
சுழலி-12
“என்ன சொல்ற சிவா? மஞ்சரி இங்க இருக்காங்களா?” அதிர்ச்சியோடு கேட்டான் பிறை.
“முதல்ல நான் சொல்றத எந்த ஒரு குறுக்கு கேள்வியும் இல்லாம எல்லாரும் கேளுங்க. இதுல யாருமே சம்மந்தபடாத மாதிரிதான் தெரியும். ஆனா, நாம ஒன்பது பேருமே தேர்ந்தெடுக்கப்பட்டவங்கதான். அதுனாலதான் நாம இப்போ இங்க இருக்கோம். இந்த சுவடிகள் அப்பாவும் மஞ்சரியும் சேர்ந்து அவங்க கண்டுபிடிச்ச விசயத்த எழுதி இருக்காங்க. முதல்ல இந்த சுவடில இருந்தது சில படங்கள்தான். அதுல விளக்கங்கள் எதுவும் இல்ல, இல்லன்னு சொல்றது விட, எங்க கண்ணுக்கு தெரியல. முதல்ல அதுல இருந்தது பெரிய இராஜநாகங்கள்தான். இரண்டும் பிண்ணிப்பிணைந்து இருந்தது. அது எல்லையம்மன் கோவில்ல சொக்கன் பார்த்த அதே நாகம்தான்ங்குறது என்னோட கணிப்பு. அடுத்து ஒரு மூலிகை இருந்தது. அது நாங்க யாழோட கைல பாத்தோம். அப்புறம்தான் தெரிஞ்சது அது சொக்கன் யாழுக்கு கொடுத்தது.
அதுக்கு அப்புறம் பாத்தது அறிவு கைல போட்டு இருக்க காப்பு. இது ஒரு சிவன்காப்பு. இது கண்ணுக்கு தெரியாத அருவமான விசயங்கள்ல கண்ணுல காட்டும். அதுனால தான் சொக்கனுக்கு மட்டுமே தெரியுற பாம்புகள் அறிவோட கண்களுக்கும் தெரியுது. அடுத்து, அதுல இருந்த படம் காந்தள் மலர். அது நான் முன்னாடியே சொன்ன குறிப்போட இருந்தது. இன்னொரு விசயம், சொக்கனோட சுவடில இருக்குற குறிப்பு நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குதான் தெரியும். அதுல இருக்க வினாக்குறிப்ப நாம தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் தான், இதுல விடைக்குறிப்பு உருவாகும். அதுவும் குறிப்புதான். அதாவது சில விசயங்கள் மட்டும் தான் அதுல இருக்கும். அதுக்கு அடுத்து நாம என்ன செய்யணும்ங்குறது நம்ம கைலதான் இருக்கு. இப்போ நம்ம கூட இருக்காரே அந்த பெரியவர், அவர் சித்தருங்குறது என்னோட கணிப்பு. நம்மள இங்க பாக்க வரப்போ ஒரு பாட்டு பாடுனாரே, அதுக்கூட இந்த ஓலைச்சுவடில இருக்கு.
இனிமே, எல்லாம் அந்த விதியோட கைல தான் இருக்கு. விதியயும் மதியால வெல்லலாம்னு கேள்விப்பட்டு இருப்போம். இது அதுக்கான தருணம்.”
அனைத்தையும் கேட்ட பிறை மீண்டும் அதே கேள்விக்கு வந்தான். “மஞ்சரி?”
“அவங்க இங்கதான் இருக்காங்க. அவசியமான நேரத்துல அவங்க வருவாங்க. அதுக்கு மேல நான் எதுவும் சொல்லக் கூடாதுங்குறது அவரோட கட்டளை.” என்று சித்தரைக் கைக்காட்டி சொல்லி முடித்தான் சிவரஞ்சன்.
“இன்னும் உங்களுக்குள்ள பல கேள்விகள் இருக்கலாம். அதுக்கு முன்னாடி நான் சொல்ல வேண்டிய விசயத்த பத்தி சொல்லிடுறேன். நாம இப்போ கல்வராயன் மலைக்கு போறதுக்கான காரணம், வெளிய வரத் துடிக்கும் ஒரு ஆன்மாவ அடக்கத்தான். அவன் பேரு” என்று சொக்கன் தனது வார்த்தைகளை முழுமையாக முடிப்பதற்குள்,
“செந்தூரன்” யாழ் அந்த பெயரை சொன்னாள். அனைவரும் அவளையே பார்த்திருக்க, சொக்கன் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று அதிர்ந்தான். விரைந்து அவ்விடம் வந்தார் பெரியவர்.
