Loading

அத்தியாயம் 7

 

மாலை நேரத்தில் இல்லம் வந்து சேர்ந்தனர் ராஜகணபதியும் செல்வாம்பிகையும்.

அப்பொழுது தான் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு அமர்ந்திருந்தான் நவநீதன். தொலைக்காட்சியில் அன்றைய தினத்தின் முக்கிய செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

ஒரு பெருமூச்சு விட்டு கூடத்தில் இருந்த இருக்கையில் ராஜா அமர, உள்ளே சென்று தண்ணீரைக் கொண்டு வந்து தந்தார் அம்பிகை.

“ஏன் இவ்வளவு நேரம்.?” என தனயன் வினவ, “பேச வேண்டாம்?” என்றார் தந்தையானவர்‌.

“நின்னு போன கல்யாணத்தைப் பத்திப் பேச என்ன இருக்கு?”

“கல்யாணம் நின்னுடுச்சுனு கொஞ்சம் கூட வருத்தத்தைக் காணோமேடா உன் மூஞ்சியில.”

“வருத்தப்பட்டா எதுவும் மாறிடுமா?”

“நிஜமா கல்யாணம் செஞ்சுக்கிற எண்ணத்துல தான் இருந்தியா? இல்ல, நாங்க சொல்லுறோமேனு தலையை ஆட்டுனியா.?”

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?”

“அப்ப, நின்னதுல சந்தோஷம் போல.”

“அப்படிச் சொல்ல முடியாது. பிரயோஜனம் இல்லாம செலவு பண்ணீட்டோமேனு இருக்கு.”

“பெரிய கவலை தான்.”

“அப்பா, உங்களுக்கு இப்ப‌‌ என்னதான் பிரச்சனை?”

“எனக்கு என்ன பிரச்சனை? இனி கேட்கிறவனுக்கு எல்லாம் பதில் சொல்லணுமே?”

“சொல்லுங்க. நீங்க பார்த்த பொண்ணு தான?”

“ம்ம்.. தேவை தான் எனக்கு.”

“கவலைப்பட்டு இப்படிப் புலம்புறதால, மேல இருந்து ஒன்னும் புதுசா பொண்ணு குதிச்சிடப் போறது இல்ல.”

“குதிக்காது தான். ஆனா தலையைக் கொஞ்சம் மேல தூக்கிப் பார்த்தா, கிடைக்க வாய்ப்பு இருக்கு.”

அவன் அதிர்ச்சியாய் நோக்க, தனது கைப்பேசியை நீட்டினார்.

அதைப் புறம் தள்ளி, “என்னம்மா.?” என நவன் அன்னையைப் பார்க்க, “உன்னோட அப்பாதான் பேசி முடிச்சாரு‌.” என்றார் அம்பிகை.

“என்ன பேசுனீங்க‍? அதான் அந்தப் பொண்ணு வேணாம்னு போயிடுச்சே‌? விருப்பம் இல்லாத பொண்ணை, நான் கல்யாணம் செஞ்சுக்குவேனு எப்படி நினைச்சீங்க.?”

“கட்டாயப்படுத்தி ஒரு பொண்ணை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிற ஆளுன்னா என்னை நினைச்ச? உன்னைப் பெத்தவனுக்கு மனசுல அவ்வளவு தான் மரியாதை இல்ல?” என்ற ராஜாவின் உயர்ந்த குரலில் அவன் திகைத்துப் பார்க்க, “ஃபோனை நீட்டுனேன். அதை‌ என்னனு கவனிச்சியா.?”

“அதுல என்ன இருக்கு, கவனிக்கிறதுக்கு.?” என வினவிய படி வாங்கி இயக்க, திரையில் புன்னகைத்தவாறு நின்று இருந்தாள், சஞ்சனாவிற்குப் பதிலாக தற்போது நவநீதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்.

“அப்பா.?”

“பொண்ணு பேரு ஆசைக்கனி, அங்கதான் மேல் வீட்டுல குடி இருக்காங்க. அம்மா இல்ல. அந்தப் பிள்ளையோட அப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு. அவங்களுக்கு ஒரு பையன்‌. வசதி பெருசா இல்லனாலும், விசாரிச்ச வரைக்கும் நல்ல மனுசங்க தான். முக்கியமா, அந்தப் பொண்ணு யாரையும் காதலிக்கலயாம்.”

கடகடவென சொல்லி முடித்த தந்தையை முறைத்தவன், “மைனர் பொண்ணுப்பா. விசயம் வெளிய தெரிஞ்சா, குழந்தைத் திருமண சட்டப்படி நம்ம குடும்பம் மொத்தத்தையும் அரெஸ்ட் பண்ணிடுவாங்க‌.”

