Loading

வகுப்பறையில் பித்து பிடித்தது போல அமர்ந்திருந்தாள் மித்ரா! கோபம், ஆத்திரமென அவளது அழுத்தத்தைக் கூட்டியது இளாவின் காதல் செய்தி.

இளாவிற்கு தன்னை மட்டும்தான் பிடிக்க வேண்டும், தன்னைத்தான் அவன் காதலிக்க வேண்டும் என்று மித்ரா எடுக்காத முயற்சியே இல்லை.

ஒரு பெண்ணுக்கான எல்லையையும் கடந்திருக்கிறாள் அவனை அடைய. ஆனால், இளாவின் மனமோ மித்ராவின் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவனது மனதைத் தான் அன்னமாவிடம் கொரியரில் அனுப்பி வைத்து விட்டானே!

மித்ரா கெஞ்சினாலும் மிஞ்சினாலும் அவனது காதல் அவளுக்கு என்றுமே இல்லை. மித்ராவிற்குத் தான் விருப்பப்பட்ட ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்கிற குணம். அவனைச் சொல்லிக் காதலிக்க வைத்திட வேண்டும் என்ற வீம்பிலே இருக்கிறாள். அதன் விளைவைப் பற்றி யோசிக்க அவளுக்கோ பொறுமை இல்லை.

ஏதாவது செய்து அவனது காதலைக் கைகூடாமல் தடுக்க வேண்டும், அவனைத் தன் பக்கம் இழுக்க வேண்டும் – என்ன செய்வதென்ற சிந்தனையில் இருந்தாள். அவளது மூளையில் எதுவும் சிக்காமல் போக வெறியாக அமர்ந்திருந்தாள்.

“இங்க பாரு மித்ரா! எப்படியும் உன் ஆளோட கான்ட்ராக்ட் முடிய ஒரு வருஷம் ஆகும் தானே! அதுக்குள்ள அவன் இந்தியா போயிடுவானா என்ன? முதல்ல வர்ற செம கான்சென்ட்ரேஷன் வை. எக்ஸாம் முடிஞ்சதும் அவனைப் பார்த்துக்கலாம்,” என்று அவளது தோழி ஒருத்தி அவளைச் சமாதானம் செய்ய, மித்ரா அமைதியாக இருந்தாள்.

“உன் ஸ்டேட்டஸ்க்கு ஒரு வேலைக்காரனைக் கல்யாணம் பண்ணிக்கணும்கிறது உனக்குத் தலையெழுத்தா? அவனை கல்யாணம் பண்ணி பாத்திரம் தேய்க்கப் போறியா நீ? ஸ்டுபிட் கேர்ள்! கொஞ்சமாச்சும் உனக்குப் பொருத்தமான ஒரு பையனை லவ் பண்ணுடி! வீட்டு வேலைக்காரனைக் காதலிக்கிறேன்னு வந்து சொல்லிட்டு இருக்க. அதுவும் அவன் கெட்ட கேட்டுக்கு உன்னை அவன் விரும்பலையாம்… அவனுக்கே நீ அவனுக்கு அதிகம்னு தெரிஞ்சிருக்கு. உனக்கு ஏன் மித்ரா புரியல?! என்ன இருக்கு அவன்கிட்ட? அவனோட பாடி ஷேப்பா? ஸ்ட்ரக்சர்ல விழுந்துட்டியா? சிக்ஸ் பேக் வச்சிருக்கானா? காதலிக்கும்போது அதெல்லாம் நல்லா இருக்கும். ஆனா மேரேஜ் லைஃப்ல மணியைத் தவிர எதுவும் பெருசா இருக்காது. நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எக்னாமிக் வைஸ் ரொம்பக் கஷ்டப்படுவ. அதுவே உனக்கு ஈக்குவல் ஸ்டேட்டஸ்ல ஒரு பையனை விரும்பினா நிச்சயம் உன் லைஃப் நல்லா இருக்கும் மித்ரா,” என இன்னொரு தோழி அறிவுரை சொல்ல…

“நான் ஏன் இளாவைக் கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்படணும்? என்னோட அப்பா சேர்த்து வச்ச சொத்து எனக்குத் தானே! நானும் அவனும் அனுபவிக்கப் போறோம்… இதுல நான் ஏன் கஷ்டப்படப் போறேன்?” என அசட்டையாகத் தோளைக் குலுக்கி விட்டுச் சொன்னாள்.

