Loading

12

 

“ஒரு வாரமாச்சு… இன்னுமா என் பொண்ணு பத்தி எந்தத் தகவலும் வரல?” என்று ராமராஜன் வருத்தமாய்க் கேட்க,

 

அவருக்கு என்ன பதில் கூறுவதென்று யாருக்கும் தெரியவில்லை.

 

சிவகாமி மற்றும் ராஜேந்திரன், மகனின் பள்ளி மற்றும் தங்கள் வேலை காரணமாக, மனமே இல்லாமல் சொந்த ஊர் திரும்பியிருந்தனர்.

 

தோழிகள் மூவரையும் சிவகாமி எவ்வளவோ அழைத்தும், அவர்கள் வருவதாக இல்லை. மகளின்றி செல்ல மனமில்லாமல் சுந்தரும் பிரபாவும் தங்கிவிட, சுந்தர் மட்டும் நாளை ஊர் திரும்புவதாக முடிவு செய்திருந்தார்.

 

சுடருக்கு அவன் உயிரே அவனிடம் இல்லை… எப்படியாவது விஷ்ணுப்ரியா கிடைத்துவிட மாட்டாளா என்று, தினமும் காட்டுப் பகுதியை ஒட்டியிருக்கும் ஊர் பகுதிகளுக்குச் சென்று, அவள் புகைப்படத்தைக் காட்டி அங்குள்ளவர்களிடமெல்லாம் விசாரிக்கின்றான். ஆனால் ஒரு பயனும் கிட்டியதாக இல்லை.

 

அந்த மாளிகையின் தோட்டத்தில் பித்து பிடித்தவனைப் போல் வானம் வெறித்தபடி சுடரொளிவானன் அமர்ந்திருக்க, அவன் அருகே அமைதியாக வந்தமர்ந்தாள், ப்ரீத்தி.

 

அவள் அரவம் உணர்ந்தும் அவன் திரும்பவில்லை… அவன் கண்ணோரத்திலிருந்து கண்ணீர் கோடாக வழிந்தது.

 

அவன் தோளில் மிக மென்மையாய்க் கரம் பதித்தவள், “விஷ்ணு கண்டிப்பா கிடைப்பா” என்றாள்.

 

மனம் தாளாமல் அவளை இழுத்து அணைத்தவன், கதறியழத் துவங்கியிருந்தான்.

 

அவன் அழுகையில் உடலும் உள்ளமும் பதறிப்போனாள், பேதை…

 

“ப்பா.. ஏங்க.. ஒன்னுமில்ல” என்று அவனை ஆற்றுப்படுத்த அவள் முயற்சிக்க,

 

“செத்துடலாம் போல இருக்கு ப்ரீத்தி” என்று கதறினான்.

 

அவன் வார்த்தைகளில் துடிதுடித்துப் போனாள். மனம் கொண்டவன், தன்னை மாய்த்துக் கொள்ள நினைப்பதும் தான் கோதையவளுக்கு எத்தனை கசப்பான வார்த்தைகள்? உயிர் உருகித் தவித்தாள்.

 

“என்னப்பா இப்படி பேசுறீங்க? ப்ளீஸ்.. விஷ்ணு கண்டிப்பா கிடைப்பா. நீங்களே இப்படி உடைஞ்சு போனா எப்படி? மாமாவுக்கு யாரு ஆறுதல் சொல்லுவா?” என்று அவள் அழுகையோடு கேட்க,

 

“என்னனு சொல்லச் சொல்ற ப்ரீத்தி? உங்க பொண்ணை கூட்டிட்டுப் போய் தொலைச்சுட்டேன். எப்படிக் கிடைப்பானு தெரியல. கிடைப்பான்னு நம்ப மட்டும் செய்வோம்னா?” என்று கதறினான்.

