

நிவாசினிக்காக பவானி மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்த போது, வரவேற்பறையில் நிவாசினி இல்லை.
அவள் அங்குத் தான் அமர்ந்திருப்பாளென எண்ணியே சற்று நேரம் மருத்துவரிடம் பேசி விட்டு வந்தாள் பவானி.
இருவரும் ஈருருளியில்(two wheeler) வந்திருக்க, அதன் சாவி பவானியிடம் இருந்தது.
இவள் எங்கு எவ்வாறு சென்றாள் என்ற மனத்தின் கேள்வியும் பதைபதைப்புமாய் நிவாசினியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள் பவானி. அழைப்பு எடுக்கபடாமலேயே துண்டிக்கபட்டதாகச் செய்தி வந்தது.
அவசரமாய் வண்டியைக் கிளப்பிக் கொண்டு அவர்களது தங்கும் விடுதிக்கு சென்று பார்க்க, அங்கே தான் ருத்ரமுகமாய் அமர்ந்திருந்தாள் நிவாசினி.
“அறிவிருக்காடி உனக்கு? உன்னைக் காணோம்னு எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இப்படித் தான் சொல்லாம கொள்ளாம வருவியா? போன் பண்ணா எடுக்க மாட்டியா? அந்த டாக்டர் எவ்ளோ பெரிய மனுஷன் இப்படித் தான் மரியாதை இல்லாம பாதிலயே எழுந்து வருவியா?” அவளைத் தேடி மனம் துடிக்கப் பயத்தில் வந்திருந்த பவானிக்கு அவளைக் கண்டதும் ஆசுவாசத்திற்குப் பதில் பெரும் கோபமே எழ, ஆங்காரமாய்க் கத்தியிருந்தாள்.
“அவர் பேசினது மட்டும் சரியா பவா, என்னமோ நான் காதல் செய்ய ஆளில்லாம ஏங்கிட்டு இருந்த மாதிரில அவர் சொல்றாரு! என் காதலைக் கொச்சைபடுத்துற மாதிரி இருக்கு” என்று நிவாசினி கூறிய நொடி,
“என்னடி பெரிய்ய்ய்யக் காதலு… எனக்கு வர்ற கோபதுக்கு உன்னை” அவளின் கழுத்தை நெரிப்பது போல் சென்ற பவானி, தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கிருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை முழுவதுமாய்ப் பருகினாள்.
பவானியின் இச்செய்கையில் மிரண்டு போன விழியோடு அவளைப் பார்த்திருந்தாள் நிவாசினி.
தன்னைச் சற்றாய் சமன் செய்தவள், நிவாசினியை நோக்கியவாறு கட்டிலில் அமர்ந்து, “இங்க பாரு நிவாஸூ, கனவுல பார்த்த பையனைக் காதலிக்கிறன்றதே இங்க நிஜ வாழ்வுக்கு ஒத்துவராத ஒன்னு. இதுல அதைக் காவிய காதல் அளவுக்குப் பேசிட்டு இருக்கியேடி” இந்தக் காதல் நிஜ வாழ்வுக்கு ஒத்து வராது என்ற நிதர்சனத்தை நிவாசினிக்கு புரிய வைத்துவிடும் நோக்கத்தோடு பேசினாள் பவானி.
“அது பவா.. நித்திலனை.. நான் நித்திலனை” எனத் திக்கி திணறி, அன்று முருகன் கோவிலில் நித்திலனைப் பார்த்ததிலிருந்து தற்போது அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் புலன உரையாடல்கள் வரை நிவாசினி பவானியிடம் தயங்கியவாறே கூற,
இதைக் கேள்வியுற்ற பவானியின் வதனம் பயம் கலந்த பீதியில் உறைந்து போனது.
“அறிவிருக்காடி உனக்கு! படிச்சவ தான நீ! அவன் யாரு? உன்னைப் பத்தி அவனுக்கு எப்படித் தெரியும்? உன் கனவு பத்தி எதுவும் தெரியாம தான் உன்னைக் காதலிக்கிறேனு சொன்னானா? உனக்கு யாருமில்லைனு தெரிஞ்சு உனக்கிருக்கச் சொத்தை அபகரிக்க இப்படித் திட்டம் போட்டிருக்கானா? இப்படி எதையும் யோசிக்காம காதலிக்கிறேனு கிறுக்கி மாதிரி அவன்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கியே” எனத் தலையில் அடித்துக் கொண்டாள் பவானி.
