Loading

18

 

“என்னாச்சு?” என்று மெல்லிய ஒலியில் பேச வந்த விஷ்ணுப்ரியாவின் இதழில் விரல் பதித்து, “ஷ்ஷ்” என்றான், அபூர்வன்.

 

பயத்திலும் குளிரிலும் அவள் தேகம் நடுநடுங்க, தன்னிச்சையாய், அவன் கரம் அவளை அரவணைத்துக் கொண்டது. பாவையும் அதில் பாந்தமாய்ப் பொருந்தியதுதான் அவளுக்கு ஆச்சரியம்.

 

பெரிய பாறை ஒன்றுக்குப் பின், அவளை ஏந்திக் கொண்டு அவன் மறைந்திருக்க, அவன் பார்வை, இருளைக் கிழித்துக் கொண்டு, எதையோ தேடியது.

 

அவன் பச்சை விழிகளில், ஒரு உருவம் தென்பட்டதால், ஒரு பளபளப்பு வந்து போனது.

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த விழிகளில் வந்துபோன பளபளப்பு, உடலில் ஒரு சிலிர்ப்பைத் தோற்றுவித்ததென்றால் மிகையில்லை.

 

கையில் துப்பாக்கி ஏந்தியபடி, ராஜசிம்மன் தன் ஒவ்வொரு அடிகளையும் பார்த்துப் பார்த்து வைத்தான். ஓசை வந்த திசைநோக்கி அவன் ஓடோடி வர, தன்னிலை இழந்து கத்தித் கொண்டிருந்தவன் தோளில் பாவை கரம் வைத்து அவனை அமைதிப்படுத்தியிருந்தாள்.

 

சட்டென அவளை அணைத்துக் கொண்டவன், கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. அவன் அணைப்பில் திடுக்கிட்டவள், “எ..ஏ..என்னாச்சு?” என்றாள்.

 

அவன் நிமிர்ந்தான் இல்லை.

 

அங்கு வந்த காட்டு நாய், “ஊஊ..” என்று ஊளையிட, அதன் ஓசையில் அவளிடமிருந்து பிரிந்தவன், “ஓ ஷிட்..” என்று காலைத் தரையில் உதைத்துக் கொண்டான்.

 

அவளைக் கூட்டிக் கொண்டு, விரைவாய் அவ்விடம் விட்டு மறைய அவன் வேகநடை வைக்க, அவளால் அதற்கு துளியளவும் ஈடுகொடுக்க இயலவில்லை.

 

நொடியும் யோசிக்காமல் அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன், தனக்குப் பரிட்சயமாகிப்போனக் காட்டில், கால்களைப் பதமாய் ஊன்றி, வேறொரு இடத்தில் அவளோடு மறைந்துக் கொண்டான்.

 

அங்கு ராஜசிம்மன் இவர்கள் மறைந்திருக்கும் பாறைக்கு அருகே வந்து நின்று இவர்களைத் தேட, தூரத்தில் காட்டு நாய் இவர்களைக் காக்கும் விதமாய் ஊளையிட்டது.

 

அதைக் கேட்ட ராஜசிம்மன் விரைந்தோடி அவ்விடம் விட்டுச் செல்ல, அபூர்வன், ஒரு ஆசுவாசப் பெருமூச்சுடன் சாய்ந்தான்.

 

அவனையே பார்த்திருந்த விஷ்ணுப்ரியாவுக்கு, மனதில் சொல்ல முடியாத உணர்வுகள். எந்த தைரியத்தில் இப்படி அறியாத ஒருவனை நம்பி இருக்கின்றோம்? என்று இன்றளவும் அவளால் உணரமுடியவில்லை.

 

“நான் உன்னை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கேனா?” என்று அவள் கேட்க,

 

“மே பீ..” என்றான்.

 

“ப்ளீஸ்.. புதிரா பேசாத” என்று அவன் சட்டையைப் பிடித்துத் தன்னை நோக்கித் திருப்பியவளாய் அவள் கேட்க, அவன் இதழில் மெல்லிய புன்னகை.

