
வாழை இலையை விரித்து, மூன்று வகை காய்கறிகளுடன் அப்பளம் என பரிமாறப்பட்ட உணவை ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இளநந்தன். “போதும்” என்று சொல்லத் தோன்றவில்லை. ஜனனியின் கையால் வாங்கி வாங்கிச் சாப்பிட்டான். பக்கத்தில் தன்னை முறைத்தபடி ஜனனி நின்றிருந்தாலும், பார்த்துப் பார்த்துப் பரிமாறிய விதம் அவனது தாயை நினைவூட்டியது.
கண்கள் தாமாகவே கலங்கிவிட, அதைத் துடைத்தபடி உண்டான். ஜனனிக்கு அவனைப் பார்க்க ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவன் மீது கோபமாகவும் வந்தது.
திடீரென அவனுக்குப் புரையேற, வேகமாக அவனது தலையைத் தட்டி அருகே இருந்த தண்ணீரைப் பருகக் கொடுத்தாள். கண்களில் நீர் திரள இருமியவன், அவளது பதற்றத்தை ரசித்தபடி ஒரு நமட்டுச் சிரிப்புடன் வாங்கிப் பருகினான். பின் அவள் ஊற்றிய ரசத்தைச் சாதத்துடன் பிசைந்து உண்டான்.
“இப்படி வாழை இலைல சாப்பிட்டு எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா ஜனா? எனக்குன்னு ஒரு தட்டு, டம்ளர்… அதுலதான் சாப்பிடணும். அதுவும் நேரத்துக்குச் சாப்பிட முடியாது. அவங்களுக்குச் செய்யறதுல மிச்சம் மீதியைச் சாப்பிட்டுக்குவேன். இப்படி ஒரு ‘ஃபுல் மீல்ஸ்’ சாப்பிட்டதே இல்லைடி…” என்றான் உருளைக்கிழங்கை காலி செய்தபடி.
அவன் அப்படிச் சொன்னதும் அவளது உள்மனம் பிசைந்தது. அவனை உடனிருந்து கவனித்துக் கொள்ள மனம் தூண்டினாலும், அவளது சூழ்நிலையே தடுப்புச் சுவராக நிற்க, வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்தாள்.
ஒவ்வொரு கூட்டாக அவன் காலி செய்ய, மேற்கொண்டு பரிமாறியவள், “பேசாம சாப்பிடு, மறுபடியும் புரையேறப் போகுது” என்றாள் தரையைப் பார்த்தபடி. அவனோ சட்டென விழிகளை உயர்த்தி அவள் முகம் பார்த்துச் சிரித்தவன்,
“புரையேறுனா பரவாயில்லை! தலையைத் தட்டிவிட, தண்ணீ கொடுக்கத்தான் உன் கை இருக்கே!” என்றான். அவள் அவனைத் தீயாக முறைத்தாள்.
அவனும் தலைகுனிந்து சாப்பிட, மேலும் சாதம் வைத்து மோரை ஊற்றினாள். அவன் சாப்பிடும்போது அவனது எண்ணமெல்லாம் சற்று முன் நடந்த நிகழ்வுகளிலேயே இருந்தது.
நீலகண்டன் தனது வம்சத்தின் ஒரே வாரிசு சச்சின் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால், இளாவைக் கண்டதும் மேலும் சந்தோஷம் கொண்டார். குடும்பத் தகராறிலும் சுயநலத்திலும் தாய், தந்தையை இழந்த இளாவை அரவணைக்க வேண்டியவர், முன்பு அவனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதற்குத் தண்டனையாகவே தன் மகனை இழந்துவிட்டதாக அவர் உணர்ந்தார்.
தான் செய்த பாவத்திற்கு விமோசனமாக, யாருக்கும் தெரியாமல் இளாவைத் தேடித் தன்னோடு வைத்துக் கொள்ளவும், அவனுக்கு ஒரு நல்லது செய்யவும் எண்ணினார். ஆனால் கர்மாவின் பலனை அனுபவிக்க வேண்டுமே! அவன் எங்கு இருக்கிறான் என்பது சுலபத்தில் தெரியவில்லை. அவன் துபாய் சென்றது மட்டுமே தெரியவர, “நன்றாக இருக்கட்டும்” என்று எண்ணியவர், சச்சினோடு சேர்த்து அவனுக்காகவும் தினமும் வேண்டிக் கொள்வார்.
