Loading

இதயம்-14

“வாஹினி! நீ செய்யறது ரொம்ப ரொம்ப தப்பு! எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதையும் முடிவு செய்யாதே.!”

“அப்பறம் வேற என்ன செய்ய சொல்றே ஷியாம்? இந்தப் பொம்மை கல்யாணத்தை ஏத்துக்கிட்டு வாழ சொல்றியா? நெவர், என்னால் முடியாது.!” அதீத கோபத்தில் நிதானமிழந்து கத்திக் கொண்டிருந்தாள் வாஹினி.

“வாஹினி! நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. ஏம்மா அதை வேணாம்ன்னு சொல்றே! கடவுளே அமைச்சு கொடுத்த வாழ்க்கை! அந்தப் பையனும் உன்னைப் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணியிருக்கு. இன்னும் என்ன பிரச்சனை?” பொறுமையாகவே கேட்டார் சாவித்ரி.

வாஹினியிடம் கோபமாகவோ, கட்டாயப்படுத்தியோ காரியம் சாதிக்க முடியாதென்பது சாவித்ரிக்கு தெளிவாக தெரிந்திருந்தது. அவர் பேச்சிலிருந்த நிதானமும் பொறுமையும் வாஹினியிடமும் ஓரளவிற்கு நிதானத்தைக் கொண்டு வந்திருந்தது.

“அவனுக்குப் பிடிச்சா போதுமா? எனக்கு பிடிக்கணுமே ஆன்ட்டி? நான் ஒண்ணும் ஜடம் இல்லையே! எனக்குன்னு மனசு இருக்கக் கூடாதா? எனக்குன்னு விருப்பம் இருக்கக் கூடாதா? இது தான் விதின்னு இந்தக் கல்யாணத்தை என்னால் ஏத்துக்கிட்டு அவன் கூடப் போய் வாழ முடியாது!” கோபத்திலும் கூட அசாத்தியமான நிதானம் அவளிடமிருந்தது.

“போகப் போகப் பிடிச்சிடும் வாஹினி மா! அதற்காக இந்தக் கல்யாணத்தை முறிச்சுக்கணும்ன்னு நீ நினைக்கிறதெல்லாம் ரொம்ப தப்பு! எனக்கு என்னவோ இது சரின்னு தோணலை. உனக்கு யாரைப் பிடிக்கும். எப்படிப் பட்டவனைப் பிடிக்குன்னு சொல்லு உடனே உனக்குப் பிடிச்சவனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம். ஆனால், ஒண்ணு மட்டும், உண்மையாய் உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு, இன்னொருத்தன் உன் கழுத்தில் தாலி கட்டும் அந்த நொடி, ஆதனின் முகம் உன் மனசில் வராமல் போய்டுமா?” சாவித்ரி கேட்டதும் திடுக்கிடலுடன் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் வாஹினி. மனத் திரையில் நொடிக்கும் குறைவான நேரம் ஆதனின் முகம் மின்னி மறைந்தது.

“எனக்கு கல்யாணமே வேணாம் ஆன்ட்டி! எனக்கு அது பிடிக்கலை. நான் நானாய் இருக்கணும்ன்னு விரும்புறேன். இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டால் நான் நானா இருக்க முடியாது.!”

“இங்கே பாரு வாஹினி! அம்மா சொல்றது தான் சரி, நீ ஏடாகூடமாய் எதையாவது செஞ்சு, உன் வாழ்க்கையை நீயே காம்ப்ளிகேட் பண்ணிக்காதே! அவ்வளவு தான் சொல்ல முடியும்.!” வயதில் பெரியவங்க நம்ம நல்லதுக்குத்தான் சொல்வாங்க! புரிஞ்சுக்கோ!”

“ஆன்ட்டி! என் மேல் இருக்கிற அக்கறையில் சொல்றாங்கன்னு எனக்கு புரியுது. ஆனால், நீங்க என்ன சொன்னாலும் என் மனசு எத்துக்க மாட்டேங்குது.!” பிடித்த பிடியில் உறுதியாய் நின்றாள் வாஹினி.