“இல்லடி அவர் நல்லவர் தான். எனக்குத் தெரியும்! என் மனசோட உணர்வு பொய் சொல்ற மாதிரி தெரியலை. அவர் மேல பாசம் பொங்குது! இது ஏதோ முன் ஜென்மம் பந்தமா தான் இருக்கும்” நிவாசினி முடிக்கும் முன்பே,
“மண்ணாங்கட்டி! அடியேய், இனி ஒரு தடவை முன் ஜென்மம் அது இதுனு பினாத்திட்டு இருந்த… வகுந்துடுவேன் உன்னை” அவளை அடிக்கக் கை ஓங்கியிருந்தாள் பவானி.
பவானிக்கு நிவாசினி ஏதோ ஒரு சுழலில் தானே சென்று மாட்டிக் கொண்டது போலவே தோன்றியது. அதிலிருந்து அவளை எவ்வாறேனும் காக்க வேண்டுமென்ற எண்ணமே அவளிடம் முந்திக் கொண்டு வந்தது.
“நித்திலன் உன்னை ஏமாத்த மாட்டாருனு என்ன நிச்சயம்? எதை வச்சி அவரை இப்படி நம்பிட்டு இருக்க நீ” பவானி கேட்கவும்,
“அதெப்படி நீ அவரை ஏமாத்துகாரர்னு சொல்லலாம். அப்படிலாம் அவர் செய்ய மாட்டாரு” எனக் கத்தினாள் நிவாசினி.
“அதெப்படி காதல் வந்தா மட்டும் எல்லாரும் ஒரே மாதிரி லூசாகிடுறீங்க!” என்று பவானி கூறவும்,
“நீயும் அபி அண்ணாவை லவ் பண்ணி தான் மேரேஜ் செய்துக்கப் போறன்றதை மறந்துடாத பவா” என்றாள் நிவாசினி.
“அதனால தான்டி சொல்றேன். அந்த அனுபவத்துல தான் சொல்றேன். காதல் பொல்லாதது ஹாசினிமா! அது கத்தி மேல நடக்குற மாதிரி! அது தர்ற மாதிரி சுகமும் இல்லை. அது மாதிரியான நரக வேதனையும் இல்லை! காதல் நம்ம மனசுல துளிர்க்கிற நேரம், காதலிக்கிறவரைத் தவிர வேற யாரு பேச்சையும் காது கொடுத்துக் கேட்க விடாது இந்த மனசு. மனசு முழுசா அவர் மேல மட்டுமே பைத்தியமாகிக் கிடக்கும். அம்மா அப்பா சொந்த பந்தம்னு யார் பேச்சையும் காது கொடுத்துக் கேட்காது, என் காதலும் காதலிக்கிறவரும் தான் பெரிசுனு பேச வைக்கும். அந்த உணர்வுகளுக்குள் சிக்கி ஆட்படாம அந்த எமோஷனைப் பக்குவமா எதார்த்தமா ஹேண்டில் செய்யத் தெரிஞ்சவங்க மட்டும் தான்டி யாருக்கும் எந்தச் சேதாரமும் இல்லாம தங்களோட காதலை கல்யாணமா மாத்த தெரிஞ்சவங்களா இருப்பாங்க”
“நீ ரொம்ப உணர்ச்சிவசப்படுற ஹாசினிமா. உன்னோட உணர்வுகளைத் தள்ளி வச்சிட்டு நான் சொல்றதை யோசிச்சு பாரு. நித்திலனை நான் தப்பானவருனு சொல்லவேயில்லை. ஆனா தப்பானவரா இருந்துட்டா உனக்குத் தானே கஷ்டம். அதனால முதல்லயே எல்லாத்தையும் விசாரிச்சப் பிறகு நல்லதா இருந்தா மட்டுமே இந்தக் காதலை நீ ஏத்துக்கிட்டு இருந்திருக்கனும்” நிவாசினியின் கரம் பற்றித் தலைக் கோதி ஆதுரமாய் உரைத்தாள் பவானி.