கடவுள் அவரது மன்னிப்பை ஏற்று விமோசனம் அளித்துவிட்டார் போலும்! அவனை அவர் கண்ணில் காட்டி, “நீ செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடிக்கொள்” என்று அவனோடு சேர்த்து வைத்துவிட்டார்.
இளாவின் கைகளைப் பற்றி அருகே அமர வைத்தவர், அதில் முகம் புதைத்து அழ, அனைவரும் அதிர்ந்தனர். இளாவும் ஒரு கணம் திகைத்தான். வள்ளிக்கு மட்டுமே அவரது மனநிலை புரிந்தது. கண்களில் நீரோடு அவரும் அதே மனநிலையில் தான் இருந்தார்.
“நந்து! என்னை மன்னிச்சிடுடா” என்று கைகளைப் பற்றிக் கேட்டார். பதறியவன், “ஐயோ! பெரியப்பா, எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க? நீங்க எனக்கு என்ன பண்ணீங்க?” என்றான்.
“உனக்கு நான் ஒண்ணுமே பண்ணாததால்தான் இந்த மன்னிப்பு. உன் அப்பா, அம்மாவை இழந்துட்டுத் தனி மரமா நீ நின்னப்போ, உன்னை அரவணைச்சு எங்களோட அழைச்சுட்டுப் போயிருக்கணும். யாரோ எவரோ பண்ணுன பாவத்துக்குத்தான் இந்தத் தண்டனையை அனுபவிக்கிறோம்” என்று கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். சேலை முந்தானையை வாயில் பொத்தி அழுதார் வள்ளி.
இருவரையும் காணச் சங்கடமாக இருந்தது அவனுக்கு. அவர்கள் செய்தது தவறுதான், அவர்கள் மீது அவனுக்குக் கோபம் இருந்தது. ஆனால் ராம் இறந்த செய்தியைக் கேட்டதும், அந்தப் பழைய கோபம் பரிதாபமாக மாறிவிட்டது.
“உங்க மேல எனக்குக் கோபம் இருந்தது பெரியப்பா! என் மேல கொஞ்சம் கூடப் பாசம் இல்லையா? என்னை நீங்களாவது ஏத்துக்க மாட்டீங்களான்னு என் மனசு உங்க அன்பைத் தேடுச்சு. அது கிடைக்கலைன்னு கோபம் வந்தது. வெறுத்துப் போய்த்தான் துபாய் போனேன். ஆனா ராம் இறந்த செய்தி கேட்டதும் உங்க மேல இருந்த கோபம் போயிருச்சு. அண்ணனை இழந்து நீங்க தவிப்பீங்களேன்னு மனசு கிடந்து தவிச்சது! ஆனா என்னால இந்தியா வர முடியாத சூழ்நிலை. அதுவுமில்லாம இந்தியா போகக் கூடாது, சொந்தங்கள் கூடப் பேசக் கூடாதுங்கிற முடிவோட இருந்ததால உங்களுக்குக் கால் பண்ணல பெரியப்பா! என்னை நீங்களும் மன்னிக்கணும்…” என்றான்.
“நீதான்டா எங்களை மன்னிக்கணும்…” என்றவர், “எங்கே தங்கப் போற நீ?” என்றார்.
“உங்க பிளாட்டுக்கு எதிர்த்த பிளாட்டை நான் வாங்கப் போறேன் பெரியப்பா! அங்கதான் தங்கப் போறேன்” என்றான்.
“எதுக்கு அங்க தங்குற? நம்ம வீடு இருக்கும்போது நீ நம்ம வீட்டுக்கே வந்திரு! இனி நீ எங்க பிள்ளை, எங்களோடவே இரு” என்று கைகளைப் பற்றிக் கேட்டார்.
“உங்களோடதான் இனி இருக்கப் போறேன் பெரியப்பா! ஆனா தனி பிளாட்ல இருந்துக்கிறேன்” என்றான் தயக்கத்துடன்.
