மரம் தேடும் மழைத்துளி 4

Loading

மரம் தேடும் மழைத்துளி 4

 

முருகன், ருக்மணியின் காலில் விழுந்ததும். ருக்மணி பதறிக்கொண்டு. “மாமா என்ன செய்றீங்க? எந்திரிங்க.” என்று வேகமாக முருகனை எழுப்பி விட்டாள்.

 

கலங்கிய கண்களோடு எழுந்த முருகன், “நேத்து கல்யாணம் ஆனதும். இன்னைக்கு ஒரு கல்யாண பொண்ணு அந்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து வெளியே வந்தால், அந்த குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கும்? நீ உன்னோட சொந்த அத்தை குடும்பத்தை அவமானப்படுத்தணும்னு நினைக்கலாமா? நான் செஞ்சது தப்புதான். அதுக்கு நீ என்னை, என் குடும்பத்தில் இருக்கிறவங்க கிட்ட சொல்லி. அங்கேயே, நாலு அடி அடிச்சிருந்தா கூட நான் சந்தோஷமா ஏத்திட்டு இருப்பேன். நான் செஞ்ச தப்புக்காக, என் குடும்பத்தை பழிவாங்க நினைக்கலாமா ருக்கு? எனக்கு, உன் மேல இருந்த ஆசை, வெறி அது அவ்வளவு பெரிய தப்பாடி?” என்று ருக்குவின் கையை பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டு அழுதான்.

 

அவனின் நீண்ட உரைக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல், “என்னை மன்னிச்சிடுங்க மாமா.” என்று கம்மிய குரலில் அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். அதே நேரத்தில் கடைக்கு காபி வாங்க சென்ற மாரியம்மாள் வாசலுக்குள் கால்வைத்தார்.

இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும் மகிழ்ந்து போனார்.

 

முருகன், வேகமாக கையை விட்டுவிட்டு “அத்தே… நான் ருக்குவை கூட்டிட்டு வீட்டுக்கு போறேன். நீங்களும் கிளம்பி வாங்க.” என்றான் வேகமாக.

 

மாரியம்மாள், “ஒத்த வாய் காபி குடிச்சிட்டு போங்கய்யா. என்று சொல்லிக்கொண்டே தம்ளர்களை எடுத்து காப்பியை ஊற்றினார்.

 

முருகன், “இல்லத்தே… வீட்டில் போய் சாப்பிட்டு, அப்புறம் காப்பி குடிச்சிக்கிறோம்.”

 

“உங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசணும்யா… நீங்க காப்பிய குடிங்க நான் அப்படியே சொல்ல வந்ததை சொல்லிருவேன்.”

 

முருகனுக்கு அடிவயிறு கலங்கத் தொடங்கியது. “ருக்கு இரவில் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும், ஒன்று விடாமல் ஒப்பித்து விட்டாளே” என்று எண்ணும் போதே வியர்வை பொங்கி வழிய ஆரம்பித்தது. “என்ன விஷயமா பேசணும் த்தே.?”

 

“எம் புள்ள, தகப்பன் இல்லாமல் வளர்ந்தது. நீங்களும் அவளை போலவே, சின்ன வயசுலயே தகப்பன் இல்லாம வளர்ந்தவக. அதனால அவளுக்கு ஒரு நல்ல தகப்பனா இருப்பீகனு நினைச்சு கட்டிக் கொடுத்தேன். எம் புள்ள உங்க வீட்ல சந்தோசமா இருந்தா, நான் இந்த வீட்ல நிம்மதியா இருப்பேன். எம் புள்ளையை கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க.” என்று தழுதழுத்த குரலில், சொல்ல வந்ததை சொல்லி முடித்தார்.

 

முகத்தில் வழிந்த வியர்வையை, கைகளால் துடைத்துக் கொண்டு. “இனிமேல் நீங்க வருத்தப்படுற மாதிரி,.என்னைக்கும் நான் நடந்துக்க மாட்டேன்த்தே.” என்று மாமியாருக்கு உறுதிமொழிந்தான்.

 

“அது போதும்யா. காப்பி ஆறமுந்தி குடிங்க.” என்றவர், ருக்குவை பார்த்து. “ருக்கு… இந்தா, நீ இத்தீனி காப்பி குடி.” என்று அவளுக்கும் காப்பி கொடுத்தார்.