சற்றாய் சிந்திக்கத் தொடங்கினாள் நிவாசினி.
நிவாசினியும் பவானியும் மதிய உணவு உண்டப் பிறகு இருவரும் அவரவர் சிந்தினையுடன் படுக்கையில் படுத்துக் கிடந்தனர்.
‘நித்திலனைப் பற்றி விசாரிக்கச் சொன்னது என்னவாயிற்று’ எனக் கேட்டு அபிநந்தனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள் பவானி.
நித்திலன் கெட்டவனாய் இருப்பானோ என்று சிந்திக்கவும் இயலாது தடுமாறினாள் நிவாசினி.
ஆயினும் பவானி கூறியதும் நிதர்சனமல்லவா? கெட்டவனாய் இருந்து தன்னை வைத்து ஏதேனும் திட்டம் தீட்டியிருந்தால்? இவ்விதம் தான் யோசிக்காமல் போனோமே என்று சிந்தித்தவளுக்கு இவ்வெண்ணமே மனத்தை ரணமாய் வலிக்கச் செய்ய, மனமும் மூளையும் இதற்கிடையில் அல்லாடிக் கொண்டிருக்க, அந்நிலையிலேயே ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றாள் நிவாசினி.
பத்து நிமிடம் கழித்து நிவாசினியை அழைத்த பவானிக்கு அவளிடத்திலிருந்து எந்தப் பதிலும் கிட்டாது போக, நிவாசினியின் அருகில் வந்து அவளின் தலைக் கோதி கவலையுடன் அவள் முகத்தைப் பார்த்தாள் பவானி.
இது நிவாசினியின் வழக்கம் தான். மனம் முழுவதும் துயரம் நிரம்பியிருக்கும் நேரம் இவ்வாறு தானாய் உறக்கத்திற்குள் சென்று விடுவாள் நிவாசினி. அவளின் தாத்தா இறந்த பிறகு இங்கு வந்தவள் தொடர்ந்து மூன்று நாள்கள் உறக்கத்தில் மட்டுமே தான் இருந்தாள். பவானி தான் அச்சமயம் மருத்துவரை எல்லாம் அழைத்து வந்து பார்த்தாள்.
அதிலிருந்து இன்று வரை எப்பொழுதெல்லாம் மிகுதியான துயரத்தை அவளின் மனம் உணர்கிறதோ அப்பொழுதெல்லாம் இவ்வாறு தன்னை மீறி அவள் உறங்குவதைக் கவனித்திருந்தாள் பவானி.
கல்லூரியில் பயின்ற நாள்களிலெல்லாம் அவள் இவ்வாறு இருந்ததில்லை. அப்பொழுதெல்லாம் அவளுக்குக் கவலை என்ற ஒன்றே இருந்ததில்லை என்பதை பவானியின் மூளை உணர்த்த, நிவாசினியின் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகளை எல்லாம் நினைத்து அவளுக்காக இவளின் மனம் கவலைக் கொள்ளப் பெருமூச்செறிந்தாள் பவானி.
அன்றிரவும் முழிக்காது தொடர்ந்து உறங்கிய நிவாசினியை எழுப்புவதற்காக, பவானி அவளை உலுக்க, லேசாய் நெளிந்தாலும் முழித்தாளில்லை.
அந்நேரம் அபிநந்தனிடமிருந்து பவானிக்கு அழைப்பு வரவும் அவனிடம் பேசச் சென்று விட்டாள்.
மறுநாள் காலை ஏழு மணியளவில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த பவானியை அவளின் கைப்பேசி ஒலித்து எழுப்பியது. அதன் சத்தத்தில் விழித்தவள் யார் எவரெனப் பாராது, அழைப்பினை ஏற்றுக் காதில் வைக்க,
“ஹாய் பவானி! நான் நித்திலன் பேசுறேன்” மறுபக்கம் வந்த குரலில் அதிர்ந்து, உறக்கம் முழுவதுமாய்க் கலைந்து எழுந்து அமர்ந்தாள் பவானி.
“நேத்துலருந்து கால் பண்றேன் ஹனிக்கு! அவ ஃபோனே எடுக்கலை. அவளுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே! உடம்பு நல்லா தானே இருக்கு?” வெகுவான பதட்டத்துடனும் பெரும் கவலையுடனும் ஒலித்தது அவனின் குரல்.