“ஏன், உனக்கு எங்களோட இருக்கப் பிடிக்கலையா? இன்னும் எங்க மேல கோபம் போலையா?” என்று வள்ளி கேட்க,
“பெரியம்மா, உங்களோட இருக்க நான் ஏன் வேணாம்னு சொல்லப் போறேன்? ஆனா அங்க…” என்றவன் அறையின் வாயிலில் நிற்கும் ஜனனியை ஒரு கணம் பார்த்தான். “அங்க ஜனனி இருக்கா, நானும் இருந்தா சரியா இருக்காது. எதிர் பிளாட்லதானே இருக்கப் போறேன்? உங்களோடதான் இருப்பேன், மூணு வேளையும் உங்களோட சாப்பிடுவேன், தூங்க மட்டும் அங்க போவேன். சரியா?” என்றான். இருவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.
“ஆமா, எப்படி அந்த பிளாட் வாங்குன இளா?” என நீலகண்டன் கேட்க, “விபுதான் பெரியப்பா அந்த பிளாட் விலைக்குப் போறதா சொன்னான். அதான் அவனை வச்சு மூவ் பண்ணி அட்வான்ஸ் கொடுத்திருக்கேன். ரெண்டு நாள்ல ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதும் வீடு நம்ம கைக்கு வந்திடும்…”
“சரி சரி, சாப்பிட்டியா நீ? ஆமா, தலையில என்னடா காயம்?” என வள்ளி அவனது காயத்தைப் பார்த்துக் கேட்டார். அவனோ ஜனனியை ஒரு தரம் பார்த்துவிட்டு, “முட்டிக்கிட்டேன் பெரியம்மா” என்றான்.
“ஜனனிம்மா, இங்க வா! இவனுக்குச் சாப்பாடு எடுத்து வைம்மா, சாப்பிடட்டும்” என்றார். “ம்ம்…” என்று அவள் முன்னே செல்ல, இவனும் பின்னே சென்றான். விபுவும் அவனுடன் சென்றான்.
சுதாவிடம் மேகவாணி இளாவை யாரெனக் கேட்க, அவரும் விளக்கம் சொன்னார். இளாவை நினைத்து அவருக்கும் பாவமாக இருந்தது. கைகழுவிக் கொண்டு அவன் வந்து அமர, ஜனனி அவனுக்குப் பரிமாறினாள்.
“என்ன ஜனனி! நந்து வந்திருக்கான், அவன்கிட்ட எதுவும் பேசாம இருக்க? எப்படி இருக்கான், என்ன பண்றான்னு கேளு” என நக்கல் சிரிப்போடு கேட்டான் விபு. அவனது சிரிப்பை வைத்து ஏதோ புரிந்தவள், இருவரையும் முறைத்தாள்.
“எதுக்கு இப்போ எங்களை முறைக்கிற?” என்றான் விபு.
“எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டுதானே இப்படி நக்கலா கேட்கிற நீ?” என்றாள்.
“ஆமா தெரியும்! நந்துதான் எல்லாத்தையும் சொன்னான். நீ சொல்லல! நானும் ஏன் சொல்லலைன்னு கேட்க மாட்டேன். ஏன்னா இது உன் வாழ்க்கை. நீ யார்கூட வேணும்னாலும் பேசலாம், பழகலாம். நான் என்னடி சொல்லப் போறேன்?” என்றான்.
“விபு! அது…” எனத் தயங்கினாள்.
“நீ ஆன்லைன்ல ஒருத்தர்கிட்ட பேசினது தப்பு இல்ல ஜனனி! நீ அங்க நிறைய லேடீஸ் கிட்ட ஃப்ரெண்டா தானே இருக்க, அதைத் தப்புன்னு சொல்லாத நான் இதையும் எப்படித் தப்புன்னு சொல்லுவேன்? நீ ஒருத்தர்கிட்ட பேசுறேன்னா அவர் எப்படிப்பட்டவர்னு யோசிக்காமலா பேசுவ? உன்னை நான் எதுவும் சொல்லலடி! என்ன பிரச்சனை வந்தாலும் நான் உன் கூட எப்பவும் இருப்பேன். உன்னை எப்பவும் நான் தப்பா நினைக்கப் போறது இல்ல. உனக்கு என்னோடு ஷேர் பண்ணத் தோணுச்சுன்னா பண்ணு, இல்லைன்னா விடு! கில்டியா ஃபீல் பண்ணாத!” என்றான் நண்பனாக.
