Loading

3

நந்தாவிடம் விடைபெற்று நழுவி வந்த உமாபதியோ, தன்னறைக்குள் புகுந்துக் கொண்டான். தன்னை உற்று நோக்கியவளின் முகம் மனக்கண்ணில் தோன்ற, தன் கை முஷ்டியினை மடக்கினான். அவளை நினைத்தாலே கோபம் மட்டுமே வந்தது.

“எவ்வளவு தைரியம் அவளுக்கு? கொஞ்சம் கூட பயமில்லை.” பல்லைக் கடித்தாலும், அவள் அழகிய புன்னகை அவனது மனதில் தோன்றாமல் இல்லை.

அவளால் உண்டான நெற்றியில் ஏற்பட்ட வடுவினைத் தொட்டுப் பார்த்தவனுக்கு சிறு வயது ஞாபகம் வந்து சென்றது. சொந்த அத்தை மாமாவின் மகள் வெண்ணிலா. இவனுக்கும், அவளுக்கும் உண்டான பொருத்தம் ஏழாம் பொருத்தம் தான். அவள் ஏதேனும் தவறு செய்தால் இவன் தான் தண்டிக்கப்படுவான்.

இவன் தவறு இழைத்தால், மாட்டிவிடும் முதல் ஆளும் அவளே. அப்படி அவள் மாட்டிவிட்டு, தந்தையிடம் பிரம்பில் அடி வாங்கியவனுக்கு தலையில் பலத்த அடி உண்டாகியிருக்க, அதன்பின் அவன் ஊருக்கு செல்வதையே விட்டிருந்தான். அவளும் அதன்பின் இவனை பார்க்கவே இல்லை. பத்து வருடம் கழித்து, மதுவின் கல்யாணத்திற்கு வந்திருந்தவளை முதலில் அவனுக்கு அடையாளமும் தெரியவில்லை. இன்று காலையில் தனது தங்க செயினைத் தேடிக் கொண்டவன், எதேச்சையாக வெண்ணிலாவின் மீதே மோதியிருந்தான்.

“ஐ அம் ரியலி சாரி” என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். பட்டு தாவணியில் அழகாக புன்னகைத்தவளைக் கண்டு அவன் கண்கள் இமை மூட மறுத்தது. தேவதை போன்ற பெண்ணொருத்தி தன் முன் நிற்பதைக் கண்டு அவன் கால்கள் நகர மறுத்தன.

“இட்ஸ் ஓகே அத்தான்.” என்றவளின் பதிலில் புரியாது பார்த்தவன்,

“நீங்க?” என்றான் தயங்கியபடி.

அதற்குள் வெண்ணிலாவின் அன்னை ஜானகி வந்துவிட, “வெண்ணிலா” என்று அழைத்தவரின் அழைப்பில் திடுக்கிட்டு திரும்பியவனுக்கு, அவள் யாரென்று அப்போது தான் புரிந்தது.

‘இவளையாடா சைட் அடிச்ச..? உனக்கே வெட்கமா இல்லையாடா உமா.’ என்றவனின் மனசாட்சி காரி உமிழ்ந்தது.

இருந்தும் சிறு வயதில் இருந்த உருவமைப்புக்கும் தற்போதிருக்கும் உருவமைப்புக்கும் பல மாற்றங்கள் இருப்பதால், தான் அவளைப் பார்த்ததில் தவறில்லை என்று நினைத்து ஆறுதல் கொண்டது அவன் மனம். இருந்தும் அவள் மீதிருந்த கோபம் தலைதூக்க முறைத்து விட்டு சென்றவன், அதன்பின் அவள் இருக்கும் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை.

ஆனால் இவளோ, ‘தன்னையே பார்க்கிறாளே? அதுவும் அவளது சிரிப்பு வேற? மாமா என்ன நினைத்திருப்பார்? இவளால் மானமே போகுதே?’ என்றெல்லாம் தோன்றியது அவன் மனதில்.

“விடக்கூடாது அவ வசமா மாட்டட்டும். அப்போ இருக்குடி உனக்கு. அது வரை பதுங்கியே போவோம்.” என்றவன் தற்காலிக உறுதியினை எடுத்திருந்தான். ஆனால் அவனும் அறியாத ஒரு பெரும் ஆபத்து ஒன்று அவனது செயலினாலே வரக் காத்திருந்தது.

இங்கு தனக்கு முன்பே முகப்பறைக்கு சென்ற மதுவினை பின் தொடர்ந்து சென்றிருந்தான் நந்தா. தாமோதரனும், பிரபாவதியும் அவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தனர். அதில் ஒருவர் நந்தாவிடம் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். நந்தாவோ எதுவும் பேசாமல் சிரித்தபடி சமாளிக்க, மதுவிற்கோ படபடப்பாக இருந்தது. எங்கு இவன் சொதப்பி தன் குட்டு உடைந்து போய்விடுமோ என்கிற பதட்டம் பெண்ணவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

‘திருடனுக்கு எங்க இங்கிலிஷ் தெரிய போகுது? இவன் மாட்டுறதுக்கு முன்னாடி நம்ம இடையில புகுந்து தடுத்திடுவோம்.’ என்று நினைத்தவள், “அங்கிள்” என்று வாய் திறக்கும் முன்னரே, அவன் பேசத் தொடங்கியிருந்தான்.