‘என்னது போன் எடுக்கலையா? அவ போன் எங்க?’ என யோசித்தவாறு நிவாசினியின் கைப்பேசியினைத் தேடி எடுத்த பவானி, சைலண்ட் மோடில் இருப்பதைக் கண்டாள்.
‘அந்த டாக்டர் ரூமுக்குள்ள போனப்ப சைலண்ட்ல போட்டதை எடுக்கவேயில்லையா இவ? அதான் நான் போன் செஞ்சப்பவும் எடுக்கலையா?’ மனத்திற்குள் நினைத்தவாறு நின்றிருந்தவளைக் கலைத்தது மறுமனையிலிருந்து வந்த அந்தப் பதட்டமான குரல்.
“என்னங்க எதுவும் பிரச்சனையா ஹனிக்கு? ஏன் எதுவும் சொல்லமாட்டேங்கிறீங்க? நான் கீழே தாங்க இருக்கேன். எதுனாலும் சொல்லுங்க. நேத்துலருந்து அவளுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு தவிச்சி போய் இருக்கேன்” வெகு பதட்டமாய் நித்திலன் பேசவும், அவனது இந்தப் பதட்டம் நிவாசினியின் மீதான அவனின் காதலினை அப்பட்டமாய்க் காண்பிக்க, நித்திலனின் காதல் உண்மை தானோ என்று நினைத்தாள் பவானி.
அவனைச் சமன்படுத்தும் பொருட்டு, “அவ நல்லா இருக்கா. நல்லா கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு இருக்கா?” பவானி கூறிய நொடி,
“என்னது தூங்குறாளா? அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் நேத்து நடந்துச்சா என்ன?” இதையும் அதே பதட்டத்துடன் அவன் கேட்டிருக்க,
‘அவளோட இந்தத் தூக்கம் பத்தி இவருக்கு எப்படித் தெரியும்?’ என எண்ணிய பவானி, “உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசனும். எங்க இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
அவர்களின் விடுதிக்கு கீழே தான் அவன் நிற்பதாய் உரைக்க, அந்த விடுதியின் வரவேற்பறைக்கு அவனை வருமாறு உரைத்தவள் அவனைக் காணக் கிளம்பிச் சென்றாள்.

அந்தத் தங்கும் விடுதியில் தங்கியிருப்பவர்களின் உறவினர்களோ நண்பர்களோ வந்தால் அமர்ந்து பேசவெனத் தோட்டம் போன்றதொரு இடம் அமைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர் நித்திலனும் பவானியும்.
முழு இரவும் உறங்கவில்லை எனப் பறைச்சாற்றும் சிவந்த கண்களும், நிவாசினிக்காய் கவலைபட்டுச் சோர்ந்திருந்த முகமாகத் தான் நித்திலனைக் கண்டாள் பவானி.
“உங்கக்கிட்ட சில விஷயங்களைக் கேட்கனும் அண்ணா!” பவானி பேச்சைத் துவங்கவும்,
“அபிநந்தன் என்னைப் பத்தி விசாரிச்சு சொன்ன பிறகும் என் மேல நம்பிக்கை வரலையாமா உனக்கு?” என நித்திலன் கேட்டதில் அதிர்ச்சிக்குள்ளானாள் பவானி.
“இது எப்படி எனக்குத் தெரியும்னு ஷாக்கா இருக்காமா?” என்றவன்,
“எனக்கு நிவாசினியை ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த மால்ல உங்க ரெண்டு பேரையும் பார்த்த பிறகு நானே உன்னை நேர்ல பார்க்கனும்னு நினைச்சிட்டு இருந்த நேரத்துல ஆளு வச்சி நீ என்னைப் பத்தி விசாரிச்சிட்டு இருக்கிறது தெரிய வந்தது. நீ என்னைப் பத்தி விசாரிக்க அனுப்பின ஆளுங்க நேரடியா விஜய்கிட்டயே என்னைப் பத்தி விசாரிச்சிருக்காங்க” என்றதும்,
‘ஓ அன்னிக்கு மால்ல இவர் கூட இருந்த ஃப்ரண்ட் பேரு தானே விஜய்’ எனத் தனது நினைவுகளை மீட்டெடுத்து யோசித்தவள் அவன் கூறுவதைக் கவனிக்கலானாள்.