 

இவளுக்குக் கண்கள் கலங்கின.

 

“நான் சரியா தப்பானு எனக்குத் தெரியல. எந்த நம்பிக்கைல நான் உன்கூட இருக்கேன்னும் எனக்குப் புரியல. இ..இப்படி நடுகாட்டுக்குள்ள நீ..நான்.. இ.. இந்தக் காடு.. எனக்கு பயமா இருக்கு. எ..என் உணர்வுகள் உன்னை நம்பச் சொல்லுது. மூளை விட மாட்டேங்குது.. எ..ஏதோ குழப்பமா இருக்கு. என்னை ஏன் எங்க வீட்ல கொண்டுபோய் விட மாட்டேங்கிற?” என்று பயத்தோடு அவள் கேட்க,

 

“ஏன்? என்கூட இருக்கப் பிடிக்கலையா?” என்று கேட்டான்.

 

“எதுக்குப் பிடிக்கனும்? நீ யாரு எனக்கு?” என்று அவள் கேட்க, அவன் இதழில் மெல்லிய புன்னகை.

 

“உன் அக்கா பெயர் என்ன? சிவப்ரியா தானே?” என்று அவன் கேட்க,

 

புரியாத பார்வையோடு ஆமென்று தலையசைத்தாள்.

 

“உனக்கு அவளை ரொம்ப பிடிக்குமா?” என்று அவன் கேட்க,

 

“உனக்கு அவளைத் தெரியுமா?” என்றவள், சட்டென அவன் கண் பார்த்து, “நீ சொன்ன கதையில வர்ற பையனும் பொண்ணும், நீயும் சிவாவுமா?” என்று கேட்டாள்.

 

அசட்டையாய் அவன் தோள்களைக் குலுக்கினான்.

 

தலை வெடிப்பதைப் போலிருந்தது விஷ்ணுவிற்கு. தன் அக்காவின் காதலனா? எனில் தனக்கு ஏன் இவனிடம் ஈர்ப்பு வருகிறது? இ..இவன் ஸ்பரிசம்? அது தன்னை என்னவோ செய்கிறதே? என்று அவள் மனதோடு குழம்ப,

 

அவளை அள்ளிக் கொண்டு மெல்ல நடை போட்டான்.

 

“எ..என்ன விடு” என்று ஒருவித கூச்சத்துடன் அவள் கூற,

 

மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, “ஷ்ஷ்” என்றான்.

 

அதில் திடுக்கிட்டு அவன் புஜத்தை இறுக பற்றியவளுக்கு மனதில் சொல்ல முடியாத குழப்பம்.. ‘அந்த கதைல அவங்க லவ் பண்ணலை தானே? இவன் தான் அந்த கதைல வர்றவனா இல்ல வேற யாருமா?’ என்று மனதோடு குழம்பினாள்.

 

அங்கு குகைக்குள் நின்று, தன் பார்வையால் அவ்விடத்தை அலசிக் கொண்டிருந்தான், ராஜசிம்மன்.

 

‘வாட் தி ஹெல் இஸ் திஸ்?’ என்று அக்குகையைப் பார்த்து அவன் மனம் அறற்றியது.

 

இருவர் அங்கு தங்கியதன் அடையாளமாய், உணவு பொருட்கள், மருத்துவ சாதனங்கள் என சில அங்கே இருப்பதைக் கண்ட ராஜசிம்மனுக்கு, மனதில் அன்று காய்கறிக் கடைக்கு வந்துபோன முகமரியாதவன் முகம் வந்துபோனது.

 

துரிதமாய் அங்கே தன் பார்வையை அலசினான். ஒரு சீப்பும், அதில் சில முடிகளும் கிடைத்தது. ஆனால் அவை கருநிற நீளமான கூந்தல். அதனை ஆதாரத்திற்கு எடுத்துக் கொண்டவன், மேலும் தேட, ஒரு ஆண்கள் அணியும் சட்டை இருந்தது. அதனையும் எடுத்துக் கொண்டான்.