 

காப்பி பருகிய பிறகு, முருகனோடு பைக்கில் ருக்மணி சென்றுவிட. பின்னால் மாரியம்மாள் நடந்து சென்றார். போகும் வழியில் தனது அக்கா மகன் ரவியை எதிர்கொண்டு இருந்தார்.

 

ரவி, “எங்கே சின்னம்மா பாப்பாவை காணோம்?”

 

மாரியம்மாள், “மருமகன் கூட்டிட்டு போயிருச்சு. நான் நடந்து போறேன். நீ… அம்மாவை கூட்டிட்டு வெள்ளனத்துல சாப்பிட வந்துரு.”

 

“சரி சின்னம்மா. ருக்குவுக்கு மேலுக்கு முடியலைன்னு சொன்னதும். அவளோட மாமியாகாரி, சோர்ந்து போய் உட்கார்ந்துட்டாங்க. நான்தேன் போய் பாத்துட்டு அனுப்பி வைக்கிறேன்னு வந்தேன். அதுக்கு முந்தி மாப்பிள்ளை வந்து கூட்டிட்டு போயிட்டாங்க. நல்ல மனுஷங்களா இருக்காங்க.” என்று முருகனது குடும்பத்தை புகழ்ந்து சொன்னான்.

 

“கறியை வாங்கி கொடுத்துட்டு. நானும் ஒத்தாசைக்கு நிக்காம, ஓடி வந்துட்டேன். பேசறதுக்கு அவதி இல்லை. பிறகு பேசுவோம்.” என்று மாரியம்மாள் வேக வேகமாக நடந்து சென்றார்.

 

“சரி சின்னம்மா. நாங்க பின்னாடியே வாரோம். நீ கிளம்பு.” என்று அனுப்பி வைத்துவிட்டு சென்றான்.

 

முருகனும், ருக்மணியும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைய. பார்வதி சந்தோஷமாக, “வாங்க, வாங்க. முதல்ல சாப்பிட்டுட்டு மத்த வேலையை பாருங்க.” என்று இருவரையும் அமர செய்து இருவருக்கும் இலை போட்டார்.

 

கோமதி, பார்வதியை “எம்மா… இப்பத்தேன் உன் முகத்தில சிரிப்பே தெரியுது.

 

ருக்மணி, மாமியாரை ஓரவிழியால் ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள்.

 

பார்வதியும், ருக்மணியின் செயலுக்கு, கண்களால் நன்றி சொன்னார்.

 

நெருங்கிய சொந்தங்கள் ஓரிருவராக, குடும்பம் குடும்பமாக முருகனின் வீட்டிற்கு வந்து கறி விருந்து உண்டு முடித்தார்கள். இறுதியாக முருகனின் பக்கத்து வீட்டு பங்காளி கிருஷ்ணன் லட்சுமி குடும்பத்தார் நால்வரும் வந்தார்கள்.

 

பார்வதியும் முருகனும் ஒன்றாக அவர்களை வரவேற்றார்கள்.

 

“அம்மா… சித்தப்பா, சின்னம்மாவுக்கு சாப்பாடு வைய்யி.”

 

கிருஷ்ணன், “இப்போதானே வந்திருக்கோம் முருகா. நிதானமா சாப்பிடுறோம்”.

 

முருகன், “நேரம் தாண்டி சாப்பிடக்கூடாது சித்தப்பா.”

 

சுந்தரி, “ஏன்ணே… நானும் சரவணனும் உனக்கு ஆளா தெரியலையா? சித்தப்பா சின்னம்மாவுக்கும் மட்டும் சோறு வைக்க சொல்றே”

 

முருகன், ‘“நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுக்கு விருந்தாளியளா?

 

லட்சுமி, “நாங்க ரெண்டு பேரும் விருந்தாளிகன்னு, சோத்த போட்டு முடுக்க போறேயாடா?” என்று முருகனை கேட்க.

 

முருகன், “அய்யோ சின்னம்மா நான் வாயே திறக்கல.”

.

சுந்தரி, பார்வதியிடம், “சமையலுக்கு ஒத்தாசைக்கு கூப்பிட்டேயே பெரியம்மா… சாப்பிட கடைசியா கூப்பிட்டுருக்கயே? சாப்பாடு இருக்கா காலியா போச்சா?”

