
அத்தியாயம்: 23
காதலில் நம்பிக்கை என்பது சக்கரத்தில் இருக்கும் அச்சானியை போன்றது. அந்த அச்சானி இல்லை எனில் வண்டி தடம் புரண்டு விடும். காதலில் தன் இணையர் மீது நம்பிக்கை இல்லாமல் போவதில் மனம் தடம் மாறி வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடும். அப்படித் தான் ஆராவின் மனதில் ஆதித் கிருஷ்ணாவின் மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கையை முதலில் உடைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான் மகேஷ்.
கட்டிடத்தின் அடித்தளம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் கட்டிடத்தின் ஆயுட்காலம் என்பது முடிவு செய்யப்படுகிறது. காதலின் ஆயுட்காலம் எல்லையற்றது தான் ஆனால் அதிலிருக்கும் எந்தச் செங்கலை உருவினால் கட்டிடம் நிலை குலைந்து கீழே விழும் என்பதை அறிந்தது போல. ஆரா, ஆதித்தின் காதலில் இடையிட்டு அவர்களை நிரந்தரமாய்ப் பிரிக்கும் திட்டத்துடன் தயாராகி வந்துக் கொண்டிருந்தான் மகேஷ்.
ஆராவின் ஷிஃப்ட் காலை எட்டு மணிக்கு தான் முடிந்தது. தூக்கம் தாங்கிய விழிகளுடன். முகத்தில் சோர்வுடன் லிஃப்ட்டில் இருந்து இறங்கியவள். அவள் வேலை செய்துக்கொண்டிருக்கும் ஐடி கம்பெனியை விட்டு வெளியே வந்தாள். ஏற்கனவே அவளுக்குத் தலையில் அடிப்பட்டிருப்பதில் லேசான வலி ஏற்படத் தலையை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டு நடந்தாள். சில நொடிகள் நீடித்த வலி பட்டெனச் சரியானது.
“அப்பாடா!! திடீர்ன்னு வலிக்குது, திடீர்ன்னு சரியாகுது , என்ன தான் நடக்குதோ நம்ம தலையில” என வாய்விட்டுப் புலம்பிக்கொண்டு நடந்தவளின் குறுக்கே வந்து நின்றது அந்த மஞ்சள் நிற பைக். தலை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“ஏய் மகேஷ்! நீ இன்னும் வீட்டுக்கு போகலையா?” என அவளைப் பார்த்து புன்னகைத்தபடி பைக்கில் அமர்ந்திருந்தவனைப் பார்த்துக் கேட்டாள்.
“உன்னோட ஷிஃப்ட் முடியுறதுக்காக இதோ இந்த டீக்கடையில தான் உட்கார்ந்திருந்தேன்.” என அங்கிருந்த டீக்கடையைக் காட்டினான்.
“எதுக்காக வெயிட் பண்ணின?”
“உன்னை வீட்ல ட்ராப் பண்ணுறதுக்குத் தான்”
“நான் என்ன சின்னக் குழந்தையா ட்ராப் பண்ண வந்திருக்க? போ போய் வேலையைப் பாரு, இன்னைக்கி எதோ கச்சேரி இருக்கு சொன்ன. இப்படித் தூங்காமல் சுத்தினால் எப்படிப் பைத்தியம் ஸ்டேஜ்ல பாடுவ” எனத் திட்டியவள் தன்னுடைய அலைப்பேசி எடுத்து கேப் புக் செய்ய முற்பட்ட போது தடுத்திருந்தான் மகேஷ்.
“ஆரா! என்னை ஃப்ரெண்டா நினைத்தால் ஏறு” என அவன் சொன்ன போது அவளால் தடுக்க முடியவில்லை.
“பைத்தியம்! உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பை காட்டுற நேரமாடா இது” எனத் திட்டிய படியே அவனுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் ஆரா. வாகனம் மெல்ல நகர்ந்தது.