“நீங்க என்னைப் பத்தி விசாரிக்கிறதுக்கு முன்னாடியே நிவாசினியைப் பத்தி நான் முழுசா தெரிஞ்சிக்கிட்டேன். அவளுக்கு எல்லாமுமா நான் இருக்கனும்ன்றது என்னிக்கோ நான் முடிவு செஞ்சது. எப்படி நிவாசினிகிட்ட இதைச் சொல்றதுனு நான் யோசிச்சிட்டு இருந்தப்ப நீங்களே என்னைப் பத்தி விசாரிக்கவும் நிவாசினிக்கு என்னைப் பிடிச்சிருக்குனு புரிஞ்சிது. அந்தத் தைரியத்துல தான் அன்னிக்கு நான் முருகன் கோவில்ல அவகிட்ட என் காதலைச் சொன்னேன்” என்றான்.
முந்தைய நாள் இரவு பவானியை அழைத்த அபிநந்தன், நித்திலன் குறித்து விசாரித்தவைகளைப் பற்றி நல்ல விதமாக உரைத்த பிறகே சற்று ஆசுவாசமானாள் பவானி. அது வரை நிவாசினியின் எதிர்காலம் குறித்து வெகுவாய் கவலையுற்றிருந்தாள் அவள்.
அபிநந்தன் நித்திலனைப் பற்றிக் கூறியது அனைத்துமே நேர்மறையாகவே இருக்க, நித்திலனுக்கு நிவாசினியைக் கட்டிக் கொடுப்பதில் பவானிக்கு இருந்த மனத்தடைகள் எல்லாம் நீங்கியிருந்தன.
இதைப் பற்றிப் பேசத் தான் நித்திலனைப் பார்க்க வந்தாள்.
‘நிவாசினியின் தூக்கம் பற்றி அவனுக்கு எப்படித் தெரியும்’ என மனத்தில் எண்ணியதை அவனிடம் கேள்வியாய் அவள் கேட்டிருக்க,
“கட்டிக்கப் போறவளைப் பத்தி இந்தளவுக்குக் கூடத் தெரிஞ்சி வச்சிக்கலைனா அப்புறம் நான் காதலிக்கிறேனு சொல்றதுல அர்த்தமே இல்லங்க. நம்மளைக் காதலிக்கிறவங்களோட நிறைகளை விடக் குறைகளைக் கஷ்டங்களைத் தான்ங்க நாம தெரிஞ்சி வச்சிருக்கனும். அப்ப தான் அதை அவங்க கடந்து வர நாம உறுதுணையா இருக்க முடியும்”
அவனின் இந்தப் பதிலில் பவானி மொத்தமாய் வீழ்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். இவனை விட வேறொரு நல்ல கணவன் நிவாசினிக்கு கிடைக்க மாட்டானென முடிவே செய்து விட்டாள்.
அவனிடம் எதுவும் கூறாது எழுந்தவள், “இருங்க நிவாசினியை அனுப்பி வைக்கிறேன்” எனக் கூறி அங்கிருந்து நகர, “பவானி” என அழைத்த நித்திலன், “உங்ககிட்ட ஒரு சாரி சொல்லனும்” என்றான்.
“சாரியா? எதுக்கு?” எனக் கேட்டாள்.
“உங்களை மொதல்ல தவறா புரிஞ்சிக்கிட்டேன்” சாரி என்பதைக் கண்களில் தாங்கித் தயங்கியே அவன் கூற,
வாய்விட்டுச் சிரித்தவள், “அப்படிப் பார்த்தா நானும் தான் உங்களைத் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். நிவாசினியை கல்யாணம் செஞ்சி அவளோட சொத்தைப் புடுங்க ப்ளான் செய்றீங்களோனு நினைச்சேன். ஆனா உங்களோட சொத்தே நிவாசினியோடதை விடப் பல மடங்கு அதிகம்னு நேத்து நந்தா சொல்லித் தெரிஞ்சிக்கிட்டேன். நிவாசினியை நீங்க கல்யாணம் செஞ்சிக்கிறதுல உங்களுக்குக் காதலைத் தவிர வேறெந்த காரணமும் இருக்க வாய்ப்பே இல்லைன்றதை தெளிவா தெரிச்சிக்கிட்டப் பிறகு தான் உங்களை லேசா நம்பத் தோணுச்சு. அதுவரை உங்களைச் சந்தேக லிஸ்ட்ல தான் வச்சிருந்தேன். புதுசா பார்த்துப் பழகுறவங்களைச் சந்தேகப்படுறது தப்பில்லைங்க. சட்டுனு நம்புறது தான் தப்பு. ஆமா நீங்க என்னனு என்னை தப்பா நினைச்சீங்க” எனச் சிரிப்புடன் கேட்டாள்.