“எஸ் யு ஆர் க்ரெக்ட். ரியலி தட்ஸ் குட் ஐடியா. மை ஓபினியன் ஆல்சோ சேம் அங்கிள்” என்று புன்னகையுடன் அவன் பதில் கூற, மதுவோ அவனது ஆங்கில புலமையைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தாள்.

அவளது அருகில் சென்றவனோ, “எப்படி சமாளிச்சேன் பார்த்தியா? ” என்று மெதுவாக கூறியவாறு கண்ணடிக்க, “ம்க்கூம்.” என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள் மது.

“மிஸ்டர் நந்தா. உங்களை எங்கயோ பார்த்திருக்கேன்? ஆனால் எங்கேனு தான் தெரியலை?” என்று மற்றொருவர் கேட்க, மது முகத்தில் ஈ ஆடவில்லை.

“அய்யோ அங்கிள்! இவரு மலேஷியால தான் வொர்க் பண்ணாரு. கல்யாணத்துக்காக இந்தியா வந்திருக்காரு. இவரை இங்க பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.” என்று எதையெதையோ பேசியவள் அனைவரையும், இரவு உணவினை சாப்பிட அழைத்துச் சென்றாள்.

மதுவை லேசாக விசிலடித்து அழைத்த நந்தாவோ, “வேற லெவல்ல சமாளிக்குற மது. ஆனால் ரொம்ப ரியாக்ட் கொடுக்குறத பார்த்தால், அவங்க நம்பணும்னு நீ ட்ரை பண்ற மாதிரி இருக்கு.”

“வாயை மூடு. என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்” என்று பல்லைக் கடித்தவள் எதுவும் பேசாமல் முன்னோக்கி சென்றாள்.

இரவு உணவிற்காக வீட்டின் கார்டன் ஏரியாவில், பஃபே உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்க, உணவுகளின் வாசனையை ஆசையுடன் நுகர்ந்தவன், அவளை பின் தொடர்ந்தான். பிளேட்டினை பெற்றவன், ஒவ்வொரு உணவினையும் ஆவல் பொங்க பார்த்தான். பாதாம் அல்வா, கட்லெட், வெஜ் புலாவ், நாண், பன்னீர் பட்டர்மசாலா, என ஒவ்வொரு வகைகளாக வாங்கிக் கொண்டிருக்க, இறுதியாக பிரியாணியை வாங்கினான்.

“அடடே நம்ம உணவு. இந்த லெக்பீஸ் மட்டும் கண்ணுலயே காணோமே?” என்றவனின் பார்வை அங்குலம் அங்குலமாக பிரியாணியில் பதிய, அவனை திரும்பி முறைத்துப் பார்த்தாள் அவனது மனையாள்.

“இது வெஜ் பிரியாணிடா வெண்ண.” என்றவள் அங்கிருந்து நகர்ந்திருக்க,

“சட்டுனு மரியாதை இல்லாமல் பேசிட்டு போறா? வந்து வெச்சுக்குறேன்.” என்றவனோ, பிரியாணியை பரிமாறுபவனிடம், “சேர்த்து போடுப்பா தம்பி” என்றான்.

அவனோ எதுவும் எடுத்துப் போடாது இருக்க, “யார்ரா இவன்? பிரியாணியைப் போடாமல் பராக்கு பார்த்துகிட்டு இருக்கான்?” என்று நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் என்றால், அவனோ, “டேய் சிஷ்யா?” என்றான் கண்களை விரித்துக் கொண்டு.

‘அய்யய்யோ இவன் எங்க இங்க வந்தான்? சாவுகிராக்கி இவனை எப்படி சமாளிக்க போறேனு தெரியலையே?’ விழிப்பிதுங்கியபடி திருதிருவென விழித்தவன் தப்பிக்கும் மார்க்கம் அறியாது நின்றான்.

“டேய் கேணி, நீ எங்கடா இங்க?” என்றான் சத்தம் போடாது மெதுவாக.

“அதே தான் நானும் கேட்குறேன்? நீ என்னடா பண்ற? அதுவும் புது சொக்கா எல்லாம் போட்டு, சும்மா மாப்பிள்ளை கணக்கா இருக்கியேடா சிஷ்யா” என்றான் கேணி கண்ணடித்தபடி.

சுற்றும் முற்றும் பார்த்தவனோ, அவனை மறைவாக வரும்படி கண் ஜாடை காட்டி விட்டு நகர்ந்திருக்க, தன் அருகில் இருந்தவனிடம், பிரியாணியை போடும்படி கூறிய கேணி, அவனை பின் தொடர்ந்தான்.

“சொல்லுடா சிஷ்யா ? நீ எப்படி இங்க?”

“டேய், மொதல்ல சிஷ்யானு சொல்றத நிறுத்து. ஆமா நீ எதுக்குடா இங்க வந்திருக்க?”

“சாப்பாடு பரிமாற ஆள் இல்லையா? வந்தா ஐந்நூறு ரூபா தாரேனு சொன்னாங்கடா? அது மட்டுமில்லாமல் பணக்கார வூட்டு கண்ணாலம், யாராவது மிஸ் பண்ணா, அடிச்சிட்டு ஓட வசதியா இருக்கும்ல.”

“நீ திருந்தவே மாட்டியா? மவனே மாட்டுனா காலிடா.”