“நேரம் நெருங்கிவிட்டது. சுவடிகளை கையிலெடுத்துக் கொண்டு என்பின்னே வாருங்கள்.” என்றவர், சற்று நிதானித்து தனது தோள்பையில் இருந்த பிடி சாம்பலை யாழின் நெற்றியில் பூசினார்.
எதிலிருந்தோ விடுபட்டது போல் தெளிந்தாள் யாழ்நிலா. அனைவரையும் கண்களில் ஒளி மின்னப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.
சொக்கனும் சிவரஞ்சனும் அவரோடு செல்ல, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குமேல் அனைவரையும் நிறுத்திவிட்டு மூவர் மட்டும் முன்னே சென்றனர்.
அங்கு வேலவனின் வேல் பதித்த ஒரு பாறை இருந்தது. அந்த மலையுச்சியில் அதைப் பார்த்ததால் குன்றின் அமைப்பு போல் காட்சியளித்தது.
சரியாக மணி நள்ளிரவு பன்னிரெண்டு. குன்றிற்கு அருகே உள்ளங்கை அளவு ஒரு வேல் கீழே கிடந்தது. அந்த பெரியவர் அதனை எடுத்துக் கொள்ள, இருவரின் கையில் இருந்த சுவடிகளும் சிறிது அடிதூரம் உயர்ந்து, ஒன்றோடு ஒன்று இணைந்தன. பின், பிரிந்து, பழையபடி சொக்கன் கையிலும், சிவரஞ்சன் கையிலும் வந்துவிட்டன.
“இருவரும் குறிப்புகளை வாசியுங்கள்.” பெரியவர் சொல்ல,
“காளிங்கனின் கண்பட்டு, சுழலியாக மாறாதவள். கண்ணியின் பெயர்பெற்ற கன்னியின் கைத்தடமும், ஐந்தெழுத்து நாமம் கொண்டு, பெயரிலேயே பிறையை உடையவனின் கைத்தடமும் ஒன்றிணைந்து குன்றில் பட, துகள்கள் குருதியாகும் முன்னே, கைப்பற்ற வேண்டும் திறவுகோலை. கிடைக்கவேண்டியது அகப்படுமாயின், அதிசயித்துப் போகாமல் அருந்த வேண்டும் நஞ்சை!” சொக்கன் வாசித்து முடித்தான்.
அனைவரும் அவ்விடம் வந்தனர். அவர்களுக்கு சற்றுத் தொலைவில் பாம்புகள் நின்றுவிட்டன. இந்த இடத்திற்கு அவைகளால் வர இயலவில்லை. அதனைக் கவனித்த அறிவு, “ஏன் அந்த பாம்புகள் இங்க வரல?” சந்தேகத்துடன் கேட்டான்.
“சில விசயங்கள் நம்மைவிட, அவைகளுக்கு எளிதில் புரிந்துவிடும். இந்த குறிப்பினை அறிந்து விரைந்து செயல்படு சொக்கா” கட்டளையிட்டார் அவர்.
சிறிது நேரம் யோசித்தவன், “பிறை, நீயும் அங்கையும் இப்டி வாங்க” என்றழைத்தான். சிவரஞ்சனுக்கும் அப்போதுதான் அந்த குறிப்பு புரிந்திட, உடனே தனது சுவடிகளை எடுத்தான்.
“சுழல் காற்று வீசிட,
மின்னல் ஒளி தந்திட,
நஞ்சு முறிப்பான் சுனையடியில்,
நடுநிசியில் மிளிர்ந்திடும்.
நவமனிதரில் ரஞ்சிதமே!
குண்டலினி சக்தி
குறித்த நேரத்தில் வெளிப்படுமே!
கண்ணியவளின் கரம்பட்டதும்,
நஞ்சை உடலில் வாங்கிக்கொள்வாள்.
உட்செலுத்து முறிப்பானை,
முறிந்துவிடும் நஞ்சும்,
திறந்துவிடும் கதவும்.!” அதில் இருந்ததை மனதிற்குள் உருப்போட்டவன், யோசனையோடு சித்தரைப் பார்த்தான். அவரோ சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.
