Loading

23

 

அமைதியே உருவாய் இருந்த அறையினுள், தன் அழுத்தமானக் காலடிகளுடன் நுழைந்தான், ராஜசிம்மன்.

 

இதழில் ஒரு கோனல் புன்னகையுடன் மேஜையில் படுத்திருந்த அபூர்வன், மெல்ல அவனை நிமிர்ந்து பார்க்க, அவனுக்கு எதிரே வந்து நின்றான்.

 

அபூர்வனின் விழிகள் கதவினை ஒரு நொடித் தொட்டு மீண்டது.

 

“உங்க பிரதர் வரலை” என்று ராஜசிம்மன் கூற,

 

அவனை ஆழமான பார்வை ஒன்று பார்த்தான்.

 

ஓரமாகக் கிடந்த கோப்பு ஒன்றை எடுத்தவன், அபூர்வனுக்கும் கருப்பனுக்குமான உறவை உருதிசெய்யும் மரபணு சான்றிதழை எடுத்துப் போட, அதை எடுத்துப் பார்த்தான்.

 

அபூர்வன் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.. இதழில் மிக மெல்லிய புன்னகை.. அவனுக்கென்ற ஒற்றை ரத்த சொந்தம் கருப்பு மட்டும் தானே? அதை உறுதி செய்யும் ஆவணம் அல்லவா அது? மனம் நெகிழ்ந்தவன் விழியோரம் கண்ணீர் கோடென வழிந்தது..

 

“சோ.. இத்தனை வருஷமா இந்தக் காட்டுக்குள்ள உங்களுக்கென்ன வேலை? உங்கப் பெயரென்ன?” என்று ராஜசிம்மன் தன் கேள்விகளைத் தொடுக்க,

 

“ப்ரியாக்கு எப்படியிருக்கு?” என்று பதில் கேள்வி கேட்டான்.

 

“உங்களுக்கும் விஷ்ணுக்கும் என்ன சம்மந்தம்? எதுக்கு அவளைக் கடத்தி வச்சிருக்கீங்க? கண் விழிச்சு அவங்க மட்டும் ஏதாவது சொல்லட்டும். உண்டு இல்லைனு பண்ணிடுவேன்” என்று ராஜசிம்மன் கோபமாய்ப் பேச,

 

“நான் அவளை எதுவுமே பண்ணிருக்க மாட்டேன்னு உங்களுக்கே தெரியும். அப்புறம் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டியான கேள்வி?” என்று அபூர்வன் கேட்டான்.

 

ஒரு பெருமூச்சுடன் அமர்ந்த ராஜசிம்மன், “நீங்களா சொல்லிட்டா உங்களுக்கு நல்லது.. டிவி நியூஸ் எல்லாத்துலயும் நீங்க தான் இப்ப ஹாட் டாப்பிக். நீங்கதான் அந்தக் காட்டில் இத்தனை கொலையும் பண்ணதுனு கோர்ட்ல ப்ரொசீட் பண்ணா வாழ்நாள் முழுக்க ஜெயில் தான்” என்று கூற,

 

“இத்தனை வருஷம் மட்டும் என்ன சுதந்திரமாவா இருந்தேன்?” என்று எங்கோ வெறித்தபடி கேட்டவன் கேள்வியில், ஏகத்துக்கும் விரக்தி…

 

ராஜசிம்மன் அவனைப் புரியாமல் நோக்க,

 

“அபூர்வன்… அபூர்வன் சக்கரவர்த்தி” என்று கூறினான்.

 

அங்கு மருத்துவமனையில், விஷ்ணுப்ரியா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே, மொத்த குடும்பமும் கூடியிருந்தது.

 

விஷ்ணுப்ரியா கிடைத்த செய்தியை கருப்பசாமி, சுடரொளிவானனிடம் கூற, அவர்கள் அனைவரின் சந்தோஷமும் வானத்தை முட்டியது. அது அடுத்த நொடியே அவள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதைக் கேட்டுத் தரைமட்டமானது.

 

அனைவரும் அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அவளுக்கு என்ன ஆனதென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கண்டெடுத்த இடத்தில் காயங்களுடன் இருந்ததாக நினைத்தனர். கருப்பசாமியும் தற்போது ஏதும் கூறி பதட்டப்படுத்த வேண்டாமென்று பொறுமை காத்தான்.

 

அவளுக்கான சிகிச்சை முடித்து வெளியே வந்த மருத்துவர் கருப்பசாமியிடம், “தேங்க் காட் கருப்பு.. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணியே கூட்டிட்டு வந்ததால, பெரிய ஆபத்துலருந்து தப்பிச்சுட்டாங்க. புல்லெட் ரிமூவ் பண்ணியாச்சு. கண் விழிச்சு அவங்க கண்டிஷன் பார்த்தப் பிறகுதான் மித்தது எல்லாம் சொல்ல முடியும்” என்று கூறிவிட்டுச் செல்ல,

 

“புல்லெட்டா?” என்று பிரம்மா கேட்டாள்.