“டேய் சிஷ்யா, உன் பேச்சே திணுசா இருக்கே? ஆமா நீ இங்க என்ன பண்ற? நீயும் என்ன மாதிரி திருடத்தானே வந்திருப்ப?” என்றவன் பேசியதும் சுற்றும் முற்றும் பார்த்தவன், அவனது வாயை தனது இருக்கைகளால் அடைத்திருந்தான்.

“டேய், வாயை மூடு. இங்க கதையே வேற? தயவு செஞ்சு நான் யாருனு காட்டிடாதடா உனக்கு புண்ணியமா போகும்.” என்றான் கெஞ்சுதலாக.

“அப்படி என்னடா மேட்டரு?”

“அது உனக்கு சொன்னா புரியாதுடா.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “மாப்பிள்ளை” என்று அழைத்தபடி அவ்விடம் வந்தார் தாமோதரன்.

அவரைக் கண்டதும் கண்களாலே கேணியை அமைதியாக இருக்கும்படி பணித்தவன், “மாமா…” என்றான் வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி. அவன் பயம் அவனுக்கு அல்லவா? இங்கு இந்த கேணி இவனை மாட்டி விடுவானோ? என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது.

“உங்களை எங்க எல்லாம் தேடுறது? இங்க என்ன பண்றீங்க? ஆமா சர்வர் கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க?”

“அது வந்து மாமா. ஆஹான்… புட்ஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு. அதான் ஹோட்டல் பத்தி விசாரிச்சுட்டு இருந்தேன்.” என்றான் நாக்கூசாமல் பொய்யினை உதிர்த்தபடி.

‘இங்க என்னடா நடக்குது?’ என்று கேணியோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நிற்க, இருந்தும் தன் குறுகிய கால நட்பினைக் காட்டிக் கொடுக்க விருப்பம் இல்லாது அமைதியாக நின்றான்.

“சரி சரி. நீங்க வாங்க மாப்பிள்ளை.” என்று கையோடு அவர் அழைத்துச் சென்றிருக்க, கேணியோ எதுவும் பேசாது குழப்பத்துடன் அங்கிருந்து சென்றிருந்தான்.

உணவு உண்டபின், கேணியைத் தேடி வந்தவன், மறைவான இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றான்.

“டேய், என்னடா நடக்குது? அந்த ஆளு எதுக்கு உன்னை மாப்பிள்ளைனு கூப்பிடுறாரு?”

“அவரோட மாப்பிள்ளை நான் தான்டா.” என்றிவன் கூறியதும் அவனது முட்டைக் கண்கள் பெரிதாக விரிந்தது.

“அடப்பாவி நம்ம எல்லாம் ஒன்ணானோம், சங்கிலி திருடி பிரெண்டானோம்னு பெருமையா சொன்னியேடா? அது எல்லாம் பொய்யா கோபால்?”

“டேய் மச்சான் கேணி, அந்த பொண்ணும், நானும் சின்சியரா லவ் பண்ணோம்டா. நான் இல்லைனா செத்துப் போயிடுவேனு ஒரே அழுகைடா. பாரு இப்போகூட, அவ என்ன தான் தேடின்னு இருக்கா.” தூரத்தில் நின்றிருந்த மதுவினை கைகாட்டியபடி கூறியவனது முகத்தையும், மதுவையும் மாறி மாறி பார்த்தான் கேணி.

“அது எப்படி கோபாலு இப்படி திருட்டுப் பயலை பார்த்து தேடி லவ் பண்றாங்க? கஷ்டமா தான் இருக்கு?”

“ஏன் டா, கேணி?”

“இல்லை ஆம்பூர் பிரியாணி, உளுந்தூர்பேட்டை டாகுக்கு தான் கிடைக்கணும்னா யாரால மாத்த முடியும். டிஸ்கஸ்டிங்.” என்று கேணி என்று அழைக்கப்படும் திருவள்ளிக்கேணியை உறுத்து விழித்தவனோ, அவனது மண்டையிலேயே நங்கென்று கொட்டினான் நந்தா.

“ஏன்டா, எனக்கு என்ன கொறைச்சல்? என்ன மாதிரி ஒரு பையன் புருசனா கிடைக்க அவ தான் கொடுத்து வெச்சிருக்கணும்”

“எது… அமுக்கினி புழுகா… திருட்டு பையல கட்டிக்க, அந்த பொண்ணு கொடுத்து வெச்சிருக்கணுமா?”

“காதல்னு வந்துட்டா இது எல்லாம் ஒன்னுமே இல்லைடா. அப்புறம் இது நமக்குள்ளவே இருக்கட்டும்.”

“அதை நீ என்னை கொட்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்.”

“கேணி நம்ம தோஸ்த்டா.” என்றவன் அவனது கைகளை பற்ற,

“அடடா ஐந்து விரல்ல ஐந்து மோதிரம். ஒன்னு அப்படியே தோஸ்த்துக்கு கொடுக்குறது.” என்றவனுக்கு வேறுவழியின்றி தனது மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தவன்,

“டேய், இப்போ அப்படியே அமைதியா கிளம்பிடு.” என்றவன் கேணியை சமாதானம் செய்து அனுப்பிவிட்டான்.
பின் இரவு உணவு முடிந்து அறைக்குள் வந்தவன், அலங்கரிக்கப்பட்ட அறையினைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தான்.

