Loading

17.அத்தியாயம்

 

அவனது காதலும் வலியும் வேதனையும் வார்த்தைகளின் வழி படித்தவளுக்கு அதற்கு மேல் அவன் மீதிருந்த கோபம் எல்லாம் காணாமல்  ஓடிவிட, ஏன் தனக்காக அவன் அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என்ற எண்ணமே அந்நொடி மேலோங்கியது. காதல் கொண்ட மனதிற்கு அவன் மீதிருந்த நம்பிக்கை ஒன்றும் மொத்தமாக உடையவில்லையே. கடைசி ஒரு மாதமாக மட்டும் அவனிடமிருந்து எந்த மெயிலுமே வரவில்லை என்பதை யோசிக்கும் போது அவனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ? இல்லை அவன் வாழ்வில் ஏதேனும் பிரச்சனையோ என்றெல்லாம் யோசித்தது.

 

அடுத்த நொடி, அவள் நெஞ்சில் பதிந்திருந்த அவனது எண்ணை தனது மொபைலில் அழுத்தியபடி காதில் வைத்தாள். நீண்ட நெடிய பாடல் ஒலித்தது. அவள் மனமோ படபடத்தது கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு அவனிடம் பேசப் போகிறோம் என்ற பதட்டமும் இருந்தது.

 

அழைப்பு ஏற்கப்பட்ட நொடி காதில் வைத்தவள், “ஹலோ ரகு.” என்றாள் குரல் நடுங்க.

 

எதிர் முனையிலிருந்தவரோ, ரகு நட்சத்திர கேளிக்கை விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளதாகவும் ஆபிஸ் அஃபிசியல் பார்ட்டி என்றும், போனை மறந்துவிட்டு சென்றதாகக் கூற, அவள் முகம் மீண்டும் சோர்ந்துப் போனது.

 

போனை வைத்தவள் மனம் அவனைத் தேடியது. ஏன் அந்த இடத்திற்கு சென்று அவனை நேரில் பார்க்கக்கூடாது என்றெல்லாம் தோன்ற, வானத்து நீல நிற பிளைன் புடவை ஒன்றை ஒன்சைட் பிளீட்டில் அணிந்துக் கொண்டவள், அவனுக்கு பிடித்த ஒப்பனைகளை செய்தபடி தயாரானாள். 

 

நாலு மாதகாலம் நீடித்த தன் கோபத்தையும், அதற்கு மேல் அந்த கோபத்தை தாக்குப் பிடிக்க இயலாது போன தனது நிலையும் எண்ணியவளது இதழ்கள் அன்னிச்சையாக மலர்ந்தது. 

 

“அன்னைக்கு நீ சைத்ரா பத்தி பேசாமல் இருந்திருந்தால் கூட இந்த அளவு கோபப்பட்டிருக்க மாட்டேன். லூசு ஆனாலும் உனக்கு இருக்குடா பொய் சொன்னதுக்கு எல்லாம் உன் மூஞ்சில பஞ்ச் வெச்சுட்டு அப்புறம் தான் உன்னோட சேருவேன்.” தன் முன் நின்ற முகப்பு கண்ணாடியை பார்த்தபடி கூறினாள்.

 

தான் சொன்ன ஒற்றைக் காரணத்துக்காக தன்னை நேரில் கூட சந்திக்காமல் இருக்கின்றான் என்றால் தன்மீது அவனுக்கு எத்தனை காதலிருக்கும்? என்று நினைக்கும் போதே மலர்ந்தது பெண்ணவளின் முகம்.  

 

உற்சாகத்துடன் அவள் அறையிலிருந்து வர, பிரபாவதி அவளை அழைத்தார். எவ்வளவு மாதங்களுக்கு பிறகு தன் மகளின் முகத்தில் புன்னகை தெரிகின்றது என்று காணும் போதே தாயாக அவர் மனம் மகிழ்ந்தது. அன்று அவள் பேசிய பேச்சு இன்று பிரபாவதியின் குணத்தை முடிந்தளவிற்கு மாற்றியிருந்தது.

 

“ம்மா, நான் வெளியே போகணும்.” என்று தயங்கியவளை கண்டு புன்னகையை உதிர்த்தவர்,

 

“போயிட்டு வாடா. உன் சந்தோசம் தான் எங்களுக்கும் சந்தோசம்.” என்று உரைத்த அன்னையை பாசமாக அணைத்துக் கொண்டவள், மேலும் உற்சாகம் பொங்க மகிழுந்தை எடுத்துக் கொண்டு அந்த கேளிக்கை விடுதிக்கு சென்றாள்.

