
அத்தியாயம் 19
இன்று…
இரவின் குளிர் தென்றல் ரம்மியமாக அந்த அறையை நிரப்பிக் கொண்டிருக்க, சாளரத்தை மறைக்க முயன்ற வெண்மை நிற திரைசீலைகள் முன்னும் பின்னும் காற்றில் அசைந்தாடிக் கொண்டே இருந்தது. மயக்கமுற்ற பெண்ணவளை தன் இரு கைகளில் ஏந்தியபடி மெத்தையின் மீது படுக்க வைத்த நந்தாவின் பதற்றம் அவனது முகத்திலேயே நன்கு தெரிந்தது.
“அடியே, என் ஜூஜிலி எந்திரிடி. தெரியாமல் பண்ணிட்டேன். நான் அடிச்சது தப்பு தான், சாரி. இப்போவாவது எழுந்திரிடி என் ராசாத்தி.” என்றவன் அவளது கன்னத்தை மெதுவாக தட்டிப் பார்த்தான்.
“நோ ரெஸ்பான்ஸ். இவ உண்மையிலேயே மயங்கிட்டாளா? இல்லை வேணும்னே பண்றாளானு தெரியலையே. எனக்கு உன் வலி புரியாமல் இல்லை. அதுக்குன்னு இப்படி ஹை பிச்ல கத்தி இப்படி அநியாயமா மயக்கம் போட்டு விழுந்துட்டியேடி தகரமே, ச்சீ, சாரி தங்கமே.” என்றவனோ அவளது கை மற்றும் கால்களை உரசி தேய்த்து விட்டான்.
“இப்பவும் இவ எழுந்திரிக்கலையே. ஹார்ட் பீட் எப்படி துடிக்குதுனு பார்ப்போம்.” என்றவன் அவளது மார்போடு தன் தலையை வைக்க அருகே சென்ற நேரம், “நந்தா…” என்ற சத்தம் அவனது காதுகளை அடைந்தது.
“அய்யோ இவ ஹார்ட்பீட் கூட நந்தா நந்தானு துடிக்குதே.” என்றவன் பிரம்மிப்பாய் கூற, அவன் தலையை பிடித்து தன்னிடமிருந்து விலக்கிவிட்டாள் மதுவர்ணிகா. நல்லவேளை மது எழுந்துவிட்டாளே என்று மகிழ்ச்சி அடைந்தவனை தன் அனல்விழிகளால் முறைத்துத் தள்ளினாள் பெண். அவன் கை கால்களை உரசிய அதிர்வில் கண் விழித்தவள் மெதுவாக கண் திறக்கும் முன்னரே அவன் இவ்வாறு செய்யவும் அவளுக்கோ கோபம் தலைக்கேறியது.
“உனக்கு அறிவு இல்லை. இப்படி தான் வருவியா?” வலியில் தலையைப் பிடித்துக் கொண்டே அவனை வசைப்பாடினாள்.
“உயிர் இருக்கானு பார்க்க வந்தேன்டி. அதுக்கு போய் இப்படி எல்லாம் பேசுற?”
“அடப்பாவி அப்போ நான் செத்துட்டேனு முடிவு பண்ணிட்டியா?”
“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை. ஆனால் ஒரு புருசனா மட்டுமில்ல, ஒரு மனுசனா மூச்சு இருக்கானு பார்க்குறது என் கடமை அல்லவோ?”
“ஓ… நீ ஒரு மனுசன்னு வேற நினைப்பு இருக்கா?”
‘மயங்கி விழுந்ததும் மர கழன்டு போச்சா..? இப்படி சில்லித் தனமா பேசுறாள்.’ என்று மனதில் நினைத்தவன், “மனுசன் மட்டும் இல்லை பேபி உன் புருசனும் நான் தான்.” என்றான் தெனாவெட்டாக.
“செருப்பு பிஞ்சுடும். நாளைக்கே இந்த நடிப்பு டிராமாவை முடிச்சுக்கலாம். போதும் இதுக்கு மேல உங்கிட்ட என்னால மண்டையை உடைக்க முடியாது.” என்று உயர்குரலில் அவள் கத்தும் போதே தலை வின்னென்று வலித்தது.
தலையைப் பற்றியவள் அப்படியே ஒருநிமிடம் அசையாது அமர, அவளை நெருங்கியவன், தண்ணீரை எடுத்து வந்து குடிக்க வைத்தான். “எதுவும் பேசாத. நீ தூங்கு… எதுனாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்.” என்று கரிசனமாக கூறியவனை எதிர்க்க மனமும் பலமும் இன்றி அமைதியாக பார்த்தாள்.