“மிக சிறப்பு.” என்றவன் மென் புன்னகையுடன் மலர்கள் தூவப்பட்டிருக்கும் கட்டிலில் அமர்ந்தபடி தலையைக் கோதினான்.

எப்படியும் நாளை கேணியை சந்தித்து அவன் வாயை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தது. இருந்தாலும் அவனைக் கண்டதும் தோன்றிய படபடப்பை அவனாலும் மறுக்க இயலாது.

ஒரு மணி நேரம் சென்றிருக்க, கதவினைத் திறந்துக்கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தாள் மது. ஜரிகை இல்லாத பச்சை நிறப்புடவையும், விரித்து விடப்பட்டிருந்த கூந்தலில் மல்லிகை சரமும் இருக்க, கையில் பால் சொம்போடு வந்தவளின் வருகையை கண்டதும் எழுந்து நின்றான் நந்தா.

பாதம் தொடங்கி, அவளது பூமுகம் வரை பார்த்தவன் ஏக்கப் பெருமூச்சொன்றை விடுத்தான் அவளது முறைப்பைக் கண்டு.

‘பக்கத்துல போனால் எப்படியும் பால் சொம்பு வெச்சு மண்டையை பொளப்பா. நமக்கு எதுக்கு வம்பு.’ என்று எண்ணியவன், அவளைக் கண்டுக் கொள்ளாமல் தனது சட்டையை கழற்றி வீசியபடி, குப்புற கவிழ்ந்து படுத்துக் கொள்ள, அவனை உறுத்து விழித்தாள் மங்கை.

“ஹலோ..? எந்திரி.” என்றவள் அவனை சொடுக்கிட்டு அழைக்க, ‘சரிதான் போடி’ என்ற தோரணையில் கண்டுக் கொள்ளாமல் படுத்தவன், கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

‘நிஜமாவே தூங்கிட்டானா? இல்லை பிராடு நடிக்குது.’ என்று ஒரு சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தவள் சொம்பை மேசையில் நங்கென்று வைத்தாள்.

பின் அவன் அருகே இருந்து தலையணையை எம்பி எடுத்தபடி, அவன் முதுகின் மீதே ஒரு அடி வைத்தாள். அதற்கும் அவன் கண்களைத் திறவாமலிருக்க, “டேய், எந்திரி. இது என் கட்டில்.” என்றவாறு அவனை உலுக்கியதில், அவளது கைகள் அவன் மீது பட்ட நொடி அமைதியாக படுத்தபடியே விண்ணில் பறந்தான் நந்தா.

“அப்படி தான் செல்லம். கொஞ்சம் ஏறி மிதி. அப்போவாவது சுளுக்கு சரியாகுதானு பார்ப்போம்.” என்றவனது குரல் மட்டும் கேட்க,

“உன்னை என்ன பண்றேனு மட்டும் பாரு.” என்றவள் அவனது கைகளை பற்றி தரதரவென இழுக்கத் தொடங்கியிருந்தாள். அவன் உடல் குலுங்கியது தவிர, அவன் கட்டிலை விட்டு சிறிது கூட நகரவே இல்லை.

“என்ன டி, உன் பிரச்சினை?” என்றவன் சலிப்பாக கேட்க,

“என்னது டி யா?” என்றவளின் கோபம் தலைக்கேறியது.

“சரி தான் போடி.” என்றவன் மீண்டும் அதே ‘டி’ யினை உரிமைப் போட்டு கூற, தான் கொண்டு வந்த பால் சொம்பினை எடுத்தவள், அவன் முகத்தின் மீதே ஊற்றியிருந்தாள். அவளது செயலில் பதறியடித்து எழுந்தவனோ, அவளையே உறுத்து விழிக்க, இவளோ வாய் விட்டு சிரித்தாள்.

“இப்போ போய் உன் முகரைய பாரு? இனி டி சொல்வியா?” என்று எச்சரிக்கை செய்ய, அவனோ கோபத்தில் எழுந்தவன், அவளை நோக்கி நகர, அவனது கோப முகத்தைக் கண்டு ஒரு நிமிடம் பயந்து தான் போனாள் மதுவர்ணிகா.

தனது எட்டுக்களை பின்னோக்கி இவள் வைக்க, ஐந்தே நிமிடங்களில் அவளை நெருங்கியவனோ, அவளை வேறு எங்கும் செல்லாதபடி தனது இருக்கரங்களால் அணை போட்டான்.

“இங்க பாரு மரியாதை இல்லாமல் பேசுனது நீ, அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு. மரியாதையா அங்க இருக்க சோபாவில போய் படு.” பயத்தை மறைத்து மிரட்டினாள்.

அவனோ எதுவும் பேசாது அவள் முகம் நோக்கி நெருங்க, “ஏய் என்ன பண்ற? தள்ளிப்போ” என்றவள் அவனை தள்ளிவிட முயற்சிக்க, அவனோ அவளது சேலையின் பற்றி, ஒரே இழு இழுக்க, ஊக்கு கழன்றது மட்டுமின்றி புடவையின் முந்தானை அவனது கைகளிலிருக்க, அதை சற்றும் எதிர் பாராதவள் விதிர்விதிர்த்துப் போய் திடுக்கிட்டு பார்த்தாள்.