 

“கண்டிப்பா என்னை பார்த்ததும் வாயடைச்சு போயிடுவான் ரகு. அப்புறம் கண்ணு எல்லாம் கலங்கி பீல் பண்ணி சாரி கேட்பான்.” என்று கூறியவளது மனதோ சிலிர்த்தது.

 

மகிழுந்தை பார்க்கிங்கில் ஓரமாக நிறுத்தியவள் பார்ட்டி நடக்கும் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்தாள். வண்ண விளக்குகளின் மினுமினுப்பும், வெள்ளை நிற பிரகாசமான விளக்குகளும், டிஜே பாடல்களும் அவ்விடத்தை அசரடித்துக் கொண்டிருக்க, பெண்ணவளின் கண்கள் மட்டும் அவனையே தேடியது. 

 

“ரகு எங்க இருக்கீங்க?” என்று தேடியபடி வருபவளின் மீது அங்கிருந்த ஆண்களின் கண்கள் படாமல் இல்லை. புடவையில் மெழுகு சிலை போல் இருந்தாள் மதுவர்ணிகா. அவள் அவனைத் தேடியபடி வர, எதேச்சையாக ரகுவைக் கண்டவள் அவனிடம் விரைந்து வர முயற்சிக்க, அதற்குள் மாடர்ன் உடை அணிந்த பெண்ணொருத்தி அவனை நோக்கி வந்தது மட்டுமின்றி அவனை அணைத்திருந்தாள். ரகுவும் அவளை அணைக்க அதைக் கண்ட மதுவோ சிலைபோல அதே இடத்தில் நின்றுவிட்டாள். 

 

அடுத்த நொடியே இருவரும் இதழ் முத்தம் பகிர்ந்துக் கொள்ள, மதுவின் காதல் கனவுகள் ஒவ்வொன்றும் சில்லுசில்லாக நொறுங்கி விழுந்தது. எவன் ஒருவனை நல்லவனாக நினைத்திருந்தாளோ, அவன் பொய் கூறினாலும் தன் மீது வைத்திருந்தவனது காதல் உண்மை என்று நம்பினாளோ அத்தனையும் அப்பட்டமான பொய் என்று நிரூபித்தவனை கண்கள் கலங்கிப் போய் பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

 

மிகப்பெரிய ஏமாற்றம் நெஞ்சில் சுருக்கென்ற வலியினைக் கொடுக்க உதடுகள் துடிக்க நின்றிருந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

 

முகநூலில் இது போன்ற எண்ணற்ற போலியானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சிலர் எடுத்த உடனே தங்களது சுயரூபத்தைக் காட்டிக்கொள்ள, ஒருசிலர் அவனுக்கு தேவையான ஆதாயம் பெற நல்லவன் போல வேடம் தரிக்கின்றான். பொது வெளியில் முகம் தெரியாத ஒரு நபரை நம்பிவிடக்கூடாது என்பதற்கு எவ்வளவு பெரிய உதாரணம் இவள்.‌ போலியான உலகினில் நம்பத் தெரியாத ஒருவனை நம்பி, ஏமாந்து நிற்கதியாக நிற்கும் நிலையினை அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

 

“ஹலோ லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் நம்ம ரகுவும் நம்ம தாரிகாவும் கூடிய விரைவில் மேரேஜ் பண்ண போறாங்க. அவங்களுக்காக எல்லாரும் இந்த பார்ட்டியை என்ஜாய் பண்ணுவோம். சியர்ஸ்.” என்று ஒலிவாங்கியில் ஒருவன் பேச, அதைக் கேட்டவளது மனம் துடித்து அடங்கியது. தலையில் பாறாங்கல்லை போட்டது போல ஒரு உணர்வு.

 

உண்மையாக தன்னை அவன் காதலித்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டானல்லவா? அப்போ அவன் காதல் பொய்யா? என்றவள் அவனை நோக்கி கேள்வி கேட்பதற்காக நகர, ரகுவோ வேறொருவனிடம் பேசிக்கொண்டிருந்தது இவளது காதுகளில் விழுந்தது.

 

“டேய், உனக்கு எங்கயோ மச்சம்டா. எப்படிடா ஒன்னு போனா இன்னொன்னு?”