“ஷியாம்! நீ அவளை அவள் போக்கில் விடு. நாம என்ன சொன்னாலும் அவள் கேட்கப் போறதில்லை. நாம அவளுக்கு துணையாய் இருப்போம். என்ன நடக்குதோ நடக்கட்டும்!” எனச் சொல்லிவிட்டு சாவித்திரி உள்ளே சென்றுவிட, வாஹினியைக் கேள்வியாய் பார்த்தான் ஷியாம்.

“இப்போ என்னதான் செய்யணும்ங்கிறே? சொல்லு!” தன் தோழி இந்த வாழ்க்கையை உதறுவதில் துளி விருப்பமில்லை அவனுக்கு. ஆனாலும், அவர்களுக்கிடையே இருந்த நட்பு, அவளுக்கு ஆதரவாய் அவனை நிற்க வைத்தது. இது தானே உண்மையான நட்பு. தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை, தான் சொன்னதைக் கேட்கவில்லை என நினைத்து, அவள் மீது கோபப்படாமல், அவள் மனநிலையையும், சூழ்நிலையையும் புரிந்துக் கொண்டு அவளுக்கு உறுதுணையாய் நிற்கிறானே, இது தான் உண்மையான நட்பு.

இன்பத்தை இரட்டிப்பாக்கி, துன்பத்தை பாதியாய்க் குறைப்பது தானே நட்பு. அவளின் துன்பம் அவனுக்கும் துன்பம் தானே? அவளின் ஜீவினில்லா முகத்தை அவனால் கண் கொண்டுப் பார்க்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாய், இந்தத் திருமணத்தை, ஏற்க விடாமல், அவள் மனதைக் கரையானாய் அரித்துக் கொண்டிருக்கும் காரணம் என்னவென்று அவனுக்குத் தெரியுமே..

இதுவரை அவன் யாரிடமும், அந்தக் காரணத்தைப் பற்றி சொன்னதுமில்லை, வாஹினியிடம் அதைப் பற்றிக் கேட்டதுமில்லை. நண்பணின் ரகசியங்கள் வாழ்நாள் முழுதும் வெளிப்படுத்தாது இருப்பவன் தானே நல்ல நண்பன்.

தனக்கென்று கூட்டம் சேர்த்துக் கொண்டு, நம்பிச் சொன்ன ரகசியங்களைக் கடைபரப்பி, இன்பம் காணுபவன் துரோகி. ஷியாம் நல்ல நண்பனாய் இருந்தான்.

“எனக்கு போலிஸ் ஸ்டேஷன் போகணும் ஷியாம்!” துளி தயக்கமில்லாமல் சொன்னாள் வாஹினி.

“இங்கே பாரு வாஹினி! நீ செய்யறது எதுவுமே எனக்குப் பிடிக்கலை. ஆனாலும் நான் உனக்காக வர்ரேன். இன்னொன்னும் தெளிவா சொல்லிடுறேன். போலீஸ் ஸ்டேஷன் போய், நாம எதுவும் சாதிக்கப் போறதில்லை. என்னைப் பொருத்தவரை, அங்கே போவது கால விரயம் மட்டும் தான்.!”

“நெகட்டிவ்வா பேசாதே ஷியாம்! கண்டிப்பா நான் நினைச்சது நடக்கும்.!”

“உன் கிட்டே தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினாங்களே, அந்த பரதேசிங்க மேலே கம்ப்ளைண்ட் கொடுக்கவே நமக்கு ஆதனோட உதவி தேவைப்பட்டது. இப்போ ஆதன் மேலேயே கம்ப்ளைண்ட் கொடுக்கணும்ன்னு சொல்றே, இது நடக்குமா? நீயே யோசிச்சு பாரு வாஹினி!”

பொறுமையாகவே சொன்னான் ஷியாம். எப்படியாவது மனம் மாறி, இந்த வாழ்வை ஏற்றுக் கொள்ள மாட்டாளா? என்ற ஏக்கம் அவன் மனம் முழுதும் விரவிக் கிடந்தது.