 

‘நிச்சயமா இந்தக் காட்டுக்குள்ளத்தான் அவனும் அந்த பொண்ணும் இருக்கனும். அந்த பொண்ணோட உயிருக்கு அவனால எதுவும் பாதகம் வரும்னு தோன்றலை’ என்றவன் பார்வை, அங்கிருந்த மருந்துகளில் படிந்தது. அவற்றை புகைப்படங்களாக எடுத்துக் கொண்டு அவன் புறப்பட, செல்பவனையே புதருக்குப் பின்னிருந்து மறைந்து நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தான் அபூர்வன்.

 

தன்னை யாரோ பார்ப்பதை உணர்ந்த ராஜசிம்மன் திரும்பிப் பார்க்க,

 

அதை எதிர்பாராத அபூர்வன், பதறி விரைந்தோடினான்.

 

பின்னிருந்து கொஞ்சம் போல் தெரிந்த அவன் உருவத்தைப் பார்த்த ராஜசிம்மனுக்கு, அவனை எங்கோ பார்த்த உணர்வுத் தோன்றியது. ஓடிசென்று பிடிக்க வேண்டுமென்றுகூட தோன்றவில்லை.. அவனுக்குள் ஏதோ வித்யாசமான குழப்பம். அதே குழப்பத்துடன் அவன் காட்டை விட்டு வெளியே வர, “ராஜ்” என்றபடி அவன்முன் வந்தான் கருப்பசாமி.

 

அவன் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்த ராஜசிம்மனிடம், “என்னடா? என்ன ஷாக்?” என்று கேட்டு, “முன்னலாம் நான் தான் இங்க அலையுவேன். இப்ப நீ அலையுறியா? இது கொஞ்சம் டேஞ்சரான காடு மச்சான்.. பாத்து ஜாக்கிரதை” என்றபடி நடக்க, அவனது பின்னுருவம், காட்டில் பார்த்த உருவத்தை நினைவு கூர்ந்து மீள்வதாய், தோன்றி ராஜசிம்மனை அதிர வைத்தது.

 

“கருப்பு..” என்று அழைத்த ராஜசிம்மன், அவன் திரும்பியதும், “நீ போ.. நான் அந்த பொண்ணு வீட்டுக்குப் போகணும்” என்றான்.

 

கருப்பசாமி மனதில் சுபியின் முகம் வந்து போனது.

 

“நானும் வரேன் டா” என்று அவன் கூற,

 

ராஜசிம்மன் மனதில் சந்தேகம் இன்னும் வலு பெற்றது. “அங்க உள்ளவங்க எல்லாரோட டீ.என்.ஏ சேம்பிலும் எனக்கு வேணும். அவங்க பேக்ஸ் செக் பண்ணி, எதுவும் கிடைச்சா எடுக்கனும்” என்று அவனை ஆழம் பார்த்தபடி ராஜசிம்மன் கூற,

 

“சரிடா” என்று கருப்பசாமி கூறினான்.

 

சிறுதலையசைப்புடன் இருவரும், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டை நோக்கிச் சென்றனர்.

 

அவ்வீட்டில் நம்பிக்கையெல்லாம் வடிந்துபோன நிலையில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

 

அறைக்குள் ப்ரீத்திக்கும் பிரபாவிற்கும் பெரும் சண்டை நடந்துகொண்டிருந்தது.

 

“இப்ப நீ என்கூட கிளம்பி வருவியா மாட்டியா?” என்று பிரபா கத்த,

 

வெளியே உள்ளவர்களும் அதைக் கேட்டு நொந்துபோன நிலையில் அமர்ந்திருந்தனர்.