 

“எதுவும் அவ்வளவு சீக்கிரமா கிடைக்காதுடா. ரொம்ப முயற்சி பண்ணனும் ஒன்னு விட்டு போச்சு. இன்னொன்னு முயற்சி பண்ணாமலே வழிய வந்து மாட்டுச்சு. போனது நினைச்சு பீல் பண்ணாமல் வர்றத  ஏத்துகிட்டேன். தட்ஸ் இட்…”

 

“என்னடா,அப்போ லவ்?”

 

“லவ்வா நமக்கு சோறு போடும். பணம், பணம் தான்டா எல்லாமே. பணத்தை தர்ற மகாலட்சுமியை காதலிச்சு செட்டில் ஆகலாம்னு நினைச்சேன். அது மாடர்ன் மகாலட்சுமியா இருந்தா என்ன? டிரெடிஷ்னல் மகாலட்சுமியா இருந்தா என்ன?” அசட்டையாக அவன் உரைத்த சொல்லைக் கேட்டவளுக்கு ரத்தம் எல்லாம் கொதித்தது. 

 

“அப்போ நீ உண்மையா லவ் பண்ணலையா?”

 

“உண்மையா என்ன அவ லவ் பண்ணியிருந்தால் போயிருக்க மாட்டா. தப்பிச்சா போதும்னு அவ இருக்குறப்போ எனக்கு மட்டும் எதுக்குடா **** லவ் எல்லாம். பணம் இருந்தால் எல்லாருமே நம்மளை தேடி வருவாங்க” என்றவன் பற்களை கடிக்க, அவன் முன்பு வந்து நின்றாள் மதுவர்ணிகா.

 

அவளை சற்றும் எதிர்பாராதவன் அதிர்ந்து போய் நிற்க, அவனை ஓங்கி அறைந்திருந்தாள் மதுவர்ணிகா. அவள் அங்கு அத்தனை பேரின் முன்பும் அவனை அடித்திருக்க, அவள் செயலைக் கண்டு தாரிகா முதற்கொண்டு அனைவருமே அதிர்ந்து போய் அவளை பார்த்தனர்.

 

 

அவளை அவ்விடம் அவன் எதிர்பார்க்கவில்லை என்று அவன் அதிர்விலேயே தெரிந்தது. கண்கள் சிவந்து போய் அவளை நிமிர்ந்து பார்த்தவன், “வர்ணிகா” என்று வார்த்தைகளை உதிர்க்க, அடுத்த நொடி மீண்டும் அறைந்தாள். தாரிகா பதறியவள், “ஏய்?” என்று எகிறிக் கொண்டு வர, அவளை ஒற்றை விரல் நீட்டி முறைத்துப் பார்த்தவளின் பார்வையில் அப்படி ஒரு கோபம்.

 

“என் பேர் சொல்ற அருகதை கூட உனக்கு கிடையாது. என்னடா ஒரு பொண்ணு இல்லைனா இன்னொரு பொண்ணா. பொண்ணுங்கனா உனக்கு அவ்ளோ இளக்காரமா போச்சா. நீ இந்தளவு கேடுகெட்ட பொறுக்கியா இருப்பேனு கனவில கூட நான் நினைச்சதில்லை‌ ச்சீ நீ எல்லாம் ஒரு மனுசனா? அப்புறம் தாரிகா உன்னை பார்த்தாலும் என்னை பார்க்குற மாதிரி தான் இருக்கு. நீ நினைக்குற அளவுக்கு அவன் நல்லவன் இல்லை.”

 

“ஏய், வாய் இருக்குனு தேவையில்லாம பேசாத.  உன்னோட பழகுன ஒரு நாள்லயாவது என் விரல் நுனி உன் மேல பட்டிருக்குமா? நீயா விலகி போன, அதுக்கு அப்புறம் நான் என்ன ஆனால் உனக்கென்ன? நீ போனதும் உன்னை இப்படி நேர்ல வந்து அவமானப்படுத்திருக்கேனா சொல்லு டி. ஆனால் நீ என்னையவே அறைஞ்சிட்டு இருக்க? என்னடி நினைச்சிட்டு இருக்க?” என்றவன் அவளை அறைய கை ஓங்க, தாரிகா அவனது கைகளை பற்றி தடுத்து நிறுத்தினாள்.

 

“இங்க என்ன நடக்குது? நீயும் அவளை அறைய கை ஓங்குற? அவளும் ஏதேதோ சொல்றா, அப்போ உனக்கு அவளை தெரிஞ்சிருக்கு அப்படி தானே?”