“எது, குழந்தைத் திருமணமா? அது வளர்ந்த பொண்ணுடா. குழந்தை மாதிரியா தெரியிது.?”

“வளர்ந்திருந்தா போதுமா? நம்ம நாட்டு சட்டப்படி பொண்ணுக்குப் பதினெட்டு ஆனதுக்குப் பின்னாடி தான் கல்யாணம் செய்யணும்.”

“பிள்ளைக்கு இருபது வயசுடா.”

“வாட்.?” என்ற நவன் புகைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, அன்றைய தினத்தின் காலையில் நடந்த நிகழ்வை சிந்தனையில் ஓட்டினான்.

பெண் வீட்டிற்குச் செல்வதற்கு வழி கேட்டது, அவளிடம் தான். சுடிதார் அணிந்து இருந்தாள். துப்பட்டா அணிவதற்கு அவசியமற்ற தோற்றம். தலையை நிறைத்தபடி அவள் போட்டிருந்த கொண்டை, குழலின் நீளத்திற்கும் அடர்த்திக்கும் கட்டியம் சொல்லியது.

நவன் ஆறடிக்குச் சற்று குறைவான உயரம்.‌

அவள் முன்னால் செல்ல, இவன் பின்னால் நடந்தான். ஆடவனது மார்பு அளவிற்கான உயரத்தில் தான் இருந்தாள். மெலிந்த தேகம் வேறு. பார்ப்பவர்கள் யாராய் இருந்தாலும் பள்ளி மாணவி என்றுதான் நினைக்கக் கூடும். அவனிற்கும் அப்படித்தான் தோன்றியது.

“அப்பவும் வயசு கம்மியா தான இருக்கு? எனக்கு இருபத்தொன்பது.”

“ஒன்பது வயசு தான? எனக்கும் உங்க அம்மாவுக்கும் பன்னெண்டு வயசு வித்தியாசம். நல்லா இல்லையா நாங்க.?”

“அதை நீங்க சொன்னா எப்படி? நல்லா இருக்கோம்னு அம்மா இல்ல சொல்லணும்?”

“ஏம்மா, நான்‌ உன்னை நல்லா வச்சுக்கலயா.? எதுவும் குறை இருக்கா.?” என ராஜா மனைவியின் புறம் திரும்பி வினவ, மெலிதாய்ச் சிரித்தார் அம்பிகை.

“வாழ்ந்து முடிச்ச பின்னாடிக் கேட்டா எப்படி? இல்லனு சொன்னா, என்ன செய்யிவீங்க நீங்க? கல்யாணம் முடிக்கிறப்ப முதலாளியா இருந்தீங்க. இப்ப, கை நீட்டிச் சம்பளம் வாங்குற இடத்துல இருக்கீங்க. நீங்களே சொல்லுங்க, எங்க அம்மாவை நல்லா வச்சு இருக்கீங்களானு.” என்று நவன் கேட்டிட,

“அன்னைக்கு அம்பதாயிரத்துக்குச் சேலை வாங்கித் தந்தாரு. இன்னைக்கு ஐநூறுக்கு வாங்கித் தர்றாரு. காசுதான் குறைஞ்சிருக்கே தவிர, சேலை வாங்கித் தர்றது மாறல. காசு கூடுனதை கண்ணாடிப் பெட்டிக்குள்ள வச்சு அழகு பார்க்கப் போறதும் இல்ல. விலை குறைவுனு, கால்மிதியா போடப் போறதும் இல்ல. எவ்வளவு ரூபாயா இருந்தாலும், அதை உடம்புல உடுத்தத்தான போறோம்.?” எனப் பதில் தந்தார் அம்பிகை.

தந்தை சிரித்திட, “ஜாடிக்கு ஏத்த நல்ல மூடி!” என்று முணுமுணுத்தான் மகன்.

“எங்கக் கதையை விடு, உன் கதைக்கு வா. பொண்ணுக்கிட்டப் பேசிப் பார்த்தோம். நல்ல குணமாத்தான் தெரியிது.”

“முதல்ல பார்த்த பொண்ணுக்கிட்டயும் பேசி இருப்பீங்க தான.?”

