, மிருதுவன ஸ்பரிசத்தோடு, ஒற்றைக் கையில் ஏந்திக்கொள்ளுமளவிற்கு சின்னதாக இருந்தாள். இத்தனைக்கும், குழந்தை மூன்றரை கிலோ எடை இருப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால் என் பார்வைக்கு ரொம்பவே சிறியதாகத்தான் தெரிந்தாள். இத்தனை சிறியக் குழந்தை தான் பெரிய பெண்ணாக வளரப் போகிறாளா? அதிசயமும் ஆச்சரியமுமாய் இருந்தது.
ஒருவேளை முதன்முறையாய் குழந்தையைப் பார்ப்பதால், அப்படித் தெரிகிறதோ? என்னவோ? என் தங்கை கவிதா குழந்தையில் எப்படி இருந்தாள்? யோசித்துப் பார்த்தேன். அவள் நடந்து ஓடிய தருணங்கள் தான் என் நினைவில் இருந்ததே ஒழிய, அவள் பிறந்த போது எப்படி இருந்தாள்.? என எனக்கு ஞாபகமே இல்லை.
“சித்தார்த்! இங்கே பாருடா! என் பொண்ணு! என் பொண்ணு என்னை மாதிரியே இருக்கா தானே?” ஒரு தந்தையாய் பெருமிதத்தில் என் நெஞ்சம் விம்மியது. ஒரு குழந்தையின் தந்தை என்ற நிலையில் சிந்தித்துப் பார்க்கையில், சம்யூ எனக்கு மாபெரும் அதிசயமாய்த் தெரிந்தாள். சம்யூ மட்டுமல்ல ஒவ்வொரு தாயும் அதிசயம் தானே? என் தாயும் இதே போல் தானே, என்னைக் கஷ்டப்பட்டு ஈன்றிருப்பார்? நானும் இவ்வளவு குட்டியாகத் தான் இருந்தேனா? என்னென்னவோ எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
“வாழ்த்துக்கள் மச்சி! யாராலும் அடக்க முடியாத உன்னை உன் பொண்ணு அடக்கப்போறா பாரு!”
என்ற சித்தார்த்தின் வாழ்த்தில் எனக்கு உச்சிக் குளிர்ந்து போனது. என் மகள் என்னை அப்பா என அழைக்கும் நாளுக்காய் என் மனம் அந்த நொடியிலிருந்தே காத்திருக்கத் துவங்கியிருந்தது. கண்கள் என் குழந்தை மீதே நிலைத்திருக்க, அவளை நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடி, குழந்தை வீறிட்டு அழ பயந்து போனேன் நான்.
திடீரெனக் குழந்தை அழவும், என்ன செய்வது? ஏது செய்வது? எதுவும் எனக்குப் புரியவில்லை. பதற்றமும் பயமுமாய் குழந்தையைக் கரத்தில் வைத்தபடி நான் நின்றிருக்க,
“ஏன் சார், இப்படி பயப்படுறீங்க? குழந்தைன்னா அழத்தான் செய்வாங்க! அதுக்கு ஏன் சார் இப்படி பயப்படுறீங்க?” எனக் கேட்டபடி குழந்தையை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு சென்றார் செவிலிப்பெண்.
“எக்ஸ்க்யூஸ் மீ..! சம்யுக்தாவைப் பார்க்கலாமா?” என்னைத் தாண்டிச் சென்றவரை நிறுத்திக் கேட்டேன்.
“டென் மினிட்ஸ்க்கு அப்பறம் வாங்க சார்.! குழந்தைக்கு ஃபீட் பண்ணுறதுக்காகத்தான் கூட்டிட்டுப் போறேன். ஸோ, கொஞ்ச நேரத்திற்குப் பிறகு வாங்க!”
எனச் சொல்லிவிட்டு செவிலிப்பெண் சென்றுவிட, சம்யூவைப் பார்ப்பதற்காய் காத்திருந்த ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு யுகமாய் கடந்தது எனக்கு. இதற்கு நடுவே சித்தார்த்தும் விடைபெற்று கிளம்பியிருக்க, குழந்தையை உறங்க வைத்துவிட்டு, செவிலிப்பெண் சம்யூ அனுமதிக்கப்பட்டிருந்த அறையிலிருந்து வெளியே வரவும், அவசரமாய் அறைக்குள் ஓடினேன்.
குழந்தையும் தாயும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். கண்கள் இரண்டையும் மூடி, சின்னஞ்சிறிய கரம் இரண்டையும் மடக்கி முகத்தினருகே வைத்தபடி குழந்தை உறங்கிக் கொண்டிருக்க, மருத்துவமனை உடையில், கையில் ஊசி குத்தப்பட்டு, ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, சலனமில்லா முகத்துடன் உறங்கிக்கொண்டிருந்தாள் சம்யுக்தா.
இவள் எப்போது கண்களைத் திறந்து என்னைப் பார்த்துப் பேசுவாள்? குழந்தையைப் பார்த்து என்ன சொல்வாள்? என் மீது கோபமாக இருப்பாளோ.? எந்தக் கேள்விக்கும், எனக்கு விடை தெரியவில்லை.