 

“அது சார் எப்படி சொல்வாரு. சார்க்கு நல்லவன் வேசம் மட்டுமே போடத் தெரியுமே. அது எப்படி சார் த்ரிஷா இல்லைனா நயன்தாரா மாதிரி டிரெடிஷ்னல் மகாலட்சுமி இல்லைனா மாடர்ன் மகாலட்சுமியா? பணம் மட்டும் தானே உன் பிரதானம். ச்சா என்ன மனுசன் நீ? 

 

உங்கள மாதிரி ஆளுங்க பொண்ணோட வீக்னஸ் தெரிஞ்சு அவங்ககிட்ட நல்லவங்க வேசம் போட்டு, ஒன்னு அவங்களை அடையணும் இல்லை அவங்களோட சொத்தை பறிக்கணும். அதுக்காக எந்த லெவலுக்கும் போவீங்க அப்படி தானே. சைத்ரா சொன்னா எவ்வளவு மோசமான உலகம் இதுனு. நான் தான் கிறுக்கச்சி மாதிரி நீ நல்லவன்னு நினைச்சு உன்னை தேடி நம்ம காதலுக்காக ஓடி வந்தேன். ஆனால் இங்க வந்த அப்புறம் தானே தெரியுது, சார்க்கு அடுத்த ஜோடி நாலே மாசத்துல கிடைச்சாச்சுன்னு. 

 

எப்படி சார் இவங்களை விட பணக்கார பொண்ணு கிடைச்சா, இவங்களை கழட்டிவிட்டுட்டு அடுத்து இன்னொன்னா? சொல்லுடா” என்றவள் அவனை அருவருப்பான பார்வை பார்க்க அவமானப்பட்டு போய் நின்றான் ரகுவரன்.

 

இருந்தும் அவள் மீண்டும் தன்னை காண வந்தாளா? என்று யோசிக்கும் போதே அவன் மனதில் சிறு நடுக்கமும் பதட்டமும் தோன்றியது. அவன் நினைத்த பெண்களை காட்டிலும் அவள் மாறுபட்டுத் தெரிந்தாள்.

 

“வரு…” அவனையும் மீறி அவன் கூற முற்படும் முன்னரே ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவள், 

 

“என் பேரை சொல்லக் கூட உனக்கு தகுதி இல்லை. உன்னை மாதிரி ஒருத்தனை நான் காதலிச்சேன்னு நினைக்கும் போதே உடம்பு கூசுது. கடவுள் கிட்ட வேண்டிக்கோ இனி நீ எப்போதும் என் கண் முன்னாடி வரக்கூடாதுனு.” என்றவள் அவனை ஒற்றை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு செல்ல, அங்கிருந்த அத்தனை பேரும் இவனை கேவலமான பார்வை பார்த்தனர்.

 

அவளாவது அவனை மிரட்டி விட்டுச் சென்றாள். தாரிகா அவனது ஓனருடைய மகள் என்பதால் வேலையையும் பறித்து அவன் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு காவல் துறையில் புகார் அளித்து அவனை பிடித்துக் கொடுத்து விட்டுச் சென்றாள். அந்நொடி அவமானத்தில் உழன்றவனுக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. அவன் நண்பன் தான் காவல் நிலையத்திலிருந்து அவனை வெளியே எடுத்தது மட்டுமின்றி அவன் இங்கிருந்தால் சரிபட்டு வராது என்று மும்பைக்கு அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.

 

மென்மையான மனம் கொண்ட மதுவால் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வீட்டில் தற்போது தான் அமைதி நிலவியதால் யாரிடமும் எதையும் கூறாமல் மறைத்துவிட்டாள், எங்கு மீண்டும் தன்னை வெறுத்து விடுவார்களோ என்ற பயத்தில்.

 

சிலநேரம் தனிமையில் அழுதாள். சிலநேரம் செத்து விடலாமா?என்றெல்லாம் தோன்றியது. நாட்கள் செல்ல பலவீனமாக தன்னைத் தானே உணர்ந்தாள். வெளியே நன்றாக பேச முயன்றாலும் உள்ளுக்குள் தன் வேதனைகளை அடக்கிக் கொண்டே சென்றவளுக்கு அது ரணமாக மாறியது.

 

இந்நிலையில் வைஷ்ணவிக்கும் வருணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு சென்றவளது மனம் ஓரளவு லேசானது. அவ்விடம் வந்த நிரஞ்சனா என்பவளுடன் அன்றிரவு தங்கியிருந்தாள். அன்று நிரஞ்சனா தனியாக அமர்ந்து குடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட மது அதிர்ந்து தான் போனாள்.