சொக்கன் “இந்த பாறைல நல்லா பாருங்க, இங்க ரெண்டு உள்ளங்கை அச்சு இருக்கு. அதுல நீங்க உங்க கைய வைக்கணும். அதுக்கு அப்புறம் திறந்தவுடனே, உள்ள இருக்க சாவிய எடுக்கணும். கவனம், ரெண்டு பேரோட ரத்தமும் சிந்தக்கூடாது.” என்றவன் சிவரஞ்சனை திரும்பிப் பார்த்தான்.
அவனின் பார்வையை உணர்ந்தவன், “நான் உடனே சுனைக்குப் போறேன். மத்தவங்க ஜாக்கிரதயா இருங்க” என்று விரைந்தான் சுனைக்கு. அவன் பின்னோடே சித்தரும் வந்தார்.
குன்றில் மற்றவர்களுக்கு துணையாய் அருவமாய் நின்றிருந்தாள் மஞ்சரி. பாம்புகள் இல்லையென்று ஆசுவாசமாய் உணர்ந்த அறிவு, அப்போதுதான் மஞ்சரியைக் கவனித்தான். அவளின் முகசாயலைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்துத்தான் போனான். மஞ்சரியையும் தனக்கு முன்னே இருப்பவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவன், சொக்கன் பேசியதில் திரும்பினான்.
“எல்லாரும் கொஞ்சம் இந்த பாறைய விட்டுத் தள்ளி நில்லுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல என்னவேணா நடக்கலாம். யாரும் யாரோட கையயும் விட்டுடாதீங்க” அவன் சொல்லி வாயை மூடவில்லை, காற்று பலமாக வீசியது.
அங்கையும், பிறையும் மனதில் கடவுளை வேண்டிக்கொண்டு அந்த அச்சில் தங்களது உள்ளங்கையை வைக்க, அவர்கள் கைப்பட்டதும் பாறை அசைந்தாடியது. பெருத்த சத்தம் அவ்விடத்தில். சிறிதான நிலநடுக்கம் வந்தது போல் இருந்தது.
மலையுச்சியில் இருந்த அனைவரும் அதனை உணர்ந்தனர்.
…..
“அவர்கள் தொடங்கிவிட்டார்கள். உடனே, சுனைக்கு சென்று நஞ்சு முறிப்பானை எடுக்க வேண்டும். வா” என்று சிவரஞ்சனை இழுத்துக் கொண்டு சென்றார் சித்தர்.
சிவரஞ்சனால் அந்த சரிவில் அவருக்கு ஈடாக இறங்க முடியவில்லை. அவரோ காற்றிற்கு ஈடாக பறந்தார் என்றே சொல்ல வேண்டும். முன்பிருந்த சமவெளிக்கு வந்துவிட்டனர் இருவரும்.
அங்கு எந்த மூலிகையும் சிவரஞ்சனின் கண்களுக்கு அகப்படவில்லை.
“இங்க, எங்கன்னு மூலிகைய தேடுறது. அது எப்டி இருக்கும்?” என்று அவன் பேசிக்கொண்டே திரும்ப, அந்த சித்தரோ நிலத்திலிருந்து நான்கடி மேல்நோக்கி அந்தரத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.
“ஆத்தாடி” நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றான்.
“ரஞ்சா! சுனைக்கு அடியில் ஒரு குழிபோல் இருக்கும். அதில் சிறிய புற்று ஒன்று இருக்கிறது. அதில்தான் மூலிகை இருக்கிறது. விரைந்து எடு” தனது குண்டலினி சக்தியை ஒன்று திரட்டி, மூலிகை இருக்குமிடத்தை அறிந்தார் சித்தர்.
அவர் சொன்னதுபோல் அவன் சுனைக்கு அடியில் பார்க்க, சுனைநீரையொட்டி சிறு புற்று ஒன்று இருந்தது.
அந்த கும்மிருட்டில் புற்றுக்குள் இருக்கும் மூலிகை தங்க நிறத்தில் ஜொலித்தது. புற்றுக்குள்ளே இரண்டு இராஜநாகக் குட்டிகள் இருக்க, அதனைக் கண்டவன் பயத்தோடு சித்தரைப் பார்த்தான்.
“பயப்படாமல் எடு.” கண்களை மூடியபடியே சொன்னார்.
எச்சிலை விழுங்கியபடி அவன் புற்றுக்குள் கையை விட, இரண்டு நாகங்களும் சீறின. ஆனால், அவனை தீண்டவில்லை. மெதுவாகக் கையை விட்டவன், அந்த மூலிகையை எடுத்தான். அவன் கைகளில் ஒளிவீசிக் கொண்டிருந்தது நஞ்சறுப்பான் மூலிகை. மெதுவாக சித்தர் கீழிறங்க, இருவரும் உச்சிக்கு விரைந்தனர்.