 

“நீங்க என்னங்க பண்ணுவீங்க?” என்று கேட்டவள், “எல்லாருக்கும் கஷ்டமாதான் இருக்கு. ஆனா அழுறதால எதுவுமே ஆகாது. நாம வேற ஏதாவது முயற்சி செய்வோம். பிரம்மா அவளுக்குத் தெரிஞ்ச சர்க்கிள்ல எல்லாம் விஷ்ணு பிக் அனுப்பி விசாரிக்கிறா. அப்படி நாமளும் ஏதாவது தேடுவோம்” என்று கூற,

 

“அதுக்குத்தான் டெய்லி அங்க இருக்க சின்னச் சின்ன ஊருக்குலாம் போய் தேடுறேன்.. யாராவது ஒருத்தராவது அவளைப் பார்த்தேன்னு சொல்லிட மாட்டாங்களான்னு தவிச்சுப் போயிருக்கேன்” என்று கதறலாய் கூறி அவள் மடிசாய்ந்து அழுதான்.

 

‘அழாதப்பா..’ என்று மனதோடு தன்னவனுக்காக வருந்திய ப்ரீத்தி, வானை நோக்கி, ‘எப்படியாவது விஷ்ணுவைக் கண்டுபிடிச்சுடு கடவுளே’ என்று வேண்டுதல் வைக்க, அதிகாலை வானில் திடுமென இடியும் மின்னலும் தோன்றி மறைந்தது.

 

அந்தக் காட்டுப் பகுதியில், குகைக்குள், “ஆ…” என்று கத்திக் கொண்டிருந்தாள், விஷ்ணுப்ரியா.

 

அவளைத் தன் தோளோடுத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, “ஷ்ஷ்.. ஷ்ஷ்.. ஈஸி ஈஸி..” என்றவன் கூற,

 

“வலிக்குது..” என்று கத்தினாள்.

 

“அவ்ளோதான் மை கேர்ள்..” என்றவன், அவளது கையில் தையல் பிரிந்து ரத்தம் சிந்திய காயத்தில் மருந்திட்டான்.

 

கண்ணீரோடு அவன் மார்பில் சாய்ந்து கதறியவள், மெல்ல மெல்ல வலி மட்டுப்பட்டு ஓய்ந்தாள்.

 

அவள் பெருமூச்சும் அவன் இதயத்துடிப்பும் இணைந்து அவ்விடத்தில் இன்னிசை மீட்டியது..

 

அவளைத் தூக்கி அமர்த்தியவன், அவளுக்கான மருந்துகளை எடுத்துவர, “இ.. இதெல்லாம் உனக்கு எங்க கிடைச்சுது?” என்றாள்.

 

“கேள்வி கேட்காம இருக்கவே மாட்டியா?” என்று அவன் கேட்க,

 

“எதுக்கும் நீ பதில் சொல்லவே மாட்டியா?” என்று பதில் கேள்வி கேட்டாள்.

 

அதில் அவன் சிரிக்க, அவளுள் ஏதோ மின்சார உணர்வு…

 

“எனக்கு உன்னை முன்னவே தெரியுமா?” என்று அவள் கேட்க,

 

“இருக்கலாம்..” என்றான்.

 

“புதிராவே பேசுறியே.. பதில் சொல்ல மாட்டியா? சரி நீ ஏன் பச்சையா இருக்க? பெயின்ட் கொட்டிடுச்சா?” என்று கேலிக்கெல்லாம் இல்லை. உண்மையிலேயே அதுதானோ என்ற யோசனையோடுதான் கேட்டாள்.

 

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டபடி எழுந்தவன், “ஹ்ம்.. சில வருஷம் முன்ன.. திரும்ப எப்படி எடுக்குறதுன்னு தெரியாம இருக்கேன்” என்று கூற,

 

“டெர்மடாலஜிஸ்ட் யாரையாவது போய் பார்த்திருக்கலாம்ல?” என்றாள்.

 

இந்த ஒரு வார காலமும், தன்னை அவன் பார்த்துக் கொள்ளும் விதத்திலும், அவன்மீது தனக்கெழும் வித்தியாசமான உணர்வுகளிலும், அவன்மீதான கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கை ஒன்று அவளுக்குத் தோன்றியிருந்தது. எப்படி என்று அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை..