 

தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டபடி திரும்பியவன், சுடரொளியிடம், “இட்ஸ் சம்திங் சீரியஸ் தேன் வி திங்க் சுடர். போலீஸ் ப்ரொடெக்ஷனுக்கு சொல்லியிருக்கேன். பத்திரமா இருந்துக்கோங்க. யாரும் அநாவசியமா எங்கேயும் போக வேண்டாம். பயப்படாதீங்க. விஷ்ணு வில் பி ஆல்ரைட்” கூற,

 

“தம்பி.. என்னப்பா நடக்குது? எ..என் பொண்ணுக்கு ஒன்னுமில்ல தானே” என்று ராமராஜன் கண்ணீரோடு கேட்டார்.

 

அவர் கரத்தை இறுக்கமாகப் பற்றியவன், “உங்கப் பொண்ணுக்கு எதுவும் ஆகலை சார். இதுக்கு முன்னயும் அவ பாதுகாப்பாத்தான் இருந்தா, இனியும் பாதுகாப்பாத்தான் இருப்பா” என்று அழுத்தமாய்க் கூறினான்.

 

சுபிக்ஷா அவனையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அதை அவனும் உணர்ந்தானோ? அவளை நிமிர்ந்து பார்த்தான்.

 

விழிகளில் நீர் பளபளக்க, ‘எல்லாம் ஓகே தானே?’ என்ற கேள்வியோடு அவள் நோக்க,

 

கண்களை அழுத்தமாய் மூடித் திறந்தான்.

 

உள்ளே படுக்கையில் பாதி மயக்கத்தில் இருந்த விஷ்ணுப்ரியா, நினைவுகளில் கலங்கலாய் பல காட்சிகள்…

 

பச்சை நிறத்தில் பளபளக்கும் விழிகள் சிரிக்க, அவள் முகம் பார்த்து அவன் அமர்ந்திருக்க, மனதோடு அவன் பெயரின் ஓசை எழுந்தது…

 

‘அபூ…’

 

அங்கு அவ்வறையில் அபூர்வன் முன் அமர்ந்திருந்த ராஜசிம்மன் அவனைக் கேள்வியாய் நோக்க,

 

“அபூர்வன்…” என்று தன் பெயரைக் கூறியவன், “சக்கரவர்த்தி ராஜலட்சுமியின் முதல் பையன். கருப்பசாமியோட அண்ணன்..” என்று கூற, அவன் விழியோரம் கண்ணீர் கசிந்துருகியது..

 

அன்று அந்த பேருந்தின் பெரும் விபத்திற்குப் பின், தன் உடல் மொத்தம் பச்சை நிற மை பூசியதைப் போல் மாறிப்போனதைக் கண்டு, அரண்டு விழித்தான்.

 

“ஆ…” என்று அவன் அலறிய அலறலில் உள்ளே ஓடி வந்த சக்கரவர்த்தி, அவனைக் கண்டு முற்றுமாய் அதிர்ந்து போக,

 

“என்னப்பா ஆச்சு எனக்கு?” என்று அரண்டுபோனக் குரலில் கேட்டான்.

 

“என்னப்பா நடக்குது? எனக்கு என்ன ஆச்சு? சொல்லுங்கப்பா எனக்கு என்ன ஆச்சு?” என்று அபூர்வன் கதறலாய் வினவ,

 

அவர் உடல் அழுகையில் குலுங்கியது.

 

“எனக்கு ஏதும் நோய் இருக்காப்பா? என்கிட்டருந்து அதை மறைக்குறீங்களா?” என்று அவன் கேட்க,

 

“இல்லப்பா..” என்றவர், “நீ.. நீ இப்படி ஆனதுக்குக் காரணமே நான் தான் அபூர்வா” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

 

தந்தையை அதிர்வோடு பார்த்தவன், “நீங்களா? எ…ஏன்?” என்று கேட்க,

 

அந்த நாளின் நினைவுகள் அவர் மனதில், ரணம் மீட்டும் கோலமாய்..

 

சில வருடங்களுக்கு முன்பு…

 

கோலாகல அலங்காரங்கள், பாதி கலைந்து அலங்கோலமாகக் காட்சி அளித்த வீட்டைப் போல், அவர்கள் வாழ்வும் அலங்கோலமானத் தருணம் அது.

