
விபுவின் வீட்டில் சொந்தங்கள் நிறைந்திருந்தனர். மறுநாள் ஜோவிதாவிற்குத் தாலிப் பிரித்துக் கோர்க்கும் விசேஷம் என்பதால் மதுரையிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். மாலையிலிருந்து சொந்தங்களைக் கவனிக்கும் முனைப்பில் சுதாவும் விபுவும் சிரத்தை எடுத்து வேலை செய்தனர். ஆனால், அவனது மனைவி ஜோவிதாவோ கணவனுடன் தனிமையில் இருக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
இரவு வரை அவள் எதிர்பார்த்த தருணம் வரவில்லை. கடவுள் அவளுக்குக் கருணை காட்டினாலும், கட்டிய கணவன் காட்டவில்லை. ஜோவிதாவின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கண்டு மருமகளின் எண்ணம் புரிந்த சுதா, விருந்தினர்களிடம் பேசிக் கொண்டிருந்த விபுவை அழைத்து உறங்கச் செல்லப் பணித்தார்.
அவனும் அவர்களிடம் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைய, கோபமாகக் கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஜோவிதா. அவனோ சிறு முறுவலுடன், அலுப்புத் தீரக் குளித்துவிட்டு இரவு உடை அணிந்து மனைவியின் அருகே வந்தவன், அவளைச் சீண்டாமல் படுத்துக்கொண்டான்.
தன்னிடம் பேசுவான், கொஞ்சுவான் என எண்ணியிருந்த ஜோவிதாவிற்கு ஏமாற்றமாகிவிட, தலையணையை எடுத்து அவன் முதுகில் நான்கு போடு போட்டாள். சிரித்துக்கொண்டே திரும்பியவன், தலையணையோடு சேர்த்து அவளை அணைத்துக்கொண்டான். அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு!
“என்னடி?”
“சிரிக்காதடா! வீட்ல கொஞ்சம் ஆட்கள் கூடிட்டா பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேல்ல நீ! நானும் ஈவினிங்ல இருந்து உன் கூட இருக்கணும்னு நேரத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்ததுக்கு இப்ப தான் நேரம் கிடைச்சது. சரி, வந்ததும் அம்முக்குட்டி செல்லக்குட்டி என கொஞ்சுவாய்னு பார்த்தால், குப்புற வந்து படுக்குற! வந்தவங்களை அப்படி கவனிச்சியே, பொண்டாட்டியைக் கவனிக்கணும்னு எண்ணமிருக்கா? அத்தைக்கு என் மேலே இருக்குற அக்கறை கூட உனக்கு இல்ல… போடா!” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“தினமும் தானே பொண்டாட்டியைக் கவனிச்சிட்டு இருக்கேன்? இன்னைக்கு ஒரு நாள் வந்த விருந்தாளிகளைக் கவனிச்சது குத்தமா? விருந்தோம்பல் முக்கியம் இல்லையாடி?” என அவளைப் பின்னோடு அணைத்தான்.
“அப்போ பொண்டாட்டி முக்கியம் இல்லையா?”
“பொண்டாட்டியும் முக்கியம் தான்…” என அவன் இழுக்க,
“பொண்டாட்டி தான் முக்கியம். நான் தான் உனக்கு ஃபர்ஸ்ட், அப்புறம் தான் மத்தவங்க!” என முறுக்கிக் கொண்டு சொல்ல, அவள் பால் கன்னத்தில் முத்தம் வைத்தான் விபு.
“இப்போ என் ஜோவி குட்டிக்கு என்னதான் வேணும்?” என்று கன்னத்தோடு கன்னம் வைத்து குழைய, “நீதான் வேணும்…” எனத் திரும்பி அவன் முகத்தை ஏந்தி நெற்றி, கன்னம் என முத்தமிட்டாள். “நீ யாருக்காக எந்த நேரத்தை வேணும்னாலும் கொடு! ஆனா நமக்கான இந்த நேரத்தை எப்பவும் யாருக்கும் கொடுக்கவே கூடாது. நீ எங்க இருந்தாலும், இரவு முழுக்க என்னோட தான் இருக்கணும். அதை யாருக்கும் நான் விட்டுத்தர மாட்டேன். நீயும் தரக்கூடாது” என்றாள் சன்னமாக.