 

அவள் அருகே வந்தவன், அவளைத் தன் கரங்களில் அள்ளிக் கொள்ள, அவள் உடல் அதிர்ந்து அடங்கியது.

 

“எ..என்னப் பண்ற?” என்று அவன் கேட்க,

 

“ஒரு வாரமா நீ குளிக்கலை” என்றான்.

 

“அ..அதுக்கு?” என்று அவள் பதற,

 

“ஷ்ஷ்..” என்றது அவனது பிரத்யேக ஓசை.

 

“ப..ப்ளீஸ்.. வேணாம்.. எ..என்ன விட்று..” என்று அவள் பயத்தோடு கூற,

 

அவளைத் தூக்கிக் கொண்டு, பாறைகளைத் தாண்டி ஒரு இடத்திற்குச் சென்றான்.

 

பாறைகளும், மரக்கிளைகளும் கொண்டு, சின்னச் சின்ன மலைமேடுகளுக்கு இடையே, ஒரு மறைவிடத்தை அமைத்திருந்தான்.

 

உள்ளே அவளை பாறை ஒன்றின் மீது அமர்த்தியவன், தான் மூட்டிய விறகின் மேல் கொதித்துக் கொண்டிருந்த ஆற்று நீரைக் கண்டான்.

 

சென்று ஒரு மரக்கலத்தில், குளிர் நீர் எடுத்து வந்தவன், இரண்டையும் கலந்து, சூடு பொருக்கும் அளவில் கொண்டு வந்து, தனது முழங்கையை அதில் மூழ்கச் செய்து, சூடு சரியாக உள்ளதா என்று பரிசோதித்தான்.

 

அவள் கரத்தினையும் நீரைத் தொட்டுப் பார்க்கச் செய்து, “ஓகேவா?” என்றான்.

 

பாவையின் பார்வையெல்லாம் அவனில்.

 

“உன்னைத் தான் கேட்குறேன்” என்று அவன் கேட்க,

 

“எங்கம்மா மாதிரி பண்ற நீ. இப்படித்தான் வெந்நீர் வச்சுட்டு அவங்களும் செக் பண்ணுவாங்க” என்று கூறினாள்.

 

“யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணுவாங்க. இந்த சூடு உனக்கு ஓகேவா?” என்று அவன் கேட்க,

 

‘ம்ம்..” என்றாள்.

 

“ஓகே.. கால்ல வீக்கமெல்லாம் வந்திடுச்சு. இன்னும் கொஞ்சம் பெயின் மட்டும் இருக்கு. காயத்துக்கெல்லாம் அப்ப அப்ப தண்ணி, மருந்து எல்லாம் வச்சு க்ளீன் பண்ணிட்டுத்தான் இருந்தேன். பட் நீயே குளிக்கிறப்போல ஹைஜீனா அது இருக்காது. சோ நல்லா குளிச்சுட்டு வா. அதுல குப்பைமேனி செடியை அரைச்சு வச்சிருக்கேன். யூஸ் பண்ணிக்கோ” என்று கூற,

 

“எனக்கு டிரஸ்?” என்றாள்.

 

“ஷ்ஷ்.. உன்னோட ஒரே ரோதனையா இருக்கு. டிரஸ்ஸு டிரஸ்ஸு டிரஸ்ஸுனு.. போட்டுத்தான இருக்க? குடுக்காமத்தான் போட்டிருக்கியா இதை? தருவேன்..” என்று கடுப்பாக அவன் கூற,

 

“லிசன்.. நான் ஒரு பொண்ணு.. இப்படித் தன்னந்தனியா அரைகுறை உடையில உன்கூட இருக்குறதோட சங்கோஜம் உனக்கு சொன்னாலும் புரியாது. நீ புரிஞ்சுக்கவும் வேணாம். என் உணர்ச்சிகளை கிரிட்டிசைஸ் பண்ணாம டிரஸ்ஸ எடுத்துட்டு வா” என்றாள்.