“சரிடி, அப்பா சொத்தை அனுபவிங்க! ஆனா உனக்கு ஈக்குவலான தகுதி அவன்கிட்ட இருக்கா? நாளைக்கு நீ மேரேஜ் பண்ணிட்டு ஃப்ரெண்ட்ஸ் மத்தியில அவனை உன் ஹஸ்பண்ட்னு இன்ட்ரோ பண்ணுவ, சரி! அவன் என்ன பண்றான்னு கேள்வி கேட்பாங்களே! அவன் படிச்ச அந்த மொக்கை கேட்டரிங் கோர்ஸைப் பெருமையா சொல்லுவியா? அது உனக்கே அவமானமா இருக்காது? உன் அப்பாவோட பிசினஸைப் பார்க்கக் கூட அவனுக்குத் தெரியாதுடி! அவன் உனக்குச் சரியானவன் இல்லை மித்ரா, புரிஞ்சுக்க!” என மித்ராவிற்குப் புரிய வைக்க முனைய…

மித்ராவோ தோழியின் பேச்சை அசட்டை செய்து காதைத் குடைந்தாள். “மித்ரா…” எனத் தோழி மீண்டும் ஆரம்பிக்க…

“சாஜி! நீங்க சொல்ற தகுதியுள்ள என் அப்பாவே பிசினஸ்தான் முக்கியம்னு எங்கோ தனியா இருக்கார். என்னோடு இல்லையே! பாசம் காட்டி வளர்க்க அம்மா இல்லை, அப்பா இருந்தும் வேலைக்காரங்க கையிலதானே வளர்ந்தேன். என் அப்பா போல ஒரு புருஷன் எனக்கு வேண்டாம்டி. நான் எதிர்பார்க்கிறது என் அம்மா, அப்பா தராத பாசத்தை என் புருஷன் தரணும். அவன் தந்தான். வெறும் சமைச்சு மட்டும் அவன் போடல! சமைச்சதோட அக்கறையா பரிமாறினான். எந்த வயசுல நான் என்ன சாப்பிடணும்னு பார்த்துச் செஞ்சு கொடுத்தான். பக்கத்துல நின்னு என்னைச் சாப்பிட வச்சதுக்கு அப்புறம்தான் நகருவான்… எனக்குப் பிடிச்சதை மட்டுமில்லாம அதுல சத்தானதா சேர்த்துச் செஞ்சிக் கொடுப்பான். வேலைக்காரன் கண்டிப்பானா? அவன் செஞ்சான். அது மட்டுமில்ல, அந்தச் சின்ன வயசுல என்னைத் தப்பா பார்த்த கண்கள்ல இருந்து என்னைக் காப்பாத்தினான். எனக்குத் துணையா இருந்தான். இதைவிட எனக்குப் படிப்போ பணமோ முக்கியமில்லைடி. அவன் எனக்குக் காலம் முழுக்க வேணும். என் அப்பா பிசினஸை நான் பார்த்துப்பேன், என்னை அவன் பார்த்துக்கணும்… அவ்வளவுதான்,” என எழுந்து சென்றுவிட தோழிகள் அமைதியாகிப் போயினர்.

இங்கோ அலைபேசியைப் வெறித்தபடி மருத்துவமனை அறையில் அமர்ந்திருந்தான் இளா! அவனுக்கொன்றும் இல்லை…

 மெத்தையில் பஞ்சுவைத்தான் படுக்க வைத்திருந்தார்கள். திடீரென பிரஷர் இறங்கியதால் மயங்கிச் சரிந்தார். அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தான்.

 ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்ததால் மயக்கத்தில் இருந்தார்.

இவனோ பக்கத்தில் அமர்ந்து வாட்ஸ்அப்பையும் அழைப்பு வரலாற்றையும் மாறி மாறிப் பார்த்தபடியிருந்தான். இரண்டு நாட்கள் ஆகிவிட்டன இளாவின் அன்னம்மா அவனை பிளாக் செய்து. இரண்டு நாளாக பிளாக்கிலிருந்து எடுக்காமல் அவனுடன் பேசாமல் இருக்கிறாள். ‘எப்படி அவளால் இருக்க முடிகிறது?’ என்ற கேள்வி அவனை விரக்தியின் உச்சிக்கே அழைத்துச் சென்றது.