“ஹனி அன்னிக்கு கோவில்ல என் வாழக்கைல எனக்குனு யாருமில்லைனு என் கையப்பிடிச்சி அழுதா, நீங்க அவளை ஒழுங்கா கவனிச்சிக்காம தனிமைல விட்டுட்டீங்களோனு தப்பா நினைச்சிட்டேன். ஆனா நான் நினைச்சது தப்புனு இப்ப கன்னத்துல அறைஞ்சு சொன்னா மாதிரி இருந்துச்சு உங்கப் பேச்சு. வெரி சாரிமா” உணர்ந்து அவன் கூற,
“பரவாயில்லைண்ணா! இதுக்கு எதுக்கு சாரிலாம் கேட்குறீங்க. ஹாசினி அப்படிச் சொன்னதுல தப்பில்லைணா. நம்மளைச் சுத்தி அம்மா அப்பா சொந்த பந்தம்னு எல்லாரும் இருக்கும் போதே நமக்குனு நம்மளைக் காதலிச்சு உயிரா நேசிக்கிற நமக்கான ஒரு சொந்தம் வேணும்னு மனசு தவிக்கும் தானே! இதுல இவளுக்கு இப்படி யாருமே இல்லாத நிலையில, கல்யாணம் முடிஞ்சி போனதும் ஃப்ரண்ட்ன்ற நானுமே அந்நியமா தானே அவளுக்குப் போய்டுவேன். அப்படி இருக்கையிலே உங்களை மட்டும் தாண்ணா அவளுக்குத் தனக்கானவனா, தனக்குரியவனா யோசிக்கத் தோணும். அதனாலத் தான் அவ அப்படிச் சொல்லிருக்கா… இப்ப இவளைப் பத்தி இவ்ளோ யோசிக்கிற நானுமே, கல்யாணம் முடிஞ்ச பிறகு நந்தனை பத்தி மட்டும் தான்ணா யோசிப்பேன். அதை மட்டும் தான் யோசிக்கவும் முடியும். அந்தச் சூழல் நம்மளை அப்படி உள்ள இழுத்துக்கும். அதனால தான் அதுக்கு முன்னாடியே இவளுக்கு ஒரு கல்யாணம் செஞ்சி வச்சிடனும்னு நினைச்சேன்” என்றாள்.
“உங்களை மாதிரி ஒருத்தங்க ஃப்ரண்ட்டா கிடைச்சதுக்கு ஹனிமா கொடுத்து வச்சருக்கனும்” மனம் நெகிழ்ந்து கூறிய நித்திலன், நிவாசினிக்காக அவன் எடுத்து வைத்திருந்த சில முடிவுகளைக் கூற அகமகிழ்ந்து போனாள் பவானி.
“நிவாசினியோட அப்பா அம்மா அவளை ரொம்பவே குழந்தைத்தனமா வளர்த்துட்டாங்க. அவப் பேச்சை மீறி அவங்க வீட்டுல யாரும் நடக்க மாட்டாங்க. அவக் கேட்டதெல்லாம் அவளுக்கு வாங்கிக் கொடுப்பாங்க. ஆனா எல்லாரும் நல்லவங்க. சுத்தியுள்ளவங்கலாம் அவளைக் குழந்தை போலவே பாவிச்சி வளர்த்ததுல இருப்பத்தாறு வயசாகியும் கொஞ்சம் சின்னபிள்ளத்தனமா தான் நடந்துப்பா. கொஞ்சம் அடம் பிடிப்பா. அதை நீங்க தான் பொறுத்துக்கனும்” பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் போன்று அவர்கள் இடத்தில் இருந்து தோழிக்காகப் பேசியிருந்தாள் பவானி.
