Loading

25

 

“வாட்? கம் அகைன்” என்று அதிர்வுடன் ராஜசிம்மன் வினவ,

 

“ஹ்ம்.. இதே ஷாக் தான் எனக்கும்” என்று நெட்டி சோம்பல் முறித்தான் அபூர்வன்.

 

“புரியும்படி சொல்லுங்க” என்று ராஜசிம்மன் பல்லைக் கடிக்க,

 

“எங்கப்பா ஒரு ஜெனிடிகல் இன்ஜினியர்” என்றான்.

 

அன்றைய நாள் அவன் தந்தை கூறியவை அவன் கண்களின் முன் வந்து போனது.

 

தாவரங்கள், ‘குளோரோஃபில்’ என்ற பச்சை நிறத்தின் மூலம், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, தன் உணவைத் தயாரித்துக் கொள்ளும். அதனை நடத்திக் கொடுக்கும் மரபணுவை, விலங்குகளுக்கு செலுத்தி, சோதனை செய்து, வெற்றியடையும் பட்சத்தில், மனிதர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் தான், சக்கரவர்த்தி இருந்தார். இப்படி செய்யும் பட்சத்தில் தனியாக மனிதனுக்கு உணவு தேவைப்படாதென்று இதை மேற்கொண்டார்.

 

அவர் வீட்டிலேயே ஒரு சிறிய ஆராய்ச்சிக் கூடம் வைத்து, இதை நடத்தி வந்தார். அந்த சமயம், ராஜலட்சுமி அடிக்கடி சோர்வாக உணர, அவருக்கு சத்துக்குப் போட எடுத்த ஊசிக்குப் பதிலாக, இதனை மாற்றி செலுத்தியிருந்தார்.

 

மறுநாள் மீண்டும் ஆய்வில் ஈடுபடும்போதுதான் இது அவருக்குத் தெரியவந்தது. மனித உடல் அத்தனை எளிதில் அந்த மரபணுவை எடுத்துக்கொள்ளாது என்று அவர் நினைத்திருக்கும் சமயம், ராஜலட்சுமி கர்ப்பமாக இருப்பது தெரியவர, அவரது மனம் சற்றே ஆட்டம் கண்டது. ஆனால் அப்போதும் அதை அவர் அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த மரபணுவை இளங்கரு ஏற்றுக்கொண்டால், தனது ஆராய்ச்சிக்கு அது பெரிய வெற்றியாக அல்லவா அமையும்? என்ற ஆர்வத்தில் இருந்தார்.

 

அபூர்வன் பிறக்கும்போது பச்சை நிறக் கண்களுடன் பிறந்ததைக் கண்டு, அவர் கொண்ட ஆனந்தத்தை சொல்லில் வடித்திட இயலாது. அவர் தனக்கு நம்பகத்தன்மையாய் இருந்த மற்றொரு ஆராய்ச்சியாளரிடம், அபூர்வனின் முதல் பிறந்தநாளின்போது பேசிய சமயம், ராஜலட்சுமியும் அதைக் கேட்க நேர்ந்தது.

 

“என்னடா சொல்ற? இதை நீ சாதாரணமா நினைக்கிறியா? மனித உடலுக்கு ரொம்ப முக்கியம் கார்போஹைட்ரேட் மட்டுமில்ல. புரோட்டின், ஃபைபர், விட்டமின், மினரல்ஸ்னு எல்லாமே வேணும். குழந்தை உடல் தன்னைப்போல கார்ப்ஸ் மட்டும் உருவாக்கினா, சீக்கிரம் டயபெடீஸ் வராதா?” என்று அவரது நண்பர் கேட்க,

 

சக்கரவர்த்தி இந்த கோணத்தில் யோசிக்க மறந்ததில் அதிர்ந்தார்.

