Loading

அத்தியாயம் 16

 

மாமனாரின் சொல்லில் மனைவியின் இல்லத்தைச் சுற்றிலும் பார்த்தான் நவநீதன்.

அவர் உரைத்தது முற்றிலும் உண்மை‌.

அதிகபட்சம் பத்து பேர் அமரலாம் அக்கூடத்தில். வீட்டிற்கு வெளியே இருந்த இடத்தில் பந்தல் போட்டிருந்தனர், சூர்ய பகவானின் அனலில் இருந்து தப்பிப்பதற்காக.‌

சற்றித்தள்ளி விறகு அடுப்பு ஒன்று இருந்தது‌. அருகிலேயே சாக்குப் பையில், எரிப்பதற்காக தேங்காயின் ஓடுகளும், காய்ந்த மரக்கிளைகளும். விறகு வாங்கி கட்டுபடி ஆகாது என, சுற்றுப் பக்கம் எவரேனும் மரம் வெட்டும் தருணங்களில் எடுத்து வந்து உலர் வைத்து, அதனைச் சேமித்து பயன்படுத்தி வந்தனர்.

காலையில் எதற்கோ அடுப்பை எரித்து, அப்படியே அதன் அனலில் ஒரு பெரிய சட்டியில் நீரை ஊற்றி வைத்திருந்தனர்.

குடிப்பதற்காக சுடுநீர் என அனுமானித்துக் கொண்டான்.

இட மற்றும் பண நெருக்கடியையும்‍, குடும்ப சூழலையும் உணர்ந்து கொண்டான்.

சென்னையிலும் சரி தென்காசியிலும் சரி நவனின் வீடு பெரியது தான் என்றாலும், கல்லூரிக் காலங்களிலும் பணியில் சேர்ந்த துவக்க நாட்களிலும், நண்பர்களுடன் தங்கும் அறையைப் பகிர்ந்து கொண்ட அனுபவத்தால் கனியின் குடும்ப நிலையையும் பொருளாதாரத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அறைக்குள் சென்றான். ஒருவர் மட்டுமே படுக்கக் கூடிய இரும்புக் கட்டில் ஒன்று இருந்தது. இருவர் படுப்பது என்பது சற்று சிரமம் தான். கீழே நால்வர் தாராளமாய் படுத்துக் கொள்ளலாம்.

கட்டிலில் அமர்ந்து அறையைப் பார்வையால் அளவிட, ஓய்வறையில் இருந்து வெளியே வந்தாள் கனி.

“என்ன, இங்க உட்கார்ந்து இருக்கீங்க.?”

“மாமா தான், இடம் பத்தாதுனு உள்ள அனுப்புனாரு.”

“ஓ..” என்றுவிட்டு அவள் வெளியேற, கைப்பற்றி நிறுத்தினான்.

“என்னங்க.?”

“அழுத தான.?”

“இல்லையே.”

“பொய் சொல்லுறது தப்பு.”

“அப்பா, சித்தி, தம்பி, இந்த வீடு, தெரு, கிருஷ்ணன் கோயில்னு எல்லாமும் என்னை விட்டு இன்னைக்கு தூரமா போறது மாதிரி இருக்கு. இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி நான் யோசிச்சுப் பார்த்தது இல்லையா? திடீர்னு அப்படித் தோணவும் அழுகை வந்திடுச்சு. பரவாயில்ல. சித்தி சொல்லி இருக்காங்க. கல்யாணத்துக்குப் பின்னாடி எல்லாமும் மாறிடும். நீ அதுக்குப் பழகிக்கோனு. சரியாகிடும்.” எனச் சற்று முன்னர் தம்பிக்கு உரைத்ததையே, தற்போது தனக்கும் சொல்லிக் கொண்டாள்.

பேசும் பொழுதே விழிகளில் இருந்து உவர்நீர் வழிந்தது. துடைத்துக் கொண்டாள். மீண்டும் அருவி இரு கோடுகளாய் இறங்கியது.

எதிரே நின்று அவள் மொழிந்ததைக் கேட்டவனிற்கு, என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியவில்லை.

கண்ணீரைத் துடைத்து விட்டவன் காது மடல்களை விரல்களால் வருடி கொடுக்க, அவனின் புது விதமான தீண்டலில் மெலிதான சிலிர்ப்பு ஏற்பட்டு புன்னகையை உதிர்த்தாள். அதில் சற்று பத்து சதவிகிதம் அளவிற்கு நாணம் கலந்திருந்ததோ.?