இருவருக்கும் இடையில் சிறு இடைவெளியே இருக்க, அதிர்ந்த விழிகளுடன் ஏறிட்டவளது இமை மூட மறந்தாலும் சுட்டெரிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவளது செயலை ஒரு வித விருப்பத்துடன் பார்த்தவன், இதழில் புன்னகை தவழ, அவளது சேலையை தனது முகத்தில் ஒற்றி எடுத்தான். அவனது செயலில் அவளது உஷ்ணக்காற்று அதிகரித்தது. அடுத்த நொடியே அவன் பற்றியிருந்த தனது சேலையை இழுத்தாள் பெண். அவள் இழுக்க, அவனோ உறுதியாக பற்றியவன், தன் முகத்தைத் துடைப்பதிலேயே கருத்தாக இருந்தான். அவனது நெருக்கம் வேறு அவளை கடுப்பாக்க, என்ன செய்வது என்று அறியாது தவித்தாள் பெண்.

“சேலையை விடப்போறியா இல்லையா?” என்றாள் கோபத்துடன். மெலிதாக புன்னகைத்தவன், “கொஞ்சம் அன்பா கேளுடி” என்றான் முணுமுணுப்பாக.

“என்ன?” என்றவள் புருவம் தூக்கும் முன்னர் அவளது சேலையை அவளது தோளில் அழகாக வைத்தவன் நகர்ந்துக் கொள்ள, அவளோ ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? எதுக்கு இப்படி ஒரு காரியம் பண்ண? அறிவு இருக்கா இல்லையா?” நின்ற இடத்திலிருந்து இரு கைகளையும் விரித்தபடி கோபத்துடன் கேட்பவளின் கேள்வியில் திரும்பி பார்த்தான் நந்தா.

“நீ மட்டும் பால் ஊத்துனது தப்பில்லையா? சும்மா கேட்கணும்னு கேள்வி கேட்டுட்டு இருக்காத சரியா?” என்றவன் அசட்டையாக பதில் அளிக்க அவளுக்கோ கோபம் சுர்ரென்று ஏறியது.

“கேட்படா கேட்ப… நான் பண்ணதும், நீ பண்ணதும் ஒன்னா? நீ பண்ணதுக்கு பேர் என்ன தெரியுமா? பொறுக்கித்தனம்” என்றவள் அவனை ஓடி வந்து அடிப்பதற்காக வர, ஒரே நொடியில் அவளது கைகளை பற்றியிருந்தவன், ஒரு சுழற்று சுழற்றியபடி தன் பிடியில் அவளை வளைத்துப் பற்றிக் கொண்டான்.

“மேடம் பால் மூஞ்சி மேல ஊத்துனது தப்பா உனக்கு தெரியலை. நான் உன் சேலையில துடைச்சது தப்பா தெரியுதா? உனக்கு ஒரு நியாயம்? எனக்கு ஒரு நியாயமா?” என்றவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான். அவனை விட்டு விலக நினைத்தவளின் முயற்சிகள் தோற்றுப்போக, வேறு வழியின்றி அவனிடம் பேசினாள் பெண்.

“நான் தான் உன்னை கூப்பிட்டு வந்திருக்கேன். இது ஒரு கான்ட்ரெக்ட் மேரேஜ்னு உனக்கு நல்லாவே தெரியும்? சம்மதிச்சு தானே வந்திருக்க? இப்போ எதுக்கு என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்குற?”

“ஒத்துக்கிறேன் மது. அப்போ என்ன பார்த்து பயந்து, பாவமா கேட்ட உனக்கு நான் சம்மதிச்சேன். ஆனால் இப்போ நீ என்னை ஒவ்வொரு முறையும் அசிங்கப்படுத்துறியே செல்லம். பால் சூடா இல்லாததால மூஞ்சி தப்பிச்சுது. இந்நேரம் சூடா இருந்திருந்தால் என் நிலைமை என்னவாகியிருக்கும் மேடம்? இன்னொரு முறை எங்கிட்ட இப்படி பண்றது பார்த்தேன் அப்புறம் நடக்குறதே வேற?” எச்சரித்தவன் அவளை விட்டு விலகிச் சென்றான்.

அவன் விலகியதும் தான் மூச்சே விட்டாள் பெண். அவனை பார்க்கும் போதே ஆத்திரமாக வந்தது. இப்போது கூட ஒட்டி உரசிவிட்டு சென்றவன், அவளது மெத்தையின் மீதே திமிராக படுத்திருக்க, கோபம் உச்சந்தலை வரை ஏறியது. இருந்தும் பேச இயலாத சூழலில் இருந்தவள், அறையினுள் இருக்கும் குளியலறைக்குள் நுழையப் பார்க்க, அவளை சொடுக்கிட்டு அழைத்தான் நந்தா.

அதில் அவள் சிவந்தக் கண்களுடன் திரும்பி பார்க்க, அவளது விழிகளை படுத்திருந்த வாக்கிலேயே ஊடுருவிப் பார்த்தவன், “சேலை விலகி நின்னாலும் என் பார்வை, உன் கண்ணைத் தவிர வேற எங்கையும் போகலை. மனசை போட்டு குழப்பிக்காமல் தூங்குங்க மேடம்.” என்றவன் பின் மீண்டும், “பெரிய கட்டில் தான், பக்கத்துல படுத்தாலும் என் கை உன் மேல படாது.” என்றபடி மறுபுறமாக திரும்பிப் படுத்துக்கொண்டான்.