 

“அதுமட்டுமில்ல.. இன்னும் நீ செலுத்தின ஜீன் ரெசிஸிவா இருக்குது. அது டாமினென்டா மாறினா, அபூர்வன் பச்சை நிறமா மாறுறதுக்கும் வாய்ப்பிருக்கு. குளோரோஃபில்லுங்குறதே பச்சை நிற பிக்மென்ட் தான். அவன் முழுசா பச்சை நிறமா மாறினா, என்ன ஆகும்னு யோசிச்சியா? இதுபத்தி வெளிய தெரிஞ்சா, உன்னோட கரியரும் பாதிக்கப்படும்” என்று அவர் கூற,

 

இதையெல்லாம் ஏன் தான் யோசிக்கவில்லை என்று திகைத்து கவலையடைந்தார்.

 

அவரது ஆராய்ச்சியின் வெற்றிக்கான மமதை, அவரது மூளையை மழுங்கச் செய்திருந்தது.

 

தந்தை கூறியவற்றைக் கேட்ட அபூர்வன், “அ..அதான் கொஞ்சக் கொஞ்சமா என் நகம், முடியெல்லாம் பச்சையாச்சா?” என்று கேட்க,

 

சோகத்துடன் சக்கரவர்த்தி ஆமென்று தலையசைத்தார்.

 

“இத்தனை நாளாக் கொஞ்சம் கொஞ்சமா மாறின உடல் ஏன் திடீர்னு மொத்தமா பச்சையாச்சுப்பா?” என்று அபூர்வன் புரியாமல் கேட்க,

 

“ஸ்கேன் ரேஸ்.. ஸ்கேன் ரேஸ் ரெசிசிவா இருந்த ஜீனை ட்ரிகர் பண்ணிருக்கு.. இதை நானும் எதிர்பார்க்கலை. வரிசையா எம்.ஆர்.ஐ, சீ.டீ, எக்ஸ்ரேனு எல்லாமே எடுத்ததில், உன்னோட ஜீன ட்ரிகர் ஆகிருக்கு. அதான் இப்படி ஒரே இரவில் மொத்தமா உன்னைப் பச்சையாக்கியிருக்கு. உனக்கு இனி பாதுகாப்பில்ல அபூர்வா.. அப்பாவை மன்னிச்சுடு. எப்படியாவது அப்பா, உனக்கான மாற்று வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்றேன்.. அதுவரை நீ எங்கயாவது மறைந்துதான் இருக்கணும். நீ என்கூட இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஆபத்து” என்றார்.

 

அபூர்வனுக்கு அந்த நொடி, என்ன பேசுவதென்றே புரியாத நிலை.

 

அவனை மொத்தமாக யாரும் பார்க்காதபடி, மறைத்துக் கூட்டிவந்து, தன் மகிழுந்தில் ஏற்றியவர், அவனைப் பதுங்க வைக்க இடம் தேடி அலைந்தார்.

 

அவர் அதிகம் நம்பிய அவரது நண்பருக்கு மட்டும் விடயத்தைத் தெரிவிக்க,

 

இருவருமாக அவரை சந்திக்க வேண்டிச் சென்றனர்.

 

ஆனால் அதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய பிழையாகிப் போனது.

 

“வா சக்கரா.. வா மை பாய்..” என்று ஆளில்லாத அந்த அமைதியான, பழுதடைந்த தொழிற்சாலையில், அவர்களை அவர் வரவேற்றார்.

 

“உங்கப்பனுக்கு எவ்வளவோ சொன்னேன்.. எங்க புரிஞ்சுகிட்டான்.. அவனோட மமதையால நீதான் தவிக்கிற” என்று அவர் கூற,

 

கூனிக் குறுகும் தன் தந்தையைக் காண முடியாமல், “உங்களால என்னை மாற்ற முடிஞ்சா உதவுங்க அங்கிள்.. எங்கப்பாவைப் பேசாதீங்க” என்றான்.

 

“பாத்தியாடா.. உன் பையனுக்கு உன்மேல எவ்வளவு பாசம் பாரு” என்று அவர் சிரிக்க,

 

சக்கரவர்த்தி மகனைக் கண்ணீரும் விரக்தியுமாகப் பார்த்தார்.