“நீ என்னை திசை திருப்ப முயற்சிக்கிறியா ஷியாம்? எனக்கு இந்தக் கல்யாணம் கட்டுப்பாடெல்லாம் வேணாமே? ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! நீயே என்னைப் புரிஞ்சுக்கலைன்னா, என்னை யார் புரிஞ்சுப்பா?” தைரியமாய் பேசுவது போல் காட்டிக் கொண்டாலும், வாஹினியின் குரலிலிருந்த தடுமாற்றத்தை தெளிவாகவே அவனால் உணர முடிந்தது.

“ஐ அம் ஆல்வேஸ் பீ வித் யூ வாஹினி! இப்போ என்ன போலீஸ் ஸ்டேஷன் போகணும் அவ்வளவு தானே? போகலாம் வா!” எனச் சொன்னபடியே அவன் அவள் கரத்தினில் தந்த அழுத்தம் அவள் மனதிற்குள் தைரியத்தை விதைத்தது.

‘இவன் என் நண்பேன்டா!’ மனம் தன்னால் மெச்சிக் கொண்டது.
உண்மையான நட்பு என்பது இது தான். உண்மையான நட்பு, துரோகம் செய்யாது, உள்ளொன்று வைதத்து புறமொன்று பேசாது.

உன்னைப் பற்றி வேறிடத்தில் கோள் சொல்லாது. உண்மையான நட்பு மலை முகட்டின் மீது வீசும் நச்சு கலக்கா தூய்மையான காற்றைப் போன்றது. தூய்மையான காற்று எப்படி உள்ளத்திற்கும் உடலுக்கும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் தருமோ, அதே போலத்தான் நட்பும். காற்று தூய்மையானது சேரும் இடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும். மலைமேல் வீசும் காற்று தூய்மையாய் இருக்கிறது. மணல் மேல் வீசும் காற்றோ புழுதியாய் மாற்றம் பெறுகிறது. நட்பும் அது போலத்தான் சேரும் இடத்தைப் பொருத்தே நல்ல நட்பாகவும், தீய நட்பாகவும் மாற்றம் பெறுகிறது.

ஒருவேளை ஒரு நண்பனை விட்டு விலகுவதில் கஷ்டமோ துன்பமோ இருக்கவில்லையென்றால், ஒன்று அந்த நட்பு ஆத்மார்த்தமானது அல்ல, இன்னொன்று அந்த நட்பைப் பிரியும் வலியை விட, அந்த நட்பால் நீங்கள் அதிகம் காயப் பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஆனால், இங்கே வாஹினிக்கும், ஷியாமிற்குமான நட்பு, ஆத்மார்த்தமானது. உண்மையானது. எதையுமே எதிர்பாராதது, தன்னலமில்லாதது. தேவைக்காக மட்டுமே பழகும் நட்புகளின் நடுவே ஷியாம் வாஹினியின் நட்பு அதிசயத்திலும் அதிசயம் தான்.

******

கொஞ்ச நாட்களுக்கு முன் வந்திருந்த அதே காவல் நிலையம். அதே வயதான காவல் ஆய்வாளர். நெற்றிச் சுருக்கத்தோடு, இருவரையும் உற்றுப் பார்த்துக் கொண்டே வெண்சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தார்.

“இப்போ என்னம்மா? அன்னைக்கு பெரிய ஆளை வச்சு கம்ப்ளைண்ட் கொடுத்தே! ஆனால், அரைமணி நேரம் கூட, அவன்களை உள்ளே பிடிச்சு வைக்க முடியலையே? இப்போ என்னம்மா கம்ப்ளைண்ட்? திரும்பவும் அந்தப் பசங்க உன் கிட்டே வம்பு பண்ணினாங்களா?” அவரின் குரலில் கொஞ்சம் அதிகமாகவே எகத்தாளம் வழிந்தது.