தண்ணீர் அருந்தியதும், மெத்தையின் மீது அவள் படுக்க ஏதுவாக தலையை சாய்க்க உதவியவன், அவளை போர்வையால் மூடினான்.
“எதுக்கு இது எல்லாம் செய்ற?”
“எதுவும் பேசாமல் தூங்கு மது.” என்றவன் தைலத்தை எடுத்து வந்து அவள் அனுமதியை கூட எதிர்பாராமல் நெற்றியில் தேய்த்து விட்டான்.
“நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவனெல்லாம் இல்லையே.”
“ம்ம்ம்… நல்லவன் இல்லை தான். அதே சமயம் உடம்பு சரியில்லாமல் நீ இருக்கப்போ வேடிக்கை பார்த்துட்டு போற அளவுக்கு மோசமானவனும் இல்லை.”
“உன்னை எவ்வளவு அசிங்கப்படுத்திருக்கேன். இருந்தும் ஏன் இப்படி பண்ற?”
“ஏன்னா யூ ஆர் மை வொய்ஃப்.” அவன் கூறவும் அவள் எதையோ கூற வாய் திறக்க, அவளது உதட்டின் மீது ஒற்றை விரலை வைத்து அடைத்தவன் அவளை இமைமூடாது பார்த்தான்.
“எஸ் இது அக்ரிமெண்ட் மேரெஜ் தான். உன்னை பொறுத்தவரைக்கும் நான் நடிக்க மட்டும் தான் வந்திருக்கேன். இதுவும் அந்த நடிப்புல ஒன்னுனு நினைச்சுக்கோ மது. இப்போ தூங்கு.” என்று மெலிதாக புன்னகையை உதிர்த்தவன் நகர, அவனையே கேள்வியாக பார்த்தது மதுவின் கண்கள்.
அந்த புன்னகையில் வலியை அடக்கியவனது கண்களுக்கு அவ்வலியை மறைக்க தெரியவில்லை. அவனையும் மீறி ஒரு துளி ஈரம் கசிந்தது. எப்போதும் போல அவன் கீழே படுத்துக்கொள்ள, மெத்தையில் படுத்தவள் விட்டத்தை வெறித்துப் பார்த்தாள்.
இன்று அவனை நடுவழியில் விட்டுவிட்டு சென்றது தவறு என்று பெண்ணவளின் மனம் சிந்தித்தாலும், அவனது நெருக்கமும் உரிமையும் அவளுக்கு பயத்தை தான் கொடுத்தது.
தன் வாழ்வில் நடந்த மோசமான நிகழ்வால் காதலை வெறுத்துவிட்டாள் அல்லவா? ஏனோ அவன் கூறிய என் மனைவி என்ற சொல் மட்டும் அவளது செவிகளில் விழுந்துக் கொண்டே இருக்க, இமைகளை தாழ்த்தியவளது விழியோரம் கண்ணீர் தரைப்புரண்டது. அப்படியே இமைதாழ்த்தியவள் தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.
***
பதுங்கியபடி ஒவ்வொரு அறையையும் கடந்து சென்றுக்கொண்டிருந்தான் உமா. இறுதியாக வெண்ணிலாவின் அறைக்குள் புகுந்தவன் கதவை அடைத்து சத்தமின்றி தாழிட்டான். பெண்ணவளோ மெத்தையில் உறங்கிக் கொண்டிருக்க, சத்தமின்றி பூனை போல அவளிடத்தில் சென்றவன் அவளையே இமை மூடாது பார்த்தான். அழகான அவள் கண்கள் மூடியிருக்க, உறக்கத்தின் பிடியிலிருக்கும் தேவதைப் பெண்ணவளை காணும் போதே காதல் பெருகியது. அவளது கன்னத்தை மெதுவாக வருடி விட்டான். அவளோ நெளிந்தாள்.
அவள் நெளிந்த சமயம் பெண்ணவளின் கழுத்து வளைவு மடிந்து கோடு போல தெரிய, இரவு வெளிச்சத்திலும் அதை அவன் ரசித்தான். மிகவும் சிறிய மச்சம் அவளது கழுத்தில் தெரிந்தது தன் விரலால் அவன் தொட, அவன் கைகளின் புறம் முகத்தை திருப்பியபடி படுத்துக் கொண்டாள் நிலா.
“நிலா அழகி…” என்றவன் அவளருகில் படுத்துக் கொள்ள, அவனது சூடான மூச்சுக்காற்று பெண்ணவளின் முகத்தில் பட்டுவிட்டு சென்றது. அதில் தன் கண்களை சுருக்கியபடி திறந்தவள் அவனைக் கண்டுக்கொள்ள, அடுத்த நொடி கத்த தயாராகி இருந்த அவளது உதட்டினை மீண்டும் சிறைப்பிடித்துக் கொண்டான் இந்த நல்லவன்.