‘தனக்குத்தான் அவளது அழைப்பும் பேச்சும் முக்கியமாக இருக்கிறது. அவளுக்கு நானோ பத்தோடு பதினொன்று என்பது போல்தான்’ என எண்ணி உள்ளுக்குள் வலியுடன் சிரித்துக் கொண்டான். அவளுக்குத் தன்னைப் பற்றிய கவலையோ எண்ணமோ இரண்டாம் பட்சம்தானோ! அவளது குழந்தை, குடும்பம்தானே அவளுக்கு முதன்மை… வெறும் ‘நண்பன்’ என்ற இடத்தில் இருந்துகொண்டு அவளிடம் முதன்மைப் பட்டியலில் இடம் கேட்பது சரியா? அவளும் தந்திடுவாளா?

அவன் ஆசைப்பட்டதெல்லாம் யாருக்கோ நடக்கும்… அவனுக்கு மட்டும் அது நிராசையாக இருக்கும். அதில் அவனது காதலும் அடக்கம். கண்களில் நீர் திரள ஜனனியின் புகைப்படத்தைப் பார்த்தபடி இருந்தவனுக்குக் கடவுளின் கருணை கிட்டியதோ என்னவோ!! ஜனனியிடமிருந்து அழைப்பு வந்தது.

 அவனது கண்களை அவனாலே நம்ப முடியவில்லை. நொடியும் தாமதிக்காது அழைப்பை ஏற்று காதில் வைத்து “அன்னம்மா” என்றான்.

“ம்ம்…” என்றாள் தயக்கமாக. அவளது தயக்கத்தை அறிந்து அவனுக்குச் சிரிப்புதான் வந்தது. சிரிப்பை அடக்கியபடி “சொல்லுங்க மேடம்” என்றான்.

“என்ன பண்ற?” எனச் சாதாரணமாகப் பேச முயன்றாள்.

“ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்.”

“ஹாஸ்பிட்டலா?! எதுக்கு? ஏன் அங்க இருக்க? என்னாச்சு உனக்கு?” எனப் பதற்றமாக வினவ, சற்றுமுன் அவன் எண்ணியதெல்லாம் அவனுக்குள்ளே மாயமாகிப் போனது. அவளது பதற்றத்தைக் கண்டு ‘இது லவ்தானே ஜனனி?’ என்று கேட்கத் தோன்றியதை உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டான்.

“சூடான எண்ணெயைக் கையில கொட்டிக்கிட்டேன். காயமாகிடுச்சு, மருந்து போட வந்திருக்கேன்,” எனப் பொய்யை அவிழ்த்து விட… மேலும் பதற்றம் கொண்டவள், “அறிவு இருக்கா உனக்கு? கவனத்தை எங்க வச்சிட்டுச் சமைக்கிற நீ? வேற எங்கேயும் பட்டிருக்கா?”

“மேடம், எதுக்கு இவ்வளவு பதற்றம்? நீங்க இவ்வளவு பதட்டப்படற அளவுக்கு நான் யாரு உங்களுக்கு? எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன?” என வலியுடன் கலந்த சிரிப்பில் கேட்டான்.

“இளா! நீ இப்படிப் பேசினதுக்கு இந்தியாவுக்கு வா, உன் வாயை உடைக்கிறேன்,” என்றாள் கோபத்தில்.

“அப்போ மேடம் வாயை என்ன பண்றதாம்? நீங்களும் அப்படித்தானே பேசுனீங்க!”

“கோபத்துல பேசினேன்.. அதுக்காக அதையே சொல்லிக் குத்திக் காட்டிப் பேசுவியா?”

“ஆமாடி, குத்திக் காட்டித்தான் பேசுவேன்… நான் யாரோ மாதிரிதானே நீ பேசின! பிளாக்ல போட்ட, இரண்டு நாள் அப்படியே இருந்துட்டு இப்ப மட்டும் மேடமுக்கு என் மேலே என்ன அக்கறை…? இரண்டு நாள்ல எங்க போச்சு அந்த அக்கறை?” எனக் கத்தியிருந்தான்.

“என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத! கோபத்துல உன் நம்பரை பிளாக்ல போட்டது உண்மைதான். காலையில எடுத்திடலாம்ன்ற நினைப்புல தூங்கப் போனேன். காலையில அலாரமும் அடிச்சது. அணைக்கப்போன நானே போனை கீழ தள்ளிட்டேன். விழுந்த வேகத்துல சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சு. ஆன் ஆகவே இல்லை. கடையில கொடுத்துத் திரும்பி வர இரண்டு நாள் ஆகிடுச்சு. வந்ததும் உனக்குத்தான் கால் பண்றேன்… சும்மா தாம் தூம்னு குதிக்காத! உன்கிட்ட விஷயத்தைக் கன்வே பண்ண முடியாம நீ என்ன நினைச்சிட்டு இருக்கியோன்னு இரண்டு நாளா உன் நினைப்புலதான் இருந்தேன்…” என அவள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போக, இவனோ கடைசி வாக்கியத்தில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் திணறிப் போனான்.