 

“இல்ல எனக்குப் புரியல.. உனக்கு அரைகுறை டிரஸ்ஸா போட்டு விட்டிருக்கேன்? ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனா இதைத்தான் போட்டுவிடுவாங்க” என்று அவன் கூற,

 

“இது ஆஸ்பிடலும் இல்ல நீ டாக்டரும் இல்ல” என்றவள், “ஒரு நிமிஷம்.. போட்டு விட்டிருக்கேன்னா? எனக்குப் புரியல?” என்று அதிர்வும் பயமுமாய்க் கேட்டாள்.

 

அவள் முதலில் கூறிய வார்த்தைகள், அவனுக்குள் இருந்த சில பல காய்களை மிகக் கூர்மையாய்க் கீறிவிட, “ஹ்ம்…” என்று விரக்தியாய்ப் பெருமூச்சுவிட்டுச் சென்றான்.

 

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு பச்சையன் இப்படிப் போறான்? என் கேள்விக்கு பதிலையும் காணோம்?” என்று அவள் முனுமுனுக்க, அவளுக்கு வேண்டியதையெல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, “குளிச்சுட்டு கூப்பிடு” எனக் கூறினான்.

 

“எனக்கு நீ பதிலே சொல்லலை?” என்று அவள் கேட்க,

 

“கண்டதையும் நினைக்காம இருக்கியா? உன்னை எதுவும் பண்ணலை, பண்ணவும் மாட்டேன்” என்றுவிட்டுச் சென்றான்.

 

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் நீரை அள்ளி ஊற்றிக் கொண்டவளுக்கு அந்த இதமான வெந்நீர் குளியல் மிகவும் அவசியமாகப் பட்டது.

 

சுதாரிப்போடு குளித்து முடித்து, அவன் வைத்திருக்கும் உடையை உடுத்திக் கொண்டவள், அவனை அழைப்பதா வேண்டாமா என்ற யோசனையோடு அமர்ந்திருந்தாள். மெல்ல அவள் எழ முயற்சி செய்ய, அங்கிருந்த தடுப்பை விலக்கிக் கொண்டு உள்ளே வந்தவன், அவளைத் தூக்கிக் கொண்டான்.

 

அதில் பதறிப்போனவள், “ஹே என்ன பண்ற?” என்றாள்.

 

“கூப்பிடத்தான சொன்னேன்?” என்றான்.

 

“நீ என்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்குற போல இருக்கு” என்று அவள் கூற,

 

“இருக்கலாம்” என்றான்.

 

“எனக்கு உன்னைத் தெரியுமா?” என்று அவள் கேட்க,

 

அவள் மூளைக்குள் பெரும் குடைச்சல்…

 

“எ..எனக்கு..உன்கிட்ட..” என்று அவள் தடுமாற, “ஷ்ஷ்” என்றான்.

 

“இந்த ஷ்ஷ்.. இதுக்கு முன்னாடி கேட்டிருக்கேன்..” என்று அவள் கூற,

 

அவளை இறக்கிவிட்டு, உண்ண உணவு கொடுத்தான்.

 

“இதெல்லாம் எங்கிருந்து கிடைக்குது உனக்கு? நீ காட்டை விட்டு வெளியவெல்லாம் போவியா?” என்று அவள் கேட்க,

 

“ஏன் போகக் கூடாதா?” என்றான்.

 

“எப்படிப் போவ? நீதான் பச்சக் கலர்ல இருக்கியே?” என்று அவள் கேட்க,

 

மீண்டும் “ஷ்ஷ்..” என்றான்.

 

அந்நேரம், அங்கு விரைந்தோடி வந்து குகைக்கு முன் ஊளையிட்டது, காட்டு நாய் ஒன்று.