 

விசாரித்ததில் தான் தெரிந்தது அவளும் ரகுவை போன்று வேறொருவனிடம் பாதிக்கபட்டு தன்னையே இழந்திருக்கிறாள் என்று. அந்த நினைவுகளை மறப்பதற்காக ஆரம்பித்த பழக்கம் என்று கூறுபவளை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டாள். பின் அவளை குடிக்க விடாது தடுத்தவள் பாட்டிலை வாங்கி ஒளித்து வைத்தபடி அவளை உறங்க வைத்தாள்.

 

திருமணம் முடிந்த பிறகு. மகிழுந்தை ஓட்டிக்கொண்டு வந்தவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. அந்த பாட்டிலை தனது பையில் ஒளித்து வைத்தது. தனது பையைத் திறந்தவள் பாட்டிலை வெளியே எடுத்தாள். அதை தூக்கி எறிவதற்காக சென்றவளது மனதில் நிரஞ்சனா கூறிய வார்த்தைகள் நினைவில் வந்தது.

 

“ஒவ்வொரு ராத்திரியும் அவனால இழந்த என் வாழ்க்கையை நினைச்சு ரணமா நெஞ்சு வலிக்கும். அவன் தொட்ட உடம்பு கூசும். அப்படியே துடிச்சு போயிடுவேன். அப்போ எனக்கான ஆறுதல் இது மட்டும் தான். இதை எங்கிட்ட கொடு மது. இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது.” என்று கூறிய வார்த்தைகளை நினைத்தவள் கண்களை மூடித் திறந்தாள்.

 

இந்த மதுபானம் தன் கவலையை மறக்க செய்யுமா? என்று தோன்ற மூடியை திறந்தவள் வாயின் அருகே எடுத்து சென்ற நொடி அந்த வாசனை அவளுக்கு குமட்டலைக் கொடுத்தது.

 

“ச்சீ…” என்று அருவருத்தவள் தள்ளி வைத்தாள். அப்போது அவளது கைப்பேசியில் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வர, எடுத்தவள் காதில் வைத்தாள்.

 

“வர்ணி, நான் ரகு பேசுறேன்.” என்றவன் குரல் கேட்ட நொடி தூக்கி வாரிப்போட்டது அவள் தேகம்.

 

“ச்சீ வெக்கமா இல்லை. உன் குரல் கேட்குறது கூட பாவம். த்தூ போனை வைடா.” என்று கத்தியவள் கோபத்தில் தன் கைப்பேசியை தூக்கி போட்டு உடைத்திருந்தாள். அத்தனை கோபம் அவன் மேல் இருந்தது.

 

“திரும்பவும் அவனுக்கு எப்படி பேச மனசு வந்துச்சு பாவி, அயோக்கியன் ஏமாத்துக்காரன்.” என்றெல்லாம் வசைப்பாடியவள் அவன் மீதிருந்த ஆத்திரத்தில் மதுபானத்தை எடுத்து கண்களை மூடியபடி முழுவதுமாக குடித்துவிட்டாள்.

 

குடித்ததும் அவளது தலை சுற்றியது. குடித்த பிறகு யோசித்தது. “அய்யோ தப்பு பண்ணிட்டோமே.” என்று கலங்கியது. காரிலேயே சிலநொடி அமர்ந்தவள் அதை இயக்க முயற்சித்தாள். அதுவும் அவளால் முடியவில்லை. காரை விட்டு இறங்கியவளுக்கு அனைத்தும் கலங்களாக தெரிந்தது.

 

“அய்யய்யோ என்ன எல்லாம் நாலுநாலா தெரியுது. நான் எப்படி வீட்டுக்கு போவேன். மம்மி, டாடி வாங்க. டேய், உமா தம்பி வாடா.” என்றெல்லாம் உளறியவள் ஏதேனும் வண்டி வருகிறதா என்று கண்களை கசக்கியபடி பார்த்தாள்.

 

அந்நொடி நால்வர் அடங்கிய கார் ஒன்று அவளைக் கடந்து செல்ல, பெண்ணொருத்தி தனித்து நிற்பதைக் கண்டு மீண்டும் பின்னால் ரிவர்ஸ் எடுத்தபடி கார் அவள் முன்பு வந்து நின்றது.

 

“ஐ லாரி.” என்றவள் சிரிக்க, காரை விட்டு இறங்கினான் ஒருவன்.

 

“ஹாய் உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?”