“என் விருப்பமில்லாமல், என்னைக் கல்யாணம் பண்ணிக்கிடவன் மேலே கம்ப்ளைண்ட் கொடுக்கணும்!” வாஹினியின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெறித்தது.

“என்னம்மா! இந்த உலகத்தில் வேற பொண்ணே இல்லையா? உன்கிட்டே மட்டும் எவனாவது தப்பா நடந்துக்கறான், உன்னை மட்டும் எவனாவது, கட்டாயக் கல்யாணம் பண்ணுறான். எதாவது கதை புதகம் படிச்சுட்டு வந்து கதை விடுறியா?”

“சார்! பொய் சொல்லிட்டு போலீஸ் ஸ்டேஷன் வரணும்னு எங்களுக்கு ஒண்ணும் அவசியமில்லை. இப்போ கம்ப்ளைண்ட் எடுத்துப்பீங்களா? மாட்டீங்களா?” அமர்த்தலாகவே கேட்டான் ஷியாம்.

“சரிம்மா! யார் மேலே கம்ப்ளைண்ட் கொடுக்கணும்? ஆதாரம் எதாணும் வச்சிருக்கியா?”

“கல்யாணம் நடந்தது ரிஜிஸ்டர் ஆஃபீஸில் தான். ஸோ வீடியோ ஆதாரமே இருக்கு.!” அவசரமாய் தன் நண்பன் மூலமாக, சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளின் காணொலியை பென் ட்ரைவில் அடைத்து வாங்கி வந்திருந்தான் ஷியாம்.

“யாரு மேலேம்மா கம்ப்ளைண்ட்?” பென் ட்ரைவை தன் கரத்திலிருந்த கணிணியில் சொருகியபடியே கேட்டார் ஆய்வாளர்.

“நளபாகத்தோட சி.இ.ஓ ஆதன் ரித்விக் மேலே தான் கம்ப்ளைண்ட் கொடுக்கணும்!”

“சின்ன இடத்திலெலல்லாம் உங்களுக்கு தகராறு வராதோ? தேடித் தேடி பெரிய இடமா பிடிப்பீங்க போல? மினிஸ்டர் பையன்னு தெரிஞ்சு தான் கம்ப்ளைண்ட் கொடுக்கிறியாம்மா? போன தடவை சாட்சி சொன்னவர் மேலேயே கம்ப்ளைண்ட்டா? எல்லாம் கொஞ்சம் அழகா இருக்கோம்ங்கிற திமிரு!” என அவர் சொல்ல, கோபத்தில் பற்களை நறநறத்தாள் சிம்மவாஹினி.

எதிரில் அமர்ந்திருக்கும் காவலரைக் கொன்று போட்டுவிடும் அளவிற்கு கோபம் வந்த போதிலும், சூழ்நிலைக் கருதி அமைதி காத்தாள் அவள்.

“இங்கே பாரு ஷியாம்! இந்த ஆள் ரொம்ப பேசறார்! இதே போலவே பேசினார்ன்னு வை, நான் சும்மா இருக்க மாட்டேன்!” முணுமுணுப்பாய் ஷியாமின் காதுக்குள் சொன்னவளை,

“நமக்கு காரியம் ஆகணும்னா அமைதியாகத் தான் இருக்கணும். இந்த விஷயத்தில் பொறுமை ரொம்ப அவசியம். ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாய் இரு வாஹினி!” நண்பனின் கெஞ்சலிலும், சூழ்நிலைக் கருதியும் இழுத்துப் பிடித்த பொறுமையோடு அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“ஏம்மா! நல்லா ஈஈஈன்னு பல்லைக் காட்டிட்டு தானே கல்யாணம் பண்ணியிருக்கே! இதில் எங்கே விருப்பமில்லாமல் தாலி கட்டின மாதிரி இருக்கு? உங்களுக்கெல்லாம் எங்களைப் பார்த்தால் விளையாட்டாய் இருக்கா? எங்க நேரத்தை இப்படி வீணடிக்கிறதும் குற்றம் தான் தெரியுமா?” எனச் சொன்னவர், அந்த மடிக்கணிணியின் திரையை இவள் புறமாய் திருப்பினார்.