அவனும் அவளை மடியில் அமர்த்தி நெற்றி, கன்னம், மூக்கு என முத்தமிட்டவன், “நமக்கான நேரத்தை எப்பவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆனா இதுல ஒருத்தருக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கே!” என்றான்.
அவளுக்கோ கோபம் சுர்ரென்று ஏற, “யாருக்கு?” என்றாள். அவனோ குறும்பாக அவளது கோபத்தை ரசித்து, கழுத்தில் முத்தம் வைத்து, மீசையால் உரசி அவள் விழிகளைப் பார்த்தபடி, “நம்ம பசங்களுக்கு!” என்றான்.
முதலில் வெட்கம் கொண்டவள், பின் அவனது கன்னத்தைப் பற்களால் கடித்துவிட்டு, “அவங்களுக்கும் கிடையாது. ஏழு மணிக்கெல்லாம் தூங்க வச்சிடணும். இந்த நேரம் என் பசங்களுக்குக் கூடக் கிடையாது, எனக்கே எனக்கு மட்டும்!” என்று சிறு குழந்தை போலப் பிடிவாதமாகச் சொன்னவளின் அழகை ரசித்தவன், அவள் கன்னக்குழியில் இதழ் பதித்தான்.
“விபு…” என்றாள்.
“ம்ம்…” என்றான் கண்களை மூடி அவளை ஸ்பரிசித்தபடி.
“ஐ நீட் யூ (I need you)…” என மோகம் ததும்பிய விழிகளோடு அவன் விழிகளைப் பார்த்த மொழிந்தவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலக்கவிட்டவன், “குழந்தை உண்டான உனக்குத்தான் கஷ்டம்டி” என்றான் குழைவாக.
“நீயும் அத்தையும் இருக்கும்போது எனக்குக் கஷ்டம் இல்லை… நவ் ஐ நீட் யூ (Now I need you)…” என்று அதே பிடியில் இருந்தாள். அவளுக்காக மனமிறங்கிய கணவன் அவளோடு இணைந்தான். அழகான கூடல் அங்கே நிகழ்ந்தது.
இங்கோ, கூரையை வெறித்தவண்ணம் உறங்காமல் விழித்திருந்தாள் ஜனனி! அவளது எண்ணம் முழுதும் நந்துவே ஆட்சி செய்துகொண்டிருந்தான். அவனுக்கு அடிபட்ட செய்தி பஞ்சுவிடமிருந்து தெரியவந்ததும் பதறித் துடித்துப் போனாள். அந்தச் செய்தியைக் கேட்ட பின் அவளால் நிலைகொள்ள முடியவில்லை.
‘அவனுக்கு ஒன்றுமில்லை’ என்று யாராவது அலைபேசி வழியே அழைத்துச் சொல்லிவிட மாட்டார்களா? இல்லை, அவனே அவளுக்கு அழைத்து ‘எனக்கு ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட மாட்டானா? என்று பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அலைபேசியைப் பரிசோதித்துக் கொண்டே இருந்தாள்.
மறுநாள் விபு வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு ஜனனியின் கேட்டரிங் உணவைத் தான் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வேலை ஒருபுறம் இருந்தாலும், நந்துவைப் பற்றிய எண்ணங்கள் தான் அவளை ஆக்கிரமித்திருந்தன. அவளது தெளிவில்லாத முகத்தைக் கண்டு வள்ளியும் நீலகண்டனும் என்னவென்று கேட்க, எதையோ சொல்லிச் சமாளித்தாளே தவிர உண்மையைச் சொல்லவில்லை.