 

“ஆனா.. உன் அப்பன் தப்புப் பண்ணிட்டான்.. அந்தப் பாசத்துக்கு அவன் உரியவனே இல்ல” என்று அவரது முக பாவமும் குரலும் மாற்றம் பெற, தந்தையும் தனயனும் அவரைப் புரியாமல் பார்த்தனர்.

 

“என்னடா பார்க்குற? இப்படி உனக்கு ஆகணும், நீ மாறணும், இவன் என்கிட்ட வந்து உதவிக் கேட்கணும்னுதான் காத்துட்டு இருந்தேன்.. இதோ.. இன்னிக்கு நடந்துடுச்சு..” என்று அவர் பேசிக் கொண்டே போக,

 

வேகமாய் அவரைத் தள்ளிவிட்ட சக்கரவர்த்தி, “அபூர்வா.. ஓடு..” என்றார்.

 

நண்பனின் மாறுபட்டப் பேச்சே அவரது உள்நோக்கத்தை சக்கரவர்த்திக்கு உணர்த்தப் போதுமானதாக இருந்தது.

 

“ப்பா..!?” என்று அவன் அதிர்ந்து நிற்க,

 

“ஓடுடா‌..” என்றபடி அவன் கரம் பற்றி இழுத்துச் சென்றார்.

 

அவரால் மகனின் வேகத்திற்கு ஈடு செய்ய முடியவில்லை…

 

இருந்தும் மகனுக்குத் தான் தேவை என்று தன் கால்களை உந்தித் தள்ளி ஓடினார்.

 

இருவரும் வண்டியில் ஏறிப் புறப்பட,

 

“ப்பா.. என்னப்பா பண்றது?” என்று அபூர்வன் பதட்டமாய்க் கேட்டான்.

 

கண்ணீரோடு காட்டுப் பாதையில் அவர் வண்டியை செலுத்த,

 

பின்னோடே அவரது முன்னாள் தோழர் துரத்தி வந்து கொண்டிருந்தார்.

 

“உங்கம்மா அவ கடைசி காலத்துல உன்னைப் பத்திரமா வச்சுக்கணும்னு மட்டும்தான் என்கிட்டக் கேட்டா.. அதைத் தவிர வேற எதுவுமே என்கிட்டக் கேட்கலை.. அதையாவது நான் நல்லபடியா செய்யணும் அபூர்வா” என்று கண்ணீரோடு அவர் கூற,

 

“ப்பா.. ஒன்னுமாகாதுப்பா..” என்று ஆறுதல் கூற முற்பட்டவன் கண்களில் கண்ணீர் பெருகியோடியது.

 

அவனால் தன் வாழ்வில் நடந்ததையும் நடந்து கொண்டிருப்பதையும் கிரகிக்கவே முடியவில்லை. ஒரே நாளில் எத்தனை அதிர்வு? திடீரென்று தனக்குள் தினிக்கப்பட்டப் பழைய நினைவுகளை அவனால் விழுங்கவும் முடியவில்லை, துப்பவும் இயலவில்லை…

 

தனக்குள் நிகழும் மாற்றங்களையும், தன்னைச் சுற்றி நிகழ்ந்த மாற்றங்களையும் பற்றி அறிந்தவற்றை நம்பவும் இயலவில்லை, நம்பாமல் இருக்கவும் இயலவில்லை..

 

“என்னை மன்னிச்சிரு அபூர்வா..” என்றவர், “எக்காரணம் கொண்டும், இந்தக் காட்டை விட்டு மட்டும் நான் சொல்லாம வெளிய வந்துடாத” என்று கூற,

 

“ப்பா?” என்று புரியாமல் கேட்டான்.

 

கண்ணீரோடு அவன் தலை கோதியவர் கண்களில் மனைவியின் முகம் வந்து போனது.

 

‘என் கடைசி ஆசை..’ என்று அவர் விழி கூறியவை, அவரது கண்முன் வந்து, அத்தனை கலங்க வைத்தது.