 

பார்வதி, “நீங்க சாப்பிட்டது போக மிச்சம்தான் மத்த எல்லாருக்கும். வாங்க எல்லாருமே ஒண்ணா சாப்பிடுவோம். வந்தவக எல்லாரும் சாப்பிட்டு முடிச்சிட்டாங்க. இன்னும் நம்ம வீட்டாளுக மட்டும் தான் சாப்பிடல. நமக்காக கோமதி காத்துகிட்டு இருப்பா. சாப்பிட்டால் வேலை முடியும், கோமதி சட்டி பாத்திரத்தை எடுத்து வையிம்மா”. என்று சொல்லிக்கொண்டே நால்வரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

 

கோமதியும், ருக்மனியும் சாப்பாடு பாத்திரங்களை முன்னே எடுத்து வைத்து. கிருஷ்ணன் குடும்பம் நால்வரோடு, பார்வதியும் சேர்த்து உட்கார வைத்து. இருவரும் பந்தி பரிமாறினார்கள்.

 

முருகன் அந்த அறையின் முகப்பில் நின்று கொண்டு ருக்மணியிடம், ‘“இது இது எங்க சித்தப்பா குடும்பம். கிட்னேன் சித்தப்பாவும், எங்க அப்பாவும் கூட பிறந்தவங்க. அது எங்க சின்னம்மா லட்சுமி. என்று சொல்லிவிட்டு இது என்று சுந்தரியை அறிமுகப்படுத்தும் நேரத்தில்.

 

சுந்தரி, “என்னைய நீ சொல்லி அவ தெரிஞ்சுக்க வேண்டியது இல்ல. நானு, சரவணன், அவளோட ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சோம். எத்தனை சண்டை போட்டுருக்கோம். விளையாடி இருக்கோம். என்று சொன்னவள், ருக்குவின் முகத்தைப் பார்த்து, “என்ன ருக்கு” என்றாள்.

 

ருக்மணி மெல்லிய சிரிப்போடு தலையசைத்தாள்.

 

சரவணன், சுந்தரியை விட இரண்டு வயது மூத்தவன். சுந்தரியும், ருக்மணியும் ஒத்த வயதுடையவர்கள். ருக்மணியை அவனுக்கு தெரியும் என்று தற்போது வரை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சாப்பாட்டில் கவனமாய் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

 

கோமதி, “சரவணா இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைக்கட்டுமா?”

 

சரவணன், “இல்லக்கா… போதும்.”

 

முருகன், சரவணனிடம், “இன்னைக்கு ராத்திரி ஊருக்கு கிளம்புறியா சரவணா?”

 

“ஆமாண்ணே”

 

லட்சுமி, “உங்க கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்னு வந்திருக்கான். போக்குவரத்து செலவுக்கு நீதேன் காசு கொடுக்கணும்.” என்றார் முருகனிடம்

 

சரவணன், கூச்சப்பட்டு கொண்டு “ஏம்மா?”

 

லட்சுமி, “நான் சும்மாதேன் கேட்டேன். இப்பவே காசு எடுத்து வையினு கேட்ட மாதிரி நீ ஏன்டா… வருத்தப்படுறே? உன் அண்ணன்காரன் காசு கேட்டதும், கம்முனு கிடக்கிறான். நீ என்னடான்னா… அவன் கொடுத்துடுவானோன்னு பயப்படுறே என்று சொல்ல. அனைவரும் சிரித்துக் கொண்டார்கள்.

 

பார்வதி, “உன் அண்ணனும், கொடுக்கும் கொடையாளி. குன்றத்தூர் முதலாளி. நீ அவனை தடுத்து நிப்பாட்டிட்டே” என்றதும்.

 

கோமதி, “அண்ணே சரியான கஞ்சாம்பட்டி. இலையை கழுவி வச்சா. இன்னொருக்கா சாப்பிடலாமேன்னு யோசிப்பான்”. என்றதும் அனைவரும் சிரித்தார்கள்.

 

கிருஷ்ணன், “ஏம்மா அவனையே எல்லாரும் அடிச்சு விளையாடுறீங்க. அவன் பொண்டாட்டி கோவிச்சுக்க போறா.” என்றவர் ருக்மணியை பார்த்து, “நாளைக்கு நீயும் முருகனும் குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகு. எல்லாரும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போயிட்டு வந்துருவோம். அதுதான் நம்ம குடும்ப வழக்கம்”. என்றார்.