….
பாறைக்கு அருகில் இன்னொரு பெரிய பாறை நகர்ந்தது. அனைவரின் கவனமும் அங்கே செல்ல, நடுவில் மறைந்த யாழை அனைவரும் கவனிக்கத் தவறினர்.
பெருத்த சத்தத்தோடு பாறை பிளவு ஏற்பட, உள்ளிருந்து கதவு ஒன்று வெளிப்பட்டது. அதற்குண்டான திறவுகோல், பழைய பாறையில் இருந்தது.
“இதுதான் நாம போகப் போற சுரங்கமா?”
“ஆமா. பிறை, உடனே சாவிய எடு.”
சொக்கன் சொன்னதைக் கேட்ட பிறை, தனது கைகளை அங்கையிடமிருந்து பிரித்து விட்டு சாவியை எடுக்கச் செல்ல, அங்கை என்ன உணர்ந்தாளோ அவனைத் தள்ளிவிட்டு சாவியினை எடுக்க முனைந்தாள். சாவியைத் தொட்டவுடன், “ம்மா” என்று அலறியபடி கைகளை பிடித்துக் கொண்டு விழுந்தாள் அங்கையற்கண்ணி.
அனைவரும் அவசரமாக அவளருகே வர, பாறைக்குள்ளிருந்து சீற்றலுடன் வெளியே வந்தது வெள்ளை இராஜநாகம்.
சிவரஞ்சனும் சித்தரும் வந்துவிட்டனர். “அந்த மூலிகைகளை நசுக்கி, உடனே அவளுக்கு புகட்டு. கடிப்பட்ட இடத்தில் நான்கு சொட்டுக்கள் விடு” என்று உத்தரவிட்டவர், அந்த வெள்ளை இராஜநாகத்திடம் சென்றார்.
“என்னை இப்படி பாவத்திற்கு ஆளாக்கிவிட்டீர்களே! கன்னிப் பெண்ணை தீண்டினால் இருக்கும் சாபத்தில் இருந்து என்னால் என்றைக்கும் வெளிவர முடியாது. அதனை உணர்ந்தும் ஏன் இப்படி செய்தீர்கள்?” ஆவேசத்துடன் வெள்ளை நாகம் சீறியது.
“நீ சாபவிமோச்சனம் பெறக் கூடாது என்பது அவனின் சித்தமானால், என்னால் என்ன செய்ய இயலும் தேவி? தூயமனதுடன் இணைக்காக உயிர் துறக்க எண்ணிவிட்டாள். அதுவே அவர்களின் ஆயுள்பலத்தை இன்னும் கூட்டிவிட்டது. நீ விமோச்சனம் பெற்றால் செந்தூரனின் விசுவாசியாகத்தானே இருக்கப் போகிறாய்? அதுனாலேயே அது தடுக்கப்பட்டது.”
“இல்லை, நான் இனி அவனுக்கு விசுவாசி அல்ல. என்று என் கைவிட்டு இந்த திறவுகோல் செல்கிறதோ ஒன்று அது எனக்கு விமோசன நாளாக இருக்கும், இல்லையேல் இறுதிநாளாக இருக்கும் என்று அவனே சொல்லிவிட்டுத்தான் கட்டுக்குள் அகப்பட்டான். இன்றிலிருந்து ஊன், உறக்கமின்றி நான் என்னையே அழித்துக் கொள்ளப் போகிறேன். உடல் சுருண்டு, நஞ்சு வற்றி நான் படும் ஒவ்வொரு வேதனையும் செந்தூரனின் பலத்தை இழக்க செய்யும். இப்பிறப்பில் நான் செய்யவிருக்கும் ஒரே நல்காரியம் இதுவென எண்ணி விடைபெறுகிறேன். இனியொரு பிறப்பிலும் நான் இதே பிறவியெடுப்பேன் என்றால், நல்காரியம் புரிய மட்டுமே மானுட உருவம் கொள்வேன் என்று வாக்கு தருகிறேன். செல்கிறேன்” என்று அங்கிருந்து மறைந்தது.
இருவரும் பேசியதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அறிவு. சித்தர் அவனை பார்க்க, எதுவும் தெரியாதவன்போல் கவனத்தை அங்கையிடம் செலுத்தினான்.