“ஹனியை அவளோட அப்பா அம்மா பார்த்துக்கிட்ட அளவுக்குச் சந்தோஷமா வச்சி நான் பார்த்துப்பேன். நீங்க கவலையேபடாதீங்க” பவானிக்கு வாக்களிப்பது போல் அவன் கூறவும் நிம்மதியுற்றாள் பவானி.
அதன்பிறகு அறைக்குச் சென்று நிவாசினியை உலுக்கி தண்ணீர் தெளித்துப் போராடி ஒரு வழியாய் எழுப்பியிருந்தாள் பவானி.
‘நான் எங்கே இருக்கேன்’ என்ற பாவனையிலேயே முழித்த நிவாசினி, நிகழுலகிற்கு வந்து முந்தைய நாள் நிகழ்வுகளை நினைவுடுக்கிலிருந்து தூசித் தட்டி எடுத்த சமயம், “உன்னைப் பார்க்க உன் நித்திப்பா வந்திருக்கார். கீழே கார்டன்ல தான் இருக்காரு. போய்ப் பாரு ஹாசினி” என்றாள் பவானி.
நித்திலன் இவளைத் தேடி வந்ததில் மகிழ்ந்தவள், பவானியே அவளைச் சென்று பார்க்கச் சொன்னதில் குழப்பமாய் அவளைப் பார்த்தாள்.
“அவர் மேல நம்பிக்கை வந்துடுச்சா பவா? அவர் என்னை ஏமாத்திட்டுப் போய்ட மாட்டாரு தானே! தப்பானவரை நான் காதலிக்கலைத் தானே பவா” கண்களைச் சூழ்ந்த நீருடன் கலக்கமான குரலில் அவளின் கரம் பற்றியவளாய் கேட்டாள் நிவாசினி.
“இல்லடி! நந்தா அவரைப் பத்தி விசாரிச்சிட்டாரு. நீ சரியானவரைத் தான் தேர்ந்தெடுத்திருக்க! போ போய் பாரு” என்று பவானி கூறியதும் கண்களைத் துடைத்தவளாய் துள்ளிக் குதித்து எழுந்தவள், “தேங்க் யூ சோ மச் பவா” என்றவாறு பவானியைக் கட்டியணைத்து முத்தமிட்டு தனது மகிழ்வை வெளிப்படுத்தினாள்.
“ச்சீ போடி” முகத்தை அஷ்டகோணலாக்கி கன்னத்தைத் துடைத்தவளாய் தோழியை பவானி தள்ளி விட,
பவானியை வெறுப்பேற்றவென மீண்டுமாய் மறு கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு அவளின் கையினில் சிக்காமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் நிவாசினி.
“கன்னத்தை எச்சி பண்றது என்ன பழக்கமோ இவளுக்கு” என்று தோழியைத் திட்டினாலும் அவளின் மகிழ்வில் அகமகிழ்ந்து போனாள் பவானி.
குளியலறைச் சென்று முகம் கழுவி விட்டு நித்திலனைக் காண ஓடோடிச் சென்றாள் நிவாசினி.
முகம் கொள்ளாப் புன்னகையும் பூரிப்புமாய்த் தோட்டத்தை அடைந்த நிவாசினியின் முகம், நித்திலனின் சோர்வான முகத்தையும் சிவந்திருந்த கண்களையும் கண்டு பொலிவை இழந்தது.
அவனருகில் சென்று அவன் முகத்தினை வருடியவள், “என்னப்பா என்னாச்சு? ஏன் இவ்ளோ சோர்வா தெரியுறீங்க? கண்ணெல்லாம் ஏன் சிவந்து போய் இருக்கு?” அவனது நலத்தினை அறியயெண்ணி அவளது கண்களும் கைகளும் அவனை ஸ்பரிசித்து அறிய முயல, தனது முகத்தினை வருடும் அவளது கைகளைப் பற்றியவன்,
“ஒன்னுமில்லடா ஹனி! நேத்து நம்ம சாய்ந்திரம் மீட் பண்ணலாம்னு சொல்லிருந்தல. நான் ரொம்ப நேரமா வெய்ட் செஞ்சேன். நீ வரவும் இல்ல. ஃபோனும் எடுக்கல. உனக்கு என்னமோ ஏதோனு ரொம்பவே பயந்துட்டேன். இல்ல உனக்கு என்னைப் பிடிக்கலையோ அவாய்ட் பண்றியோனுலாம் தோணிடுச்சு. நைட் முழுக்கத் தூக்கமேயில்ல” என்றான்.