அவன் இதழ் அவளிதழை தீண்ட, ஆணவனின் கைகளோ அவளது உடலைத் தீண்ட நினைத்த வேளையில் அருகிலிருந்த கத்தியை எடுத்த நிலா அவனது வயிற்றின் மீதே குத்தியதில், ஆவென்று கத்தியபடி பதறி எழுந்தான் உமாபதி.
அதுவரை நிஜம் என்று அவன் நினைத்த நிகழ்வு கனவு என்பது புத்தியில் உரைக்க, அவன் முகம் முழுவதும் வியர்த்துப் போனது.
“அய்யோ கனவா? இவ்வளவு தத்ரூபமாவா வரணும்.” பதறிப்போய் அருகிலிருந்த தண்ணீரை எடுத்தவன் குடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
“இந்த வெண்ணிலா ஓமக்குச்சி என்ன இந்த பாடுபடுத்துறாளே… ச்சே உலக அழகிகள் பலர் இருக்க, இந்த உள்ளூர் கிழவி வந்து இப்படி டார்ச்சர் பண்றாளே. தலைகீழா குதிச்சாலும் குதிப்பேனே தவிர இந்த பயபுள்ளைய மட்டும் மனசுக்குள்ள குடிவைக்கவே மாட்டேன்.” என்றான் உறுதியாக.
நேற்று நடந்தவற்றின் தாக்கம் தான் இந்த கனவு என்று மனதை தேற்றிக் கொண்டவனோ குளியலறைக்குள் நுழைந்தபடி முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவினான்.
நேற்று வெண்ணிலாவிடம் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் செவியில் கேட்டுக் கொண்டே இருந்தது.
“ச்சீ வெட்கமா இல்லை. நீ எல்லாம் ஒரு பொண்ணா. முத்தம் கொடுத்ததும் பல்லை இளிச்சுட்டு வர. அவ்ளோ கேவலமானவளா நீ? என்கிட்ட மட்டும் தான் இப்படியா? இல்லை எவன் முத்தம் கொடுத்தாலும் இப்படி தான் வழிஞ்சுட்டு போவியா?” என்றவனின் கூர் சொல் நேற்று அவளை சுக்குநூறாக உடைத்து விட்டது.
என்ன வார்த்தை சொல்லிவிட்டான். அவனை மட்டும் மனதில் சுமந்தவளுக்கு, அவன் கூறிய வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை. தன்னை அத்தனை கீழ்த்தரமானவளாக எண்ணிவிட்டாரா? என்று வலி நிறைந்த பார்வை பார்த்தவள், அடுத்த நொடி அவனை ஓங்கி அறைந்தாள்.
“என் பாசத்துக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நீ.” இதை மட்டும் கூறியவள் வேறு எதுவுமே பேசாது அறைக் கதவைத் திறந்தபடி ஓடியிருந்தாள். நல்லவேளையாக அவள் அவனது அறையிலிருந்து செல்வதை யாருமே பார்க்கவில்லை.
அவளடித்ததும் அந்நொடி ஸ்தம்பித்து நின்றவன் அவளைத் தடுக்க முயற்சிக்கவில்லை.பேசிய பின்னரே அவன் சொல்லின் வீரியத்தை உணர்ந்தான். அதை பற்றியே நினைத்துக் கொண்டே உறங்கியவனது கனவிலும் வந்து இம்சித்தாள் வெண்ணிலா.
“நேத்து நான் பேசுனது ரொம்ப தப்பு. இன்னைக்கு அவகிட்ட மன்னிப்பு கேட்ரலாமா?” அவன் மனம் யோசித்தது.
“அவ தான் அறைஞ்சுட்டு போனாளே. அதுக்கு இது சரியா போச்சு. நம்ம ஒன்னு மன்னிப்பு கேட்க வேண்டாம். அவ நான் கிஸ் பண்ணப்போவே அறைஞ்சிருந்தா நான் ஏன் அப்படி பேச போறேன். அவ மேல தான் தப்பு.” என்றவனது மூளை பதில் கூற, அதுவே சரியென்று முடிவு செய்தவன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் அறைக்கு சென்றான்.
இங்கு உறங்கிக் கொண்டிருந்த மது, தாமதமாகவே கண் விழித்தாள். சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அவன் அறைக்குள் இல்லை என்பது புரிய, பெருமூச்சொன்றை விடுத்தபடி எழுந்தவள் அருகிலிருந்த டெடி பியர் பொம்மையை பார்த்தாள்.