 

“ஒன்னுமில்லப்பா.. ஏதாவது செய்யலாம்ப்பா. நான் இப்படியேத்தான் இருக்கனும்னாலும் பரவால்லப்பா.. எனக்குனு இருக்கும் நீங்களாவது எனக்கு வேணும். நாம எங்கயாவது போயிடலாம்” என்று அபூர்வன் அழ,

 

அவருக்குக் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஒருகாலத்தில் தன் மனையாளிடம் அவர் கெஞ்சிய வார்த்தைகள் அல்லவா இவை?

 

துக்கத்தைச் சிரமப்பட்டு விழுங்கியவர், “உனக்கு ஒரு தம்பியும் இருக்கான்.. இந்நேரம் நல்லபடியா இருப்பான்” என்றவராய், அவன் எதிர்பாராதபடி, வேகத்தைக் குறைத்துக் கதவைத் திறந்து அவனை வெளியே தள்ளிவிட, சாலையோரத்திலிருந்து காட்டிற்குள் உருண்டு விழுந்தான் அபூர்வன்.

 

அப்போதே அந்த சாலையின் திரும்பத்தினுள் நுழைந்த அவரது முன்னாள் தோழன், அதனைப் பார்த்திருக்கவில்லை. நண்பன் இப்படி செய்து தன் மகனைத் தப்ப வைத்திருக்கக்கூடும் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

மகன் உருண்டு விழுந்த இடத்தைக் கண்ணீரோடு பார்த்தவர் கவனம் சிதறி, வண்டி பெரிய பாறை ஒன்றில் மோதி, நிமிடத்தில் வெடித்துச் சிதறியது.

 

காட்டிற்குள் உருண்டு விழுந்திருந்த அபூர்வன் இந்த பெரும் ஓசையில் அதிர்ந்து தத்தித் தடுமாறி எழுந்துவர, எரிந்து கொண்டிருந்த வாகனம் அவன் கண்களுக்கு கசப்பான விருந்தாய்….

 

வாகனத்தின் அருகே கோபத்துடன் நின்றிருந்த அவரது முன்னாள் நண்பன், எரிச்சலுடன் புறப்பட்டுச் செல்ல,

 

தனக்கானவர்களை இழந்த வேதனையின் உஷ்ணம், தீக்கனியாய் அவன் கண்களில் கொழுந்துவிட்டு எரிந்தது.

 

அபூர்வனின் நிலை கேட்டறிந்த ராஜசிம்மனுக்கும் மனம் கணத்துப் போனது. ‘வீட்டிற்கு வீடு வாசப்படி’ என்பது எத்தனைப் பொருத்தமான வார்த்தைகள்? அவன் சிறு வயதுமுதல் பார்த்து வளர்ந்த, அவனது நண்பனின் வாழ்வும் அல்லவா இங்கு அடியாகியுள்ளது?

 

ஒரு பெருமூச்சுவிட்ட ராஜ சிம்மன், “இதுக்கும் இந்தக் காட்டுக்குள்ள நீங்க செய்த கொலைகளுக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்க,

 

“பாதியை இந்நேரத்துக்குக் கண்டுபிடிச்சிருப்பீங்களே?” என்று கேட்டான்.

 

“குதர்க்கமா பேச வேண்டாம்.. நேரடியா பேசுங்க..” என்று ராஜசிம்மன் கூற,

 

“வெல்.. அந்தக் காட்டுக்குள்ள புதைகுழி நிறைய இருக்கு. எனக்கே ரெண்டு முறை மாட்டி அரை உசுரா தப்பி மீண்ட பிறகுதான் தெரிஞ்சுது. அதுல தான் வந்துபோற சிலர் இறந்து போயிருக்காங்க. ஆனா மக்கள் அது தெரியாம அதுக்குப் பேய்னு ஒரு போர்வை வச்சிருப்பதைத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒருநாள் மலைவாழ் குடியைச் சேர்ந்த ஒரு பெரியவரை அடிச்சு தரதரனு ஒருத்தன் இழுத்துட்டுப் போயிட்டிருந்தான்.

