Loading

அழகான விடியற்காலை அது. துயில் கலைந்து விழித்தவளின் கண்ணில் பட்டது, சிறு சிறு மயிர்கள் முளைத்திருந்த அவனது வெற்று மார்புதான்.

இதழ்களில் வெட்கப் புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தாள். சீரான மூச்சுக்காற்றுடன் கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்தான் நந்து. அவளைத் தன் நெஞ்சில் கிடத்தி, வலது கையால் அணை போட்டு விலக விடாது தன்னோடு இறுக்கி அணைத்து உறங்கும் அவனை அணுஅணுவாக ரசித்தாள்.

பின் மெல்ல அவன் கையை விலக்கி, எக்கி அவன் நெற்றியிலும் இதழிலும் முத்தம் வைத்துவிட்டு, வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து குளியலறைக்குள் சென்றாள். அவள் தேகம் தீண்டிய நீர்த்துளிகள் அவனது இதழ்களை நினைவூட்டின. அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பின் குளித்துவிட்டு வெளியே வந்து சேலை உடுத்தினாள்.

அவன் உறங்கிக் கொண்டிருப்பது அவளுக்கு வசதியாகப் போனது. மெல்ல வெளியே சென்றாள். காலை வேலைகள் அவளை வரவேற்க, ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவளது இடையிலும் கழுத்திலும் மீண்டும் ஏதோ ஊர, இதழ் மடித்துச் சிரித்துக்கொண்டே கடைக்கண்ணால் பார்த்தாள். அவன்தான்! நாடியை அவளது தோளில் பதித்து, அவளைப் பின்னின்று அணைத்துக் கொண்டான்.

அவளோ கூச்சத்தில் நெளிந்தபடி அவனது அணைப்பிலிருந்து விடுபடப் போராடித் தோற்றுப் போனாள். அவனது குறுகுறுப்புகளால் நெளிந்து கொண்டே, கிறங்கிய குரலில், “சச்சின் வந்திடுவான்டா… விடு!” என அவள் கெஞ்சினாள்.

அவனோ, “வர மாட்டான்டி!” என்றபடி அவள் கழுத்தில் முத்தம் வைத்தான். கைகள் சற்று மேலேற, பிடியைத் தள்ளிவிட்டு, “நைட்டு முழுக்கத்தான் வச்சு செஞ்சியே… போதாதா? இப்பயுமா?” என்றாள்.

“எப்பவும் அந்த எண்ணம்தான்டி! எனக்கு வேற என்ன வேலை இருக்கு?” என்று மீண்டும் அவன் நெருங்கி வர, மீண்டும் அவனைத் தள்ளிவிட்டு, “போய் சச்சினை கிளப்பு!” என்று அனுப்பி வைத்தாள்.

சச்சினைப் பள்ளியில் விட்டு வர, அதற்குள் அவள் பாதி வேலைகளை முடித்து வைத்திருந்தாள். அவன் வந்ததும் இருவரும் காலை உணவை மாறி மாறி ஊட்டி விட்டுக்கொண்டனர். பின் அவனது சேட்டைகளையும் இம்சைகளையும் பொறுத்துக்கொண்டே இருவருக்கும் சமைத்தாள். மதிய உணவிற்குப் பிறகு இருவரும் கொஞ்சியபடி ஒரு குட்டித் தூக்கம் போட்டனர். மாலை மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே ஊர் சுற்றிவிட்டு, இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்பினர்.

இருவருக்கும் பால் காய்ச்சிக் கொடுத்தாள். அவன் சச்சினை உறங்க வைக்க, இவளோ சிறு சிறு வேலைகளை முடித்துவிட்டு வந்தாள். அவளை அள்ளிக்கொண்டவன், மீண்டும் ஒரு கூடலைக் கழுத்தடியில் தொடங்க… சட்டென விழித்துக் கொண்டாள்!

அறையைச் சுற்றிப் பார்த்தாள். அறை மை இருட்டில் இருந்தது. திரும்பிப் பார்த்தாள், சச்சின் உறங்கிக் கொண்டிருந்தான். மணி அதிகாலை நாலரை என காட்டியது.

முகத்தைத் துடைத்துக்கொண்டு நீரைப் பருகினாள். இது ‘கனவு’ என்று அவளுக்குப் புரிந்தது. கடைசியாக நந்து பேசிவிட்டுச் சென்றதுதான் கனவாக வந்திருந்தது.

சுகமாக இருந்தது. அவள் கண்ட கனவுகளிலேயே மிக அழகான கனவு இதுதான். ஏனோ அந்தக் கனவை எண்ணி கோபமோ, குற்றவுணர்வோ, கண்ணீரோ வரவில்லை. மாறாக, புன்னகையும் வெட்கமும்தான் வந்தது. அந்தக் கனவை நினைக்கும்போதெல்லாம் உடல் சிலிர்த்தது. மீண்டும் முகத்தை மூடிக்கொண்டாள்.