“அவள் பிழைத்துவிட்டாள். இனியொன்றும் நேராது. பயம் வேண்டாம் பிறை” என்று அவனின் தோளில் தட்டியவர்,
“இனி, பயணம் மிகக் கடுமையாக இருக்கும். அனைவரும் தயாராக இருங்கள்” என்றார்.
“யாழ்? யாழ் எங்க?” என்று அன்பு கேட்க, அப்போதுதான் மற்றவர்களும் கவனித்தனர்.
“யாழ் எங்க இருக்க?”
“யாழ்?”
அங்கையும், பிறையும் ஒருபக்கம் அமர்ந்திருக்க, மற்றவர்கள் யாழைத் தேடிக் கொண்டிருந்தனர்.
சிவரஞ்சனிற்கு உள்ளுக்குள் எரிச்சல்தான் வந்தது. ஆரம்பத்திலிருந்தே அவளின் நடவடிக்கை எதுவுமே சரியில்லை. ஆனால், அதைப்பற்றி யோசிக்கக் கூட எவருக்கும் நேரமில்லை. இப்போதுவேறு எங்கு சென்றாளோ? ஏதேனும் ஆகியிருக்குமோ? என்றுதான் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
“நிலா, எங்க இருக்க நிலா? தப்பு பண்ணிட்டேன். உன் கூடவே இருந்து இருக்கணும். நிலா… எங்க நிலா இருக்க? நிலா…” கத்திக் கத்தி சொக்கனின் தொண்டை நீர் வற்றியது. உள்ளுக்குள் முற்றிலும் உடைந்துப் போனான் அவன். அவர்களோடு பாம்புகளும் யாழைத் தேடிக்கொண்டிருந்தன.
……
மறுபக்கம் அங்கையின் நிலையோ இன்னும் துயரமாக இருந்தது.
“அவள நான் பாத்து இருக்கணும் பிறை. இப்டி விட்டுட்டேன். அப்பா, அம்மா கேட்டா நான் என்ன பதில் சொல்றது? அப்பாவுக்கு அவன்னா உயிர் பிறை. அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல?” தேம்பியபடியே கேட்டாள்.
“ஒன்னும் ஆகியிருக்காது. நீ அழாத அங்கை. இங்கதான் எங்கயாவது போயிருப்பா. வந்துடுவா”
“இல்ல பிறை, எனக்கு என்னமோ உள்ளுக்குள்ள பயமா இருக்கு. அவளாதான் இங்க வந்தா. எப்டி வந்தா? அவ ஏன் சுவடிகள்ல எடுத்துட்டு வரணும்? அதுவும் சிவரஞ்சன் கிட்ட ஏன் கொடுக்கணும்? அவளுக்கு மட்டும் ஏன் இப்டி நடக்கனும்? அந்த செந்தூரன் யாரு? இவளுக்கு எப்டி அந்த பேர் தெரியும்? மண்டயே வெடிச்சிடும்போல இருக்கு. மஞ்சரிக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்? யாழ்ல யாரு வசியப்படுத்துனா? இங்க இருந்து போறதுக்குள்ள ஒரு உயிர்பலி ஆகும்னு சொல்லப்பட்டு இருக்கு. கடவுளே, யாழுக்கு எதுவும் ஆகிடக் கூடாது” தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தாள். அவளின் நிலையைக் காண, பிறைக்கு உள்ளுக்குள் மனது பிசைந்தது.
“நீ இங்கயே இரு அங்கை. நானும் போய் தேடுறேன்” என்று எழுந்தவனை சித்தர் அமர வைத்தார்.
“இல்லை, இனி நீ அங்கையை விட்டு ஒரு வினாடிக்கூட பிரியக்கூடாது. அந்தப் பெண்ணிற்கு எதுவும் நேராது. அனைவரும் வந்தபிறகு நாம் மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும்”
அவரின் சொல்கேட்டவுடன் அங்கைக்கு அப்படியொரு கோபம்.
“என்ன? என் தங்கச்சி இல்லாம இந்த இடத்தவிட்டு ஒரு அடிக்கூட நான் நகரமாட்டேன். என்ன பெரிய பயணம், முதல்ல எங்கள சுத்தி என்ன நடக்குதுன்னு பாதி புரியல. இதுல இவ இப்போ காணோம். அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, இங்க இருக்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன்” கத்தித் தீர்த்தாள்.