 

அவர் கதறின சப்தத்தில் ஓடிப் போனப்ப, என்னைப் பார்த்துட்டு பேய்னு நினைச்சு அவன் தெரிச்சு ஓடினான்.. அந்தப் பெரியவருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தேன்” என்றான்.

 

ராஜசிம்மன் அவனைக் கேள்வியாய் நோக்க, “ஹோ சாரி.. உங்களுக்குத் தெரியாதோ? நான் ஒரு எம்.பீ.பீ.எஸ் ஸ்டூடென்ட். இன்னும் ஒரு வருஷம் கம்ப்ளீட் பண்ணியிருந்தா டாக்டராகியிருக்கலாம்” என்றவன், “அந்தப் பெரியவரை விசாரிக்கும்போது தான், ப்ரதாப் அந்தக் காட்டில் பேயுங்குற புரளியைக் கிளப்பி மக்களை அங்கிருந்து துரத்த முயற்சி செய்யுறான்னு தெரிஞ்சுது. டிஜிட்டல் இல்யூஷன்ஸ் மூலமா பேய் போல உருவங்கள் அமைச்சு மக்களை மிரட்டி அவன் விரட்ட முயற்சி செய்யுறது இந்தப் பெரியவருக்கு எப்படியோ தெரிஞ்சுருக்கு. அவர் மக்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்திருக்கார். அதைத் தெரிஞ்சுட்டு அவரை அடிச்சு இழுத்துட்டுப் போகும்போது நான் கெடுத்துட்டேன்.. பட் அவரை ரொம்ப அடிச்சுட்டானுங்க.. அவரைக் காப்பாத்த முடியலை.. பட் அவரோட சாவு என்னை ரொம்ப பாதிச்சுது. நான் என் கண் முன்னப் பார்க்கும் இன்னொரு டெத்..” என்று நெஞ்சை நீவிக் கொண்டான்.

 

அந்த தருணமும் கடைசி நொடிகளை எண்ணி முடித்துத், தன்னிடம் உண்மையைக் கூறிய திருப்தியோடு பார்த்தது பார்த்தபடி உயிரை விட்ட அவர் விழிகளும் இன்றளவும் அவன் கண்முன் தோன்றி இம்சித்தது… 

 

முன்பே பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தவனுக்கு அந்த செய்தியும் பெரியவரின் இழப்பும் இன்னும் மனச்சோர்வைக் கொடுத்தது… அதன் விளைவு, அவர்கள் நம்பும் பேயாகவே தன்னை அவன் மாற்றிக் கொண்டதுதான்.

 

“என்னைப் பேயுனுதான நினைச்சு ஓடினான்? அந்தப் பேயுங்குற போர்வையை நான் பயன்படுத்திக்கிட்டேன். அந்த பிரதாப்போட ஆட்கள் யாராவது வந்தா, முடிச்சுவிட்டுப் புதைகுழிக்குள்ளத் தள்ளிடுவேன்” என்று சர்வ சாதாரணமாக அபூர்வன் கூற,

 

அவனை வியந்துபோய்ப் பார்த்த ராஜசிம்மன், “கருப்பு உங்க பிரதர்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” என்று கேட்டான்.

 

அவனை ஒற்றைப் புருவம் உயர்த்தி அபூர்வன் நிமிர்ந்து பார்த்தான்.

 

கருப்புக்கும் அபூர்வனுக்கும் அத்தனை அம்சமான முக ஒற்றுமை. நிறம் தானே வெவ்வேறு?

 

அவனது பார்வையிலேயே அதைப் புரிந்துகொண்ட ராஜ சிம்மன், பெருமூச்சுடன், “விஷ்ணுப்ரியாவை எதுக்குக் கடத்தி வச்சிருந்தீங்க?” என்று கேட்க,

 

“கடத்தினது நானும் இல்ல, அவ விஷ்ணுப்ரியாவும் இல்ல” என்று அசராமல் இரண்டு குண்டுகளை அவன் தலையில் இறக்கினான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்