‘இதை யார் இங்க வெச்சது?’ என்றவள் யோசிக்கும் போது அந்த பொம்மையின் கழுத்தில் கட்டப்பட்ட சீட்டு ஒன்று கண்களில் பட்டது. எடுத்தவள் படித்துப் பார்த்தாள்.
“காலை வணக்கம் மது. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு பார்க்குறியா? எல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி நடக்கப் போகுது. இன்னைக்கு ஒரு நாள் முழுக்க என் தொல்லை இல்லாமல் நீ ஜாலியா இருக்க போற. ஹாப்பி டே மது.” என்று எழுதியிருக்க இவள் முகமோ யோசனையில் சுருங்கியது.
“இவன் என்ன பிளான் பண்ணியிருக்கானு தெரியலையே? எதுக்கு இப்படி எல்லாம் பண்றான். மடையன் என்னமோ பண்ணட்டும் இன்னைக்கு ஒரு நாள் இவன் தொல்லை இல்லாமல் நிம்மதியா இருக்கலாம்.” என்றவள் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
பல்லை விலக்குவதற்காக பிரஸ் எடுக்க, அங்கும் ஒரு சீட்டு இருந்தது.
“பல்லை துலக்கினால் கறை போகும். உன் மனதை அலசினால் உன் மனம் மாறும். எப்படி நல்லாயிருக்கா? சும்மா சொல்லணும்னு தோணுச்சு. நல்லாயிருந்தா ஸ்மைல் பண்ணு. நல்லா இல்லைனாலும் ஸ்மைல் பண்ணு.” என்று அதிலிருக்க,
“இவனை…” என்று பல்லைக் கடித்தாள் மது. “அய்யோ ஆண்டவா இவன் மெண்டலா இல்லை மெண்டல் மாதிரி பண்றானா? ஒண்ணுமே புரியலையே.” என்று தலையில் கை வைத்தவள் பற்களை துலக்கி விட்டு கீழே வந்தாள்.
வந்ததுமே அவளுக்கு தேநீர் ரெடியாக இருக்க, வேலைக்கார அம்மா அவளது கைகளில் கொடுத்தார்.
“தாங்ஸ் கீதாக்கா.” என்றவள் வாங்கி அதை அருந்த பால் சேர்க்கப்படாத அந்த கசாயம் அவளது தொண்டைக்கு இதமாக இருந்தது. நேற்றைய தலைவலிக்கும் அது மருந்தாகி போக, கண்களை மூடி தேநீரை ரசித்துப் பருகினாள்.
“வாவ் இது நல்லாருக்கே. என்ன புதுசா இந்த டீ ட்ரை பண்ணி இருக்கீங்க?”
“நந்தா தம்பி சொன்னாரும்மா. அவர் சொன்ன மாதிரி வெச்ச கசாயம் இது.” என்றவர் கூறும் போதே பொறை ஏறியது மதுவிற்கு. வேறுவழியின்றி குடித்தவள் கடுப்புடன் அங்கிருந்து நகர, அவ்விடம் வந்தான் உமாபதி.
“குட் மார்னிங் வருணி. ஆமா மாமா எங்க?”
“ஏன்டா, எப்போ பாரு அவரை பத்தி தான் கேட்பியா? என்னை கேட்டா, எனக்கென்ன தெரியும்.”
“நீ தான அக்கா அவரோட மனைவி. உங்கிட்ட கேட்காம யார்கிட்ட போய் கேட்க? பொறுப்பே இல்லாமல் பேசுற?”
“போடா. பொண்ணா மட்டும் பொறந்திருந்தா உங்க மாமாவை இரண்டாதாரமா கட்டிக்க கூட ரெடியா இருப்ப போல” என்று சிடுசிடுத்தவள் முகப்பு அறையிலிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள்.
“ஹாஹா ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு கா.” என்றவனோ புன்னகைத்து விட்டு செல்ல, அவளோ தலையில் அடிக்காத குறையாக அமர்ந்திருந்தாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த தந்தையிலிருந்து, நடைப்பயிற்சி முடித்து வந்த அன்னை வரை நந்தாவை பற்றி கேட்க, அவளுக்கு எங்கு சென்று தலையை முட்டிக் கொள்வதென்றே தெரியவில்லை.
‘இந்த தடிமாடு இருந்தாலும் தொல்லை. இல்லைனாலும் தொல்லை.’ என்று புலம்பியபடி எழுந்தவள் தனதறைக்கே மீண்டும் சென்றாள்.