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நிரூபிக்கிறாய் மகளே! வள்ளியின் வாக்கு உனக்கு நினைவில்லையா? பிறை, இனி நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இங்கிருக்கும் அனைவருக்கும் ஆபத்து. உணர்ந்து செயல்படு. அனைவரின் உயிர்க்கும் நீயே பொறுப்பாவாய். உன் துணைவியானவளுக்கு புரியவை.” என்றவர் தியானத்தில் அமர்ந்துவிட்டார்.
அவரால் உணர முடிந்தது. அந்த இடத்தை செந்தூரனின் வீரர்கள் தொடர்ந்துக் கொண்டிருந்தனர். எவ்வளவு விரைவாக சுரங்கத்திற்குள் நுழைய முடியுமோ, அவ்வளவு விரைவாக சென்றால்தான், அவன் வெளிவருவதற்குள் செய்யவேண்டிய ஆயத்த பணிகளை செய்து முடிக்க முடியும்.
….
இவர்களின் தேடுதலுக்கான யாழ், கருநாகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தாள் மயக்கநிலையில்.
“இவளை என்ன செய்யப் போகிறாய்?”
“இவள்தான் நமக்குத் திறவுகோல் காளிங்கா! சுகிதேவி கன்னிப்பெண்ணைத் தீண்டிவிட்டாள். இனி அவளால் நமக்கு ஒரு பயனும் இல்லை. இவளை வைத்துத்தான் செந்தூரனை நாம் வெளியே கொண்டு வர இயலும்”
“மஞ்சரி வந்துவிட்டால்?” தனது வாலால் காளிங்கன் நாகத்தை விசிறியடித்தாள் நீலா.
“இனியொருமுறை அவளின் பெயரை உச்சரிக்காதே. கண்முன் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள் அவள். தோழியாய் பாவித்து வந்தேன், இன்றோ எனக்கு துரோகியாய் மாறியிருக்கிறாள். இந்த மானுடர்களே இயற்கைக்குத் துரோகிககள்தான். செந்தூரன் வெளிவந்த மறுநிமிடம், அவனுக்குத் தேவையானதை கொடுத்துவிட்டு, நம் இனத்தோடு கொல்லிப்பாவையை சரணடைய வேண்டும். இதை விடுத்து வேறு எவ்வழியும் நம்மைக் காக்க இல்லை. இவளை உன் காவலில் வைத்துக் கொள். அவர்களின் பயணம் ஆரம்பித்தவுடன், நாமும் கல்வராயன் மலைக்கு செல்ல வேண்டும்” என்றபடி யாழை பார்த்து சீறிவிட்டு சென்றாள் நீலா என்னும் கருநாகப்பாவை.
….
ஜருகுமலை உச்சி.
அனைவரும் களைத்துப் போய் வந்தனர். சொக்கன் கண்கள் இரண்டும் இரத்த சிவப்பாய் இருந்தது. மனம் முழுக்க யாழ்நிலா ஒருவளே வியாபித்து இருந்தாள்.
சித்தர் சொன்னதை பிறை அனைவரிடமும் சொன்னான். சொக்கனை தவிர, மற்றெவருக்கும் அவரை எதிர்த்துப் பேச துளியும் நா எழவில்லை.
“யாழ், இல்லாம நாம மட்டும் எப்டி? நீங்க எல்லாரும் போங்க. நான் மறுபடியும் அவளத் தேடிப் போறேன்” என்று கிளம்ப எத்தனித்தான்.
“பந்தம் என்னும் மாயையிலிருந்து வெளியே வா சொக்கா. இங்கு அனைவரின் உயிரை விடவும் அந்த பெண்ணின் உயிர் அவனுக்கு முக்கியம். அவளுக்கு ஒன்றும் ஆகாது. இந்த சுவடிகள் உன் கைகளுக்கு மட்டுமே அடங்கும். ஆலயத்தில் அளித்த வாக்கினை மறந்துவிட்டாயா? வாசுகி படை உன் சொல்லுக்காகவே இங்கிருக்கிறது. நீ அவளைத்தேடி சென்றாயானால், இங்கு அனைவரின் உயிரும் ஏதோ ஒரு வகையில் சென்றுவிடும். சிவனை தொழுது, சித்தம் தெளி. அங்கை, திறவுகோலை எடுத்துக்கொள். அனைவரும் புறப்படுங்கள்”
அறிவு மஞ்சரியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இருந்தும் ஏன் யாழ் தொலைந்துபோனாள்? அவனுக்கும் அவள் ஒரு தங்கைபோலத் தான். அங்கை வாய்விட்டு அழுதுவிட்டாள், சொக்கன் கதறிவிட்டான். ஆனால், அறிவால் எதையும் செய்ய முடியவில்லை. மஞ்சரியைத்தான் பார்த்தபடி நடந்தான்.