 

“வேணும். நான் செத்து போக ஹெல்ப் பண்றியா?” அவள் கேட்கும் தோரணையில் தெரிந்தது அவள் குடித்திருக்கிறாள் என்று. தன் நண்பர்களிடம் எதையோ செய்கை செய்தான்.

 

“ஹெல்ப் தானே தாராளமா பண்றோம். எங்ககூட மட்டும் வா ஓகேவா.” 

 

“நீங்க யாரு? நீ பையனா இருந்தால் நான் வரமாட்டேன்.”

 

“நான் உன் பிரெண்ட். என்னோட நீ வரலாம் வா. உனக்கு சாக நாங்க வழிக் காட்டுறோம்.” என்றவளை எவ்வளவு முயன்றும் காரில் ஏற்றவே முடியவில்லை அவர்களால்.

 

“டேய் மச்சான், கார்ல ஏறுலனா என்ன? அந்த பக்கம் மறைவா கூப்பிட்டு போகலாம்.” என்றொருவன் கூற, அந்த ஆள் அரவமற்ற இடம் அந்த கயவர்களுக்கு வசதியாகிப் போனது. 

 

அவளது கரம் பற்றி நால்வரும் அவளை அழைத்துச் செல்லப் பார்க்க, அவளுக்கு அவர்களது செயல் தவறு என்று மட்டும் பட்டது.

 

“என்ன விடுங்கடா. நீங்க கெட்ட பசங்க. விடுடா.” என்றவள் கத்த தொடங்கினாள். ஒருவன் முன்னோக்கி செல்ல மூவர் அவளை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு செல்ல, அவள் போதையிலும் கத்த தொடங்கினாள்.

 

அவளது கத்தல் சத்தம் சாலையைத் தனது இருசக்கர வாகனத்தில் கடந்துச் சென்ற ஒருவனுக்கு சரியாகக் கேட்டது. அவ்விடம் இரண்டு கார்கள் தனித்து நிற்பதைக் கண்டவனுக்கு எதுவோ தவறாகப்பட, தனது வண்டியை நிறுத்திவிட்டு கத்தல் சத்தம் கேட்கும் திசை நோக்கி சென்றவனது உள்ளம் உலையாய் கொதித்தது. அவளை அன்று பேருந்தில் கண்டவன் தற்போது இச்சூழலில் காண்கிறான். வந்தவன் சாட்சாத் நந்தாவே.

 

அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை மது அந்நிலையில் கிடப்பாள் என்று. அவர்களோ அவளை அடைய முயற்சிக்க, கோபத்தில் கைமுஷ்டியை மடக்கியவன் நால்வரையும் பொளந்துக் கட்டத் தொடங்கியிருந்தான். நால்வரும் சேர்ந்து அவனைத் தாக்கினர். அடிகள் பெற்றாலும் அவன் கொண்ட கோபம் அந்த நால்வரையும் அடித்து நொறுக்கியிருந்தது.

 

தன்னிடமிருந்த பாக்கெட் கத்தியை எடுத்தவன் நால்வரில் ஒருவனது கையினை வெட்ட, அவனிடம் ஆயுதம் இருப்பதைக் கண்டு பயந்தனர். இவர்களது கைகளில் தற்காத்துக் கொள்ள எதுவுமே இல்லை. அவனது பலமான உடல்வலிமையில் அவர்கள் நால்வருக்கு தான் அடிகள் அதிகமாக விழுந்தது. 

 

“பொறுக்கி நாயிகளா… அப்படி என்னடா உங்களுக்கு கேடு. ஒரு பொண்ணையும் விடமாட்டிங்களா. உங்களை மாதிரி ஆளுங்களை அறுத்து துடிக்கத் துடிக்க கொல்லணும்.” என்றவன் ஆவேசத்தில் மோசமாக தாக்க, மிரண்டு போன நால்வரும் விட்டால் போதும் என்று தெரித்து ஓடினர்.

 

போதையில், “என்ன விடு… என்ன பண்றீங்க. தள்ளி போங்க.” என்று பிதற்றிக் கொண்டிருந்தவளைத் தன் இருகைகளிலும் ஏந்தியவனுக்கு அவள் மீதும் கோபம் வந்தது.

 

தனியாக ஏன் வந்தாள்? அதுவும் குடித்து வேறு இருக்கிறாள்? ராட்சசி பாரபட்சம் இல்லாமல் அவளை மனதில் வறுத்தெடுத்தான் நந்தா. பேருந்தில் கண்ட நொடியே அவள் அவன் மனதில் பதிந்துப் போயிருந்தாள். வருடங்கள் ஓடினாலும் அவன் மனம் அவள் முகத்தை மறக்கவில்லை. 