நந்துவிற்குத் தொடர்ந்து அழைத்துச் சலித்துப் போனாள். அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே பதில் வந்தது. அவனை நேரில் பார்க்கும் வரை அல்லது அவன் குரலைக் கேட்கும் வரை அவள் மனம் அமைதியடையாது.
மறுநாள் விபு வீட்டில் உறவினர்கள் குவிந்திருந்தனர். சுதா, ஜோவியின் பெற்றோர், ஜனனியின் பெற்றோர் என முக்கியமானவர்கள் கூடியிருக்க, பெரியவர்கள் தாலியில் குண்டு, காசு கோர்த்து விபுவின் கையில் கொடுக்க, அவன் காதலோடு ஜோவியின் கழுத்தில் அணிவித்தான். சுற்றியிருந்தவர்கள் அவர்களை ஆசீர்வதித்தனர்.
பின் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மனம் அலைபாய்ந்து கொண்டிருந்ததால் ஜனனி ஒரு ஓரமாக நின்றுகொண்டாள். தன் கவனம் சிதறுவதை உணர்ந்து, தள்ளி நின்று மேற்பார்வை மட்டும் பார்த்தாள். அவளது நிலையை அங்கிருப்பவர்களுக்குப் புரியவில்லை என்றாலும், விபுவிற்கு நன்றாகப் புரிந்தது. அவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
ஜோவியின் தாய் ஜனனியின் அருகே வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் நந்துவைப் பற்றிய சிந்தனையில் உழன்றாள் ஜனனி. “ஜனனி!” என அவர் உலுக்கவே, “ஆங்… அம்மா சொல்லுங்க” என்று பதற்றமாகக் கேட்டாள்.
“நீ தானடி சொல்லணும்? உன் முகத்துல சிரிப்பைக் காணோம்… உன் நடையில துடிப்பில்லை. துறுதுறுன்னு ஓடுற ஜனனியைக் காணோமே? உன் தங்கச்சி வீட்டு விசேஷத்துல சூறாவளியா சுத்துவன்னு பார்த்தால், இப்படி ஓரமாக நிக்கிற? என்னாச்சுடாமா உனக்கு?” என அக்கறையாகக் கேட்டவரைத் தழுவிக்கொண்டு, உண்மையைச் சொல்ல வேண்டும் போலத் துடித்தது அவளுக்கு. ஆனால், தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளுக்குள் அடக்கிக்கொண்டாள்.
“எனக்கென்ன… நான் நல்லா இருக்கேன். வேலை டென்ஷன், அப்புறம் கொஞ்சம் தலைவலி. அதான் முகம் வாடியிருக்கு. மத்தபடி ஒன்னுமில்லை” எனச் சமாளித்தாள். ஆனால் அவர்கள் பார்வை அவள் சொல்வதை நம்பவில்லை என்பதை உணர்த்தியது.
அதற்குள் விபு, ஜோவிதாவிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியே செல்வதைக் கண்டு மேகவாணி மகளிடம் விசாரிக்கச் சென்றார். அந்தச் சமயம் ஜனனி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “ஜோவி! மாப்பிள்ளை எங்க போறார்?”
“வெளிநாட்டிலிருந்து அவர் பிரண்ட் (Friend) வந்திருக்காராம். அவரை ரிசீவ் பண்ணப் போயிருக்கார்” என்றாள். அதைக் கேட்டதும் மீண்டும் நந்துவின் ஞாபகம் வர, தனியாகச் சென்று மீண்டும் ஒருமுறை அழைத்துப்பார்த்தாள். அப்போதும் அதே பதில்தான் வந்தது. அவன் மீது கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.
விருந்தினர்கள் அனைவரும் வழக்கம் போல ஜனனி கேட்டரிங் உணவைப் பாராட்டிவிட்டுச் சென்றனர். ஆனால் ஜனனியோ ஒருவிதப் போலியான புன்னகையுடன் நின்றிருந்தாள். அதே நேரம், தன் நண்பனை வீட்டிற்கு அழைத்து வந்தான் விபு. ஜனனி உணவு பரிமாறும் இடத்தில் இருக்க, கூடத்தில் தன் நண்பனை அறிமுகப்படுத்தினான்.