‘யார் வீட்டுக் கட்டில யாரு பங்கு போடுறது. எல்லாம் என் நேரம்.’ என்று தலையில் அடிக்காத குறையாக நினைத்தவள், குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

குளியலறைக்குள் நுழைந்தவள், தன் முன்பு இருந்த கண்ணாடியில் தன் முகத்தினைப் பார்த்தாள். அவன் முன்பு அவள் மறைத்து வைத்த கண்ணீர் கண்களில் பொங்கி கன்னத்தில் வழிந்தது.

தண்ணீர் குழாயினைத் திறந்தவள், தண்ணீரை தன் கைகளை குவித்துப் பெற்றபடி முகத்தில் அடித்துக் கொண்டாள். மாறி மாறி அடித்தவளுக்கு அழுகை மட்டும் நின்றபாடில்லை.

அவள் அழுகைக்கு காரணம் காதலே இன்றி வேறு ஒருவனை மணந்ததா? மணந்தவன் காட்டிய நெருக்கமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

கண்களில் கண்ணீர் தாரையென பெருக, முகத்தை தண்ணீரில் கழுவி எடுத்தவள் கண்ணாடியில் மீண்டும் தன்னைப் பார்த்தாள். அவள் கழுத்தில் நந்தா கட்டிய மாங்கல்யம் நிறைந்திருக்க, அவளது கண்களில் வலியும், பலி வெறியும் அதிகமாக தெரிந்தது.

கையோடு கொண்டு வந்திருந்த தனது கைபேசியை எடுத்தவள் தனது திருமண புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தாள். அடுத்த நொடியே பல லைக்ஸ், மற்றும் வாழ்த்துக்கள் அவளை வந்தடைய, பார்க்க வேண்டியவன் கண்ணிலும் படும் என்ற எண்ணம் மட்டுமே முதலில் தோன்றியிருந்தது அவளது மனதில்.

இங்கு கட்டிலில் படுத்திருந்தவனது இதழ்களில் அன்னிச்சையாக முறுவல் பூத்தது. “ராங்கி… என் மேல உனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்குடி. அதான் நான் சேலையை பிடிச்சு இழுத்தப்போ கூட அமைதியா நின்றிருக்க. உன்னை போய் விடுவேனா என் அழகு பொண்டாட்டி.” என்றவனுக்கு முதன் முதலாக அவளுடன் தனித்திருந்தது மட்டுமின்றி, இருவரும் ஒருவரை ஒருவர் இணைந்து சந்தித்த நாளின் நினைவும் வந்தது.

கேணியுடன் சேர்ந்து முகமூடியினை அணிந்த வண்ணம், நந்தா அந்த பெரிய பல் பொருள் அங்காடியில் நுழைந்திருந்தான்.

“டேய் சிஷ்யா, உன் திறமைய முதன்முறையா பார்க்க போறேன்டா. சொதப்பிடாமல் பண்ணிடு.”

“கவலைப்படாதடா, தொழில் குரு நீயே என் பக்கம் இருக்கும் போது சொதப்புவேனா..! எல்லாம் பக்கா பிளான் சிசிடிவி வொர்க்ல இல்லை. வாட்ச்மேனை குடிக்க வெச்சு மட்டையாக்கியாச்சு. இனி ஒரு பிராப்ளமும் இல்லை. நீ வெளிய இருந்து கண்காணி. மிச்சத்தை நான் பார்த்துக்குறேன்.” என்றவன் பல்பொருள் அங்காடியினுள் நுழைந்திருந்தான்.

இன்று மாலை வரை இயங்கிக் கொண்டிருந்த சிசிடிவியினை ஹேக் செய்தவன் முடக்கியிருந்தது மட்டுமின்றி, அதனை சரிசெய்ய கேணியையும் அனுப்பியிருந்தான். அவன் ஒன்றுக்கு இரண்டாக அதனை சரி செய்திட இயலாதவாறு செய்தது மட்டுமின்றி… புது சிசிடிவியினை வாங்கி தான் இணைக்க வேண்டும் எனவும். நாளை சரி செய்திடுவதாகவும் கூறியயபடி வந்திருக்க, ஒரு நாளில் ஒன்றும் நடக்காது என்று அஜாக்கிரதையில் விட்டு விட்டனர் அங்காடியின் நிறுவனர்.

பல் பொருள் அங்காடியினுள் நுழைந்தவன், தனக்கு தேவையான பணத்தினை பெறுவதற்காக கல்லாவை திறக்க, பத்தாயிரத்தை தவிர்த்து ஒரு ரூபாய் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சி உற்றான். அடுத்த நிமிடமே, “கஞ்சுஸ்… உன் பிளாக் மணி எங்கனு எனக்கு தெரியும்டா.” என்று கூறிக் கொண்டே மீண்டும் அந்த பணத்தினை டிராவில் வைத்தவன், அங்கு புகைப்படமாக இருந்த லட்சுமி தேவியினை வணங்கினான்.