விபுவின் இதமான பேச்சு அவளுக்குள் இருந்த குற்றவுணர்வைச் சுத்தமாகத் துடைத்துவிட்டது. திருப்தியுடன் அவனைப் பார்த்தாள். “நந்துவைக் கவனி! நான் வெளியே போறேன்” என்று விபு அங்கிருந்து நகர்ந்தான். அவளது கவனம் நந்துவின் பக்கம் திரும்ப, அவனை முறைத்தாள்.
“இப்ப என்னை ஏன் முறைக்கிற?”
“பின்ன கொஞ்சணுமா?”
“கொஞ்சலாம்…” என்றான் வெட்கம் கலந்த சிரிப்புடன்.
“ச்சீ… சிரிக்காத! நான் போன் பண்ணச் சொல்லிப் பஞ்சு பாட்டிக்கிட்ட சொன்னேன். ஏன் போன் பண்ணல நீ? அவங்க சொல்லலைன்னு மட்டும் சொல்லாத! நீதான் போன் பண்ணல, ஏன்?”
“கோபமா இருந்தேன்.”
“யார் மேல?!”
“உன் மேலதான்.”
அதற்கு அவள் முறைக்க, அவனோ தலைகுனிந்தான். அவளோ அவன் தலையில் இருந்த காயத்தை மெல்லத் தொட்டுப் பார்த்தாள். அவள் கரம் தொட்டதும் கிடைத்த இதத்தைக் கண்களை மூடி உள்வாங்கிக் கொண்டான். காயத்தைத் தொட்டதும் அவளது கண்கள் தாமாகவே கலங்கிப் போயின. அவள் கலங்கி நிற்பதைக் கண்டு கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தான்.
“உனக்கு என்னாச்சுன்னு எவ்வளவு பதறிப் போனேன் தெரியுமா? ஒரு போன் பண்ணி ‘நல்லா இருக்கேன்’னு கூடச் சொல்லலையே நீ! ரெண்டு நாளா எனக்குள்ள ஒரே பதட்டம்… உனக்கு என்னாச்சோன்னு தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?” என்றாள் ஆதங்கமாக.
அவனும் சாப்பிட்ட இலையைத் தூக்கிப் போட்டுவிட்டு, கை கழுவி அவள் அருகே வந்தான். “இதுக்குப் பேர் என்ன, அக்கறையா? எனக்குன்னு ஒண்ணுன்னா எதுக்குடி நீ துடிக்கணும்? உனக்கு அவ்வளவு நெருங்கின சொந்தம் நான் இல்லையே! பின்ன எதுக்கு எனக்காக இவ்வளவு துடிக்கிற?” எனக் கேட்டான்.
அவள் ஏதோ சொல்ல வரும் முன், “ஃப்ரெண்ட்னு முகமூடி போடாத! உன் துடிப்பு நட்பையும் தாண்டி இருந்தது. ஆனா எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்காக இங்க ஒரு ஜீவன் துடிக்குதேன்னு! தேங்க்ஸ் சொல்ல மாட்டேன் என் பொண்டாட்டிகிட்ட! சாப்பாடு அமிர்தமா இருந்ததுடி” என்றவன், அவளது சேலை முந்தானையில் கையையும் வாயையும் துடைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
சிலை போல நின்றவளுக்கு, அவன் சென்ற சில நொடிகளில்தான் அவன் செய்த காரியம் புரிந்தது.
அவன் கூடத்திற்கு வர, வெளியிலிருந்து ஓடி வந்த சச்சின் இளா மீது மோதினான். இளா குனிந்து அவன் யாரெனப் பார்க்க, சச்சின் அவனை நிமிர்ந்து பார்த்தான்.
“நந்து! உன் அண்ணன் பையன்டா!” என இருவரும் பார்த்துக் கொள்வதைக் கண்டு நீலகண்டன் சொன்னார். அவனுக்குத் தெரியாதா சச்சின் யாரென்று? அவனை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டான்.
“நீ யாரு?” எனச் சச்சின் கேட்க, “நான் இளநந்தன்” என்றான்.
“ஓ.. எனக்கு நீ யாரு?”
“அப்பா!” என்றான் இளா. அவன் சொன்னதைக் கேட்டு
ஜனனி முதற்கொண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
+1