 

அவள் வந்த காரினுள் ஏற்றியவன், காரில் கிடந்த மதுபாட்டிலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அதுவரை அவர்கள் தான் அவளை குடிக்க வைத்திருந்தனர் என்று நினைத்தவனுக்கு தற்போது கோபம் எகிறியது.

 

“ஏய், குடிச்சியாடி.” என்றவன் அவளது கன்னத்தை தட்டிக் கேட்டான்.

 

“ஆமா நிறையா குடிச்சேன். ஆமா நீ யாரு? நீ ரகுவா?” என்றவளது கேள்வியில் அவனுக்கு குழப்பமே மிஞ்சியது.

 

“அறிவு இருக்கா? நீ என்ன குடிகாரியா? இந்த கருமத்தை எல்லாம் குடிக்க.”

 

“அப்படி சொல்லாத… எனக்கு சாகணும். அதுக்கு தான் குடிச்சேன்.”

 

“மண்டையில மசாலா இருக்கா உனக்கு. அழகு இருக்க உனக்கு அறிவு இல்லைனு நிரூபிக்கிறியா? குடிகாரி குடிகாரி…” என்றவன் திட்டவும் ஓவென அழத் தொடங்கினாள்.

 

“அப்படி சொல்லாத நான் குடிகாரி இல்லை. இதுதான் ஃபர்ஸ்ட் டைம்.” என்று உதட்டை பிதுக்கியபடி கேவி அவள் அழுக,

 

“நான் மட்டும் வரலை அவனுங்க உன்னை நாசம் பண்ணியிருப்பாங்க. ஃபர்ஸ்ட் டைம் ரொம்ப முக்கியம். பைத்தியகாரி. உன் உடம்பை தற்காத்துக் கொள்ள கூட முடியாத நிலைமையில இருக்க? அது உனக்கு புரியுதா?”

 

“நீ என்ன பேசுறனே புரியலை. நான் சாகணும். என்னை ஒருத்தன் நம்பவெச்சு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டான்.” என்று மாறிமாறி அவள் கூறிக்கொண்டே இருக்க, அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் நந்தா.

 

“உன்னை ஒருத்தன் ஏமாத்துனா அது உன் தப்பு இல்லைடி மடச்சி.  ஏமாத்துனவன் முன்னாடி சந்தோசமா வாழ்ந்துக் காட்டு. அதுதான் அவனுக்கு நீ கொடுக்கிற பாடம். புரியுதா?” என்றவன் கூறவும் தலையை தலையை ஆட்டியவள் அப்படியே போதையில் உறங்கிவிட்டாள். ஏனோ அவன் கூறிய அந்த வார்த்தை மட்டும் பெண்ணவளின் மனதில் ஆழமாக பதிந்தது. 

 

அடுத்த நாள் காலை அவள் கண் விழிக்க, அவள் வீட்டின் முன்பு கார் நின்றிருந்தது. நேற்று நடந்தவை ஓரளவு மட்டுமே அவளால் நினைவுக் கூற முடிந்தது. தன்னை அந்நொடி காப்பாற்றியவனது முகம் கூட அவள் மனதில் பதியவில்லை. ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் மட்டும் நன்றாக நினைவிலிருந்தது. 

 

வீடு வரை வந்தவன் ஏன் உள்ளே அழைத்து செல்லவில்லை. என் வீடு எப்படி தெரியும் என்று யோசித்தவளுக்கு அவளது ஆதார் கார்டு நினைவில் வந்தது. “ஆனாலும் அந்த மனுசன் நல்லவரா இருக்காரு.” என்று அவளையும் அறியாது கூறியவள், வீட்டிற்குள் சென்றாள். 

 

அதன்பின்னர் அவள் மதுபானத்தை கண்டாலே வெறுத்து ஒதுக்கினாள். அன்று மட்டும் தான் அவ்வாறு குடிக்காமல் இருந்திருந்தால் அப்படி ஒரு நிகழ்வே நடந்திருக்காதே? என்று அவள் புத்தியில் நன்கு உரைத்தது. அதே சமயம் ரகுவின் முன்பு நன்கு வாழ்ந்துக் காட்ட வேண்டும். என்ற எண்ணமும் அதிகரித்திருந்தது. 