நேற்று இரவு இதே சாலையில் நத்தை போல் ஊர்ந்து வந்த கருஞ்சிறுத்தையின் நினைவு அவளுக்கு வந்தது. அவளின் காதலை அவள் மனம் தேட துவங்கியது. பைக்கின் பின்னே அமர்ந்தபடி.
“குட் மார்னிங் க்ரிஷ்” என்ற குறுஞ்செய்தியை தன்னுடைய காதலுக்கு அனுப்பியவள் தனக்குள் சிரித்துக்கொண்டாள். இந்தக் காதல் என்னவெல்லாம் செய்யும் அருகில் இருந்தபோது தெரியாத காதலை அதீதமாய் வெளிப்படுத்தும் காதலன் அருகில் இல்லாத நேரங்களில்.
நேற்று இரவு அவளுக்கு ஏற்பட்ட விபத்தைக் கண்டு அவன் துடிதுடித்துப் போனது. காஃபி ஷாப்பில் அமர்ந்து பேசியது என்று நடந்த அனைத்தையும் மனக்கண்ணில் படமாய்ப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்த நேரத்தில். படத்தின் நடுவில் வரும் இடைவேளை போல் அவளின் விழிகளில் இருந்து துளிர்ந்த நீர் காற்றில் மெல்ல கரைந்து சென்றதை பைக்கின் கண்ணாடி வழியில் பார்த்த மகேஷோ,
“ஆரா! எதுக்கு அழுகுற?” அவன் கேட்டது அவளின் செவிகளில் நிச்சயமாய் விழவில்லை. ஏன்னென்றால் அவள் அவளின் க்ரிஷின் நினைவுகளில் நீந்தி சென்றுக்கொண்டிருந்தாள்.
காதலா? கனவா? என்ற பட்டிமன்றத்தை மீண்டும் மனதிற்குள் நடத்திய விளைவு தான் இந்தக் கண்ணீர் துளிகளுக்குக் காரணம். அதே சாலையில் மீண்டும் பயணம், அருகில் தன்னவன் இல்லையே என்பது அவளுக்கு மெலிதான வலியை கொடுத்தது. வெறுக்கவும் முடியாமல் விலகவும் முடியாமல். அவன் நினைவுகளை அதே சாலையில் மீண்டும் மீண்டும் தேடி தொலைந்து போனாள் பெண்ணவள்.
இந்தப் பதினைந்து நாள் பிரிவில் ஒரு நாளைக் கூட அவன் இன்றிக் கடக்க முடியவில்லையே. காலம் முழுக்க அவன் இல்லாமல் வாழ்வதைப் பற்றி அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். நிச்சயம் அவளால் இதைச் செய்ய முடியாது. என அவளுக்குத் தெரிந்து போனது. பெண்களின் காதல் ரகசியமானது. அனைத்தையும் ஆணின் காதல் கொட்டி தீர்ப்பது போல் கொட்டி தீர்த்து விடாது. வெட்கத்தைக் கரங்கள் மூடி மறைப்பது போல் காதலை வெளிக்காட்டாமல் மறைத்து விடுகிறார்கள் இந்தப் பெண்கள்.
தலைவியின் கரங்கள் தலைவனின் கைவிரல்களை தேடியது. அவ்வப்போது அவள் மீது அலைப்பாயும் அவனின் விழிகளை அவளின் விழிகள் தேடியது. அவளைக் கண்டவுடன் புன்னகை சிந்தும் அவளுக்கே அவளுக்கான காதல் முகம் எங்கே எனத் தேடி களைத்துப் போனது. அப்போது தார்சாலையில் இருசக்கர வாகனத்தின் டையர் தரையைத் தேய்த்து நின்ற போது நடப்புக்கு வந்தாள் பெண்ணவள்.
“ஏய் ஆரா! எத்தனை முறை கூப்பிடுறது?” கத்திக்கொண்டிருந்தான் மகேஷ்.