“நான் வாங்கற சம்பளத்திற்கு, என் சொந்த லேப்டாப்பில் போட்டுப் பார்த்தெல்லாம் டீல் பண்ண வேண்டியிருக்கு. உண்மையான கம்ப்ளைண்ட்டா இருந்தாலும் பரவாயில்லை, எல்லாம் ஃப்ராடுகளா வந்து வாய்க்குது! கம்ப்ளைண்ட் கொடுக்க வர்ரவங்களைத் தான் முதலில் உள்ளே பிடிச்சு போடணும்!” அந்தக் காவல் ஆய்வாளர் புலம்பிக் கொண்டே இருக்க, கணிணி திரையில் தெரிந்தவற்றைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் வாஹினியும், ஷியாமும்.

அந்தக் காணொலியில், ஆதனும் வாஹினியும் ஜோடியாக சிரித்தபடி கையெழுத்திடுவதும், கடைசியாய் தாலி கட்டும் போது, வாஹினி தன் கழுத்தின் குறுக்கே இருந்த ஆதனின் கரத்தினைப் பற்றியிருப்பது மட்டும் தான் இருந்தது.

அவனின் கையை விலக்க முயன்றபடி அண்ணாந்து அவன் முகத்தைப் பாப்த்தபடி அவள் நின்றிருந்த தோரணை நிஜமாகவே அவள் அவனைக் காதலுடன் நோக்குவது போலத்தான் இருந்தது. அவளின் முழு முகம் தெரியாது கண்கள் மட்டும் தெரிந்ததால், கட்டாயமாய் அவன் தாலி கட்டுவதைப் போல் தெரியாமல், இயல்பாகத்தான் தெரிந்தது.

“ம்ப்ச்! இது க்ளியரா இல்லை சார்! முழு வீடியோவையும் பாருங்க ப்ளீஸ்..!”

“முழு வீடியோ எங்கம்மா இருக்கு? நீங்க கொடுத்த பென் ட்ரைவில் இருந்தது இது மட்டும் தான். உங்களுக்குள்ளே இருக்கிற பர்ஸ்னல் வென்ஞன்ஸை தீர்த்துக்கணும்னா, வேற எதாவது பண்ணுங்க! எங்க நேரத்தை வீணாக்குறீங்க? போங்க போய் வேலையைப் பாருங்க!” எனச் சொன்னவர், கடைசி இழுப்பை இழுத்துவிட்டு, வெண் சுருட்டைக் குப்பையில் வீசினார்.

“சரியா செக் பண்ணி தானே வாங்கிட்டு வரச் சொன்னேன் ஷியாம்? இதில் பாதி தான் இருக்கு.!”

“இதை வாங்குறதுக்குள்ளேயே, நிறைய பேரை ஸ்பெஷலா கவனிச்சு வாங்கிட்டு வந்திருக்கேன்! இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் வாஹினி! அவங்களுக்குத் தேவையானதை, சாதகமானதை மட்டும் தான் வச்சிப்பாங்க! இனிமே எங்கே போய் கேட்டாலும் ஒரிஜினல் வீடியோ கிடைப்பது ரொம்பவே கஷ்டம் தான்.!”

“அதுதான் தம்பி இத்தனை தூரம் சொல்லுதேம்மா! நீங்கே எங்கே போனாலும் வேலை நடக்காது. வேற வேலை எதாவது இருந்தால் போய் பாருங்க!” பென் ட்ரைவை மேஜையின் மீது நகர்த்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார் அந்தக் காவல் ஆய்வாளர்.

“ம்ப்ச்! என்னடா இப்படி ஆகிடுச்சு?”