இதற்கெல்லாம் விடை தெரிய, சம்யூ கண்விழிக்க வேண்டுமே! பேச முயற்சிக்கக் கூடாதெனச் சொல்லிவிட்டார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல், உறங்கிக் கொண்டிருக்கும் இருவரையுமே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தேன். ஒவ்வொரு நொடியும், நிமிடமும் நிரம்பவும் பொறுமையாய் நகர்ந்தது. அரைமணி நேரம் பொறுத்து பொறுத்துப் பார்த்துவிட்டு,
“சம்யூ!” என நான் அழைக்க அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.
நான் விளித்தது அவளுக்குக் கேட்டதா? என்று கூட எனக்குத் தெரியவில்லை. இதற்கு மேலும், தொந்தரவு செய்ய வேண்டாமென அமைதியாகிப் போனேன்.
நான் இழுத்து இழுத்து, இறுகப் பிடித்திருந்த என் பொறுமையை இன்னும் அதிகமாய் சோதித்து விட்டு, இன்னும் அரைமணி நேரம் தாமதமாகவே கண்களைத் திறந்தாள் சம்யுக்தா. கண்களைத் திறந்தவள், முதலில் அறை முழுதையும் சுற்றி ஆராய்ந்துவிட்டு, கடைசியாய் என் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டாள்.
என்னைப் பார்த்த நொடி, அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களில், என் மனம் சில்லு சில்லாய் நொறுங்கியது. குழந்தை எங்கே இருக்கிறாள்? என அவள் கண்களால் தேட,
“பொண்ணு பொறந்துருக்கா சம்யூ!”
என நான் சொன்னதும், அதீத கோபத்தோடு என்னை முறைத்தாள். அவள் கண்களில், இதுவரை நான் கண்டிராதக் கோபமும், வெறுப்பும் விரவிக் கிடந்தது. சூழ்நிலையை ஆராய்ந்தபடியே, எழுந்து அமர முயற்சி செய்தாள்.
“நான் ஹெல்ப் செய்யறேன் சம்யூ!” எனச் சொன்னபடியே அவள் அருகில் நான் நெருங்க,
“டோன்ட் டச் மீ விக்ரம்! நீ ஏன் இங்கே வந்தே? உன்னை யார் உள்ளே விட்டது? என் மேலேயும் என் குழந்தை மேலேயும் திடீர்ன்னு என்ன அக்கறை? இப்போதான் பொண்டாட்டி ஒருத்தி இருக்கேன்னு ஞாபகம் வந்துச்சா? அத்தனை முறை கால் பண்ணினேனே? ஒருமுறை கூட, அதை அட்டண் பண்ணணும்ன்னு உனக்கு தோணலை தானே? இப்போ மட்டும் என்ன திடீர் பாசம்? என்னை எதுக்கு விக்ரம் ஹாஸ்பிட்டலில் கொண்டு வந்து சேர்த்த? அப்படியே விட்டிருந்தாலே நானே செத்துருப்பேன் விக்ரம்!”
“பிறந்தக் குழந்தையைப் பார்த்ததும், அக்கறையும் பாசமும் பொத்துக்கிட்டு வந்துடுச்சா? என் அனுமதி இல்லாமல், என் குழந்தையைத் நீ தொடவே கூடாது. இத்தனை நாள் என்ன, கல்யாணம் ஆனதையும், நான் கன்சீவா இருந்ததையும் மறந்துந்துட்டு செலெக்ட்டிவ் அம்னீஷியாவில் இருந்தியா? தயவு செய்து இங்கிருந்து போய்டு! என் கண்ணிலேயே விழாதே! எனக்கு நீ எதாவது செய்யணும்ன்னு நினைச்சால், தயவு செய்து எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடு!” அவளுக்கு உடல் நிலை முடியாத போதும், தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்துக் கோபமாய் பேசினாள் சம்யுக்தா.
“குழந்தைக்கு நீ எப்படி அம்மாவோ, அதே மாதிரி நான் அப்பா சம்யு! என்னை தூக்க வேணாம்ன்னு சொல்ற?
“குழந்தை வயிற்றுக்குள்ளே இருக்கும் போது, உன் அக்கறை மண்ணாங்கட்டியெல்லாம் எங்கே டா போச்சு இடியட்! தயவு செய்து இங்கிருந்து போய்டு ப்ளீஸ்..!” ஊசி குத்தியிருந்த கரமென்றும் பாராது, கையெடுத்து கும்பிட்டுவிட்டாள். இதற்கு மேல் அங்கே நிற்க தைரியமில்லாமல், அவள் வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் வெளியே வந்திருந்தேன் நான்..
இவளை எப்படி சமாதானப்படுத்தப் போகிறேன்? என் குழந்தையைப் பார்க்க முடியுமா? முடியாதா? எனப் புரியாமல், குழப்பமாய் நின்றிருந்தேன்.
“நீ தள்ளிப் போகிறாயென..
நான் உன்னைத் தவறாக
நினைக்கவில்லை..
உன் மீது குற்றமேதும் இல்லை..
காயங்களாக பழகிய மனம்
அன்பிற்கு பயந்து
மிரளத்தான் செய்யும்..!”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ரம்😡😡. பாவம் சம்யுக்தா