பின் லட்சுமி தேவியின் புகைப்படத்தை எடுத்தவன் நடுவில் மறைக்கப்பட்ட சுவற்றினைத் தட்டிப் பார்த்தான். அதன் மத்தியில் ஒரு சத்தம் கேட்க, அதை மட்டும் தனியாக அவன் இழுக்கப் பார்க்க, அதற்குள், அங்கிருந்து பொருள் ஒன்று கீழே விழும் சத்தம் கேட்டது. அடுத்த நொடியே தன் செயலை நிறுத்தியவன் திரும்பி பார்க்க, அவ்விடம் சத்தத்தினை ஏற்படுத்தியவளோ, அதிர்ந்து போய் ஓடத் தொடங்கினாள்.

“ஓ சிட்” என்றவன் நிதானமாக லட்சுமியின் புகைப்படத்தை சுவற்றில் மாட்டிவிட்டே, அவளைத் தேடி சென்றான்.

சத்தமின்றி அவன் நடந்துச் செல்ல, பெண்ணவளோ ஒரே ஓட்டமாக மேல் மாடிக்கு சென்றாள். அவளது ஓட்டத்தின் சத்தம் அவனது செவியை சரியாக வந்தடைந்தது.

பல்பொருள் அங்காடியின் முதல் தளத்தில் உணவு பொருட்கள் இருக்க, மேல் தளத்தில் பாத்திரங்களும், அதற்கு மேல் தளத்தில் வீட்டு அலங்கார பொருட்களும் இருந்தது.

அவளை பின் தொடர்ந்து சென்றவன், எதோ ஒரு வரிசையில் அமைதியாக நின்றிருந்தவளை கண்டுபிடித்திருக்க, ஆவென கத்தியிருந்தாள் பெண். பதட்டம் நிறைந்த பெண்ணவளின் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிய, “தி… திருடன்… திருடன்.” என்று கத்துவதற்கு தொடங்கி விட்டாள்.

அவன் அவளைத் தாவி பிடிக்க வரும் முன், அங்கிருந்து ஓடியவள், பொருட்கள் அடுக்கி வைக்கும் அறைக்குள் நுழைந்தது மட்டுமின்றி கதவினை அடைப்பதற்காக செல்ல, அதற்குள் கதவினை தள்ளி உள்ளே நுழைந்திருந்தான் நந்தா. அவனது அதிரடி நுழைவில் பெண்ணிவள் கீழே விழுந்திருக்க, அறைக் கதவினை அடைத்து தாழிட்டான் நந்தா. அந்த நொடி பெண்ணவளின் முகம் முழுவதும் வியர்த்து போயிருக்க, எழுந்து நின்றவள் பின்னோக்கி தனது அடிகளை வைத்தாள்.

எச்சிலை கூட்டி விழுங்கியவள், “என்னை ஒண்ணும் பண்ணிடாத ப்ளீஸ்.” என்று இரு கரம் கூப்பி கெஞ்சத் தொடங்கினாள்.

“நீ யாரு? நீ எப்படி இங்க பூட்டியிருந்த கடைக்குள்ள வந்த? நீயும் ஒரு திருடியா?” என்று வேண்டும் என்றே அவன் கேட்ட நொடி அழுகையில் நிறைந்தது பெண்ணவளின் கண்கள்.

“நான் ஒண்ணும் திருடி இல்லை. இது எங்க சித்தப்பா கடை தான். நான் இங்க இருக்கிறது தெரியாமலே என்னை லாக் பண்ணிட்டாங்க.” என்றவளை நம்ப முடியாதப் பார்வை பார்த்தான் நந்தா.

அவன் முகமூடி அணிந்திருந்ததால் அவன் பாவனை கூட தெரியவில்லை. அவனோ அவளை நோக்கி அழுத்தமான காலடிகளை வைக்க, அவளுக்கு தான் பதட்டம் கூடியது. கைகால்கள் நடுங்கியது. தனக்கு தானே தைரியத்தை வரவழைத்தவள்,

அவனது முகமூடியினை இழுத்து பறிக்க முயற்சிக்க, அவனோ அவளது இடையினை பற்றி தடுத்து நிறுத்தப் பார்க்க, பெண்ணவளின் முயற்சியில் அவனது முகமூடி தெறித்து விழுந்தது. அவளது செயலில் அவனுக்கும் கோபம் துளிர்க்க, அவளை அடிப்பதற்காக கை ஓங்கியிருந்தான் நந்தா. அவளோ வாயை மூடிக்கொண்டு மருட்சியுடன் பார்க்க, அதற்கு மேல் அடிக்க பிடிக்காமல் கைகளை இறக்கியிருந்தான்.

“சொல்லு எப்படி நீ இங்க லாக் ஆன?” என்றவன் மிரட்டும் தோரணையில் கேட்க,

“அதான் சொன்னேனே. நான் உள்ள இருக்கிறது தெரியாமல் லாக் பண்ணிட்டாங்க.” என்றாள் விசும்பலுடன்.

“பொய்”

“அய்யோ நிஜமா தான். ரெஸ்ட் ரூம் தான் போனேன். அங்க போன் பேசிட்டு இருந்தேன். அப்புறம் நான் வெளிய வந்து பார்க்கும் போது கடையில யாருமே இல்லை. எல்லாரும் போயிட்டாங்க?”

“கடை பூட்டுறது கூட தெரியாமல், அப்படியென்ன போன் கால்?”

“அது என்னோட பெர்சனல். நீங்க தலையிடாதீங்க.” என்றவளை ஓங்கி அறைந்தான் இவன்.