“இளா!!! இளா,” என இரண்டு முறை அழைக்கவே அவனது எண்ணத்திலிருந்து மீண்டு வந்தான்.

“சொல்லு அன்னம்மா,” எனத் தணிந்த குரலில் சொன்னான்.

“இப்போ வலி எப்படி இருக்கு? டாக்டர் இன்ஜெக்ஷன் போட்டாரா? மருந்து போட்டியா? கொப்பளமா இருக்கா? எந்தக் கையில? சாப்பிட முடியுமா?” என மீண்டும் அந்த அக்கறைச் சர்க்கரையில் அவன் மனம் பாகாய் உருகிப் போனது.

“அன்னம்மா சாரி…” என்றான்.

“எதுக்கு?”

“பொய் சொன்னதுக்கு.”

“பொய்யா? என்ன பொய்?”

“அது… எனக்கு எதுவும் ஆகல! எண்ணெய்லாம் கையில கொட்டல! பஞ்சுக்கு உடம்பு முடியல, ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வந்தேன். ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு.. தூங்கிட்டு இருக்காங்க,” என்றான்.

“இதுக்கும் சேர்த்து உனக்கு இருக்கு, இந்தியாவுக்கு வா!” என்றாள். அவனும் சிரித்துக் கொண்டான்.

“ஏன், எனக்கு ஒன்னுன்னதும் துடிச்ச?”

“என்ன கேள்வி இது? ரோட்ல போற ஒருத்தருக்கு எதுன்னாலே துடிச்சுப் போவோம்… நம்ம வீட்ல ஒருத்தருக்குன்னா துடிக்க மாட்டோமா? நீ என் பிரண்டுடா!!! உன் மேலே நான் அக்கறைப்பட்டுத் துடிக்கக் கூடாதா? யாருக்கு எப்படியோ, நான் பாசம் வச்சிருக்க யாருக்கும் எதுவும்னா எனக்குத் துடிக்கும்…” என்றாள்.

அவனுக்கு அது ஏமாற்றம் என்றாலும் அவனுக்காகத் துடிக்க அந்த ஒரு ஜீவன் இருப்பதைக் நினைத்து மனம் சந்தோஷப்பட்டுக் கொண்டது.

“அன்னம்மா,” என்றான்.

“என்ன?”

“ஐ மிஸ் யூ!” என்றான். அவனது வார்த்தைகளிலுள்ள அழுத்தத்தில் கொஞ்சம் தடுமாறிப் போனவள் பதில் சொல்லத் திணற, இவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

பின் அவள் பேச்சை மாற்றும் விதமாகப் பஞ்சுவின் உடல்நலத்தைப் பற்றி விசாரித்தாள். இவனும் அவரது நிலையை எடுத்துச் சொன்னான். பின் இருவரது பேச்சு எங்கெங்கோ சென்றது.

“உனக்கு பர்த்டே வருதுல்ல!” என்றாள். அவனும் மாதத்தைப் பார்த்துவிட்டு, “ஆமா வருது! பாரேன் எனக்கே கூட ஞாபகம் இல்லை…”

“எனக்கு இருக்கு! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் (Surprise) இருக்கு!”

“என்ன சர்ப்ரைஸ் அது?”

“சர்ப்ரைஸ்டா அது! எப்படிச் சொல்லுவாங்க?”

“ஓ, ஆமால்ல! சரி வெயிட்டிங்!” என்றான்.

“எனக்கு என்ன ட்ரீட் உன் பிறந்த நாளுக்கு?”

“என்ன வேணும் சொல்லு அனுப்புறேன்.”

“பர்த்டே அப்போ கேக்குறேன்… நீ மறுக்காம எனக்கு அனுப்பணும், பிராமிஸ்?” என்க… அவனும் அவள் கேட்கப் போகும்

விபரீதத்தை அறியாமல், “பிராமிஸ்” என்றான். பிறந்த நாளன்று இருவருக்கும் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்