Loading

சலனம்-13

இந்த முகத்தைக் காட்டும் கண்ணாடி, அகத்தையும் சேர்த்துக் காட்டினால் நன்றாக இருந்திருக்கும். என் மனதிற்குள் பொதிந்திருக்கும், அவள் ஞாபகங்களை, கண்ணாடியின் முன்னால் நின்றுக் கொண்டே காணொளி காட்சியாய் கண்டு இரசித்திருப்பேன் என யோசித்தபடியே, மீண்டும் மீண்டும் என் முகத்தையே பார்த்திருந்தேன்.

 

கண்டிப்பாய் இது சம்யூவிற்குப் பிடிக்காதென்பது புரிந்தது. அவள் பிரிவின் துயரம் என் முகத்தில் அப்பியிருப்பதை மீண்டும் மீண்டும் பார்த்தேன். இந்தக் கோலம் நிச்சயம் அவளுக்குப் பிடிக்காது என்பதை என்னால் உணர முடிந்தது.

 

அதன் பிறகு, ஒரு நிமிடம் கூட, நான் தாமதிக்கவில்லை. எனக்குத் தெரிந்த அளவிற்கு வீட்டைச் சுத்தப்படுத்தினேன். இதெல்லாம் செய்தே பழகியிராத எனக்கு, நிரம்பவும் கடினமாக இருந்தது.

 

தொலைக்காட்சி விளம்பரங்கள் அளவிற்கு, பளிச்சென்று இல்லாவிட்டாலும் முன் இருந்த நிலைக்கு, இப்போது பரவாயில்லாமல் இருந்தது.

 

வீட்டைச் சுத்தப்படுத்துவிட்டு, காடென அடர்ந்துக் கிடந்த தாடியை மட்டும் ட்ரிம் செய்துவிட்டு, குளித்துவிட்டு வந்தேன்.

 

குளித்துவிட்டு வந்ததும், கொஞ்சம் புத்துணர்ச்சியாய் இருந்தது. சில, பல நாட்களுக்குப் பின் அதிசயமாய் எனக்குள் அந்த உணர்வு அதிசயமாய் எழுந்தது.. பல நாட்களுக்குப் பிறகு, உயிர் வாழ்வதற்கான அந்த ஆதி உந்துதல் பசி என்னுள் மெல்ல எட்டிப்பார்த்தது.

 

உணவை ஆர்டர் செய்துவிட்டு, என் உலகமான அவந்திகாவைப் பார்த்தபடி அமர்ந்தேன். அவள் தூக்கத்தில் ஒரு தேவதை. அந்தச் சிறிய முகமும், அதில் சிதறிக்கிடந்த சுருள் முடியும்… அப்படியே சம்யூவின் அச்சு அசல். என் சாயலைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவளற்ற இந்த வெறுமையான உலகில், நான் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரே பற்றுக்கோல் இந்த அவந்திகா மட்டுமே.

 

சம்யூ இல்லாத இந்த வெறுமையான உலகில் நான் என் உயிரைப் பிடித்து வைத்திருக்கக் காரணமும் அவள் மட்டும் தான்.

 

“அவந்திகா!”

 

இந்தப் பெயரை நான் உச்சரிக்கும் ஒவ்வொரு நொடியுமே சம்யூ மட்டும் தான் என் நினைவிற்கு வருவாள். அவந்திகா என்றால், இளவரசி எனப் பொருள் சொன்னாள்.

 

ஆனால் அப்போதிருந்த மனநிலையில் அவ்வளவு எளிதாக நான் பெயர் வைக்க ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு சிறு போராட்டத்திற்குப் பிறகு சம்யூ வெற்றிப் பெற்றாள். இப்போது நினைத்துப் பார்த்தால், குழந்தையைப் பத்துமாதம் சுமந்து பெற்ற தாயாய், ஒரு பெயர் வைக்கும் அதிகாரம் கூட, நான் கொடுக்கவில்லையே என நினைக்கையில் என்னை நினைத்தே எனக்கு அவமானமாய் இருக்கிறது.

 

நான் எவ்வளவு கீழ்த்தரமாய் நடந்துக் கொண்டிருக்கிறேன்? அவளை ஒரு சக மனுஷியாகக் கூட நான் பார்க்கவில்லை. அதுவும் திருமணத்திற்குப் பின்னான நாள்கள் அவள் சந்தோஷமாகவே இல்லை என்பது எனக்குத் தெரியும். அவளே பிரிந்துவிடலாம் எனச் சொல்லும் அளவிற்கு கொடூரனாய் நடந்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஆனால், காலம் கடந்து இதையெல்லாம் நான் புரிந்துக் கொண்டாலும், அது வீழலுக்கு இறைத்த நீர் மட்டுமே.