“நான் தான் முன்னவே சொன்னேன்ல வாஹினி, நம்மை ஸ்டேஷனுக்குள்ளே விட்டதே அதிசயம் தான். கம்ப்ளைண்ட் எல்லாம் எடுக்க மாட்டோம்ன்னு மூஞ்சியில் அடிச்ச மாதிரி சொல்லாமல், கொஞ்சம் டீசண்ட்டா சொல்லிருக்காங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கோ! இதெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சு, எதிர்பார்த்து தானே வந்தோம், எல்லாம் தெரிஞ்சும், இப்படி ஆகிடுச்சேன்னு வருத்தப்படறது முட்டாள் தனம் வாஹினி.!”

“எல்லாமே புரியுது ஷியாம்! எனக்கு எல்லாமே புரியுது. என் மூளை சொல்லுது, நீ எங்கே போனாலும் காரியம் நடக்காதுன்னு உறுதியாய் சொல்லுது. ஆனால், என் மனசு கேட்க மாட்டேங்குதே நான் என்ன பண்ணட்டும் ஷியாம்? அவன் இஷ்டத்திற்கு என் வாழ்க்கையை கையிலெடுத்து விளையாடுறான். அவன் தாலி கட்டிட்டா, அவன் சொல்றதைக் கேட்டுடணுமா? எனக்குன்னு மனசு இல்லையா? எனக்குன்னு ஆசைகள் இருக்கக் கூடாதா? இது என் வாழ்க்கை ஷியாம், எனக்கு பிடிச்சபடி அமைச்சுக்கிறதுக்கு எனக்கு உரிமையில்லையா? பொண்ணா பிறந்தாலே இன்னொருத்தரை நம்பி தான் இந்த பூமியில் இருக்கணுமா என்ன? எனக்கு இது சுத்தமாய் பிடிக்கலை ஷியாம்.” மனதில் அழுத்திக் கொண்டிருந்த அத்தனையையும் உணர்ச்சிப் பெருக்கில் உளறியிருந்தாள் வாஹினி.

அவள் மனது அவனுக்குத் தெரியும் தான். தனிமையை விரும்புவதிலிருந்து, திருமணம் வேண்டாம் என்றது வரை, அவளின் மனதை ஓரளவிற்கு அனுமானித்திருந்தான். ஆனால், அவள் வாயிலாகவே அவள் மனதிலுள்ளவற்றை அவன் முதன்முறையாய் கேட்பது இப்போது தான்.

“இங்கே பார் வாஹினி! உனக்குப் பிடிக்கலைன்னா வேணாம்! விட்டுடலாம்! நீ அங்கே போகவே வேணாம். ஏன்னா உண்மையான நண்பனா, உன் விருப்பம் தான் என் விருப்பம். உனக்கு விருப்பமில்லைன்னா வேணவே வேணாம். நீ எப்போவும் போல, நம்ம வீட்டிலேயே இரு! ஆனால், உடன் பிறவா சகோதரனாய், என் மனசு நீ நல்ல வாழ்க்கையை உதறிடக் கூடாதேன்னு பதறுது. எப்படியாவது ஆதன் கூட சேர்ந்திட மாட்டியான்னு மனசு ஏங்குது. நான் அப்படி நினைக்கிறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, ஏற்கனவே அந்த ஆகாஷும் அவன் ஃப்ரெண்ட்ஸும் உன்மேல் கோபத்தில் தான் இருப்பாங்க! எப்போ வேணும்ன்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கலாம். ஆனால், அதுவே நீ ஆதன் கூட இருந்தால் நான் எதுக்கும் பயப்பட வேண்டியதில்லை. எனக்கு உன்னோட பாதுகாப்பு ரொம்பவும் முக்கியம் வாஹினி.!”

“என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும் ஷியாம்! அதுக்காக அவன் கூடப் போய் இருக்க சொல்றியா? என்னால் முடியாது டா!”