 

அதில் திடுக்கிட்டுப் போய் அவள் அவன் கரம் பற்ற, அவள் பற்றிய தன் கரத்தைக் குனிந்து அமைதியாய் பார்த்தான்.

 

ஊளையிட்ட நாய், உள்ளே குதித்துவர, அதைக் கண்டு பதறியவள், “ந..நாய்..” என்று அவனோடு ஒன்றினாள்.

 

“ஒன்னுமில்ல..” என்றவன், நாயை நோக்க, அது தலையை ஆட்டி ஏதோ சமிக்ஞை செய்தது.

 

அதில் அவன் கண்கள் கூர்மை பெற, சட்டென அவள் கரம் நீக்கிவிட்டு, எழுந்தவன், “யார் வந்தாலும் எந்த சத்தமும் போடாம இரு. அதுதான் உனக்கு நல்லது” என்க,

 

“எங்க போற?” என்றாள்.

 

அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்களில் அப்பட்டமான மருட்சி…

 

“நான் வந்தா மட்டும்தான் குரல் கொடுக்கணும்” என்றவன், வெளியேறி, குகையை இலைதலைகள் கொண்டு அவன் உருவாக்கிய சீலையால் மறைத்துவிட்டுச் சென்றான்.

 

அவன் சென்ற திசையையே பார்த்திருந்தவளுக்குள், சொல்ல முடியாத படபடப்பும், பயமும்…

 

அங்கு அந்த காட்டு நாயுடன் விரைந்து சென்றவன், மரம் ஒன்றில் சரசரவென்று ஏறி, கிளைகளுக்கு இடையே தன்னை மறைத்தவனாய்க் கீழே நோக்க, சில நபர்கள், கோட் சூட் சகிதம் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

 

அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும், சமிக்ஞைகளைப் புரிந்துகொள்ள முயற்சித்தான்.

 

‘போட்டுத் தள்ளிடலாம்..’

 

‘அந்தப் பொண்ணைக் காணுமாமே..’

 

என்ற சில வார்த்தைகள் அவன் காதுக்கு மிக மெல்லமாய் எட்டி, அவன் இதழில் குறுநகை ஒன்று பூத்தது.

 

மறுநாள் காலை…

 

காடே மிகுந்த பரபரப்புடன் இருந்தது.

 

“வாட் தி டேம் ஹெல் இஸ் திஸ்..?” என்று கருப்பசாமி வீட்டில் அமர்ந்தபடி ராஜசிம்மன் சிம்மமூர்த்தியாய்க் கேட்க,

 

தேநீரைக் குடித்தபடி, “இதெல்லாம் எனக்குப் பழகிப்போன ஒன்னு” என்று கருப்பசாமி கூறினான்.

 

“இதை சொல்லத்தான் கவர்மெண்ட் கிட்ட சம்பளம் வாங்குறியா?” என்று ராஜசிம்மன் கோபமாய்க் கேட்க,

 

நண்பன் கேள்வியில் கோபம் எழுந்தாலும் கூட, எதுவும் பேசாமல் அமைதியாய்த் தேநீரைப் பருகினான்.

 

“யாருனே தெரியாத ரெண்டு பேரோட டெட்பாடி கிடைச்சிருக்கு. யானை அடிச்சிக் கொன்னுடுச்சுனு எப்படிடா அதுக்குள்ள சொல்றாங்க?” என்று அவன் கேட்க,

 

“நான் தான் சொன்னேன்ல ராஜ்.. நீ நினைக்கிற போல இல்ல. போன வருஷம் இந்தக் காட்டுப்பகுதியில் நிறைய கொலை வழக்கு நிலுவையில் இருக்குனு பெரிய பிரச்சினை நடந்தது. ஆஃபிஸர்ஸ் பலரை இடம்மாற்றமெல்லாம் செய்தாங்க. திரும்ப அந்தப் பிரச்சினை வரக்கூடாதுனு அடுத்து சாகுற அத்தனைப் பேருக்கும் யானை தான் எமனாக்கப்பட்டது” என்று கருப்பசாமி கூறினான்.