‘அக்கனவு நிஜமானால்?’ – மனதில் ஆழப் புதைந்த ஆசை மீண்டும் முளைத்தது போன்றதொரு கனவு அது. வறண்டு போன தோட்டம் மீண்டும் சோலையானது போன்ற உணர்வு. ‘ஏன் இதை நிஜமாக்கக் கூடாது? ஏன் நந்துவை மறுமணம் செய்யக் கூடாது?’ என்று உள்மனம் கேட்ட கேள்விகள் அவளுக்கு வெறுப்பைத் தரவில்லை.

பிடித்திருந்ததுதான்… ஆனாலும் பெரியவர்களை நினைத்து பயம், சமுதாயத்தை நினைத்து கலக்கம் என ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறினாள். ஆனாலும் அக்கனவு நினைக்க நினைக்கத் தித்திப்பாக இருந்தது.

உதட்டில் புன்னகை தவிழ, குளித்து முடித்து வெளியே வந்தவள், கடவுளை வணங்கிவிட்டுப் புத்துணர்வோடு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அவளிடம் விளையாட்டு காட்டும் சச்சின் மேல் கோபம் கொள்ளாது, அவனோடும் விளையாடியபடியே அவனைத் தயார் செய்தாள்.

நேற்று பார்த்த வேலையின் அசதியில் உறங்கிய நந்து, தாமதமாகக் குளித்துவிட்டு வந்தான். ஏனோ அவனைப் பார்க்கவே அவளுக்கு வெட்கமாக இருந்தது. ‘தனது கனவு இதுதான் என்று அவனுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பான்?’ என்று நினைக்கையிலேயே உடல் சிலிர்த்து முகம் சிவந்தது. அதை மறைக்க முடியாமல் தவித்தாள்.

வள்ளி அவனைச் சாப்பிட அழைக்க, மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தவளுக்குப் புல்லரித்தது. வழக்கம் போல அவளால் அவனிடம் இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் முகம் காணும்போதெல்லாம் கனவே கண் முன்னே வந்து போக, வெட்கம் மேலிட்டது. அதைக் கட்டுப்படுத்த முயன்றாள். வள்ளியும் நீலகண்டனும் அதைக் கவனிக்கவில்லை என்றாலும், அவன் கண்டு கொண்டான்.

புதிதாய்ப் பூத்த மலரைப் போன்ற பூரிப்பில் அவள் இருந்தாள். புதிதாகப் பார்ப்பது போல விழிகள் விரித்து அவள் முகத்தைப் பார்த்தான். ‘என்ன, இவ்வளவு பிரெஷ்ஷா இருக்கா? நேத்து பார்த்த வேலைக்கு இப்படி இருக்க முடியாதே?!’ எனத் தனக்குள் கேட்டுக்கொண்டவன், ‘அது சரி, இவ எங்கே வேலை பார்த்தா? எல்லாம் நான் தானே பார்த்தேன்’ எனச் சலித்துக்கொண்டான். அவளது முகத்தில் மிளிரும் புன்னகைக்குத் தான் தான் காரணம் என்று அறியாமல், அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தான்.

சச்சின் உண்டு முடிக்க, அவளோ தட்டை உள்ளே போட்டுவிட்டு வருவதற்குள், சச்சின் வள்ளிக்கும் நந்துவிற்கும் முத்தம் கொடுத்தான். சட்டெனத் தாயிடம் வந்து அமரச் சொல்லி முத்தம் கொடுத்துவிட்டு, அதே கன்னத்தில் திரும்ப முத்தம் வாங்கிக்கொண்டான். அப்போதுதான் அவன் இதழ் பதித்த இடத்தில் அவளது இதழ் பதிந்ததை உணர்ந்தாள்.

வேகமாகத் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவனோ தலை குனிந்து கொண்டிருந்தான். அவன் பார்க்காததில் நிம்மதி கொண்டு, மகனை நீலகண்டனிடம் ஒப்படைத்துவிட்டு மீதமிருந்த வேலைகளை முடித்தாள். வழக்கமாக ‘இதோ வந்துடுறேன்’ என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே செல்பவள், இன்று அவனைப் பாராமலே உள்ளே செல்ல, ‘ஏதோ சரியில்லை’ என்று அவனுக்குத் தோன்றியது.

கிளம்பி வந்தவள், அவனைப் பார்க்காமல் “போலாம்” என்றாள். அவனும் எழுந்து கொள்ள, “ஜானு மா, இங்க வாயேன்” என்றார் வள்ளி.

அவளும் “என்ன அத்தை?” என்று அருகே அமர்ந்தாள்.

“அது… இந்த மேட்ரிமோனியில நந்துவோட பேரைப் பதிவு பண்ணி வைக்கணுமா?”