 

“முடியாதும்மா.. முடியவே முடியாது” என்று ப்ரீத்தி, தன் அன்னையிடம் குரலுயர்த்தி சண்டையிட, பிரபா அதிர்ந்துதான் போனார்.

 

“நீ வந்துதான் ஆகனும் ப்ரீத்தி.. என்னால தவமா தவமிருந்து பெத்த உன்னைப் பரிகொடுக்க முடியாது” என்று பிரபா கத்த,

 

சோர்வாய் அமர்ந்திருந்த ராமராஜன், எழுந்து அவர்கள் அறை பக்கம் சென்றார்.

 

அவர் அரவத்தில், பிரம்மா, சுபி மற்றும் சுடரும், அவரைத் தொடர்ந்து சென்றனர்.

 

“முடியாதும்மா.‌. விஷ்ணு இல்லாம நான் இங்கிருந்து வரமாட்டேன்” என்று அவள் முடிக்கும் முன்,

 

“ப்ரீத்தி” என்று ராமராஜன் அழைத்திருந்தார்.

 

பிரபாவும் ப்ரீத்தியும் அவரைத் திரும்பிப் பார்க்க,

 

“நீ கிளம்புடா” என்று ராமராஜன் கூறினார்.

 

“ம..மாமா” என்று அவள் கண்ணீராய் அழைக்க,

 

“போதும்டா.. யாரும் வேண்டாம். பிரம்மா, சுபி, சுடர்.. நீங்களும் கிளம்புங்க.. என் பொண்ணு எனக்குக் கிடைக்கனும்னு இருந்தா, கண்டிப்பா கிடைப்பா. அவளுக்காக நீங்க யாரும் கஷ்டப்படுறத நான் விரும்பல.. எல்லாரும் கிளம்புங்க” என்று கரகரத்தக் குரலில் அவர் கூறினார்.

 

“மாமா..” என்று ஓடிவந்து ப்ரீத்தி அவரை கட்டியணைத்து அழ, “நீங்க எல்லாருமே எம்பிள்ளைங்கதான்டா.. யாருக்காகவும் யாரையும் இழக்க நான் தயாரா இல்ல.. இ..இங்க என்ன நடக்குதுன்னே புரியல.. எ..எம்பொண்ணு” என்று திடமாய்ப் பேச முயன்றவர் மனமொடிந்து அழதுவிட,

 

பிரபா கண்களில் கண்ணீரோடு அவர்களை நெருங்கினார்.

 

“அ..அண்ணா.. எ..என்னை மன்னிச்சிருங்கண்ணா..” என்று அவர் தன் பக்க விளக்கம் கொடுக்க முன்வர,

 

“ச்ச இல்லம்மா. இதுல நீ மன்னிப்புக் கேட்க என்ன இருக்கு? ஒன்னுக்கு ரெண்டு உயிரைத் தொலைச்சவன்ம்மா நானு. உயிரானவங்க பிரிவோட பயம் எப்படியானதுன்னு எனக்குப் புரியும். உன் பயம் நியாயமானது.. இருந்த சோகத்துல நான் இதை யோசிக்கலைம்மா.. நீங்க எல்லாரும் கிளம்புங்க.. எம்பொண்ணு கிடைப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று கூறினார்.

 

அவரைத் தோளோடு அணைத்துக் கொண்ட சுடர், தட்டிக் கொடுக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவர், “கிடைச்சிடுவா தானப்பா?” என்று உடைந்துபோனக் குரலில் கேட்டார்.

 

“ப்பா..” என்று கண்ணீர் சிந்தியவன், தன் கண்களை அழுந்த மூடித் திறந்து, “கண்டிப்பா கிடைப்பா ப்பா” என்று அவரை அரவணைத்தபடி கூடத்திற்குக் கூட்டிவந்து அமர்த்தினான்.