“சாரி டா மகேஷ் எதோ யோசனையில் இருந்தேன்”
“அழுகுற அளவுக்கு அப்படி என்ன ஆழமான யோசனை” எனக் கேட்டான் அவன்.
“இல்லை ஒன்னும் இல்லை” எனச் சொன்னவள், “நீ முதலில் வண்டியை ஸ்டார்ட் பண்ணு” எனச் சமாளிப்பாய் சொன்னாள். நேற்று அவளுக்கும் ஆதித் கிருஷ்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட சின்னக் கோபத்தில் அனைத்தையும் அவனிடம் ஒப்பித்திருந்தாளே தவிர. சுதா அளவிற்கு மகேஷிடம் ஆரா நட்பு பாரட்டியதில்லை. அவளின் காதல் ரகசியத்தை அவனிடத்தில் சொன்னதில் மகேஷ் எதையோ சாதித்தது போல் உணர்ந்திருந்தான்.
சில நிமிடங்களில் ஆராவின் வீட்டு வாசலில் மகேஷின் பைக் நின்றது.
“இந்த ஏரியால தான் இருக்கீயா ஆரா?” என அதிசயம் போல் கேட்டான்.
“ஏன்டா அப்படிக் கேட்கிற?”
“ஏய் ஆரா என்னோட ரூமும் இங்கே பக்கத்தில் தான் இருக்கு”
“எங்கேடா” என அவன் கேட்ட போது, அவன் எதோ தெரு பெயரை சொன்னான்.
“இந்த ஏரியா பத்தி எனக்குத் தெரியாதுடா. நான் இங்கே வந்து மூணு மாசம் தான் ஆகுது” எனப் பதில் சொன்னவள் அந்த அப்பார்ட்மென்டிற்க்குள் நுழைய முறப்பட்ட போது.
“இன்னைக்கி ஆஃபிஸ் போகும் போது சொல்லு நானே ட்ராப் பண்ணுறேன்” என மகேஷ் கேட்டான்.
“ஏய் நான் பார்த்துக்கிறேன். போ போய்த் தூங்கு” எனத் திட்டி அனுப்பினாள்.
“இவ்வளவு தூரம் வந்து விட்டிருக்கேன், காஃபி குடிக்கக் கூட வீட்டுக்கு கூப்பிட மாட்டியா?” எனக் கேட்டான் மகேஷ்.
“மகேஷ் ஃப்ரெண்ட்ஷிப்பா இருந்தாலும் ஒரு லிமிட் தான். என்னைக் காதலிக்கிற க்ரிஷ் கூட இதுவரைக்கும் என்னோட வீட்டுக்கு வந்ததில்லை, வர்றேன்னும் சொன்னதில்லை எங்களோட மீட்டிங் எல்லாமே பப்ளிக் ப்ளேஸஸ்ல தான் இருக்கும். தனியா இருக்கேன்னு தெரிஞ்சும் வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டியான்னு கேட்கிற? உனக்கு மண்டையில மாசலா எதாவது இருக்கா?” என ஆரா திட்டி தீர்த்தாள்.
“இல்லை ஃப்ரெண்ட்லியா தான் கேட்டேன்” என மகேஷின் குரல் தடுமாறியது.
“உனக்கென்ன காஃபி தானே வேணும் வா காஃபி ஷாப் போயிட்டு வரலாம்” என அவள் சொன்ன போது,
“தெரியாமல் கேட்டுட்டேன் ஆரா! ஆளை விடு” எனப் பைக்கை ஸ்டார்ட் செய்து சீறிப் பாய்ந்திருந்தான் மகேஷ்.
ஆராவின் மனம் எப்போதும் முன்னெச்சரிக்கையாய் தான் செயல்படும். சுதாவை தவிர யாரும் ஆராவின் வீட்டிற்குள் வந்ததில்லை. அவள் வர அனுமதித்ததும் இல்லை. மகேஷ் அவளைப் பிக்கப் செய்ய வந்ததே பிடிக்காத போது அவனை எவ்வாறு வீட்டிற்க்குள் அனுமதிப்பாள். எல்லை மீற நினைக்கும் உறவுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டாள் ஆரா.
ஆரா அந்த நொடியில் தன்னை அவமான படுத்தியதாய் உணர்ந்தான் மகேஷ். தனியாக இருப்பவளுக்கு எப்படி இவ்வளவு தைரியம். அவள் அவனைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தான். தனித்துச் சுயமாய் நிற்கும் பெண்களைக் கண்டால் ஒரு ஆணுக்கு ஏற்படும் மனோபாவம் தான் இது. தனித்துத் தைரியம் நிற்கும் பெண்களைத் தவறாய் சித்தரிக்கும் எண்ணம்.
“இத்தனை நாள் காதலிச்சிருக்கா அந்த ஆதித் கிருஷ்ணாவை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போயிருக்க மாட்டாளா என்ன? அழகா இருக்கிறோம் என்ற திமிரு தான் இவளை இப்படியெல்லாம் பேச வைக்குது.” எனத் தனக்குள் புலம்பியபடி வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தான். போலியாகப் பெண்ணியம் பேசி பெண்களை நெருங்கிவிடும் கூட்டம் தான் இது. நீ வீட்டுக்குள் அடைந்து கிடக்கக் கூடாது. உனக்கான சம்பாத்தியத்தை நீயே ஏற்படுத்திக்கொள் என்று சொல்வது வரை இவர்களின் பெண்ணியம் சரியாக இருந்தாலும்.
நீ விருப்ப படும் எந்த ஆணுடனும் உன் விருப்பத்தின் பெயரில் காதல் வளர்க்கலாம் எனச் சொல்லும் இடத்தில் தான். இந்த ஆண்களின் சுயநலம் வெளிப்படும். அப்படி ஒரு எண்ணம் கொண்டவன் தான் மகேஷ். பெண்களை அவர்கள் போக்கில் விட்டு விட்டு காதல் எண்ணத்தை வளர்க்க நினைப்பது தான் இவனின் குறிக்கோள். உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிடுவது இல்லை எனப் போலியாய் சொன்னாலும், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தலையிட்டுக் குழப்பம் ஏற்படுத்துவதில் கில்லாடி அவன். இவன் பேச்சை கேட்டு அவனுக்காக மயங்கி கிடக்கும் பெண்களும் உண்டு.
அந்தப் பெண்களின் மீதெல்லாம் இருக்கும் ஈடுபாட்டை விட அவனுக்கு ஆராவின் மீது ஈடுபாடு அதிகம் தான்.
காரணம் அவள் இன்னும் அவன் கைகளுக்கு எட்டாக்கனியாய் இருப்பதே. நண்பனாய் அறிமுகமாகினான். உதவி செய்வது போல் நடித்தான். உதவியும் செய்தான். ஆராவிற்குப் பணத் தேவை இருப்பதைத் தெரிந்து ராககீதத்தில் அவளைச் சேர்த்து விட்டான். இரவு பகல் என்று பாராமல் பின் தொடர்ந்தான்.
அப்படித் தான் அன்று ஒரு நாள் அவளைப் பின் தொடர்ந்தான். அவள் அன்று அவனுடன் தான் பாட்டு பாடி விட்டு மண்டபத்திலே உணவு உண்டுவிட்டு வீடு நோக்கி கிளம்பிக்கொண்டிருந்தாள் ஆரத்யா.
அவளின் கையில் இருபது ரூபாய் தான் இருந்தது. அன்று பார்த்து அவளின் டெபிட் கார்ட்டை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்திருந்தாள். அப்போது நேரம் பதினொன்றை எட்டியிருந்தது.