 

அழகியக் குறுவிக் கூடாக இருந்தக் குடும்பம், கல்லெறிபட்டு சிதைந்த தருணம் அது…

 

“சொல்லுங்க.. இது உண்மையா?” என்று ராஜலட்சுமி கத்த,

 

“ராஜி..” என்று கண்ணீர் படிந்த கண்களுடன் அவரை நெருங்க முற்பட்டார், சக்கரவர்த்தி.

 

“எனக்கு ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்க.. அபூர்வனுக்கு அந்த ஊசி போட்டது தெரிஞ்சும், உங்க ஆராய்ச்சிக்காக விட்டுட்டீங்களா?” என்று ராஜலட்சுமி கேட்க,

 

“ராஜி.. இல்லம்மா” என்று தடுமாறினார்.

 

“என் வயித்துல இருக்க பிள்ளை மேல ஆணையா கேட்குறேன்.. உண்மைய சொல்லுங்க” என்று ராஜலட்சுமி சப்தம் போட,

 

கண்ணீரோடு தலை கவிழ்ந்தவர் வேதனையோடு ஆமென்று தலையசைத்தார்.

 

மொத்த வானமும் இடிந்து தலையில் விழுந்த உணர்வுதான் ராஜிக்கு.

 

“அப்ப அவனோட கண்ணு பச்சையா இருக்குறது இயற்கையா இல்ல.. உங்க மருந்தாலதான் இல்ல?” என்று ராஜலட்சுமி உடைந்த குரலில் கேட்க,

 

“ம்மா ராஜி.. நான் சொல்றத கேளுடா” என்று சக்கரவர்த்தி பேச முற்பட்டார்.

 

“போதும்.. எல்லாம் போதும்.. உங்களை லவ் பண்ணும்போது கூட, ஆராய்ச்சி ஆராய்ச்சினு ஓடுறவனை லவ் பண்ற, நாளைப்பின்ன இதுவே பிரச்சினையாகிடப்போகுதுனு என் ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்க. அப்போ எனக்குத் தெரியலை.. உங்கள மலைபோல நம்பினேன்.. இன்னிக்கு அந்த மலை மொத்தமா சரிஞ்சு மண்ணா போச்சு.. எல்லாமே மண்ணா போச்சு” என்று கத்தி அழுதபடி அவர் அமர,

 

“டேய் ராஜி.. அப்படிலாம் இல்லடா.. இது தெரியாம தான் நடந்ததுடா. நான் வேணும்னு இப்படிப் பண்ணலை” என்று சக்கரவர்த்தி அழுதபடி கூறினார்.

 

“தெரியாம பண்ணது தெரிய வந்துச்சுத்தான ஒரு கட்டத்துல? என்கிட்டயும் மறைச்சு, உங்க ஆராய்ச்சி மூலைக்குத்தானே எம்புள்ளைய இறையாக்கியிருக்கீங்க?” என்று அழுதபடி ராஜலட்சுமி கேட்க,

 

சக்கரவர்த்தியால் பதில் கூற இயலவில்லை… உண்மை தானே?

 

தனது ஆராய்ச்சி என்ற எண்ணம் வலுபெற்றதால் தானே, மகனைக்கூட அதற்கு இறையாக்கியிருந்தார்?

 

“உங்களப்போய் நம்பினேனே? இப்படி ஏமாந்துப்போகத்தானா? எம்மகனைக்கூட உங்க சோதனை எலியா ஆக்கிட்டீங்கள்ல? ச்சீ.. வெட்கமா இல்ல உங்களுக்கு? நாளைக்கே இதுக்காக என்னையும் யாருக்காவது விக்க மாட்டீங்கனு என்ன நிச்சயம்?” என்று ஆத்திரத்துடன் ராஜலட்சுமி கேட்க,

 

அவர் வார்த்தைகளைத் தாங்க முடியாது, அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார், சக்கரவர்த்தி.

 

தன் கரத்தில் கன்னம் தாங்கியபடி, விக்கித்துப்போய் ராஜலட்சுமி விழிக்க,

 

“டேய்..டேய்..டேய்.. ராஜிமா.. சாரி சாரிடா.. நான் வேணும்னே பண்ணலைடா. டேய்.. சாரிடா” என்று சக்கரவர்த்தி மனைவியிடம் கெஞ்சினார்.

 

விறுவிறுவென்று எழுந்த ராஜலட்சுமி, “போதும்.. இனி ஒரு நிமிஷம் கூட நாங்க இங்க இருக்க மாட்டோம்” என்று கூற,

 

“ராஜி.. அவசரப்பட்டு எதுவும் முடிவெடுக்காத” என்று சக்கரவர்த்தி கூறினார்.