அவன் அறைந்ததில் நிலைத்தடுமாறியவள் விழச் செல்ல, அவளைத் தாங்கிப் பிடித்தது அவனது கைகள். அடுத்த நிமிடமே அவனை விட்டு அரை மீட்டர் தூரம் நகர்ந்து சென்றவள், அழுகையை மீண்டும் தொடங்கினாள்.

“என் நேரம் உன்னை மாதிரி ஒரு திருடன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு.” தலையில் அடிக்காத குறையாக பேசியவளை, மீண்டும் அறைவதற்காக கை ஓங்கியவன், அவளை உறுத்து விழித்தான்.

“மரியாதை இல்லாமல் பேசுனா மூஞ்சி பேந்திடும்.” என்று மிரட்ட, வாயை மூடிக்கொண்டாள் பெண்.

பின் இருவருக்குமிடையில் மௌனமே நீடிக்க, அவனது கண்களோ அவளை கவனிக்கத் தொடங்கியது. அழகான விழிகள் அழுது சிவந்திருந்தது. இருந்தும் அவளது பார்வையில் சிறு திமிர் தெரிந்தது.

அவளும் அவனை கவனித்தாள். பார்க்க நல்ல வீட்டு பையன் போல் தோன்றுகிறவன், திருடனா? என்பதே ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. பின் அவன் தன்னை எதுவும் செய்திடாமல் இருப்பதைக் கண்டவள், அவனிடம் பேசி தப்பித்துவிடலாம் என்ற தீர்மானத்தை மனதில் நிறுத்தினாள். மனதளவில் பெரும் அடியினையே சந்தித்தவளுக்கு திருடனிடம் சிக்கிக் கொண்டது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

“தி…திருடன் சார் கொஞ்சம் என்ன வெளியே விட்டீங்கன்னா, நான் அப்படியே ஓடிருவேன். ப்ளீஸ் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க. ஃபாதர் பிராமிஸ்ஸா உங்களை மாட்டிவிட மாட்டேன்” என்று பரிதவிப்பும், பயமும் கலந்திவள் கூற, அவளை நோக்கி தனது அழுத்தமான அடிகளை வைத்தான் அவன்.

“நான் தப்பா எதுவும் சொல்லலையே..?” என்றவள் நிமிர்வாக அவனைப் பார்த்தாலும், கைகளில் அவளையும் மீறி படபடப்பு தோன்றியது.

“உன் பேர் என்ன?” ஊடுருவும் பார்வையால் அவன் கேட்க,
“ஹான்.” என்றாள் புரியாமல்.

“காது கேட்காதா?” என்றவனின் கேள்வியில், “மது… மதுவர்ணிகா.” என்றவள் கூறியநொடி அவனது உதடுகள் “மது” என்று கூறிப் பார்த்தது.

“இப்போ எதுக்கு பேர் எல்லாம் கேட்குறீங்க?”

“திருடி போஸ்ட் காலியா இருக்கு. அதுக்கு உன்னை செலெக்ட் பண்ணலாம்னு தான், மிஸ் மது…” என்றவளது பெயரில் அழுத்தமிட்டு கூற, அவளோ அவனை உறுத்து விழித்தாள்.

“என்ன மேடம் முறைப்பு பலமா இருக்கு? என்ன பார்த்தால் எப்படி தெரியுது?” என்றவன் அவளது பக்கவாட்டில் இரு கைகளையும் தடுப்பாக வைக்க, அவளோ அவனை கடுப்பாக பார்த்தாள்.

“பார்க்க ரொம்ப சூப்பரா இல்லாட்டியும் கொஞ்சம் சுமரா நல்லா தான் இருக்கீங்க? என்ன கொஞ்சம் மூக்கு மட்டும் ஓவர் டோஸ்.” என்றவள் சலனமே இன்றி சாதாரண பாவனையில் கூற, ‘என்ன டிசைன்டா இவ?’ என்ற ரீதியில் அவளைப் பார்த்தவனது விழிகள் ஆச்சரியத்தில் விரியாமல் இல்லை.

“ஓ…ஓவர் டோஸ் ஆ… அங்க மட்டும் என்ன வாழுதாம்… அடிங்க.” என்றவன் கைகளை ஓங்க, அவளோ கண்களை பயத்தில் மூடிக்கொண்டாள்.
அவளது செயலில் அவனையும் அறியாமல் அவனது இதழ்களில் முறுவல் தோன்றியது.‌ பாவம் அவன் அறியாத ஒன்று இனி அவள் கை ஓங்கியும், இவன் பணிந்து போகும் காலம் வரவிருப்பது தான்.

இப்படி பேசியே அவனை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை மதுவின் மூளையிலும் எட்டியிருக்க, தான் தைரியமான பெண் என்று காட்டுவதற்காக பேசியவள், அவன் கை ஓங்கிய நொடி மீண்டும் பயந்துக் கொண்டாள்.

‘பொசுக்குனு கை நீட்றானே, ஆண்டவா இவன்கிட்ட இருந்து தப்பிக்குற வழியை மட்டும் காட்டுப்பா.’ என்று மனதில் நினைத்துக் கொண்டபடி கண்களைத் திறந்தவள் அறியவில்லை. இந்த ஒற்றை நாளே இருவரது வாழ்வையும் மாற்றிவிடப் போகிறது என்பதனை…

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்