 

அவர் காலடியில் அமர்ந்து, “எனக்கு சுபிபோலதான் ப்பா விஷ்ணுவும்.. உங்களை அப்பானு வாய் வரை கூப்பிடல.. மனசுலருந்து, அப்பாவா நினைச்சுத்தான் கூப்பிடுறேன்.. நீங்க போனு சொன்னாக்கூடப் போக மாட்டேன் ப்பா. என் தங்கச்சி இல்லாம போக மாட்டேன். அதேநேரம் மத்தவங்களோட பாதுகாப்பும் முக்கியம். நாம இருப்போம் ப்பா. இவங்க நாலு பேர் கிளம்பட்டும்” என்று கூறி, ப்ரீத்தியைப் பார்த்து, “நீ கிளம்பு” என்று கூறினான்.

 

கண்கள் கலங்கி, கெஞ்சுதலாய் அவனைப் பார்த்தவள் மனம், ‘நாயில்லாம யாருகிட்ட அழுவீங்க? யாருகிட்ட உங்க மனபாரம் தீர்ப்பீங்க?’ என்று அறற்றியது.

 

“பிரம்மா, சுபி.. நீங்களும் பிரபா அத்தையோட புறப்படுங்க” என்று அவன் கூற,

 

“யாரு கிளம்பினாலும் நான் கிளம்ப மாட்டேன்” என்று ப்ரீத்தி பிடியாய்க் கூறினாள்.

 

“ப்ரீத்திமா.. அடம் பண்ணாத” என்று ராமராஜன் கூற,

 

“இல்ல மாமா.‌ நான் கிளம்ப மாட்டேன்” என்றாள்.

 

“ப்ரீத்தி..” என்று பிரபா அழைக்க,

 

“கிளம்பு ப்ரீத்தி. விஷ்ணு கண்டிப்பா கிடைப்பா. நீ கிளம்பு” என்று சுடரொளிவானன் கூறினான்.

 

அவனை கோபத்துடன் முறைத்தவள், “முடியாது” என்க,

 

“ப்ளீஸ்” என்றான்.

 

“ப்ளீஸ் சுடர்.. தயவுசெஞ்சு போக சொல்லாதீங்க.. உங்களைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போக முடியாது. நம்ம விஷ்ணு இல்லாமலும் போக முடியாது” என்று அவள் கத்த,

 

பெரியவர்கள் இருவரும் அதிர்ந்துபோய் அவளைப் பார்த்தனர்.

 

“ப்ரீத்தி..” என்று சுடர் அவள் முன் வர,

 

அவன் சட்டையைப் பற்றிக் கொண்டு, “எப்படி போனு சொல்றீங்க? நான் போனா யாருகிட்ட அழுவீங்க? யாருகிட்ட ஆறுதல் பெறுவீங்க? உங்களை இங்க விட்டுட்டு அங்க நான் நிம்மதியா இருந்துடுவேனா? சொல்லுங்க சுடர்.. இருப்பேனா? செத்துடுவேன்” என்று கத்தினாள்.

 

அவளது கடைசி வார்த்தையைத் தாள இயலாமல் சுடர் அவளை அணைத்துக் கொள்ள, கதறியழுதபடி, “ப்ளீஸ்ங்க.. போகச் சொல்லாதீங்க.. விஷ்ணு இல்லாம அங்கப் போனாலும் நிம்மதி இருக்காது.. இ..இங்க அட்லீஸ்ட் உங்களுக்குத் துணையாவாது இருப்பேனேங்குற ஆறுதலோடவும், நம்பிக்கையோடவும் இருந்துட்டுப் போயிடுறேன்” என்று கதறினாள்.

 

தோழிகள் இருவரும் அவர்களைக் கண்ணீரோடு பார்த்திருக்க, பெரியோர் இருவரும் அதிர்வாய்ப் பார்த்தனர்.

 

“ப்ரீத்திமா‌..” என்று சுடர் வெடித்து அழ,

 

“நான் இருக்கேன்.. ப்ளீஸ்.. அழாதீங்க.. உங்க ப்ரீத்தி இருக்கேன்” என்று ஆறுதல் கூறினாள்.