“எதுக்கு பெரியம்மா?” என்றான் நந்து.

“எதுக்கா? உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கத்தான்டா!” என்றபடி அவன் முதுகில் ஒரு அடி போட்டார்.

“கல்யாணமா… எனக்கா?”

“பின்னே உங்க பெரியப்பாவுக்கா? உனக்குத்தான்டா!” என்றார் சிரித்துக்கொண்டே.

“ஓ… எனக்கா? பாருங்க பாருங்க!” என்று சொல்லியபடி ஜனனியைப் பார்க்க, அவளோ அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

“என்ன ஜனனி, அமைதியா இருக்க? அவனுக்கும் வயசாகிடுச்சு இல்ல? அப்பா அம்மா இடத்துல இருந்து நாமதானே எல்லாம் பார்க்கணும். சொந்தமா வீடு இருக்கு, பிசினஸ் பண்ணப் போறான்… அடுத்தது கல்யாணம்தானே! நல்ல பொண்ணாப் பார்த்து கட்டி வச்சிடனும். அவனையும் ஒரு குடும்பமா பார்க்கணும் இல்லையா?” எனக் கேட்டார்.

“ஆ… ஆமா அத்தை” என்று தயங்கினாள்.

அவளது முகத்தின் நிறம் மாறுவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் பூத்த மலர் மாலையில் வாடுவது போல, கல்யாணப் பேச்சை எடுத்த நொடி அவள் முகம் சட்டென வாடிப்போனது.

‘ஏன் கல்யாணத்தைப் பத்திப் பேசினா இவ முகம் வாடுது? காலையில என்னைப்பார்த்துத் தடுமாறினவ முகம் இப்போ ஏன் மாறுது? ஏதோ இருக்கு!’ என உள்ளுக்குள் யோசித்தான்.

ஜனனியோ, “கண்டிப்பா அத்தை! உங்க புள்ளைக்கு இனி நீங்கதான் எல்லாம் பார்த்துப் பண்ணணும். இப்போ நேரமாச்சு அத்தை, ஆபீஸ்ல விவரத்தைக் கேட்டுப் பதிவு பண்ணி வைக்கிறேன். கிளம்புறேன்” என்று எழுந்தாள்.

“சரிம்மா, பார்த்துப் போயிட்டு வா.”

“நானும் கிளம்புறேன் பெரியம்மா” என அவன் பின்னே செல்ல, “சரிடா, மறக்காம பதிவு பண்ணுடா” என்றார். அவனும் தலையாட்டிக்கொண்டே வெளியே சென்றான்.

இருவரும் லிஃப்ட்டில் பயணித்தனர். அவள் அமைதியாக எங்கோ வெறித்துக் கொண்டிருக்க, இவனோ ஆராய்ச்சியாக அவள் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். அவளுக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவன் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்து அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.

லிஃப்ட் திறக்க, இருவரும் வெளியே வந்தனர். அவள் வண்டி நிற்கும் இடத்தை நோக்கி நடந்தாள். அவனும் பின்னே சென்றான்.

அவள் வண்டியை எடுக்க, “நானும் உன்னோட வர்றேன். நான் ஓட்டுறேன், நீ பின்னாடி உட்காரு” என்றான்.

“தேவையில்லை! நீ ஆட்டோவிலேயே வா!” என்றாள்.

அவனோ பெருமூச்சு விட்டபடி, “உனக்கு என்னாச்சு? ஏன் உன் முகம் மாறிடுச்சு? காலையில உன் முகம் அவ்வளவு அழகா, பொலிவா இருந்தது. ஆனா கல்யாண விஷயம் பேசும்போதே ஏன் வாடிப்போச்சு?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை! நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். உனக்கு நான் புதுசா தெரிஞ்சா நான் என்ன பண்ணுவேன்?!”

“இல்லை, அவ்வளவு நேரம் பூவா இருந்த முகம் எப்படி மாறுச்சு? அதுவும் என் கல்யாண விஷயம் பேசும்போது ஏன் மாறுச்சு? எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும்!” என்று பிடிவாதமாக நின்றான்.

“அதெல்லாம் எந்தக் காரணமும் இல்லை! கிளம்பு, இங்கிருந்து” என்று வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவனோ வண்டியின் மேல் கை வைத்தான்.

“பதில் சொல்லுடி! ஏன் முகம் மாறிச்சு? எனக்குக் கல்யாணம்னா முதல்ல சந்தோஷப்பட வேண்டியது நீ. ஆனா உன் முகம் வாடுதுன்னா…!” என இழுத்தவன், “ஹே! அன்னம்மா… டூ யூ லவ் மீ? என்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டியா நீ?!” என்று ஆனந்த அதிர்ச்சியில் கேட்க, அவன் கண்டுபிடித்துவிட்டானோ என எண்ணி அதிர்ந்து போய் நின்றாள் ஜனனி.

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்