 

“இதை எப்படி உன்னால கில்ட் இல்லாம சொல்ல முடியுது?” என்று கோபத்துடன் ராஜசிம்மன் கேட்க,

 

“கில்ட் மண்ணாங்கட்டியை வச்சு இங்க ஒன்னும் பண்ண முடியாது ராஜ்” என்றான்.

 

கோபத்தின் உச்சத்தில் கை நடுக்கம் காண, அதை கால்சட்டைப் பையிற்குள் நுழைத்துக் கொண்டு, குறுக்கும் நெடுக்குமாக ராஜசிம்மன் நடந்தான்.

 

தேநீரைக் குடித்து முடித்து அவன் அருகே வந்தவன், “ஆனா யாருக்கும் சொல்லாம நாம தனியா எதுவும் கிடைக்குதான்னு தேடிப் பார்க்கலாம்” என்று கூற,

 

சட்டென ராஜசிம்மன் அவனைத் திரும்பிப் பார்த்தான்.

 

அவனை அழைத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்றவன், அலமாரியில் பதுக்கிவைத்திருந்த கோப்பு ஒன்றை எடுத்தான்.

 

ராஜசிம்மன் அதைப் புரியாமல் பார்க்க,

 

“பிரிச்சுப் பாரு” என்றான்.

 

அதில் சில புகைப்படங்கள், ஆபரணங்கள், நீளமான தலைமுடி ஒன்றென இருக்க, ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தான்.

 

“அந்தக் காட்டுக்கு அடிக்கடி போவேன்னு சொன்னேனே.. அது இதுக்குத்தான்.. எனக்கு இதுவரை அங்க எதுவுமே நடந்ததில்லை. அது கொடுத்த தைரியமா கூட இருக்கலாம்.. ஆனா அந்தக் காட்டுக்குள்ள போகும்போது, ஒரு மாதிரி வித்தியாசமான ஒரு உணர்வு தோன்றும். அது என்னை, அந்தக் காட்டைச் சுற்றி என் தேடலைத் தொடர வைக்கும். அப்ப எனக்குக் கிடைச்சது தான் இதெல்லாம்” என்று கருப்பசாமி கூற,

 

நண்பனை ஆச்சரியமாய்ப் பார்த்தவன், “பட்.. சீசீடீவி?” என்றான்.

 

அதில் நக்கலாய் சிரித்த கருப்பசாமி, “இது என் காடுடா.. சீசீடிவி ஆஃப் பண்ணிட்டுப் போக எனக்கு சொல்லியாத் தரனும்?” என்க,

 

ராஜசிம்மன் இதழும் புன்னகையில் வளைந்தது.

 

“இது எனக்கு அங்க கிடைச்ச காப்பு.. இது யாரோடதுனு இதுல இருக்க கடையோட லோகோ வச்சுத் தேடிப் பார்த்தேன்..” என்று கருப்பசாமி கூற,

 

“யாரோடது?” என்று கேட்டான்.

 

“சுமன்ன்னு ஒரு வெளியூரைச் சேர்ந்தவர். இங்க பிரதாப்னு ஒரு பெரிய தொழில் அதிபர் இருக்கான். அவனோட வீட்டு வாட்ச்மேன். சுமனுக்கு யாருமில்லை. அதனால கம்ப்ளைன்ட் பண்ணவும் ஆள் இல்லை. நானா சுமனைத் தெரிந்தவர் போல ஒருத்தரை அனுப்பி வச்சு விசாரிச்சேன். அவன் திரும்ப அவனோட சொந்த ஊருக்கே போறதா சொல்லி வேலையை விட்டுட்டதா தகவல் வந்தது. இந்த காப்பு கிடைச்ச கொஞ்ச நாள் முன்னாடி, சில டெப்பாடீஸ் கிடைச்சது. வழக்கம் போல, இப்ப சொன்ன அதே காரணங்களைத்தான் அப்பவும் சொல்லி மூடினாங்க. அந்த கேஸ் ஹிஸ்டரியோட ஃபைல்ஸ் எடுத்து செக் பண்ணேன். அதுல முகம் ஆங்காங்கே சிதைஞ்சு, ஒரு வட இந்தியனும் இறந்திருப்பது தெரிஞ்சது. வெளிய தெரிஞ்சா இந்தியாக்குள்ளவே ரெண்டு பாகமாகி பிரச்சினை வரும்னு, கமுக்கமா இங்கவுள்ள ஆட்கள் அதை மறைச்சுட்டாங்க. அண்ட் அவன் தான் அந்த சுமன்” என்று கருப்பசாமி கூற,