 

நான் எனக்குள் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்த நேரம், குழந்தையிடம் அசைவு தெரிந்தது. அவள் முதுகைத் தட்டி மீண்டும் உறங்க வைக்க முயற்சித்தேன்.

 

நேரம் நகர, அவந்திகா மெல்லக் கண் விழித்தாள். தொட்டிலின் அருகே என்னைப் பார்த்ததும், அவள் இதழ்கள் ஒரு மலரைப் போல விரிந்தன.

உறங்கி கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருக்கும். கண்களைத் திறந்து, உருட்டி உருட்டிப் பார்த்து சூழ்நிலையை ஆராய முயன்றாள். தொட்டிலின் அருகே நான் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், அவளின் சின்ன இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

 

“ப்பா! கூக்கு!”

 

எனக் குட்டிக் கரங்களை கொள்ளா அழகாய் விரித்தாள். அவளின் பிஞ்சுக் கைகளுக்குள் விரும்பிச் சிறைப்பட ஆசைப்பட்டு, புன்னகையுடன் அவளைத் தூக்கிக் கொண்டேன்.

 

கரங்களால் என் கழுத்தைச் சுற்றி அணைத்துக் கொண்டாள். தோளில் மீண்டும் சாய்ந்துக் கொண்டாள். அந்தக் குட்டிக் கரங்களை விரித்தபோது, அந்த அன்பில் விரும்பியே சிறைபட்டேன் நான்.

 

அவள் என் கழுத்தைக் கட்டிக்கொண்ட அந்த நொடி, உலகமே என் கைகளுக்குள் வந்த உணர்வு.

“பாப்பாவுக்கு இன்னும் தூக்கம் போகலையா? பாப்பா விளையாடுறீங்களா.?” எனக் கேட்டதும் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள்.

 

“ப்பா! பால்.. பால்..!”

 

எனக் கையை நீட்டிக் காட்டினாள். ஒரு குட்டி மெத்தை போன்ற அமைப்பில், நான்கு பக்கமும் பாதுகாப்பாய் வலைக் கட்டப்பட்டிருக்க, உள்ளே வண்ண வண்ண பந்துகள் சிதறிக் கிடந்தது. உள்ளே குழந்தையை அமர வைத்ததும், அமர்ந்த படியே, தன் பிஞ்சு விரல்களால் பந்தை எடுத்து, கூடைக்குள் போட முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

 

ஒவ்வொரு முறை பந்து கீழே விழும் போதும், கெக்கலிக் கொட்டிச் சிரித்தாள். இன்னுமும் பல் முளைத்திராத அவளின் பொக்கை வாய்ச் சிரிப்பில், என்னை மறந்து தொலைந்து நான் நின்ற நேரம், அழைப்புமணியின் சத்தம் கேட்டது.

 

ஆர்டர் செய்த உணவு வந்திருக்கிறதென்பதை கதவருகே இருந்த கேமிரா திரையில் கண்டுவிட்டு, கதவைத் திறந்துவிட்டு, கம்பிகளால் ஆன கேட்டை மட்டும் திறக்காமல்,

 

“வெய்ட் பண்ணுங்க! அமௌண்ட் எடுத்துட்டு வர்ரேன்!” எனச் சொல்லிவிட்டு, குழந்தையையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு பக்கத்திலிருந்த அறைக்குள் நுழைந்து, என் வாலட்டை தேடிக் கொண்டிருந்தேன்.

 

 

எதற்காகவே பணம் செலுத்திவிட்டு, எங்கோ வைத்தேன். எங்கென்று சரியாக ஞாபகம் வரதாததால், மேஜை, அலமாரி எனச் சல்லடைப் போட்டு அலசிக் கொண்டிருந்த அதே நேரம், குழந்தையின் சத்தமான சிரிப்பு சத்தம் என் செவிகளில் கேட்டது.

 

சத்தத்தைத் தொடர்ந்து குழந்தை அந்தக் வலைக்குள்ளிருந்து இறங்க முற்படுவதை அவள் கொலுசு சத்தத்தை வைத்தே உணர்ந்துக் கொண்ட நான், தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தேன்.