 

அவள் வாழ்வில் வந்த ரகு என்ற ஒருவனால் மட்டுமே ஆண்கள் என்றாலே அவளுக்கு வெறுப்பு உண்டானது. அவளை பொறுத்த வரை ஆயிரத்தில் ஒருவன் மட்டும் தான் நல்லவன் மற்றும் பெற்றோரை தவிர்த்து யாரையும் நம்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் மதுவர்ணிகா.

 

அவள் வாழ்வில் திருமணமே வேண்டாம் என்று நினைத்திருக்க, அவள் வாழ்வில் அதிரடியாக வந்து மீண்டும் இறங்கினான் நந்தா. அதன்பின்னரான ஒரு நாளில் தான் நந்தாவைத் திருடன் வடிவில் அவளது சித்தப்பாவின் கடையில் பார்த்தாள் மதுவர்ணிகா. அன்று அவள் சைத்ராவிடம் தான் பேசிக்கொண்டிருந்தாள். பேசியபடியே ஸ்டாக்ரூமின் அருகே இருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றவளது கதவு அடைப்பட்டு போக, அவள் அதை வெகுநேரம் போராடி திறந்து வந்து பார்க்கும் வேளையில் கடையை அடைத்துவிட்டு சென்றிருந்தனர்.

 

அந்நொடி தான் நந்தாவை முதன் முதலாக காண்கிறாள் மது. அதுவும் திருடனாக. அரண்டவள் ஓடி சென்று ஸ்டாக் வைக்கும் அறைக்குள் புகுந்திருக்க, அவனும் பின்தொடர்ந்து வந்திருந்தான். அவனிடம் பேசியே தன்னைக் காத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் படபடவென பேசத் தொடங்கினாள் மதுவர்ணிகா.

 

அவள் பேசியதில் கடுப்பானவன் அவளை பார்த்து, “என்ன மேடம் முறைப்பு பலமா இருக்கு? என்ன பார்த்தால் எப்படி தெரியுது?” என்றவன் அவளது பக்கவாட்டில் இரு கைகளையும் தடுப்பாக வைக்க, அவளோ அவனை கடுப்பாக பார்த்தாள்.

 

“பார்க்க ரொம்பா சூப்பரா இல்லாட்டியும் கொஞ்சம் சுமாரா நல்லா தான் இருக்கீங்க? என்ன கொஞ்சம் மூக்கு மட்டும் ஓவர் டோஸ்.” என்றவள் சலனமே இன்றி சாதாரண பாவனையில் கூற, ‘என்ன டிசைன்டா இவ?’ என்ற ரீதியில் அவளைப் பார்த்தவனது விழிகள் ஆச்சரியத்தில் விரியாமல் இல்லை.

 

“ஓ…ஓவர் டோஸ் ஆ… அங்க மட்டும் என்ன வாழுதாம்… அடிங்கு.” என்றவன் கைகளை ஓங்க, அவளோ கண்களை பயத்தில் மூடிக்கொண்டாள்.

அவளது செயலில் அவனையும் அறியாமல் அவனது இதழ்களில் முறுவல் தோன்றியது.‌ பாவம் அவன் அறியாத ஒன்று இனி அவள் கை ஓங்கியும், இவன் பணிந்து போகும் காலம் வரவிருப்பது தான்.

 

அந்நொடி கூட, ‘உன்னை நான் தான் காப்பாற்றினேன்’ என்றும் அவளை தனக்கு முன்பே தெரியும் என்றும் அவன் காட்டிக்கொள்ளவே இல்லை. அதற்கான காரணம் அவன் மட்டுமே அறிவான். இருந்தும் அவளிடம் வம்பிழுக்கவும், விளையாடவும் விரும்பியவன் அவளிடம் விளையாடத் தொடங்கினான்.

 

இப்படி பேசியே அவனை வலிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை மதுவின் மூளையிலும் எட்டியிருக்க, தான் தைரியமான பெண் என்று காட்டுவதற்காக பேசியவள், அவன் கை ஓங்கிய நொடி மீண்டும் பயந்துக் கொண்டாள். 

 

‘பொசுக்குனு கை நீட்றானே, ஆண்டவா இவன்கிட்ட இருந்து தப்பிக்குற வழியை மட்டும் காட்டுப்பா.’ என்று மனதில் நினைத்துக் கொண்டபடி கண்களைத் திறந்தவள் அறியவில்லை. இந்த ஒற்றை நாளே இருவரது வாழ்வையும் மாற்றிவிடப் போகிறது என்பதனை…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்