அதனைக் கனி மட்டுமே அறிவாள். கணவனாய் நவனும் உணர்ந்திருக்கக் கூடும்.

*

உலகம்மன் கோவிலில் இருந்து வெளியே வந்தனர் விஜயனும் சஞ்சனாவும். கிளம்பியதில் இருந்து நொடியும் விலகாமல் ஆடவனின் கரத்தைப் பற்றிய படியே இருந்தாள் பாவை.

“நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் விஜி.”

அவன் மனைவியை பார்த்துப் புன்னகைத்திட, “நாம ஃபர்ஸ்ட் டைம் வெளிய வந்திருக்கோம். இது மெம்மரபுள்லா இருக்கணும். செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று கோவில் கோபுரத்தின் முன்னால் நின்று துணைவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

இருவரும் இணைந்து நடக்கத் தொடங்கிட, “ஏன் எதுவுமே பேச மாட்டிற?”

“என்ன பேச.?”

“நமக்கு இடையில பேச ஒன்னுமே இல்லையா?”

“என் மைண்ட் ஃபுல்லா எப்படா வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுப்போம்னு தான் இருக்கு.”

“என்ன விஜி.?”

“உனக்கே தெரியும். காலையில ஆறு மணிக்கு எல்லாம் வேலைக்குக் கிளம்பிடுறேன். பத்தரை மணி வரை ஹோட்டல். அப்புறம் லைப்ரரி. ஈவ்னிங் வர எட்டு மணி ஆகிடுது. ஃபோர்ட்டீன் ஹவர்ஸ். உடம்புக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தா தான், என்னால படிக்க முடியும்.”

“இப்ப என்ன, நீ படிக்கிறதைக் கெடுத்து உன்னை வெளியே கூட்டிட்டு வந்துட்டேன்னு சொல்லுறியா?”

“ஹேய், நான் அப்படிச் சொல்லல. எனக்கும் உன்கூட வெளிய போகணும் வரணும்னு ஆசை இருக்கு‌. இதுவே ஒரு ஸ்டேண்டர்டான வேலைக்குப் போயிட்டு இருந்தா, ஒன்னும் தெரியாது. அது இல்லாதனால ஃபியூச்சரை நினைச்சுக் கொஞ்சம் யோசனையாகவே இருக்கு. ”

“அப்ப, வேலைக்குப் போ.”

“நான் ஏன் வேலைக்குப் போகலனு தெரியும்ல உனக்கு? மேரேஜுக்கு முன்னாடியே உன்கிட்ட டூ இயர்ஸ் டைம் கேட்டு இருந்தேன் தான சஞ்சு?”

“நான்தான் அப்பவே ஓகே சொல்லிட்டேனே? நீதான் இப்ப ஃபீல் பண்ண. அதான் வேலைக்குப் போனு சொன்னேன்.”

“ம்ம்..” என அவன் பெருமூச்சு விட, “விஜி, ஷாப்பிங் போலாமா?”

“ஷாப்பிங்கா? என்ன வேணும்னு சொல்லு. நான் நாளைக்கு வாங்கிட்டு வர்றேன்.”

“ஏன், இப்ப வாங்கினா என்ன.?”

“என்கிட்ட பணம் அவ்வளவா இல்ல சஞ்சு‌.”

“அது எனக்கும் தெரியும். இப்ப முடியாதுனா, நாளைக்கு மட்டும் முடியுமா?”

“ஃப்ரெண்ட்ஸ் யார்க்கிட்டயாவது கேட்டு அரேஞ்ச் பண்ணீட்டு வருவேன்.”

“அப்படி எல்லாம் நீ யார்கிட்டயும் வாங்க வேண்டாம். அதான் நான் வச்சிருக்கேனே?”

“இருக்கட்டுமே!‌ அதைப் பத்திரமா வச்சிக்கோ. முக்கியமான நேரத்துல யூஸ் பண்ணிக்கலாம்‌. எதுக்கு இப்ப தேவை இல்லாம செலவு செய்யணும்னு நினைக்கிற?”

“தேவை இல்லாத செலவா.? விஜி‌ என்கிட்ட டிரஸ் இல்ல. நான் நாளைக்கு எதைப் போடுறது?”

“நான்தான் நாலு செட்டு வாங்கி கொடுத்தேனே சஞ்சு?”

“பட், அது எல்லாம் ஏற்கனவே வியர் பண்ணிட்டேன். ஒரே வாரத்துல போட்ட‌ டிரஸ்ஸையே திரும்ப எப்படிப் போடுறது?”

“அதுனால என்ன?”

“போ விஜி.”

“இப்ப என்ன, உனக்கு டிரஸ் தான வேணும்? வா, வாங்கித் தர்றேன்.”

“இல்ல, நீ சிம்பிளா வாங்கித் தருவ. எனக்கு வெளிய போட்டுட்டு போற மாதிரி கொஞ்சம் கிராண்டா வேணும். வேணும்கிறதை நானே வாங்கிக்கிறேன், நீ கூட வந்தா மட்டும் போதும்!” என்று அழைத்துச் சென்றாள்.

‘அவளின் தேவைகளிற்கு ஈடு கொடுப்பவனாய் தான் இல்லையே?’ என ஆடவனின் மனம் சுணக்கம் கொண்டது.

அதனை வெளிக்காட்டிடாமல், முகத்தில் புன்னகை அரிதாரம் பூசி மறைத்து, மனைவியுடன் பொதி சுமக்கும் பொம்மை போல் இணைந்து நடந்தான்.

அவளிற்குத் தேவையானதை வாங்கிவிட்டு வரும் பொழுது, இருபதாயிரம் காலியாகி இருந்தது. விஜயனின் ஒரு மாத சம்பளம் அது. பேச்சே வரவில்லை ஆடவனிற்கு.

செலவு செய்திட அஞ்சுபவன் இல்லை அவன். ஒரு சட்டையே நான்காயிரத்திற்கு வாங்கி உடுத்திய காலம் உண்டு. ஆனால் அது தந்தையின் சம்பாத்தியத்தில்‌. அவன் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் தான், பணத்தின் மதிப்பு யாதென புரிந்தது.

அன்றில் இருந்து நூற்று ஐம்பது ரூபாய் டீசர்ட் தான். சட்டை‌ முன்னூறையும், கால்சராய் ஐநூறையும் தாண்டாது‌.

வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு தருணத்தின் போதும் அரிதான பாடங்களை கற்றுக் கொடுக்கும். சிவநாதனின் மகனாய் இருந்தவன், தனது லட்சியத்திற்காக விஜயனாய் மட்டும் வெளிவந்த நாளில் இருந்து, தவிர்க்கவோ மறக்கவோ முடியாத முக்கிய பாடங்கள் பலவற்றைக் கற்றிருந்தான் ஆடவன்.

அதில் முதல் பாடம், பணம் பத்தும் செய்யும். அதற்குத் தான் முதல் மரியாதை. பின்னர் தான் மனிதர்களிற்கு.

அதனால் ‘எந்நிலையிலும் அடுத்தவரிடம் கடன் பெற்று விடக்கூடாது!’ என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். தனது வருமானத்திற்குத் தக்கபடி செலவுகளை சுருக்கி, அதில் சேமிக்கவும் கற்றுக் கொண்டான்.

ஆனால் அவன் கற்றதை எல்லாம் திருமணம் வரை மட்டுமே பின்பற்ற முடிந்தது. துணையாய் ஒருவள் வந்தபின், அவளின் தேவைகளிற்காக மற்றவரிடம் கடன் கேட்க வேண்டிய சூழல் உருவானது. ஏற்கனவே சிறிது கடனும் பெற்றிருந்தான்.

இப்பொழுது அவள் தன்னை மேலும் கடனாளி ஆக்கவில்லை என ஒரு புறம் நிம்மதியாய் இருந்தாலும், இது எத்தனை காலத்திற்கு என்று சற்று அச்சமும் தோன்றியது.

சஞ்சனாவின் விருப்பங்களிற்கு வளைந்து கொடுப்பதை தவிர, தற்போது அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. இருவரின் இரவு உணவிற்கு ஆயிரத்து ஐநூறு ரசீது.

அவன் செலவு செய்வதாய் இருந்தால், அதிகபட்சம் முன்னூறு ரூபாய் பணத்தோடு முடித்திருப்பான்.

“நாலு நாளா டேஸ்டே இல்லாம தோசை, இட்லி, பருப்பு பொடி, ரசம் சாதம், உப்புமானு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு விஜி. இன்னைக்கு ஃபிஷ், சிக்கன்னு சாப்பிட்ட பின்னாடி தான் உயிரே வந்திருக்கு.” என்று உண்ட உணவைப் பற்றி சிலாகித்தாள் சஞ்சனா‌.

அவனும் இணைந்து உட்கொண்டான் தான். ஏனோ உணவு ருசிக்கவில்லை. சுவையில், இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்பது தற்பொழுது தான் புரிந்தது.

துணைகளுக்கு நடுவே பிடித்தங்கள் வேறுபடலாம் தானே.?

‘உனக்கானவள் இவள்/ இவன்!’‌ என்று இயற்கை எவரையும் படைப்பது இல்லை‌.

காலம் ஆடும் விளையாட்டில் சிறிது சிறிதாய் மாற்றம் ஏற்பட்டு அல்லது ஒருவருக்காக மற்றவர் தன்னை மாற்றிக் கொண்டு, ‘எனக்கானவன் இவன்/ இவள்!’‌‌ எனும் நிலையை அடைகின்றனர்.

அந்த இலக்கை அடைய, வாழ்க்கை நடத்தும்‌ தேர்வுகளில் தேர்ந்து, புரிதலின் துணை கொண்டு, காதலை அரங்கேற்ற வேண்டும்.

*

இரவு உணவை மாமனாரின் வீட்டிலேயே முடித்துவிட்டு, மனைவியுடன் இல்லம் வந்து சேர்ந்தான்‌ நவநீதன்.

மதியமே உறவுகளுடன் ராஜாவும் அம்பிகையும் கிளம்பி இருக்க, புதுமண தம்பதிகள் மட்டும்‌ சற்று கூடுதலான நேரம் இருந்துவிட்டு வந்தனர்.

விடைபெறும் பொழுது, “இன்னைக்கு என்கூட நம்ம வீட்டுலயே இருக்கியா அக்கா? உன்கூட படுத்துக்கவா?” எனச் செல்வா கேட்டிட, மறுமொழி உரைக்க இயலாமல் கலங்கிய கண்களோடு பார்த்தாள்.

“டேய், சும்மா இருக்க மாட்ட!” எனத் திருப்பதி மகனை அடக்க, “அப்ப சனிக்கிழமை வர்றியா அக்கா? ஞாயிற்றுக் கிழமை லீவுதான? என்கூட இருந்துட்டு போ!” என்று மாற்று வழி சொன்னான்.

“ம்ம்.. வர்றேன்!” என உரைத்தவளின் குரல் உடைந்து அழுகை வெளிப்பட, “கிளம்பிப் போறப்ப அழக் கூடாது. அந்தத் தம்பி மனசு சங்கடப் படாது? என்ன பழக்கம் இது?” என்று அதட்டினார் காளீஸ்வரி.

பொதுவாய் அவரின் அந்தக் குரலில் சட்டென்று அடங்கி விடுவாள் கனி. ஆனால் இன்றைய தினம் கூடுதலாய் தான் அழுகை வந்தது.

இடக்கையால் வாயை மூடிக் கொண்டு தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றவளின் இந்த முகம், நவனிற்கு முற்றிலும் புதிது.

பதிலிற்குப் பதில் பேசுபவள் அதற்குத் தக்கபடியான தைரியத்துடனும் திடத்துடனும் இருப்பாள் என எண்ணி இருந்தான்.

ஆனால் இத்தனை ஆழமான உணர்வுகளைத் தனக்குள் ஒளித்து வைத்திருப்பாள் என நவன் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ச்சி தான்‌. அத்தோடு வியப்பும்.

“கனி!” என அவளின் தோளில் கையிட்டுத் தட்டிக் கொடுக்க, அவனது முகத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியானாள்.

அதன்பின்னர் யாரும் எதுவும் பேசவில்லை. தலை அசைப்பில் விடைபெற, கை ஆட்டி அனுப்பி வைத்தனர் புதுமண பெண்ணின் பிறந்த வீட்டினர்.

கணவனின் இல்லத்திற்கு வந்து சேரும் வரையிலுமே, அவள் மௌனப் பதுமையாகத்தான் இருந்தாள். நவனுமே பேச முற்படாது, மனைவியை அவளின் போக்கிலேயே விட்டு விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்