 

திடீரென குழந்தையின் சிரிப்புச் சத்தம், அறையைக் கிடுகிடுக்க வைக்கும், அழுகைச் சத்தமாய் மாறியிருந்தது.

 

“ஏன் இப்படி அழுகிறாள்?” எதுவுமே புரியாமல், தேடப் போனதைக் கூட மறந்து, அவரசமாய் ஓடிப் போய்க் குழந்தையைத் தூக்கினேன்.

 

 

குழந்தையின் பார்வை வாசல் மீதே இருந்தது. ஒருவேளை உணவு டெலிவரி செய்ய வந்தவனைப் பார்த்துப் பயாந்துவிட்டாளோ? என யோசித்து,

 

“ப்ரோ.. ஜி பே பண்ணிடவா?” எனக் கேட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு, கேட்டைத் திறந்துக் கொண்டு வெளியே சென்றேன்.

 

அலைபேசியின் உதவியுடன், உணவுக்கான தொகையை நான் செலுத்திக் கொண்டிருக்கும் போதே, என் பக்கவாட்டுப் பார்வையில் ஏதோபட்டு உறுத்தியது. எதையும் காட்டிக் கொள்ளாமல், பணத்தைச் செலுத்திவிட்டு உணவைக் கையில் வாங்கிக் கொண்டு, அவனை அனுப்பிய பின் நிமிர்ந்துப் பார்த்தேன். மார்பின் குறுக்கே கையைக் கட்டியபடி சம்யூ நின்றிருந்தாள்.

 

‘இல்லை! அது சம்யூ இல்லை! நீ உன் வாழ்க்கையை திரைப்படமாய் கற்பனை செய்துக் கொண்டிருக்கிறாய்! செத்தவள் திரும்பி வர இதென்றும் சினிமா இல்லை!’ என் உச்சி மண்டையில் ஆணியடித்ததைப் போல் எனக்கு உறைத்தது.

 

‘என் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை.! எப்போதும் அவளையே நினைத்துக் கொண்டிருப்பதால் தான் அவள் பிம்பம் தெரிகிறது!’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டு, குழந்தையோடு நான் உள்ளே திரும்பிய நேரம்,

 

“ம்ம்மா!”

 

எனக் கேட்டக் குழந்தையின் குரலில், அதிர்ந்து திரும்பினேன்.

 

இன்னுமும் சம்யூ அப்படியே தான் நின்றிருந்தாள். நான் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. அதனால்  என் கண்களுக்குப் புலப்படுகிறாள். அவந்திகாவின் கண்களுக்கு எப்படி தெரிகிறாள்? புரியாமல் பார்த்தபடியே ஒருவித பயத்தோடு நான் நின்றிருக்க, என் கரத்திலிருந்து விறுவிறுவெனக் கீழே இறங்கியக் குழந்தை, என் எதிரில் நின்றிருந்த சம்யுக்தாவின் பிம்பத்தை நோக்கி ஓடியது.

 

 

“அவந்தி! நில்லு!” தடுக்க முயற்சிக்காமல் நின்ற இடத்திலேயே நின்று நான் சொல்ல, வேகமாய் ஓடிச் சென்றக் குழந்தை, சம்யூவின் காலைக் கட்டிக் கொண்டு,

 

“ம்மா கூக்கு!”

 

எனச் சொல்ல, தூக்கிவாரிப் போட நிமிர்ந்தேன் நான். என் கரத்திலிருந்த உணவுப் பொட்டலம் நழுவி கீழே விழுந்தது.

 

அதிர்ச்சியில் என் கண்கள் கேமிரா லென்ஸைப் போல் பெரிதாய் விரிந்தது. வெறும் பிம்பமாக இருந்தால், எப்படி அவந்தியால் தொட முடியும்? அதிர்ந்து போய் புரியாமல் நின்றிருந்தேன்.

 

 

மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. ‘யார் இவள்? நிஜமாகவே சம்யூவா? ஒருவேளை சம்யூவின் ஆத்மாவாக இருக்குமோ? எப்படி செத்துப் போனவள் திரும்ப வர முடியும்? படங்களில் காட்டுவதைப் போல் குழந்தையைப் பார்க்க வந்திருப்பாளோ? இல்லை நான் கனவு காண்கிறேனா?’ எதுவுமே எனக்குப் புரியவில்லை. குழப்பம் சூழ்ந்த மனதுடன், சம்யூவைத் திரும்பிப் பார்த்தேன்.