அவள் கையில் இருந்த இருபது ரூபாயை வைத்து ஒன்றும் செய்ய முடியாது இரவு பதினொன்று என்பதால் பேருந்துகள் ஏதும் வராத சூழலில் சாலையோரம் மெல்ல நடக்க ஆரம்பித்தாள். காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு நடந்தவளுக்கு மக்களின் நடமாட்டம் இருப்பதே நிம்மதியை தந்தது. மூன்று கிலோமீட்டர் நடந்தாக வேண்டும். அவள் செல்லும் வழியில் இருக்கும் சிறிய காட்டு பகுதியை நினைத்து அவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேக எட்டுகளை வைத்தாள்.
அவளைப் பின் தொடர்ந்துக்கொண்டிருந்த மகேஷோ யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
“டேய் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்ல, கரெக்ட்டா பண்ணிடணும்” என்றான்.
“என்ன அண்ணேன் தம்பி மேல நம்பிக்கை இல்லையா? இதுவரைக்கும் எதாவது பிசிறு தட்டியிருக்கா? அந்தக் கருப்பு சுடிதார் பொண்ணு தானே? மிரட்டி விட்டுடலாம் அண்ணேன். அடுத்த அண்ணி அவங்க தான்” என அந்த லுங்கி அணிந்திருந்தவன் சொல்ல,
“இதெல்லாம் கரெக்ட்டா பேசு, அந்தப் பொண்ணு மேல எவனோட சுண்டு விரலும் படக்கூடாது. அதில கவனமா இரு” என எச்சிரித்தான் மகேஷ்.
“அதெல்லாம் நாங்க பார்த்துகிறோம். நீ கரெக்ட் டைம்க்கு என்ட்ரி கொடுத்திடுங்க சொதப்பிடாதீங்க அண்ணே” என அவன் சொல்ல, சரியெனத் தலையசைத்து, மரத்திற்குப் பின்னால் போய் மறைந்து நின்றுக்கொண்டான் மகேஷ்.
சமூக விரோதமான நிறையச் செயல்கள் நடக்கும் இடம் அது, தலைக் கவிழ்ந்து கொண்டு நடந்தவளின் எதிரே வந்து நின்றது லுங்கி கட்டிய ஒரு உருவம், இருளில் அவன் முகம் கூட அவளுக்குத் தெளிவாய் தெரியவில்லை.
“அண்ணா வழியை விடுங்க” எனச் சொன்னவள் ஹெட்போனை கழட்டி தன் பைக்குள் வைப்பது போல் எதையோ துலாவினாள்.
“என்ன பாப்பா பயந்துட்டியா.?” பற்களைக் காட்டினான்.
“அண்ணா வழி விடுங்க” என மீண்டும் அவள் பேசியபடி அங்கிருந்து நகர முற்பட்ட போது அவளின் கைகளை அழுந்த பிடித்தவன்.
“டேய் சீக்கிரம் வாங்கடா” எனக் குரல் கொடுக்க நாலைந்து பீம் பாய் போல் இருந்தவர்கள் வர மிரண்டு போய் விழித்தாள். அவன் கையை உதறிக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். மின்விளக்கு அவள் கண்களுக்கு மிகத் தொலைவில் தெரிந்தது.
மின்விளக்கை அடைந்தால் போதும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். பீம்பாய்கள் துரத்த ஆரம்பித்தனர்.
ஓடியபடி அவள் கைப்பையில் இருந்த விசிலை எடுத்து ஊதிக்கொண்டே ஓடினாள்.
“டேய் விசில் ஊதுகிறாள் பாரு.வாடா போலீஸ் வந்திட போறாங்க போயிடலாம்” ஒருவன் சொன்னான்
“டேய் போலீஸூக்கு பயந்தா இந்தத் தொழில் பண்ணுறோம் முதலில் அவளைப் பிடிப்போம் டா” இன்னொருவன் சொல்ல ஓட்டத்தில் வேகத்தைக் கூட்டினர்.