 

ருக்மணியும் பதில் பேசாமல், சரி என்று தலையசைத்துக் கொண்டாள்.

 

அனைவரும் ஒன்றாக உணவு உண்ட பிறகு. சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றார்கள். அவர்கள் சென்ற பிறகு மாரியம்மாள், ருக்மணியிடம் “அம்மா போயிட்டு, நாளைக்கு வாரேன்.” என்று மெல்லிய குரலில் ருக்மணியின் கையை பிடித்து சொல்லிவிட்டு. பார்வதி இடம் “மதினி நான் போயிட்டு வாரேன்.” என்றதும்

 

பார்வதி, “மாரீ… நீ எம் மானம் காத்த குலதெய்வம். எம்மகன் ஏதாவது தப்பு தண்டா பேசியிருந்தாலும் நடந்துக்கிட்டாலும் அவனுக்கு பதிலா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்த்தா…எங்கள மன்னிச்சிடு. இன்னிக்கு ருக்கு மட்டும் வராமல் போய் இருந்தால், ஊர் கூடி ஒன்னா என் மூஞ்சில காரி துப்பி இருப்பாக.” என்று மாரியம்மாளை கட்டிக்கொண்டு அழுதுவிட்டார்.

 

“மதினீ வருத்தப்படாதீக. நீங்களும் என்னை மன்னிச்சிருங்க. என் பிள்ளை அழும்போது அதை என்னால் தாங்கிக்க முடியல. என் பிள்ளையை நல்லபடியா பார்த்துக்கோங்க. நான் வேற என்ன சொல்ல?”

 

“ருக்கு இனிமேல் உன் பிள்ளை கிடையாது. அவ என் பிள்ளை. இனி அவளுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் நான் பார்த்துக்கிறேன். சந்தோசமா போயிட்டு வா… அடிக்கடி வந்து புள்ளையை பார்த்து, நல்லது கெட்டதை சொல்லிக் கொடு. எம் பிள்ளையும் உம்பிள்ளைதான் அதை மறந்துடாதே.”

 

கோமதியின் மகள் துர்கா, ஐந்து வயது சிறுமி. மாரியம்மாளும், பார்வதியும் கட்டி அணைத்து அழுது கொண்டிருப்பதை பார்த்து. வாசலில் அமர்ந்திருக்கும் அவளது தந்தை சங்கரிடம் ஓடிச் சென்று. “ரெண்டு பாட்டியும் அழுதுகிட்டு இருக்காங்க.” என்று சொல்ல. சங்கருக்கு காலையில் நடந்த நிகழ்வுகளை கோமதி சொல்லி இருந்ததால், நிலைமையை புரிந்து கொண்டார். மகளை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வந்தவன், “நீங்க ரெண்டு பேரும் இப்படி அழுதுகிட்டு இருந்தீங்கன்னா… வந்து போற சனங்க எல்லாருக்கும் விவரம் சொல்லனும்னு தெரியலயா?” என்று மேலோட்டமாக சொன்னான்.

 

கோமதி, “அவங்க ரெண்டு பேரும் அழுகவா செய்றாக? சந்தோசத்துல கண்ணீரு தன்னால வந்துருச்சு.”

 

மாரியம்மா, “ஆமா ராசா. நாங்க அழுகல. வீட்டுக்கு போறேன்னு சொன்னதும், மதினிக்கு கண்ணீர் வந்திருச்சு.”

 

ருக்குவுக்கு, இன்றும் இரவு வருமே என்ற பயத்தில், அழுகை வர. அதே கண்ணீரோடு மாரியம்மாளை “பார்த்து பத்திரமா போயிட்டு வாம்மா.” என்று வழி அனுப்பி வைத்தாள்.

 

“நீயும் பார்த்து நடந்துக்கோ தங்கம்.” என்று சொன்ன மாரியம்மா. ருக்குவை திரும்பி திரும்பி பார்த்தபடியே வீட்டுக்கு சென்றார்.

 

தன்னுடைய தாயின் தவிப்புக்காகவாவது, சகித்துக் கொண்டு வாழ வேண்டும். என்ற முடிவோடு. நடந்து செல்லும் தாயின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் ருக்மணி.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்