 

இவர்களையே மற்றவர்கள் பார்த்திருந்த நேரம், வெளியே வாகனம் வந்து நிற்கும் சப்தம் கேட்க, ப்ரீத்தியும் சுடரும் அதன் ஓசையில் சுயம் அடைந்து விலகி நின்றனர்.

 

அழுத தடம் மறையா முகங்களுடன் இருக்கும் அனைவரையும் பார்த்தபடி, கருப்பசாமியும், ராஜசிம்மனும் வர,

 

ராஜசிம்மனைக் கண்டதும், பிரம்மாவின் முகம், நொடியில் கண்ணீரிலிருந்து கோபத்திற்கு மாறியது. அதை கண்டு அவனிதழுக்குள் மெல்லிய புன்னகை…

 

உள்ளே அவன் வந்ததும், அடுத்தது என்னவோ என்ற பயம் தான் அவர்களுக்குத் தோன்றியது.

 

சுடர் அவர்களைப் பார்த்து, “சார்?” என்று கேள்வியாய் அழைக்க,

 

“விஷ்ணுப்ரியா பயன்படுத்தின பொருட்கள் ஏதும் உங்ககிட்ட இருக்கா?” என்று ராஜசிம்மன் கேட்டான்.

 

“இருக்கு சார்” என்று சுடர் கூற,

 

“ம்ம்..” என்று தலையசைத்தவன், பிரம்மாவைப் பார்த்து, “அதை நான் பார்க்கனும்” என்றான்.

 

விஷ்ணுவின் பை பிரம்மாவுக்காகக் கொடுக்கப்பட்ட அறையில் தான் இருந்தது. அதனால், அவள் அறை நோக்கிச் செல்ல, அவள் வெளிவரவெல்லாம் காத்திருக்காமல், “கருப்பு.. நீ எதுக்கும் இவங்க பேக்ஸ் கொஞ்சம் பாரு..” என்று கூறிவிட்டுச் சென்றான்.

 

அலமாரி கதவைத் திறந்து அவள் பையை எடுக்க, ராஜசிம்மன் உள்ளே நுழைந்தான்.

 

அவனை அசட்டையாய் ஒரு பார்வை பார்த்தவள், பையை கட்டிலில் வைக்க,

 

தானே அதனைத் திறந்தவன், ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தான்.

 

“இந்த துணியில் துவைக்காதத் துணி ஏதும் இருக்கா?” என்று அவன் கேட்க, தனியாக அதிலிருந்த நெகிழிப்பையைக் காட்டியவள், “இதுல உள்ளது துவைக்காதத் துணி தான்” என்றாள்.

 

“அவங்க தொலைஞ்சு இத்தனை நாளாச்சு. இதையெல்லாம் ஏன் துவைக்கலை?” என்று அவன் கேட்க,

 

“எங்க யாருக்கும் இதெல்லாம் நினைவுல இல்ல” என்று கூறினாள்.

 

இயந்திரகதியில், உணர்வற்றக் குரலில் அவளது பதில்கள் இருப்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

 

அவற்றை ஆராய்ந்தவன், சிலவற்றை தன்னோடு எடுத்துக் கொண்டான்.

 

“தேங்ஸ்” என்று அவன் கூற,

 

பதில் கூறக்கூட விரும்பாமல், மீண்டும் பையை அலமாரியில் வைத்துவிட்டு நகர முற்பட்டாள்.

 

அவள் தன்னைத் தாண்டிச் செல்லும் நொடி, அவள் கரம் பற்றி நிறுத்தியிருந்தான், ராஜசிம்மன்.

 

பிரம்மவதனி பதறிப்போய் அவன் முகம் நோக்க,

 

“உன்கிட்டப் பேசணும்” என்றான்.

 

“எனக்கு உங்ககிட்டப் பேச எதுவுமில்ல” என்று அவள் கூற,

 

“ஓகே.. பட் எனக்கு இருக்கு” என்று கூறி அவளைத் தன் முன் நிறுத்திக் கொண்டான்.