 

ஆச்சரியமும், அதிர்ச்சியுமாய் ராஜசிம்மன் அவற்றைக் கேட்டான்.

 

“அப்புறம் இந்த பிக் பாரு” என்று காட்டிய கருப்பசாமி, நீட்ட

 

“காலடித்தடம்” என்றான்.

 

“ம்ம்.. நான் அடிக்கடி இதைப் பார்த்திருக்கேன்.. இருபத்தி ஏழு சென்டிமீட்டர் லென்த்.. அப்ராக்ஸிமேட்லி ஆறடிக்கும் கூடுதல் உயரமுள்ள ஒரு ஆணோட காலடித்தடமாதான் இருக்கும். இது மலைவாழ் மக்களோடதா இருக்கவும் வாய்ப்புண்டு. வெளியருந்து உள்ள போகும் ஆட்கள் பெரும்பாலும் ஷூஸ் இல்லாம காட்டுக்குள்ள போக மாட்டாங்க. பட் இது வெறும் காலோட பாதச்சுவடு. அதனால இருக்கலாம்னு யோசிச்சேன். இப்ப அங்க அந்த மக்களோட எண்ணிக்கையே நிறைய குறைஞ்சிடுச்சு. அந்த காட்டில் நிறைய ஆமானுஷ்யம் இருப்பதாக நம்பப் பட்டதால காட்டுப்பக்கம் யாருமே இல்ல. அதனால அதுவும் ஒரு சந்தேகமாவே போயிடுச்சு” என்று கருப்பசாமி கூற,

 

அதிலிருந்த நீளமான முடி கொண்ட ஒரு நெகிழிப்பையை எடுத்து, ராஜசிம்மன் பார்வையிட்டான்.

 

“ஹேர்?” என்று ராஜசிம்மன் கேள்வியாய் நிறுத்த,

 

“ஒருமுறை காட்டுக்குப் போன சமயம், மரக்கிளை ஒன்னுல மோதினப்ப என் சட்டைல ஒட்டிக்கிச்சு.. பச்சையா இருக்கே, ஏதோ செடியிலிருந்து வந்ததுபோலனுதான் தட்டிவிடப் போனேன். ஆனா பார்க்க அப்படித் தெரியலை. எடுத்துட்டு வந்து, தனியா எனக்குத் தெரிஞ்ச பொண்ணுகிட்டத் தந்து டெஸ்ட் பண்ணேன். இது ஒரு தலைமுடி” என்று கூறினான்.

 

“பச்சைக்கலர்லயா?” என்று ராஜசிம்மன் குழப்பமாய்க் கேட்க,

 

“ம்ம்.. பச்சை நிறம். அதுவும் ஒரு ஆணோடது. அண்ட் சர்ப்ரைஸிங்லி, அது எந்த ஆர்டிபிஷியல் டையும் இல்ல. அந்த முடியோட ஒரிஜினல் நிறமே அதுதான்” என்று கருப்பசாமி கூறும் நேரம், வானத்தில் பெரும் இடிமுழக்கம் கேட்டு, பறவைகளை அச்சுறுத்தி அலறி ஓடச் செய்தது…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. விறுவிறுப்பாக இருக்கு..அருமை👍