விபுவின் நண்பனைக் கண்ட நீலகண்டனும் வள்ளியும் அதிர்ந்து போனார்கள். வந்தவன் வேறு யாருமில்லை, இளநந்தன் தான்! நீலகண்டனின் சித்தப்பா மகனின் மகன்.
நீலகண்டனின் தந்தையும் கதிர்வேலனின் தந்தையும் அண்ணன் தம்பிகள். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறால் இரு குடும்பமும் பேசாமல் பிரிந்தது. கதிர்வேலனும் நீலகண்டனும் தங்கள் தந்தைக்காக அந்தப் பிரிவை அப்படியே தொடர்ந்தனர். கதிர்வேலனின் மனைவி கமலி இறந்தபோது கூட 16-ஆம் நாள் காரியம் வரை உடன் இருந்த நீலகண்டன், அதன் பின் நந்தனை வந்து பார்க்கவோ, அவனைப் பற்றி விசாரிக்கவோ இல்லை.
நந்தனைக் கண்டதும் தான் செய்த பெரும் பாவத்தை நீலகண்டன் உணர்ந்தார். பெரியவர்கள் சண்டையில் தம்பி உறவை இழந்து, ஆதரவற்ற நின்ற தம்பியின் மகனைக் கண்டுகொள்ளாமல் விட்டது தன் வாழ்வின் தவறு என்றும், அதற்குத் தண்டனையாகத்தான் தன் மகனை இழந்து நிற்கிறோம் என்றும் அவர் மனம் கதறியது.
நெற்றியில் சிறு கட்டுடன் வந்து நின்ற தம்பி மகனைத் தள்ளாட்டத்துடன் எதிர்கொண்டார் நீலகண்டன். “நந்து!” என அவன் கன்னம் தொட்டுத் தழுவ, “என்னையெல்லாம் ஞாபகம் இருக்கா பெரியப்பா?” எனக் கேட்டான் நந்து. அந்த ஒரு வார்த்தையில் துடித்துப்போனவர், அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்டு கதறினார்.
“இத்தனை நாள் எங்கடா இருந்த?”
“துபாயில பெரியப்பா!”
“இத்தனை வருஷமா அங்கதான் இருந்தியா? இந்தியாவுக்கு வரவே இல்லையா? நீயாவது இந்தப் பெரியப்பாகிட்ட பேசி இருக்கக்கூடாதாடா?”
“யார் வாழ்க்கையிலயும் பாரமா இருக்கக்கூடாதுன்னு தான் துபாய்க்குப் போனேன் பெரியப்பா. எனக்கு இங்க யாருமில்லை, அப்புறம் எதுக்கு வரணும்னு தோணல. இப்போ வரணும்னு தோணுச்சு, வந்தேன்.”
“உனக்கு யாருமில்லைன்ற எண்ணத்தை விதைச்சதே நான் தாண்டா! உன் அப்பன் போனதும் அந்த இடத்துல நான் இருந்து உன்னைப் பார்த்திருக்கணும். நான் யாரோ போலப் போனதால, இப்போ என் பிள்ளையை இழந்துட்டு நிக்கிறேன். என்னை மன்னிச்சிடு நந்து!” என அழுதார்.
உள்ளே இருந்த ஜனனிக்கோ ‘நந்து’ என்ற பெயரைக் கேட்டதுமே இதயம் படபடத்தது. ஓடி வந்தவளுக்குப் பேரதிர்ச்சி! மாமனாருடன் பேசிக்கொண்டிருந்த நந்துவைக் கண்டதும் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. பெரியப்பாவைச் சமாதானம் செய்து கொண்டிருந்தவனின் கண்கள், தன் காதல் நாயகியின்
அதிர்ச்சி நிறைந்த முகத்தைச் சந்தித்தன
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
+1