 

பொறுமையை இழுத்துப் பிடித்து அவனைப் பார்த்தவள், “என்ன?” என்க,

 

“ஐ லவ் யூ” என்று அதே இறுக்கமானக் குரலில் கூறினான்.

 

கரங்களைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தவள், அவன் உதிர்த்த சொற்களில் அதிர்ந்து போய், கரம் இறக்கி அவனை நோக்க,

 

“எஸ்.. ஐம் இன் லவ் வித் யூ” என்று கூறினான்.

 

பிரம்மவதனிக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே இல்லை. ஆச்சரியமாய் அவனைப் பார்த்துக்கொண்டு அவள் நிற்க,

 

“நான் நல்லா யோசிச்சுட்டேன். நீயும் யோசிச்சு சொல்லு” என்று கூறினான்.

 

அதிர்விலிருந்து வெளிவந்தவளிடமிருந்து “முடியாது” என்று உடனடியாக பதில் வந்தது.

 

அவன் இதழில் மெல்லிய புன்னகை. அந்த புன்னகை ‘இதை நான் எதிர்ப்பார்த்தேன்’ என்பதை உணர்த்தியது. ஆனால் அந்த ‘முடியாது’ என்ற சொல்லில் இருந்த உறுதி அவனை வரும் காலத்தில் சிதைக்கப் போவதை அவன் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை…

 

“சத்தியமா நமக்குள்ள செட் ஆகாது சார். நான் பிராக்டிகலான பொண்ணு தான். ஆனா எமோஷனல் சப்போர்ட் அதிகம் எதிர்பார்க்கும் டைப். ஒரு பிரச்சினைனா, அதுக்கானப் பிராக்டிகல் சொல்யூஷன் என்கிட்ட இருக்கும். ஆனாலும், மெண்டலி டௌன் ஆகி இருக்கும் என்னை எமோஷனலா ஹாண்டில் செய்தால்தான், அந்த பிராக்டிகல் சொல்யூஷனை எடுக்க முன் வருவேன். இது சரியா தப்பானு எனக்குத் தெரியலை. ஆனா எல்லார் கிட்டவும் இல்லாட்டியும் என் உயிரானவங்கக் கிட்ட எனக்கு இந்த எதிர்பார்ப்பு உண்டு. அப்படிப்பட்ட எனக்கும், எமோஷன்ஸ ஹாண்டில் பண்ண விரும்பாத உங்களுக்கும் சத்தியமா செட் ஆகாது. நீங்க ஏதோ ஒரு வேகத்தில் யோசிச்சிருப்பீங்க. மறந்துட்டு அடுத்த வேலையைப் பாருங்க” என்று பொறுமையாக பிரம்மவதனி கூற,

 

அவனிடம் மறைந்திருந்த புன்னகை மெல்ல வெளிப்பட்டது.

 

பிடித்தம் என்றதும் கத்தி சண்டையிடாமல், பொறுமையாக அவள் எடுத்துக் கூறியதே, அவளது பக்குவத்தை அவனுக்குக் காட்டியது.

 

“இம்ப்ரசிவ்” என்று அவன் கூற,

 

“உங்க விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கணும்னு தான் பொறுமையா சொல்றேன். தயவுசெஞ்சு மறுபடி இதைப்பற்றிப் பேசி, என்னைக் கோவப்படுத்திடாதீங்க” என்று கூறினாள்.

 

“அட்ராக்டிவ்” என்று மீண்டும் கூறி, அவளைச் சீண்டியவன், “என் மனசு மாறாது. உன் மனசு மாறுமானு வேணும்னா பார்ப்போம். சின்சியர்லி ஐம் இன் லவ்.. வித் யூ பிரம்மவதனி” என்று கூறி, கண்ணடித்துவிட்டுச் சென்றான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்