இரவு முழுவதும் தன்னை எண்ணி எத்தனையாய் தவித்திருக்கிறான் என எண்ணியவளின் மனம் அவன் மீது பாகாய் கசிந்துருக, அவனது இரு கைகளையும் பற்றி, “சாரி.. சாரி.. சாரிப்பா” கண்களைச் சுருக்கி அவனிடம் மன்னிப்பு வேண்டி நின்றாள்.
“ம்ப்ச் பரவாயில்லடா. இதுக்கு எதுக்கு சாரிலாம் கேட்டுட்டு இருக்க. நீ தூங்கிட்டனு பவானி சொன்னாங்க. அதுக்கு நீ என்ன பண்ணுவ” என்றவனாய் அவளைத் தன்னருகே இருக்கையில் அமர்த்தியவன்,
“உனக்கு ஒன்னுமில்லையே” பரிதவிப்புடன் கேட்டான்.
அவனின் புஜத்தினைப் பற்றித் தோளில் சாய்ந்து கொண்டவளாய், “நீங்க என் பக்கத்துல இருக்கும் போது எனக்கு என்னப்பா வந்துடப் போகுது! நீங்க என் கூட இருந்தாலே போதும் என்னோட துக்கம் எல்லாம் என்னை விட்டு மறைஞ்சு ஓடிப் போய்டும்” ஆத்மார்த்தமாய் உரைத்திருந்தாள்.
“நேத்து ரொம்ப நேரம் வெயிட் செஞ்சிட்டு இருந்தீங்களா?” குற்றயுணர்வுடன் அவன் முகம் நோக்கியவாறு அவள் கேட்க,
“அது நீ தெரிஞ்சி செஞ்சது இல்லயே ஹனி! பரவாயில்ல” அவளை இலகுவாக்கும் பொருட்டுக் கூறியிருந்தவன்,
“என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும் ஹனி?” எனக் கேட்டான்.
உதட்டைப் பிதுக்கி எதுவும் தெரியாது எனப் பாவனையாய் தலை ஆட்டியவள், “எதுவும் தெரிஞ்சிக்கவும் விரும்பலைங்க. நீங்க கண்டிப்பா எனக்குத் தீங்குச் செய்ய மாட்டீங்கனு மனசார நம்புறேன். நீங்க எதுவும் என்கிட்ட சொல்ல வேண்டாம்” என்றாள்.
அவளின் இந்தக் கூற்றில் வாயடைத்துப் போனான் நித்திலன்.
அவளின் இந்த நம்பிக்கை என்றும் பொய்த்துப் போகாத வண்ணம் காப்பாற்றும் சக்தியை எனக்கருள்வாய் முருகா என அவசரமாய் அவரிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.
காப்பாற்றுவாரா முருகப் பெருமான் அல்லது அவர்களின் வாழ்வில் விதி வலியது என விளையாடுவாரா என்பதை அவரே அறிவார்.
அவனின் தோளில் அவள் சாய்ந்திருக்க, அவளின் கரத்தினைத் தன்னுடன் கோர்த்துக் கொண்டு அமைதியாய் அவன் அமர்ந்திருக்க, அந்த மோன நிலையை ரசித்திருந்தனர் இருவரும்.
அவன் கிளம்ப வேண்டிய நேரம் வர, “ஹனிமா அடுத்த ரெண்டு வாரத்துல நாம கல்யாணம் செஞ்சிக்கலாம். எங்க ஃபேமிலில யாருக்கும் இதுல எந்த அப்ஜெக்ஷனும் கிடையாது!” ஆனந்த அணுகுண்டை அமைதியாய் அவன் தூக்கிப் போட, மகிழ்ச்சியில் மத்தாப்பாய் மிளிர்ந்தாள் நிவாசினி.