அதே நேரம் அங்கே விரைந்து வந்துக்கொண்டிருந்த கருப்பு நிறக் காரின் முன் போய் அவள் விழ போக. அதை இயக்கி வந்தவன் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியிருந்தான்.
“ஹெல்ப்.! ஹெல்ப்.!” எனக் காரின் கதவை தட்டியவள் மூச்சு வாங்க நின்றிருந்தாள். அவளால் என்ன நடந்தது என்று கூட விவரிக்க முடியாத பயத்தில் நின்றிருந்தாள்.
கார் கதவை திறந்துக்கொண்டு கம்பீரமாய் இறங்கினான் கார்மேக கண்ணனை போல், அன்று திரௌபதியின் மானத்தைக் காக்க துயில் கொடுத்த கிருஷ்ணனை போல் தன்னவள் என்று அறியாமலே அவளின் மானம் காக்க வந்தானோ இந்த ஆதித் கிருஷ்ணன்.
அவன் விழிகளைப் பார்த்து நின்றவளை கரம்பற்றித் தன்புறம் இழுக்க, ஆதித் கிருஷ்ணாவை கண்டு தலை தெறிக்க ஓடினார்கள் அந்தப் பீம் பாய்கள்.
அப்போது மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த மகேஷின் தலையில் இடி விழுந்தது போல் ஆனது. ஆராவை காப்பாற்றுவது போல் நடித்து அவள் நம்பிக்கையைப் பெற நினைத்து தோற்றுப் போனது இன்று மகேஷின் நினைவில் வந்தது.
அன்று மட்டும் ஆராவை காப்பாற்ற ஆதித் வராமல் இருந்திருந்தால். அந்த இடத்தில் மகேஷ் இருந்திருப்பான். இப்போது வரை ஆராவை நெருங்குவதற்கு ஆதித் இடையூறாய் இருக்கிறான் என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாய்த் தெரிந்தது. தன் கோபத்தைப் பைக்கின் ஆக்ஸிலேட்டரில் காட்டிக்கொண்டிருந்தான். மேலும் முன்னேறி போக நினைத்தவனின் வாகனத்தின் குறுக்கே வந்து நின்றது அந்தக் கார். காரின் பின்னிருக்கையில் இருந்து ஒயிலாய் இறங்கி வந்த பெண் மகேஷை நெருங்கினாள்.
“உன் பேர் என்ன?” அதிகாரம் தெறித்தது அவளின் பேச்சில்.
“முதலில் நீங்க யாருங்க? வண்டியை குறுக்க நிறுத்திட்டா எப்படிப் போவாங்களாம். உங்க ட்ரைவரை வண்டியை எடுக்கச் சொல்லுங்க” என இருந்த கோபத்தை அந்தப் பெண்ணின் மீது காட்டினான் மகேஷ்.
“ஆராவை வீடு வரைக்கும் வந்து ட்ராப் பண்ணியிருக்க? யார் நீ அவளை லவ் பண்ணுறீயா” என அவள் கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க, அவ என்னோட ஃப்ரெண்ட்” என நகர முற்பட்டவனைத் தடுத்தவள்.
“என்னோட பேர் மஹதி. ஆதித் கிருஷ்ணாவை லவ் பண்ணுறேன்” எனச் சொன்ன நொடியில், மகேஷின் முகத்தில் ஒரு பளிச்சிடல்.
“நிஜமாதான் சொல்லுறீங்களா?” என மகேஷ் அதிர்வுடன் கேட்க,
“இப்படி நடு ரோட்டிலலாம் நிண்ணு டிஸ்கஸ் பண்ணுற விசயம் இல்லை, இன்னைக்கி நைட் மீட் பண்ணி பேசலாம். நான் கால் பண்ணி இடத்தைச் சொல்றேன்” என்றவள் அவளுடைய அலைப்பேசி எண்ணை மகேஷிடம் கொடுத்துச் சென்றாள் மஹதி.