 

“அவசரப்பட்டு முடிவெடுத்ததாலதான் இப்படியொரு ஆகாத வாழ்க்கையை நானே என் தலையில கட்டிக்கிட்டேன்.. இப்ப நீங்க பார்ட்டிக்கு வந்த உங்க ஃபிரெண்டுகிட்டப் பேசுறது எனக்குக் கேட்காம இருந்திருந்தா, இன்னும் முட்டாள் மாதிரி தானே உங்கக்கூட இருந்துருப்பேன்.. ஒருத்தன் வாழ்க்கையை அடமானம் வச்சதே போதும். என் வயித்துல இருக்க இன்னொருத்தனோட வாழ்க்கையையும் என்னால பணயம் வைக்க முடியாது. எப்ப எதை என் உடம்புல ஏத்தி, இந்த பிள்ளைய சோதனை எலியாக்குவீங்களோனு பயந்து பயந்து ஒரு வாழ்க்கையை உங்கக்கூட என்னால வாழ முடியாது” என்று கத்தியவர், ஒரு வயது பிறந்தநாள் கொண்டாடிவிட்டக் கலைப்போடு, உறங்கிக் கொண்டிருந்த அபூர்வனைத் தூக்கினார்.

 

வேகமாய் வந்து மகனை மனைவியிடமிருந்து பிடுங்கியவர், “சொன்னத கேளு.. இவனுக்கு திடீர்னு ஏதாவதுனா கண்டிப்பா நான் வேணும்” என்று கூற,

 

“இல்ல.. உங்களுக்கு ஆராய்ச்சிப் பண்ண இவன் வேணும். அது ஒரு காலமும் நடக்காது” என்று ராஜலட்சுமி கூறினார்.

 

இருவரது சப்தத்தில் தூக்கம் விழித்த அபூர்வன், அழுதபடி கண் விழிக்க, சக்கரவர்த்தி அவனைப் பாந்தமாய் பிடித்துத் தட்டிக் கொடுத்தார்.

 

தந்தையைக் கழுத்தோடு கட்டிக் கொண்டவன், “ப்பா..” என்க,

 

கண்ணீர் மல்க, “எம்புள்ளையவாடி நான் அப்படிப் பண்ணப்போறேன்? தப்புத் தான்.. தெரிஞ்ச பிறகும் உடனே மாத்து வழிப் பார்க்காம, ஆராய்ச்சினு யோசிச்சேன்தான்.. ஆனா ஒருகாலமும் நான் திரும்ப அந்தத் தப்பைப் பண்ண மாட்டேன்டி” என்று கூறினார்.

 

“என் புள்ளையக் குடுப்பீங்களா மாட்டீங்களா?” என்று ராஜலட்சுமி, மகா காளியாய்க் கேட்க,

 

“முடியாது. இவன் என் புள்ள.. நம்..” என்று மேலும் பேச வந்தவரைக் கரம் நீட்டித் தடுத்தார்.

 

தனது உடைமைகளை எடுத்துக் கொண்டவர், “இன்னியோட உங்களுக்கும் எனக்குமான உறவு முடிஞ்சுது. என்னைப் போக விடாம தடுத்தீங்கனா, மொத்தமா வயித்துல இருக்கக் குழந்தையோட நானே தற்கொலை பண்ணி செத்துப் போயிடுவேன்” என்று கத்த,

 

சக்கரவர்த்தி விக்கித்துப் போனார்.

 

“என்னால இன்னொரு புள்ளையையும் உங்கக்கிட்ட அடமானம் வைக்க முடியாது” என்று அவர் கத்த,

 

அதிர்வோடு மனமுடைந்துபோன சக்கரவர்த்தி, அப்படியே உறைந்து போனார்.

 

ராஜலட்சுமியின் காதலும் நம்பிக்கையும் சுக்குநூறாக உடைந்து, அவர் ருத்ரதேவியாய் மாறியிருக்க, அவர்முன் தன்னை நியாயம் செய்ய இயலாது சக்கரவர்த்தி விக்கித்து நின்றார்.

 

இருவரின் காதல் மனமும் உடைந்து சுக்குநூறாகி வலியெனும் கொடிய விஷத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது அவர்கள் குருதியெங்கும்.

 

கணவரைக் கண்ணீரும் வேதனையுமாகப் பார்த்த ராஜலட்சுமி, தன் காதல் நினைவுகளின் மிச்சத்தை, கருவாய் சுமந்துகொண்டு, அவ்வீட்டை விட்டு வெளியேற, தான் செய்த ஒற்றைப் பிழைத் தன் வாழ்வையே சன்மானமாய்ப் பெற்றுக்கொண்டதை எண்ணி, சக்கரவர்த்தி உடைந்து நின்றார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்