“பேசுனோம் தான். ஆனா அந்தப் பிள்ள சரியா எதுவும் பதில் சொல்லல. புது ஆளுங்களா இருக்கிறதுனால சங்கடப்படுதுனு நினைச்சு இருந்தோம். ஆனா, இந்தப் பிள்ள அப்படி இல்ல. கேட்கிறதுக்கு கணீர்னு பதில் சொல்லுது. பார்க்கிறதுக்கு ஒல்லியா சின்னப்பிள்ள மாதிரி தெரியிதே தவிர, வீட்டுல எல்லா வேலையும் அதுதான் செய்யுமாம்.”

“நான் வீட்டு வேலைக்கு ஒன்னும் ஆள் தேடல.‌ அவசர அவசரமா ஒரு பொண்ணைப் பார்த்துப் பேசி முடிக்க வேண்டிய அவசியம் என்ன?”

“நீதான, இருபத்து அஞ்சாயிரத்துக்கு வாங்குன பட்டு சேலை வீணா போச்சுனு வருத்தப்பட்ட? கல்யாணக் கடனை நினைச்சு வேற கவலையா பேசுன?”

“அதுக்கு.?”

“கல்யாணத்தை முடிச்சிட்டா கவலைக்கு அவசியம் இல்லேல.?”

“இல்ல, என்னை என்னனு நினைச்சீங்க? காசுக்காக யாரை வேணும்னாலும் கல்யாணம் செஞ்சுக்குவேன்னா? இவங்க எவ்வளவு வரதட்சணை தர்றதா சொன்னாங்க?”

“நவநீ! ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன். பேச்சுல கவனம் வையினு!” என அம்பிகை இடைநுழைந்து உரைக்க, “நீயே அவன்கிட்ட பேசும்மா. இந்த பிடிவாதக்காரன் கிட்ட என்னால முடியாது!‌” என்றுவிட்டு எழுந்து சென்றார் ராஜா.

அவன் அன்னையிடம் இருந்து பார்வையை வேறுபுறம் திருப்ப, “அப்பா, உனக்குக் கெட்டதா செய்யிவாரு.?”

“ஆனா, நல்லதும் செய்ய மாட்டாரு!”

“என்னடா உனக்கு இப்ப நல்லது செய்யாம போயிட்டாரு?”

“நான் படிக்கணும்னு வந்து நின்னப்ப, என்ன செஞ்சாரு?”

“முடியாது! வீட்டை விட்டு வெளிய போனு துரத்தியா விட்டாரு? அவர் சக்திக்கு முடிஞ்சதைச் செய்யிறேன்னு தான சொன்னாரு? நீதான் பிடிவாதமா மறுத்துட்ட.”

“எனக்கு ஒன்னும் அவரு செய்ய வேண்டாம். நானே என் வாழ்க்கையைப் பார்த்துக்கிறேன்.”

“அப்ப, எங்களை வேண்டாம்னு சொல்லுறியா நவநீ.?”

“நான்‌ எப்ப அம்மா அப்படிச் சொன்னேன்.?”

“நடந்ததை நினைச்சு, இதுக்கு அப்புறம் நீ கல்யாணத்துக்குச் சம்மதிப்பியோ மாட்டியோனு பயம்‌ அவருக்கு. அதான் குறிச்ச முகூர்த்தத்துலயே நடத்திடலாம்னு உடனே பொண்ணு வீட்டுல பேசிட்டாரு. இன்னைக்கு நாள் முழுக்க பார்த்ததை வச்சு சொல்லுறேன். நல்ல பொண்ணு தான். திருப்பதினு அப்பா ஃபோன்லயே நம்பர் இருக்கும். வேணும்னா நீயே பேசிப் பாரு!” என்றவர் எழுந்து செல்ல, கையில் இருந்த தந்தையின் கைப்பேசியைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான் நவநீதன்.

ராஜாவின் எண்ணம் சரிதான். திருமணம், பெண் என குடும்ப வாழ்வின் மீது அவனிற்குப் பிடிப்பு என்று இதுவரை உண்டாகவில்லை. ஆனால் ஏற்ற பொறுப்பைச் சரியாய்ச் செய்திட வேண்டும் என்ற கொள்கை கொண்டவன்.

வாழப் போகின்ற வாழ்விற்கு ஏதேனும் ஒரு பொருள் வேண்டுமே? தளர்ந்து‌ போகும் காலத்தில் அருகே அமர்ந்து ஆதரவாய் கரம் பற்றிட ஒரு துணை இருந்தால், அதுவல்லவா இப்பிறப்பை முழுமை பெற‌ச் செய்யும்? அம்பிகையுடன் வாழ்வைப் பகிர்ந்த ராஜாவின் எண்ணம் இப்படியாகத்தான் இருந்தது‌.