 

“சம்யூ!”

 

 

மெதுவாய் அழைத்தேன். அவள் என்னை நோக்கித் திரும்பினாள். என்னைப்பார்த்தபடியே குழந்தையை அழகாய் தூக்கிக் கொண்டாள்.

 

 

குழந்தை அவள் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டு, அவள் தோளில் சாய்ந்துக் கொண்டது. என்ன நடக்கிறதெனப் புரியாமல், குழம்பிப் போய், மெதுவாய் அந்த உருவத்திடம் நெருங்கினேன். கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. நான் தொட முயற்சிக்கையில், குழந்தையோடு மறைந்து விடுவாளோ? கொஞ்சம் பயமாக இருந்தது.

 

 

‘மறைந்துவிடாதே சம்யூ! இந்த முறை உன்னை நான் தொலைக்க விரும்பவில்லை! மறைந்துவிடாதே! நீயில்லாமல் மீண்டும் என் உலகம் எனக்குள் சுருங்கிவிடும்!’ என் மனம் அரற்றியது.

 

 

மெல்ல மெல்ல அவளை நெருங்கி, சில நொடிகள் அசையாமல் நின்றேன். அவளைத் தீண்டிப் பார்க்கப் பயமாக இருந்தது.

 

அவளும் கூட, அசைவே இல்லாத ரோபோ போல் அமைதியாய் நின்றாள். வேறு வழியின்றி, மெது மெதுவாய், என் சுட்டுவிரல் நீட்டி அவள் கன்னம் தீண்டினேன். என்னால் அவளை உணர முடிந்தது. செத்துப் போனவள், எப்படி திரும்ப வந்தாள்? என்ற கேள்வி எனக்குள் தோன்றினாலும், அதற்கு மேல் தாமதிக்க என்னிடம் பொறுமை தீர்ந்துப் போயிருந்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல், அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கி அவளை இறுக அணைத்திருந்தேன்.

 

என்னால், அவளின் ஸ்பரிசம், அவளின் வாசம், அவளின் இருப்பு அனைத்தையும் உணர முடிந்தது. கண்கள் என்னை அறியாமல் கலங்கியது.

 

“ஐ அம் ஸாரி சம்யூ! என்னை மன்னிச்சுடு டி! ஐ அம் ரியலி ஸாரி! உன்னை நான் புரிஞ்சுக்கவே இல்லை!”

 

என என் உதடுகள் ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது. என் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருந்தது. கடந்த ஒரு மாதமாய், அவளில்லாமல் நான் பட்ட வேதனைகள் கண்ணீராய் கரைந்துக் கொண்டிருக்க, விட்டுப் போனவள் திரும்பக் கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷம் இருந்தாலும், எனக்குள் ஏதோ உறுத்தல் இருந்தது.

 

 

சில நிமிடங்களாய், குழந்தையோடு சேர்த்து அவளை அணைத்தபடி நான் நிற்கிறேன். அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை கோபமாய் இருக்கிறாளோ? இத்தனை நிமிடங்களில், அவள் ஒருமுறை கூட, என்னை பெயர் சொல்லி அழைக்கவில்லை. என்னிடம் மட்டுமல்ல, அவள் குழந்தையிடம் கூடப் பேசவே இல்லை. புரியாமல் யோசித்தபடி நான் அவளை அணைத்தபடி நின்றிருக்க, நான் எதிர்பார்த்திராத, நான் யோசித்துக் கூடப் பார்த்திராத விஷயங்கள் நடந்தேறத் துவங்கியது. இனி என்ன செய்யப் போகிறேன் நான்? மிகப் பெரும் கேள்விக்குறியில் தொக்கி நின்றது என் உலகம்.

 

“சேர்ந்தெடுத்த புகைப்படங்கள்,

பகிர்ந்த ஒலிக்குறிப்புகள்,

மணிக்கணக்காக அளவளாவியக் குறுஞ்செய்தி தொகுப்புகள்,

வழங்கிய பரிசுபொருட்கள்,
எல்லாம் அழித்தொழித்தாகிவிட்டன.

உன் நினைவின்
கடைசி மிச்சமாக
முழுதாய் நான் இருக்கிறேனே
என்னை என்ன செய்ய..!”

(யாத்திரியின் திரியைத் தின்றழியும் தீச்சுடர்கள் புத்தகத்திலிருந்து)

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments