
34
காலை வேளை…
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அபூர்வன், மெல்ல கண்விழித்தான். இந்த சில மாதங்களாக, தம்பி எழுப்பிக் கொடுக்கும் செம்பருத்திப்பூ தேநீருக்குப் பழக்கமாயிருந்தவன், அவன் எழுப்பாததால் இன்னும் விடியவில்லை என்று நினைத்தபடி, அவன் ஊருக்குச் சென்றிருப்பதை மறந்திருந்தான்.
ஒரு நாள் முன்பு, இரவு அழைத்து, “நீயும் வந்திருக்கலாம் அண்ணா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீ இப்படித் தனியா இருக்குறது. நான் போய் நிக்கும்போதெல்லாம் சிவப்ரியா கண்ணு உன்னைத் தான் தேடுது” என்று அவன் புலம்பிய புலம்பல் அவனுக்கு இன்னும் மனச்சோர்வைத் தந்திருந்தது.
உறக்கத்திலும் உறங்கவிடாமல் அது துரத்தியது போலும்? தூக்கம் கலைந்து மெல்ல கண் விழித்தான்.
“ஹ்ம்…” என்று சோம்பல் முறித்தபடி படுத்திருந்தவன் மெல்ல பிரண்டு படுக்க எத்தனிக்க, ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.
முதலில் அது அவனுக்கு உறைக்கவில்லை. பின்புதான் கருப்பசாமி வந்துவிட்டானோ என்று நினைத்து, முழுதாக விழிப்பிலிருந்து மீண்டவனாய், “வந்துட்டியாடா?” என்று திரும்பினான்.
அவனை வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், சிவப்ரியா.
பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்து போனவன், இது கனவா? நினைவா? என்ற உறை நிலைக்குச் சென்றிருக்க,
மெல்ல எழுந்து சோம்பல் முறித்த சிவப்ரியா, “போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா..” என்று கூறி, அவன் காதோரம், “ஹைபிஸ்கஸ் டீ போடுறேன்” என்று கிசுகிசுப்பான குரலில் கூறிச் சென்றாள்.
காதோரம் தீண்டிய அவளது உஷ்ணம் அவனை என்னவோ செய்ய, உறை நிலையிலிருந்து மீண்டவனாய், “ஹே.. நீ என்ன பண்ற இங்க?” என்றான்.
“டாக்டர்.. ஹைஜீன்.. ஹைஜீன் முக்கியம். நான் பல்லு விலக்கினாதான் பேசுவேன். ரொம்ப கராரான ஆளு” என்று சிவப்ரியா கூறி புருவங்களை ஏற்றி இறக்க, அவன் இதழ் அவனையும் மீறி புன்னகைத்தது.
“ரொம்ப காரார் தான்..” என்றவன் தவறாமல் அவள் சொல் படி செய்து வந்தான்…
சமையலறையில் சப்தம் கேட்டு, அவன் உள்ளே நுழைய, அவனுக்கும் தனக்குமான தேநீரை வடிகட்டிக் கொண்டிருந்தாள்.
சுற்றி முற்றிப் பார்த்தவன், “நீ எப்படி இங்க வந்த?” என்று கேட்க,
“ஏன் வந்தேன்னு கேட்பனு நினைச்சேன்?” என்றவள், “துரை, உன்னைத் தேடி மீண்டும் வருவேன்னு கதையெல்லாம் விட்டுட்டு இங்க என்னென்னமோ யோசிச்சு அல்லல் பட்டு சபதத்தை மறந்துட்டு இருக்கியோனு எண்ணம். அதான் நினைவு படுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று கூறினாள்.
“யாரு கருப்பு சொன்னானா?” என்று கேட்டவன், “எங்க அவன்?” என்று கேட்க,
“கொழுந்தர் வேலைக்கு போயாச்சு” என்றபடி தேநீரைக் கொடுத்தாள்.
மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
பால்கனிக்குச் சென்று அமர்ந்தவள் அதனைப் பருக, தானும் அவள் அருகே அமைதியாக வந்து அமர்ந்து கொண்டான்.
மௌனமாக தேநீர் அருந்தும் ஓசையோடு சில நிமிடங்கள் கழிந்தது.
குடித்து முடித்துக் காலி கோப்பையை இருவரும் கீழே வைக்க, அவன் தாடை பற்றி முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பி, அப்படியும் இப்படியுமாகப் பார்த்தாள்.
தன்னைப்போல் அவனுக்கு ஒரு சங்கோஜம் உருவானது.
“ப்ச்.. என்னடி பண்ற?” என்று அவன் கேட்க,
“ரசிக்கிறேன்” என்றாள்.
“இந்த மூஞ்சிய?” என்று இளக்காரமாய் கேட்டு அவன் சிரித்துக் கொள்ள,
“உன்கிட்ட ட்ரீட்மென்டுக்கு ஒரு சொரியாஸிஸ் பேஷன்ட் வராங்கனு வச்சுக்கோ..” என்று பேச்சைத் துவங்கினாள்.
“அதுக்கு முதல்ல நான் டாக்டர் ஆகனும்” என்று விரக்தியாக அவன் கூற,
“எக்ஸாக்ட்லி. அதுக்கு முதல்ல நீ கண்டதையும் யோசிச்சு இப்படியே அடைஞ்சு கிடக்காம வெளிய வரனும்” என்றவள், “பேசாம கதையைக் கேளு” என்று அவனைக் கிள்ளினாள்.
“ஸ்ஸ்.. ஆ” என்று கையைத் தேய்த்துக் கொண்டபோதும் அவன் புன்னகைக்க,
“அந்த பேஷன்ட் தான் பார்க்க அசிங்கமா இருக்கேன்னு டிப்ரஸ் ஆகி சூசைட் ட்ரை பண்ணா என்ன பண்ணுவ?” என்று கேட்டாள்.
அவள் கேட்க வருவது கொஞ்சம் புரிந்தவனாய், “புரிய வைப்பேன்.. பீயிங் அப்நார்மல் இஸ் நாட் ஆட். அதை நார்மலைஸ் பண்ணனும்னு இன்ஸிஸ்ட் பண்ணி கௌன்சலிங் தருவான்” என்று அவன் கூற,
“அப்படியான சூழலில் அந்த பேஷன்டை உன் கண்ணு முன்னாடியே யாராவது கேலி பண்ணா என்ன பண்ணுவ?” என்று கேட்டாள்.
“அது அவன் மனசுல உள்ள அழுக்கைத் தான் சொல்லுது. அதை அவனாதான் சுத்தப் படுத்திக்கனும்” என்று அபூர்வன் கூற,
“ம்ம். சரி தான். உன் மனசுல இருக்க அந்த அழுக்கை நீ எப்ப சுத்தம் செய்யப் போற?” என்று கேட்டாள்.
“நானா? நான் எப்ப அப்படியானவன கேலி பண்ணேன்? அந்த பெயின் எனக்குப் புரியும்” என்று அபூர்வன் கூற,
“அப்படித்தான் நீ ஒருத்தன கேலி பண்ணிருக்க” என்று தீவிரமாக சிவப்ரியா கூறினாள்.
“என்ன உளறுற நீ? நான் யாரை கேலி செய்தேன்?” என்று அபூர்வன் கேட்க,
அவன் முன் கண்ணாடியை நீட்டினாள்.
அதைப் பார்த்ததும் அவன் மன சங்கோஜம் மீண்டும் தலைதூக்க, சட்டென்று தலை கவிழ்ந்து பார்வையைத் தவிர்த்தான்.
“இதோ.. இவனைத் தான்.. அதுவும் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான, எனக்கு ரொம்ப புடிச்ச ஒருத்தனைதான் நீ ஹர்ட் பண்ணிட்டு இருக்க. அவன் நல்லா இல்ல. இப்படி இருக்குறதால அவன் யாருக்கும் டிசர்விங் இல்லனு அவனை கேலி பண்ணிட்டு இருக்க. மத்தவங்களை சொல்லும்போது அழுக்கா பார்க்கப்படுற எண்ணம், உன்னை நீயே சொல்லும்போதும் தப்புனு தெரியலையா?” என்று அழுத்தம் திருத்தமாக அவள் கேட்க, அபூர்வன் அதிர்ந்துபோய் அவளைப் பார்த்தான்.
“சொல்லு.. நீ பண்றது தப்புனு உனக்குத் தெரியலையா? அன்னிக்கு நீ வெள்ளையா இருந்த. கொஞ்ச மாசம் முன்ன வரை பச்சையா இருந்த. இன்னிக்கு கருப்பும் பச்சையும் கலந்து கலந்து இருக்க. நாளைக்கு மொத்தமா கருப்பா இருப்ப. மாறுறது நிறம் தான். உன் குணம் இல்ல. உன் ஆம்பிஷன் இல்ல.. இப்படி காரணமில்லாத ஒரு அழியக்கூடிய விஷயம், உன் வேல்யூஸ விழுங்குறத வேடிக்கைப் பார்க்கப் போறியா? ஆசை ஆசையா தான நீ படிக்கக் கையில எடுத்த எம்.பீ.பீ.எஸ்ஸ? இன்னிக்கு அது ட்ராப் அவுட் ஆகி நிக்குறத பாத்துட்டு இருக்கப் போறியா? கோர்ட்டே உனக்கு உன் படிப்பைத் தொடரும் வாய்ப்பைக் குடுத்துச்சு. பட் நீ ஆல்ரெடி முடிச்ச நாலாவது வருஷத்தை மறுபடி முதல்லருந்து படிக்கிற மாதிரிதான் ஆரம்பிக்கனும்னு சொல்லிச்சு.. என்ன ஸ்டெப் எடுத்த அதுக்கு? நீ என்ன நினைச்சுட்டு இருக்க? சும்மா கைய வீசிட்டு வந்து மிஸ்டர் ராமராஜன் கிட்ட அவர் பொண்ண கேட்டா கல்யாணம் பண்ணி தந்துடுவார்னா?” என்று அவள் பொரிய,
அவளை ஆச்சரியமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“என்ன பாக்குற? படிச்சவன் தான நீ? நாலு வருஷம் காட்டுல இருந்ததுல எல்லாம் மறந்துடுச்சா?” என்று அவள் கேட்க,
மெல்ல சிரித்தான்.
“சிரிக்காதடா.. எனக்கு செம்ம கோவம் வருது. இவரு பெரிய இவரு.. எனக்கு வர்த்தானு யோசனை வேற..” என்று அவள் கோபமாய் கூறியபடி எழுந்து உள் செல்ல,
“ஏய் ப்ரியா” என்றபடி தானும் உள் சென்றான்.
அவன் அழைக்க அழைக்கத் திரும்பாமல் அவள் செல்ல,
“ஓய்” என்றபடி அவள் கரம் பற்றித் திருப்பினான்.
அவன் நெஞ்சில் முட்டி நின்றவள், அவனை நேருக்கு நேர் கோபப் பார்வை பார்த்தாள்.
“சரிடி.. தப்புத் தான். திருத்திக்குறேன்” என்று அபூர்வன் கூற,
அவள் பார்வையில் மாற்றமில்லை.
“நாளைக்கே போய் அட்மிஷன் போட்டுட்டு வரேன்.. படிக்கப் போறேன்.. ஓகேவா?” என்க,
மீண்டும் அமைதியாகப் பார்த்தாள்.
“என்னை என்ன பண்ண சொல்ற ப்ரியா? எனக்கு ஒரு மாதிரி இன்செக்யூரா ஃபீலாகிடுச்சு.. இப்படி பேட்ச் பேட்சான ஸ்கின்.. என்னை எப்படி ஹஸ்பென்ட்னு நீ எல்லாருக்கும் இன்ட்ரோ பண்ணுவனு ஒரு தயக்கம்” என்று அபூர்வன் கூற,
அவன் தாடை பற்றியவள், “இது தான் என் அபூ. எனக்காக மட்டுமே யோசிக்கும் அபூ. அவன் ப்ரியாவை எந்த நேரமும் பாதுகாப்பா வச்சுக்க நினைக்கும் அபூ. மொத்த காதலையும் இந்த ப்ரியாக்காக மட்டுமேனு சேர்த்து வச்ச அபூ.. இப்படித்தான் இன்ட்ரோ தருவேன். இங்க யாரும் குறையில்லா மனிதர்கள் இல்ல.. எல்லாருக்கும் ஒரு இன்செக்யூரிடி இருக்கத்தான் செய்யும். அதுக்காக அதையே யோசிச்சு ஸ்டிரஸ் ஆகிக்கவா முடியும்? எனக்கும் தான் மூக்கு சப்பையா இருக்கு, கண்ணு குட்டியா இருக்குனு ஆயிரம் குறை உண்டு. அதுக்காக நீ என்னை விட்டுட்டுப் போயிடுவனோ, உனக்கு நான் வர்த்தில்லனோ யோசிச்சா அது எவ்வளவு அபத்தமாகும்?” என்று கேட்ட கேள்வி, அவன் நெற்றி பொட்டில் அறையும்படி இருந்தது.
அவன் முகம் யோசனையில் சுருங்க, அவனுக்கான அவகாசத்தைக் கொடுத்தாள்.
சில நிமிடங்கள் மௌனம் தொடர, “ப்ரியா..” என்று அதை கலைக்கும்படி அழைத்தான்.
பாவை அவனை நோக்க, “சாரி” என்று மென்மையாய் கூறினான்.
“அதை என் அபூவுக்குச் சொல்லு” என்று அவள் கூற,
“சாரி” என்று அவள் கன்னம் பற்றிக் கூறினான்.
“என்ன? நீதான் நான்னு பழைய டயலாக் விடப் போறியா?” என்று அவள் கேட்க,
“இல்ல.. நீயும் நானும் வேற வேறயான்னு கேட்கப் போறேன்” என்றான்.
அதில் பக்கென்று சிரித்தவள், “போடா” என்று அவன் புஜத்தில் அடிக்க, “சட்டுனு மாத்திக்க முடியல” என்று கூறினான்.
“வேணாம்.. கொஞ்சம் கொஞ்சமா ஸ்டெப் எடு. இனிமே நீயா வருவனுலாம் என்னால வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. நாளைக்கு நாம ஒன்னா காலேஜ் போறோம். நீ படிக்கிறதை உறுதி செய்யுறோம். நார்மல் பர்ஸன் தான் நீயும்னு முதல்ல நீ நம்பு. அப்பத்தான் மத்தவங்களுக்குப் புரியும்” என்று அவள் கூற,
“ஓகே மேடம்” என்று அவள் மூக்கின் நுனி திருகினான்.
“நேத்து என் கொழுந்தர் காட்டின ஃபோட்டோல நீ எவ்வளவு அழகா இருந்த தெரியுமா?” என்று ரசனை கூடிய விழிகளோடு சிவப்ரியா கூற,
“ஃபோட்டோவா? என்ன ஃபோட்டோ?” என்று புரியாமல் கேட்டான்.
தனது அலைபேசியைத் திறந்து, திரை பின்னணிப் படத்தினை அவள் காட்ட,
அதிர்வோடு, “இதெல்லாம் எப்ப எடுத்தான் இவன்?” என்று கேட்டான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா கேண்டிடா, அழகா இருந்தது..” என்றவள், “க்ளௌடி ஹேர், உன் எமரால்ட் க்ரீன் ஐஸ், கன்னத்துல இப்படி கைய வச்சுட்டு நீ புக் படிச்சுட்டு இருக்க ஸ்டைல்..” என்று வர்ணித்தவள், “நீ அழகன்டா” என்று அவன் கன்னம் கிள்ள,
அவனுக்கு உண்மையில் வெட்கம் வந்துவிட்டது.
“ப்..ப்ரியா..” என்று அவன் தடுமாற,
அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “இப்படி கட்டிப் புடிச்சு, ஒரு உம்மா குடுக்கனும் போல இருந்துது தெரியுமா?” என்று கூறினாள்.
“ஆஹாங்?” என்று அவன் சிரிக்க,
“சிரிக்காத அபூ.. எனக்கு உண்மையிலேயே ரொம்ப வருத்தமா இருந்தது அவங்க அப்படிச் சொல்லும்போது. கருப்பசாமி சார் போல ஒருத்தர் தம்பியா கிடைக்க நீ குடுத்து வச்சுருக்கனும்” என்று அன்று அவன் பேசியதைக் கூறியவள், “யாருக்குடா அந்த மனசு வரும்? எனக்குக்கூட வராது. என்னைவிட என் அப்பாக்கோ, இல்ல விஷ்ணுக்கோ யாரோ ஒருத்தர் மேல அதிக அன்புனு தெரிஞ்சாகூட ஓபனா ஒத்துக்கக் கொஞ்சம் கசக்கும் எனக்கு. ஆனா அவ்ளோ ஆத்மார்த்தமா, அவ்ளோ திருப்தியா சொல்றார். நீ சந்தோஷமா இருந்தா போதும், வந்து பேசுனு கேட்குறார்” என்றாள்.
அபூர்வனுக்கு நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது. தனக்காக இத்தனை உயிர்கள் இருக்கும்போது, இப்படியான சில விஷயங்களில் தன்னைத் தொலைப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம்? பச்சையிலிருந்து தற்போது நிறம் மாறவாவது ஒரு வழி கிட்டியுள்ளது. தான் ஒத்துழைத்து, நம்பிக்கை வைத்தால் தானே, தன்னால் குணமாக இயலும்? என்று மனதோடு நினைத்துக் கொண்டான்.
அவன் கன்னங்களில் தன் கரம் பதித்தவள், “நீ எங்க எல்லாருக்கும் ரொம்ப முக்கியம் அபூ” என்று கூற,
மென்மையான புன்னகையுடன், “தேங்க்ஸ் ப்ரியா” என்றான்.
“உன்னோட உப்பு சப்பில்லாத நன்றிக்கு ஒன்னும், உனக்காக குண்டடியெல்லாம் வாங்கிட்டு நான் படுக்கலை” என்று அவள் முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு நகர எத்தனிக்க,
அவள் விரல் சுண்டி இழுத்து, தன் கைச்சிறையில் வைத்துக் கொண்டவனாய், “அப்புறம் எதுக்கு வாங்கினியாம்?” என்று கேட்டான்.
அவன் திடீர் செயலில் திடுக்கிட்டாலும், வீராப்பை விட்டுக் கொடுக்காமல், “எல்லாம் பாழா போன காதல் தான்.. என்ன செய்றது? நானும் உனக்கு நோ சொல்லி அழவிடலாம்னு தான் பாத்தேன்.. ஆனா என்னமோ நோ சொன்னா நான்தான் அழுவேன்னு உள்ள ஒரு பட்சி சொல்லிச்சு. அதனால போனா போகட்டும்னு லவ் பண்ணிக்கிட்டேன்” என்று கூற,
“ஆஹாங்?” என்று புருவம் உயர்த்தியவனாய், அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“ஹேய்.. என்னப் பண்ற? விடு” என்று அவள் கோபம் போல் கூற,
“இப்படி ஒரு ஆண்மகன் இருக்க வீட்ல தனியா வந்துருக்கியே.. எதாவது எசக்கு பிசக்கா ஆச்சுனா யார் பொறுப்பு?” என்று குறும்போடு கேட்டான்.
“எனக்கென்ன இது புதுசா? அந்தக் காட்டுலயே நீதான் கதினு கைய கால ஒடிச்சுகிட்டுப் படுத்துக் கிடந்தேன்.. அங்க நடக்காததா இங்க நடந்துடப் போகுது” என்று அவள் கூற,
“அங்க எதும் நடக்கலைனு நீயா எப்படி சொல்ற?” என்று குதர்க்கமாகக் கேட்டான்.
“ஏன்னா…” என்று அவனை நெருங்கியவள், “நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டடா” என்று அவனைத் தள்ளிவிட்டு ஓட,
“ஹே கேடி” என்று அவள் பின்னோடு ஓடினான்.
நீள்விருக்கையைச் சுற்றிக் கொண்டு அவள் ஓட, தன் உயரத்திற்கும் உடல் வாகுக்கும், நின்ற இடத்திலிருந்தே எட்டி அவளை இழுத்திருந்தான்.
“ஹே இது போங்கு.. உன் கையு இவ்ளோ நீளமா இருந்தா நான் எப்படித் தப்பிக்க?” என்று அவள் கேட்க,
“எதுக்குத் தப்பிக்கனும். எப்பவும் எனக்குள்ளயே மாட்டிக்கோ” என்றவன், “நான் சரிபட்டு வரமாட்டேனா உனக்கு?” என்று மென்மையாய் அவள் கீழுதழை தன் விரல் கொண்டு வருடினான்.
“எ..என்னப் பண்ற நீ?” என்று அத்தனை நேரம் இருந்த புலி, பூனையாகிவிட,
“வாய் பேச்சுத்தான்..” என்று சிரித்தபடி அவளை விட்டான்.
கொஞ்சம் ஆசுவாசம், நிறைய ஏக்கம் அவ்விடம் நிரப்பியது..
அதை கண்டுகொண்டவன், அவள் கரம் பற்றி, புருவங்கள் ஏற்றி இறக்க, அவளிடம் மெல்லிய வெட்கச் சிரிப்பு..
நாணம் பாதி, ஆசை மீதியாய், அவள் சிரம் தாழ்த்த, அவள் தாடை பற்றி முகம் நிமிர்த்தியவன், ஆசையும் காதலுமாக, அவள் இதழில் தன் முதல் அட்சரம் பதித்தான்…
கரத்தினை அவன் கழுத்தைச் சுற்றி மாலையாக்கியவள் மேனியில், மின்சாரச் சாரல்… தித்திப்பாய் இனித்தத் தருணம், அவளுள் தேனாக இறங்க, ஆழ்ந்து அனுபவித்துத் தங்கள் காதலின் ஆதிக்கு அவ்விடத்தில் அடித்தளம் இட்டுக் கொண்டனர், மென்முத்தத்தால்…