பெற்றோர் ஒவ்வொருவரும்.. தன் பிள்ளைகளுக்குச் செய்ய‌ வேண்டிய ஆகப் பெரும் கடமையாய் நினைப்பது, திருமணத்தைத் தான். அதனாலேயே தகுந்த வயதில் மகனிற்காக குணமான‌ ஒரு கன்னிகையைத் தானம் பெற்றுத் தந்துவிட வேண்டும் என நினைத்தார்.

அவனிற்குமே ஈன்றவரின் மனம் புரிந்தே இருந்தது. எனினும் தந்தைக்கும் தனயனிற்கும் இடையே இந்த நீயா நானா என்ற வாதம் ஒவ்வொரு விஷயத்திற்கும் நடைபெறுவது மட்டும் மாறுவதாய் இல்லை.

மாறிவிட்டால் தான் இவர்கள் இணைந்து விடுவரே? ஊர் கண் பட்டுவிட்டால் என்ன செய்வது? மகனின் மீது ராஜா கொண்ட அன்பில் தான் கண்பட்டு, அவர்களின் வாழ்வு நிலையே தலைகீழாய் மாறிப் போனதோ என்னவோ.? அதற்கு எலியும் பூனையுமாய் இருப்பதே மேல்!

“அந்த மாப்பிள்ள வீட்டுக்காரங்க பாவம் இல்லையா? முன்னாடியே சொல்லி இருந்தா, அவங்க வேற பொண்ணாவது பார்த்திருப்பாங்க.” எனக் காலையில் கனி‌ அவர்கள் ‌வசிக்கும் தெருவில் இருந்த பெண்ணிடம் உரைத்தது நினைவிற்கு வந்தது‌.

அவளிடம் பேச வேண்டிய அவசியம் உண்டாகவில்லை. இக்கட்டான நிலையில் வெளிப்படும் ஒரு சொல், ஒரு செயல் போதும் ஒருவரது குணம் யாதென தீர்மானித்து விட.

அவ்வகையில் ஆசைக்கனியைப் பற்றிய முடிவிற்கு வர, காலையில் யாரோ என நினைத்து அவனிற்காக உதிர்த்த அவளின் நியாயச் சொற்களே போதுமானதாய் இருந்தது‌.

தந்தையின் மீது சினம் இருந்தாலும், என்றுமே அவர் எடுக்கும் முடிவுகளின் மீது மரியாதை உண்டு நவனிற்கு. அத்தோடு பெருமையும் உண்டு.

எந்நிலையிலும் குணத்தை மாற்றிக் கொள்ளாதவர். தான் வருந்தினாலும், மற்றவர்கள் தன்னால் எவ்வித வலிக்கும் ஆளாகி விடக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாய் இருப்பவர்.

செல்வந்தனாய் இருந்த போதும் சரி, அது பறிபோய் நின்ற போதும் சரி, வாழ்வை நினைத்து அச்சத்தில் வீழாதவர். சூழலுக்குத் தகுந்தபடி தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறம் பெற்றவர் ராஜா.

இதோ காலையில் நின்று போன திருமணத்திற்கு, மாலையில் வேறு பெண் பார்த்து முடிவு செய்து வந்து விட்டார். அவர் அப்படித்தான். நொடிப் பொழுதில் சிந்தனையை மாற்றி வழி கண்டறிந்து விடுவார்.

தந்தையைப் போல் தான் தனயனும். நவனின் மனமும், நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது‌.

வருங்கால மாமனாரான திருப்பதியின் எண்ணை, தனது கைப்பேசியிலும் பதிவு செய்து கொண்டான்.

ஒரு பெருமூச்சை வெளிவிட்டு, “அம்மா, அப்பாவோட மொபைலை டேபிள்ல வச்சிருக்கேன். எடுத்துக்கச் சொல்லுங்க!” என்றுவிட்டுச் சென்றவனை, அறையின் வாயிலில் இருந்த ராஜாவும், சமையல் கூடத்தில் இருந்து அம்பிகையும் பார்த்திருந்தனர்.

என்னதான் மனிதன் முட்டி மோதினாலும், இன்னாருக்கு இன்னாரென்று காலமே தீர்மானிக்கிறது. திருமண அழைப்பிதழில் நவநீதனிற்கு நேராய் எழுதப்பட்டு இருந்த பெயரை ஆசைக்கனியாய் மாற்றிய அன்றைய தினம், சஞ்சனாவிற்கு அருகே விஜயனையும் உறுதி செய்தது‌.

காலம் தீர்மானித்த இணை சரியானதா என்று இனி இவர்கள் வாழப் போகும் வாழ்வு தான் விடை சொல்லும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்