“இந்த சூழ்நிலையில் உன் அப்பா அம்மா இருந்து, அவங்க சொல்யிருந்தால் நீ கேட்டுருப்பியோன்னு தோணுது வாஹினி. நான் சொல்றதால் தானே கேட்க மாட்டேங்கிறே? நான் வெறும் நண்பன் தானே? உன் அப்பா, அம்மாவுக்கு நான் சமமாக முடியுமா?” நிஜமான வருத்தம் தெரிந்தது ஷியாமின் குரலில்.

“ஏய்! லூசு மாதிரி பேசாதேடா! நீ இல்லைன்னா, இந்த நிமிஷம், இந்த நொடி நான் உன் முன்னால் நின்னு இப்படி பேசிட்டு இருந்திருக்க மாட்டேன்டா! நீ இல்லாமல் இந்த வாஹினி இல்லை டா ஷியாம்!” குரல் நடுங்க, அவள் அழுகையை விழுங்க சிரமப் படுவது அவனுக்குப் புரிந்தது.

“ஹேய்! ஒண்ணுமில்லை! நீ ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதே! எல்லாம் சரியாகிடும்! இப்போ அடுத்து என்ன பண்ணலாம்ன்னு சொல்லு!” தோழிக்காக, அவள் விரும்புவதையே கொடுக்க முன்வந்தான் ஷியாம்.

“நான் ரொம்ப குழம்பிப் போய் இருக்கேன்டா! தலை வலிக்குது! இப்போதைக்கு எனக்கு டீ வேணும்!” நெற்றிப் பொட்டை அழுத்திய படியே அவள் சொன்ன நொடி, ஆதனின் முகம் அவள் மனக்கண்ணில் தெரிய விதிர்விதிர்த்துப் போனாள் பெண்!

சாதாரண தேநீர் என்ற வார்த்தை அவனை நினைவுபடுத்தித் தொலைத்தது. அவனை, அவன் முகத்தை, அவன் இவளுக்கும் சேர்த்துச் சொல்லும் தேநீரை. இவள்மூலமாய் அவன் பட்ட காயங்களை, கழுத்து வளைவை உரசி, செவி மடலோரம் அவன் ஒதுக்கிய கேசக் கற்றையை.. எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாய் ஒரே நேரத்தில் நினைவுபடுத்தியது அவள் உச்சரித்த “டீ” என்றை ஒற்றை எழுத்து. சில விநாடிகள் அசையாமல் நின்றவளை,

“ஏய்! வாஹினி! டீ கேட்டியே, வா போகலாம்!” என்ற ஷியாமின் குரல் நடப்பிற்குக் கொண்டு வந்தது.

“இல்லை வேணாம்! எனக்கு டீ வேணாம்! நாம போகலாம்!”

“எங்கே?”

“ஏதாச்சும் பெரிய லாயரா போய் பார்க்கலாம்!”

“எதுக்கு வாஹினி?!” குழப்பமும் பதற்றமும் ஒருசேர குடியேறியிருந்தது ஷியாமின் குரலில்.

“டிவோர்ஸ் அப்ளை பண்ணிடலாம் ஷியாம்! வேணாம் இது எனக்கு வேணாம்! இந்த உறவின் சுமையை என்னால் சத்தியமாய் தாங்க முடியாது!” எனச் சொன்னவளின் விழிகளில் தெரிந்த தீர்க்கம் ஷியாமை ஒருநொடி ஆட்டித்தான் பார்த்தது.

தன் தோழியின் முகத்தில் தெரிந்த உறுதியில், உள்ளத்தைப் பயம் கவ்வ, கிடைத்த நல்ல வாழ்க்கையைக் கோட்டை விட்டுவிடுவாளோ? என்ற சந்தேகம் எழ, செய்வதறியாத குழப்பமான மனநிலையோட தோழியைப் பின் தொடர்ந்தான் ஷியாம்..!

இசைக்கும்..✨

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. வாஹினி ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கா? ஆதன் எங்க போனான், ஆளையே காணோம்..

    1. Author

      ஆதன் அடுத்த எபியில் வருவான் டியர் மா. வாஹினியின் செயல்களுக்கான காரணம் பின்னால் வரும். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤

    1. Author

      தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா ❤