“அங்க என்ன பாத்துட்டு இருக்க அறிவு? எல்லாரும் போறாங்க வா” அவனை அழைத்துச் சென்றாள் ஆரு.
அங்கை மற்றும் பிறை இருவரும் சேர்ந்து திறவுகோலை செலுத்த, கற்கதவுகள் திறந்தன. அனைவரும் உள்ளே செல்ல, சிறிய படைகள் மட்டும் உள்ளே சென்றன. மற்றவை கல்வராயன் மலைக்கு மாற்று வழியில் புறப்பட்டன.
“அனைவரும் இங்கேயே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். பொழுது புலர்ந்தபின் வெளிச்சத்தில் செல்லலாம்” என்றதும் அனைவரும் ஆங்காங்கே அமர்ந்துவிட்டனர். அந்த இடத்தில் அருகில் இருப்பவர் கூட சற்ற உற்றுப்பார்த்தால்தான் தெரியும் நிலை. அதனாலேயே சித்தர் அனைவரையும் அமரும்படி சொல்லிவிட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
…..
நீலா உள்குகைக்குள் சென்றிருக்க, வெளியே காளிங்கன் காவல் இருந்தான். கண்விழித்த யாழ், பயத்தில் நடுங்கிதான் போனாள். வாயைத்திறந்து கத்தக் கூட வழியில்லை அவளுக்கு. அந்த குகைக்கு எதிரில் இருந்த பெரிய மரத்தில் குட்டி இராஜநாகம் நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தது. அதன் கண்வழியே அனைத்தும் மஞ்சரியின் எண்ணவலைக்குள் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
“அங்கதினி, யாழ் இனி உன் பொறுப்பு. அவளின் மெய்யும் உயிரும் செந்தூரனிடம் சேரக்கூடாது.” குகைக்குள் இருந்த மஞ்சரி சொல்ல, அங்கதினி என்னும் குட்டி இராஜநாகம் செவிமடுத்து யாழின் பொறுப்பை ஏற்றது.
…
பொழுது விடிந்தது.
ஒவ்வொருவரும் எழ, சித்தர் முன்னே சென்றார். அவரைத் தொடர்ந்து மற்ற அனைவரும். நெடுந்தொலைவாக அந்த பாதை சென்றுக் கொண்டே இருந்தது.
ஆங்காங்கே மரத்தின் வேர்களும், விசப் பூச்சிகளும் இருக்கத்தான் செய்தன. அனைவருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற பயம் இருந்தாலும், வழித்தவறி சென்றிடக் கூடாது என்பதிலும் கவனம் இருந்தது. மதியத்திற்குமேல் ஆகிவிட்டது. அனைவருக்கும் தாகம் அதிகமாகியிருக்க, அன்பு அங்கு சுரந்துக் கொண்டிருக்கும் ஊற்றிற்கு அருகில் சென்றான்.
கைகளை குவித்து நீரைப் பிடிக்கும் சமயத்தில், “அந்த தண்ணீய தொடாத! உனக்குத் தண்ணீ வேணும்னா நான் கேட்குற விடுகதைக்கு பதில் சொல்லு” என்று ஒரு தவளை முன்னே வந்தது.
“அம்மே, ஆத்தாடி!” இவன் துள்ளிக் குதித்து நகர்ந்தான்.
“தவள பேசுது?” ஆருத்ரா அதிசயமாகக் கேட்டாள்.
“இது ஒரு மாய சுரங்கம். யாரும், இதை குறிப்பில்லாமல் கடந்துவிட முடியாது. இதற்குள் பல்லாயிரக்கணக்கான வழிகளும், நம்மைக் குழப்பும் மாயங்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் கடந்துதான் நாம் கல்வராயன் மலைக்கு செல்ல இயலும்” என்றார் சித்தர்.
“இதுக்கு நாம ஜீப்லயே போயிருக்கலாம். இந்நேரம் மலைக்கு ரீச் ஆகியிருப்போம்” என்றான் அறிவு.
“சேர வேண்டிய இடம் முக்கியமல்ல, அதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் முக்கியம். வழியில் தேவைப்படும் பொருட்களை எடுத்துக் கொள்ளாமல் பயணம் மேற்கொண்டால் அனுபவமில்லாத வாழ்க்கை ருசியற்றுப் போய்விடும். அதனை வரவழைத்தவன் நீ, அதன் கேள்விக்கு விடைக் கூறு” அறிவிடம் ஆரம்பித்து, அன்புவிடம் முடித்தார் சித்தர்.