உமாபதியோ தந்தையிடம் பேசியபடி க்ரீன் டீயை பருகிக் கொண்டிருந்தான். அவர் முன்பு நல்ல பிள்ளை போல் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தவன், வெண்ணிலாவின் வருகையை கண்டதும் அவனையும் மீறி அவளை திரும்பி பார்த்தான். ஆனால் அவள் பார்வையோ அவன் மீது திரும்பவே இல்லை.
தாமோதரனும் பேப்பரை மடித்துவிட்டு முக்கியமான மீட்டிங் ஒன்று இருப்பதால் தயாராகிக் கொள்வதற்காக அறை நோக்கி சென்று விட்டார். அவர் சென்றதும் இவன் கவனம் முழுவதும் அவள் மீது பதிந்தது. அவள் கண்முன்னே வேண்டுமென்ற சென்றான்.
உணவு உண்ணும் மேசையின் இருக்கையில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. முகமே வாட்டமாக இருந்தது. இரவு எல்லாம் அழுதிருப்பாள் என்பதை பார்க்கும் போதே தெரிந்தது.
வேண்டுமென்றே அவளுக்கு எதிராக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டான் உமாபதி.
“கீதாக்கா, ஒரு ஸ்ட்ராங் காபி கொண்டு வாங்க குடிக்கணும் போல இருக்கு.” என்றான் சத்தமாக. அவன் வந்ததை உணர்ந்தவள் முகம் சுளித்தபடி அங்கிருந்து எழுந்தாள்.
“என்னை பார்த்தாலே பயமா இருக்கா?” வேண்டுமென்றே வம்பிழுத்தான். அதில் கடுப்பானவள் எதுவும் பேசாது மீண்டும் அமர்ந்துக் கொண்டாள். அந்நேரம் கீதா சூடான பாலை குவளையில் எடுத்து வந்து அவளிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.
“முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ். நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்.” அவளது கவனத்தை பெறுவதற்காக இவன் பாட, அவளோ கொதிக்கும் பால் கிளாஸை கைகளில் பற்றியபடி அமைதியாக இருந்தாள்.
கீதா காபியை உமாபதியிடம் கொடுக்கவும் வாங்கிக் கொண்டவன், அதன் வாசனையை முகர்ந்து, “ஆஹா இதுவல்லவோ சிறந்த காபி.” என்று ஊதியபடி வாயில் ஒரு மிடறு அருந்தினான்.
“ஆனால் நேத்து கிடைச்ச சுவை இதுல இல்லையே.” என்று அவள் உதட்டின் சுவையை கருத்தில் கொண்டு அவன் கூறிய நொடி, தன் கண்களை கோபத்தில் மூடி திறந்தாள் வெண்ணிலா. ஏனோ அவளை கோபப்படுத்தி பார்ப்பதில் அத்தனை ஆனந்தம் அவனுக்கு.
அடுத்த நொடியே கொதிக்கும் பால் என்றும் கருத்தில் கொள்ளாமல் தனது உதட்டின் மேலே வைத்து அவள் தனக்கு தானே வாயில் ஊற்றிக்கொள்ள, பாலின் அனல் தாங்காமல் துடித்தபடி பால் கிளாசை கீழே போட்டாள் வெண்ணிலா.
இவை அனைத்தும் அவன் எதிர்பார்க்கும் முன்னரே நடந்துவிட அவளது செயலில் ஸ்தம்பித்துப் போய் நின்றான் உமாபதி. இவள் சத்தம் கேட்டு அனைவரும் வர, பெண்ணவளின் மென்மையான உதட்டின் தோல் உரிந்து சிவந்து போய் வீக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அனைவருமே பதறிப் போய் அவளை கவனிக்க, வலியிலும் பெண்ணவளின் பார்வை அவன் மீது கோபத்துடன் பதிந்தது.
நீ சுவைத்த என் உதட்டுக்கான தண்டனையை பார்? என்ற கோபம் அவள் கண்களில் தெரிந்தது. அந்நொடி உமாபதியின் முகம் அவமானம் கலந்த வலியுடன் கறுத்துப் போனது. அவன் விளையாட்டிற்காக தான் அவளை சீண்டினான். ஆனால் அவள் வேண்டுமென்றே அவளையே காயப்படுத்திக் கொண்டாள் அல்லவா?
‘என்னை பலி வாங்க உன்னை ஏன் காயப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பரிதவிப்புடன் அவளை பார்த்தவனுக்கு அவனையும் மீறி மனம் வலிக்க, தவித்துப் போய் நின்றான் உமாபதி.