தன் பெருத்த வாயை திறந்து திறந்து முடிக்கொண்டிருந்தது பச்சைத் தவளை. அதிலிருந்து துர்நாற்றம் வேறு வீசிக்கொண்டிருந்தது.
முகத்தை சுழித்தவன், “என்ன விடுகதை? கேளு” என்றான்.
“வாயை அகல திறந்திருக்கும், ஆனால் மூடவும் பேசவும் முடியாது. எது போட்டாலும் விழுங்கிக் கொள்ளும். ஆனால், அதுக்கு பசி தீராது. உனக்கும் அது தேவைப்படும், ஆனால் எடுக்க முடியாது. அது என்ன?”
“எதே?” தவளை கேட்ட கேள்வியில் அனைவரும் விழித்தனர். சொக்கனுக்கு எதுவோ புரிபடுவதுபோல் இருந்தாலும் விடையை அன்புதான் சொல்ல வேண்டும் என்பதால் அமைதிக் காத்தான்.
“பதில் சொல்லு. இல்லன்னா, இங்க இருந்து யாரும் போக முடியாது.” என்ற தவளைக் கத்தியது.
“வாய திறந்திருக்கும். ஆனா பேச முடியாது. ஒருவேள முதலயா இருக்குமோ? ச்சே, அப்டின்னாலும் அதுக்குள்ள எது போட்டாலும் பசி தீரும். எனக்கும் அது தேவப்படும் ஆனா எடுக்க முடியாது.’ யோசித்தவன், எதிரே இருந்த நீரைப்பார்த்தான். “அட இதெப்டி மறந்தேன். உன்னோட விடுகதைக்கு விடை, பானை. என்ன சரியா?”
“எப்டிடா?” அதிசயித்துக் கேட்டான் அறிவு.
“வாய திறந்து இருக்கும். பேச முடியாது. மூட முடியாது. அதுக்குள்ள எது போட்டாலும் முழுங்கும். ஆனா, அதுக்கு பசி தீராது. அப்போ அது பாத்திரம்தான். இப்போ நமக்கு தண்ணீ தேவ. ஆனா, இது நம்மள எடுக்கவிடல. சோ, அதுக்கு ரிலேட்டடாதான் இருக்கும். என்ன தவளை, பானை தான?”
“சரி, சரி. ஏதோ இல்லாத அறிவ வச்சிக்கிட்டு, சரியா பதில் சொன்ன. இதோ, உனக்கான பொருள்.”
அவனின் விடையைக் கேட்ட தவளை, தனது வாயைத் திறந்து அதிலிருந்து ஒரு குவளையை எடுத்துத் தந்தது.
“இந்தா, இதுல ஊத்து தண்ணீய புடிச்சுக்கோ. ஆபத்து காலத்துல இதுல இருக்குற தண்ணீ உயிர் காக்கும்.” என்ற தவளை தத்தித் தாவி மறுபக்கம் சென்றது.
அன்பு நீரைப் பிடிக்கப் பிடிக்க அது நிரம்பிக்கொண்டே இருந்தது.
அப்பொழுது சிவரஞ்சனின் பையில் இருந்து ஒரு ஒளி வீச, அந்த சுவடி மிளிர்ந்துக் கொண்டிருந்தது.
அதில், அந்த குவளையின் படம் வரையப்பட்டு, அதற்கான விளக்கமும் குறிப்பிடப்பட்டிருந்தது.
“ஊற்றுக்குவளை என்னும் உயிர்காப்பான்,
தருவான் பச்சைநிற வாயன்.
ஒருமுறை உள்ளே சென்ற பொருள்,
சுரந்துக் கொண்டே இருக்கும்,
உடையவன் போதும் என்று சொல்லும்வரை.
உரிய நேரத்தில் பயன்படுத்தினால்,
உபயம் அளித்து உடனிருக்கும்”
நடந்தே பொழுது நகர, அந்த நேர்பாதையில் நான்கு வழிப் பாதைகள் பிரிந்தது. அனைவரும் அதன் தொடக்கத்தில் நிற்க, “இங்கேயே நள்ளிரவு வரை அமருங்கள்.” என்றதும், அப்படியே அனைவரும் அமர்ந்தனர்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

